”அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், ‘ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?”
எம்.எஸ்.வி. : ”ஆமாங்க! ‘ஆபீஸ் பையன் அண்ணே’னு கூப்பிடுவேன். சினிமாவில் நான் பார்த்த முதல் வேலையே ஆபீஸ் பையன் வேலைதான். எட்டு வயசுல இருந்து பல கஷ்டங்களைச் சந்திச்சு, முட்டி மோதித்தான் சினிமாவில் எனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிச்சேன். ஆபீஸ் பையனா வேலை பார்த்தப்ப, எல்லாவிதமான மனிதர்களிடமும் சகஜமாகப் பழகி அவங்களோட சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கிட்டதால், எல்லாரையும் மதிக்கணும்கிற பண்பு எனக்கு இயல்பாவே வந்திருச்சு. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம்? யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்!”
”சினிமாவில் பெரியவங்க, சின்னவங்க வித்தியாசம் இல்லாம எல்லோருடனும் இயல்பா உங்களால் எப்படி இணைந்து செயல்பட முடியுது?”
எம்.எஸ்.வி. : ”எந்த இடத்துலயும் நாம நாமளா இருந்தா யாரோடவும் இணைந்து செயல்பட முடியும். மனிதர்கள் பலருக்குப் பிரச்னை வர்றதே… அவங்கவங்களோட ஈகோவால்தான். எனக்கு ஈகோவே கிடையாது. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துலஇளைய ராஜாவோடு சேர்ந்து இசையமைச்சேன். இப்போ அவரோட மகன் யுவன்ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து ‘தில்லுமுல்லு’ பார்ட்-2 படத்துல இசையமைக்கிறேன். எல்லாம் ஆண்டவன் அனுக்கிரஹம்.”
”திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி ‘அல்லா… அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?”
எம்.எஸ்.வி. :”அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. ‘முகமது பின் துக்ளக்’ படத்துல ‘அல்லா… அல்லா…’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். ‘சரி… யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. ‘சரி… ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது… சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!”
”நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?”
”நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, ‘கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். ‘டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!”
– விகடன் மேடையில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியது
எம்.எஸ்.விஸ்வநாதன் – சில நெகிழ வைக்கும் குறிப்புக்கள்…* இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!* நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!* தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
* தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
* 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
* வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
================================================================================
Also check :
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!
நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…
================================================================================
[[END]
திரு எம் எஸ் வி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரை அஞ்சலி செலுத்தும் வகையில் அழகான கேள்வி பதிலை தொகுத்து அளித்ததற்கு நன்றிகள் பல. ஈகோவை விட்டு ஒழிந்தால் வாழ்வில் முன்னேறலாம்
நன்றி
உமா வெங்கட்
மெல்லிசை மன்னரது குரலும்..அவரது மெல்லிசையும் ..
நம்மில் கலந்த பிறகு..
அவரது பூதஉடல் மறைந்தாலும் அவரது புகழுடல் என்றும் நம்மில் வாழும்..
40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த இசை மேதையின் பாட்டை கேட்காமல் வளர்ந்திருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். காலத்தால் அழிக்க முடியாத காலத்தால் அழிக்க முடியாத என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த காலத்தாலும் எந்த காலத்திலும் அழியப்படாது என்றால் MSV ன் பாடல்கள். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தாழையாம் பூ முடித்து, அவளுக்கென்ன அழகிய முகம், ஆடி அடங்கும் வாழ்க்கையடா விலிருந்து, இளையராஜாவுடன் வா வெண்ணிலா உன்னை தானே ஐ தாண்டி, ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா வரை MSV இசை வர்ண ஜாலம். நான் அதிகமாக பார்க்கும் டிவி சேனல் ‘ முரசு ‘. ஏனெனில் அதில்தான் இனிமையான பழைய பாடல்களை போடுகிறார்கள். இப்போது கேட்டாலும் அவருடைய பாடல்கள் நம்மை எங்கெங்கோ அழைத்து சென்று விடும்.
இயற்கையின் விதிப்படி அவரது உடல் தான் மறைந்து விட்டது, அவரது பாடல்கள் தமிழ் திரை உலகம் உள்ளவரை ஒவ்வொரு இசை ரசிகனாலும் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்.
MSV என்றாலே மெல்லிசை…
மெல்லிசை என்றாலே MSV…
அவர் என்றும் நம் நினைவுகளில் மெல்லிசையாக வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்…