Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

print
தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக நடைபெற்று வரும் எளிய சேவைகளில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளமையால், பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை. தீபாவளி குறித்து நமக்கு முன்பிருந்த பார்வை வேறு. தற்போதிருக்கும் பார்வை வேறு. பாரம்பரியத்தையும் நமது கலாச்சரத்தையும் கட்டிக்காத்து அதே நேரம் அர்த்தமுள்ள ஒரு தீபாவளியை கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே நமக்கு உண்டு. அதன் வெளிப்பாடு தான் சென்ற ஆண்டு நங்கநல்லூர் நிலாச்சாரலில் பார்வையற்ற மாணவிகளுக்கு ஆடைகள், பேன்சி கிட்டுகள் எடுத்துத் தந்து அவர்களுடன் பட்டாசு மத்தாப்பு வெடித்து தீபாவளி கொண்டாடியது மற்றும் மேற்கு மாம்பலம் கோ-சாலை பணியாளர்களுக்கு புத்தாடைகள் எடுத்து தந்து தீபாவளி கொண்டாடியது.

இந்த ஆண்டும் சில எளிய இனிய சேவைகளை திட்டமிட்டு வருகிறோம். ஒவ்வொன்றாக அவற்றை நிறைவேற்றி வருகிறோம். விரைவில் அந்த கொண்டாட்டங்கள் குறித்து விரிவான பதிவு இடம்பெறும்.

இதற்கிடையே தீபாவளியை உண்மையில் எப்படி அணுகவேண்டும், எப்படி கொண்டாடவேண்டும் என்று நம் மனதில் உள்ள கருத்துக்களை பதிவாக வடிக்க எண்ணியிருந்தோம். ஆனால்,தீபாவளி பரபரப்பில் பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை. அலுவலகத்திலும் கடும் அலுவல். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகிவிடுகிறது.

தீபாவளியை முன்னிட்டு நாம் வாசகர்களுக்கு கூற நினைத்த கருத்துக்களை தற்செயலாக ஒரு வலைப்பதிவில் கண்டோம். அதை எந்த வித மாற்றமும் இன்றி அப்படியே தருகிறோம். பதிவாசிரியர் திரு.சேவியருக்கு நம் நன்றி.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள் 423)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

===============================================================

Deepavali Lamp

தீபாவளி : இப்படியும் கொண்டாடலாம் !

ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித்துத் திரியும் கரிய புகை, வீட்டுக்கு வந்து சேரும் பலகாரங்கள், விடியல் முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சிரிக்கும் அரிதார முகங்கள், புத்தம் புதிதாய் காத்திருக்கும் பட்டாடை இவற்றைத் தவிர தீபாவளி என்றவுடன் என்னென்ன நினைவுக்கு வருகின்றன ?

இதைத் தவிர தீபாவளிக்கு வேறென்ன நினைவுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா ? இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாகக் கொண்டாடவேண்டும் என யோசிக்கிறீர்களா ? இதை முயன்று பாருங்களேன்.

• சில நிமிடங்களில் வெடித்தும், எரித்தும் கரைக்கும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ, இல்லாத ஏழைகளுக்கோ வழங்கிவிடுங்கள். ஏழையின் சிரிப்பில் நரகாசுரன் அழிவான்.

• பலகாரங்களை இந்த முறை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஏழைகளின் குடிசைக் கதவைத் தட்டி பலகாரம் கொடுத்து மனிதத்தின் ஆழத்தை அறிவியுங்கள்.

• விழா நாட்கள் உறவுகளைப் பலப்படுத்தும் நாட்களாக இருக்கட்டும். உங்கள் குடும்பத்தில் யாரோடேனும் மனத் தாங்கல் இருந்தால் இந்த விழா நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று உறவை மீண்டெடுத்துக் கொள்ளுங்கள்.

• குடும்பத்தினரோடு இந்த தீபாவளிக்கு ஒரு அனாதை இல்லத்தைச் சென்று சந்தியுங்கள். உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்.

• தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அருகில் இருக்கும் குடும்பத்தினரும் முழு நேரமும் பேசுங்கள். நீங்கள் இழந்து கொண்டிருப்பது என்ன என்பது புரிய வரும்.

• நீண்ட நாட்களாக பேசாத நண்பர்கள் உறவினர்களை அழையுங்கள். யாரிடமேனும் சண்டையிட்டுப் பிரிந்திருக்கிறீர்களெனில் அவர்களை முதலில் அழைத்து வாழ்த்துச் சொல்லி நட்பைப் புதுப்பியுங்கள்.

• விழாக்கள் உறவுகளை வளர்க்க வேண்டும். பிறரைப் புண்படுத்துவதற்காக விழாக்களை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள்.

• விழா நாட்கள் என்றாலே சுற்றுப் புறத்தை மாசுபடுத்துவதற்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதாதீர்கள். சுற்றுப் புறத்தைத் தூய்மையாய் வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

• விழா நாளில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் முதியவர் தனிமையில் இருந்தால் குடும்பத்துடன் அங்கே சென்று அவர்களுடன் உங்கள் நாளைச் செலவிடுங்கள்.

• ஏற்கனவே இருளில் தடவி நடக்கும் சூழல் நமது. மின்சாரத்தைச் சிக்கனமாய்ச் செலவழியுங்கள்.

• நீங்கள் வெடிக்க நினைக்கும் பட்டாசுகளை எதிர் சேரியிலிருந்து ஆவலுடன் எட்டிப்பார்க்கும் குழந்தைகளின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்கள் புன்னகை மத்தாப்புக்களில் விழா கொண்டாடுங்கள்.

விழா நாட்கள் மனிதம் விழா நாட்களாக அமைவதே எந்த ஒரு விழாவுக்கும் சிறப்பானதாய் இருக்க முடியும். இந்த விழா நாள் அதற்கான முதல் சுவடை உங்கள் இல்லங்களில் எடுத்து வைக்கட்டும்.

அனைவருக்கும் இதயம் நிறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றி :திரு.சேவியர் | xavi.wordpress.com

(* பட்டாசு மத்தாபுக்களை பொருத்தவரை சாஸ்திரத்துக்கு கொஞ்சம் வெடிப்பதில் தவறில்லை. பசு, நாய் உள்ளிட்ட பிராணிகளுக்கும் வயோதிகர்களுக்கும் சிரமம் தரக்கூடிய அதிக சப்தம் எழுப்பக்கூடிய வெடிகளை தவிர்க்கவும்.)

===============================================================

Also check from our archives….

உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?

வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

===============================================================

7 thoughts on “அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!

  1. திரு சேவியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இதைவிட சிறப்பாக தீபாவளியை கொண்டாடும் முறைபற்றி விளக்க முடியாது. Hats off to Mr.Xavier.

  2. சரியான நேரத்தில் சரியான பதிவு. இது தான் உண்மையில் அனைவரும் கொண்டாடவேண்டிய தீபாவளி. பதிவில் கூறியவற்றில் ஒன்றையாவது நடைமுறைப் படுத்த முயற்சிக்கிறேன்.

    நம் தளத்தின் தீபாவளி கொண்டாட்டத்தின் பதிவுகளை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. மிகவும் உபயோகமான முறையில் தீபாவளியைக் கொண்டாட உதவும் அருமையான பதிவு………..மிக்க நன்றி………

    நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்……..

  4. மிகவும் அருமையான அனைவரரும் தெரிந்து கொள்ள வேண்டிய உன்னதமான பதிவு. திரு சேவியர் அவர்களுக்கு எமது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    ரைட் மந்த்ரா வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

    நன்றி

    உமா

  5. ரைட் மந்த்ரா வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *