ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி பல புண்ணிய காரியங்கள் நமது கவனத்தை வேண்டி தவமிருக்கின்றன தெரியுமா?
வெளியுலகிற்கு அதிகம் தெரியாமல் அத்தகைய மகத்தான புண்ணிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழும் – கவனிக்கப்படாத ஹீரோக்கள் (UNSUNG HEROES) – பலர் இந்த சமூகத்தில் நம்மிடையே உள்ளனர் தெரியுமா?
சினிமா ஹீரோக்களை கொண்டாடும் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் இவர்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். கொண்டாடவேண்டும்.
இந்த நிஜ ஹீரோக்கள் அவர்கள் செய்யும் தொண்டு இருக்கின்றதே….அப்பப்பா…. சமூகத்தில் இப்படியெல்லாம் கூட பிரச்னைகள் இருக்கிறதா? இங்கெல்லாம் கூட ஒருவது சேவையும் கவனமும் தேவைப்படுகிறதா என்று மலைப்பு தான் உங்களுக்கு ஏற்படும்.
சமீபத்தில் ‘எண்ணங்களின் சங்கமம்’ திரு.ஜெ.பி. அவர்கள் 100 விவேகானந்தர்களை திரட்டிய நிகழ்ச்சிக்கு சென்றபோது தான் இப்படியெல்லாம் கூட சேவை செய்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டேன். அடியேன் இன்னும் முதல் படியிலேயே நின்றுகொண்டிருப்பதை புரிந்துகொண்டேன்.
இப்படி தன்னலமற்ற மகத்தான சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழும் இந்த நிஜ ஹீரோக்களை பற்றி தனது முகநூலில் BE INSIPIRED என்ற பெயரில் ஆங்கிலத்தில் தொடர் ஒன்றை வெளியிட்டு வருவதாகவும் அதை தமிழில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்றும் திரு.திரு.ஜெ.பி. என்னை கேட்டுக்கொண்டார். கரும்பு தின்ன கசக்குமா என்ன?
நல்லோர்களையும் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வருவோரையும் தேடித் தேடி பிடித்து உங்களிடம் அறிமுகப்படுத்துவதை நான் வழக்கமாக வைத்திருப்பது உங்களுக்கு தெரியும் தானே? எனவே ஜெ.பி. அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி கேட்டபோது ‘சரி’ என்று ஒப்புக்கொண்டேன். ஒப்புக்கொண்டேனே தவிர… எனக்கிருக்கும் வேலைப் பளுவில் எழுத நேரம் கிட்டவில்லை. நாட்கள் ஓடியது. ஒரு மகத்தான பணியை திரு.ஜெ.பி. அவர்கள் நம்மிடம் ஒப்படைத்தும் நேரப் பற்றாகுறையால் எழுதமுடியவில்லையே என்று நொந்துகொண்டேன்.
ஒரு காலத்தில் நேரத்தை என்னை போல வீணடித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் இன்று ஒரு நல்ல விஷயத்தை செய்ய நினைக்கும்போது, என்னால் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன்.
எப்படியோ நேற்று இந்த மகத்தான பணியை துவக்கிவிட்டேன்.
சிறைக் கைதிகளின் மறுவாழ்வும், சிறைச் சாலை சீர்திருத்தமும்!
சிறைக் கைதிகளின் மறுவாழ்வும், சிறைச்சாலை சீர்திருத்தமும் ஒரு நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. சிறைக் கைதிகளின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நலனை பேணுவது நம் கடமைகளுள் ஒன்று. புண்ணிய காரியங்களில் மகத்தான புண்ணிய காரியம் இது. ஒரு நாட்டின் அத்தியாவசியத் தேவையும் கூட!
ஒரு தவறை ஒருவர் செய்துவிட்ட பிறகு அவரை தண்டிப்பதால் என்ன பயன்? நம் கவனம் அனைத்தும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தருவதிலேயே செல்கிறது. திறமைசாலிகளின் ஆற்றல் முழுதும் அதில் வீணாகிறது. நடந்த குற்றத்தை பற்றி கவலைப்படும் நாம், குற்றத்தை நடக்காது தடுப்பதை பற்றி யோசிப்பதில்லை. எனவே குற்றவாளிகளை தண்டிப்பதில் காட்டும் முனைப்பை விட, குற்றமே நடக்காது பார்த்துகொள்வது தான் நம் நாட்டிற்கு இன்றைய தேவை.
கடுமையான சட்டங்கள் ஒரு நாட்டில் அவசியம் தான். ஆனால் அப்படிப்பட்ட சட்டங்களால் மட்டுமே ஒரு நாட்டில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்திவிட முடியாது. (இந்திய மக்கள் தொகை 100 கோடியை தாண்டிவிட்டது பாஸ்!). தொடரும் கற்பழிப்பு குற்றங்கள் அதற்கு சாட்சி. எனவே பிரச்னைகளின் ஆணிவேரை கண்டுபிடித்து நோய்க்கு சிகிச்சை அளிக்கவேண்டும் அப்போது தான் நாடு உண்மையான அமைதிப் பூங்காவாக திகழும். அந்த சிகிச்சை சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருப்போரிடமிருந்து துவங்கவேண்டும்.
இந்த கட்டுரையை படியுங்கள். இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள நிஜ ஹீரோ திரு,ராஜா செய்யும் பணி எத்தனை மகத்தானது என்று புரியும். முடிந்தால் திரு.ராஜா அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கூறுங்கள்.
திரு.ராஜா ஒரு மாற்று திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. (இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் ஊன்றுகோலுடன் நிற்பவர் தான் ராஜா!)
இதோ… BE INSPIRED தொடரின் முதல் அத்தியாயம்… தமிழில்!!
==============================================
UNSUNG HEROES 1
தண்டனையிலிருந்து சீர்த்திருத்தம், மறுவாழ்வு, மறு இணைப்புக்கு ஒரு பயணம்….!
சாதரணமா ஒரு ஜெயில் கைதின்னாலே நமக்கு முரட்டுத் தனமான ஒரு ஆள் முகத்துல ஒரு வெட்டுத் தழும்போடவும் கையில பிச்சுவாவோடவும் இருக்குற மாதிரி தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால் பாளையங்கோட்டைக்கு ராஜா போனப்போ அங்கே பார்த்த காட்சி வேற ஒன்னு.
முகம் நிறைய புன்சிரிப்போட கையில ஒரு லெட்டரை எடுத்துகிட்டு ஒரு கைதி இவரை நோக்கி ஓடி வர்றார். அவர் வேற யாரும் இல்லை… ஒரு ஆயுள் தண்டனை கைதி. எட்டு வருடமா தன்னோட மகள் கிட்டே இருந்து எந்த கடிதமும் வராம இருந்தது. இப்போ தான் ஒரு லெட்டர் வந்திருக்கு. காரணம் நம்ம ராஜா. இப்போ அந்த கைதிக்கு, தன்னோட விடுதலைக்கு பிறகு, தன்னோட மகளோட சேர்ந்து வாழ முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ஒரே விரக்தியிலும் மன அழுத்தத்திலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவர் இவர்.
குற்றவாளிகள் என்று யாரும் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் ஒருவனை குற்றவாளியாக்குகின்றன என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.
சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக இல்லாமல், மனமாற்றம் ஏற்படுத்தும் ஒரு கோவிலாக இருக்கவேண்டும். அப்போது தான் ஒரு நாட்டில் குற்றங்கள் குறையும்.
திரு.கே. ராஜா சமூக சேவையில் (Social Service) முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது சிறைச்சாலைகளில் உள்ள தண்டனை பெற்ற கைதிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். அப்போது கைதிகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து அவர் விரிவாக உணர்ந்துகொண்டார்.
இந்த படிப்பின் போது சிறைத் தண்டனை பெற்ற கைதிகளின் குடும்பங்களை சந்திக்க நேரில் சென்ற போது, அக்குடும்பங்கள் படும் துயரை கண்டு கலங்கிப் போனார். ஒரு குடும்பத்தில் கணவன் தன் மனைவியை கொலை செய்த காரணத்தால் அனாதையான குழந்தைகளின் நிலை அவர் மனதை என்னவோ செய்தது. சில சந்தர்ப்பங்களில் அக்கொலைக்கு அக்குழந்தைகளே சாட்சியாக இருந்த கொடுமையையும் கண்டார்.
இதையடுத்து சிறைத் தண்டனை பெற்ற தண்டனை கைதிகளின் வாழ்வில், மனதில் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும் அவர்கள் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காகவும் அவர் உருவாக்கியது தான் Global Network for Equality (GNE).
இந்த அமைப்பை துவக்குவதற்கு முன்பு, ‘Kanthari International Institute of Social Entrepreneurs’ மற்றும் ‘Prisoners Assistance Nepal’ ஆகிய அமைப்புக்களை அணுகி சிறைக் கைதிகளின் மறுவாழ்வு குறித்து விரிவாக தெரிந்துகொண்டார். பல விஷயங்களை படித்து அறிந்துகொண்டார்.
சிறைக்கைதிகளின் இந்த மறுவாழ்வு குறித்து பேசும்போதெல்லாம்… முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புக்களும் வராமல் இல்லை. “கடுமையாக தண்டனை பெற்ற கைதிகளை பற்றி நாம் ஏன் கவலை படவேண்டும்? அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஆகவே தான் அவர்களுக்கு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது” போன்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் ராஜாவின் புள்ளிவிபரப்படி, இப்படி தண்டனை பெற்றுள்ள கைதிகளில் 10% மட்டுமே பக்காவாக பிளான் செய்து தங்கள் குற்றத்தை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் மீதமுள்ள குற்றவாளிகள் அனைவரும் ஒரு வேகத்தில் உணர்ச்சி வயப்பட்டே குற்றச் செயலை புரிந்துள்ளனர். அதாவது கோபம், பொறாமை, குடிப் பழக்கம் இவற்றின் தாக்கம் அவர்களின் குற்றத்தில் இருந்துள்ளது.
ஒரு வேகத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டுவிட்டு காலம் முழுதும் கண்ணீர் சிந்துபவர்கள், தன் பக்கமே தர்ம நியாயம் இருந்தும் சட்டத்திற்கு எதிரான ஒரு செயலை உணர்ச்சி வசப்பட்டு செய்ததால் தண்டனை பெற்றவர்கள் ஒரு வகை, தன் வாழ்க்கைத் துணை தனக்கு இழைத்த துரோகத்தால் வெகுண்டெழுந்து – பெற்றோரையே நம்பியிருக்கும் குழந்தைகளை மறந்து – கொலைக் குற்றவாளியானவர்கள் ஒரு வகை இப்படி பல வித்தியாசமான முகங்களை கொண்ட மனிதர்களை ராஜா சந்தித்திருக்கிறார்.
RE-OFFENDING RATE எனப்படும் குற்றவாளிகள் திரும்ப திரும்ப குற்றச் செயலில் ஈடுபடும் விகிதத்தை குறைப்பதே திரு.ராஜாவின் இந்த Global Network for Equality (GNE) அமைப்பின் நோக்கம்.
சிறைக் கைதிகளுக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகள், மேம்பாடு, குடும்பத்துடன் அவர்கள் ஒன்று சேருதல் இவை அனைத்தும் இந்த அமைப்பின் பணியாகும். அதுமட்டுமல்ல, சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கான சட்ட ஆலோசனைகள், வாழ்வாதாரங்களை அடையாளம் கண்டு உதவுவது, கைதிகளின் குழந்தைகளின் கல்வி, விடுதலை பெற்ற சிறைக்கைதிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது, உள்ளிட்ட மகத்தான பணிகளை இந்த அமைப்பு செய்கிறது.
குற்றச் செயல்கள் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவதே இவர்களின் ஒரே குறிக்கோள். இதற்காக முன்னாள் சிறைக்கைதிகள், சிறை அதிகாரிகள், காவலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோரை கொண்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக சக விடுதி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் தான் அகப்பட்டு சிறையில் வாடும் ஒரு கல்லூரி மாணவருக்கு திரு.ராஜா தான் ஒரே அடைக்கலம். கலங்கரை விளக்கம்.
முன்பெல்லாம் இறுக்கத்துடனும் ஒரு வித மன அழுத்தத்துடனும் காணப்பட்ட கைதிகள் தற்போது ராஜாவின் வருகைக்கு ஒவ்வொரு கணமும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தங்கள் மனதில் உள்ளவற்றை அவரிடம் கொட்டி வடிகால் தேட…!
தொடர்புக்கு :
திரு.கே.ராஜா,
அலைபேசி : 091 98405 63968
மின்னஞ்சல் : gnequality@gmail.com
இணையம் : www.gnequality.org
English Version
=======================================================
என்ன ராஜாவை பத்தி படிச்சி முடிச்சீங்களா? இன்னும் இவரை போல வெவ்வேறு மகத்தான காரியங்களை செய்துகொண்டிருக்கும் 99 பேரை பார்க்கபோகிறோம்.
இவர்களை போன்ற, வெளியுலகினர் அதிகம் அறியாத ஹீரோக்களை பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் நமக்கு நாமே ஒரு உத்வேகத்தை அளித்துக்கொள்வோம். ஏனெனில் நாளைய உலகம் சிறப்பானதாக அமைவதில் நமது பங்கும் இருக்கிறது.
நீங்கள் இது போல, நிஜ ஹீரோக்களை பற்றி கேள்விப்பட்டாலோ அல்லது பார்த்தாலோ inspirecharitbletrust@gmail.com, rightmantra@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள். உங்கள் அருகிலேயே அவர்கள் இருக்கக்கூடும்.
[END]
ராஜா நீங்கள் கதாநாயகன் அல்ல எண்ணற்ற கைதிகளுக்கு (திருந்தி வாழ நினைக்கும் சுழ்நிலை கைதிகளுக்கு) நீங்கள்தான் உண்மையான அரசன் தங்கள் பணிதொடரட்டும், இந்த நாடும் மக்களும் தங்களை வணங்குகிறோம்
ராஜாவை எங்களுக்கு அறிமுகப்படுத்திய சிம்பிள் சுந்தர் அவர்களுக்கும் (now you are Great Sundar) வாழ்த்துக்கள். மேலும் தங்கள் முதல் ஆண்டு விழாவில் அளந்து கொள்ள ஆர்வம் உள்ளது.இந்த விழாமாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை வேண்டுகிறேன்
இறைவா திரு சுந்தர் அவர்களின் முதல் ஆண்டு விழா வெற்றியடைய தங்கள் அருளை வேண்டி நிற்கிறோம் நடக்கும் என்று நம்புகிறோம்
\\\BE INSIPIRED என்ற பெயரில் ஆங்கிலத்தில் தொடர் ஒன்றை வெளியிட்டு வருவதாகவும் அதை தமிழில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்றும் திரு.திரு.ஜெ.பி. என்னை கேட்டுக்கொண்டார். கரும்பு தின்ன கசக்குமா என்ன? (இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!)\\\
“உங்களுக்கு நீங்களே recharge செய்து கொள்ளும் ராஜதந்திரம்.”
உங்கள் எழுத்துநடை அருமை .பாராட்டுக்கள் ஜி .
திரு.ராஜா ஒரு மாற்று திறனாளி அல்லவே அல்ல ??????????
எல்லோருடைய வாழ்க்கையை “””மாற்றுகின்ற திறனாளி”””
-வாழ்த்துக்களுடனும் ,பாராட்டுக்களுடனும்
மனோகர் .
சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட மறக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரிவினரை தேடிப்போய் அவர்களுக்கு உதவி செய்யும் திரு. ராஜா அவர்களின் மகத்தான தொண்டை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும் இவருக்கு நடப்பதற்கு ஊன்றுகோல் தேவைப்படுகிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இறைவனின் படைப்பில் புரிந்துகொள்ளமுடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று.
பெயரில் மட்டுமல்ல குணத்தில் இவர் உண்மையிலேயே ராஜாதான்.
சுந்தர் சார் வணக்கம்
ராஜா சார் எங்களுக்கு அறிமுகப்படுத்திய சிம்பிள் சுந்தர் அவர்களுக்கும் (now you are Great Sundar) வாழ்த்துக்கள் –
மிகவும் அருமை சார்
பாராட்டுக்குரியது நானல்ல. உண்மையில் ஜெ.பி. சார் தான். அவர் தான் இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
– சுந்தர்
என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்றே தெரியவில்லை.
படித்தவுடன் வார்த்தைகள் வரவில்லை.
திரு,ராஜா மாதிரி 100 இளைஞர்கல் கௌரவிக்க பட்டுள்ளனர்.
அந்த 100 முத்துக்களை கோர்த்து மாலையாக்கி இந்தியாவுக்கு கௌரவம் கொடுக்கபோகிறிர்கள்.
யாருமே எதிர்பார்க்காத ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஒரு சேவை செய்கிறார். அது மேலும் சிறக்க கடவுளை வேண்டுகிறோம்.
நம்மால் முடியாது என்று நினைப்பதே பலரின் வழக்கம். நம்மாலும் முடியும் என்று நினைத்தால் எல்லா துறைகளிலும் சாதிக்க எவ்வளவோ இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
முத்துமாலையில் முதல் முத்தாக ராஜாவை தொடுத்து உள்ளீர்கள்.
உங்கள் மொழி பெயர்ப்பு (கரும்பு தின்ன உங்களுக்கு கசக்காது, எங்களுக்கும்) உரைகளை மேலும் மேலும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவில் உங்கள் recharge பண்ண மேலும் ஒரு பணி. ஆண்டவன் உங்களுக்கு எல்லா வளமும் கொடுக்கட்டும்.
சுந்தர்ஜி
திரு ராஜா அவர்கள் செய்துவரும் பணி மிக மகத்தானது. அனைத்து சேவைகளுக்கும் மேலானது. சிறைக்கைதிகள் என்றாலே அனைவர்க்கும் ஒரு பயம் அல்லது ஒரு வெறுப்பு இருக்கும். ஆனால் அவர்களும் நம்மை போன்றவர்கள் தான் என திரு.ராஜா அவர்கள் அவர்களுக்கு புது வாழ்வு மலர உதவுவது மிகவும் போற்றத்தக்கது. உண்மையில் உள்ளே இருப்பவர்கள் அனைவரும் முழுக்குற்றவாளியுமில்லை. வெளியே இருப்பவர்கள் அனைவரும் முழு நல்லவருமில்லை.
உங்கள் மொழிபெயர்ப்பு மிகவும் அருமை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். திரு.ஜே. பி. அவர்களும் அவர் அடையாளம் காட்டிய 100 விவேகானந்தர்களும், அதை எங்களுக்கு காட்டிய நீங்களும் வாழ்க வளமுடன்.
எண்ணங்களின் சங்கமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் வந்த ஒவ்வொரு சாதனையாளர்களையும் பார்க்கும்போது மலைப்பாக இருந்தது ,நாம் எதோ ஒரு பிச்சைகாரர்களுக்கு ஒரு டீ, வடை வாங்கி கொடுத்து அதை பெருமையாய் நினைத்து கொள்ளும் வேலையில் ,ஆனால் இந்த சாதனையாளர்களின் செயல்களை பார்த்த பொழுது உண்மையில் மிக ஆச்சரியமாக இருந்தது ,அவர்கள் சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன்
ஓம் ஸ்ரீ விவேகானந்தர் ஆத்மாவே உங்கள் அனைவரையும் வழி நடத்துகிறது……. 100 மாமனிதர்களை முன்னிறுத்தி எண்ணற்ற மனிதங்களை காப்பாற்ற ஆகும் தங்கள் உழைப்பு சரித்திரம் ஆஹாட்டும்.