Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

print
து வழக்கமான பதிவு அல்ல. கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம். இந்த ஒரு பதிவு பல பதிவுகளுக்கு சமம் (நீளத்தில்) என்றால் மிகையாகாது. இறைவனுக்கு தொண்டு செய்யவேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும் தகுந்த நபர்களை இணைத்து அவன் அதை சிறப்பாக நடத்தி கொள்வான் என்பதை அனுபவப்பூர்வமாக அவன் நமக்கு மற்றுமொருமுறை உணர்த்திய நிகழ்வு இது.

நம் தேவைகள் அனைத்தையும் அவன் அறிவான்… அவன் ஒவ்வொரு கணமும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பது பதிவை படித்தாலே உங்களுக்கு புரியும். இந்த பதிவில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் மூலம் அவன் நமக்கு உணர்த்தும் விஷயங்கள் எண்ணற்றவை.

வாருங்கள்… கந்தன் கருணையில் மூழ்கி எழுவோம்!

======================================================

கந்தன் கருணை!

கந்த சஷ்டிக்கு கந்தனை நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தில் தரிசித்துவிடவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தாகி விட்டது.  ஆனால் இந்த முறை நாம் அவனை பார்ப்பதற்கு பதில் அவன் நம்மை பார்க்கவேண்டும் என்று மனம் விரும்பியது. அதாவது விஸ்வரூப தரிசனத்தில் அவனை கண்டு ரசிப்பது என்று முடிவு செய்தோம். விஸ்வரூப தரிசனத்தில் அவனை தரிசிப்பது என்று முடிவெடுத்தபோது முதலில் தோன்றியது வடபழனி பிறகு குன்றத்தூர் தான். இதில் வடபழனி அடிக்கடி போய்வருவது வாடிக்கை. ஆனால் சேக்கிழார் அவதரித்த குன்றத்தூர் சென்று குமரனை தரிசித்து சில வருடங்கள் ஆவதால் குன்றத்தூர் செல்வது என தீர்மானித்தேன்.

பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் திருக்கோவில்களில் அர்ச்சனைக்கும் பூஜைக்கும் பூக்கள் வாங்கித் தரும் கைங்கரியத்தை நாம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. குன்றத்தூர் செல்லும்போது நிச்சயம் பூக்கள் வாங்கி செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். எதற்கும் ஆலய அலுவலகத்தில் பேசி அவர்களுக்கு வேறு ஏதேனும் தேவை என்றால் அதையும் வாங்கிக் கொண்டு போகலாம் என்று ஆலய அலுவலகத்திற்கு ஃபோன் செய்தேன். யாரும் ஃபோனை எடுக்கவில்லை. சற்று இடைவெளி விட்டு திரும்ப ஃபோன் செய்தேன். ஹூம்….ஹூம்… நோ ரெஸ்பான்ஸ். மீண்டும் சற்று இடைவெளி விட்டு திரும்ப ஃபோன் செய்தேன். ஹூம்….ஹூம்…ஒரு வேளை நம்பர் மாறியிருக்குமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அடியேன் அலுவலக வேலைகளுக்கு நடுவே இது கொஞ்ச கஷ்டமாகத் தான் இருந்தது. இருப்பினும் திரும்ப திரும்ப முயற்சி செய்ததில் மாலை ஒரு 5.00 மணியளவில் லைன் கிடைத்தது. கோவில் நிர்வாக அதிகாரி (Executive Officer) நம்மிடம் பேசினார்.

நான் முக்கியமாக தெரிந்துகொள்ள விரும்பியது விஸ்வரூப தரிசனத்தின் நேரம் தான். கோவில் திறந்தவுடன் சன்னதியில் முதல் ஆளாக உள்ளே சென்று முருகனை தரிசித்துவிடவேண்டும் என்ற ஆசை எனக்கு.

கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானை விஸ்வரூப தரிசனம் செய்ய ஆசைப்படுவதாக கூறி கந்த சஷ்டியன்று விஸ்வரூப தரிசனம் எப்போது என்று விசாரித்தேன். காலை 5.30க்கு என்றார். பூக்களும் மாலையும் வாங்கி வர விரும்புவதாகவும் குருக்களிடம் பேச முடிந்தால் அவரிடம் பேசி வேறு ஏதேனும் தேவைகள் இருப்பின் அதையும் வாங்கி வர தயாராக இருப்பதாகவும் சொன்னேன். குருக்கள் நம்பர் கிடைத்தது. டீ பிரேக்கில் இந்த உரையாடல் நிகழ்ந்தபடியால், டீ-பிரேக் முடிந்து மீண்டும் அலுவலகத்திற்கு வந்தவுடன் வேலை டென்ஷனில் குருக்களிடம் பேசவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன்.

நிற்க. அந்த நேரம் பார்த்து நண்பர் மாரீஸ் நமக்கு போன் செய்தார். அவரிடம் விஷயத்தை சொல்லி குன்றத்தூருக்கு விஸ்வரூப தரினசத்திற்கு வரத் தயாரா என்று கேட்டபோது, “ரெடி! எத்தனை மணிக்கு வரணும் அதை சொல்லுங்க?” என்றார்.

“காலை 5.30க்கு ஷார்ப்பாக கோவிலில் இருக்கவேண்டும். எனவே அதிகாலை 5.00 மணிக்கு கரெக்ட்டாக போரூர் ஜங்க்ஷன் வந்துவிடவேண்டும்” என்றேன். நிச்சயம் வருவதாக சொன்னார். விஸ்வரூப தரிசனத்தின் பலனை அவர் கண்கூடாக கண்டவர் என்பதால் தனது ஹாங்காங் பயண ஏற்பாடுகளில் பிஸியாக இருந்தபோதும் வருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் காலை 4.00 மணிக்கு எழுந்திருக்கவேண்டும். மதியம் 12.30க்கு திருவள்ளுவர் குருகுலத்தில் அன்னதானம் வேறு இருக்கிறது. பிரார்த்தனை பதிவை வேறு அளிக்கவேண்டும். பார்த்தேன்… எதுக்கு டென்ஷன்? பேசாம நாளைக்கு அரை நாள் லீவ் எடுத்துக்கொள்வோம் என்று அரை நாள் லீவ் அப்ளை செய்துவிட்டேன்.

எப்பவுமே இது மாதிரி நாள், கிழமை விஷேசத்துக்கு முந்தைய நாள், நான் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது சரியாக ஏதாவது வேலை வரும். அன்றைக்கும் அதே தான். இருந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது இரவு 8.30.

அப்போது குன்றத்தூர் முருகன் கோவிலிலிருந்து  ஒரு ஃபோன் வந்தது. கோவில் குருக்கள் பேசுவதாக சொன்னார். அப்போது தான் அடடா… குருக்களிடம் பேச மறந்துவிட்டோமே… என்று எனக்கு ஞாபகம் வந்தது.

“மன்னிச்சிடுங்க சார்… EO உங்க நம்பர் கொடுத்தார். நான் தான் கூப்பிட மறந்துட்டேன். நாளைக்கு கந்த் சஷ்டிக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு நானும் என் ஃப்ரெண்ட் ஒருத்தரும் வர்றோம். ஏதாவது வேணும்னா சொல்லுங்க… வரும்போது வாங்கிட்டு வர்றோம்.”

“நல்லது நல்லது… முடிஞ்சா லட்சார்ச்னைக்கு உதிரிப்பூக்கள் நிறைய தேவைப்படுது. உதிரிப்பூக்கள் ஒரு கூடை வாங்கிட்டு வாங்க. ரொம்ப உபயோகமா இருக்கும். முடிஞ்சா மாலை வாங்கிக்கோங்க!”

“வேற என்ன வேணும் சொல்லுங்க…” அவரிடம் மேலும் பேசியதில், பூஜைக்கும் ஹோமத்திற்கும் விபூதி, குங்குமம், சந்தனம், ஜவ்வாது, உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுவதாக தெரிந்தது.

“கவலையே படாதீங்க… எல்லாம் வாங்கிட்டு வந்துடுறோம். காலைல 5.30 மணிக்கு கோவில்ல இருப்போம். வேறு ஏதாவது ஞாபகம் வந்தா ஃபோன்  பண்ணுங்க. வடபழனி மார்க்கெட்ல தான் இதெல்லாம் போய் வாங்கப்போறேன்!” என்றேன்.

vadapalani

அர்ச்சகர் சொல்லும் உதிரிப் பூக்கள் கூடை, மாலை, அபிஷேக பொருட்கள், என அத்தனை பொருட்களை வாங்கி டூ-வீலரில் எடுத்து செல்வது மிகவும் சிரமம். கூட யாராவது ஒத்தாசைக்கு இருந்தா நல்லாயிருக்கும் என்று தோன்றியது. யாரை கூப்பிடுறது? திடீர்னு கூப்பிட்டா யாரு வருவாங்க?

கூடியவரைக்கும் சமாளிப்போம் என்று வடபழனி புறப்பட்டேன். (மாலை, பூ, மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வடபழனி சன்னதி வீதியில் கிடைக்கும்.)

வழியில் நண்பர் பிரேம் கண்ணன் எதேச்சையாக கூப்பிட்டார். அவரிடம் விபரங்களை சொன்னபோது, விஸ்வரூப தரிசனத்திற்கு தானும் வருவதாக சொன்னார்.

“இப்போ வடபழனி வரமுடியுமா? வந்தீங்கன்னா எல்லா பொருட்களையும் வாங்கிடுவோம். என் டூ-வீலர்ல ஏத்திவிட்டீங்கன்னா போதும்” என்றேன்.

சொன்னபடி அவர் வடபழனி வந்து சேர்ந்துவிட இருவரும் சேர்ந்து முதலில் மாலையும் உதிரிப் பூக்களும் வாங்க முடிவு செய்தோம். சன்னதி வீதியில் ஆர்ச்சுக்கு பக்கத்தில் முதலிலேயே ஒரு பூக்கடை இருந்தது. வரிசையாக மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன.

DSC05547

ஒவ்வொரு மாலையும் ஒரு விதத்தில் சிறப்பாகவும் அழகாகவும் இருந்தது. ரெண்டு மாலைகள் வாங்க உள்ளுக்குள் ஆசை. இருந்தாலும் நம்ம லிமிட் என்று ஒன்று இருக்கிறதே… எனவே ஏதாவது ஒரு நல்ல மாலையை வாங்கிக்கொண்டு கிளம்பலாம் என்று  கவனித்தோம். அங்கிருந்த ரோஜா மாலை ஒன்று நம்மை மிகவும் கவர்ந்தது.

“அந்த ரோஜா மாலையை எடுங்க….” – ரோஜா மாலை வாங்கியாச்சு.

உதிரிப் பூக்களும் ஒரு கூடை தேவைப்படுவதாக சொல்லி இரண்டையும் சேர்த்து ஒரு நல்ல ரேட் சொல்லுங்க என்றேன் கடைக்காரரிடம்.

இது போன்ற கடைகளில் புதியவர்கள் என்றால் மாலை ரேட் சட்டென்று ரூ.50/- கூடிவிடும். எனவே சற்று பேரம் பேசித் தான் வாங்க வேண்டியிருந்தது.

“குன்றத்தூர் முருகனுக்கு வாங்குறோம். கொஞ்சம் பார்த்து சொல்லுங்க” என்றேன். கொஞ்சம் குறைத்து கொண்டார். இரண்டையும் வாங்கிக்கொண்டோம். உதிரிப் பூக்களை ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரில் வாங்கிக்கொண்டோம்.

இரவு கடையை அடைக்கும் முன்னர் ஒரு நல்ல வியாபாரம் என்பதால் கடைக்காரரின் முகத்தில் ஒரு சந்தோஷம். அவரிடம் நன்றி கூறி விடைபெற்று கிளம்பினோம். என்ன நினைத்தாரோ… மீண்டும் நம்மை கூப்பிட்டார். முன்வரிசையில் தொங்கிக்கொண்டிருந்த சாமந்தி மாலைகளில் ஒன்றை எடுத்து நம்மிடம் தந்து, “குன்றத்தூர் தானே போறதா சொன்னீங்க… இதை என் சார்பாக முருகனுக்கு கொடுத்திடுங்க சார்” என்றார்.

எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.

ஏன்னா..அவர் நமக்கு கொடுத்த அந்த சாமந்தி மாலை எப்படியும் ரூ.100 முதல் ரூ.150 வரை விலைபோகும். நாம் செய்த இந்த சிறு வியாபாரத்தில் அவருக்கு கிடைத்திருக்க கூடிய லாபமே ரூ.100 தான் இருக்கும். அப்படியிருக்கும்போது ரூ.130/- மதிப்புடைய மாலையை நமக்கு அவர் தருகிறார் என்றால் அவரது பெருந்தன்மையை என்னவென்று சொல்ல? மறுநாள் கந்தசஷ்டி என்பதால் எப்படியும் எல்லா மாலைகளும் விற்றுவிடும். அப்படியிருக்கும்போது ஒரு மாலையை அவர் முருகனுக்கு கொடுத்தது உண்மையில் மிகப் பெரிய சேவை.

அவரது கைகளை பற்றி “ரொம்ப நன்றி சார்…”  என்றேன்.

“நான் ரெண்டு மாலை போட நினைச்சேன். முருகன் அதை உங்கள் மூலமே தந்துட்டான். மேலும் உங்க லாபமே இந்த மாலை விலை அளவு தான் இருக்கும். அதையே நீங்கள் கொடுத்துடீங்கன்னு சொல்லும்போது உங்க பக்தியை பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலே… ” என்றேன் நெகிழ்ச்சியுடன்.

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் நண்பர் பிரேம் கண்ணனுக்கு ஒரு விதத்தில் நெகிழ்ச்சி கலந்த பரவசம்.

“சார் ஒரு நிமிஷம்.. உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?” என்று கூறி அவரை அவரது கடைக்கு முன்பாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

மணிகண்டன்!
மணிகண்டன்!

பக்தர்களிடம் கூடுமானவரை விலை ஏற்றி பணம் கறந்துவிடும் வியாபார உலகில், நமது கைங்கரியத்துக்கு தோள் கொடுத்த இவரை நீங்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். மனமார அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று தான்  புகைப்படமெடுத்து இங்கு அளிக்கிறேன்.

“வர்றோம் சார்… உங்க பேர் என்ன தெரிஞ்சிக்கலாமா?” என்றேன்.

“மணிகண்டன்” என்றார்.

அடுத்தமுறை வடபழனி செல்ல நேர்ந்தால் மணிகண்டனை பார்த்து ஒரு நன்றி சொல்லிவிட்டு போங்கள். வடபழனி சன்னதி வீதியில் ஆர்ச்சுக்கு அருகிலேயே இரண்டாவது கடை இவருடையது.

மாலையும் உதிரிப் பூக்களும் வாங்கியாச்சு. அடுத்து அபிஷேக சாமான்கள் வாங்கவேண்டும்.

ஒரு நான்கைந்து கடைகள் தள்ளி பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்ட பூஜை மற்றும் அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொண்டோம். கிளம்பும்போது, அந்த கடையில் வஸ்திரங்களை பார்த்தேன்.

சுவாமிக்கு வஸ்திரம் கூட தேவைப்படுமே? குருக்கள் கிட்டேயே வஸ்திரம் வேணுமான்னு கேட்டுடலாம் என்று குருக்களுக்கு மீண்டும் ஃபோன் செய்தேன்.

“வஸ்திரம் தானே…தாராளமா வாங்கிட்டு வாங்க…” என்று கூறி ஏதோ ஒரு ரகத்தை சொல்லி அது மாதிரி வாங்கினால் நன்றாக இருக்கும். அடிக்கடி சுவாமிக்கு உடுத்தலாம். உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி வாங்கிக்கோங்க!” என்றார்.

அருகிலேயே ஒரு மிகப் பெரிய ஜவுளி கடைக்கு சென்று, சுவாமிக்கு சார்த்த ஒன்பது கெஜ வேட்டி வேண்டும் என்றவுடன், அவர்கள் பல வித வெரைட்டிகளை குறிப்பிட்டு எது வேண்டும் என்று கேட்க, எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆஹா… பேசாம குருக்களுக்கு ஃ ஃபோனை போட்டு கொடுத்திடுவோம் என்று மீண்டும் குருக்களுக்கு போன் செய்து அந்த கடையில் இருந்த நபரிடம் கொடுக்க, அவரிடம் குருக்கள் எந்த மாதிரி வேண்டும் என்று விளக்கினார்.

“அவர் கேட்டமாதிரி கொடுங்க…. விலை ரொம்ப குறைவாகவும் இல்லாம… அதே சமயம் காஸ்ட்லியாகவும் இல்லாம ரேட் மீடியமா இருக்கட்டும்!” என்றோம்.

சேல்ஸ்மேன் எடுத்து போடும் பட்டு வேட்டிகளை பார்க்க ஆரம்பித்தேன். வேட்டிகள் தவிர பட்டுப்புடவைகள் வேறு எடுத்து போட ஆரம்பித்தார்.

“என்ன சார்.. புடவை கூட சொன்னாரா அவர்?”

“ஆமா சார் ஒரு வேட்டி ரெண்டு புடவை சொன்னார்”.

அப்போது தான் புரிந்தது சுவாமியை தவிர வள்ளி தெய்வானை இருவருக்கும் சேர்த்து புடவையும் அவர் சொல்லியிருக்கிறார் என்று.

சரி தானே… மனைவியரை விட்டுவிட்டு சுவாமியை மட்டும் கவனிப்பது எந்த வகையில் நியாயம்… நல்லவேளை குருக்கள் மூவருக்கும் சேர்த்து சொன்னார் என்று மனதுக்குள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டோம்.

DSC05433

கந்தசஷ்டிக்கு முருகன், வள்ளி தெய்வானைக்கு வஸ்திரமும் புடவையும் எடுத்து தருவது எத்தனை பெரிய பாக்கியம். சில பாக்கியங்கள் கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வாய்க்காது. நம்மை தேடி இந்த பாக்கியம் வந்துள்ளது நாம் செய்த புண்ணியம் தான். நல்ல வேலை ரைட்மந்த்ரா அக்கவுண்ட்டில் பணம் இருந்தது.

அனைத்தையும் வாங்கிக்கொண்ட பின்னர், நண்பர் பிரேம் கண்ணன் அவர்களின் துணையுடன் அனைத்தையும் எனது பைக்கில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டேன்.

அன்று இரவு பிரார்த்தனை பதிவை தயார் செய்துவிட்டு மறுநாள் காலை 4.00 மணிக்கு அலாரம் வைத்து விட்டு படுக்கச் சென்றேன்.

காலை எழுந்து முதல் வேலையாக மாரீஸ் மற்றும் பிரேம் கண்ணன் இருவருக்கும் ஃபோன் செய்து அவர்களையும் அலர்ட் செய்து, குளித்து முடித்து தயாராகி 4.45 மணிக்கு குன்றத்தூர் புறப்பட்டாகிவிட்டது.

நண்பர்கள் சொன்னபடி ஒவ்வொருவராக போரூர் சிக்னல் அருகே வந்துவிட, அங்கிருந்து குன்றத்தூர் பயணம். போரூரிலிருந்து குன்றத்தூர் எப்படியும் 10 கி.மீ. இருக்கும். வண்டியில் மாலை, பூக்கள், பூஜை சாமான்கள் மற்றும் நிவேதன பொருட்கள் இருந்தபடியால் மிதமான வேகத்தில் தான் சென்றோம்.

சரியாக 5.25 க்கு குன்றத்தூர் மலைக்கு சென்றாகிவிட்டது.

கோவில் முகப்பு மின்விளக்குகளால் மின்னியது. இது போல அதிகாலை வேளையில் முருகப் பெருமானின் சன்னதிக்கு விஸ்வரூப  வருவது இது தான் முதல் முறை. காற்று  அந்த காலை வேளையில் ஜில்லென்று வீச, நூறு ஏர்-கண்டிஷன் மெஷின்களுக்கு நடுவே இருப்பது போன்று இருந்தது.

அதிகாலை வேளையில் குன்றத்தூர்
அதிகாலை வேளையில் குன்றத்தூர்

சன்னதி இன்னும் திறக்கவில்லை. நமக்கு முன் ஓரிருவர் காத்திருந்தனர். பக்கவாட்டில் சென்று பார்த்தபோது, சைட் கேட் திறந்திருந்தது. அங்கிருந்த வாட்ச் மேனிடம் விசாரித்தபோது, குருக்கள் வந்துவிட்டதாகவும் உள்ளே ஏற்பாடுகளில் இருப்பதாகவும் சொன்னார்.

DSC05430

உடனே நண்பர்களை உள்ளே அழைத்து சென்று,  குருக்களை சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் நாம் வாங்கிச் சென்ற பூஜை பொருட்கள் மாலைகள், புஷ்பங்கள் அனைத்தையும் ஒப்படைத்தோம்.

“சன்னதியை  திறந்துடுவோம். திறந்துவுடனே சுவாமியை தரிசனம் பண்ணிட்டு, ஹோமம் முடிஞ்சதுக்கப்புறம் அபிஷேகம் நடக்கும். அது முடிஞ்ச வுடனே நீங்க வாங்கிட்டு வந்திருக்குற வஸ்திரத்தை சாரதி அலங்காரம் பண்ணுவோம். இருந்து தரிசனம் பண்ணிட்டு பிரசாதம் வாங்கிட்டு அப்புறம் போங்க.” என்றார்.

சிறப்பு அர்ச்சனை செய்யவேண்டும் என்றேன். சன்னதி திறந்தவுடனே செய்துகொள்ளலாம் என்றார். நண்பர் பிரேம் கண்ணன் உடனே  கீழே அடிவாரம் சென்று தேங்காய், பூ, பழம் கொண்ட அர்ச்சனை தட்டு வாங்கி வந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் சன்னதி திறக்கப்பட, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம். முதல் முறையாக முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனத்தை காண்கிறேன். திவ்யமான அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியை கண்டு ரசித்தோம்.

நாம் அளித்த மாலை முருகனின் திருவடிக்கு சூட்டப்பட்டிருந்தது. கண்கள் பனித்தன.

தளம் சார்பாக நம் அனைவருக்காக சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. பிரார்த்தனை கிளப்பில் இதுவரை கோரிக்கை அனுப்பியுள்ள அனைவருக்கும் வேண்டிக்கொண்டோம். கூடவே தளத்தின் பணிகளில், நம் பணிகளில் துணை நிற்கும், நம் வாசகர்கள் மற்றும் நம்மீது பேரன்பு கொண்ட அனைவருக்கும் ஒரு கணம் பிரார்த்திக்கப்பட்டது.

DSC05440

அர்ச்சனை முடிந்தவுடன், பிரசாதத்தை கையில் கொடுத்து “கொஞ்ச நேரத்துல அபிஷேகம் ஆரம்பமாயிடும். அப்புறம் அலங்காரம். நீங்க வாங்கிட்டு வந்த வஸ்திரம் தான் கட்டப்போறோம். இருந்து பார்த்துவிட்டு போங்க” என்று கூறி அவரது பணிகளில் மூழ்கிவிட்டார் அர்ச்சகர்.

நாம் சன்னதிக்கு முன்பாக நண்பர்களுடன்  அமர்ந்துவிட்டோம். வந்திருந்த பக்தர்களும் அபிஷேகத்தை காணவேண்டி அமர்ந்துவிட்டனர்.

உட்கார்ந்திருக்கும் வேளையில் கந்தசஷ்டி கவசம் படிக்க எண்ணியிருந்தோம். ஆனால் கோவிலில் உள்ள மைக் செட்டில் கந்தசஷ்டி கவசம் ஒலிபரப்பியதால் அதையே கேட்டபடி அமர்ந்திருந்தோம்.

அதற்குள் பொழுதும் புலர, நல்ல கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது.

DSC05458

தொன்மை வாய்ந்த குன்றத்தூர் போன்ற திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் கேட்பது அதுவும் காலை வேளையில் கேட்பது ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம். ஒவ்வொரு வரியும் கேட்க கேட்க எழுந்த சிலிர்ப்பை மனநிறைவை வர்ணிக்க வாரித்தைகள் இல்லை. கந்த சஷ்டி கவசம் படிக்கும்போது உருகியவர்களுக்கு அது தெரியும்.

சற்று நேரத்தில் ஹோமம் முடிந்துவிட, தொடர்ந்து சுப்ரமணியனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முதலில் பஞ்சாமிர்த அபிஷேகம். தொடர்ந்து இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, எலுமிச்சை சாறு, மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.

DSC05459

அபிஷேகம் நடைபெறும்போதெல்லாம் வேண்டிக்கொண்டே இருந்தோம். நம் தினசரி பிரார்த்தனை நோட்டீஸை நண்பர்களுக்கு கொடுத்து அதை படிக்கச் சொன்னோம். எங்கள் பக்கத்தில் நின்றிருந்த ஆர்வத்துடன் அதை பார்த்த சிலருக்கும் அந்த நோட்டீஸின் நகலை கொடுத்தோம். அவர்களும் அதை பரவசத்துடன் படித்தார்கள்.

அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காட்டியவுடன், திரை போடப்பட்டு சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது. ஒரு அரை மணிநேரம் கழித்து, சன்னதி திறக்கப்பட, சுவாமி நாம் அளித்த பட்டுவேட்டியுடன் ஜொலி ஜொலிப்பாக காட்சியளித்தார்.

DSC05460

“ஆட்கொண்ட அண்ணலே… கருணைக்கடலே… உன்னையே அனுதினமும் துதிப்போர் எண்ணற்றோர் இருக்க, இந்த எளியவர்கள் அளித்த வஸ்திரத்தை அணிந்துகொண்டு எங்களுக்கு காட்சி தரும் அழகை என்னவென்று சொல்வோம்?” மனம் முருகனின் அருளை எண்ணி எண்ணி உருகியது.

உள்ளே மூலவருக்கு அருகே எங்கள் மூவரையும் அழைத்தார் குருக்கள். அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டு, முருகனின் திருமேனியில் சூடப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து நமக்கு எதிர்பாராமல் அணிவித்தார். மீண்டும் ஒருமுறை உடல் சிலிர்த்தது. குன்றத்தூர் முருகனை அருகேயிருந்து தரிசித்ததால் நண்பர்கள் பரவசத்தில் திளைத்தனர். கண்களாலேயே நமக்கு இந்த வாய்ப்புக்கு நன்றி கூறினார்.

DSC05468

நான் “எல்லாம் அவன் செயல்!” என்றேன்.

“வெளியே வெயிட் பண்ணுங்க. பிரசாதம் கொடுத்தனுப்புறேன். சாப்பிட்டுட்டு போங்க. நாளைக்கு சாயந்திரம் முருகன் திருக்கல்யாணம் இருக்கு. அவசியம் வந்துடுங்க!” என்றார்.

பிரகாரத்தை வலம் வந்துவிட்டு கொடிமரத்திற்கு முன்பாக விழுந்து வணங்கிவிட்டு காத்திருந்தோம்.

DSC05472

சற்று நேரத்தில் பிரசாதம் வந்தது. சூடான வெண்பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம். நாங்கள் கையில் பிராசதத்துடன் இருப்பதை பார்த்தவுடன், அங்கே சுற்றிக்கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று நம்மை நோக்கி ஆவலுடன் வந்தது. அதற்கு பஞ்சாமிர்தத்தை ஊட்டிவிட, ஆவலுடன் சாப்பிட்டது. அப்படியே பொங்கல் கொஞ்சமும் கொடுத்தோம். கோ சேவைக்கு பதில் இன்று மேஷ சேவை என்று நினைத்துக்கொண்டேன்.

பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, கிளம்ப எத்தனிக்கையில் கோவில் அலுவலகம் திறந்திருந்தது தெரிந்தது.

நேற்று நாம் பேசிய நிர்வாக அதிகாரி வந்திருந்தார். அவரிடம் சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். குன்றத்தூரில் உழவாரப்பணி செய்ய விரும்புவதாக தெரிவித்தபோது, டைரியை பார்த்தவர், வேறொரு குழுவினர் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அடுத்த வாரம் பணி செய்ய கேட்டிருப்பதாக சொன்னார். “மற்றொரு சந்தர்ப்பத்தில் ஏதாவது விஷேட நாட்களுக்கு முன்பாக உங்களை நிச்சயம் கூப்பிடுகிறேன்” என்றார். அவரிடம் நமது விசிட்டிங் கார்டை அளித்தேன். கந்தசஷ்டி கவசம் சிறிய புத்தகம் ஒன்றையும் குன்றத்தூர் முருகன் படம் ஒன்றையும் நமக்கு பரிசளித்தார். நம்முடன் நண்பர்கள் இருவர் வந்திருப்பதாக கூறி அவர்களுக்கும் சேர்த்து வாங்கிக்கொண்டேன்.

நண்பர்களிடம் அதை அளித்தபோது அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.

DSC05487
நண்பர்கள் பிரேம் கண்ணன் & மாரீஸ்

வெளியே வந்து க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். கைகளில் இருந்த மாலையை அங்கேயிருந்த ஆடுகள் பதம் பார்த்தது. அவைகளை நண்பர்கள் விரட்ட முற்பட்டபோது, “விரட்ட வேண்டாம்… அவை சாப்பிடட்டும்… இது போன்ற மாலைகளில் உள்ள பூக்களை நம்பி தான் இவை இங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. முருகனும் அதனால் தான் மாலைகளை ஏற்றுக்கொண்டுவருகிறான்!” என்றேன்.

காலை 5.30க்கு வந்தோம். கோவிலில் இருந்து கிளம்பும்போது 8.30 AM. வீட்டுக்கு வரும்போது 9.30 AM.

DSC05488

வீட்டுக்கு வந்து பிரார்த்தனை பதிவை நிறைவு செய்துவிட்டு அலுவலகம் கிளம்பவேண்டும். ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது. மதியம் திருவள்ளுவர் குருகுலத்தில் 12.30 க்கு அன்னதானம். பதிவை தயார் செய்துகொண்டிருந்தபோது, தன் அம்மாவுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு மிகவும் சீரியஸாக இருப்பதாக கூறி நமக்கு பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியிருந்த என்.என்.கணேஷ் ஃபோன் செய்தார்.

“சார் அம்மாவுக்கு கணையத்துல கான்சர் வந்து அது குடல் முழுக்க பரவி ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு சொல்லி பிரார்த்தனை கிளப்புக்கு மெயில் அனுப்பியிருந்தேன். இந்த வாரம் அதை தவறாம பப்ளிஷ் பண்ணுங்க சார். அதை ஞாபகப்படுத்த தான் ஃபோன் பண்ணினேன்!” என்றார்.

DSC05494

“சார்… பிரார்த்தனை ஆர்டிகிள் தான் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். கரெக்டா உங்க பிரார்த்தனையை தான் இப்போ டைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றேன்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றார்.

“அம்மாவுக்கு இப்போ எப்படியிருக்கு?”

“நிலைமை கொஞ்சம் மோசம் தான். என்ன பண்றதுன்னு தெரியலே…” என்றார்.

அடிவாரத்தில் தெரிவது ஊரகப் பெருமாள் திருக்கோவில்
அடிவாரத்தில் தெரிவது ஊரகப் பெருமாள் திருக்கோவில்

சற்று யோசித்தேன். “அடியேன் சொல்ற மாதிரி செய்ங்க. இன்னைக்கு கந்தசஷ்டி. முருகனை தரிசனம் பண்ணா ரொம்ப விசேஷம். பேசாம குன்றத்தூர் போய் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க. நல்லது நடக்கும்.”

“சார்.. கூட்டம் அதிகமா இருக்குமா? போயிட்டு வரவும் தரிசனம் பண்ணவும் எவ்ளோ நேரம் ஆகும் ?” என்றார்.

“உங்களுக்கு கே.கே.நகர்ல இருந்து கிளம்பினா போரூர் வழியா போய் குன்றத்தூர் சேர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும். கோவில்ல அதிகபட்சம் உங்களுக்கு ஒரு முக்கால் மணிநேரம் ஆகும். கூட்டம் அதிகமில்லை. அதனால சீக்கிரம் தரிசனம்  கிடைச்சிடும். உள்ளே ரகு ஐயர்ன்னு ஒருத்தர் இருப்பார். அவரை பார்த்து நம்ம பேரை சொல்லி, நீங்க ரைட்மந்த்ரா வாசகர்னு சொல்லுங்க. மறக்காம அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்குற விஷயத்தை சொல்லுங்க. அம்மா பேர்ல அர்ச்சனை பண்ணுங்க. மத்ததை ரகு ஐயர் பார்த்துக்குவார்” என்றேன்.

குன்றத்தூர்-அடிவாரம்
குன்றத்தூர்-அடிவாரம்

பிரார்த்தனை பதிவை நிறைவு செய்து அதை பப்ளிஷ் செய்துவிட்டு, உடனே திருவள்ளுவர் குருகுலம் கிளம்பினேன்.

திருவள்ளுவர் குருகுலத்தில் வாசகர்கள் பழனியப்பன் அவர்களும் நண்பர் மோகன் ஆகியோர் வந்திருந்தனர். நம் வாசகி பரிமளம் அவர்களுக்கு அந்த பகுதியிலேயே அலுவலகம் என்பதால் அவரும் வந்திருந்தார்.

பிரார்த்தனை முடிந்து அன்னதானம் துவங்குவதற்கு முன்பு, நாம் இன்று அன்னதானம் எதன் பொருட்டு செய்கிறோம் என்றும் இந்த நாளின் விசேஷம் என்ன என்றும் குழந்தைகளிடம் விளக்கினேன்.

DSC05539

“குழந்தைகளே…இன்னைக்கு கந்தசஷ்டி. சூரபத்மனை முருகன் சூரசம்ஹாரம் செய்த நாள் இன்று. முருகனுக்கு மிகவும் உகந்த நாள். ஆகவே இன்று உங்களுக்கு வடை பாயசத்துடன் எங்கள் ரைட்மந்த்ரா தளம் சார்பாக அன்னதானாம் நடைபெறுகிறது.” என்றேன்.

நாம் பேசி முடித்தவுடன் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளுக்கு அன்னதானம் துவங்கியது.

DSC05516

வாசகர்கள் பதார்த்தங்களை பரிமாறிக்கொண்டிருக்க, குழந்தைகளிடம் பேசிக்கொண்டே அந்த இடத்தை சுற்றி வந்தேன்.

“முருகனுக்கு வேறு என்னென்ன பேர் இருக்கு? உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க பார்க்கலாம்… ” என்று கூற, கந்தசாமி, சுப்பிரமணியன், வேலன், கந்தன் என்று குழந்தைகள் ஆளாளுக்கு  அவர்களுக்கு தெரிந்த பெயரை சொல்ல கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது.

DSC05523

இங்கு நம் தளம் சார்பாக எப்போது அன்னதானம் நடைபெற்றாலும், அந்த நாளின் சிறப்பு என்ன என்று குழந்தைகளுக்கு ஒரு சிறிய பாடம் எடுத்துவிடுவது அடியேன் வழக்கம். நண்பர்கள் அனைவரும் பரிமாற குழந்தைகள் சாப்பிட்டனர்.

சுற்றி வரும்போது குழந்தை ஒன்று மழலை மொழியில், “அங்கிள், நீங்க அடிக்கடி இங்கே வர்றீங்க… போன வாரம் கூட வந்தீங்க”  என்றது.

DSC05528

“உன்னை பார்க்கத் தான். உன் கூட சாப்பிடத்தான் வர்றேன்!” என்றேன். அதற்கு ஒரே வெட்கம். சிரித்தபடி தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு  வந்தேன்.

DSC05530

கத்திரிக்காய் சாம்பார், பருப்பு ரசம், வடை,  உருளைக்கிழங்கு பொரியல், ஜவ்வரசி பாயசம், அப்பளம், வடை என  கந்தசஷ்டி அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிறகு நேரே அலுவலகம் சென்றுவிட்டேன்.

மதியம் திரு.கணேஷ் ஃபோன் செய்தார். “சார்.. ரொம்ப நன்றி சார். குன்றத்தூர் போயிருந்தேன். நல்ல கூட்டம் தான். ஆனா குருக்களை பார்த்து நீங்க அனுப்பியதா சொல்லி விஷயத்தை சொன்னேன். உள்ளே கூட்டிட்டு போய் பக்கத்துல இருந்து தரிசனம் பண்ண வெச்சார். ஒரு பிரியா கவர்ல விபூதி தந்தார். மாலையும் ஒன்னு கொடுத்தார். கந்தசஷ்டி அன்னைக்கு முருகனை தரிசிக்கப் போறோம்னு இன்னைக்கு காலைல வரைக்கும்…  ஏன் உங்க கூட பேசின வரைக்கும் தெரியாது. எல்லாம் திடுதிப்னு நடந்து முடிஞ்சிடுச்சு. மதியம் தம்பிகிட்டேயிருந்து போன் வந்தது. கட்டிலைவிட்டு அம்மா எப்பவுமே எழுந்திருக்க மாட்டாங்க. கட்டில்ல தான் உட்கார்ந்திருப்பாங்க. ஆனா இன்னைக்கு மதியம் எழுந்து அம்மா வீட்டுக்குள்ளே எல்லா ரூமையும் ஒரு ரவுண்டு வந்திருக்காங்க. பீரோவெல்லாம் திறந்து பார்த்திருக்காங்க.”

“எல்லாம் முருகப் பெருமானின் கருணை. மஹா பெரியவாவின் ஆசீர்வாதம்” என்றேன்.

நன்றி கூறி விடைபெற்றார் கணேஷ்.

இங்கு அலுவலகத்தில் அடியேன் காலை விடுப்பு என்பதால் அன்று மாலை 8.00 மணிவரை இருந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தான் கிளம்ப முடிந்தது.

மறுநாள் (சனிக்கிழமை) காலை வழக்கம் போல அலுவலகம் சென்றுவிட்டேன். மதியம் குருக்களுக்கு ஃபோன் செய்து, சுவாமி திருக்கல்யாணம் எத்தனை மணிக்கு நடைபெறுகிறது என்று விசாரித்தேன். மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது என்றார்.

“சார் எனக்கு 6.30 அல்லது 7.00 மணிக்கு தான் ஆபீஸ் முடியும். அதுக்கு பிறகு எப்படி வர்றது? நீங்க நடத்துங்க. அடுத்த முறை பார்த்துக்கலாம்” என்றேன்.

“6.00 மணிக்கு ஆரம்பிச்சு 9.00 / 9.30 வரைக்கும் திருக்கல்யாணம் நடந்துக்கிட்டுர்க்கும். நீங்க லேட்டா வந்தா பரவாயில்லே. அவசியம் வரணும். வந்து தரிசனம் பண்ணனும். ஏன்னா…. மூலஸ்தானத்துல இன்னைக்கு வள்ளி தெய்வானைக்கு நீங்க கொடுத்த புடவை தான் கட்டுவோம்.”

“ஆஹா…. கண்டிப்பா அதை பார்க்கணும் சார். லேட்டானாலும் நிச்சயம் வர்றேன். என்ன வாங்கிட்டு வரட்டும்?”

“பூவோ பழமோ உங்களால என்ன முடியுமோ வாங்கிட்டு வாங்க” என்றார்.

மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்ப 6.45 ஆனது.

அதான் முருகனே நம் புஷ்ப கைங்கரியத்துக்கு அருமையான ஒரு நபரை அடையாளம் காட்டிவிட்டாரே. நேரே வடபழனி சென்று மணிகண்டனிடம் பூ வாங்கிக்கொள்வோம் என்று வடபழனி புறப்பட்டேன்.

நம்மை பார்த்ததும் “எப்படி இருக்கீங்க சார்… என்ன வேணும் … நேத்தைக்கு கந்த சஷ்டி எப்படி போச்சு?” என்று ஆவலுடன் கேட்டார்.

DSC05548

குன்றத்தூருக்கு சுப்ரமணியசாமி திருக்கல்யாணத்துக்கு செல்லும் விபரத்தை குறிப்பிட்டு உதிரிப்பூக்கள் ஒரு கூடை நேற்று போலவே வேண்டும் என்றேன்.

ஒரு கூட நிறைய ரோஜா, சாமந்தி உள்ளிட்ட உதிரிப்பூக்கள் தந்தார். அத்தனையும் மிக மிக  ஃப்ரெஷ்ஷாக இருந்தது. எப்படியும் இவர் சொன்ன விலையை விட அந்த பூக்களின் விலை மற்ற இடங்களில் இரு மடங்கு இருக்கும். விஷேட நாட்களில் பூக்கள் விலை இப்போதெல்லாம் விண்ணை தொடுகிறது.

கிளம்பும்போது, “இருங்க… இந்தாங்க முருகன் கல்யாணத்துக்கு என் சார்பா தர்றேன்” என்று கூறி, ரூ.200/- மதிப்புள்ள ஒரு ரோஜா மாலையை நம்மிடம் தந்தார்.

நாம் வாங்கிய உதிரிப்பூ
நாம் வாங்கிய உதிரிப்பூ

“சார் என்ன நீங்க? ஏற்கனவே உதிரிப்பூக்களுக்கு விலை ரொம்ப குறைச்சலாத் தான் வாங்கியிருக்கீங்க. அதுவே முருகனுக்கு நீங்க செய்ற கைங்கரியம். இப்போ, மாலையும் கொடுத்தா எப்படி? உங்களுக்கு கட்டுபடியாக வேண்டாமா?” என்று கூறி அடியேன் பாக்கெட்டிலிருந்து மேலும் ஒரு நூறு ரூபாயை எடுத்து, “இதை வெச்சிக்கோங்க” என்று தந்தேன்.

“இல்லே சார்… வேண்டாம்…” என்று அதை வாங்க மறுத்தார். எவ்வளவோ வற்புறுத்தியும் வாங்க மறுத்துவிட்டார்.

“என்ன சார் புண்ணியம் எல்லாத்தையும் நீங்களே எடுத்துகிட்டா எப்படி? எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்க சார் ப்ளீஸ்” என்று மன்றாடினேன்.

என்ன நினைத்தாரோ பின்னர் அந்த ரூபாயை வாங்கிக்கொண்டவர்… “முருகன் திருக்கல்யாணம்னு தானே சொன்னீங்க? அப்போ சுவாமி, வள்ளி, தெய்வானை என்று மூவருக்கும் சேர்த்து மூன்று மாலை தேவைப்படுமே… இந்தாங்க வள்ளி, தெய்வானைக்கும் மாலை என்று கூறி மேலும் இரண்டு மலைகளை எடுத்து என்னிடம் தந்தார்.

எனக்கு பேச்சே வரவில்லை. அவரது உயர்ந்த உள்ளத்துக்கும் பெருந்தன்மைக்கும் முன்பு நம் சேவை கால் தூசு என்று புரிந்தது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலையில் எதையாவது கட்டி தங்கள் கல்லாவில் போட்டுக்கொள்ளும் வியாபாரிகளுக்கு நடுவே, தன்னையும் நமது தெய்வீகத் தொண்டில் இணைத்துக்கொண்டு, நம் எல்லாரையும் விட உயர்ந்து நிற்கும் மணிகண்டன் போன்றோரை இந்த காலத்தில் பார்ப்பது மிக மிக அரிது. அவரைப் போன்றவர்களை பார்ப்பதே புண்ணியம் என்று தான் சொல்வேன்.

(அனுப்பியது யார்……..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. வியாழக்கிழமை இங்கே முதல் முறை நாம் பூவும் மாலையும் வாங்க வரும்போது,  எத்தனையோ கடைகள் இங்கே இருக்க… நான் ஏன் திரு.மணிகண்டனின் கடைக்கு செல்லவேண்டும்? இத்தனைக்கும் மணிகண்டனை எனக்கு முன்னர் பின்னர் தெரியாது. அவர் கடைக்கு பக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று நான்கு கடைகள் இருக்கிறதே… அந்த கடைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு ஏன் மணிகண்டனின் கடைக்கு செல்லவேண்டும்? இத்தனைக்கும் சமயச் சின்னங்கள் எல்லாம் அணிந்துகொண்டு மணிகண்டன் பக்தி பழமாக காட்சியளிக்கவில்லை. வெகு சாதாரணமாகத் தான் காட்சியளித்தார். அப்படியிருக்க அவரிடம் நம்மை அனுப்பியது யார்? வேறு யார்…. இந்த பதிவின் நாயகன் குன்றத்தூர் வாழ் குமரன் தான்! நமது புஷ்ப கைங்கரியத்துக்கு நிரந்தரமாக ஒரு நபரை காட்டியதோடல்லாமல் நமது தொண்டில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் ஒரு நபரையல்லவா காட்டியிருக்கிறான் குமரன்!)

மாலை மற்றும் உதிரிப்பூக்கள் இரண்டையும் வண்டியில் வைத்துக்கொண்டு நேரே குன்றத்தூர் நோக்கி பைக்கை விரட்டினேன். ஆற்காடு சாலை போக்குவரத்தில் ஊர்ந்து குன்றத்தூர் சென்றடைய ஒரு மணிநேரத்துக்கு மேலானது.

நாம் மலைக்கு போகும் நேரம் சரியாக மாங்கல்ய தாரணம் நடந்து கொண்டிருந்தது. கெட்டிமேளம் முழங்க முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்துகொண்டிருந்தது.

DSC05550
சுப்ரமணியசுவாமி திருக்கல்யாணத்தை காண வந்த கூட்டம்

 

கோவிலில் கூட்டமென்றால் கூட்டம் அப்படியொரு கூட்டம். எப்படியும் ஒரு 2000 பேருக்கு மேல் இருப்பார்கள். கூட்டத்தில் புகைப்படமெடுக்க மிகவும் சிரமமாக இருந்தது.

DSC05555

கூட்டம் எப்போ கலையுறது… நாம எப்போ இந்த பூக்களையும் மாலையையும் குருக்கள் கிட்டே கொடுக்கிறது? என்று மலைப்பாக இருந்தது. அவரை நெருங்கவே முடியாத அளவுக்கு கூட்டம்.  திருமணத்தை முன்னிட்டு அன்னதானம் வேறு நடந்துகொண்டிருந்தபடியால், எங்கு பார்த்தாலும் தலைகள் தான்.

கைகளில் பூக்களையும் மாலைகளையும் வைத்துகொண்டு புகைப்படமெடுக்க தான் சிரமாக இருந்தது.

ஒரு ஓரத்தில் – சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணத்துக்கு மங்கள வாத்திய கச்சேரி நடைபெற்றுகொண்டிருந்தது. அங்கு சென்று நாதஸ்வர மிருதங்க இசையை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தேன்.

DSC05559

கொஞ்ச நேரத்தில் மைக்கில் ஒரு அறிவிப்பு வெளியானது.

“சுவாமி திருக்கல்யாணம் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சதும், மூலஸ்தானத்துல சுவாமி முன்னாடி வெச்சி எல்லா சுமங்கலிகளுக்கும் மாங்கல்ய சரடு, குங்குமம் தரப்படும். வேணுங்கிறவங்க வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவேண்டும். வரிசையில் நிற்பவர்களுக்கே தரப்படும்” என்றார்கள்.

அடுத்தநொடி தாய்மார்கள் பெண்கள் எல்லாரும் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் செஞ்சி கட்டையை தாண்டி குதிச்சி, வரிசையில் இடம் பிடிக்க ஓடினாங்க பாருங்க… பேசாம ஒலிம்பிக்குக்கு இவங்களை அனுப்பி வெச்சா எல்லா பதக்கத்தையும் அள்ளிட்டு வந்துடுவாங்க என்று தோன்றியது. அம்மாடி…

சற்று நேரத்தில் அங்கு கூட்டம் குறைந்தது. அதற்கு பிறகு ரகு ஐயரை சந்தித்து பூக்களையும் மாலைகளையும் கொடுத்தேன். அவர் இருந்த பரபரப்பில் நம்மிடம் எதுவும் பேசமுடியவில்லை. அங்கிருந்த மற்றொரு அர்ச்சகரிடம் அதை கொடுத்துவிட்டு மூலஸ்தானத்திற்கு சென்றுவிட்டார். நான் பாட்டுக்கு ஓரமாக நின்று சுவாமியை ரசித்துக்கொண்டிருந்தேன்.

DSC05587

சற்று நேரத்தில் நாம் கொண்டு வந்த மணிகண்ட மாலைகள் சுவாமிக்கும் வள்ளி, தெய்வானைக்கும் அணிவிக்கப்பட்டது. (பார்க்க புகைப்படம்.) மாலை அணிவிக்கப்பட்டதும் தான் எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

சற்று நேரத்தில் வெளியே வந்த ரகு ஐயர், “அன்னதானம் நடந்துகிட்டுருக்கு. போய் சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அதுக்குளே கூட்டம் குறைஞ்சிடும். ப்ரீயா சாமி தரிசனம் பண்ணலாம்.” என்றார்.

நாம் போய் வரிசையில் நின்று திருமண விருந்தை சாப்பிட்டுவிட்டு வந்தோம். பாக்குமட்டை தட்டில் கேசரி, புளிசாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று கொஞ்சம் தந்தார்கள். பெரிய வீட்டு திருமண விருந்து பிரமாதம் தெரியுமோ? சாப்பிட்டுவிட்டு வர, அதற்குள் கூட்டம் ஓரளவு குறைந்திருந்தது.

சுவாமியை அருகே இருந்து தரிசித்தோம். வள்ளியும், தெய்வானையும் நாம் வாங்கி தந்த புடவையில் ஜொலித்தார்கள். (மூலஸ்தானம் என்பதால் புகைப்படம் எடுக்க முடியாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.).

சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மூவரும் நமது மாலைகளுடன் காட்சியளித்தல்
சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மூவரும் நமது மாலைகளுடன் காட்சியளித்தல்

இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்று எனக்கு வியாழன் மதியம் வரை தெரியாது. திருக்கல்யாண உற்சவத்தன்று வள்ளிக்கும் தெய்வானைக்கும் புடவை எடுத்து தந்தது எத்தனை பெரிய பாக்கியம்?

ரைட் மந்த்ரா சார்பாக மீண்டும் ஒரு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பிரசாதம் தந்து, நமக்கு ஒரு மாலையையும் கொண்டு வந்து சூட்டினார்கள்.

அடுத்தடுத்து இரண்டு நாட்கள் முருகப் பெருமானின் திருமேனியில் பட்ட மாலை நமக்கு கிடைத்தது எந்த பிறவியில் அடியேன் செய்த புண்ணியம் என்று தெரியாது. எல்லாம் அவன் கருணை.

அது மட்டுமா? ஆட்கொண்ட அண்ணல் மற்றுமொரு மிக மிகப் பெரிய பாக்கியத்தை நமக்கு தந்தான். அதை மற்றுமொரு பதிவில் விரிவாக பார்ப்போம். (ஒரே பதிவுல எவ்வளவு தான் அடியேன் சொல்றது ?)

மேற்படி கைங்கரியத்துக்கு தேவையான தொகை அடியேன் பங்கிற்கு தனிப்பட்ட முறையில் அளித்தது போக ரைட்மந்த்ரா கணக்கில் இருந்து தான் எடுத்து தரப்பட்டது.

ரைட்மந்த்ரா வங்கி கணக்கிற்கு நிதி அளித்து நம் பணிகள் செம்மையாக நடைபெற  துணையாய் இருக்கும் நம் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

===================================================

Also check :

இறையருளை பெற இதோ மலரினும் மெல்லிய ஒரு ஷார்ட் கட்!

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

===================================================

[END]

17 thoughts on “கந்தனின் கருணையில் திளைத்து அதில் மூழ்கி எழுந்த ஒரு ஆத்மானுபவம்!

  1. டியர் சுந்தர்ஜி

    உங்கள் பதிவை படித்து மிகவும் பரவசமாகிவிட்டேன். கந்தனின் கருணை உங்கள் மேல் பதிய எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறீர்கள். கந்த சஷ்டி அன்று பெங்களூர் அல்சூர் முருகன் தர்சன் எனக்கு கிடைத்தது.

    உங்களின் சேவை அளப்பர்கரியது. I am proud of being a member of ரைட் manthra

    நன்றி
    உமா

  2. சார்
    மிக்க நன்றி உங்கள் அருளால் நாங்களும் குன்றத்தூர் முருகனை தரிசனம் செய்தோம்

  3. சுந்தர் சார்,

    மிக மிக அருமையான அற்புதமான நெகுழ்சியான பதிவு. உங்களுடன் உறுதுணை நின்ற நம் நண்பர்கள், திரு மணிகண்டன் மற்றும் திரு ரகு ஐயர் அவர்களுக்கு நன்றி.

    இந்த பதிவை படிபதற்கே நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

    நன்றியுடன் அருண்.

  4. சுந்தர்ஜி,

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ன தவம் செய்தோமோ இத்தகைய நிகழ்சிகளை பார்க்க கண் கோடி வேண்டும். படங்கள் அருமை. இந்த நேரத்தில் நான் ஒன்றை கூறியே ஆக வேண்டும்.நான்கு நாள் முன்பு திரு சுவாமிநாதன் அவர்களின் தெய்வத்தின் குரல் உரையாடல் z தமிழ் தொலை காட்சியில் கேட்க நேர்ந்தது. அதில் அவர் அன்று சொன்ன கதையில் திருமதி MS சுப்பலக்ஷ்மி அவர்கள் எங்கு கச்சேரி செய்தாலும் அதில் ஒரு பங்கை மகா பெரியவாளிடம் சமர்ப்பித்து விடுவார் என்றும் MS அவர்கள் மகா பெரியவா நல்ல விழயங்களுக்கு பயன்படுத்தும்போது தன பங்கும் இருக்கட்டுமே என்று இருந்து விடுவார் என்று கூறினார். அப்போது உண்மையிலேயே எனக்கு தாங்கள்தான் கவனத்திற்கு வந்தீர்கள். ரைட் மந்த்ரா மூலம் நாங்கள் கொடுக்கும் பணம் சிறியதோ பெரியதோ எங்களுக்காக ஒவ்வொரு முறையும் தாங்கள் எங்கு சென்றாலும் வேண்டி கொள்வதற்காக நாங்கள் மிகவும் கொடுத்து வைத்து இருகின்றோம்.

    வாழ்க வளமுடன் எந்த ஒரு குறையும் இல்லாமல்.

    நன்றி

  5. அருமை அருமை கந்தசஷ்டி அன்றும் திருகல்யாணம் அன்றும் முருகன் உங்களுக்கு நிறையவே அருள் கொடுத்துள்ளர் . விஸ்வரூப தரிசனம் கொடுத்து நீங்கள் வேண்டுமட்டும் உங்களுக்கு தம்பதி சமேதராய் காட்சி கொடுத்துள்ளார்.
    மணிகண்டன் மாதிரி மனிதர்கள் போற்ற தக்கவர்கள்.
    வியாபார உலகத்தில் இந்த மாதிரி நடந்து கொள்ளும் மனிதர்கள் மிகவும் குறைவு.
    முருகன் வள்ளி தெய்வானையுடன் நம் மாலை அணிந்து காட்சி கொடுப்பது நாங்களே நேரில் பார்ப்பது போல் உள்ளது.
    காக்கும் கடவுள் முருகன். நம் தீவினை யாவையும் அவர் தன வேல் கொண்டு காத்து அருள் புரிவார்.
    வேலுண்டு வினையில்லை

  6. நாங்களும் இந்த பதிவின் மூலம் முருகனை தரிசித்தோம் நன்றிகள் ..

  7. எங்களது பிரார்த்தனை, அந்த அருள்மிகு முருகன் -வள்ளி- தெய்வானை அருளாலும் எங்கள் குரு பாலசுப்ரமணிய சுவாமிகள் அருளாலும் தங்களது திருமணம் கூடிய விரைவில் நடக்க வேண்டும் என்பதுதான்.

    மணிகண்டன் போன்றவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் …சூப்பர் ஸ்டார்ஸ் …

    1. மிக்க நன்றி சார்.

      தங்கள் ஆசியும் வாழ்த்துக்களும் நிச்சயம் குருவருளால் ஈடேறும் என்று நம்புகிறேன்.

      – சுந்தர்

  8. டியர் சுந்தர்,

    இப்ப தான் இந்த ஆர்ட்டிக்கிள் படிச்சேன். மிகவும் பிரமாதம். ஒரு நிமிடம் மனதில் வேண்டிகொண்டேன். என்னவென்றால் முருகன் கல்யாணத்தை கண்ட இந்த அன்பு நண்பர் சுந்தர்க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டு என்று. கண்டிப்பாக என்ன பிரதனையை அந்த முருகர் நிறேவேடுர்வர் என்று நம்புகிறேன்.
    நன்றி,
    எஸ்.நாராயணன், குரோம்பேட்டை

  9. மிக அருமையான பதிவு.தங்களால் முருகனை மனம் குளிர தரிசித்தோம்.மிக்க நன்றி.

  10. மிக நீண்ட பதிவு தான் ,ஆனால் எங்களையும் உடன் அழைத்து கொண்டு பயணம் செய்து,அதில் வெற்றியும் கண்டு விட்டர்கள்.அதற்காக எனது முதல் பாராட்டுதலை தெரிவித்துகொள்கிறேன் .தாங்கள் கண்ட தரிசனத்தை இந்த உலகமே,இந்த பதிவின் மூலம் கண்டுகளிக்கிறது .பகைபடங்கள் அருமை ,சரியான இடங்களில் பொருந்திஉல்லது மிகசிறப்பு .அந்தமுகப்பெருமான் மணிகண்டன் உருவத்தில் நமக்கு அறிமுகபடுத்தி உள்ளார்.நிச்சயம் நமது வாசகர்கள் அவர்களுக்கு நல்லதொரு அறிமுகத்தை அளிப்பார்கள் .திருவள்ளுவர் குருகுல மாணவர்களுக்கு அறுசுவை விருந்து அளித்து முருகப்பெருமான் திருமணத்தை ,ஏந்த குறையும் இல்லாமல் கந்தசஷ்டி நம் தளம் சார்பாக சிறப்பாக முடிந்துள்ளது .

    “ஒம்சரவனபவ ”
    “எல்லாம் முருகனருள் அனைவருக்கும் கிடைத்துள்ளது” .
    வணக்கத்துடன்,
    -மனோகர்

  11. சுக்கை மிஞ்சிய மருந்து இல்லை. சுப்ரமணிய சுவாமியை மிஞ்சிய தெய்வம் இல்லை. இது ஆன்றோர் வாக்கு. சத்யமான உண்மை.

    மோகன் முருகப்ரியன்.

  12. அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருகோவிலில் விஸ்வரூப தரிசன நேரம் தங்களுக்கு தெரியுமா?

  13. சுந்தர் ஜி,
    நீண்ட பதிவு. ஆனால் மிகச் சிறந்த பதிவு. நேரடியாக குன்றத்தூர் குமரனை தரிசனம் செய்தது போலே இருந்தது. புண்ணியாத்மா நீங்கள். வாழ்த்துக்கள்.
    எனக்கு மாடம்பக்கம் அருள்மிகு தேனுபுரிஸ்வரர் ஆலயத்தில் முருக வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பின்னர் தேனுபுரீஸ்வறரை தரிசனம் செயும்போது, திரு கணேஷ் அவர்களின் அம்மாவிற்காக கண்களை மூடி வேண்டும்போது கருவறை பூசைலிருந்து ஒற்றை மணி ஓசை கேட்டது, மிகவும் திருப்தியாக இருந்தது. அம்மா அவர்கள் விரைவாக குணமடைய எல்லாம்வல்ல இறைவன் கருணை புரிவான்.
    மறுநாள் திருத்தணி முருகனை கண்டு உள்ளம் பூரித்தேன்.
    மிகவும் மகிச்சியான வாரம்.

  14. இன்று (சனிக்கிழமை நவம்பர் 30, 2013) எனது தகப்பனாருக்கு மாசாந்திர திதி. வாழை இலை வாங்க வடபழனி மார்கெட் போயிருந்தேன். மணிகண்டன் இல்லை. அவரின் தம்பி இருந்தார். வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *