Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

print
றைவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், தேவாலயத்தில் இருக்கிறான் என்றெல்லாம் தேடிப் போகும் மக்களில் பெரும்பாலானோர் இறைவன் தங்கள் மனதின் உள்ளே இருக்கிறானா என்று தேடிப் பார்ப்பது போல் தெரியவில்லை. காரணம் உள்ளே நிரப்பியிருக்கும் அந்தக் குப்பை கூளங்களுக்கு இடையில் இறைவன் எங்கே தங்கியிருக்கப் போகிறான் என்ற அறிவார்ந்த சந்தேகமாக இருக்கலாம்.

வீட்டைத் தினமும் கூட்டித் துடைக்கிறோம். அணியும் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொள்கிறோம். தினமும் குளிக்கிறோம். இதெல்லாம் செய்வது கூட அடுத்தவர் பார்வைக்காகவே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. உள்ளத்தை யாரும் பார்ப்பதில்லை என்பதால் அதை பெரும்பாலோர் குப்பையாகவே வைத்திருக்கிறோம்.

மேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்
மேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்

அகங்காரம், பொறாமை, பேராசை, கோபம், வெறுப்பு என்று எத்தனையோ அழுக்குகள் மனதிற்குள் இருக்கிறது. அதைத் துடைத்து எடுப்பதற்குப் பதிலாக அழுக்கின் மேல் அழுக்காக சேர்த்துக் கொண்டே போகிறோம். எத்தனை கால அழுக்குகளைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நம் எல்லாத் துயரங்களுக்கும் இந்த அழுக்குகள் தான் காரணமாக இருக்கின்றது. ஆனால் அதை உணர்வதற்குக் கூட உள்ளத்தில் ஒரு ஊசிமுனை இடமாவது சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் இல்லாதவர்களுக்கு இந்த உண்மை புலப்படாது.

இந்த அழுக்குகளைத் துடைத்தெடுக்க என்ன தான் வழி? தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என்று எத்தனையோ வழிகளைப் பெரியோர்கள் சொல்கிறார்கள். உங்களுக்குப் பொருத்தமான, உங்கள் இயல்பிற்குத் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுங்கள். நாட்பட்ட அழுக்குகளைக் களைவது அத்தனை சுலபமல்ல.

ஆனால் உங்கள் மனத்தை உங்களால் தூய்மைப்படுத்தி வைக்க முடிந்தால் இறைவனைத் தேடி நீங்கள் கோயில்களுக்குப் போக வேண்டாம். உங்களைத் தேடி இறைவன் வருவது உறுதி. இப்போது உள்ளே எட்டிப்பார்த்து சொல்லுங்கள். இறைவன் உள்ளே இருக்கிறானா? இல்லையென்றால் உள்ளத்தை சுத்தம் செய்து இறைவனை வரவழையுங்கள். அந்த இறையானுபவத்தை, அதனால் ஏற்படும் சச்சிதானந்தத்தை உணருங்கள். பின் ஒரு போதும் அந்த அழுக்குகள் உங்களை நெருங்குவதை நீங்கள் சகிக்க மாட்டீர்கள்.  (சிந்தனை உதவி : தினகரன் ஆன்மீக மலர்)

=======================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  பசுக்களை பராமரித்து வரும் திரு.பாலாஜி.

நம்முடைய பிரார்த்தனை கிளபிற்கு தலைமை ஏற்க பிரமுகர்களை நாம் தேர்வு செய்யும்போது, சமூகத்துக்கும் ஆன்மீக உலகிற்கும் அவர்கள் ஆற்றி வரும் தொண்டு தான் அளவுகோலாக கருதப்படுகிறதே தவிர, அவர்கள் எத்தனை பிரபலமானவர்கள் என்பதோ அல்லது எத்தனை பெரிய மனிதர்கள் என்பதோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்
மேற்கு மாம்பலம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்

மிகப் பெரிய தொண்டு செய்து வரும் ஒருவர், தான் செய்துவருவது மிகப் பெரிய தொண்டு என்பதை கூட அறியாமல் இருக்கலாம். அத்தகையோரை அடையாளம் கண்டு, அவர்களது தொண்டை வெளியுலகம் அறியச் செய்து, அவர்களை நம் பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்கச் செய்வதன் மூலம் நமது பிரார்த்தனை பன்மடங்கு பலம் சக்திமிக்கதாக மாறி, இறைவனின் அருள் மழையை நமக்கு நிச்சயம் பொழிவிக்கும் என்பதே நம் எண்ணம். அதையே செயல்படுத்தியும் வருகிறோம்.

நம்மை சுற்றி இத்தனை நல்ல மனிதர்கள், தன்னலமற்ற தொண்டு புரிபவர்கள் இருக்கிறார்கள் என்பதே நமக்கு ஒரு வகையில் பெருமை தான்.

திரு.பாலாஜி அவர்களை பொருத்தவரை, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் ஊழியர். அங்கு பசுக்களை பார்த்துக்கொள்வது அவர் தான். பசுக்களை குளிப்பாட்டுவது, அவைகளுக்கு தீவனம் வைப்பது, கோசாலையை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்தையும் கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்.

நெற்றி நிறைய திருநீறுடன் காணப்படும் இவரைப் பார்த்த கணமே நமது பாவங்கள் அகலும் என்பது உறுதி.

மற்ற எந்த இடத்தையும் விட பசுக்கள் இங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை நேரில் பார்க்கும்போது நீங்களே அறிந்துகொள்வீர்கள்.

DSCN0074

சமீபத்தில் அங்கு துர்கா என்னும் பசுவிற்கு வேலன் என்கிற கன்று பிறந்தது குறித்தும், தீபாவளியை முன்னிட்டு திரு.பாலாஜி அவர்களுக்கும் மற்றொரு ஊழியர் திரு.குரு அவர்களுக்கும் நம் தளம் சார்பாக வஸ்திர தானம் அளித்ததும் நினைவிருக்கலாம்.

மாட்டுப் பொங்கல் வருவதால் பசுக்களுக்கு தீவனம் மற்றும் இதர தேவைகளை குறித்து விசாரித்தறிய நேற்றைக்கு நாம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது திரு.பாலாஜி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் இந்த வார பிரார்த்தனைக்கு அவரை தலைமை ஏற்கச்செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. (அந்த நேரம் கணபதி சன்னதியின் மணியும் ஒலித்தது!)

தொடர்ந்து திரு.பாலாஜி அவர்களிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இந்த வாரம் தலைமை ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

“நான் அத்தனை பெரிய ஆள் இல்லை சார்…!” என்று அவர் சங்கோஜத்துடன் மறுத்தாலும், பசுக்களை போஷித்து வரும் அவரின் தொண்டின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, “இந்த வாரம் நீங்கள் தலைமை ஏற்றால் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைவோம்” என்று எடுத்துக்கூறி அவரை ஒப்புக்கொள்ள வைத்தோம்.

 புகைப்படத்தில் முன்னே இருக்கும் கன்று வேறு யாருமல்ல... நம்ம துர்காவின் சுட்டிப் பையன் வேலன் தான்!

புகைப்படத்தில் முன்னே இருக்கும் கன்று வேறு யாருமல்ல… நம்ம துர்காவின் சுட்டிப் பையன் வேலன் தான்!

பசுக்களை போஷித்து அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் திரு.பாலாஜி அவர்களின் தொண்டின் மகத்துவம் அளவிடற்கரியது. பசுக்களுடன் இருப்பது என்பதே மிகப் பெரிய பாக்கியங்களுள் ஒன்று எனும்போது அவற்றை போஷித்து வரும் இவரின் தொண்டின் பெருமையை சொல்லவும் வேண்டுமா என்ன? நம் அம்பிகை வளர்த்த அறமல்லவா இது….!

இந்த வார பிரார்த்தனையை பசு கொட்டிலிலேயே செய்வதாக கூறியிருக்கிறார். பசு கொட்டகையில் செய்யப்படும் பிரார்த்தனை மந்திர உச்சாடனம் லட்சம் மடங்கு பலன் தர வல்லது.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைக்காக மட்டுமின்றி, இதற்கு முன் பிரார்த்தனை சமர்பித்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.

நமது பிரார்த்தனை கிளப்பின் மகத்துவத்தை பன்மடங்கு கூட்டிய திரு.பாலாஜி அவர்களுக்கு நம் நன்றி.

=======================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா?

இவர் ஏற்கனவே நமது பிரார்த்தனை கிளப்பில் ஒரு முறை கோரிக்கை சமர்பித்திருக்கிறார். (கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?)

புற்றுநோயால் தவிக்கும் மகள் – தாயின் வேதனை

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்.

என் மகளின் பெயர் சிவசக்தி. வயது 35. அவளுக்கு வாயில் தொண்டை அருகே புற்றுநோய் ஏற்பட்டு தற்போது மிகவும் சிரமப்படுகிறாள். அவள் சிரமப்படுவதை ஒரு தாயாக என்னால் பார்க்க முடியவில்லை. 12 வயதில் அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவளுக்கு தகுந்த சிகிச்சை முறைகளை  ஆலோசித்து வருகிறேன். எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க இயலவில்லை. அவளுக்கு விரைவில் புற்றுநோய்  பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

– ராணி, கோவை

=======================================================================

சமீபத்தில் அவரிடம் பேசியபோது, புற்றுநோயின் தாக்கம் மிகத் தீவிரமாக இருப்பதாக கூறி, டாக்டர் தனது மகளுக்கு நாள் குறித்துவிட்டதாகவும், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் கூறினார். ‘பட்ட காலிலே படும்’ என்பதற்கேற்ப, ஏற்கனவே பெற்ற மகள் மிகப் பெரும் துன்பத்தை அனுபவித்துவரும் சூழ்நிலையில், குடும்பத்தில் வேறு விதமான பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாகவும் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறி கதறி அழுதார்.

நம்மையெல்லாம் இறைவன் எந்தளவு சௌகரியத்தொடு வைத்திருக்கிறான் என்பதை அவரிடம் பேசினால் புரிந்துகொள்வீர்கள். உண்மையில் அவர் நிலை யாருக்கும் வரக்கூடாது.

“அம்மா… கவலைவேண்டாம்… இந்த வாரம் மீண்டும் உங்கள் பிரார்த்தனையை நமது கிளப்பில் வைக்கிறோம். உங்களது பிரார்த்தனை மட்டுமே இந்த வாரம் இடம்பெறும். மிகச் சிறப்பான பவித்திரம் மிக்க ஒருவரை இந்த வாரம் தேர்வு செய்ய  முயற்சிக்கிறேன். மஹா பெரியவர் அதற்கு உதவுவார். நிச்சயம் உங்களது கோரிக்கை இம்முறை நிறைவேறும். உங்களது துன்பம் யாவும் முடிவுக்கு வந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பம் மூலம் உங்கள் கர்மா யாவும் கழிந்தது. சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றது கூட, உங்கள் நன்மைக்கே. அவற்றை BLESSING IN DISGUISE என்று கூறுவார்கள். கவலைவேண்டாம்… இனி எல்லாம் சுகமே! மஹா பெரியவரின் நூல் ஒன்றை உங்களுக்கு அனுப்புகிறோம். அதை தவறாமல் படித்து வாருங்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்” என்று பலவாறாக ஆறுதல் கூறியிருக்கிறோம்.

=======================================================================

இந்த வார பொது பிரார்த்தனை :

பருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்களும் விவசாயிகளின் வாழ்வும்

இந்த ஆண்டு தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் போதிய நீரின்றி கருகிவிட்டன. வடகிழக்கு பருவ மழையை நம்பி சம்பா, பருத்தி, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட்ட விவசாயிகள் தண்ணீருக்கு பதில், தங்கள் கண்ணீரையே  பயிர்களுக்கு ஊற்றி வருகிறார்கள்.

Dry Samba

ஏற்கனவே மின்வெட்டு, உரவிலை உயர்வு, ஆள் பற்றாக்குறை என பல பிரச்னைகளை நம் விவசாயிகள் சந்தித்துவரும் சூழலில் பருவ மழையும் தன் பங்கிற்கு காலை வாரிவிட்டுள்ளதால் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர் நம் விவசாயிகள். நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் என்பதால் அவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

monsoon_failsநம் நாட்டில் குண்டூசி விற்பவர்கள் கூட தங்கள் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் சூழ்நிலையில், தங்கள் பொருளுக்கு தாங்கள் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்வதில்லை. (விவசாயப் பொருட்களுக்கு அரசு தான் விலை நிர்ணயம் செய்யும்!) ஆனாலும் அறுவடையின் போது விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைப்பதில்லை.

பருவமழை வேண்டிய அளவு இனி தவறாமல் பொழிந்து விவாசாயம் செழிக்கவேண்டும். தானிய உற்பத்தி பெருகவேண்டும். விவசாயி வயிறு குளிரவேண்டும், அவன் வாழ்வு சிறக்க வேண்டும் என்று திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (குறள் 1032)

(குறளின் பொருளை கூகுள் செய்து பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம்!)

=======================================================================

ராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜனவரி 12,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சுற்றுச் சூழல் ஆர்வலர், பசுமைக் காவலர் திரு.முல்லைவனம்.

3 thoughts on “எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

  1. சகோதரா சுந்தர்
    உங்களின் முடிவு மிக சரியானது என்று ஆண்டவனே மணி அடித்து ஒப்புதல் கூறி விட்டான்…நல்லோரை எப்பொழுதும் தெய்வங்கள் ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கும்….உங்களின் நல்ல எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறி….பிரச்னை கொண்டவர்களின் அல்லல் அனைத்தும் பட்டென தீர மகா பெரியவாவின் அருள் கோரி நானும் பிராத்தனையில் பங்கு கொள்கிறேன்…வாழ்க வளமுடன்… _/|\_

  2. ராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.

    நோய்கள் விலகவும் – நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்

    ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
    தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
    சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
    த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
    ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
    ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

    தன்வந்திரி ஸ்லோகம்

    சதுர்புஜம் பீத வஸ்திரம்
    ஸர்வாலங்கார சோபிதம்
    த்யோயேத் தன்வந்த்ரிம்
    தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

    மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பசுக்களை பராமரித்து வரும் கோவில் ஊழியர் திரு.பாலாஜி.அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்

    நன்றி
    உமா

  3. கணபதி சன்னதியின் மணி அடித்து உத்தரவு கொடுத்துள்ள திரு, பாலாஜி அவர்கள் செய்யும் தொண்டு எளிமையாக இருந்தாலும் மிகவும் புண்ணியம் கொண்டது.
    அவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பது மிகவும் பொருந்தும்.
    ராணி அம்மாள் அவர்களின் மகள் சிவசக்திக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், பல்வேறு குடும்பப் பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் அக்குடும்பமும், ராணி அம்மாள் அவர்களும் பிரச்னைகள் நீங்கி சௌக்கியமாக சந்தோஷத்துடன் வாழவும், பருவமழை தவறாது பொழிந்து, விவாசாயம் செழிக்கவும், தானிய உற்பத்தி பெருகவும், உழுபவர்களுக்கு அவர்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.
    பசு கொட்டிலில் செய்யப்படும் எந்த ஒரு செயலுக்கும் பலன் அதிகம்.கண்டிப்பாக ராணி அம்மாள் அவர்களுக்கு நல்லதொரு பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *