வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜேன் கோமின் கதை படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் நிச்சயம் ஊட்டும் என்றால் மிகையாகாது. ஒரு சினிமாவைப் போல பல அதிரடி திருப்பங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை.
ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் இருந்த உக்ரைனில் 37 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் ஜேன் கோம். குடும்பத்தில் ஒரே பிள்ளை. ஜேன் கோமின் அப்பா கட்டுமானத் துறையில் இருந்தார். அம்மா சாதாரண இல்லத்தரசி. அன்றாட தேவைகளுக்கே மிகவும் கஷ்டப்பட்ட மிகவும் ஏழ்மையான குடும்பம் அது. வீட்டில் வெந்நீர் போட ஹீட்டர் வசதி கூட இவர்களிடம் இல்லை. (ரஷ்யா போன்ற குளிர் பிரதேசங்களில் வீடுகளில் ஹீட்டர் அத்தியாவசியம்). அவர்கள் வீட்டில் கரண்ட் கூட கிடையாது என்று போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. வறுமையான சூழ்நிலையில் வளர்ந்து வந்தாலும் ஜேன் சந்தோஷமான திருப்தியான ஒரு சிறுவனாகத் தான் வளர்ந்தான்.
16 வயது வரை உக்ரைனில் இருந்த ஜேன், அதற்கு பிறகு ஏற்பட்ட இனவெறி பிரச்னையிலும் உள்நாட்டுப் போராலும் வெறுப்படைந்து யூ.எஸ். ஓடிவந்துவிட்டார். (கூகுளின் செர்ஜே ப்ரின் அமேரிக்கா வந்தததற்கு கூட இது தான் காரணம். இல்லையெனில் கூகுல் இப்போது ஒரு ரஷ்ய நிறுவனமாக இருந்திருக்கும்.).
யூ.எஸ்.சில் உள்ள MOUNTAIN VIEW வில் ஜேன் கோமுக்கும் அவர் அம்மாவுக்கும் அரசாங்க உதவியுடன் ஒரு அப்பார்ட்மென்ட் கிடைத்தது.
யூ.எஸ். எல்லாருக்கும் சொர்க்கபுரி அல்ல. கோமுக்கு ஒவ்வொரு நாளும் நரகமாய் கழிந்தது. உலகில் அனைத்துக்கும் அடிப்படை பணம் என்றாகிவிட்டபிறகு, இவர்கள் யூ.எஸ்.ஸில் மட்டும் எப்படி நிம்மதியாக சந்தோஷமாக இருக்க முடியும்? கோமின் அம்மா, குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயாவாக ஒரு வீட்டில் பணிபுரிந்தார். சொற்ப வருமானமே அதன் மூலம் கிடைத்தது. குடும்ப செலவை சமாளிக்க கோம், அந்த பகுதியில் பலசரக்கு கடை ஒன்றில் கிளினீராக வேலைக்கு சேர்ந்தார். அங்கே தரை துடைப்பது, பொருட்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்தார்.
வயிற்றுப் பிழைப்புக்கு ஏற்பாடு செய்தாயிற்று. குடும்பம் சற்று நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்த சூழ்நிலையில், “அதெப்படி உங்களை லேசில் விட்டுடுவேனா?” என்று விதி சிரித்தது.
கோமின் அம்மா புற்றுநோயால் படுத்த படுக்கையானார். அவரால் வேலைக்கு செல்லமுடியவில்லை. நல்லவேளை புற்றுநோயாளிகளுக்கு அரசாங்கம் தரும் உதவி கிடைத்தது. அது ஓரளவு உதவியாக இருந்தது.
கோமுக்கு 18 வயதாகும் தருணம், கம்ப்யூட்டர் துறையில் புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசியப்ப் பொருட்கள் ஆகிக்கொண்டிருந்தன. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கிற்கு ஒரு கிரேஸ் நிலவியது. மாணவர்கள் எங்கு பார்த்தாலும் அதை பற்றியே பேசுவதை கோம் கண்டார். “அதென்ன ப்ரோக்ராமிங்? ஹார்ட்வேர், சாப்ட்வேர்? பெரிய கம்ப சூத்திரமா? ஏன் நம்மால முடியாதா? பார்த்துடுறேன் ஒரு கை” என்று பழைய புத்தக கடைகளுக்கு சென்று ப்ரோக்ராமிங் குறித்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் தானே ப்ரோக்ராமிங், மற்றும் ஹார்ட்வேர் கற்க ஆரம்பித்தார். அப்போது அவரிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் கூட இல்லை என்று கூறப்படுகிறது.
புத்தகங்களை படித்து ஓரளவு அது சம்பந்தமான அறிவு கைவரப்பெற்றதும், அந்த புத்தகங்களை மீண்டும் விற்றுவிட்டார். பின்னர் WOOWOO என்ற ஹேக்கர் நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஒரு வழியாக பள்ளிப் படிப்பை முடித்ததும், பட்டப் படிப்புக்கு செயின்ட் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஒரு வருடம் கழிந்த நிலையில், யாஹூவில் வேலை கிடைக்க, இந்த படிப்பை டிஸ்கண்டின்யூ செய்யவேண்டியதாயிற்று.
2000 ஆம் ஆண்டு, கோமின் அம்மா, புற்றுநோய்க்கு எதிராக போராட முடியாது இறந்தார். தனிமை கோமை வாட்டியது. அந்த நேரம் தான் பிரையன் ஆக்டனின் நட்பு கிடைத்தது. ஆம் இருவரையுமே கோடீஸ்வரர்களாக்கிய நட்பு அது. இருவரும் யாஹூவில் ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக பணிபுரிந்தனர். ஒன்பதாண்டுகள் பணிபுரிந்தார்களே தவிர ஒரு வித மனப் புழுக்கத்துடன் தான் இருவரும் அங்கு இருந்தனர்.
2007 ஆம் ஆண்டு, இருவரும் யாஹூவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். அந்த காலகட்டங்களில் தான் இருவரும் பேஸ்புக்கில் வேலைக்கு அப்ளை செய்தனர். ஆனால் இண்டர்வ்யூவுக்கு பிறகு, இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பேஸ்புக் கதவை மூடியது. கொஞ்சம் ப்ரீ டயம் கிடைத்தது. கெயில் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. தென்னமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்தனர்.
2009 ஆம் ஆண்டு ஐ ஃபோன் ஒன்றை வாங்கினார் கோம். அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம் அது. ஏனெனில், பின்னாளில் ஸ்மார்ட் ஃபோன் உலகையே கலக்கிய WHAT’S APP பை கண்டுபிடிக்க அதுதான் காரணமாக அமைந்தது. APP STORE கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து வந்த காலகட்டம் அது. எதிர்காலத்தில் இது நன்கு வளரும் என்பதை கோம் கணித்தார். அவர் மனதில் WHAT’S APP க்கான அப்ளிகேஷன் மாடல் இருந்தது. ஜஸ்ட் ஒரு எளிமையான ஃபோன் புக், ஒவ்வொரு பெயருக்கு பக்கத்தில்லும் ஸ்டேட்டஸ் என மிகவும் எளிமையாக அது இருந்தது. மனதில் உள்ளதற்கு செயல் வடிவம் கொடுக்க, கம்ப்யூட்டர் கோடிங் எழுதும் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி, WHAT’S APP க்கான ப்ரோக்ராமிங் எழுதினார்.
பிப்ரவரி 24 2009 அன்று கோமின் பிறந்த நாள். அன்று தான் WHAT’S APP ம் பிறந்தது. முதல் வெர்சனை அவர்கள் வெளியிட்டபோது, அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது. எவரும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சொல்லப்போனால் சட்டை கூட செய்யவில்லை. கையில் இருந்த பணமெல்லாம் கரைந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கோமுக்கு விரக்தி ஏற்பட்டது. பேசாமல் விட்டுவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் அவர் நண்பர் பிரையன் அவருக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் ஊட்டினார். மீண்டும் அவர்கள் ஆராய்ச்சி தொடர்ந்தது. அடுத்த சில மாதங்களில் ஆப்பிள் சில அறிவிப்புக்களை வெளியிட்டாது. கோம் அதை தனது அப்ளிகேஷனில் செயல்படுத்தினார். ஒவ்வொரு முறையும் தங்கள் ஸ்டேட்டஸ்ஸை எவராவது மாற்றும்போது, இவர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிங் ஒலி கிடைத்தது. இப்படித் தான் இன்று ஸ்மார்ட் போன் உலகை கலக்கிகொண்டிருக்கும் WhatsApp பிறந்தது. அதற்கு பிறகு அவர்கள் மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து பல புதுமைகளை அதில் புகுத்தினர்.
கடந்த முறை செய்த தவறுகளை திருத்தி இம்முறை இரண்டாம் வெர்சனை வெளியிட்டனர். மேம்படுத்தப்பட்ட மெஸ்ஸேஜிங் மற்றும் இதர வசதிகள் அதில் இருந்தனர். சீக்கிரமே சுமார் 2,50,000 பேர் அந்த அப்ளிகேஷனை தங்கள் ஃபோன்களில் நிறுவினர். மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்து அதை இன்னும் மேம்படுத்துவதற்கு கோமின் நண்பர் பிரையன் உதவியாக இருந்தார். அன்றைய காலகட்டங்களில் இருவரும் தங்கள் பெரும்பான்மையான நேரத்தை ரெட் ராக் கபே என்னும் ரெஸ்டாரண்டில் தான் செலவழித்தனர். ஆரம்பகட்ட தொழில் முனைவோர்கள் பலருக்கு அது தான் சொர்க்கபுரி.
அக்டோபர் 2009, பிரையன் தன் நண்பர்கள் சிலரை இவர்களின் ப்ராஜக்டுகளில் முதலீடு செய்ய சம்மதிக்க வைத்தார். இதன் மூலம் சுமார் $ 2,50,000 முதலீடு திரண்டது. நிறுவனம் பங்கு சந்தையில் நுழைந்தது. செய்த உதவிக்கு பலனாக பிரியனுக்கு கணிசமான பங்கு ஒதுக்கப்பட்டது. கோமின் OFFICIAL பார்ட்னர் ஆனார் பிரையன். ஈவ்லின் அவென்யூ என்கிற ஒரு இடத்தில் பழைய கட்டிடம் ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கு தங்கள் அலுவலகத்தை அமைத்துக்கொண்டனர். சொல்லப்போனால் அதில் பாதி ஒரு நிறுவனத்தின் குடோன் ஆகும்.
2011 இல், ஆப்பிளின் ஆப் ஸ்டோர்ஸில் WhatsApp முதலிடம் பிடித்தது. மிக மிக வேகமாக ஒரு காய்ச்சல் போல WhatsApp பரவ ஆரம்பித்தது. இத்தனையும் எந்த விதமான மார்கெட்டிங்கோ அல்லது விளம்பரங்களோ இல்லாமல் நடந்தது. கோமுக்கு விளம்பரங்கள் என்றாலே வேப்பங்காய் தான். சொல்லப்போனால் அதை அவர் விரும்பியதில்லை. உலகிலயே மார்கெட்டிங் பட்ஜெட் இல்லாத ஒரே நிறுவனம் WhatsApp தான். ஆனால், அவர்களது முன்னேற்றத்தை அது எள்ளளவும் பாதிக்கவில்லை.
கூகுள், பேஸ்புக், லிங்க்ட் இன் போன்ற நிறுவனங்களுக்கே நிதி உதவில் அளித்த, செகோயா கேப்பிட்டல் என்கிற நிறுவனத்தின் பார்வை இவர்கள் மீது விழுந்தது. சுமார் $8 million டாலர்களுக்கு பங்குதார்கள் ஆனார்கள்.
பிப்ரவரி 19, 2014 ஆம் ஆண்டு $19 பில்லியனுக்கு (ஒரு பில்லியன் = 100 கோடி) WhatsApp பை விலைக்கு வாங்குவதாக பேஸ்புக் அறிவித்தது. இத்தனைக்கும் WhatsApp இன் வருவாய் $20 மில்லியனுக்கும் குறைவு தான். (ஒரு மில்லியன் = 10 லட்சம்). ஆனால் WhatsApp ப்பை பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை 500 மில்லியன்.
இத்தனை விலை கொடுத்து WhatsApp ப்பை வாங்கியிருக்கும் பேஸ்புக் அதை வைத்து சம்பாதிக்காமல் விட்டுவிடுமா என்ன?
ஒரே நாளில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராகிவிட்டார் ஜேன் கோம். கோமுடன் இருந்த அவர் நண்பர் பிரையன் ஆக்டனும் கோடீஸ்வரராகிவிட்டார். (What’ App இன் Co-founder இவர்.).
இதே பிரையன் ஆக்டன், வேலைக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக்கிற்கும் டுவிட்டருக்கும் அப்ளை செய்த போது அவர்கள் இவரை நிராகரித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வர்த்தகத்தின் மூலம் பேஸ்புக்கில் போர்ட் உறுப்பினராகியுள்ள ஜேன் கோம், உக்ரைனில் இருந்து வந்த அகதியாக போது, அரசு அகதிகளுக்கு வழங்கும் உணவுக் கூப்பன்களை கியூவில் நின்று வாங்கியவர்.
இதில் என்ன விந்தை என்றால், ஜேனை உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக்கிய இந்த வர்த்தக ஒப்பந்தம், எந்த இடத்தில் அவர் க்யூவில் நின்று அகதிகளுக்கான உணவுக் கூப்பன்களை வாங்கினாரோ அதே அரசு மறுவாழ்வு மைய கட்டிடத்தில் தான் கையெழுத்தானது. என்ன, அப்போது சாப்பாட்டுக்கு க்யூவில் நின்றார். இப்போது பல கோடிகள் மதிப்புள்ள காரில் வந்து இறங்கினார். இவர் ஒரு COLLEGE DROP-OUT என்பது என்பது தெரியும்தானே?
பேஸ்புக்கிடம் வேலை கேட்டுப் போய் அவர்கள் நிராகரித்தவுடன் “அருமையான மக்களுடன் இணைந்திருக்கக் கிடைத்த வாய்ப்பு அது. வாழ்க்கையின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன்…!!” என்று ட்வீட் செய்தார் பிரையன். சொன்னதை போல நண்பருடன் சேர்ந்து சாதித்தும் காட்டிவிட்டார்.
எந்த ஜேன் கோமையும், பிரையன் ஆக்டேனையும் “வேலை இல்லை” என்று சொல்லி பேஸ்புக் விரட்டியதோ இன்று அவர்களையே இன்று பிசினஸ்க்காக வலிய தேடிச் சென்றுள்ளது பேஸ்புக்.
நம்மை புறக்கணித்தவர்கள் நம்முடன் பேச காத்திருக்கும் நிலையை எட்டுவதே உண்மையான சாதனை!
சாதித்துக் காட்டுவோம்! நம்மால் நிச்சயம் முடியும்!!
===============================================================
ஜேன் கோமின் கோமின் வெற்றி சரித்திரத்திலிருந்து, இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கை, விடா முயற்சி, நட்பாராய்தல், வறுமையை வெல்லுதல், புதியவைகளை கற்றுக்கொள்ளுதல், புதியவைகளை முயற்சி செய்தல் என எண்ணற்ற நீதிகளை உணர்ந்துகொள்ளலாம்.
நீங்கள் உணர்ந்த ஒன்றிரண்டு நீதிகளை பட்டியலிடுங்களேன் பார்ப்போம்…
===============================================================
[END]
சுந்தர் சார் உண்மையை சொல்கிறேன் படித்து முடித்தவுடன் உடல் மனம் முழுவதும் சாதிக்க வேண்டும் என்கிற வெறி, நிச்சயம் ஒரு நாள் நாமும் சாதிப்போம் என்ற நம்பிக்கை நான் இன்று சொல்ல முடியாத பிரச்சினையில் உள்ளேன் ஆனால் தங்கள் பதிவு எதையும் வெல்வோம் என்ற நம்பிக்கை கொடுக்கிறது..
நன்றி! நன்றி!!
விழும்போது மீண்டு எழுவது ஒன்றுதான் மனதில் கொண்ட அனைவைரும் மீள் வெற்றியை பற்றுகிறார்கள் !
இந்த நாயகர்கள் அவர்கள் கொண்ட நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி கொண்டு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் !
சாதனை நாயகர்கள் அனைவரும் பெரும்பாலும் சுயம்பு சிற்ப்பங்கள் என்பது கண்கூடு !
வாழ்க வளமுடன் !
வணக்கம் சுந்தர் சார் .
1 ) ஆக்கபூர்வமான எண்ணங்கள்
2 ) ஆக்கபூர்வமான செயல்கள்
3) தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
சரி தான சார்.
சாதித்துக் காட்டுவோம்! நம்மால் நிச்சயம் முடியும்!!
நன்றி
ராஜாமணி