நகைச்சுவை என்கிற பெயரில் இன்று எதை எதையோ ரசிக்கிற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஆனால், கலைவாணர் சிரிக்கவைத்து சிந்திக்கவைத்தவர். விரசமில்லாத தரமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர். தன்னை நாடி வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாத கொடை வள்ளல். வாழும் கர்ணனாய் விளங்கியவர். வறுமையில் சிக்கி இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கூட அவரை நாடி வந்தவர்களுக்கு அள்ளி வழங்கிய வள்ளல். அதுமட்டுமல்ல திரையுலகில் இருந்தபோதும் கடைசி வரை ஏகபத்தினி விரதனாக திகழ்ந்தவர்.
மகா பெரியவா கூட இது பற்றி கூறியதாக சுப்பு ஆறுமுகம் அவர்கள் கல்கியில் ‘அறிவே அருளே அமுதே’ தொடரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கு எப்படி ஒரு நாத்திகவாதியைப் பற்றி பேசலாம்?
ஒரு முறை காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நூறு ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க காஞ்சி மடத்திலிருந்து ஏற்பாடு செயப்பட்டிருந்தது. அங்கே சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கு கதை சொல்ல ஸ்ரீமடத்திலிருந்து உத்தரவானது.
கதை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, மகா பெரியவா அங்கு வந்து விட்டார். அவரை நமஸ்கரித்துவிட்டு, சுப்பு ஆறுமுகம் கதை சொல்ல ஆரம்பித்தார். கதை சொல்கிறபோது, அவர் கூறிய ஒரு விஷயம் பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
நம் நாட்டின் பெருமையை அவர் பேச்சினூடேயே குறிப்பிட்ட போது “ஒரு நாட்டின் வளம் என்பது அங்கே உள்ள இயற்கை வளமும், பூகோள வளமும் மட்டுமில்லை; இங்கே பிறந்த மேதைகளும் கூட தேசத்துக்கு வளம்தான்” என்று குறிப்பிட்டார்.
அப்போது இந்த தேசத்துக்குப் பெருமை சேர்த்த மேதைகளுடைய பெயர்களை பட்டியலைக் கூறிக்கொன்டே வந்தவர் வள்ளுவர், கம்பர், வள்ளலார், பாரதியார் என்று பெரிய பட்டியலை சொல்லிக் கொண்டே வந்து, கடைசியாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரையும் சொன்னார். என்.எஸ்.கே. பெயரைச் சொன்னது, கோவில் அறங்காவலர் குழு தலைவரை கோபப்படுத்திவிட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும், “அதெப்படி, கோவில் நிகழ்ச்சியில், நாஸ்திகரான என்.எஸ்.கிருஷ்ணனைப் புகழ்ந்து சொல்லலாம்?” என்று சுப்பு அவர்களிடம் சண்டைக்கு போய்விட்டார். “நான் எப்போதும் மனசில் பட்டதை, தயக்கமில்லாமல் சொல்லிவிடுவேன்; அவர் பெயரை சொன்னதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை” என்று சொன்ன விளக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
மறுநாள் மஹா பெரியவாளை தரிசிக்க மடத்துக்குச் சென்றபோது, சற்றும் எதிர்பாராத வகையில் அவராகவே, “நேத்து என்.எஸ். கிருஷ்ணன் பத்தி நீ சொன்னயோல்லியோ! அவர் கர்ணன் மாதிரி!” என்று சொன்னபோது, ‘சினிமாவில் நகைச்சுவை நடிகரான, பகுத்தறிவுக் கொள்கைக்காரரான என்.எஸ். கிருஷ்ணனை, மஹா பெரியவாள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் ஒரு நல்ல மனிதராக கர்ணனாகவே பார்க்கிறாரே!’ என்று நான் மிகுந்த வியப்புக்கு ஆளானதாக சுப்பு ஆறுமுகம் தெரிவித்தார்.
மகா பெரியவா ஒரு விஷயத்தை பற்றி கூறினால் அதற்கு அப்பீல் உண்டா?
(பெரியவா என்.எஸ்.கே. அவர்களை கர்ணனைப் போல என்று கூறியதில் ஆழ்ந்த பொருள் உண்டு. நல்லவனாய் இருந்தாலும் சேராத இடம்தனிலே செஞ்சோற்றுக் கடனுக்காக சேர்ந்தான் கர்ணன்! எனவே தான் கர்ணனை இங்கே உதாரணமாக குறிப்பிட்டார் பெரியவா!)
******************************************
ஏன் இப்படி பணத்தை கட்டுக்கட்டா வைச்சுட்டு போற?
அன்றைய தினம் என்.எஸ்.கே வீட்டுத் தொலைபேசி விடாமல் அலறிக்கொண்டிருந்து. எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேசிக் கொண்டிருந்தார் என்.எஸ்.கே. எல்லாம் சினிமாவைப் பற்றி அல்ல. அவருக்கிருந்த கடன் தொகைகளைப் பற்றித்தான். மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகள். மறுபடி மறுபடி கடன் பிரச்னை.
வெறுத்துப் போன என்.எஸ்.கே தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினார். வீட்டு வாசலில் வழக்கம்போல் ஒரு கூட்டம் காத்திருந்தது. எல்லோரையும் ஒருமுறை பார்த்தார் என்.எஸ்.கே ஏழை எளியவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளோடு காத்திருந்தனர். அவரைப் பார்த்தும் தர்மப்பிரபு என்று சூழ்ந்து கொண்டார்கள்.
கார் டிரைவர் என்.எஸ்.கேவின் நிலைமையைப் புரிந்துகொண்டு வண்டியை வேகமாக வெளியே விட்டார். அப்போது என்.எஸ்.கே ‘லேனாச் செட்டியார் வீட்டுக்குப் காரை விடு’ என்று சொன்னார். செட்டியார் வீட்டுக்குப் போனதும் அவரிடம் நூறு ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டார். காரை வீட்டுக்குத் திருப்பச் சொன்னார். ஏமாற்றத்தோடு மக்கள் அவருடைய வீட்டு வாசலிலேயே காத்திருந்தனர். அவர் வருவார் என்று தெரிந்தே காத்திருந்தது போல் அவரை வாசலிலேயே வரவேற்றனர். கையில் வைத்திருந்த பணத்தை அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திடீரென ஒருநாள் என்.எஸ்.கேவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அருகில் இருந்த மதுரத்திடம் பேசிய அவர். ‘மதுரம், எவருமே ஐம்பது வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக்கூடாது. இருந்தால் சிரிப்புச் சேவையில் கிழடு தட்டிவிடும். எனவே, நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிடப் போகிறேன். இப்பொழுது எனக்கிருக்கும் மதிப்போடு இறந்துவிடுவது மேலானது!’ என்று சொன்னார்.
கணவர் சொன்னதை கேட்டுக் கொண்டு அமைதியாக எதுவுமே சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்த மதுரத்தைப் பார்த்து, ‘என்ன இப்படிச் சொல்கிறேனே என்று வேதனைப்படுகிறாயா? என் தீர்மானமே சரி… நான் ஐம்பது வயதுக்குள் இறந்துவிடுவேன்!’ என்றார் கிருஷ்ணன்.
தெலுங்குப் படவுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய என்.டி. ராமாராவ் ஆகஸ்ட்15, 1957 அன்று ஒரு கதம்ப நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் என்.எஸ்.கேவும் மதுரமும் ஒரு சிறு நாடகத்தை நடத்தினர். அந்த நாடகம்தான் என்.எஸ்.கேவின் கடைசி நாடகம். அடுத்த நாள் மஞ்சள் காமாலை மற்றும் குலைவீக்க நோயால் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
என்.எஸ்.கேவைப் பற்றி ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. திடீர் திடீரென்று அவர் உடல்நலம் பற்றிய செய்திகள் ஊரையே பரபரப்பாக்கும். பத்திரிகைகள் தம் பங்குக்கு செய்திகளைப் பரப்பின. அவ்வப்போது பல வதந்திகள் வெளிவரும். ஹிந்து நாளிதழ் உட்பட பல ஆங்கில தினசரிகளும் அவருடைய உடல்நலம் பற்றி செய்திகள் வெளியிட்டன.
தினம் தினம் என்.எஸ்.கேவைப் பார்க்க நிறைய பேர் வந்து போனார்கள். திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வந்து நலம் விசாரித்தார்கள். எம்.ஜி.ஆர். ஒருநாள் வந்திருந்தார். நலம் விசாரித்துவிட்டு கிளம்பும்போது என்.எஸ்.கேவின் படுக்கையின்கீழ் தன்னிடமிருந்த பணத்தை வைத்துவிட்டு கிளம்பினார்.
படுக்கையில் சாய்ந்த என்.எஸ்.கேவுக்கு படுக்கையின்கீழ் இருந்த பணக்கட்டு முதுகில் அழுத்தியது. பணத்தைப் பார்த்த அவர், ‘ராமச்சந்திரா, ஏன் இப்படி பணத்தை கட்டுக்கட்டா வைச்சுட்டு போற. சில்லறையா மாத்தி வைச்சுட்டு போ. வர்றவங்களுக்கு கொடுக்க வசதியா இருக்கும்’ என்றார். சொன்னதுபோலவே மருத்துவமனையில் உள்ள பல நோயாளிகளுக்கு உதவிகள் செய்தார்.
திடீரென ஒருநாள் என்.எஸ்.கேவின் உடல்நிலை பலவீனமடைந்து. மருத்துவ சிகிச்சைகள்.எதுவும் பலன் கொடுக்கவில்லை. 30 ஆகஸ்டு 1957 அன்று காலை 11.10 மணிக்கு என்.எஸ்.கே மூச்சு விடுவது உள்ளிட்ட எல்லாவற்றையும் நிறுத்திக்கொண்டார், சிரிப்பு உட்பட!
– திரு.முத்துராமன் எழுதிய ‘என்.எஸ்.கே. – கலைவாணரின் கதை’ நூலில் இருந்து…
=========================================================
Also check from our archives :
சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…
சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?
சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!
இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!
மகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன?
தேவாரம், திருவாசகம், வந்தே மாதரம் – கொடிகாத்த குமரனின் மறுபக்கம்!
“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?
உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!
ஒரு தலைவனின் தகுதி – மகாத்மா காந்தி உணர்த்திய உண்மை!
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
==========================================================
[END]