‘கூவம்’ ஆற்றின் பெயரில் பாடல் பெற்ற சிவத்தலம் ஒன்று இருப்பதும் கூவம் பிறக்கும் இடம் அது தான் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?
>>>> சென்ற ஞாயிறு (18/09/2016) நமது தளத்தின் உழவாரப்பணி நடைபெற்ற கூவம் – திரிபுராந்தகர் கோவில் பற்றிய சிறப்பு பதிவு இது. உழவாரப்பணி நடைபெறும் முன்னரே இதை அளித்திருக்கவேண்டியது. பதிவை தயாரிக்க மிகவும் நேரம் பிடித்ததால் குறித்த நேரத்தில் அளிக்கமுடியவில்லை. இருப்பினும் நமது ஆலய தரிசன பதிவுகளில் இது ஒரு மைல்கல் பதிவு என்றே கொள்ளலாம். இந்த தலத்தில் நடைபெற்ற உழவாரப்பணி பற்றிய பதிவு நாளையே அளிக்கப்பட்டுவிடும்! நம் குழுவினருடன் வந்து பணி செய்தோருக்கு இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கோவிலிலா நாம் உழவாரப்பணி செய்யும் பேறு கிடைத்தது என்று தோன்றும். பணியை தவறவிட்டவர்களுக்கு இந்த நல்வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமே என்று தோன்றும்! அது தான் கூவத்தின் சிறப்பு! <<<<
முதலில் கூவத்தின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். கூவம் ஆறு சென்னையிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத்தலமான திருவூரலும் (தக்கோலம்), சில கி.மீ. தூரம் தள்ளி திருவிற்கோலமும் அதன் கரையோரம் அமைந்துள்ளன. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர்.
‘கூவம்’ பிறக்கும் இடமாக திருவூறல் கூறப்பட்டாலும் அது ‘கூவம்’ என்கிற திருவிற்கோலத்தின் பெயரால் தான் அந்த பெயரில் வழங்கப்படுகிறது. ஆறு பழமையானதா இந்த தலம் பழமையானதா என்பது அந்த ஈசனுக்கே தெரியும்.
திருவிற்கோலம் – திரிபுராந்தகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. திரு + வில் + கோலம் – தலத்தின் பெயராயிற்று.
தொண்டைநாட்டில் உள்ள 32 பாடல் பெற்ற தலங்களுள் இது 14வது தலம். திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் திருமுறையில் திருவிற்கோலத்தை பாடியிருக்கிறார்.
காசி முதலாய தலங்களில் செய்த பாவங்களும் திருக்கூவத்தின் எல்லையை மிதித்தவுடனே நீங்கி விடும். ஆனால் இத்தலத்தில் செய்த பாவங்கள் எந்தப் புண்ணியத் தலங்களுக்குப் போனாலும் தீராது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலும் நினைத்தாலும் இங்கு பிறந்தாலும் நற்கதி கிடைக்கும். இத்தலத்தினிற்குச் சமமாக வேறு எத்தலத்தையும் கூற இயலாது.
இந்த படம் மிகவும் விசேஷம்… ராஜகோபுரம், அம்பாள் சன்னதி கோபுரம், சுவாமி சன்னதி கோபுரம், வெளியே உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோபுரம் என அனைத்தையும் தரிசிக்கலாம்.
சுவாமி – திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்
அம்பாள் – திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
தலமரம் வில்வம். (இத்தலமே ‘நைமிசாரண்ய க்ஷேத்திரம்’ எனப்படுகிறது.)
தீர்த்தம் – அக்னி தீர்த்தம். (இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.)
இங்குள்ள இறைவன் (மூலவர்) தீண்டாத் திருமேனி. அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. சுவாமியை தொடாமல் தான் அனைத்தும். ஆகமவிதிமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு பூஜை நடைபெறும் சொற்ப கோவில்களுள் திருவிற்கோலம் ஒன்று. இங்குள்ள சுவாமி மீது வெண்மை படர்ந்தால் மழை மிகுதியாக பெய்யும் என்பதையும் மழை குறைவு என்றால செம்மையான மேனி மூலமும் உணரலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தான் சம்பந்தர் ‘ஐயன் நல்லதசியன்’ என்று குறிப்பிடுகிறார்.
ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே!
பாடல் விளக்கம் : இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
மேற்கொண்டு ஆலய தரிசனத்தை தொடர்வதற்கு முன்னர் திரிபுர தகனத்தின் சுருக்கத்தை பார்ப்போம்.
******************************************************************
திரிபுர தகனமும் ஈசனின் பெருமையும்!
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சிய நான்முகன் அவர்கள் முன் தோன்ற, அவர்கள் மரணமேயில்லாத பெருவாழ்வு தாங்கள் வாழ வேண்டும் என்று வரம் கேட்டார்கள். அப்படிப்பட்ட வரத்தைத் தன்னால் அளிக்க இயலாது என்றும் வேறு ஏதேனும் வரம் கேட்கும்படி பிரமன் கூற, அவர்கள் விந்தையான வரம் ஒன்றைக் கேட்டார்கள்!
மண் உலகில் இரும்பால் ஆன கோட்டை, அந்தர உலகில் வெள்ளியாலும், விண்ணுலகில் பொன்னால் ஆன கோட்டையும் வேண்டும். சகல வளங்களும் இந்த முப்புரங்களில் அமைய வேண்டும். அவர்கள் மூவரும் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இந்தக் கோட்டைகளுடன் பறந்து செல்ல வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்போது, சிவபெருமான் ஒரே ஓர் அம்பினால் அவற்றைப் பொடியாக்கி தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்! இதுதான் அவர்கள் கேட்ட வரம்! பிரம்மனும் அருள்புரிந்து விட்டு மறைந்தான்.
தாங்கள் விரும்பியபடியே பெற்றுவிட்ட வரத்தை வைத்துக் கொண்டு அந்த அசுரர்கள் அட்டகாசம் புரியத் துவங்கினர்.
அந்த மூன்று கோட்டைகளையும் விண்ணில் அட்டகாசமாய் பறக்கவிட்டு வைகுந்தம் போன்ற தேவ நகரங்களையும் பல புண்ணிய ஷேத்திரங்களையும் இந்த அசுரர்கள் பாழ்படுத்தி தேவர்களுக்குப் பெருந்துயர் விளைவித்தனர்.
தேவர்கள் அனைவரும் நாராயணரிடம் சென்று முறையிட, அவர் தனக்கே உரித்தான தேவதந்திரத்துடன் செயல்பட்டார். தனது மாயா சக்தியால் புதிய வடிவு கொண்டு நாரதமுனிவர் சீடராக உடன்வர, திரிபுரமடைந்து அந்த அசுரர்களை சிவநிந்தனை செய்யும்படி செய்தார்!
அந்த அசுரர்களும் திருமாலின் மாயவலைக்கு ஆட்பட்டு சிவபெருமானை நிந்தித்தார்கள். இத்தனைக்கும் அந்த அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தினார்களே தவிர, தினமும் தவறாமல் சிவபூஜை செய்து வந்தார்கள்.
அசுரர்கள் சிவநிந்தனை செய்வதைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு அவர்களை அழித்துத் தங்களைக் காக்கும்படி வேண்டினார்கள். சிவனும் மனமிரங்கி அவ்வாறே செய்வதாய் அவர்களுக்கு உறுதி அளித்து போருக்குப் புறப்பட பிரம்மாண்டமான தேர் ஒன்றினை நிர்மாணிக்கக் கூறினார்.
தேவர்கள் படுஉற்சாகமாக வேலை செய்தனர். சூரிய பகவானும் சந்திர பகவானும் தேரின் சக்கரங்கள் ஆயினர்! நான்கு வேதங்களும் குதிரைகள் ஆயின. பிரம்ம தேவனே சாரதி! மேருமலை வில்லாகவும், நாகங்களின் தலைவி வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும், அக்னிதேவன் அந்த அஸ்திரத்தின் முனையாகவும் மாறினர்.
தேரில் ஏற சிவபெருமான் காலை வைத்ததும் தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் ரிஷபமாக மாறி சிவபெருமானைத் தாங்கி நின்றார். புறப்படும்முன் விநாயகரைத் துதிக்காததே அச்சு முறிந்ததற்குக் காரணம் என்று விநாயகரை அனைவரும் வணங்க அச்சு நேராயிற்று.
சிவபெருமான் திரிபுரங்களை அழிக்கத் தேரில் கிளம்பினார். தேவர்களுக்கு ஒரே கர்வம். தாங்கள் உருவாக்கின தேர் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் சிவன், அசுரர்களை வெல்லப் போகிறார் என்று! ஆனால் சிவபெருமான் தேவர்களின் இந்தக் கர்வத்தை ஒழிக்க நினைத்தார்.
கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வந்தவுடன் அவற்றைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தார்.
அடுத்த கணமே அந்தக் கோட்டைகள் பற்றி எரிந்து சாம்பலாயின! தனக்கு எந்த ஆயுதமும் படையும் எதிரிகளை அழிக்கத் தேவையில்லை. வெறுமனே நினைத்த மாத்திரத்தில் அவர்களை அழிக்கத் தன்னால் முடியும் என்று தேவர்களுக்கு நிரூபித்தார் சிவபெருமான்.
தான் கொண்டு சென்ற ஒரே ஓர் அம்பைக் கூட அவர் பயன்படுத்தவில்லை. தேவர்கள் தங்களின் வீணான கர்வத்தை நினைத்து வருந்தி சிவனைப் பணிந்து நின்றார்கள்.
இப்படி சிவபெருமான் திரிபுரம் எரித்த புராண நிகழ்வை, “திரிபுரமுந்திரி வென்றிட வின்புடன் அழலுந்த நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே” என்ற அடிகள் மூலம் குறிப்பிடுகிறார்.
******************************************************************
ஆலய தரிசனத்தை தொடர்வோம்…
…… விற்கோல விமலர் அச்சை ஆனைமுகர் ஒடித்த இடத்தில் ஓர் அழகிய தீர்த்தம் தோன்றியது. இதற்கு ‘அச்சிறுகேணி’ என்றும், கூபாக்கினிதீர்த்தம் என்றும் பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகள் இல்லை. பிடித்து வந்து விட்டாலும் வெளியேறிவிடுமாம். இதில் முறைப்படி எட்டு நாள்கள் நீராடினால், கிடைத்தற்கரிய நற்பேறுகள் கிடைக்கும்.
ஆதிவாரம், சோமவாரம், அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நன்னாளில் நீராடினால் நன் மக்களும் மன்னர் போன்ற பெறுவாழ்வும் கிட்டும். சித்திரைத் திங்களில் பத்து நாள்களுக்குப் பெரு விழா முறையாக நடைபெறுகின்றது.
முகப்பு வாயிலின் முன்புறத்தில் ஒரு பக்கம் விநாயகரும் மறுபக்கம் முருகனும் காட்சி தருகின்றனர். விசாலமான உள்ளிடம், வெளிப்பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. ஆனால் ஒரு அழகிய நாலு கால் மண்டபம் உள்ளது.
முதலில் வருவது, திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதி. அம்பாள் நல்ல உயரம். அழகு. இடது ஓரம் மேலே மகா பெரியவர் நம்மை வரவேற்கிறார். (அவர் இல்லாத இடம் ஏது?)
சுவாமிக்கு வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. இந்த அம்பாள் ‘ஆதி தம்பதி’ என்று விசேஷமாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு நோக்கிய சந்நிதி. நின்ற நிலை. இம்மண்டபத்தில் பள்ளியறையும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன. பள்ளியறை அமுதுபடிக்கெனத் தனியே கட்டளைகள் உள்ளனவாம்.
சுவாமி, அம்பாளுக்கு முன்னால் தனித்தனியே செப்புக்கவசமிட்ட கொடிமரங்கள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் துவஜாரோகண (நான்கு கால்) மண்டபம் உள்ளது.
அம்பாளை தரிசித்துவிட்டு வெளியே வந்து இடது புறம் நேராக உள் நுழைந்தால் நேரே நடராசர் சந்நிதி, உள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர் சந்நிதி உள்ளது. மூன்று திருமேனிகள் உள்ளன – இவர் பெயர் ‘அச்சிறுத்த விநாயகர்’ கோஷ்டமூர்த்தமாக விநாயகர் உள்ளார்.
அடுத்துள்ள தட்சிணாமூர்த்தி அழகாக உள்ளார். கருவறையின் பின்புறத்தில் இலிங்கோற்பவர், அடுத்து பிரம்மா, துர்க்கை முதலிய சந்நிதிகள் உள. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி உரிய இடத்தில் இல்லாமல் இடம் மாறி, இலிங்கோற்பவருக்கு நேரே உள்ளது. பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது, இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது. பைரவர் சந்நிதி, தனிக் கோயிலாக விளங்குகிறது.
சோமாஸ்கந்தர், ஆறுமுகர், சந்திரசேகர், விநாயகர், பள்ளியறை மூர்த்தி, சுக்கிரவார அம்பாள், பிரதோஷ நாயகர், பிட்சாடனர், பூதகணம், மான், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நால்வர் முதலிய திருமேனிகள் தொழத்தக்க அரிய அழகுடையவை. பக்கத்தில் நால்வர், பிரதிஷ்டை உள்ளது. சூரியன் திருவுருவம் உள்ளது.
மூலவர் அற்புதமான மூர்த்தி, சுயம்பு – தீண்டாத் திருமேனி. மேலே செப்பு மண்டபம் – மத்தியில் உருத்திராக்க விமானம். சுற்றிலும் உள்ள பத்து ஊர்களுக்கு இம்மூர்த்தியே குல தெய்வம்.
வாயிலில் இரு துவாரபாலகர்கள், திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.
மணல் லிங்கம். இங்கு மூர்த்தியைப் பாலாலயம் செய்யும் வழக்கமில்லையாம். பதினாறு முழ வேஷ்டிதான் சுவாமிக்குச் சார்த்தப்படுகின்றது.
அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பாடலில் ‘ஐயன் நல் அதிசயன்’ என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் – திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடுமாம். சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி. கஜப்பிரஷ்ட விமான அமைப்பு.
பைரவர் கோயில் விமானத்தில் ‘நாய்’ சிற்பங்கள் பல, சுதையால் அமைக்கப்பட்டுளள்ன. வலம் முடித்து உள்ளே செல்லும்போது எதிரில் நடராசர் காட்சி தருகின்றார். காளிக்கு இப்பெருமான் அருள்புரிந்ததால் இந்நடனம் ‘ரக்ஷ£நடனம்’ எனப்படுகின்றது. காளிக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் பத்தாம் நாளில் நடைபெறுகின்றதாம். ஆண்டில், உரிய 6 நாள்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. திருவாதிரையிலும், பெருவிழாவில் பத்தாம் நாளிலும் ஆக ஆண்டுக்கு இருமுறை நடராஜா உலா வருகின்றார். நடராசப் பெருமானை வணங்கி உள் நுழைந்தால் நேரே மூலவர் காட்சி தருகின்றார். பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
கோயிலிருந்து சற்று தொலைவில் உள்ள ‘திருமஞ்சனமேடை’ என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்துதான் தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கென ஒருவர் நியமிக்கப்பட்டு இவ்வாறு தினந்தோறும் நான்கு காலங்களுக்கும் அவ்வப்போது கொண்டு வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து – அதாவது கொண்டு வருபவர் அத்தீர்த்தத்திற்குப் பதில் – செல்ல வேண்டிய தொலைவுக்குப் பதிலாக வேறு தீர்த்தத்தைக் கொண்டு வந்து விட்டால், அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெரும்புகள் படரும் என்றும் அதைக் கொண்டு அத்தவற்றைக் கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
(Hi_Resolution Image – You can double click and read the text!)
இப்பெருமானுக்கு உச்சிக்கால அபிஷேகம் நடைபெறுவது பற்றிய அரிய செய்தி வருமாறு :-
கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ‘பிஞ்சிவாக்கம்’ கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாடொறும் சுவாமிக்கு உச்சிக்கால அபிஷகேத்திற்குப் பால் கொண்டு வருகின்றார். அவர் அப்பாலை, வரும் வழியில் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகின்றார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மான்யமாக தரப்பட்டுள்ளது. கோயிலிலும் நாடொறும் அவருக்கு சுவாமிக்குப் படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகிறது. இந்தப் பால் அன்றாடம் வந்த பிறகே ‘உச்சிக்கால அபிஷேகம்’ கோயிலில் செய்யப்படுகிறது. தொன்றுதொட்டு இன்றுவரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இக்கோயிலில் சுவாமிக்குச் செய்யப்படும் அபிஷேக நடைமுறைகள் அனைத்தும் மிகவும் ஆசாரமான முறையில் செய்யப்படுகிறது. அவ்வாறே செய்யவேண்டுமென்றும், அதில் தவறு நேரின் தண்டிக்கப்படுவர் என்னும் நம்பிக்கையும் உள்ளது.
இவ்வூருக்குக் ‘கூபாக்னபுரி’ என்றும் பெயர் சொல்லப்படுகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் ‘குமார வட்டம்’ என்று முருகன் பெயரால் வழங்கப்படுகின்றன.
கோயிலுக்கு வெளியே – திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாகச் சொல்லப்படும் – கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தில் இக்கோயிலின் சுவாமி அம்பாள் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
திருக்கூவப்புராணம் – தலபுராணம் உள்ளது. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இத்தலபுராணத்தைப் பாடியுள்ளார்.
முகவரி : அ.மி. திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் கிராமம், கடம்பத்தூர் அஞ்சல் – (திருவள்ளுர் (வழி), திருவள்ளுவர் மாவட்டம் – 631 203.
எப்படி செல்வது ?
பூவிருந்தவல்லியிலிருந்தும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும் நேரே செல்லப் பேருந்து வசதி உள்ளது. காரில் செல்பவர்கள் சென்னையில் இருந்து பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் குவீன்ஸ் லேண்ட் தாண்டி சவீதா மருத்துவக்கல்லூரிக்கு அடுத்து வரும் தண்டலம் சாலையில் திரும்பினால் அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று கூவம் கிராமத்தின் வழியாக ஊரையடையலாம்.
காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத் திருவள்ளுர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ராடில் இறங்கிச் செல்லாம், செல்லும் போது ஊருக்கு அண்மையில் இடப்புறமாக ஒரு கோயில் உள்ளது. இது தர்க்கமாதா என்னும் அம்மன் கோயிலாகும். திருவாலங்காட்டு நடராசப் பெருமானுடன் தர்க்கித்து நடனமாட, சிலம்பு முத்துக்கள் வீழ்ந்த இடம் இதுவென்றும், இதனால் அம்பாளுக்குத் ‘தர்க்க மாதா’ என்றும் பெயர் வந்ததென்றும் சொல்லப்படுகிறது. சிவாலயம் ஊரினுள் உள்ளது.
ஆக்கத்தில் உதவி : திருவிற்கோல தலப்புராணம், மயிலை சிவா | தினமணி
==========================================================
இந்தப் பதிவுகளை காணத் தவறாதீர்கள்…
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?
பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check முந்தைய ஆலய தரிசனப் பதிவுகள் :
எங்கு பார்த்தாலும் பிள்ளையார் – பிரமிக்கவைக்கும் ஒரு சோடச கணபதி தலம்!
பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!
மகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்!
சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!
அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!
கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!
திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!
அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
==========================================================
Also check ….
விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!
பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
[END]
இன்று கிட்டத்தட்ட கழிவு நீர் குட்டையாகவேய கருதப்படும் கூவத்திற்கு இப்படி ஒரு மகத்தான வரலாறு இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது
போற்றிப்பாதுகாக்கவேண்டிய நதியின் இன்றைய அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல நாமும் ஒருவகையில் பொறுப்பு
மேலே உள்ள ஒவ்வொரு புகைப்படத்தை பார்க்கும்போது உங்களின் கடின உழைப்பு அதில் தெரிகிறது
தினந்தோறும் தொலைவை பொருட்படுத்தாமல் பால் கொண்டு வந்து இறைத்தொண்டு புரியும் திரு குமார் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
இவ்வுலகில் நடக்கும் எல்லாவற்றையும் கண்டுகொண்டிருக்கும் ஈசா
நீருக்காக மீண்டும் ஒரு போர் உண்டாகாமல் எல்லா ஜீவராசிகளையும் அரவணைத்து காப்பாயாக
ஹர ஹர மஹாதேவ
லோகா சமஸ்தா சுகினோ பாவந்து