Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

print
வ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு நமது தளம் சார்பாக எளிய கைங்கரியங்கள் செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. வேதம் படிப்பதே அரிதாகி வரும் ஒரு சூழ்நிலையில் வேதம் படிக்கும் சில மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பரிசாக அளித்து சந்தோஷப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தோம். கூடவே இன்னொரு ஆசையும் மனதில் அரும்பியது. நாம் கண்டு ரசித்த ‘ஜகத்குரு ஆதிசங்கரர்’ என்கிற படத்தை ஏதாவது ஒரு பாடசாலை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டவேண்டும் என்பதே அது.

ஏற்கனவே ஒரு பதிவில் கூறியபடி, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ என்னும் யஜூர் வேத பாடசாலை இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

DSC07103

மாணவர்கள் அக்டோபர் 16 அன்று தீபாவளி கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள் என்பதால் ஞாயிறு அக்டோபர் 12 அன்று நமது கைங்கரியத்துக்கான நாட்களை குறித்தோம். அக்டோபர் 12க்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே துணிமணிகள், பாடசாலையில் கேட்ட ஹாட் பேக்குகள், என ஒவ்வொன்றாக வாங்கி தயாராக வைத்துக்கொண்டோம். ஐந்து மாணவர்கள். இரண்டு கேர்-டேக்கர்கள். ஒரு வயதான பணிப்பெண், ஒரு வாத்தியார், ஆக ஒன்பது பேருக்கு தேவையாக பொருட்கள் வாங்கியாகிவிட்டது.

போக்குவரத்துக்கு சுலபமாக இருக்கும் என்பதால் மேற்கு மாம்பலத்தில் உள்ள நிறுவனத்திடம் பேசி ப்ரொஜக்டரை வாடகைக்கு ஏற்பாடு செய்தோம்.

இந்த வஸ்திர தான நிகழ்ச்சியில் ‘ஆதிசங்கரர்’ படமும் திரையிடுகிறோம் என்பதை அறிந்த நமது வாசகி கவிதா நாகராஜன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்தினரை அனுப்புவதாக கூறினார். மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம்.

 'ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்' நிறுவன ஸ்ரீராஜா வாத்யார்

‘ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமம்’ நிறுவன ஸ்ரீராஜா வாத்யார்

முன்னதாக முகநூலில் இது தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவை பார்த்த நண்பர் ராஜ்குமார், மாணவர்கள் கேட்ட கேரம் போர்டை தான் வாங்கித் தந்துவிடுவதாக சொன்னார். அவர் வீடு மேற்கு மாம்பலம் என்பதால் அந்த பொறுப்பை அவரிடமே விட்டுவிட்டோம். அவரும் குறித்த தேதிக்கு முந்தைய தினமே கேர்ம்போர்டை வாங்கி கொண்டு பாடசாலையில் சேர்பித்துவிட்டார்.

அக்டோபர் 12, ஞாயிறு காலை வஸ்திர தானம் மற்றும் MOVIE SCREENING ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், திரு.நாகராஜன் அவர்களிடம் “நான் டிவிடி ப்ளேயரை எடுத்து வருகிறேன். எதற்கும் முடிந்தால் உங்கள் லேப்டாப்பை ஒரு STANDBY போல கொண்டுவாருங்கள்!” என்று கேட்டுக்கொண்டோம். அவரும் சம்மதித்தார்.

ஞாயிறு காலை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்ல உதவியாக நண்பர்கள் எவரும் வர முடியாத சூழ்நிலை. எம் அப்பாவிடம் சொல்லி பொருட்கள் அனைத்தையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மேற்கு மாம்பலம் வந்து சேரும்படி கூறிவிட்டு நாம் சற்று சீக்கிரம் கிளம்பிவிட்டோம். பாதி வழியில் வரும்போது தான் டிவிடி ப்ளேயரை மறந்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அப்பாவும் ஆட்டோவில் வளசரவாக்கத்தை தாண்டி வந்துகொண்டிருந்தார். ‘நண்பரை தான் லேப் டாப் கொண்டுவரச் சொல்லி இருக்கிறோமே சமாளித்துவிடலாம்’ என்று சமாதனப்படுத்திகொண்டு பாடசாலைக்கு விரைந்தோம்.

அங்கு அனைவரும் தயாராக இருந்தார்கள். முதலில் படத்தை திரையிடுவதாக ப்ளான். சரியாக 12.00 மணிக்கு இடைவேளை. சாப்பிட்டுவிட்டு மீண்டும் பார்ப்பதாக ப்ளான். மதியத்திற்கு மேல் மாணவர்களின் வேத வாத்தியார் திரு.குருராமன் அவர்கள் வருவார்கள் என்றும் அவர் முன்னிலையில் பரிசுப் பொருட்களை ஒப்படைப்பது என்றும் முடிவானது.

ஸ்க்ரீன், ப்ரொஜெக்டர், ஸ்பீக்கர் என அனைத்தும் கனெக்ட் செய்யப்பட்ட நிலையில், படம் திரையில் வருகிறது. ஆனால் சவுண்ட் வரவில்லை. எதில் கோளாறு என்று தெரியவில்லை. ப்ரொஜெக்டரை வாடகைக்கு அமர்த்திய நிறுவனத்தின் டெக்னீசியனால் பிரச்சனை எங்கு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது.

DSC07169

அக்கம்பக்கத்தில் யார் வீட்டிலாவது டி.வி.டி. ப்ளேயர் வாங்கலாம் என்றால், யாரையும் தெரியாது. நண்பர் ராஜன் கணேஷ் நினைவுக்கு வந்தார் அவரை ப்ளேயர் கொண்டு வரமுடியுமா என்று கேட்டது தான் தாமதம், அவர் தன் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு ப்ளேயரை எடுத்துகொண்டு ஓடிவந்தார். ஆனால் நம் நேரம் அதுவும் செட்டாகவில்லை.

நேரமோ ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மணிநேரம் விரயமாகியிருந்தது. நமக்கோ சந்தேகம் வந்தது. கோளாறு உண்மையில் ப்ளேயர் மற்றும் லேப்டாப்பிலா அல்லது ப்ரொஜெக்டர் மேஷினிலா என்று. எதையும் உறுதிப்படுத்திக்கொள்ளாமல் எப்படி கடிந்து பேசுவது. நமது அவஸ்தையை பார்த்த நண்பர் நாகராஜன், “சரவணா ஸ்டோர்ஸ் அருகே தான் இருக்கிறது. பேசமால் நாம் போய் ஒரு டிவிடி ப்ளேயர் புதியதாக வாங்கிக்கொண்டு வந்துவிடலாம் சார். நீங்கள் அடிக்கடி இது போன்ற நிகழ்சிகளை ஏற்பாடு செய்யப்போவதாக கூறியிருப்பதால் உபயோகமாக இருக்கும். அதற்க்கென்று பிரத்யேகமாக ஒன்று இருந்தால் நல்லது தானே?” என்றார்.

சில நேரங்களில் பணத்தை விட நேரம் மிகவும் மதிப்புடையதாக இருக்கும். பாடசாலை மாணவர்களின் நேரம் மிகவும் புனிதமான விஷயம். எவ்வளவு நேரம் தான் அவர்களை வெறுமனே உட்காரவைத்திருப்பது.

“சரி சார் போகலாம் வாருங்கள்” என்று நானும் அவரும் நமது பைக்கில் சரவணா ஸ்டோர்ஸ் விரைந்தோம்.நம்மை நடேசன் தெருவின் ஓரமாக காத்திருக்கச் சொல்லிவிட்டு நாகராஜன் உடனே சரவணா ஸ்டோர்ஸ் விரைந்தார்.

“சார்…. பணம் வாங்கிட்டு போங்க…” என்று அழைத்தோம்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்… நீங்க கொஞ்ச வெயிட் பண்ணுங்க” என்று ஜாடையில் கூறிவிட்டு போய்விட்டார்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு புத்தம் புதிய பிராண்டட் டிவிடி ப்ளேயருடன் வந்தார்.

பாடசாலைக்கு விரைந்தோம்.

கனெக்ட் செய்ததில் இம்முறை படம் ஒலியுடன் ஓடத்துவங்கியது.

DSC07170

நாகராஜன் அவர்களுக்கு நன்றி சொன்னோம்.

“சார்… நீங்க அடிக்கடி இனிமே பல இடங்களுக்கு இது போலச் சென்று இந்த கைங்கரியம் பண்றதா சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கட்டும்னு தான் புதுசா ஒரு ப்ளேயர் வாங்கித் தந்தேன். ப்ரொஜெக்டர் ஒன்னு நம்ம வெப்சைட்டுக்குன்னே தனியா வாங்கிக்கோங்க!” என்றார்.

நண்பர் சொல்வது போல விரைவில் நம் தளத்திற்கென்று பிரத்யேகமாக ப்ரொஜெக்டர் வாங்கவேண்டும். வாடகை கொடுத்து நமக்கு கட்டுபடியாகாது.

DSC07177

மாணவர்களில் ஐந்து பேரில், ஒரு மாணவன் ஹரிகண்ணன் என்பவன் அவன் உறவினர் ஒருவர் சீரியசாக இருப்பதால் தனது ஊருக்கு சென்றுவிட்டிருந்தான். கார்த்திக் என்பவன் (கேர்டேக்கரின் மகன்) எதிர்பாராத ஒரு வைதீக காரியத்துக்கு சென்றிருந்தான்.

இருந்ததோ மூன்று மாணவர்கள் தான். அதனால் என்ன? வேதம் படிக்கும் ஒரு மாணவனுக்கு ஈடாகுமா இந்த வையகம்?

நம்மை பொறுத்தவரை எதிர்காலத்தில் இவர்கள் வேதமென்னும் விருட்சத்தை அழியாமல் தழைத்தோங்கச் செய்யும் விதைகள். எவ்வளவு பெரிய மரமும் ஒரு சிறிய விதையிலிருந்து தானே முளைக்கிறது?

அப்படி இப்படி என்று நாங்கள் தயாராவதற்குள் மதிய சாப்பாடு நேரம் வந்துவிட்டது. சமாராதனைக்கு நாம் ஏற்பாடு செய்திருந்தபடியால் மாணவர்களுடன் நாங்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டோம். வடை, பாயசத்துடன் கூடிய சாப்பாட்டுக்கு ஸ்பான்சர் செய்திருந்தோம். கணேச ஐயரின் மனைவி தான் சமையல். அவர் தான் தினமும் மாணவர்களுக்கு சமைக்கிறார். தேவாமிர்தம் தோற்றது போங்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் படத்தை பார்க்க ஆரம்பித்தோம்.

என்ன சொல்வது எப்படி சொல்வது….

‘ஜகத்குரு ஆதிசங்கரர்’ அனைவரும் அவசிய பார்க்க காணவேண்டிய ஒரு படம். நாம் ஏற்கனவே கூறியது போல வி.தட்சிணாமூர்த்தி அவர்களின் அற்புதமான இசை, கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள், ஆதிசங்கரர் இயற்றிய பல ஸ்லோகங்கள என படம் ஒரு பல்சுவை விருந்து! ஆதிசங்கரராக தோன்றும் நடிகர் முரளி மோகன் ஆதிசங்கரராக வாழ்ந்திருப்பார்.

படத்தில் ஆதிசங்கரர் வாழ்வில் நடைபெற்ற பல முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆதிசங்கரரின் பிறப்பே ஒரு அற்புதம் தான். ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பாள் பிரசவ வேதனையில் துடிக்க, துவேஷம் காரணமாக அண்டை வீட்டார் உதவிக்கு வர மறுக்க, அப்போது கைலையில் மகேஸ்வரனுக்கு பார்வதிக்கும் இடையே நடக்கும் உரையாடல்… நமக்கெல்லாம் பெரிய மெசேஜ். தொடர்ந்து அன்னை பார்வதி தேவியே ப்ரத்யக்ஷமாகி ஓடிவந்து மாறுவேடத்தில் ஆர்யாம்பாளுக்கு பிரசவம் பார்ப்பது… ஞானக்குழந்தை பூமியில் அவதரிப்பது என ஆரம்பமே அமர்க்களம் தான்.

DSC07180

படம் மூலம் இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளலாம். அம்பிகையின் முலைப்பால் உண்டது திருஞான சம்பந்தர் மட்டுமல்ல. ஆதிசங்கரரும் தான். அந்த காட்சி உண்மையில் சிலிர்க்க வைக்கும் ஒன்று. எப்பேர்ப்பட்ட பாக்கியம் பகவத் பாதாளுக்கு!

தொடர்ந்து பல சம்பவங்கள் நம்மை கட்டிபோட்டுவிடுகின்றன. முக்கியமாக ஏழைப் பெண்மணி வீட்டில் சிறுவன் சங்கரன் பிக்ஷைக்காக நின்றபோது, கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழையை வரவழைக்கும் காட்சி… அற்புதம்!!!!

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

சங்கரர் துறவறம் ஏற்பது, சங்கர திக்விஜயம் செல்வது, சங்கரர் – மண்டல மிஸ்ரரின் வாதம், தொடர்ந்து சங்கரர் கூடுவிட்டு கூடு பாய்வது, சண்டாளன் எதிரே வரும்போது அவனை “விலகி போ!” என்று சொல்லி பிறகு பூரண ஞானியாவது என படம் நெடுக சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை.

DSC07182

மாணவர்கள் ஆர்வமுடன் படத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் ஒரு மாணவனாக மாறி படத்தை ரசித்துக்கொண்டிருந்தோம். திரு.நாகராஜனின் குழந்தைகள் இருவரும் அவர்களுடன் அமர்ந்து படத்தை ரசித்தது கண்கொள்ளா காட்சி. மறுபக்கம் திரு.நாகராஜன் அவர்களின் பெற்றோர் இருவரும் படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

சரியாக படம் முடியும் தருவாயில் மாணவர்களின் வேத ஆசிரியர் திரு.குருராமன் அவர்கள் வந்தார். வந்தவர் அவரும் படத்தை அமர்ந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

படம் முடிந்ததும், “நல்ல முயற்சி” என்று கூறி நம்மை ஆசீர்வதித்தார்.

DSC07183

தொடர்ந்து மாணவர்களுக்கு தாம்பூலப் பொருட்களுடன் (ஆறு முழ வஸ்திரம் + 1 சட்டை) தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக நண்பர் திரு.நாகராஜன் அவர்களின் பெற்றோர் மூலம் வாத்தியார் குருராமன் அவர்கள் பொன்னாடை போர்த்தி அவரது வேத சேவையின் பெருமையை கூறி கௌரவிக்கப்பட்டார். வேதம் படிப்பது அரிதென்றாலும், கற்ற வேதத்தை பிறருக்கு சொல்லிக்கொடுக்கும் வாத்தியார் தொழிலை ஏற்று செய்வது அதை விட அரிதாகிவிட்டது.

அடுத்து கேர்டேக்கர் திரு.கணேச ஐயர் அவர் மனைவி ஆஅகிர்யொருக்கு புத்தாடைகள் பரிசளிக்கப்பட்டது.

DSC07192 copy

பாடசாலையில் தன் தள்ளாத வயதிலும் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறார் அனுசூயா என்கிற பாட்டி. அவருக்கும் புடவை + ரவிக்கை துணை வழங்கப்பட்டது. அவருக்கு மட்டும் நம் கைகளால் அவற்றை தந்து மகிழ்ந்தோம். மறக்காமல் அவர் கால்களில் விழுந்து ஆசிபெற்றோம். அகமும் புறமும் குளிர்ந்தது. அவருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.

பின்னர் ஐந்து உயர் தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹாட் பேக்குகள் மற்றும் கேரம் போர்டு ஒப்படைக்கப்பட்டது.

DSC07193

அனைவரின் முகத்திலும் சந்தோஷ ரேகை படிந்திருந்தாதை காண முடிந்தது. இதற்காகத் தானே இத்தனை கஷ்டப்பட்டோம்.

குருராமன் அவர்கள் நம்மிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்.

அவர் கையை பிடித்து, “எங்களால் முடிஞ்சதை செய்திருக்கோம்… ஏதேனும் குறையிருந்தால் மன்னிக்கணும்!” என்றோம்.

DSCN6944

“நீங்க வேற… சங்கரர் படம், வஸ்திரம், பாத்திர பண்டம்னு ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க சார். ரொம்ப சந்தோஷம். வேதம் படித்தவர்களுக்கு அளிக்கப்படும் தானமே உண்மையான தானம். தானங்களில் அது தான் முதன்மையானது” ன்னு இப்போ நீங்க பார்த்த ஆதிசங்கரர் படத்தில் கூட ஒரு இடத்துல சொல்றா” என்று கூறி ஒரு ஸ்லோகத்தை கூறினார். அட நாம் கவனிக்க மறந்த விஷயத்தை வெகு அழகாக கவனித்து சொல்கிறாரே என்று பரவசப்பட்டோம்.

இந்த கைங்கரியத்திற்கு உதவிய நண்பர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும் மஹா பெரியவாவின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

வேதம் தழைக்கட்டும். பாரதம் செழிக்கட்டும்.

ரைட் மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் – 2 விரைவில்…

===============================================================

Also check from our archives….

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…

===============================================================

[END]

11 thoughts on “ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1

  1. அருமையான நிகழ்வு மற்றும் அருமையான பதிவு.
    வாழ்க உமது பணி.வளர்க உமது தொண்டு.

  2. பல இன்னல்களுக்கு இடையேயும் தீபாவளி கொண்டாட்டம் மிக சிறப்பாக அந்த ஈசன் அருளாலும் குருவின் அருளாலும் நடந்தது அறிய மிக்க மகிழ்ச்சி, நாங்கள் நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது . இந்த நிகழ்ச்சிக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் பல

    நிகழ்ச்சியை தொகுத்து அளித்தது நன்றாக உள்ளது

    நன்றி
    உமா

  3. புண்ணியம் சேர்ப்பதற்கு மிகவும் எளிமையான அதே சமயம் வலிமையான ரூட்டை சொல்லியிருக்கிறீர்கள்.

    மாணவர்கள் மற்றும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பார்க்க முடிகிறது.

    இது போன்ற கைங்கரியங்களுக்கு தங்கள் குழந்தைகளையும் அனுப்பி அவர்களையும் பங்கேற்க செய்த நாகராஜன்-கவிதா தம்பதியனருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்கள் பணி.

    அடுத்தடுத்த கொண்டாட்டங்களை விரைந்து வெளியிடவும்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  4. ஒரு முக்கிய வேண்டுகோள்: இன்று வேதம் படித்தவர்களில் பலர் வசதி மிக்கவர்களாகவும், ஒவ்வொரு சடங்குகளுக்கும் பல ஆயிரம் ரூபாய் மற்றும் சுப காரியங்களில் இது மிக அதிகமாகவும் வாங்குபர்கல்தான் அதிகம். அத்துடன் கூட படோடபம், மேல் நாடுகளுக்கு சென்று வருவது என, ஒரு சிலர் செய்யும் அலம்பல் அதிகம் அதனால் வைதீகர்களுக்கு மதிப்பும் குறைகிறது. மகான்களைப் பாருங்கள் “மகா பெரியவா” ஒரு ஒடிந்த தேகம் ஆனால் அவர் பார்வை அவருடைய வலிமை. இன்று பல வைதீகம் செய்பவர்கள், சிரத்தை இல்லாமல், மந்திரம் கூலிக்கு தகுந்தது எனவும், உடம்பில் கவனம் செலுத்தியும், ஒரு நாளில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என கணக்கிட்டு அதன் படி நடந்து கொள்கிறார்கள். “வைதீகம்” அதற்குரிய மதிப்பை இழந்தது அதனால் தான். இதற்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?????

  5. sir

    I really appreciate your pain taking efforts to fulfill the dreams of the students of the vedapadasala. May i request that i may also be given a chance to take part in such noble cause in future.

    S.CHANDRA MOULI.

    1. Sir, I used to reveal such plans frequently in the articles I post and then only proceed. If you follow our articles regularly you will come to know.

      Anyway i will let you know personally too.

      thanks.
      – Sundar

  6. இந்தத் தொண்டில் எனக்கு சிறிய வாய்ப்பு கிடைத்தது பெரியவா திருவுள்ளம் ..வாழ்க …வளர்க…சுரேஷ் நாராயணன், குவைத்

  7. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
    இந்த கைங்கரியத்திற்கு உதவிய நண்பர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும் மஹா பெரியவாவின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.

  8. தங்களின் நன்முயற்சிக்கு வணக்கங்கள்………..தங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்……………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *