Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > இறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் !

இறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் !

print
ஞ்சை பெரியகோயில் பற்றியும் இராஜராஜன் அதை கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் அதன் புவியியல் சிறப்பு அம்சங்கள் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிசம்பர் மாத நடுவில் தஞ்சை பெரியகோயிலுக்கு நாம் சென்று வந்தோம். கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் ஆழ்ந்து அனுபவித்து ரசித்தோம். பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினருடன் சென்றதால் நாம் நினைத்தது போல கோவிலில் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. எனவே மறுநாள் நாம் தனியாக சென்றோம்.

Periyakovil

மிகப் பெரிய நந்தீஸ்வரர் முதல் கோவிலின் ஒவ்வொரு சன்னதியையும் மீண்டும் சுற்றிப் பார்த்தோம். அப்போது நாம் கேள்விப்பட்ட கதை ஒன்றை இங்கே தருகிறோம்.

இறைவனுக்கு மூதாட்டி தந்த நிழல்!

தஞ்சை பெரியகோயிலை நிர்மாணிக்க இராஜராஜன் முடிவு செய்து அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.  நூற்றுக்கணக்கான சிற்பிகள் கோவில் கட்டும் பணியில் இதற்காக உழைத்துக்கொண்டிருந்தார்கள். இதுதவிர பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு பொன்னும் பொருளும் கோவிலின் திருப்பணிக்கு கொடுத்து உதவினார்கள்.

சரித்திரத்தில் நிரந்தரமாக பெரிய கோவில் இடம்பெறும் வகையில் கட்டப்படவேண்டும் என்றும் கோபுரத்தின் நிழல் தரையில் விழாதவாறு நிர்மானிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுருந்தான் இராஜராஜன்.

Periya Kovil Nandhi

அதே ஊரில் யாரும் துணைக்கு இல்லாத அழகி என்கிற வயதான மூதாட்டி ஒருவள் வசித்துவந்தாள்.

ஊராரெல்லாம் மன்னனின் சிவாலய திருப்பணிக்கு ஏதோ ஒரு வகையில் உதவிகள் செய்து வந்த நிலையில் தம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே என அந்த மூதாட்டி மிகவும் வருந்தினாள்.

Periya Kovil Nandhi 2

அந்நேரம் பார்த்து பக்கத்துக்கு வீட்டு சிறுவன் அவளை பார்க்க வந்தான். “பாட்டி ஒரே வெயிலா இருக்கு. தாகத்துக்கு கொஞ்சம் மோர் இருந்தா கொடேன்” என்றான்.

அவனுக்கு மோரை கொடுத்தவளுக்கு பளீரென்று ஒரு எண்ணம் உதித்தது.

“கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிவ கைங்கரியமாக நீர் மோர் கொடுத்தால் என்ன? நாம் நேரடியாக செய்ய முடியாவிட்டாலும் ஆலயம் கட்டும் பணியில் இருப்பவர்களின் தாகம் தீர்த்தால் அதுவே ஒரு சிவத்தொண்டு தானே…” என முடிவு செய்தவள், ஒரு பானையில் மோரை எடுத்துக்கொண்டு, கோவில் கட்டும் பணியில் இருக்கும் சிற்பிகளுக்கு மோரை கொடுத்து வரலானாள்.

Big temple tanjore 2

வெயில் வேளையில் தினசரி கருவேப்பிலையும் இஞ்சியும் போட்ட மோர் கிடைத்ததால் சிற்பிகளுக்கு ஒரே சந்தோஷம்.  அகமும் புறமும் மலர அந்த மூதாட்டியை வாழ்த்தலானார்கள். “பாட்டி நீ நல்லாயிருக்கணும்.. இப்படி தினமும் மோர் கொடுத்து எங்க தாகத்தை தீர்க்கிறாயே…”

நாட்கள் உருண்டோடின. கோவில் கட்டும் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. கோபுர விதானத்தில் கருவறைக்கு மேல் கல் பதிக்க வேண்டியது தான் பக்கி. தகுந்ததொரு கல்லை தேடி வந்தார் தலைமை சிற்பி. ஒரே கல்லாக இருக்கவேண்டும் என்பதால் அந்த அளவிற்கு சரியான ஒரு கல் கிடைக்கவேயில்லை.

ஒரு நாள் மோர் கொடுக்க வந்த பாட்டி மிகவும் கவலையுடன் இருப்பதை கவனித்தார் தலைமை சிற்பி.

“என்ன பாட்டி ரொம்ப கவலையா இருக்கே… கோவில் வேலை முடியப்போகுதே… எங்களையெல்லாம் இனி பார்க்க முடியாதே…. இனிமே மோர் யாருக்கு கொடுக்குறதுன்னு யோசிக்கிற போலருக்கே?”

“அதில்லேப்பா… இந்த கிழவியால கடைசிவரை இந்த கோவிலுக்கு எதுவும் கொடுக்க முடியலியேன்னு கவலைப்படுறேன்”

“சக்கரவர்த்தி கட்டுற கோவிலுக்கு காணிக்கை தர உன்னால முடியுமா என்ன? அதுக்கு நீ எங்கே போவே…?’

பேசிக்கொண்டிருந்தபோதே… அழகிப் பாட்டிக்கு ஒரு யோசனை உதித்தது.

“அப்பா…. என் வீட்டு முன்னால ஒரு பெரிய கல் இருக்கு. அதை எடுத்துட்டு வந்து கோவிலுக்கு ஏதாவது ஒரு வேலைல பயன்படுத்திக்கமுடியுமா?” என்று கேட்டாள்.

சிற்பி அழகியின் வீட்டுக்கு சென்று பார்க்க, தான் கோபுர விதானத்தின் மீது பொருத்த தேடி வந்த கல்லைப் போன்றே அது இருக்க, அதை யானையை கட்டி இழுந்து வந்து, சரியாக செதுக்கி கோபுர விதானத்தின் மீது பொருத்திவிட்டார்.

கும்பாபிஷேக நாள் விரைவில் வந்தது. இராஜராஜன் பரிவாரங்களுடன் கோவிலை வந்து பார்த்தான்.

“இதுவரை இத்தனை சிறப்பம்சங்களுடன் யாரும் சிவபெருமானுக்கு கோவில் கட்டியிருக்க மாட்டார்கள். இத்தனை அழகான கோபுரமும் இதுவரை எந்த ஆலயத்திலும் அமையவில்லை” என்று பெருமையில் பூரித்தான்.

Big temple tanjore

அன்றிரவு, உறங்கச் சென்றவன் கனவில் தலைவர் (சிவபெருமான்) தோன்றினார். “மன்னவா…. பெரியகோவிலில் அழகி என்கிற மூதாட்டியின் தயவில் அவள் அமைத்து தந்த நிழலில் தங்குவது எமக்கு மிக்க மகிழ்ச்சி!” என்றார்.

திடுக்கிட்டு எழுந்த மன்னன்… “யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத பிரமாண்டங்களுடன் நான் இவ்வளவு பெரிய கோவிலை கட்டினேன். இறைவனோ அழகி என்கிற கிழவியின் நிழலில் தங்குவதில் மகிழ்ச்சி என்கிறாரே…” என்று யோசித்தவன், மறுநாள் மந்திரியை அனுப்பி அழகியை பற்றி விசாரித்து வரச் சொன்னான்.

மந்திரியும் விசாரித்து தகவல் தந்ததும் அவளை தேடி அவள் குடிசைக்கே சென்றான்.

“அம்மா… நீங்கள் சிவபெருமானுக்கு என்ன தொண்டு செய்தீர்களோ எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் தந்த நிழலில் இருப்பதில் மகிழ்ச்சி என்று இறைவன் என் கனவில் கூறினார்” என்றான்.

கிழவி தான் சிற்பிகளுக்கு தினமும் நீர் மோர் கொடுத்து வந்ததையும், கோபுர விதானத்தில் பதிக்க கல்லை கொடுத்ததையும் கூறினாள்.

“அம்மா… இறைவன் எளியோர்க்கு எளியோன் என்பதையும் அன்பு என்கிற ஒன்றால் தான் அவனை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்துகொண்டேன். என் செருக்கு இத்தோடு அழிந்தது” என்று அவள் கால்களில் விழுந்தான்.

மேற்படி சம்பவம் தஞ்சை பெரிய கோவில் கட்டியபோது உண்மையில் நடந்தது. அழகிப் பாட்டியின் குடிசை இருந்த இடத்தில் தான் இன்றைய தஞ்சை நகராட்சி அலுவலகம் உள்ளது. அழகிக்குளம் என்கிற ஒரு இடமும் தஞ்சையில் உள்ளது.

நாம் கண்டு வியக்கும் பிரம்மாண்ட அடையாளங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் இது போன்றதொரு தியாகத்தின் வரலாறு ஒளிந்துகொண்டுதானிருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்

* ஒரே கல்லால் ஆன கோபுர விமானம் அமைய பெற்றது.

* கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டது.

* தஞ்சாவூர் பெரிய நந்தி  உலகப்புகழ்பெற்றது. 12 அடி உயரம், 20 அடி நீளம், 8 அடி அகலம், 25 டன் எடை என்று விவரம் அறியமுடிகிறது! மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்த வந்தால் கருவறை! 54 அடி சுற்றளவு உள்ள ஆவுடையார் பேரில் 23 அடி உயரம் கொண்ட லிங்கம் கம்பீரமாக காட்சியளிப்பதும் அன்றாடம் அபிேஷகம், புஷ்பம் அணிவித்தல், ஆடை அணிவித்தல் எல்லாம் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக ஏறி செய்யப்படுவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்! நர்மரை நதிக்கரையில் இருந்து இந்த லிங்கம் அமைக்கக் கல் கொண்டு வரப்பட்டுள்ளது!

* கோடையின் கொடுமை எவ்வளவு இருந்தாலும் கோயிலுக்குள் குளிர்ச்சி நடமாடும் என்பது மற்றொரு சிறப்பு…

* 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2015 வது ஆண்டோடு 1015 வயது பூர்த்தியாகின்றது.

==================================================================

Also Check… Similar articles :

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

==================================================================

[END]

13 thoughts on “இறைவனுக்கு நிழல் தந்த அன்பு – பெரியகோயில் கட்டும்போது நடைபெற்ற உண்மை சம்பவம் !

  1. பதிவும் படங்களும் உடனே தஞ்சைக்கு செல்ல வேண்டும் என ஆவலை தூண்டுகின்றன.

    அன்பே சிவம்

  2. தஞ்சைக்கு இப்போதே சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்று பேராவல் எழுகிறது……அழகிப் பாட்டியின் அன்புக்கு இறைவன் அடிமையானதை அறிந்து மனம் மகிழ்கிறது………..

  3. தஞ்சை ஆலயத்திற்கு சிலமுறை செல்ல இறைவன் அருள் கிட்டியது. முதன் முறையாக எம்பெருமானின் திருமேனியைத் தரிசித்தபொழுது ஏற்பட்ட நெகிழ்ச்சி, சொல்லால் சொல்லக்கூடியது இல்லை. கோவிலின் வரலாற்றை மேலும் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

  4. மிகவும் அருமையான பதிவு சுந்தர், இறைவன் அன்புக்கு எப்போதும் கட்டுபடுவான் என்பதை இக்கதை உணர்த்துகிறது.

  5. தஞ்சை கோவில் கோபுரத்தை பற்றிய மெய் சிலிர்க்கும் பதிவை நான் தங்கள் தளம் மூலம் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தூய்மையான அன்பும் பக்தியும் இறைவனிடத்திலும் , மற்ற உயிர்களிடத்திலும் இருந்தால் நாம் அவர்களின் அன்புக்கு பாத்திரமாகலாம் .

    தஞ்சை கோவிலின் சிறப்பு அம்சங்களும் அருமை. நான் இதுவரை தஞ்சை கோவிலை பார்த்ததில்லை. இந்த பதிவை படித்து விட்டு தஞ்சை பெரிய கோவிலை ஒரு பிரதோஷ தினத்தில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    ஓம் நமச்சிவாய …சிவாய நமஹ ……..

    நன்றி
    உமா வெங்கட்

  6. சுந்தர்ஜி
    அடுத்து அடுத்து பல முத்தான பதிவுகளை தந்த தங்களுக்கு எமது மேலான நன்றியும், பாராட்டுகளும்!! தஞ்சை கோவிலின் போட்டோ மிக மிக அருமையாக எடுத்துள்ளீர்கள்!! உங்கள் எழுத்துகளும் உழைப்பும் மிக உன்னதமானதும் மற்றவற்றில் வேறுபட்டும் உள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமது தளம் குருவருளாலும் திருவருளாலும் மேலும் வளரட்டும் !! எமக்கு பல பதிவுகள் மூலம் பல படிப்பினைகளைத் தந்த நமது தளத்திற்கு எமது மனமார்ந்த நன்றி !! தஞ்சை பெரிய கோவிலிக்கு அழகி பாட்டியின் சிறு உதவியானாலும் பெரிய உதவியாக இறைவன் ஏற்றமாதிரி எம் சிறிய இந்த பாராட்டுகளை நம் தளம் ஏற்றுக்கொள்ளும் என எண்ணுகிறேன்!
    வாழ்க நம் தளம் ! வாழ்க நம் வாசகர்கள் !

    1. மிகவும் சரியாக சொன்னிர்கள்.

      தங்களின் மேலான கருத்துக்கள் நமது தளத்தின்
      பெரும்பான்மையான வாசகர்களின் மன ஓட்டத்தினை பிரதிபலிக்கிறது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

  7. வணக்கம் சுந்தர் சார்

    கோவில் கோபுரம் மிக அழகாக உள்ளது சார்

    மிகவும் அருமையான பதிவு சார்

    நன்றி

  8. As usually you have won our heart. Exclusive stories and relating all in onecoomon line is tje best wr can notice from sundar. I have visited no of times to this temple. After our archeology dept taken over its been preserved but loosing its classical devotion. But excellent monument from architecture view and amazing shiva peruman and nandeeswarar who will attract our whole heart. Hatts off to ur hard work and devotio. Take care of ur health sir. Namas to ur dad and mom.

  9. வணக்கம் சுந்தர் இந்த கோயில்கள் எல்லாம் அப்படியே இருக்கும் நாம்தான் இருக்கமாட்டோம். நன்றி

  10. திரு சுந்தர்

    பெரிய கோயில் என்றும் தமிழர் பெருமையை பறை சாற்றி கொண்டு இருக்கும் . ஆஹா அந்த பாட்டி செய்த பாக்கியம் தான் என்ன. பரமேஸ்வரன் திரு வருள் பெறுவதற்கு.

    பகவான் எளியவனுக்கு எளியவன். அவன் கருணைக்கு எல்லை எல்லை.

    தங்கள பதிவுக்கு நன்றி.

    கே. சிவசுப்ரமணியன்

  11. ஜி

    கண்களில் நீர் வந்தது. சிவ பக்தியும் சிவனின் அருளும் என்றும் நிலையானது.

  12. அருமையான தகவல்
    அற்புதமான புகைப்படங்கள்
    இறைச்சேவையில் பங்களிப்பு தான் பிரதனமே தவிர அளவு தேவையற்றது என்பதற்கு இதற்க்கு மேலும் ஒரு இனிய உதாரணம் தேவையோ?
    நினைத்த மாத்திரத்தில் அந்த மூதாட்டிக்கு அருள் செய்த அந்த பரம்பொருளை என்னவென்று சொல்வது
    இருக்கும் இடத்தில் இருந்தே எங்கள் அனைவரையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி
    ஓம் நம சிவாய !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *