சென்ற ஆண்டு மத்தியில் நாம் சிதம்பரம் மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் சென்றிருந்தது நினைவிருக்கலாம். அப்போது அருகே உள்ள ‘திருப்புன்கூர்’ சென்றிருந்தோம். நீண்டநாட்களாக நாம் தரிசிக்கக் விரும்பிய தலங்களுள் ஒன்று இது. நந்தனாருக்காக நந்தி வழிவிட்ட தலம்.
இன்றும் ஒன்றை அணுகமுடியாது குறுக்கே நிற்பவர்களை கண்டால் “நந்தி மாதிரி குறுக்கே நிற்கிறான்” என்று கூறும் வழக்கு உண்டு அல்லவா?
“நந்தனாருக்கு நந்தி வழிவிட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் விரிவாக தெரியாது. உண்மையில் நந்தி வழிவிட்டதா என்ன? அதை இப்போது கூட பார்க்க முடியுமா?” இது தானே உங்கள் கேள்வி.
இதோ திருப்புன்கூருக்கே செல்லலாம் வாருங்கள்….
எந்தக் குலத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும் எந்த சூழ்நிலையில் ஒருவர் வாழ்ந்து வந்தாலும் உண்மையான பக்தியை கொண்டிருந்தால் சிவனருளை நிச்சயம் பெற முடியும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் ‘திருநாளை போவார்’ என்று அழைக்கப்பட்ட நந்தனார். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
இவர் வாழ்ந்த காலம் கி.பி. 660 – 840 க்கு இடைப்பட்ட காலம் என்று கூறப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடக்கரையோரம் இருந்த ஆதனூர் என்னும் கிராமத்தில் புலையர் குலத்தில் உதித்த மாணிக்கம் இவர்.
சிவத்தொண்டை ஒருவர் செய்யவிரும்பினால் அதை செய்வதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. இவர் செய்த சிவத்தொண்டு என்ன தெரியுமா?
சிவாலயங்களில் உபயோகப்படுத்தப்படும் பேரிகை, நகரா போன்ற இசைக்கருவிகளை செய்ய தேவைப்படும் தோலும், வீணை, யாழ் முதலிய வாத்தியங்களுக்கு தேவையான நரம்புகளையும், சிவபூஜையில் மிகவும் முக்கியத்துவம் உடைய கோரோசனை போன்றவற்றையும் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் நந்தனார். உதிரத்திலேயே சிவபக்தி ஊறியிருந்ததால் செய்யும் தொண்டுக்கு பலாபலன்களை எதிர்பார்த்ததில்லை. (கோரோசனை – பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம்).
நந்தனார் ஈசன் மேல் பெரும் பக்தி கொண்டிருந்தாலும் அக்காலத்திய சாதிய வேற்றுமைகள், நடைமுறைகள் காரணமாக ஆலயத்துக்குள் நுழையாது வெளியே இருந்தபடியே இருகரம் கூப்பி தொழுதபடி செல்வார்.
“வேற்றுமைகள் மனிதர்களிடையே தான். எமக்கு இல்லை. அடியார் அனைவரும் எமக்கு ஒன்றே” என்பதைக் காட்ட திருவுள்ளம் கொண்டான் ஆடல்வல்லான்.
அக்காலங்களில் அவரவர் குலத்துக்குரிய தொழிலை செய்து வந்தோர்க்கு அரசே நிலம் தருவது வழக்கம். நந்தனாருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அவர் மேற்பார்வையில் சாகுபடி செய்யப்படும் நிலங்களும் பல இருந்தன. அதில் கிடைத்த வருமானத்தை தமது தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு உபரி வருமானத்தை சிவத்தொண்டுக்கே செலவு செய்து வந்தார்.
நந்தனாரை சார்ந்த அவரது சமூக மக்கள், பல துஷ்டதேவதைகளை வழிபட்டு வந்தனர். பூசாரிகள் அனைவரும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆளுக்கொரு தெய்வத்தை கற்பனையாக தோற்றுவித்து கருப்பண்ணசாமி, சுடலைமாடசாமி, முனி போன்ற பெயர்களை சூட்டி சிலைகள் முன்பு பலியிடுதல் போன்ற சடங்குகளை செய்து வந்தனர்.
இறைவனின் பெயரால் உயிர் பலியிடுதலை நந்தனார் துளியும் விரும்பாமல் ‘அன்பே சிவம்’ என்பதை வலியுறுத்தி “சிவபெருமானுக்கு மேல் தெய்வம் எதுவும் கிடையாது” என்று தன் மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை ஆலயங்களுக்கு தான் செல்லும்போது உடன் அழைத்து செல்லலாயினார்.
இப்படிப்பட்ட காலகட்டங்களில் ஒரு சமயம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மூன்று கி.மீ. தொலைவிலுள்ள திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கும் சௌந்தரநாயகி உடனுறை சிவோலோகநாதரை தரிசிக்க தன் ஊர் மக்கள் சிலரை அழைத்துச் சென்றார்.
வாயிலில் நின்று மூலவரை தரிசிக்க முற்பட்டபோது நந்திதேவரின் திருவுருவம் இறைவனை மறைத்தது.
ஊரார் அனைவரும் சிவலோகநாதரை காணமுடியாது தவித்தனர். “இந்த காளைமாட்டை பார்க்கவா நாம் வந்தோம்?” என்று விரக்தி தொனிக்க நந்தனாரிடம் பேசினர்.
“ஐயனே! இதுவும் சோதனையோ? உன் திருமேனியைக் காண முடியாது நந்தி தடுக்கிருக்கிறதே!” என உருகி வேண்டினார்.
தன் அடியவன் அதுவும் தன்னைக் காண மற்றவர்களை அழைத்து வந்தவன், சங்கடப்படுவதை கண்டு பொறுப்பானா சர்வேஸ்வரன்?
“சற்றே விலகி இரும் பிள்ளாய்! சந்நிதானம் மறைக்குதாம்” என நந்தி தேவரிடம் கூற, அடுத்த நொடி பாறையை பெயர்த்து உருட்டும் பெரும் சப்தத்துடன் நந்தி நகர்ந்தது.
அனைவரும் பரவசத்துடன் இறைவனை வணங்கி துதிக்க, தனக்கு அருள் செய்த அம்பலவாணனை கண்ணீர் மல்க தொழுதார் நந்தனார்.
இப்போது திருப்புன்கூர் சென்றாலும் நகர்ந்த நிலையில் நந்தியிருப்பதை பார்க்கலாம்.
**************
நந்தனாரின் வரலாற்றை பொருத்தவரை, அவர் ஆதனூர் வேதியன் என்கிற வேதியரிடம் அடிமையாய் பணி புரிந்துவந்ததாகவும், அவர் இவரை சிதம்பரம் போகவிடாமல் தடுத்து கொடுமைப்படுத்தியதாகவும், நந்தனார் சரித்திரம் திரைப்படம் முதலானவற்றில் கூறப்படுகிறது.
இது உண்மையல்ல. இது பற்றி மஹா பெரியவாவே தெய்வத்தின் குரல் ஆறாம் பாகத்தில் கூறியிருக்கிறார். நாயன்மார்களின் சரிதத்தை விரிவாக விளக்கும் மூலநூலான பெரியபுராணத்தில் எந்த இடத்திலும் இப்படி கூறப்படவில்லை என்றும் சென்ற நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பிராமணர் ஒருவர் அக்காலத்திய சாதிய அடக்குமுறைகளை வெறுத்து, தாம் எழுதிய நந்தனார் நாடகத்தில் இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கி சேர்த்துவிட்டார் என்றும் பெரியவா கூறியிருக்கிறார்.
நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திரு அந்தாதியை அடிப்படையாக வைத்து 12 ஆம் நூற்றாண்டில் பெரியபுராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றியபோது அந்தந்த ஊர்களுக்கு சென்று ஆராய்ச்சி செய்து எழுதியது குறிப்பிடத்தக்கது.
* திருப்புன்கூர் ராஜகோபுரத்துக்கு எதிரே நந்தனார் நின்று ஈசனை வழிபட்ட இடத்தில் அவருக்கு கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் கும்பகோணம் செல்பவர்கள் அவசியம் திருப்புன்கூர் சென்று வாருங்கள்.
=======================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
==========================================================
நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 26
நாகதோஷம் நீக்கும் எளிய பரிகாரம்!
மிக மிக அவசியம் ஏற்பட்டாலொழிய பாம்பை அடிக்கக்கூடாது. சிலர் பாம்பை அடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். எங்கோ தான் பாட்டுக்கு சென்றுகொண்டிருக்கும் பாம்பை இவர்களே வலியப் போய் அடிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கும் கடுமையான நாகதோஷம் பீடிக்கும். நாகதோஷம் திருமண தடை, சந்தானத் தடை முதலியவற்றை ஏற்படுத்தும்.
நாகதோஷம் காரணமாக திருமண தாமதம் மற்றும் புத்திர பாக்கியம் தாமதமாகி தவிப்பவர்கள், திருப்புன்கூரில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையை (இரவு 8.00 PM) நேரில் தரிசித்து அர்ச்சனை செய்வது விஷேஷம். திருப்புன்கூரில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் அர்த்தஜாம பூஜையில் மூலவர் சிவலோகநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் தங்கத்திலோ வெள்ளியிலோ நாகத் தகடு செய்து அதை உண்டியலில் சேர்த்துவிட நாகதோஷம் இருந்தால் நிவர்த்தியாகிவிடும். எளிய பரிகாரம் இது. செய்து பாருங்கள்.
டிப்ஸ் தொடரும்…
==========================================================
Also check :
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
==========================================================
[END]
திருப்புன்கூர் நந்தனார் பற்றிய பதிவு அருமை. தனது பக்தனுக்காக இறைவனே ஓடி வந்து அருள் புரிந்த சம்பவம், தன் உண்மையான பக்தனுக்காக இறைவன் இறங்கி வருவான் என்பதை உணர்த்துகிறது . கோவில் கோபுரம் மற்றும் மற்ற படங்களை பார்க்கும் பொழுது, கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது.
திருப்புன்கூர் ஸ்தலத்தில் சுந்தரர் ஓர் பாடல் இயற்றி இருக்கிறார் .
//அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன் தன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க் குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயென நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யாயென விலக்குஞ்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன்
செழும் பொழிற்றிருப் புன்கூர் உளானே //
வாழ்க … வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
நாக தோஷம் நீங்கும் எளிய பரிகாரம் நாக தோஷம் உள்ளவர்கள் பயன் படும் படி எழுதியது நன்றாக உள்ளது
நன்றி
உமா வெங்கட்
அருமை அண்ணா நந்தனார் காலத்துக்கே கூட்டிட்டு போய்டீங்க நன்றி