Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 13, 2024
Please specify the group
Home > Featured > நண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்

நண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்

print

மக்கு சுதந்திரம் என்பது ஏதோ மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி உள்ளிட்ட பெருந்தலைவர்கள்  மட்டுமே போராடி வாங்கித் தந்ததில்லை. விடுதலை போரில் இந்த தலைவர்களின் பங்கு மகத்தானது என்றாலும் அவர்களால் மட்டுமே அது கிடைத்துவிடவில்லை. இந்திய விடுதலை போரில் எத்தனையோ முகம் அறியா ஆன்மாக்களின் தியாகமும் உழைப்பும் அடங்கியிருக்கிறது.  தாய் திருநாட்டு விடுதலை ஒன்றையே தங்கள் இலட்சியமாக கொண்டு தங்கள் இளமையையும் மகிழ்ச்சியையும் நமக்காக தியாகம்
செய்த உத்தமர்கள் அநேகம் பேர் உள்ளனர். அப்படிப்பட்ட உத்தமர்களை இன்றைய தலைமுறையினர் மறந்துவரும் நிலையில், நாம் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போதாவது அவர்களை – அவர்களது தியாகங்களை – சற்று நினைவு கூர்வோம். அவர்களின் அருந்தொண்டுக்கு இந்த வையகத்தையும் வானகத்தையும் ஒருங்கே கொடுத்தாலும் கூட ஈடில்லை என்றாலும், நம்மால் முடிந்த மரியாதையை அவர்களுக்கு செய்வோம்.

இன்று – பிப்ரவரி 27 – சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் அவர்களின் நினைவு நாள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சந்திர சேகர ஆசாத் அவர்களின் பங்கு அளப்பரியது. திருப்பூரில் வெள்ளையனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்டபோது தன் மீது பட்ட ஒவ்வொரு தடியடிக்கும் ‘வந்தே மாதரம்’ ‘வந்தே மாதரம்’ என்று சொன்ன கொடி காத்த குமரனின் தியாகமும் வீரமும் எத்துனை மகத்தானதோ அதே அளவு மகத்தானது தன் மீது பட்ட ஒவ்வொரு சவுக்கடிக்கும் ஆசாத் “பாரத் மாதா கீ ஜெய்” என்று சொன்னது.

ஜூலை மாதம் 23 ஆம் தேதி உத்திரப் பிரதேசம் மாநிலம் பதர்க்கா என்னும் ஊரில் சீதாராம் திவாரி மற்றும் ஜெக்ராணி தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார் சந்திரசேகர் திவாரி.

விடுதலை போரின் பால் ஈர்க்கப்பட்டு 15 ஆம் வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார் சந்திரசேகர் திவாரி. அதற்காக இவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்து செல்லப்பட்டார். நடுவர் இவரிடம், “உன் பெயெர் என்ன? உன் தந்தை பெயர் என்ன? உன் முகவரி என்ன?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த திவாரி முறையே “விடுதலை – சுதந்திரம் மற்றும் சிறை” என்று பதிலளித்தார். உடனே நடுவர் கோபமுற்று, “உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கூறி இவரை கடுந்தண்டனையுடன் கூடிய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

“நான் இப்படி சொன்னால் தான் நீங்கள் எனக்கு கடுமையான தண்டனை தருவீர்கள் என்று எனக்கு தெரியும். ஆகையால் தான் அப்படி சொன்னேன்” என்று திவாரி சொல்ல, அதற்கு கோர்ட்டில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

இதனால் பெருத்த அவமானமடைந்த அந்த வெள்ளைக்கார நீதிபதி, அவருக்கு பதினைந்து கசையடி கொடுக்கும்படி கட்டளையிட, ஒவ்வொரு கசையடிக்கும் “பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷமிட்டபடி இருந்தார் சந்திரசேகர். அதுமுதல் சந்திரசேகர் திவாரி – சந்திரசேகர் ஆசாத் ஆனார். (ஆசாத் என்றால் விடுதலை).

1922ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்ட பின்னரும் கூட ஆசாத் தமது கொள்கையில் உறுதியாக இருந்தார். நம் நாடு எப்படியாவது சுதந்திரத்தை அடையவேண்டும் என்பதற்காக தம்மை தாமே அர்பணித்துகொண்டார். இந்தியாவின் எதிர்காலமே சோஷியலிசத்தில் தான் அடங்கியிருப்பதாக கருதினார் ஆசாத். ப்ரின்வேஷ் சாட்டர்ஜி என்பவர் இவரை ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிஸ்மல் என்பவரிடம் இவரை அறிமுகப்படுத்தினார். பிஸ்மல் முதலில் இவர் மீதும் இவரது தீவிரத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. இதையடுத்து அங்கு எறிந்த்கொண்டிருந்த விளக்கில் கையை வைத்து தணந்து சுதந்திர பசியை சோஷலிச தாகத்தை காண்பித்தார் ஆசாத். இதையடுத்து பிஸ்மல் இவரை தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். சாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சுதந்திரம் என்கிற ஹிந்துஸ்தான் குடியரசின் கொள்கை ஆசாத்தை மிகவும் கவர்ந்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடன்  கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோகி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.

ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப்பயிற்சிக் கூடமாக பயன்படுத்தினார ஆசாத். சிறு வயதில் அவர் கற்றுக்கொண்ட வில்வித்தை இதற்க்கு மிகவும் துணை புரிந்தது. மேலும் அவரே தன் அமைப்பினருக்கு போர்பயிற்சிகளை கற்றும் கொடுத்தார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்கு போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார்.

ரயில் கொள்ளையை அடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை அழிக்கத் தீவிரம் காட்ட தொடங்கியது. அந்நேரம் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் நட்பு இருந்து வந்தது.

இவரை பிடிக்க முடியாமல் திணறியது காவல்துறை. இவரை பிடிக்க உதவுபவருக்கு ரூ. 30,000 அன்பளிப்பு தருவதாக அறிவித்தது. எனினும் பல ஆண்டுகள் தலைமறைவாக சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்.

நவம்பர் 1928ல் காவல்துறையின் லத்தியடிக்குப் பலியான லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழிவாங்க இ.சோ.கு.அ முடிவெடுத்து, லத்தியடிக்கு உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர், ஜே. ஏ. ஸ்காட்டைக் கொலை செய்யத் தீர்மானித்தது. பகத் சிங், சிவ்ராம் ஹரி ராஜ்குரு, ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர் இக்காரியத்தை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். டிசம்பர் 17, 1928 அன்று படுகொலை முயற்சிக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஸ்காட் அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது ஜெய்கோபால், பகத் சிங்கிற்கும் ராஜ்குருவிற்கும் சைகை காட்டவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜெய்கோபால் உதவிக் கண்காணிப்பாளர் சாண்டர்சைத் தவறுதலாக ஸ்காட் என நினைத்து சைகை காட்டிவிட பகத் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்சை சுட்டுக் கொன்றுவிட்டனர். கொலையாளிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற தலைமைக் காவலர் (ஏட்டு) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் லாகூரில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டித் தாங்கள் செய்த கொலையை ஒப்புக் கொண்டது இ.சோ.கு.அ. சுவரொட்டியில் காணப்பட்ட விவரம்:

“ஜேபி சாண்டர்சு கொல்லப்பட்டான். லாலா லஜபதி ராயின் மரணத்துக்குப் பழி தீர்க்கப்பட்டது. .. இந்த மனிதனின் மரணத்தில் இறந்து போனது இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்துக்குத் துணைபோன ஒருவன். மனித ரத்தம் சிந்த நேர்ந்ததற்கு வருந்துகிறோம். ஆனால் புரட்சியின் சன்னிதியில் தனிமனிதத் தியாகங்கள் தவிர்க்கமுடியாதது.”

பிற்பாடு பகத் சிங் போலீசாரால் பிடிக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். ஆசாத் தேடப்பட்டு வந்தார்.

பிப்ரவரி ப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான சுக்தேவ் ராஜிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரை ஒரு வஞ்சகன் காட்டிக்கொடுத்ததால் பிரிட்டிஷ் காவல்துறையினர் ஆசாத்தை சுற்றி வளைத்தனர்.  சுக்தேவை தப்பிக்க விட்டுவிட்டு ஆசாத் நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவே கூறிக்கொண்டனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.

ஆசாத் இறந்த இடமான அல்ஃப்ரெட் பூங்கா பிற்பாடு ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மாபெரும் வீரரின் தியாகத்தை அவரது நினைவு நாளில் போற்றுவோம். பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து நடந்துகொள்வோம்.

ஜெய் ஹிந்த்!

9 thoughts on “நண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்

 1. இந்த நாட்டில் பல சரித்திர புருசர்களின் வரலாறுகள் மறைக்க பட்டு உள்ளது ,இது போல் நிகழ்வுகள் அனைவருக்கும் பொய் சேர வேண்டும் அப்பொழுது தான் உண்மையான விடுதலை போராட்டம் அதில் எத்துனை பேர் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் என்று தெரியும்

  மிக அருமையான நம் இளைனர்களுக்கு தேவையான கட்டுரை

 2. சுதந்திரம் என்பதை இன்று நாம் அனுபவிக்கிறோம் ஆனால் அதை பெற்று தந்தவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்பது வருத்ததிற்குரிய விஷயம்…

  பல லட்சம் பேரின் உயிர் தியாகத்தால் கிடைத்த இந்த சுதந்திரத்தை போற்றி பாதுகாப்போம் …….

  vande mataram
  sujalaṃ suphalaṃ
  malayajasitalam
  sasya syamalaṃ
  mataram
  vande mataram

  subhra jyotsna
  pulakita yaminim
  phulla kusumita
  drumadalasobhinim
  suhasiniṃ
  sumadhura bhaṣiṇim
  sukhadaṃ varadaṃ
  mataram
  vande mataram

  ஜெய் ஹிந்த்…..

  PVIJAYSJEC

 3. அருமையான கட்டுரை!! வாழ்த்துக்கள் சுந்தர் சார் 🙂

  – வந்தே மாதரம் 🙂

 4. ஆசாத் போன்றவர்களின் தியாகமும் வீரமும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ளது. இவர்களை போன்ற தன்னலமற்ற தேசத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ அல்லது குரும்படமாகவோ எடுக்க கலை உலகத்தினர் ஆர்வம் காட்டவேண்டும். நம் தளத்தில் இதுபோன்ற அரிய விஷையங்களை பற்றி தெரிந்துகொள்வது மிகுந்த சந்தோஷத்தையும் மனநிறைவையும் தருகிறது. நன்றி சுந்தர்.

  1. ராம், சந்திரசேகர் ஆசாத்தின் வாழ்க்கை இதற்கு முன்பு ஹிந்தியில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. அஜய் தேவ்கான் நடித்திருப்பதாக நினைவு. தவிர ‘ரங்க தே பசந்தி’யில் அமீரின் காரக்டர் கூட சந்திசேகர் ஆசாத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் உருவாக்கப்பட்டது.

   – சுந்தர்

 5. தெற்கே ஒரு வாஞ்சிநாதன் வடக்கே ஒரு அசாத். ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட மாவீரனின் உணர்ச்சிமிக்க வரலாறு. என்னை பொறுத்தவரை இவர்களின் வாழ்கை வரலாற்றை படமாக எடுத்தால் இன்றைய இளைஞர்களுக்கு நம் இந்தியாவின் பெருமையை உணர்த்தும் வாய்ப்பாக இது அமையும்.

 6. ஆசாத் போன்று பலபேரை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலை தூண்டிவிடுலீர்கள்

 7. ரைட்மந்த்ரா.காம் இது போன்ற பல நல்ல நிகழ்வுகளை மக்கள் மனதில் பதிய வைக்கிறது. வாழ்த்துக்கள்.
  பேராசிரியர் பாரிஸ் ஜமால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *