Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

print
ன்றைக்கு துறவறம் என்றால் அவரவர் சௌகரியம் போல வாழ்கிறார்கள் உடுத்துகிறார்கள். தங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் ‘துறவு’ என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பட்டினத்து அடிகள் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார். சென்னையில் திருவொற்றியூரில் கடற்கரையில் பட்டினத்தாருக்கு கோவில் உள்ளது. இவரது பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. சொற்சுவையும், பொருட்செறிவும் அமைந்துள்ள இவரது பாடல்கள் மிக மிக எளிமையானவை. பாமரர்க்கும் எளிதில் விளங்குபவை.

நேற்று முன்தினம் ஆடி உத்திராடம் அவரது குருபூஜை. அன்றே இப்பதிவை அளித்திருக்கவேண்டியது. பட்டினத்தார் கோவிலுக்கு சென்று குருபூஜையை தரிசித்துவிட்டு கூடுதல் புகைப்படங்களுடன் பதிவளிக்கலாம் என்று கருதி பதிவை அளிப்பதை சற்று ஒத்திவைத்தோம்.

நாம் இதற்கு முன்பு மூன்று நான்கு முறை பட்டினத்தார் கோவில் சென்றிருக்கிறோம். ‘ஏழிசை வேந்தர்’ அமரர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை அவர் மறைவதற்கு ஓராண்டுக்கு முன்பு அவர் இல்லத்தில் பேட்டிக்காக சந்தித்தபோது அவர் நடித்த (வாழ்ந்த) ‘பட்டினத்தார்’ திரைப்படம் பற்றி பேச்சு எழுந்தது. ‘பட்டினத்தார்’ படத்தில் அவர் பாடிய பல பாடல்களை நமக்கு பிரத்யேகமாக பாடிக்காட்டினார். தொடர்ந்து அவர் நம்மை ‘பட்டினத்தார்’ திரைப்படத்தை பார்க்கும்படியும் திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலுக்கு சென்று வரும்படியும் பணித்தார். (பட்டினத்தார் படத்தை ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பொதிகையில் பார்த்திருக்கிறோம்!) ஆனால் பட்டினத்தார் கோவில் அப்போது தான் நாம் முதன்முறையாக சென்றோம். அது பற்றிய விரிவான பதிவு புகைப்படங்களுடன் நம் தளத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வருட சிவராத்திரி சமயத்தில் ‘பட்டினத்தார்’ திரைப்படத்தை ஒரிஜினல் சி.டி. வாங்கி பார்த்தோம். நமக்குள் சிவப்பித்து நுழைய பிரதான காரணங்களுள் இதுவும் ஒன்று. ‘பட்டினத்தார்’ வரலாறு அந்தளவு அற்புதங்களை, அதிசயங்கள், சிவலீலைகள் நிரம்பிய ஒரு வரலாறு. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.

(பழைய கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு சென்ற ஆண்டு துவக்கத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நமக்கு என்னவோ பழைய கோவில் தான் பிடித்திருந்தது. பழைய கோவிலை உங்களில் எத்தனை பேர் சென்று தரிசித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. பழைய கோவிலும் தற்போது புனரைமைக்கப்பட்டுள்ள [புதிய கோவில் புகைப்படங்களும் ஒப்பீடுக்காக சில இடங்களில் அடுத்தடுத்து அளித்திருக்கிறோம். குறிப்பாக தல விருட்சம் ‘பேய்க் கரும்பு’ இருக்கும் இடத்தை பாருங்கள்!)

அனைவரும் ஒரு நாள் திருவொற்றியூர் சென்று அம்மையப்பனை தரிசித்துவிட்டு அப்படியே பட்டினத்தாரையும் தரிசித்துவிட்டு வாருங்கள். சென்னையில் வசிப்பதற்கு ஒரு அர்த்தம் கொடுங்கள்.

நாம் இத்துடன் அளித்திருக்கும் இந்தப் பதிவு சாதாரண பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று ரக பதிவு அல்ல. கல்வெட்டு. ஒவ்வொரு வரியும் முக்கியம். படித்து கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக கழுமரம் ஏற்றப்படும் முன் பட்டினத்தார் பாடும் பாடல், சேந்தனாருக்கு அவர் கூறும் அறிவுரை…!

பட்டினத்தார் திவ்ய சரிதத்தையும் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களையும் பார்ப்போம் வாருங்கள்.

கழுமரம் பற்றி எறிந்த அதிசயம்!

த்தாம் நூற்றாண்டில் சிவநேசர் – ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த மகவுக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானின் நினைவாக சுவேதாரண்யன் என்று பெயர் வைத்தனர். திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார்.

செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் திரவியம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். மணவயது வந்ததும் சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். நீண்ட காலமாகியும் புத்திரப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று மஹா லிங்கேஸ்வரரை தரிசித்து புத்திர பாக்கியம் வேண்டினார்.

DSC09910-22

DSC09903

அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் முதிய அந்தணத் தம்பதியருக்கு வறுமை பொறுக்க முடியாமல் இருந்து வந்தது. சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தை இருக்கும் என்றும், அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள திருவெண்காடரிடம் கொடுத்து அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொன்னைக் கொண்டு வறுமையை நீக்கிக்கொள்ளும்படியும் கூறவே விழித்தெழுந்த சிவசருமர் மறுநாள் அவ்வாறே நடக்கக் குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடரிடம் கொடுக்க அவரும் ஈசன் ஆணை என அறிந்து குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்கு அந்த குழந்தையின் எடைக்கு எடை பொன் கொடுத்து உதவுகிறார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகிறார்.

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. மகனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார்.

DSC09883

DSC09882

வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ சாக்குமூட்டைகள் நிறைய எரு வறட்டிகள் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த வறட்டிகளை தூக்கியெறிய அவை உடைந்து உள்ளேயிருந்து மாணிக்கங்கள் வைர வைடூரியங்கள் சிதறின.

திடுக்கிட்ட பட்டினத்தார் மகனை தேட, அவன் கொடுத்ததாக சொல்லி ஒரு பெட்டியை தருகிறார்கள். அதில் ஒரு காதறுந்த ஊசியும் ஓலைத் துணுக்கு ஒன்றில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என எழுதப்பட்டிருந்ததையும் படித்தார்.

DSC09902-22

DSC09885அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. மகனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வந்த வேலை முடிந்தது என்று ஈசன் மறைந்துவிட, “இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம் எதுவும் இல்லை.” என்கிற ஞானம் பட்டினத்தாருக்கு உதித்தது.

அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் வீசி, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட ஊரார் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தமைக்கையர் ஓடி வந்து அவர் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டு கதற, “அன்போடு சொன்னால் கேட்க்காத இவ்வுலகம் அச்சுறுத்தினால் தான் கேட்கும் போல” என்று கூறி புன்னகைத்துவிட்டு நகர்ந்தார்.

அன்றும்...
அன்றும்…
DSC00542-222
இன்றும்….

தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர். ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப்பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் “ஐயிரண்டு திங்களாய் ” என தொடங்கும் பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார். அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

இதற்கிடையே திருவாரூரில் அவர் தங்கிய நாட்களில் அவருக்கு பணிவிடை செய்த புது மணமகன் ஒருவன் ஜன்னி வந்து இறந்துபோனான். அவனை தியாகேசரிடம் முறையிட்டு உயிர்பித்து தந்தார்.

(இந்த சம்பவம் பற்றி ஏற்கனவே விரிவான பதிவு வந்துள்ளது. Check: கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!)

கணவன் உயிர் மீண்டதைக் கண்டு மனைவி பூரித்து திருவெண்காடரின் பாதங்களில் பலமுறை விழுந்து வணங்கினாள் . ஊரும், உறவும் அவரைப் பாராட்ட தியாகேசருக்கு நன்றி கூறிவிட்டு, புகழுக்கு அடிமையாகிவிடுவோமே என அஞ்சி கொங்குநாட்டுக்குப் போய்விட்டார். அங்கே இனி யாரோடும் பேசுவதில்லை என்ற முடிவோடு மௌன விரதம் காத்தார்.

ஒரு நாள் நடு இரவில் அவருக்கு கடுமையாக் பசித்தது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா? இரவென்றும் பாராமல் யாசிக்க புறப்பட்டார். இவர் நேரம் இவர் முதலில் பிச்சை கேட்ட இல்லம் ஒரு கருமியுடையது. அவனிடம் பிட்சை கேட்டபோது, ‘இராத்திரி கூட தூங்கிவிடாது இதென்ன தொல்லை’ என்று சலித்துக்கொண்டு ஒரு கோல் கொண்டு தாக்கினான் அந்த கருமி இவரை.

வாசற் படிகடந்து வாராத பிச்சைக்குஇங்
காசைப் படுவதில்லை அண்ணலே!ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல்.

நச்சவரம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலே தான்அங் கிருப்பதுவும்பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலில்
தூங்குவதும் தானே சுகம்.

இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி.

என்று பாடியவர், அதிலிருந்து பிட்சை கேட்பதையும் விட்டுவிட்டார். தானாகக் கிடைக்கும் பிச்சையை மட்டுமே உண்டார்.

இனி அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் வடக்கில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஊருக்கு வெளியே வந்த பட்டினத்தார் அங்கிருந்த காட்டுப் பிள்ளையார் கோயிலில் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவ்வூரில் பத்திரகிரியார் (பர்த்ருஹரி) என்னும் அரசன் ஆண்டு வந்தான்.

DSC00540-22

DSC09907

அன்றிரவு அரண்மனைக்குக் திருடர்கள் சிலர் கொள்ளையடிக்கச் சென்றனர். செல்கையில் கொள்ளை வெற்றிகரமாய் முடிந்தால் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டு சென்றனர். அவ்விதமே கொள்ளை வெற்றியாய் முடியவே அவ்வழியே சென்ற கொள்ளையர் பிள்ளையாருக்கென ஒரு விலை உயர்ந்த முத்துமாலையைக் காணிக்கைக்கென எடுத்துக் கோயிலில் பிள்ளையார் முன் வீசிவிட்டுச் சென்றனர். அந்த முத்துமாலை அங்கே தியானம் செய்து கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் போய் அழகாய் அமர்ந்து கொண்டது.

மறுநாள் விஷயமறிந்த கொள்ளையரைத் தேடி வந்த அரண்மனைக் காவலர் பிள்ளையார் கோயிலில் கழுத்தில் முத்து மாலையுடன் வீற்றிருந்த பட்டினத்தாரிடம் இது எப்படிக் கிடைத்தது என வினவ, பட்டினத்தார் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, இவரே கொள்ளைக் கூட்டத் தலைவர் இப்போது ஏதும் அறியாதது போல் வேஷமிடுகிறார் என நினைத்து அரசரிடம் சென்று நடந்ததைச் சொல்கின்றனர். அரசனும் சரி வர விசாரிக்காமல் “இந்த கள்வனைக் கழுவில் ஏற்றுக!” என்று ஆணையிட்டார். கழுமரம் தயார் செய்யப் பட்டது.

என் செயலாவது யாதொன்றுமில்லை; இனித் தெய்வமே!
உன் செயலே என்று உணரப் பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றுமில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே

என்ற பாடலைப் பாடக் கழுமரம் பற்றி எரிந்தது.

(இந்தப் பாடலோடு அர்த்தம் எளிதில் புரியும். சற்று ஊன்றிப் படித்துப் பாருங்கள்… வாழ்வின் அர்த்தமும் புரியும்!)

இதை அறிந்த அரசன் பத்திரகிரி ஓடிவந்து பட்டினத்தாரின் கால்களில் வீழ்ந்து கதறித் துடித்து மன்னிப்புக் கேட்டான்.

‘நாயின் கர்ப்பத்திற்கு மரியாதை கொடுத்து மருத்துவம் பார்ப்பது உலக வழக்கமில்லாதது. பேய்க்கு ஞானோபதேசம் செய்வதும் இயற்கைக்கு மாறானது. எட்டி மரத்தை நாடுவோருமில்லை; அதன் காய்களை விரும்பி உண்போருமில்லை! நாயின் கர்ப்பம் போல, பேயின் ஞானம்போல, எட்டிக்காயைப் போன்றது இந்த சரீரம்! இது தீக்கிரையாவதற்கிருந்ததே என்று வருந்தலாமா?’ எனத் தேற்றிய பட்டினத்தார், பத்திரகிரியார் வேண்டிக் கொண்டபடி ஞான தீட்சை அளித்தார்.

தொடர்ந்து அரச வாழ்க்கையைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக மாறி அவரைப் பின் தொடர்ந்தார் பத்திரகிரியார். (துறவுக்கு மற்றுமொரு இலக்கணம்!)

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும், திருவிடைமருதூர் வந்தடைகின்றனர். அங்கே கோபுர வாசலில் பிச்சை எடுத்து பத்திரகிரியார் தாமும் உண்டு தம் குருவுக்கும் உணவு கொடுத்து வருகிறார். தம்மைச் சுற்றி சுற்றி வந்த நாய்க்கும் பத்திரகிரியார் உணவிட்டு வந்தார்.

அப்போது ஒரு நாள் பட்டினத்தாரிடம் சிவபெருமான் ஒரு பிச்சைக்காரர் போல வந்து பிக்ஷை கேட்க, பட்டினத்தார் சிரித்த வண்ணம், “நானோ சந்நியாசி, உடுத்தியிருக்கும் இந்த கந்தை கூட சுமையாக தோன்றுகிறது. மேலகோபுர வாசலில் ஒரு சம்சாரி இருக்கிறான். அவனைக் கேளுங்கள்” என்று பத்திரிகிரியாரை கை காட்டி விடுகிறார்.

இதை அறியும் பத்திரகிரியார் “ஆஹா, சந்நியாசியாக மாறிய எனக்கு இந்தச் சோற்றுச் சட்டியும், நாயும் அல்லவோ சம்சாரியாக்கிவிட்டது…” அடுத்த கணம் சோற்றுச் சட்டியைத் தூக்கி போட்டு உடைக்கிறார். அதன் ஒரு துண்டு நாயின் தலையில் வேகமாய்ப் படவே நாய் இறந்து விடுகிறது.

பத்திரகிரியின் எச்சிலைப் புசித்த புண்ணியத்தால் மரித்த நாய் காசி மன்னனின் புத்திரியாகப் பிறந்தது. ஞானவல்லி என்று பெயர்சூட்டி அருமையாய் வளர்த்தான் மன்னன். ஞானவல்லி நங்கைப் பருவமெய்தியதும் நல்லதொரு மணாளனைத் தேடினான் அரசன்.

அன்றும்....
அன்றும்….
இன்றும்....
இன்றும்….

உடனே ஞானவல்லி, ”தந்தையே! எனக்குரிய நாயகர் திருவிடைமருதூரில் மேற்குக் கோபுர வாசலில் இருக்கின்றார். அவருக்கே நான் உரிமையானவள் ” என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறாள்.

காசி மன்னன் மகளை அழைத்துக் கொண்டு திருவிடைமருதூர் வந்து சேர்கிறான். பத்திரகிரியாரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான். தன் பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறான்.

பத்திரகிரியாரோ சிவஞானத்தில் பரிபூரணமாக ஐக்கியமாகிவிட்டார். அவர் இது என்ன புதுத் தொல்லை என நினைத்த வண்ணம் தன் குருநாதரான பட்டினத்தாரைப் போய்ப் பார்த்து, “குருவே, இது என்ன?? நாய்க்குப் பிறவி ஞானம் வரலாமா? மங்கையாய்ப் பிறப்பெடுத்து வந்திருக்கிறதே,” என வினவ, “இதுவும் ஈசன் செயல்,” என்று புரிந்து கொண்ட பட்டினத்தார், ஈசன் திருவருளை நினைந்து வேண்ட, அப்போது தோன்றிய பெரும் ஜோதியில், அந்தப் பெண் மட்டுமில்லாமல் பத்திரகிரியாரும் சேர்ந்து மறைந்தார். இருவரும் சிவஞானப் பெரும் ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள்.

தன் சீடனுக்கு விரைவில் முக்தி கிடைத்ததை நினைத்து ஏங்கிய பட்டினத்தார் தனக்கும் முக்தி கொடுக்குமாறு ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ஒரு கரும்பைக் கொடுத்து அதன் நுனி இனிக்கும் இடத்தில் அவருக்கு முக்தி கிடைக்கும் எனக் கூறினார். அந்தக் கரும்பை எடுத்துக் கொண்டு பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு, சீர்காழி போன்ற பல தலங்களுக்குச் சென்றார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை. (இவர் இப்படி தலங்களுக்கு செல்லும்போது பாடியவை தான் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது ஆகிய நூல்கள். இவை பதினொன்றாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுளள்ளன.)

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே!

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே!

எத்தனை கருத்துக் செறிவு பார்த்தீர்களா?

பட்டினத்தார் பாடல்கள் நூல்கள் பிரபல புத்தக கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி பார்த்தால் பல பாடல்கள் அறிந்துகொள்ளலாம்.

DSC00579-22

DSC00563-32அவர் திருவெண்காட்டில் இருக்கும்போது அவரது கணக்குப்பிள்ளை சேந்தனாரின் மனைவி வந்து அவரை சந்தித்தார். (சேந்தனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருப்பல்லாண்டு பாடிய அருளாளர் ஆவார். இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தேன்றியவர்.)

பட்டினத்தார் துறவறம் மேற்கொள்ளும்போது அவரது கணக்குப்பிள்ளையாக இருந்த சேந்தனார் அத்தனை செல்வத்தையும் பட்டினத்தாரின் கட்டளைப்படி கருவூலத்தைத் திறந்து ஏழை எளியோர் எல்லோரும் அதில் உள்ள பொருட்களை திரவியங்களை எடுத்துச்செல்லுமாறு செய்தார். இதை அறிந்த பட்டினத்தாரின் சுற்றத்தவர்கள் சேந்தனார் மீது சோழ மன்னனிடம் முறையிடவே மன்னன் சேந்தனாரை சிறையில் அடைந்தான். பட்டினத்தார் ஈசனிடம் முறையிட ஈசன் பிள்ளையாரை அனுப்பி சிறையை தகர்த்து சேந்தனாரை சிறையிலிருந்து விடுதலை செய்தார். (இது பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம்!)

பின்னர் சேந்தனாரிடம், ”சேந்தனாரே! ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. நீங்கள் குற்றமற்றவர் பரிசுத்தமானவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஊரார் நம்பவேண்டும். அதனால் சிதம்பரம் சென்று அங்கு விறகு வெட்டிப் பிழைத்து வருக. அன்றாட வருமானத்தை மறுநாளைக்கென்று சேமிக்காமல் வீட்டுச் செலவு போக சிவபூஜைக்கும் தானதருமத்துக்கும் செலவிடுக. உங்களைப் புனிதனாகக் காட்டும் ஒரே வழி அதுதான்” என்று கூறினார்.

சேந்தனாரும் பட்டினத்தாரின் வாக்கிற்கிணங்க சிதம்பரம் சென்று அப்படியே வாழ்ந்து வந்தார். (அப்போது ஈசன் இவரிடம் திருவிளையாடல் புரிய அப்போது இவர் பாடியது தான் திருப்பல்லாண்டு!)

அன்றும்...
அன்றும்…
DSC09896-22-224
இன்றும்…..

பட்டினத்தாரும் தொடர்ந்து பல தலங்கள் தரிசித்துவிட்டு திருவாலங்காடு வந்தார். பின்னர் அங்கிருந்து திருவொற்றியூர் வந்தார். அங்கே தான் அவருக்கு கரும்பு இனித்தது.

இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மீனவச் சிறுவர்களை அழைத்துத் தன்னை ஒரு மூங்கில் கூடையால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் பின்னர் சிவலிங்கமாக மாறினார். நிலையாமையை உணர்த்த வந்த பட்டினத்தடிகள் தேனினும் இனிய பல பாடல்களை பாடி சிவப்பதம் எய்தினார்.

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

அவர் உருமாறிய லிங்கமே இன்றும் பட்டினத்தார் கோவிலில் உள்ளது. நேரில் சென்றால் தரிசிக்கலாம். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப்பட்டது. இது 1100 ஆண்டுகளுக்கு முன்பு பட்டினத்தார் ஜீவ முக்தி அடைந்த தலம் ஆகும்.

வங்காள விரிகுடா சமுத்திரத்தை பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்தார் சமூகத்தினரின் முக்கியமான கோயிலாகவும் விளங்கி வருகிறது.

1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பின்பு இந்து அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் கருங்கல்லால் கர்ப்ப கிரகம், பிரமாண்ட மகாமண்டபம் மற்றும் தியான மண்டபம் ஆகியவை புதிதாக கட்டி திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.

IMG_6935-22

வாழ்வில் அடுத்தடுத்த பிரச்னைகளால் நிம்மதி இழந்து தவிப்பவர், காமக் குரோதாதிகளால் தவிப்பவர்கள், மெஞ்ஞானம் மற்றும் இறைவன்டைம் உன்னத பக்தி வேண்டுபவர்கள், உறவினர்களுடன் சொத்துப் பிரச்சனையில் சிக்கித் தவிப்போர்கள், தீய பழக்க வழக்கங்கள் உடைய பிள்ளைகளால் வருந்துவோர்கள் ஆகியோரெல்லாம் திருவொற்றியூர் வந்து பட்டினத்தார் கோவிலில் அவரை தரிசித்து அவர் பாடல்களை படித்து வந்தால் நிச்சயம் பட்டினத்து அடிகளின் அருள் கிடைக்கும்.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!

பட்டினத்து அடிகளே சரணம்!

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு – உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே

நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை …
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை

வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு – உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு

முகவரி : அருள்மிகு பட்டினத்தார் கோவில், திருவொற்றியூர், சென்னை – 600019. கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 – 11.00  மாலை 4.30 – 8.00

==========================================================

Also check :

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !

==========================================================

[END]

6 thoughts on “பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!

  1. பட்டினத்தாரின் இறை சரித்திரம் மிகவும் அற்புதம். சுந்தரின் அருமையான கட்டுரை நடை நம்மை அந்த கால கட்டத்திற்கே அழைத்து செல்கிறது. திருவொற்றியூர் செல்லும் ஆவலை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது இந்த ஆன்மிக கட்டுரை. நன்றி சுந்தர்.

  2. பட்டினத்தாரின் தகவல்களை அருமையாக தொகுத்துள்ளீர்கள் படிக்க படிக்க சுவாரசியமாக உள்ளது.திரைப்படமும் பார்த்துள்ளேன் எவ்வளவு ஒரு உண்மையான, சரணாகதியான ஒரு பக்தி உண்மையிலேயே தரிக்க வேண்டிய ஒரு உன்னதமான திருத்தலம்.

  3. “மிகவும் அருமை” பட்டினத்தாருக்கு கோயில் இருப்பது இதுவரையில் தெரியாது.தங்களது கடவுள் பணி சிறக்கட்டும், கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.” wep address கொடுத்த முகுந்தன் அண்ணாவிற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *