Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > மதிப்பறியாமல் புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் எடிசன் – சாதனைத் தமிழர் ஜி.டி.நாயுடு!

மதிப்பறியாமல் புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் எடிசன் – சாதனைத் தமிழர் ஜி.டி.நாயுடு!

print
(தோற்றம் : மார்ச் 23, 1893 | மறைவு : ஜனவரி 4, 1974)

ந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் பிறந்த நாள் இன்று. அவர் ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழகத்தை சேர்ந்த திரு.ஜி.டி.நாயுடு அவர்கள். தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். கோவையை சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய அவர் தன்னுடைய அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார். இந்தியாவில் பிறந்த ஒரே காரணத்துக்காக இவருக்கு உரிய அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. இவரது அருமையும் இவரது கண்டுபிடிப்புக்களின் மதிப்பும் அப்போதைய அரசுகளுக்கு தெரியவில்லை. சாதனையாளர்களை அவர்கள் வாழும்போது நாம் புறக்கணிப்பது இன்று நேற்று நடப்பதல்லவே? நம் தேசிய குணம் தானே அது…! (மன்னிக்கவும்!).

இவரை பற்றி நமது தள வாசகர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதால் கிடைத்த நேரத்தில் ஜி.டி.நாயுடு அவர்களை பற்றி செய்திகளை திரட்டி  தந்திருக்கிறேன்.

தொழில் நுட்ப வேட்கைக்கு வித்திட்டவர் 

தமிழகத்தில் குறிப்பாக கோவையில் இன்றுள்ள தொழில் நுட்ப வேட்கைக்கு, அன்றே நாற்று நட்டவர் ஜி.டி.நாயுடு.

கோவை-அவிநாசி சாலையில் பிரெசிடென்ட் ஹால் வளாகத்தில் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. நாடறிந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் பெயரிலுள்ள அருங்காட்சியகம், நாளைய தலைமுறையையும் வியக்க வைக்கும் விஞ்ஞானக் கூடமாக விளங்குகிறது. தொழில் நுட்பம் வளராத காலத்தில் ஜி.டி.,நாயுடு கண்டுபிடித்த கருவிகள், உபகரணங்கள் பிரமிக்கதக்கவை.இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும். ஒரு நூற்றாண்டு கால தொழில்நுட்ப வரலாறுகள், இங்கே காட்சிக்கு உள்ளன. சின்ன திருப்பு உளி போன்ற கைக்கருவிகள் தொடங்கி, நவீனகால தொழில்நுட்பங்களான வானொலி, தொலைக்காட்சி வரை அதன் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

பழைய கால வால்வு ரேடியோ, படிப்படியாக டிரான்சிஸ்டர், டேப்-ரிக்கார்டர் என்று தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறது இந்த காட்சியகம். சிலவற்றைப் பார்த்தால் இதுதானே என்று அலட்சியமாக தோன்றும்; ஆனால், ஜி.டி.,நாயுடு அவற்றை சேகரித்த காலத்தை கவனத்தில் கொள்ளும்போது அதன் உண்மையான மகத்துவம் புரியும்.

ரேடியோ, ரேடியோவுடன் இணைந்த ரெக்கார்ட் பிளேயர், உலகின் முதல் டயர் ரேடியோ (வானொலி நிலையத்தின் பெயர் தமிழில் இருக்கும்), ஸ்பூன் டைப் டேப் ரிக்கார்டர், ஆட்டோமேடிக் போனோகிராப் மெஷின் (காசு போட்டால் பாடும் கருவி), 1971ல் தயாரித்த உலகின் மிகச்சிறிய கால்குலேட்டர் என்று அங்குள்ள ஒவ்வொரு பொருளும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

Winners don’t do different things. They do things differently

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்த அவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர். வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

முதல் தொழிலில் நஷ்டம் 

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார். அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். பின்னர் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து ஊர் திரும்பினார்.

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுதல் 

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.

பணியாளர் நலனில் அக்கறை 

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.

தன் பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டிய நாயுடு அதே சமயம் அவர்கள் மீது கனிவும் கொண்டிருந்தார். அவரை போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை பார்ப்பது மிக மிக அரிது. தனது நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளி எவருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர் கண்டிப்பாக பணிக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். அதையும் மீறி உடல் நலம் சரியில்லாத தொழிலாளி எவரேனும் பணிக்கு வந்தால் அவருக்கு பத்து ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

தன் பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டிய நாயுடு அதே சமயம் அவர்கள் மீது கனிவும் கொண்டிருந்தார். அவரை போன்ற கருணை உள்ளம் கொண்டவர்களை பார்ப்பது மிக மிக அரிது. தனது நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளி எவருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர் கண்டிப்பாக பணிக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார். அதையும் மீறி உடல் நலம் சரியில்லாத தொழிலாளி எவரேனும் பணிக்கு வந்தால் அவருக்கு பத்து ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

“நீ எப்படி இருந்தா எனக்கென்ன? எனக்கு என் நிறுவனம், வேலை, ஆர்டர் இது தான் முக்கியம்… வந்து செஞ்சி கொடுத்துட்டு போ” என்று கருதும் முதலாளிகள் நடுவில் நிச்சயம் நாயுடு போற்றப்படவேண்டியவர்.

“உழைப்பு….கண்டிப்பு…. பணிவு….கனிவு” இது தான் ஜி.டி.நாயுடு அவர்களின் தார்மீக மந்திரம். இதுவே ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு உரிய சூத்திரம் என்றும் உலகிற்கு காட்டியவர் உத்தமர் இவர்.

அபார கண்டுபிடிப்புக்கள்

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக்கழகப் படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

மற்ற துறைகளிலும் தொடர்ந்த சாதனை 

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் தொடர் அதில் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார். விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன! அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

பணம் பெற மறுத்தது ஏன் ?

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்து லட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய ஆங்கிலேய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

ஜி.டி.நாயுடுவின் பரந்த உள்ளம் 

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார். மேலும் தமிழக தலைவர்கள் முன்னிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் கண்டுபிடிப்புக்களை உடைத்து நொறுக்கினார்.

தமிழகத்தின் நலன் பன்னெடுங்காலமாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இவரை விட வேறு சாட்சி தேவையில்லை.

கொடை வள்ளல் 

1938 ஆம் ஆண்டு பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

4/1/1974 அன்று ஜி.டி.நாயுடு நம்மை விட்டு மறைந்தார் ஜி.டி.நாயுடு.

இவருடைய மகன் ஜி.டி.கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார்.

ஒரு பக்கம் நம்மிடையே வாழ்ந்த ஒரு எடிசனை புறக்கணித்துவிட்டு இன்று உலக அறிவியல் தினம், சர்வேதேச தொழில்நுட்ப மாநாடு என்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் நாம். மறுபக்கம் முன்னேறிய நாடுகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இங்கு தொழில் புரட்சியை உருவாக்குவது எப்படி, விளைச்சலை அதிகரிப்பது எப்படி என்று – கோடிகள் செலவு செய்து மத்திய அரசும் மாநில அரசுகளும் அவரவர் பிரதிநிதிகளை மக்கள் வரிப்பணத்தில் அயல்நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

பாரதி சொன்னது போல…. நெஞ்சு பொறுக்குதில்லையே….

அவரது பிறந்த நாளான இன்று அவரின் தன்னலமற்ற சேவைக்கும் தமிழனை தலை நிமிரச் செய்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அவருக்கு நன்றி கூறி அஞ்சலி செலுத்துவோம்.

(பிரத்யேக தகவல்கள் பெற உதவிய தளங்கள் : விக்கிபீடியா, தினமலர்.காம், மாலைமலர்.காம்)

END

11 thoughts on “மதிப்பறியாமல் புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் எடிசன் – சாதனைத் தமிழர் ஜி.டி.நாயுடு!

 1. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அறிய தகவல். நிச்சயம் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நம கடமையாகும்.

 2. நம் நாடு என்றுமே சாதனையாளர்களை மதிப்பது இல்லை என்பது தான் வேதனையான உண்மை ,அப்படி மதித்து இருந்தால் இந்நேரம் நம் நாடு எங்கோ போய் இருக்கும் ,ஜப்பான் சீனா போன்ற நாடுகளுக்கு எல்லாம் நாம் நிறைய பொருள்களை ஏற்றுமதி செய்து இருக்கலாம் அவ்வளவு மூளை உள்ளவர்கள் நம் மக்கள் அதை பயன்படுத்தும் வாய்ப்பு நம் மக்களுக்கு சரியாக கிடைப்பது இல்லை

 3. அறிவியலில் தொடர் முன்னேற்றத்துக்கான முதல் முயற்சி எடுத்த அறிவியல் தந்தை ஜி.டி.நாயுடு புகழ் வாழ்க. ( அப்புறம் அவரு எங்க ஊர்காரர் )

 4. எலோரும் அறிந்த பெயர் ஜி.டி.நாயுடு.

  ஆனால் அறியாத பல விஷயங்கள் , கண்டுபிடிப்புகள் பல உள்ளன என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன்.

  நன்றி.

 5. இன்றும், இன்னும் கூட எத்தனையோ பேரை இப்படி இழந்து கொண்டிருக்கிறோம் . இப்போ கூட கோவையில் பீளமேட்டில் ஒரு கட்டிடம் உள்ளது, அதில் கன்ஸ்ட்ரக்ஷன் ஃபார் டிஸ்ட்ரக்ஷன் என்று எம்பாஸ் செய்யபட்டிருப்பதை காணலாம். அவர் வரி கட்ட மறுத்து கட்டிய கட்டிடம்.

  சிவகுமரன்,
  -ஆத்ம தர்ஷன சேவா சமிதி

 6. நாட்டில் (மற்றும் வீட்டில்) எப்போமே இருக்கிறப்ப ஒருத்தரோட அருமை தெரியாது நமக்கு

 7. அமரர் திரு ஜி டி நாய்டு அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ளவும் அவர் தம் என்னற்ற சாதனைகளை அறிந்துகொள்ளவும் இனிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சுந்தர் அவர்களுக்கு நன்றி !!!

  திரு ஜி டி நாய்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் பிரமிப்பூட்டும் அதே வேலையில் அவரை அன்றைய அரசாங்கம் நடத்திய விதம், அவர் அடைந்த மன உளைச்சல், விரக்தி இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது மனம் கனக்கிறது !!!

  நல்லதுக்கு காலமில்லை என்று சொல்வார்கள்
  அது எவ்வளவு உண்மை என்பதை உணர முடிகிறது !!!

  கண்டுபிடிப்பை அயல் நாட்டவர்க்கு விற்று கட்டு கட்டாய் கரன்சியை ருசி பார்க்கும் கல் நெஞ்சக்காரர்களுக்கு மத்தியில் அமரர் திரு ஜி டி நாய்டு அவர்கள் ஒரு மனிதருள் மாணிக்கம் !!!

  இந்திய ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்து மதிப்பில்லாத தமைந்து கண்டுபிடிப்பை தாம் பிறந்த நாட்டுக்கே தானமாக கொடுத்த செயல் நெஞ்சை நெகிழ வைக்கிறது !!!

  இது போன்ற என்னற்ற மகத்தான சாதனையாளர்களையும் அவர் தம் அறிய கண்டுபிடிப்பையும் புறக்கணிக்கும் சாபக்கேடுக்கு என்று தான் விமோசனமோ ???

 8. Thanks so much for this great article.
  ***
  By getting know the history of such great people, It makes me think that whether these people are born talented or developed ones.
  ***
  And my intellectual convince me that “everyone or at least 2/3 of people who have achieved such a stupendous success because of their passion and persistence only”.

  As Edison puts, “Genius is 1% inspiration plus 99% perspiration”.
  ***
  let me do some inspired work henceforth at least after knowing history of some great ones like this man. And btw, indeed he is great man and endeavoured in inventions, philanthophy, education, agriculture, transport system and what not. we salute you sir.
  ***
  **Chitti**
  Thoughts becomes things.

 9. முயற்சி திருவினையாக்கும்
  ——————————————-
  என் பெயர்த்தி ஜுவைரியா, மேல் உள்ள தலைப்பில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார். இந்த கட்டுரையை படித்து வியந்து போனார். இம் மாபெரும் அறிவியல் மேதைக்கு தமிழக அரசு வருடந்தோறும் அவர் பெயரில் ஒரு அறிவியல் விருது வழங்கவேண்டும்.

  பேராசிரியர் பாரிஸ் ஜமால்,
  நிறுவனத் தலைவர்,
  பிரான்சு தமிழ்ச் சங்கம்

  1. நன்றி சார்…!

   கனவு மெய்ப்படவேண்டும். அதற்கு திருவருள் துணையிருக்க வேண்டும்.

   – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *