2014 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை நாம் கொண்டாடிய தருணங்களை இந்த பதிவில் நினைவு கூர்கிறோம். இந்த பதிவை எப்போதோ அளித்திருக்கவேண்டியது. ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் காரணமாக அளிக்க முடியவில்லை. (யார் அங்கே… ஏதோ சத்தம் கேட்குது??)
இந்த பதிவு முழுக்க முழுக்க புகைப்படங்களுக்காகத் தான். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லும். பதிவை ஆழ்ந்து, அனுபவித்து ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். (புகைப்படங்களுக்காக!).
தயாரிப்பதற்கு மிகவும் சவாலாக இருந்த பதிவு இது. எப்படியும் டிசம்பர் 31 க்குள் அளித்திட விரும்பி பல மணி நேரங்கள் செலவிட்டு இதை தயாரித்துள்ளோம். இது ஒரு புகைப்பட பதிவு என்பதால் விளக்கங்கள் தேவையில்லை. இருப்பினும் கூடுதல் சிறப்புக்காகத் நமக்கு நினைவில் நின்றவற்றை வைத்து நமது வர்ணனையை அளித்துள்ளோம்.
ரசிப்பீர்கள் என நம்புகிறோம்!
=================================================================
2014 ஆம் ஆண்டு புத்தாண்டிற்கு ஒரு விசேஷம் இருந்தது. அன்றைக்கு ஹனுமத் ஜெயந்தியும் கூட. எனவே நமது கொண்டாட்டத்தில் ஹனுமனின் தரிசனம் கூட கூடுதலாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு மார்கழி முழுதும் போரூர் ராமநாதீஸ்வரர் ஆலயத்திற்கு நாம் சென்று வந்தது தெரிந்திருக்கும். எனவே ஜனவரி 1 அன்று காலை ராமநாதீஸ்வரர் கோவிலில் நம் தளம் சார்பாக சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்ய விரும்பினோம். சுவாமி சன்னதியில் ஏற்கனவே பல உபயதாரர்கள் ஜனவரி 1 க்கு அபிஷேகத்திற்கு பணம் கட்டியிருந்ததால் நாம் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தோம்.
கோவிலில் அபிஷேகம் + சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் என ஒரு முழு பேக்கேஜிற்கு பணம் கட்டியிருந்தோம். இது தவிர அக்மார்க் நல்லண்ணை ஒரு டின், மற்றும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை, பூக்கள், பிரசாத தொன்னை என ஏற்பாடு செய்திருந்தோம். (உதிரிப் பூக்கள் + மாலை வழக்கம் போல வடபழனியில் உள்ள நண்பர் மணிகண்டனிடம் வாங்கிவிட்டோம். மணிகண்டனைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும். Check : மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!)
ஜனவரி 1, 2014 அன்று காலை இராமநாதீஸ்வரர் சன்னதிக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு அதிகாலை 5.00 மணிக்கே நண்பர்கள் குட்டி சந்திரனும், மாரீஸ் கண்ணனும் நம்முடன் வந்துவிட்டார்கள். சுவாமிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் முடிந்தபிறகு, அம்பாள் சன்னதியில் எங்கள் கட்டளைப்படி (உபயதாரர்) அபிஷேகம் நடைபெற்றது.
கைங்கரியத்திற்கு உதவிய நண்பர்களின் குடும்பத்தினருக்கும் அந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது.
அன்னையின் பெருமைக்கு ஈடேது ? வருடத்தின் தொடக்கத்தில் அன்னைக்கு அபிஷேகம் செய்வித்து அதை காண்பதை விட வேறு பாக்கியம் ஏதேனும் இருக்க முடியுமா என்ன…
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே
சுமார் அரை மணி நேரம் மஞ்சள், அபிஷேகப்பொடி, தேன், பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் என பலவகை அபிஷேகங்கள் அன்னைக்கு நடைபெற்றது.
அபிஷேகம் நிறைவுபெற்று சர்க்கரைப் பொங்கல் அம்பாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. தீபாராதனை நடைபெற்றவுடன், பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. கோவில் வாசலில் யாசகம் பெற அமர்ந்திருந்தவர்களுக்கு தேடிச் சென்று பிரசாதம் தரப்பட்டது.
தரிசனம் உட்பட அனைத்தும் திருப்தியாக முடிந்த பிறகு குருக்களுக்கு நன்றி கூறிவிட்டு, அன்னையிடமும் ஸ்வாமியிடமும் விடைபெற்றுக்கொண்டு துவிஜஸ்தம்பம் அருகே நமஸ்கரித்துவிட்டு குமரனை காண குன்றத்தூர் புறப்பட்டோம்.
குன்றத்தூரில் கூட்டம் களை கட்டியது. சாரை சாரையாக மக்கள் படையெடுத்த வண்ணமிருந்தனர்.
அடிவாரத்திலேயே எங்கள் வாகனங்களை விட்டுவிட்டு, படியேறிச் சென்றோம்.
வழியில் இருந்த வலம்சுழி விநாயகரை தரிசிக்க தவறவில்லை. இந்த விநாயகருக்கு புராண தொடர்பு உள்ளது. இவரை சேவித்துவிட்டு முருகனை சேவிப்பது நலம் தரும்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தபடியால், சிறப்பு தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொண்டு சென்றோம். நல்ல தரிசனம். நமக்கு தெரிந்தவர்களே டூட்டியில் இருந்தார்கள்.
புத்தாண்டு அன்று தன்னை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுத்தமைக்கு முருகனுக்கு நன்றி சொன்னோம்.
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற
மெத்த இன்பம் சேருமே!!
அனைவரும் ஒரு க்ரூப் போட்டோ எடுத்தபிறகு புறப்பட்டோம்.
படி இறங்கும்போது கண்ட ஆட்டுக்குட்டிகள் மனதை கவர்ந்தன. அவற்றை சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்துவிட்டு அடுத்து பேரம்பாக்கதிற்கு எங்கள் கோவிலுக்கு பயணம் தொடர்ந்தது.
வழியில் ஹரீஷ் மற்றும் அவர் அம்மா உமா, பிரேம் கண்ணன் உள்ளிட்ட மேலும் சில வாசகர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
சென்னை – ஸ்ரீபெரும்புதூர் சாலையில், குவீன்ஸ்லாண்ட் தாண்டி, சவீதா மருத்துவக் கல்லூரி அருகே வலதுபுறம் பிரியும் அரக்கோணம் சாலையில், சுமார் 28 கி.மீ. தூரத்தில் இருக்கிறது நரசிங்கபுரம்.
பேரம்பாக்கத்தின் ஊர் எல்லையில் அமைந்துள்ள ‘கூவம்’ என்னும் பாடல் பெற்ற தலத்தை ஒட்டி அமைந்துள்ளது இந்த நரசிங்கபுரம்.
பேரம்பாக்கம் செல்லும் வழியில் அரக்கோணம் சாலையில் வேறு பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உண்டு. அவற்றுள் மூல நட்சத்திர பரிகாரத் தலமான மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை நடைபெறுவதுண்டு.
சரியாக மப்பேடை நாங்கள் கடக்கும் முன்னர் உளுந்தை என்னும் ஊரில், சாலையோரத்தில் ஒரு விஸ்வரூப ஆஞ்சநேயரை பார்த்தோம். புதிதாக கட்டப்பட்ட கோவில் அது என தெரிந்தது. ஹனுமத் ஜெயந்தியாக இருக்கிறதே… ஆஞ்சநேயரை ஒரு எட்டு பார்த்துவிட்டு போய்விடுவோம் என்று கருதி அங்கு சென்று வாயுபுத்திரனை தரிசித்தோம்.
இது போன்ற கிராமங்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தவிர இது போன்ற புதுப் புது ஆலயங்கள் முளைப்பது ஒரு வகையில் நன்மைக்கே. இது போன்ற கிராமங்களை குறிவைத்து அப்பாவிகளை மூளைச் சலவை செய்து மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. அப்படி வழி தவறி செல்லும் மக்களை தவறிவிடாமல் இழுத்துப் பிடிக்கும் ஒரு கடிவாளமாக இத்தகு ஆலயங்கள் இருக்கக்கூடும். புரிகிறதா?
அனுமனைத் தரிசித்த பின்னர் அங்கே அளிக்கப்பட்ட பிரசாதத்தை (எலுமிச்சை மற்றும் தயிர் சாதம்) கொஞ்சம் சாப்பிட்ட பின்னர் ஓரளவு சக்தி கிடைத்தது. தொடர்ந்து நரசிங்கபுரம் பயணம்.
வழியில் மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்தபடி சென்றோம். (இந்த அழகு தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சூரையாடப்பட்டுவிட்டது. வாழ்க ஜனநாயகம்!) நரசிம்மரை தரிசித்தபின்னர் ரிட்டர்ன் வரும்போது சிங்கீஸ்வரரை தரிசிப்பதாக பிளான். எனவே சிங்கீஸ்வரர் கோபுரத்தை தரிசித்தபடி எங்கள் பயணம் நரசிங்கபுரத்தை நோக்கி தொடர்ந்தது.
எப்போதும் பசுமையாக இருக்கும் பகுதி பேரம்பாக்கமும் அதன் சுற்றுவட்டாரங்களும். அதுவும் மார்கழி மாதம் கேட்கவே வேண்டாம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று ஒரே பசுமை தான். சென்னை நகரில் காற்றில பறக்கும் தூசியையும் பழுதடைந்த சாலைகளையும் பார்த்து பார்த்து பழகிய கண்களுக்கு இது ஒரு விருந்து என்றால் மிகையல்ல. செழிப்புக்கு பெயர் பெற்ற அந்த ஊரின் முக்கிய தொழில் விவசாயம். எப்போது நாம் அந்த பகுதிக்கு சென்றாலும் வயலில் விவசாயிகள் வேலை செய்யும் அந்த காட்சியை காணலாம்.
அவர்களை பார்த்து ரசித்து, கையெடுத்து வணங்கியபடி நரசிங்கபுரம் சென்றோம்.
நீல நிற மேனி கொண்ட மகா விஷ்ணுவின் நெற்றியில் துலங்கும் வெளிர் நிற சந்தன திலகத்தை போல, ஊரின் ஒதுக்குபுறத்திலிருந்து காட்சி தரும் நரசிம்மர் கோவிலின் கோபுரம் அத்தனை அழகு. பார்க்கும்போதே மனதில் ஒரு வித பரவசத்தையும் நம்பிக்கையையும் தருவது கோவில் கோபுரங்களே. அதுவும் நரசிம்மர் கோவிலின் கோபுரத்தை நீங்கள் தரிசிக்கும் அடுத்த நொடியே உங்கள் பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வந்துவிடும் என்கிற நம்பிக்கை தோன்றும் என்பது உறுதி.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல, ஆண்டு முழுதும் பேரம்பாக்கம் அழகு என்றாலும் இந்த மார்கழி மாதம் கொள்ளை அழகு. கதிரவன் இருக்கும் பகல் பொழுதில் கூட அங்கு குளு குளு குற்றாலத்தில் இருப்பது போலத் தான் இருக்கும்.
பேரம்பாக்கம் சென்றபோது, திருவள்ளூரில் இருந்து வந்த நண்பர் மனோகரன் குடும்பத்தினர் நமக்காக தயாராக இருந்தனர். நாம் செல்லும்போது கிட்டத்தட்ட மதிய வேளை என்பதல கூட்டம் மிதமாக இருந்தது. க்யூ வரிசையில் நின்றபடி நரசிம்மரை தரிசித்தோம்.
நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக நரசிம்மரிடமும் தாயாரிடமும் அர்ச்சனை செய்தோம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம்
தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.
தீராத கடன் பிரச்சனையால் தவிப்பவர்கள் இந்த நரசிம்மரை ஒவ்வொரு சுவாதி நட்சதிரத்தன்றும் தரிசித்து விளக்கேற்றி மேற்கூறிய ருண விமோசன ஸ்தோத்திரத்தை கூறி வர, படிப்படியாக கடன் பிரச்சனைகள் யாவும் நீங்கும். ஒரு முறை செய்து தான் பாருங்களேன்.
தரிசனம் முடித்தவுடன் சூடான தயிர் சாதம் பிரசாதமாக கிடைத்தது. (பொதுவாக இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களுக்கு ஒரு தனிச் சுவை வந்துவிடும். ஆனால் இந்த கோவில் பிரசாதத்திற்கு இருக்கும் சுவையே தனி.)
தரிசனம் முடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், அங்கே விற்பனைக்கு கிடைத்த அகத்திக் கீரைகளும் பழங்களும் வாங்கி பசுக்களுக்கும் கன்றுக்குட்டிகளுக்கும் தரப்பட்டன. (கோவில் வாசலிலேயே அனைத்தும் கிடைக்கும்.) மற்ற கோவில்களை போல அல்லாமல் இந்த கோவிலில் கன்றுக்குட்டிகளை டஜன் கணக்கில் காணலாம். அவற்றை ரசிப்பதற்கென்றே இங்கு அடிக்கடி செல்லத் தோன்றும். காரணம் நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட தற்போது இந்த கோவிலின் கோ-சாலை மிகப் பெரியதாகிவிட்டது. நாம் உழவாரப்பணிக்கு இங்கு சென்ற இரண்டு முறையும் பசுக்களுக்கு தீவனம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மரை தரிசித்துவிட்டு நேரே மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் பயணம்.
மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில் கொள்ளை அழகு. மிகப் பெரிய கோவில் இது. சுவாமி பெயர் சிங்கீஸ்வரர். தாயார் புஷ்பகுஜாம்பாள்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று லக்ஷார்ச்சனை நடைபெறும்.
நாம் லக்ஷார்ச்சனையில் பங்கேற்று அர்ச்சனை செய்து பிரசாதமும் காலண்டரும் பெற்றுக்கொண்டு வருவது வழக்கம்.
இந்த முறையும் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து சிங்கீஸ்வரரை தரிசித்துவிட்டு லக்ஷார்ச்சனை நடைபெறும் அம்பாள் சன்னதி மண்டபத்துக்கு விரைந்தோம்.
அங்கு சிங்கீஸ்வரரும் புஷ்பகுஜாம்பாளும் பிரமாதமான அலங்காரத்தில் உற்சவர்களாக எழுந்தருளியிருந்தார்கள். எங்கள் அனைவருக்காகவும் நண்பர்களுக்காகவும் சிங்கீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
கையோடு இங்கும் புளியோதரை, தயிர் சாதம் பிரசாதம் தரப்பட்டது. அவற்றை அருந்திவிட்டு பின்னர் அனுமன் சன்னதியில் தரிசனம்.
இந்த கோவிலின் சிறப்பம்சம் யாதெனில் இது ஒரு சிறந்த மூல நக்ஷத்திர பரிகாரத் தலம். இங்குள்ள சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அன்றைய தினம் ஹனுமத் ஜெயந்தி என்பதால் அனுமனுக்கு நம் தளம் சார்பாக வெண்ணைக் காப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
நாம் சென்றவுடன் வெண்ணைக் காப்பு துவங்கியது. குருக்கள் சிவன் சன்னதியில் லக்ஷார்ச்சனையில் பிஸியாக இருந்தபடியால் அவரது மகன் தான் எங்களுக்காக அனுமனுக்கு வெண்ணைக் காப்பிட்டார். பொறியியல் படித்து வரும் அவர் தந்தைக்கு இது போன்ற நாள், கிழமை விஷேடங்களின்போது உதவுவதாக கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டோம். அவரை பாராட்டி தட்டிக்கொடுக்க தவறவில்லை.
நண்பர்களுடன் அமர்ந்து அனுமனுக்கு நடைபெற்ற வெண்ணைக் காப்பை ஒவ்வொரு துளியாக ரசித்தோம். காப்பிட்ட பின்னர் அசோத்திர அர்ச்சனை நடைபெற்றது.
அனுமனுக்கு வெண்ணைக் காப்பு சாத்துவது ஏன் ?
ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லக்ஷ்மணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.
மேலும் சில வாரம் ஏன் வெண்ணெய் சில வருடங்கள் ஆனாலும் கெடாது. சித்த மருத்துவத்தும் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் நாள் பட்ட வெண்ணை பயன்படுத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்துவது உஷ்ணத்தை தனித்து குளிர்ச்சி தருவதாகும். அவ்வெண்ணெய் உஷ்ணத்தில் இருந்து நம்மை காக்கும். ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணெய் சரும நோய் போக்க வல்லது. அதை உண்ண புத்திரபாக்யம் கிட்டும், முகத்தில் தடவ முகப் பொலிவு உண்டாகும்.
(* பசுவெண்ணை சாலச் சிறந்தது. ஆஞ்சநேயருக்கு என்றில்லை எந்த தெய்வத்திற்கும் பசு வெண்ணையே ஏற்றது.)
அனைத்தும் முடிந்து கிளம்பும்போது மணி 3.00 இருக்கும். பசியோ களைப்போ துளியும் எங்களுக்கு தெரியவில்லை.
இதுவே அர்த்தமுள்ள அருள் நிறைந்த புத்தாண்டாக இருக்கமுடியும். ஆம்… 2014 ஆம் ஆண்டு எங்களுக்கெல்லாம் அருள் நிறைந்த, முன்னேற்றம் மிகுந்த ஆண்டாகத் தான் இருந்தது. நாங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும்.
இந்த ஆண்டும் மேற்படி பயணம் இருக்கும். கலந்துகொள்ளவிரும்பும் அன்பர்கள் நம்மை தொடர்புகொள்ளவும்.
(* நமது புத்தாண்டு ஆலய தரிசனத்தன்று மூல நட்சத்திர பரிகாரத் தலமான மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயத்தில் எவருக்கேனும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் நம்மை தொடர்புகொள்ளவும்.)
=================================================================
2015 – ஜனவரி 1 புத்தாண்டு வைகுண்ட ஏகாதசி + ஆலய தரிசன விபரம்
காலை 4.30 மணி – குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவில் (ஸ்ரீ கற்பக விநாயகர் சன்னதியில் அபிஷேகம் +
கந்தழீஸ்வரர் & அம்பாள் விஸ்வரூப தரிசனம்)
காலை 5.30 மணி – குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவில் பரமபத வாசல் திறப்பில் பங்கேற்பு
(ஜனவரி 1 அன்று வைகுண்ட ஏகாதசி வருவதால், கந்தழீஸ்வரர் கோவிலில் அபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் அருகில் உள்ள திருஊரகப்பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பில் பங்கேற்க உத்தேசித்துள்ளோம்.)
காலை 7.00 மணி – குன்றத்தூர் முருகன் (தரிசனம்)
காலை 9.30 மணி – உளுந்தை அனுமன் கோவில்
நண்பகல் 11.00 – பேரம்பாக்கம் நரசிம்மர் (அர்ச்சனை)
1.00 மணி – மப்பேடு சிங்கீஸ்வரர் (லக்ஷார்ச்சனை)
2.00 மணி – சென்னை திரும்புதல்
* இது தவிர கோ-சம்ரோக்ஷனம் தனியாக நடைபெறும். * * நண்பர்கள் அவர்கள் சௌகரியப்படி இந்த பயணத்தில் எங்கு வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.
திருவருளும் குருவருளும் துணை நின்று அனைத்தையும் நல்லபடியாக நடத்தித் தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்!
=================================================================
Also check :
ஆங்கிலப் புத்தாண்டை இப்படியும் வரவேற்கலாமே!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!
சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்
வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!
ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!
மாற்றமும் ஏற்றமும் தரும் மார்கழி – என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ?
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!
=================================================================
[END]
பதிவும் படங்களும் அருமை……..இது போன்றதொரு அர்த்தமுள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தர வேண்டும்……………
வணக்கம் தாங்கள் சொன்னமாதிரி இது ஒரு படங்கள் நிறைந்த பதிவு.
எல்லா படங்களும் அழகு கொஞ்சுகிறது. திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது.
கோயில் கோபுரமும் அனுமனின் வெற்றிலை சாற்றிய கோலமும் அருமையாக இருக்கிறது.
பச்சை பசேல் என்ற வயல்வெளி கண்ணுக்கும் குளிர்ச்சியாக உள்ளது.
நம் வாசக அன்பர்கள் உங்களுடன் சேர்ந்து புத்தாண்டை ஜாலியாக அருள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த நாளாக கொண்டாடி இருப்பது தெரிகிறது.
ஹலோ உமா மேடம் 363 நாட்கள் கழித்து புத்தாண்டு கொண்டாட்ட பதிவை போட தற்போது தான் நம் சாருக்கு நேரம் கிடைத்தது போல தெரிகிறது.
எனிவே அமர்க்களமான பதிவு.
ஆனால் வரும் வருடத்திய புத்தாண்டு கொண்டாட்ட பதிவு ஜனவரி பத்து தேதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் சார்பாக நான் உறுதி கூறுகிறேன்.
நன்றிகள்
நம் உழவரபணி செய்யும் மற்றும் ஆலய தரிசனம் இரண்டுமே சுந்தர் அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டிய விஷயங்கள்.
ஒன்றொன்றும் பார்த்து பார்த்து செய்வர்.
மூல நட்சத்திற கோயில்,பேரம்பாக்கம்,இலம்பையங்கோட்டூர், திருமழிசை என பல கோயில்கள் போய் இருந்தாலும் சிங்கிஸ்வரரும், என் கணவர் அழைத்து சென்ற திருகச்சூர் தியாராஜர் கோயிலும் என் மனதில் நீங்கா இடம்பெற்றவை.
மறுமுறை அந்த சிவன் எப்போது அழைக்கிறாரோ தெரியவில்லை.
இந்த முறையும் நம் நண்பர்கள் சகோதர சகோதரிகள் படைசூழ தரிசனம் பெற்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
சுந்தர் சார்,
இந்த ஆண்டு முதல் தேதியிலிருந்து “பிளாஸ்டிக்” கை ஒழிக்கும் பணியையும் தொடங்கவும். கூட வருபவர்கள் மட்டுமல்ல, சுற்றுப் புறத்தில் உள்ள ஒவ்வோவோருவருக்கும் பிளாஸ்டிக்கினால் விளையும் வியாதி, துன்பங்கள், சுற்று சூழல் மாசு பற்றி விரிவு படுத்தவும். கோவில் படிகளில் கற்பூர பாக்கெட் மூலம் கற்பூரம் ஏற்றி சுற்று சூழலை மாசு படுத்தியும், கற்பூர பாகெட் சிறிய கவர்களை ஆங்கங்கே போட்டு நிரந்தர பூமி மாசினை ஏற்படுத்தும் கயவர்களை (மன்னிக்கவும்) தெய்வம் கேட்குமா தெரியாது. ஆனால் நாம் ஒவ்வோவோருவரும் கேட்டு உடனடியாக திருத்தி சரிப் படித்திட வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது காசு வாங்கிக் கொண்டு கொடுக்கிறார்களே, அதற்குப் பதில் காசு வாங்கிக் கொண்டு துணிப் பை கொடுக்க அறிவுர்த்தி செயல் படுத்த வேண்டும். எந்த ரூபத்திலும் பிளாஸ்டிக் ஒழிய உறுதி எடுத்துக் கொண்டு உடனடியாக செயல் படுத்த வேண்டுகிறோம்.
தங்களின் பயணமும், பிரார்த்தனையும் இறையருளால் இனிதே நிறைவேற வாழ்த்துகள்
படங்கள் அனைத்தும் அருமை. இந்த ஆண்டும் இதே போன்று அருமையான புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள். நீங்கள் கொண்டாடினால் நாங்கள் (நமது தள வாசகர்கள்) அனைவருமே கொண்டாடினது போலத்தானே சுந்தர். தங்களது இது போன்ற பதிவு எங்கள் அனைவருக்குமே அப்படி ஒரு உணர்வை கொடுத்து விடுமே. அதனால் தான் இப்படி சொல்கிறேன். நமது தள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நல்லன எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும், எல்லோரும் எல்லாமும் பெற்றும் நல் வாழ்வு வாழ வேண்டும், வறுமை இல்லா வாழ்வு வேண்டும், நிம்மதியான நோய் நொடி இல்லாத வாழ்வு வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்வோம்.
வாவ் …. மிகவும் அருமையான மனதில் பசு மரத்தாணி போல் நிற்கும் பதிவு. 12ம் மாத கடைசியில் பதிவை போட்டாலும் படிக்க படிக்க மனம் குளிர்கிறது.
நான் பதிவை படிக்கும் பொழுதே ஜனவரி 1, 2014 க்கு சென்று விட்டேன். பேரம்பாக்கம் நரசிம்மரை ஜனவரி 2014 ல் தரிசித்ததால் இந்த 2014 ஆம் ஆண்டு ஏற்றம் மிகுந்த ஆண்டாக இருந்தது. வரும் 2015 ம் ஆண்டும் வாழ்வில் வளமும் நலமும் பெரும் ஆண்டாக எல்லோருக்கும் அமைய வேண்டும்.
இன்னும் பல பதிவுகள் பெண்டிங் உள்ளது. வரும் 2015 ஜனவரியிலாவது அப்டேட் பண்ணவும்.
அனைத்து படங்களும் கண் கொள்ளாக் காட்சி. மொத்தத்தில் superb article ……………
@ பரிமளம் , லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளது. இதற்காக சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல. நீங்கள் 2014 ம் வருட புத்தாண்டு தரிசனத்தில் கலந்து கொள்ளாதது தான் ஓர் குறை.
2015ம் வருட புத்தாண்டு அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக அமைய வாழ்த்துக்கள்
அட்வான்ஸ் நியூ இயர் wishes டு all !!!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி
உமா
சுந்தர்ஜி
சுந்தர்ஜி தங்களுக்கும் நமது தள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.