சமீபத்தில் அனுமத் ஜெயந்தி பதிவுக்காக காக்களூர் சென்றிருந்தோம் நினைவிருக்கிறதா? காக்களூர் தவிர திருவெண்பாக்கம், நம்பாக்கம் ஆகிய தலங்களுக்கும் அன்று சென்றிருந்தோம்.
அம்மா திருவெண்பாக்கம் மின்னொளி அம்மையை தரிசிக்கவேண்டும் என்று நீண்டநாட்களாக கேட்டு வந்ததால் ஒரு கால் டாக்ஸி புக் செய்து அம்மாவை அழைத்துக்கொண்டு காக்களூர் புறப்பட்டோம்.
அப்படியே திருவெண்பாக்கம் சென்று ஊன்றீஸ்வரரை தரிசித்துவிட்டு நம்பாக்கம் செல்வதாக பிளான்.
திருவெண்பாக்கத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் நம்பாக்கம் கிராமத்தில் உள்ளது மரகதாம்பாள் சமேத அருள்மிகு மாந்தீஸ்வரர் திருக்கோவில். மிகவும் பழமையான இக்கோவில் இராமபிரானின் தந்தை தசரதர் பூஜித்த கோவில் என்று கூறப்படுகிறது. மேலும் சனீஸ்வரரின் மகன் மாந்தி வழிபட்ட தலமாதலால் மாந்தீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
திருவெண்பாக்கத்திலிருந்து நம்பாக்கம் பல கி.மீ. உள்ளே செல்லவேண்டும். உடன் குருக்கள் மகன் வேதம் படித்த சனத்குமாரன் வந்தார். இது போன்ற மோசமான சாலை தமிழகத்தில் எங்கும் இருக்க முடியாது. ஒரு கட்டத்துக்குள் மேல் டிரைவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார். (புகைப்படங்கள் சும்மா ஒப்புக்கு அளித்திருக்கிறோம். ஆக்சுவல் சாலை இன்னும் மோசமாக இருக்கும்.)
“ரோடு மோசமாயிருக்கும்னு சொல்லியிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன். வண்டி டயர் போய்டுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்” என்று முனக ஆரம்பித்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஐந்து கி.மீ.ருக்கு சாலை அத்தனை மோசம். நம்முடன் வந்த சனத்குமாரன் (இவர்கள் தான் அந்தக் கோவிலை பார்த்துக்கொள்வது) “இங்கு சாலை போட்டே ரெண்டு மாமாங்கம் ஆகுதுண்ணா” என்றார். டிரைவருக்கு மேலும் டென்ஷன் அதிகரித்தது.
“இதோ முடிஞ்சிடும்… ஊர் வந்துடும்… இதோ ரோடு முடிஞ்சிடும்… ஊர் வந்துவிடும்” என்று சொல்லி சொல்லி டிரைவரை சமாதானப்படுத்தியபடி, அவரிடம் மன்னிப்பு கேட்டபடி நாமும் ஒருவித சங்கடத்துடன் அமர்ந்துகொண்டிருந்தோம்.
அனுமார் வால் போல அந்த சாலை முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் டிரைவர் வண்டியை நகர்த்தாமல் நிறுத்திவிட்டார்.
“இதுக்கு மேலே வண்டியை ஓட்ட முடியாது சார்” என்று சொல்லிவிடுவாரோ என்ற திகிலில் நாம் அமர்ந்துகொண்டிருந்தோம்.
“அப்பா… மாந்தீஸ்வரா… உன் தலத்தை பற்றி வெளியுலகிற்கு சொல்லவே இவ்ளோ சிரமப்பட்டு வர்றோம். எப்படியாவது எங்களை பத்திரமாக கொண்டு சேர்த்துடு…” என்று பிரார்த்தித்தபடி அமர்ந்திருந்தோம். (*மாந்தீஸ்வரர் குறித்து விரைவில் விரிவான பதிவு வரும்).
“இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான் சார்… அதுக்கப்புறம் ரோடு நல்லா இருக்கும். ஊர் வந்துடும்….” என்று சனத்குமாரன் சொல்ல, டிரைவர் நம் மேல் காட்டவேண்டிய கோபத்தை அவர் மேல் காட்டினார்.
“அப்போலேர்ந்து இப்படித் தான் சொல்லிக்கிட்டுருக்கீங்க… ஊர் தான் வந்தமாதிரி தெரியலே” என்றார் கடுப்புடன்.

ஒரு வழியாக நம்பாக்கம் அடைந்து மாந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்துவிட்டு தரிசனம் முடித்துவிட்டு கோவிலுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சர்வே செய்துவிட்டு வந்தோம்.
திரும்ப வரும்போது திருவள்ளூர் அருகே டிரைவர் வண்டிக்கு டீசல் போட நம்மிடம் ரூ.500/- கேட்டார். கொடுத்தோம்.
திருவள்ளூரில் ஒரு ஹோட்டலில் அனைவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு நல்லபடியாக டிரிப் முடிந்து அன்று மாலை 4.00 மணியளவில் வீட்டுக்கு திரும்பியவுடன் டிரிப்பை குளோஸ் செய்து டாக்ஸி பில்லை செட்டில் செய்துவிட்டு வீட்டுக்குள் வந்தோம்.
சுமார் அரைமணிநேரம் கழித்து தான் நினைவுக்கு வந்தது அது.
டீசல் அட்வான்ஸாக கொடுத்த ஐநூறு ரூபாயை கழிக்க மறந்தேவிட்டோம். பதறிப்போய்விட்டோம்.
டிரைவரை தொடர்பு கொண்டால் ‘நாட் ரீச்சபிள்’ என்று வந்தது.
அம்மாவிடம் விஷயத்தை சொல்லி அவர்களை கடிந்துகொண்டோம். “ஏன்ம்மா… டீசலுக்கு நான் பணம் கொடுக்கும்போது நீ தான் பார்த்தேயில்லே ஞாபகப்படுத்தியிருக்கக்கூடாதா??”
“ஆமாப்பா… அதை நானும் மறந்துட்டேன்… உன் மேலயும் தப்பு இருக்கு அந்த டிரைவர் மேலயும் தப்பிருக்கு… அந்தாளும் கொடுத்தவுடனே வாங்கிட்டு போய்ட்டார்.. டீசல் பணத்தை கழிச்சிக்கோங்கன்னு சொல்லியிருக்கனும்ல…” அம்மா தன் பங்குக்கு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அடுத்து சிலமுறை முயற்சித்து டிரைவரை எப்படியோ மொபைலில் பிடித்துவிட்டோம். பதட்டத்துடன், “சார்…சார்… இப்போ டிராப் பண்ணிட்டு போனீங்களே… சுந்தர் பேசுறேன்… டீசலுக்கு கொடுத்த ஐந்நூறு ரூபாயை FARE ல கழிக்க மறந்துட்டேன்…”
அவரும் “ஆமாம் சார்… ஸாரி நானும் மறந்துட்டேன்” என்றார்.
“இப்போ எங்கேயிருக்கீங்க? நான் உடனே வர்றேன்”
சற்று PAUSE செய்தவர்…….. “நான் வீட்டுக்கு வந்துட்டேன் சார்… இனிமே காலையிலே தான் வண்டி எடுப்பேன். உங்க அக்கவுண்ட் நம்பர் கொடுங்க. அதுல போட்டுடுறேன்…”

“சார்… தப்பா நினைக்காதீங்க… எனக்கு இந்த weekend செலவுக்கு அதான்… கொஞ்சம் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. நான் வேண்ணா உங்க இடத்துக்கு நேர்ல வர்றேன்”
நமக்கு என்ன பயம் என்றால் பணத்தை அவர் கொடுப்பாரா இல்லே ஏதேனும் சாக்கு சொல்லி மறுத்துவிடுவாரா என்று. “வண்டியோட டயர் அடிவாங்கி உங்களால எனக்கு ஏகப்பட்ட செலவு சார்… அதுனால கொடுக்க முடியாது” என்று சொல்லிவிடுவாரோ என்று பயம்.
இந்த காலத்தில் சிலரிடம் பணத்தை கொடுத்தால் அது முதலை வாய்க்குள் விழுந்த வெள்ளிக்கிண்ணத்தை எடுப்பது போலத் தான். கிண்ணத்தை விடுங்க கை பத்திரமா வந்தா போதும் என்கிற நிலை தான்.
அந்த ஐநூறு ரூபாய் நமக்கு எவ்வள்ளவு முக்கியம் என்பதை அவரிடம் எடுத்துச் சொன்னோம். நம்மை அற்பத்தனமாக வேறு நினைத்துவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக பேசவேண்டியிருந்தது.
“சார்… ஒரு ஐநூறு ரூபாய்க்கு நம்பமாட்டீங்களா? உங்க அக்கவுண்டை கொடுங்க சார்… பணத்தை அதுல போடுறேன்…” என்றார் சற்று டென்ஷனாக.
“சார்… பேங்க்ல கேஷ் கவுண்டர்ல டெப்பாசிட் பண்ணீங்கனா அதுக்கு சர்வீஸ் டாக்ஸ் அது இதுன்னு ஏதாவது போட்டு, எனக்கு 500/- ரூபாய்க்கு 350/- தான் வரும். அதான் நேர்லேயே வாங்கிக்கிறேன்னு சொல்றேன்”
“நான் நெட் பேங்கிங்ல ட்ரான்ஸ்பர் பண்றேன் சார்….”
“அதுவும் PAYEE ADD பண்ணினா மினிமம் 8 ஹ…வ….ர்…ஸ் ஆகுமே சார்…” …… இழுத்தோம்.
“அப்போ நாளைக்கு ட்ரான்ஸ்பர் பண்றேனே”
இதற்கு மேல் இவரிடம் பேசுவது வீண் என்று தோன்றியது.
இவர் தவறை ஒப்புக்கொண்டு, பணத்தை ரிட்டர்ன் செய்வதாக சொல்லியதே பெரிய விஷயம் அல்லவா? சரி… ஒரு நாள் பொறுத்திருப்போம். என்ன செய்வது நேரம் சரியில்லை என்று எண்ணிக்கொண்டோம்.
“உங்களுக்கு என் அக்கவுன்ட் நம்பரை எஸ்.எம்.எஸ். பண்றேன் சார்… நாளைக்கு மறக்காம பண்ணிடுங்க….” என்றபடி காலை துண்டித்தோம்.
ஆனால் நமக்குத் தான் வேலை ஓடவில்லை. ஒருவேளை தரவில்லை என்றால் ஃபாஸ்ட் டிராக்குக்கு போன் செய்து புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
அதற்கு பிறகு அன்று மாலை அலுவலகம் சென்று அனுமத் ஜெயந்தி பதிவை தயார் செய்யவேண்டும். இந்த மனநிலையில் நம்மால் எப்படி அமைதியாக இருக்கமுடியும். நம் நிம்மதியை மனஅமைதியை அந்த ஐநூறு ரூபாய் மீது ஏற்றி வைத்திருப்பதால் அது திரும்ப கிடைக்கும் வரை மகிழ்ச்சி என்பது கிடைக்காது. (இந்த மனப்பான்மை தான் தவறு என்று முன்பு பதிவுகளில் சொல்லியிருக்கிறோம். சில சமயம், நம்மால் கூட அதை பின்பற்றமுடிவதில்லை. என்ன செய்வது?)
அம்மாவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டு அலுவலகம் புறப்பட்டோம்.
“ஒரு ரூபாய் சம்பாதிக்க எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டியிருக்கு… மூளையை எப்படியெல்லாம் கசக்கவேண்டியிருக்கு… இப்படி ஐநூறு ரூபாய் சுளையா போய்டுச்சே…” என்று நமக்குள் புலம்பியபடி இருந்தோம்.
என்னதான் ஊருக்கு சொன்னாலும், நமக்கு என்று வரும்போது அதை பின்பற்றுவது கடினம். கூடுமானவரை முயற்சித்து வருகிறோம். சிலசமயம் இடறிவிடுவோம். அத்தகு சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.
அம்மா அதை கவனித்தார்கள்.
“என்ன நீ இப்படி இருக்கே… ‘உழைச்சு சம்பாதிச்ச பணம். எங்கேயும் போகாது. அது நிச்சயம் என்னிடம் திரும்ப வரும். நல்ல விஷயத்திற்கு அது பயன்படும் என்று நினை. நிச்சயம் வரும். வராது வராது அவ்ளோ தான் என்றால் அப்படித் தான் நடக்கும்… பாஸிட்டிவாக நினைச்சுக்கோயேன்” என்றார்.
ஒரு மனிதன் தன் தாயிடம் கற்றுகொள்ளாததையா பள்ளிகளிலும் சமூகத்திலும் கற்றுகொண்டுவிடப்போகிறான்?
“சரி… அப்படியே நினைச்சுக்குறேன்மா” என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அம்மா சொன்னதை மனதில் ஓடவிட்டோம்.
இனி நம் கையில் எதுவுமில்லை – அலுவலகம் புறப்பட்டோம்.
நேரம் அப்போது மாலை 5.30 pm.
ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். போரூர் சிக்னலை தாண்டும் போது சம்பந்தப்பட்ட டிரைவரிடம் இருந்து ஃபோன். “சார்… உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணியிருக்கேன் சார். பார்த்துட்டு கன்பர்ம் பண்ணுங்க” என்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…” என்றோம்.
அடுத்தநொடி நமது அக்கவுண்ட்டில் ஐநூறு ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டதாக எஸ்.எம்.எஸ். வந்தது.
நமக்கு ஆச்சரியம். அவரை மறுபடியும் அழைத்து நன்றி சொன்னோம். தனது நெட்பேங்கிங்கில் QUICK TRANSFER என்கிற ஆப்ஷனை பயன்படுத்தி பணம் அனுப்பியதாக சொன்னார். (அநேகமாக SBI யாக இருக்கவேண்டும். அதில் தான் இப்படியொரு வசதி இருக்கிறது.)
“சாரி சார்… கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்…” என்று நமது முந்தைய அணுகுமுறை குறித்து சாரி சொன்னோம்.
அதற்கு அவர் சொன்னதை கேட்டு நமக்கு ஆச்சரியமாக இருந்தது.
“உழைச்சு சம்பாதிச்ச பணம். எங்கேயும் போகாது சார்…” என்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
பணபரிமாற்றங்களின் போது நேர்மறை சிந்தனை மிகவும் முக்கியம். JUST சிந்தனையை மாற்றுவதால் நாம் இழக்கப்போவது ஒன்றுமில்லை. ஆனால், அதனால் கிடைக்க கூடியது? சற்று யோசித்துப் பாருங்கள்.
மேற்கூறிய அணுகுமுறையை நீங்கள் பண பரிவர்த்தனைகளின்போது பயன்படுத்தி பாருங்கள். பணம் விருத்தியாகும். நல்ல விஷயங்களுக்கும் பயன்படும்.
(ஐந்நூறு ரூபாயை திருப்பி வாங்கினதெல்லாம் ஒரு விஷயமா, அதுவும் கால்டாக்ஸி டிரைவர் கிட்டே என்று நினைக்கவேண்டாம். அந்தப் பணத்தை நாம் சுலபமாக சம்பாதித்துவிடமுடியும். ஆனால் அந்த இழப்பு ஏற்படுத்தும் தாக்கம் ஆக்கப்பூர்வமான நமது நேரத்தையும், நிம்மதியையும் கெடுத்துவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மறதியால் பணத்தை மீண்டும் பெற்ற அல்லது இழந்த அனுபவம் யாருக்காவது இருந்தால் பகிர்ந்துகொள்ளவும். நன்றி!)
பணம் தொடர்பாக பேசும்போதெல்லாம் நேர்மறையான விஷயங்களையும், நல்ல விஷயங்களையும் மட்டுமே பேசுவோம். பணம் அப்படிப்பட்டவர்களையே அரவணைக்க விரும்பும்.
எதிர்மறையாகவும் குறுக்குவழிகளிலும் பொருளீட்டும் பணம் சில பேருக்கு குவிவது போல தெரியும். ஆனால் அது அவர்களை அழவைத்துவிட்டு சென்றுவிடும். நம் தளத்தை பொருத்தவரை பணம் என்றாலே அது ‘வினையற்ற செல்வம்’ தான்.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (குறள் 659)
விளக்கம் : பிறர் கண்ணீர் விடவைத்து நாம் திரட்டிய செல்வம் நம்மை அழவைத்துவிட்டு நம்மை விட்டு போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
|| “பணத்திற்கு காது உண்டு. அதை ஒருபோதும் மறக்கவேண்டாம்!” – இந்தப் பதிவின் நீதி அது தான். ||
========================================================
நம் தளத்திற்கு தற்போது ஒரு நெருக்கடியான தருணம். ஊர் கூடி இழுக்கவேண்டிய இந்த தேரை சிலர் மட்டுமே இழுத்து வருகிறார்கள். தளம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த காலகட்டங்களில் வாசகர்கள் மனமுவந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். பொருளாதரா தன்னிறைவு குறித்த இந்த பதிவில் இந்த கோரிக்கை இடம்பெறுவது சரியாக இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் வாசகர்கள் நீங்கள் பொருளாதார தன்னிறைவு பெற்றால் நாம் தன்னிறைவு பெறமுடியும். நாம் தன்னிறைவு பெற்றால் குறைந்தது நூறு பேருக்காவது அதன் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இது ஒன்றுக்கொன்று தொடர்புடைய சங்கிலி போன்றது. இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை. புரிதலுக்கு நன்றி.
========================================================
திருவாரூர் & கும்பகோணம் – இரண்டு நாள் பயணம்
இன்றிரவு நாம் திருவாரூர் பயணம். நாளை நண்பர் செந்தமிழரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் ‘ஞானத்திரள்’ 6 ஆம் ஆண்டு விழா ‘திருநாவுக்கரசர் விழா’வாக திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேவாசிரியர் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் பங்கேற்றுவிட்டு, நாளை மறுநாள் (புதன் 27/01/2016) முழுக்க நமது ஆலய தரிசன பதிவுகளுக்காக கும்பகோணம் – மயிலாடுதுறை மார்க்கத்தில் உள்ள சில முக்கிய பாடல்பெற்ற தலங்களை தரிசிக்க திட்டமிட்டுள்ளோம். வியாழன் காலை சென்னை திரும்புகிறோம். திருவாரூர் தியாகேசர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்ற பிறகு இப்போது தான் செல்கிறோம். திருவருள் உடனிருந்து அனைத்தையும் நல்லமுறையில் நடத்தித் தரவேண்டும். பெரியவா சரணம்.
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
========================================================
Also check previous chapters….
கொடுக்கும் பணம் நன்கு விருத்தியாக திரும்ப… பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 5
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4
பணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 3
அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2 –
அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1
========================================================
தொடர்புடைய பதிவுகள் :
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
காலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா?
சாப்பாட்டுக்காக க்யூவில் நின்ற அதே இடத்திற்கு பின்னாளில் கோடீஸ்வரராக நுழைந்த ஒருவர் கதை!
மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?
நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
========================================================
[END]
தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை நாங்கள் அனுபவித்தது போல் விவரித்தது அருமை. கஷ்டப் பட்டு உழைத்த பணம் என்றைக்கும் வீணாகாது என்பதை இந்த பதிவை படித்து உணர்ந்து கொண்டோம். கால் டாக்ஸி டிரைவரின் நேர்மையை பாராட்டுகிறேன். கடைசியில் டிரைவர் சொன்ன டயலாக் பஞ்ச் டயலாக்.
நான் எனக்கு 6 மாதத்திற்கு முன் நேர்ந்த அனுபவத்தை இங்கே பகிர்கிறேன். நான் ரேஷன் கடைக்கு சென்று சர்க்கரை வாங்கி விட்டு எதோ ஞாபகத்தில் என் பர்சை அங்கே விட்டு விட்டு வந்து விட்டேன் பர்சில் இல் 200 ரூபாய்க்கு மேல் இருந்தது. வீட்டிற்கு வந்து அரை மணி நேரம் கழித்து பார்க்கிறேன் என் பர்சை காணவில்லை. மிகவும் டென்ஷன் உடன் கடைக்கு சென்றேன், நான் சொன்னேன், என் பர்சை இங்கே விட்டு சென்று விட்டேன், பார்த்தீர்களா என்று கேட்டேன். அவர் உடனே என் பர்சை எடுத்துக் கொடுத்து பணம் சரியாக உள்ளதா என்று செக் செய்யச் சொன்னார். நான் அதெல்லாம் வேண்டாம் .. உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. மிக்க நன்றி என்று சொல்லி விட்டு வந்தேன்,
இதே போல் சாலிக்ராமத்தில் உள்ள பாபா கோவிலிலும் எனக்கு பர்சை தொலைத்து கிடைத்த அனுபம் உள்ளது அப்பொழுது என் பர்சில் 1500 பணம் இருந்தது. ஒரு ருபாய் கூட குறையமால் என் கைக்கு வந்தது பாபாவின் கருணை.
நாம் உழைத்த பணம் என்றைக்கும் வீணாகாது.
தாங்கள் மாந்தீச்வரர் கோவிலில் சர்வே எடுத்து வந்து இருப்பதை பார்த்தால் அந்த கோவிலில் அடுத்த உழவாரப் பணி இருக்கும் என நினைக்கிறேன். திருவாரூர் மற்றும் கும்பகோணம் பயணம் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறோம். தங்கள் பயணம் சிறக்க வாழ்த்தக்கள்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
பணத்திற்கும் காது உண்டு என்பது முற்றிலும் உண்மை தான் என்றாலும் இத்தனை நாள் இந்த கோணத்தில் நாங்கள் சிந்தித்ததேயில்லை.
தங்கள் அனுபவத்தின் மூலம் எங்களுக்கு பாடம் எடுத்தமைக்கு நன்றிகள். மாந்தீஸ்வரர் கோவிலுக்கு நாங்களும் உடன் வந்தது போன்ற உணர்வு.
கோவிலை விட அதன் சுற்றுபுறம் அழகாக இருக்கிறது.
தங்கள் உழைப்பு என்றும் வீண் போகாது.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்