திருப்புகலூர் செல்லும் பாதையே, வாய்க்கால்களும், வயல்களும் நிரம்பிய பசுமைப் பாதை தான்.
இறைவனின் திருவடிகளை புகலாக அமைந்த தலம் என்பதால் புகலூர் என்று பெயர். திருநாவுக்கரசர் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்த திருத்தலம். முருகநாயனார் அவதாரத்தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக்கி தந்தருளிய தலம் என பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு அற்புதமான தலம் இது.
சில மாதங்களுக்கு முன்னர் திருவாரூர் சென்றபோது, திருவாரூரைச் சேர்ந்த நண்பர் ரமேஷ் அவர்களுடன் இந்த தலம் செல்லும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி! வேறு என்ன சொல்ல!
இன்று சித்திரை சதயம். திருநாவுக்கரசர் குரு பூஜை.
இந்த நன்னாளில் திருநாவுக்கரசர் முக்தி பெற்ற தலமான திருப்புகலூரை தரிசனம் செய்வோம்.
தேவர்கள் புகலிடம் கொண்ட புகலூர்
வில்லவன், வாதாபி என்னும் இரு அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள் அவர்கள் அழிக்கப்படும் வரையில் இத்திருத்தலத்தில் புகலிடம் கொண்டதால் புகலூர் என வழங்கப்பட்டது.
தேவர்கள் சரணடைந்ததால் சரண்யபுரம் ஆயிற்று. தான் எதைத் தீண்டினாலும் தனது புனிதம் போகாது, ஈசன் காத்தருள வேண்டும் என்று அக்னிபகவான், மகேசனை வணங்கி திருவருள் பெற்றத்தலம். அக்னி வணங்கியதால் அக்னீசுவரர் என்று இறைவன் இங்கு திருநாமங் கொண்டுள்ளார். இரண்டு தலைகள், ஏழுகரங்கள், தீச்சுவாலை மகுடம், நான்கு கொம்புகள், மூன்று திருவடிகள் கொண்ட அக்னி பகவானின் உற்சவர் திருமேனி காண்பதற்கு அரியதாகும்.
பாணாசுரன் தனது தாயின் சிவபூசனைக்காக நாள்தோறும் ஒரு புதிய சிவலிங்கத்திருமேனியைப் பெயர்த்தெடுத்து வந்து தருபவன். ஒருமுறை திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்தெடுக்க முயற்சித்துத் தோல்வியுற்றான். அவனது மனோதிடத்தை கண்டு ,மகிழ்ந்த ஈசன் சற்றே வளைந்து கொடுத்து கோணபிரான் என்று திருநாமம் கொண்டுள்ளார். மூலவர் திருமேனி வடபுறம் சற்றே சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாமி பெயர் : சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்
அம்பாள் பெயர் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்
அகழி சூழ்ந்த ஆலயம்
அக்னிதீர்த்தம் என்று அழைக்கப்படும் அகழி நான்குபுறமும் சூழ்ந்திருக்க, நடுவில் 5 நிலை இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் கொண்டது திருக்கோயில். தல விருட்சம் – புன்னை.
நாம் சென்ற நேரம், கஜ தரிசனம் கிடைத்தது. இக்கோவிலுக்கு சொந்தமான யானை. கம்பீரத்தின் மறுபெயர்.
இளங்கோயில்
ஒரு திருக்கோயிலுக்குள்ளேயே, மற்றொரு கோயில் அமைந்து இருப்பது, மூன்று திருத்தலங்களில் மட்டுமே. அவை திருவாரூர், திருப்புகலூர், மற்றும் திருமீயச்சூர் ஆகும். திருப்புகலூரில் அப்படி அமைந்த இளங்கோயிலை வர்த்தமானீசுவரம் என்று அழைப்பர்.
முக்காலத்திற்கும் உரியவர்
முக்காலத்திற்கும் உரியவராக முக்கண்ணன் இத்திருத்தலத்தில் விளங்குகிறார். வர்த்தமானீசுவரர் – நிகழ்காலத்துக்கு உரியவராகவும், சென்ற காலத்துக்கு உரியவராக பூதேசுவரரும், வருங்காலத்துக்கு உரியவராக பவிஷ்யேசுவரரும் எழுந்தருளியுள்ளது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பு.
அக்னீஸ்வரர் பெயர் காரணம்
அக்னி பகவான் தான் தீண்டும் பொருட்களால் தனக்கு தோஷம் எதுவும் ஏற்படக்கூடாது என்று இறைவைனை நோக்கி, தவம் செய்து வரம் பெற்ற தலமாதலால் இறைவனுக்கு இங்கே அக்னீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.
செங்கல் பொன்னானது
சுந்தர மூர்த்தி நாயனார், சிவதொண்டுக்காக, பொருள் வேண்டிப்புகலூர் சென்றார். ஆலயத்திருப்பணிக்காக வைத்திருந்த செங்கற்களை தலையணையாக வைத்து படுத்திருந்தார். விடியலில் விழித்தபோது செங்கற்கள் பொன்னாக மாறியிருப்பது கண்டு வியந்தார். அதனால், திருப்புகலூர் வாஸ்து தலம் எனும் புகழ் பெற்றுள்ளது.
சூலிகாம்பிகை
சூலிகாம்பிகை எனும் சிறப்பு பெயர் கொண்ட அன்னை கருத்தார்குழலி தெற்கு நோக்கிய தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். பேறுகாலத்தில் பெண்கள் மனதால் நினைத்தாலே சுகப்பிரசவம் அருளும் அன்னையாக விளங்குகிறாள் அன்னை. ஒரே வளாகத்தில் இரண்டு பாடல் பெற்றத்தலங்களை வணங்கிடும் பேறு தருகிறது திருப்புகலூர். மூவர் பாடிய பதிகங்கள் கொண்டுள்ளது.
திருநாவுக்கரசரும் திருப்புகலூரும்
திருநாவுக்கரசர் திருப்புகலூரில் தங்கியிருந்தத காலகட்டங்களில் பல்வேறு பதிகங்களை இயற்றினார். நின்ற திருத்தாண்டகம் , தனித் திருத்தாண்டகம் , க்ஷேத்திரக்கோவைத் தாண்டகம் , குறைந்த திருநேரிசை, தனித் திருநேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாபநாசப் பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் போன்ற அனைத்து வகையான பதிகங்களையும் இங்கு இயற்றினார்.
இந்நிலையில் திருநாவுக்கரசரின் பற்றற்ற தன்மையை இறைவன் உலகத்தார்க்கு உணர்த்த விரும்பினார்.
திருப்புகலூரில் ஒரு நாள் திருநாவுக்கரசர், உழவாரக் கருவி கொண்டு கோயிலில் உள்ள புற்களை அகற்றி சுத்தப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தே, பிராகாரத்தில் ஆங்காங்கே பொன்னையும் நவரத்தினக் கற்களையும் தோன்றச் செய்தான் இறைவன். ஓடும் செம்பொன்னும் ஒன்றாகப் பார்க்கும் பக்குவம் பெற்ற நிலையில் இருந்த திருநாவுக்கரசர் அவற்றை ஏனைய குப்பைகளுடன் சேர்த்து விலக்கித் தள்ளினார். அவற்றை கைபடாமல் கொண்டு சென்று திருக்குளத்தில் கொட்டினார்.
பொன்னாசை அற்றவர் என்று நிரூபித்தாயிற்று. பெண்ணாசை? தேவாதி தேவர்களையும் அது கவிழ்த்திருக்கிறதே. எனவே இறைவன் உத்தரவின் பேரில் ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற தேவலோகப் பெண்கள், கவர்ச்சி மிகு ஆடைகளை உடுத்தி வந்து அவர் முன்னே களிநடனம் புரிந்தனர். ஆனாலும் நாவுக்கரசர் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பொருட்படுத்தவுமில்லை.
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
என்ற பாடலை பாடி, “நான் திருவாரூர் தியாகேசருக்கு என்னை ஒப்படைத்துவிட்டேன். நீங்கள் உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்றார்.
மேலே உள்ள பாடலின் பொருள் : நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர். இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச் சிறிது, சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய், எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரிய கடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள்.
==========================================================
திருப்புகலூரில் கண்ட அதிசயம்!
நாங்கள் திருப்புகலூரில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்து புறப்பட ஆயத்தமானபோது, அங்கே கோவிலின் மதில்சுவரை ஒட்டி, ஒரு ரிஷபம் காணப்பட்டது. கோவிலுக்குள் பார்த்த அந்த சிற்பம் தான் உயிர்பெற்று வந்துவிட்டதோ என்று கருதும் அளவுக்கு அத்தனை ஒற்றுமை இருவரிடமும். சம்போ மகாதேவா…!
நந்திகேசி மஹாயாக சிவதயா நபராயண கௌரீ
சங்கரஸேவர்த்தம் அனுக்ராம் தாதுமாஹஸ!!
==========================================================
குருபூஜைக்கும் ஜெயந்திக்கும் வித்தியாசம் என்ன?
பலர் குருபூஜை, ஜெயந்தி இரண்டும் ஒன்று என நினைக்கிறார்கள். அது தவறு.
குருபூஜை என்பது இறையடியார்களுக்கு உரித்தானது. ஜெயந்தி என்பது தெய்வங்களுக்கு. (ஸ்ரீ ராமநவமி ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி, ஹனுமத் ஜயந்தி, நரசிம்ம ஜயந்தி இப்படி!) இறையடியார்கள், தங்களின் பிறவி நோக்கம் நிறைவடைந்து இறுதியில் இறைவனுடன் ஐக்கியமான நாளே குரு பூஜை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
==========================================================
Rightmantra runs purely on readers’ contribution. Give us your hand…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!
அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
==========================================================
[END]
வணக்கம் சார்
அனைத்து பதிவுகளும் அருமை
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
திருநாவுகரசர் குரு பூஜை நாளில் அவர் முக்தி அடைந்த திருத்தலமான திருப்புகலூர் நேரடி தரிசனம் கண்டு மகிழ்ந்தோம் . சிறப்பான பதிவு .
தொடரட்டும் உங்கள் சிவ தொண்டு ….