ஒரு நிறுவனத்தின் முதலாளியின் கீழே இரண்டு பேர் பணிபுரிகின்றனர். அதில் ஒருவன், சரியான சோம்பேறி. தனது வேலைகளை சரிவர செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதிலும் உதவுவதில்லை. ஆனால் முதலாளியை கண்டால் மட்டும் ஓடிப் போய் கூழை கும்பிடு போடுவான். அவர் உடுத்தியிருக்கும் உடைகளை பற்றி பெருமை பேசுவான். அவரை காக்காய் பிடிப்பதும், அவருக்கு வேண்டியதை செய்வதும், முகஸ்துதி பாடுவதுமாக பொழுதை கழிப்பான்.
இன்னொருவனுக்கு இந்த காக்காய் பிடிப்பது, முகஸ்துதி பாடுவது, இதெல்லாம் தெரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் வேலை ஒன்று தான். அதாவது அவன் கடமையில் அவன் சரியாக இருக்கிறான். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அவனுக்கு இடப்பட்ட வேலைகளை ஒழுங்காக செய்து முடிப்பான். அதில் எந்த குறையும் வைப்பதில்லை. முதலாளியை புகழ்ச்சிக்காக பாராட்டியதில்லை.
இந்த இருவரில் முதலாளிக்கு யாரை பிடிக்கும்?
முதலாளி முட்டாளாக இருந்தால் முதலாமவனை பிடிக்கும். தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறையுடைய புத்திசாலி முதலாளியாக இருந்தால் இராண்டாமவனை பிடிக்கும். சரிதானே?
அந்த நிறுவனம் போன்றது தான் இந்த உலகம். இறைவன் தான் இங்கு முதலாளி. அவனுக்கு யாரை பிடிக்கும்?
சற்று யோசித்து பாருங்கள்… பக்தி செய்கிறோம் பேர்வழி என்று ஏமாற்றும் குணமுள்ளவர்கள் ஒருபுறம். பின்னர் எந்த சூழ்நிலையிலும் தனக்குரிய கடமைகளை சரிவர செய்துகொண்டு தன்னை வணங்காவிட்டாலும் தனது விருப்படிப்படியான ஒரு வாழ்க்கையை ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருபவர்கள் மறுபுறம்.
இரண்டு வகையினரில் கடவுளுக்கு யாரை பிடிக்கும்?
இறைவனை நீ வணங்குவதோ அல்லது கோவிலுக்கு போவதோ அல்லது அவனது புகழ் பாடுவதோ முக்கியம் அல்ல. நீ உன் கடமையை சரியாக செய்கிறாயா ? அவன் விருப்பப்படும்படியான ஒரு வாழ்க்கையை நீ வாழ்கிறாயா என்பதை முதலில் உறுதி செய்துகொள். பின்பு பக்தி செலுத்து. – நேற்றைக்கு கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற திரு.பி.சுவாமிநாதன் அவர்களின் ‘குரு மகிமை’ சொற்பொழிவிலிருந்து.
(நேற்றைக்கு அனுஷ நட்சத்திரத்தன்று வழக்கமாக நடைபெறும் ‘குரு மகிமை’ நிகழ்ச்சியுடன் திரு.சுவாமிநாதன் அவர்கள் ‘மகா பெரியவா’ அவர்களை பற்றி பேசிய இரண்டு சி.டி.க்கள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. சுகி சிவம், இசை வித்தகர் ரமணன் உள்ளிட்ட சான்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குமுதம் ஜோதிடம் ஆசியர் திரு.ஏ.எம்.ராஜகோபாலன் அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி குறித்த நெகிழ்ச்சியான நமது அனுபவத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்குள் சமீபத்தில் ஓடிக்கொண்டிருந்த பல சந்தேகங்களை இந்த நிகழ்ச்சி தீர்த்துவைத்தது. எல்லாம் மகா பெரியவா கருணை! (நாளையும் நாளை மறுநாளும் உறவினர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள கரூர் அருகே உள்ள தான்தோன்றிமலை செல்கிறேன். நடுவில் ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் பதிவளிக்கிறேன். )
================================================================
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் :
‘எண்ணங்களின் சங்கமம்’ நிறுவனர் திரு.ஜெ பி.
ஜெ பி. என்று அன்புடன் அழைக்கப்படும் திரு.ஜெ.பிரபாகர் அடிப்படையில் ஒரு சிறந்த ஓவியர். மதுவுக்கெதிரான பிரச்சாரம் மூலம் 1985 ஆம் ஆண்டு தனது சமூக பணியை துவக்கினார் திரு.ஜெ பி. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று மனித நேயம் மற்றும் ஒழுக்கம் குறித்து பிரச்சாரம் செய்வார். ராலேகான் சித்தி கிராமத்தில் தனிமனிதனாக அன்னா ஹசாரே கலக்கிய சமயத்திலேயே (அதாவது 1989 லேயே) அவரை தமிழக கிராமங்களுக்கு அழைத்து வந்தவர் திரு.ஜெ.பி.
2005 ஆம் ஆண்டு, பல விதமான சேவைகளில் தங்களை ஈடுபடுத்திவரும் தொண்டு நிறுவனங்களை எல்லாம் ஒன்று சேர்க்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. ‘எண்ணங்களின் சங்கமம்’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அவர்களையெல்லாம் ஒன்றிணைத்தார். முதலில் 100 அமைப்புக்களோடு துவங்கிய ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பில் தற்போது 700 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.
கிராமப்புற மறுமலர்ச்சி, சுகாதாரம், மது ஒழிப்பு, கல்வி, முதலியவற்றை மேற்படி தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்னர் – பல்வேறு துறைகளில் தன்னலமற்ற சேவை செய்து வரும் 100 இளைஞர்களை தேர்ந்தெடுத்து – அவர்களை அழைத்து கௌரவித்தார் திரு.ஜெ.பி. அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் இதற்க்கென்று விவேகானந்தர் விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்து, 100 விவேகாந்தர்களை திரட்டிக் காட்டினார்.
நமது பிரார்த்தனை பதிவுக்கு தலைமையேற்ற திருவண்ணாமலை மணிமாறனும் இந்த 100 பேரில் ஒருவர். மணிமாறன் சென்னை வந்திருப்பதை அறிந்து அவரை நேரில் சந்தித்து கௌரவிக்க, நானும் நண்பர் ராஜாவும் வைஷ்ணவா கல்லூரிக்கு சென்றபோது தான் இப்படி ஒரு விழாவிற்கு தாம் வந்திருக்கும் விபரத்தை கூறி திரு.ஜெ.பி. அவர்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைத்தார் மணிமாறன். அதுவரை அப்படி ஒரு விழா நடைபெறுவது எனக்கு தெரியாது. ஒரு நல்லவரை தேடிப் போனால், அங்கே நூறு நல்லவர்களையும், ஒரு நல்லவருக்கு நல்லவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதுக்கு தான் நான் அடிக்கடி சொல்கிறேன்…
நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க
நல்லார் சொற்கேட்பதும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே!
என்று. (சிலருக்கு இது இன்னும் புரியவில்லை. தீயோரை காண்பதும் நன்றேன்னு வாழ்ந்துக்கிட்டுருக்காங்க. உண்மை அவர்களுக்கு புரியும்போது காலம் கடந்துபோயிருக்கும்.)
பசியில் இருந்தவன் விருந்து சாப்பிட சென்றால், “விருந்து தானே கேட்டே? நான் விருந்து பரிமாறும் வாய்ப்பையே உனக்கு தர்றேன்!”னு சொல்லி அவனிடம் உணவு பரிமாறும் வாய்ப்பை கொடுத்தால் அவன் எவ்வளவு சந்தோஷப்படுவானோ அப்படி மிகப் பெரிய பணி ஒன்றை சமீபத்தில் திரு.ஜெ.பி. அவர்கள் எனக்கு வழங்கியிருக்கிறார். எனக்காக எவரேனும் பிரார்த்தனை செய்ய விரும்பினால் அந்த பணியை நான் சிறப்பாக செய்துமுடிக்க இறைவன் எனக்கு வல்லமையை தரவேண்டும் என்று பிரார்த்தித்து கொள்ளுங்கள்.
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
===========================================================
அன்னை நலமடைய வேண்டும்
வாழும் ஒளவை பழனி இராஜம்மாள் அவர்களை நாம் மறக்கமுடியாது. நமது தளத்தின் பிரார்த்தனை கிளப்பிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் தலைமையேற்றது தெரிந்திருக்கும். சமீபத்தில் ஒரு நாள் பழனியில் உள்ள அவர் வீட்டில் மாடிப்படி அருகே இடறி விழுந்து அவரது பின்னந்தொடையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.
பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் மூன்று மாதங்கள் கழித்தே அவர் சகஜமாக நடமாடமுடியும் பயணம் எதுவும் மேற்கொள்ளமுடியும். இந்த தள்ளாத வயதிலும் களைப்பு தெரியாது தேனீ போல ஓடியாடி சிவ சேவை செய்து வந்தவரை இந்த விபத்து முடக்கிபோட்டுள்ளது. விஷயத்தை கேள்விப்பட்டு நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. நான் மட்டுமல்ல, திருவாசகம் பிச்சையா, தினமலர் முருகராஜ், டால்பின் ராமநாதன், என அனைவரும் இது குறித்து மிகவும் வருந்தினோம். மிகப் பெரிய ஒரு தீவினையை இறைவன் தடுத்து இந்த அளவோடு அருள் புரிந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதுகிறார்கள்.
அவர் நமக்காக பிரார்த்தனை செய்த நிலையில் அவருக்காக நாம் பிரார்த்தனை செய்வது என்பது எனக்கு தயக்கமாக இருந்தது. இருப்பினும் திருவாசகம் பிச்சையா மற்றும் டால்பின் ராமநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டதையத்த்து இந்த பிரார்த்தனையை இங்கு பதிவு செய்கிறேன். அவன் நடத்தும் நாடகத்தின் காரண காரியங்களை அவன் மட்டுமே அறிவான் எனும்போது நாம் செய்யக்கூடியது பிரார்த்தனை ஒன்று தான்.
பல கி.மீ.கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இந்த வயதிலும் பலமணிநேரங்கள் பசி தூக்கம் பாராது அமர்ந்து திருவாசகம் பாடும் தனது பக்தை மீது இறைவன் இரக்கங்கொண்டு தற்காலிக ஓய்வை கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
அவர் விரைவில் பரிபூரண நலம் பெறவேண்டும் அதை பார்த்து நாம் அகம் குளிரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
============================================================
முடக்கி வைக்கும் மூட்டு பிரச்னை
நங்கநல்லூரை சேர்ந்த நம் தளவாசகர் திரு.ஜெயராமன். அரசுப் பணியில் பெற்ற இவர் வயது 71. சென்ற மாதம் ஒரு நாள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் நமது தளத்தை கடந்த சில மாதங்களாக பார்த்துவருவதாகவும் நமது தளம் மிகவும் பிடித்துவிட்டது என்றும் “I LOVE RIGHTMANTRA” சார் என்று கூறியிருந்தார்.
அவர் அனுப்பிய வார்த்தைகளில் இருந்து :
I am very much happy to say your RIGHT MANTRA .COM is inspiration to me and I forward them to my relatives and friends. it gives moral values and encourages to rejuvenate the sunken mind and we get moral support to go ahead even in difficulties. Let your service To humanity, especially to Hindus both old and young be continued. we pray GOD to give you a long happy life and give you strength to continue your service.
– S R Jayaraman, Nanganallur
முன்பின் அறிந்திராத ஒருவர் தரும் இந்த உளப்பூர்வமான பாராட்டிவிட சந்தோஷம் எனக்கு வேறு என்ன இருக்கமுடியும்? இது நம் பணிகளுக்கு இறைவன் தரும் வெகுமதியாகவே கருதுகிறேன்.
சமீபத்தில் ஒரு நாள் அவரிடம் பேசும்போது அவருக்கு மூட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூட்டு வலியால் அவதிப்படுகிறார் என்று தெரிந்து கொண்டேன். சொற்பொழிவு, உபன்யாசம், கச்சேரி, கோவில் கும்பாபிஷேகம் போன்று பல இடங்களுக்கு போய் வரவேண்டும் என்கிற ஆவல் இருந்தும் மேற்படி மூட்டு வலியால் அதிக தூரம் பிரயாணம் செய்ய முடியாமல் தனது வீட்டை சுற்றியுள்ள கோவில்களுக்கு சென்று வருவதோடு இவரது பயணம் நின்றுவிடுகிறது. எனவே நானாக மனமுவந்து அவரிடம் அனுமதி பெற்று இந்த கோரிக்கையை இங்கு அளிக்கிறேன்.
அவருடைய காலில் ஏற்பட்டுள்ள மூட்டு வலி அகன்று அனைத்து விதமான சுபிட்சங்களும், சாந்தியும் அவர் கிரகத்தில் பெருகி, அவர் நிம்மதியாகவும், சௌக்கியமாகவும், சந்தோஷமாகவும் இனி வரும் நாட்களை கழிக்க இறைவனை பிரார்த்திப்போம்.
============================================================
நம் பொது பிரார்த்தனை
பெருகி வரும் பாலியல் குற்றங்கள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் பெருகிவருகின்றன. இதன் மூலம் பாரதத் தாய் தலைகுனிந்து நிற்கிறாள். நமது கல்விமுறை நம்மை பக்குவப்படுத்துவதற்கு பதில் பணம் சம்பாதிக்கும் ஒரு இயந்திரமாகத் தான் நம்மை உற்பத்தி செய்கிறது. பெற்றோர்களும் அதில் தான் ஆர்வம் காட்டிவருகின்றனர். விளைவு : பக்குவமில்லாத வளர்ச்சி.
கல்வியால் செம்மை பெறவேண்டிய மாணவர்கள் – ஒழுக்கத்தை போதிக்காத இந்த கல்வி முறையால் – சிறு வயதிலேயே தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுத்து அதன் படியே வாழ பழகிவிடுகிறார்கள்.
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்கள் பாடியதை போல “ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி” என்பதை அனைவரும் உணரவேண்டும்.
நமது கல்விமுறையில் அவசியம் தேவை ஒரு மாற்றம். விஞ்ஞானத்துடன் மெய்ஞானமும் அனைவரும் கற்றால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும். அதற்கான வசதி வாய்ப்புக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.
அதே போல, பாலியல் குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் அப்போது தான் எவரும் குற்றம் செய்ய துணியமாட்டார்கள்.
எனவே இறைவனின் கவனம் இதன் மீது திரும்பி மேற்கூறிய சமூக அவலங்களில் உரிய மாற்றம் ஏற்படவேண்டும். இந்த மாற்றத்திற்காக முயற்சிப்பவர்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றிபெறவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
============================================================
அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வெடுத்து வரும் ‘வாழும் ஔவை’ அன்னை இராஜம்மாள் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து நம் அனைவரின் மனம் குளிரும் வகையில் முன்பு போல, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நங்கநல்லூரை சேர்ந்த வாசகர் திரு.ஜெயராமன் அவர்களுக்கு தனது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற்று, பரிபூரண ஆரோக்கியம் பெறவேண்டும். இனிவரும் காலத்தை அவர் மன அமைதியுடன் கழிக்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் முடிவுக்கு வந்து பாரதமாதா தலைநிமிரவும் பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 15, 2013 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : பன்னிரு திருமுறை வித்தகர் திரு.என்.சுவாமிநாதன்
பழனி இராஜம்மாள் அம்மா விரைவில் நலமுடன் தனது சேவையை தொடரவும், சகோதரர் திரு.ஜெயராமன் அவர்கள் விரைவில் மூட்டு வலியிலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் நிலை வரவும் இறைவனை மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.
திரு சுந்தர் அவர்களுக்கு,
தாங்கள் நாளை கரூர் செல்லுவதாக கூறியுள்ளிர்கள்.
நேரம் இருந்தால் அவசியம் நெரூர் சென்று வரவும்..
சதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதிக்கு தானே? நிச்சயம்.
நன்றி!
– சுந்தர்
நன்றி. உங்கள் கரூர் மற்றும் நெரூர் பயணம் தொடர்பான பதிவினை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளோம்.
\\\ அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வெடுத்து வரும் ‘வாழும் ஔவை’ அன்னை இராஜம்மாள் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து நம் அனைவரின் மனம் குளிரும் வகையில் முன்பு போல, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நங்கநல்லூரை சேர்ந்த வாசகர் திரு.ஜெயராமன் அவர்களுக்கு தனது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற்று, பரிபூரண ஆரோக்கியம் பெறவேண்டும். இனிவரும் காலத்தை அவர் மன அமைதியுடன் கழிக்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் முடிவுக்கு வந்து பாரதமாதா தலைநிமிரவும் பிரார்த்திப்போம்.\\\
இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் :
‘எண்ணங்களின் சங்கமம்’ நிறுவனர் திரு.ஜெ பி அவர்களை வணங்கி வரவேற்கிறேன் .
மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .
மனோகர்.
நன்றாக உள்ளது சுந்தர். வாழ்த்துக்கள். பயணம் சிறக்க பிரார்தனைகள்
///அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வெடுத்து வரும் ‘வாழும் ஔவை’ அன்னை இராஜம்மாள் அவர்கள் பரிபூரண குணம் அடைந்து நம் அனைவரின் மனம் குளிரும் வகையில் முன்பு போல, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நங்கநல்லூரை சேர்ந்த வாசகர் திரு.ஜெயராமன் அவர்களுக்கு தனது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற்று, பரிபூரண ஆரோக்கியம் பெறவேண்டும். இனிவரும் காலத்தை அவர் மன அமைதியுடன் கழிக்கவும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் முடிவுக்கு வந்து பாரதமாதா தலைநிமிரவும் பிரார்த்திப்போம்.///
அவன் நடத்தும் நாடகத்தின் காரண காரியங்களை அவன் மட்டுமே அறிவான் எனும்போது நாம் செய்யக்கூடியது பிரார்த்தனை ஒன்று தான்.
அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வெடுத்து வரும் அன்னை பழனி இராஜம்மாள் அவர்கள் பரிபூரண குணமடையவும், திரு.ஜெயராமன் அவர்கள் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற்று, பரிபூரண ஆரோக்கியம் பெறவேண்டும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் முடிவுக்கு வந்து பாரதமாதா தலைநிமிரவும் நம் தள நண்பர்கள் சார்பாக பிரார்த்தனை செய்வோம்.
செய்வினை அகல கோயில் வழிபாடு:
திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். (சென்னையிலி ருந்து திருச்சிக்கு செல்லும்போது பெரம்பலூரைத் தாண்டி உள்ளது ) சாலைக்கு மேற்கே பிரசித்தி பெற்ற காளி கோயில் அமைந்துள்ளது. ஊர் பெயரையும் இணைத்து சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு கடைசியில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம[04328-225333/ 04328-291375]
கண்ணகி மதுரையை விட்டு வெளியேறி சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள்.
விடிந்ததும் செல்லியம்மன் நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது. சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். வெளியே சென்ற செல்லியம்மன் கோயிலில் எப்போதும் முதல் மரியாதை தனக்கு தரப்பட வேண்டும் என்றபடியினால், தீபாராதனை காட்டும் போது, செல்லியம்மன் இருக்கும் மேற்கு திசை நோக்கி முதலில் காட்டுகிறார்கள்.வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த காளி, திங்கட் கிழமைதான் பக்தர்களுக்கு காட்சி தந்தாள். எனவே திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் கோயில் திறந்து இருக்கும். ஆதி சங்கரர் வழிபட்டது.பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.இந்த கோயிலில் இருக்கும் கிணற்று நீரில் குளித்துவிட்டு, அங்கேயே மாவு இடித்து மாவிளக்கு, நெய்விளக்கு போடுவது சிறப்பு. கோயில் வளாகத்திலேயே மாவிடிக்க உரல்களும், உலக்கைகளும் இருக்கின்றன. முடியாதவர்களுக்கு மாவு இடித்துத் தர அங்கேயே கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.கோயில் வளாகத்தில் குளித்துவிட்டு துணிகளை மாற்ற வெளிப்புற மண்டபங்கள் உள்ளன.செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
…………..சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்
வாழும் அவ்வை நம் அம்மா நல்லபடியாக குணமடையவும் மற்றும் எல்லோரது பிரார்த்தனைகளும் நிறைவேறி எல்லோரும் நலமாக இருக்க மகா பெரியவ முன்னிட்டு பிரார்தனை செய்வோம்.
சுந்தர்ஜி,
பிரார்த்தனைக்கு வந்துள்ளொரின் (பொது பிரார்த்தனை உட்பட) அனைவர்க்கும் மஹா பெரியவர் தம் அருளை வாரி வழங்கட்டும் என வேண்டிக்கொள்வோம். முக்கியமாக இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு ஜே.பி அவர்கள் தங்களுக்கு இட்ட பணியினை சரிவர முடிக்க பிரார்த்தனை செய்வோம். நன்றி
தீயோரிடம் மாட்டிகொண்ட எளியவர்களை , நல்லோர்களை மீட்க இறைவா பலன் கொடு……….
தாங்கள் பிராத்தனை கிளப்பில் குறிப்பிட்டு இருப்பதுபோல் இந்த மனிதப்பிறவி இறைவன் கொடுத்த பரிசு மாறாக தண்டனை அல்ல.ஒரு நாயாகவோ அல்லது மாடாகவோ விலங்குகளாக பிறந்திருந்தால் பிஸ்கட் மற்றும் பசும் தளைகளை கண்டால் கிட்டே வரும். கம்பை காட்டினால் விலகி ஓடிவிடும். மனிதனுக்குத்தான் பகுத்து அறியும் ஆட்றல் இறைவன் அளித்து உள்ளார். இதை உணர்ந்த நல்ல பண்புகளையும் , அன்பையும் வளர்துக்கொண்டவர்கள் தாம் மட்டும் வளமாக வாழ்வதோடு பிறர் நலம் பேணும் பேறு பெற்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் அன்புக்கு உரிய சுந்தர் அவர்கள். நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை ,அதாவது அவரை காணும் பாக்கியம் இன்னும் என்னக்கு கிட்டவில்ல. எவ்வளவோ பணிகளுக்கு இடையில் அவர் மாணிக்கவாசகபெருமானார் திருவாசகத்தில் உணர்த்தும் அன்பும், அறிவும் வளர்த்து உயிர்களுக்கு செய்யும் தொண்டு பெரிது./தொண்டையே தொழிலாக வும், தொழிலிலும் தொண்டு செய்து வருவது பாராட் டத்தக்கது. பழனி அம்மா ,பழம் நீ அம்மா என்று எங்கள்ளால் போற்றப்பட்டு,மதிக்கப்பட்டு வரும் வணக்கத்திற்குரிய பழனி அம்மாள் வெகு விரைவில் பூரண குணம் அடைந்து வரும் அரக்கோணம் முற்றோதலில் கலந்து கொள்ளவும் உங்களோடு சேர்ந்து அடியேனும் எங்கள் குடும்பத்தாரும் இன்று பிராத்திக்கிறோம்.. மேலும் நங்கநல்லூர் ஜெயராமன் அவர்களும் மிக விரைவில் பூரணமாக நலம் பெறவும்பிராத்தனை செய்கிறோம் மேலும் தமிழில் ஒரு பழமொழி உண்டு.அதாவது இளையதலைமுறை நல்ல செயல்களையும் நடு , வயதானவர்கள் நல்ல அறிவுரைகளையும் ,வயதான முதியவர்கள் பிராத்தனையும் செய்து வந்தால் நல்லதே நடக்கும் என்பதுபோல் முதியவர்களாகிய ய நாங்கள் இளைய தலைமுறை சுந்தரின் நல்ல செயல்கள் வெற்றிபெற மனம் ,மொழி, மெய்யால் பிரார்த்தனை செய்கிறோம் நன்று நினைத்து வாழ்வோம், நல்லோர் நினைத்த நலம் அனைவரும் பெறுவோம் . இறை அருள் குறை தீர்க்கும்.
மனக்கவலை நீங்கிட
மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட
பிணிகள் அகன்று நோய் நொடி இன்றி பல்லாண்டு வளமோடு வாழ்ந்திட
எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம் !!!