வரும் 11/01/2014 சனிக்கிழமை அன்று வைகுண்ட ஏகாதசி.
=========================================================
வைகுண்ட ஏகாதசியின் சிறப்பை ஒரு பதிவிற்குள் அடக்குவது என்பது கங்கையை கைக்குள் அடக்குவது போன்றது. இருப்பினும், பல வித மூலங்களை, பத்திரிக்கைகளை ஆராய்ந்து, முக்கியமானதை மட்டும் எடுத்து உங்களுக்கு புரியக்கூடிய எளிய நடையில் தந்திருக்கிறோம்.
நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு முதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் உள்ளத்தில் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.
சொர்க்க வாசல்
மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி அதிகாலை அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளவர்) அந்த நேரத்தை நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
ஏகாதசியின் சிறப்பு
ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும். அனைத்து ஏகாதசியும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் உதய காலத்தில் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று பகல் உண்ணாவிரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப்பலனும் சேர்ந்து கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் ஏகாதசி வந்தாலும், மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமை உண்டு. இது பெரிய ஏகாதசி என்றும் முக்கோட்டி ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. சாதாரணமாகவே ஏகாதசி விரதமே சிறப்பாகப் பேசப்படும் போது மற்றவற்றைக் கடைப்பிடிக்காவிட்டாலும் சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதமாவது கடைப்பிடித்தால் நாராயணனின் நல்லருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வைகுண்ட ஏகாதசி அமைந்த விதத்தையும் அத்திருநாள் திருமால் திருத்தலங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் சற்று அறிவோமா?
ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர். அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார்.
அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து என்றும் வைகுண்ட ஏகாதசி முதல் இராப்பத்து என்றும் இத்திருவிழாவை அழைப்பர்.
இவ்விழா நாள்களில் அர்ச்சாவதாரப் பெருமாள் திருவிழா மண்டபத்தில் பிரதானமாக எழுந்தருளியிருப்பார். அவரைத் தரிசித்த வண்ணமாக வரிசையாக இரண்டு பக்கங்களிலும் ஆழ்வார்கள் மற்றும் வைணவ (குருமார்களும்) ஆசார்யப் பெருமக்களின் திருவுருவங்களுடன் அமர்ந்திருப்பர். இதுபோன்ற காட்சியை இந்த 20நாள்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இவ்விழாவில் பெருமானுக்கு விதவித அலங்காரங்கள் அமைக்கப்படும். இந்த நாள்களில் தமிழ் வேதமான ஆழ்வார்களின் பாசுரங்கள் (4000) பகவத் இராமானுஜர் அமைத்த முறைப்படி அந்தணர்களால் ஓதப்படும். முதல் பத்து நாள்கள் திருமொழித் திருவிழா என்றும் மற்றைய பத்து நாள்கள் திருவாய் மொழித் திருநாள்கள் என்றும் அழைக்கப்படும். இராப்பத்து திருநாளின் கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைந்ததாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் ஐதீகம்.
அன்று ஆழ்வார் கோஷ்டியில் எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர் கைத்தாங்கலாக எடுத்துச் சென்று பெருமாளின் திருவடி அருகில் வைத்து முழுவதுமாக துளசிதளங்களால் மூடிவிடுவார்கள். இது ஆழ்வார் முக்தி அடைந்ததைக் குறிக்கும். பிறகு அர்ச்சகர்கள் பெருமாளிடம் “நம் ஆழ்வாரை உலகின் நன்மை பொருட்டுத் திரும்ப அளிக்க வேண்டுமென வேண்டுவர். பின் பிரார்த்தனை நடக்கும். பெருமாள் நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்கியதாக அர்த்தம். துளசி தளங்களால் மூடப்பட்டிருந்த ஆழ்வாரை கைத்தாங்கலாக எடுத்துச் சென்று ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்த்து வைப்பார்கள்.
இந்தக் கடைசிநாள் வைபவத்திற்கு ஆழ்வார் திருவடி தொழுதல் வைபவம் என்று பெயர். இவ்வைபவங்களைத் தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டத்துக்குச் சென்றவர் யாரும் இல்லையென்பதால் வைகுண்டவாசல் (சுவர்க்க வாசல்) மூடப்பட்டிருந்ததாகவும் பின்பு வைகுண்ட ஏகாதசி நன்னாளான மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம். இந்த வைபவத்தினை முதன் முதலாகத் திருவரங்கத்தில் திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினர் என்பர். பொதுவாக கார்த்திகையில் திருப்பாணாழ்வார் அவதார நன்னாளில் திருமால் திருக்கோவில் மூலவருக்கு தைலக் காப்பு சமர்ப்பிக்கப்படும்.
அதனால் வைகுண்ட ஏகாதசி வரை மூலவர் தரிசனம் கிடைக்காது. வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் சேவை/தரிசனம், உற்ஸவர் சுவர்க்க வாசல் வழியாக எழுந்தருள்வது என்று விசேஷமாக இருக்கும்.
=========================================================
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் வரலாறு
ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு வரலாறு உண்டு. திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும், மகிழ்ச்சியடைந்த ரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ரங்கநாதரும் அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.
இன்னொரு தகவலும் உண்டு.
கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.
உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படிப் பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
=========================================================
விரதமும் பலன்களும்
ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன்களை, நலன்களை தரும் என கூறப்படுகிறது. எந்த மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
சித்திரை ஏகாதசி:
விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும்.
வைகாசி:
கைலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன்.
ஆனி:
சொர்க்கம் செல்லும் பாக்யம்.
ஆடி:
ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம்.
ஆவணி:
குழந்தை பாக்யம் கிடைக்கும். சற்புத்திரர்கள் பிறப்பார்கள். குழந்தைகளின் நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு மலரும்.
புரட்டாசி:
நிம்மதியான வாழ்வு.
ஐப்பசி:
சகல வளங்களும் உண்டாகும்.
கார்த்திகை:
மகிழ்ச்சியான வாழ்வு.
தை:
பித்ரு சாபங்கள் நீங்கி முன்னோர் அருளாசி கிடைக்கும்.
மாசி:
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும்.
பங்குனி:
தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.
=========================================================
ஏகாதசியன்று செய்யக்கூடாதது?
ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
=========================================================
வைகுண்ட ஏகாதசி – எப்போது என்ன செய்யவேண்டும்?
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
ஏகாதசியன்று இரண்டு கடமைகள் முக்கியமானவை. ஒன்று சாப்பிடாமல் உபவாசம் இருப்பது, மற்றொன்று விஷ்ணுவின் பெருமையைக் கூறும் ஹரிகதை கேட்பது. “உபவாசம்’ என்றால் “சாப்பிடாமல் விரதம் இருப்பது’ என்று மட்டுமல்ல.”இதை உப+வாசம் என பிரித்தால் “ஒருவருடன் வசிப்பது’ என்றும் ஒரு பொருள் வரும். அதாவது, “கடவுளுடன் வசிப்பது’, “மனதாலும், உடலாலும் அவன் அருகில் ஒட்டிக் கொள்வது’ என அர்த்தம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வயிற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்ற அடிப்படையில், ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இந்தஇரண்டு நாட்களிலுமே பட்டினி விரதமிருந்து ஆரோக்கியத்தை நமது முன்னோர் பேணினர்.
இந்த விரத நாளில், பக்தியுடன் ஹரி கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ வேண்டும். பிரகலாதன், தன் தாய் கயாதுவின் வயிற்றில் சிசுவாக இருந்த போது, நாரதர் மூலம் விஷ்ணுவின் மகிமையைக் கேட்டே பக்தனாக அவதரித்தான். ஏகாதசியன்று ஹரிகதை கேட்பதும், பஜனை பாடுவதும் அதிகபட்ச புண்ணியபலனைத் தரும்.
=========================================================
சிவபெருமான் கூறிய ஏகாதசி விரத முறை
கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.
மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.
=========================================================
குறிப்பு : வைகுண்ட ஏகாதசியன்று கோ-சம்ரோக்ஷனம் நம் தளம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களிலும் கோ-சாலைகளிலும் நடைபெறும்.
கோதண்டராமர் கோவிலில் தற்செயலாக இது எடுத்த புகைப்படம் தான். கோ-சம்ரோக்ஷனம் செய்தாலே வைகுண்டம் நிச்சயம் என்பது போல, கோமாதா பரமபத வாசலின் முன்னே காட்சி தருகிறாள்….!!
=========================================================
Also check from our archives:
ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!!
அவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது?
[END]
Thank u for your article on Vaikunda Ekadesi. Very nice.
Regards
uma
எல்லாம் பகவான் கிருபை
மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
அன்பு சார்,
மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
அன்புடன்,
ஜீவன்.
கட்டுரை மிக அருமை. வாழ்க வளமுடன். எப்படி தான் இவ்வளவு வேலைகளுக்கு இடையில் இத்தனை பெரிய கட்டுரைகளை எழுதுகிறீர்களோ!!!!!!!!!!! you have very well time management skill.
சுந்தர்ஜி
வைகுண்ட ஏகாதசி விரதம் பற்றிய செய்தி அருமை. மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றிய செய்தி அருமையிலும் அருமை.