Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2

அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2

print
பொருளாதார தன்னிறைவை நோக்கி ஓர் பயணம் பற்றிய தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது. இந்த தொடரை பொருத்தவரை பொருளாதார தன்னிறைவை நீங்கள் பெறுவதற்கு உங்களை தகுதியுடையவராய் ஆக்குவதே நம் நோக்கம். சுருங்கச் சொன்னால் மீனை தருவதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவதே நம் நோக்கம். இந்த தொடரில் இரண்டாம் அத்தியாயத்திற்கு வேறொரு கட்டுரையை தான் நாம் எழுதி வந்தோம். ஆனால் சமீபத்தில் இணையத்தில் படித்த ஒன்று இந்த தொடரில் இடம்பெற்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நமக்கு பட்டது. எனவே இங்கு தருகிறோம்.
==============================================

ரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் – ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.  ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.

அவை –

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.

3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி – “முடிந்தது கணக்கு” என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் – அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை – நிதர்சனமான உண்மை!

ஆம். நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் – காலம்.

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.

எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் – சந்தோஷமாக இருங்கள் – சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் – வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

(நன்றி: தமிழால் இணைவோம் முகநூல்)

===============================================

உனக்கு மட்டும் எப்படி கூடுதலாக தருவது?

நண்பர்களே…. நாம் இழந்தால் பெறமுடியாத பெருஞ்செல்வம் நாம் வீணே கழிக்கும் ஒவ்வொரு நொடியும் தான். காலத்தின் அருமை உணர்ந்தவர்களே சாதனையாளர்களாக மாற முடியும். நேரத்தை வீணடிப்பவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிப்பதேயில்லை. ஏனெனில் இறைவனே காலஸ்வரூபி தான். நான் இப்போது இறைவனிடம் உண்மையில் கேட்பது என்ன தெரியுமா? “தினசரி ஒரு மணிநேரம் எனக்கு கூடுதலாக கொடு! அது போதும், நான் மகத்தான காரியங்களை சாதித்துவிடுவேன்!!!” என்பது தான்.

ஆனால் இறைவனோ தரமறுக்கிறான்.

ஏன் தெரியுமா?

“காலம் ஒன்றைத் தான் நான் அனைவருக்கும் தினசரி 24 மணிநேரம் என்று பாரபட்சமில்லாமல் வழங்கியிருக்கிறேன். உனக்கு மட்டும் எப்படி கூடுதலாக தருவது?” என்று கூறுகிறான்.

நியாயம்தானே…!

காலத்தை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவுமில்லை. உண்மையில் காலத்தின் அருமையை நீங்கள் உணர்ந்துகொண்டாலே வெற்றிக்கான படிகளில் முதல் பத்து படிகள் ஏறிவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

உங்கள் பொருளாதார நெருக்கடி தீர்ந்து இனிமையான வாழ்க்கை அமைந்து வையம் சிறக்க அறம் வளர்த்து வாழ்வாங்கு வாழ இறைவன் அருள்புரிவான்.

===============================================

Also check
அடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1

[END]

7 thoughts on “அள்ளித் தரும் இந்த வங்கியிடம் பெற்றுக்கொள்ளத் தயாரா? பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 2

  1. காலத்தை விட மிக பெரிய செல்வம் வேறு ஒன்றும் இல்லை.
    முதலில் படிக்கும் போது ஏதோ சொல்ல வருகிறிர்கள் என்று பார்த்தால் கடைசியில் time is gold என்று பக்காவான விசயத்திற்கு வந்து விட்டிர்கள்.
    நம்மையே வங்கி என்று சொல்லி நாம் செலவழிக்கும் ஒரு நிமிடத்தை 86400 நொடிகள் என்று சொல்லி காலம் பொன் போன்றது என்று எடுத்து சொல்லிவிட்டிர்கள்.
    நேரத்தை பயன்படுத்தியவர்கள் தான் பொன்னேடுகளில் அவர்கள் பெயர் பதியுமாறு உழைத்து இருக்கிறார்கள்.
    நீங்களும் சாதனை அடைய வாழ்த்துக்கள்.

  2. காலத்தை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவுமில்லை. உண்மையில் காலத்தின் அருமையை நீங்கள் உணர்ந்துகொண்டாலே வெற்றிக்கான படிகளில் முதல் பத்து படிகள் ஏறிவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.என மிக அருமையாக சொல்லியுல்லீர்கல்..
    பயனுல்ல பதவுக்கு நன்ரிகள்..

  3. சுந்தர்ஜி,

    காலம் பொன்னானது என்பதை மிகவும் அருமையாக உணர்த்தி உள்ளீர்கள். நன்றி.
    முடிந்த வரை நாம்ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கருதி வந்தால், ஒவ்வொரு வினாடியையும் பதில் அளிக்கும் பொறுப்புணர்வுடன் கழித்தால் மனிதனுக்கு செயல்பட வேண்டும் என்ற ஊக்கமும், உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும். இன்னும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரம், அறிவு, செல்வம், திறமைகள், பதவி, குடும்பம் என்று எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கப்படும், நாம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையையே புரட்டிப் போடும், திருப்புமுனையை ஏற்படுத்தும்.

    நாளை செய்யலாம். பிறகு செய்யலாம், என பணிகளை தள்ளிப்போடுவது ஒரு மோசமான நோய் ஆகும். செய்ய வேண்டிய பணிகளை முன்னுரிமையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக காலம் நிர்ணயித்து செய்து முடிக்க வேண்டும். எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் மண்டையில் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. குறைந்த பணி நிறைந்த செயல்திறன் என்பதுதான் சிறப்பானது. வீண் வேலைகளை அறவே விட்டொதுக்க வேண்டும். தனது நேரம் முழுவதையும் அவசியப் பணிகளில் செலவிடுபவனே சிறந்த மனிதன்.

    நமது எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள், உணர்வுகள், போன்றவற்றை அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும். நமது விவகாரம், வியாபாரம், குடும்பம், சமூகம், நாடு என அனைத்திலும் மீதமான போக்கை (moderate) கையாள வேண்டும். ஒன்றிலேயே சாய்ந்து விடக்கூடாது. ஆலோசனை அவசியம் தேவை. ஆலோசனை செய்பவன் கைசேதம் அடையமாட்டான். எடுத்துக்கொண்ட எந்த வேலையையும் அரைகுறையாக இல்லாமல் கவனத்துடன் முழுஈடுபாட்டுடனும் முழுமைப்படுத்த வேண்டும். இன்றே செய்வோம் அதுவும் நன்றே செய்வோம் என்ற உத்வேகம் இருக்க வேண்டும்.

    1. எப்படி…இப்படியெல்லாம்…? தூள் கிளப்புறீங்க!
      – சுந்தர்

  4. உஷா மேடம் நெத்தியடி அடிச்சு தூள் பண்ணிட்டாங்க.
    எப்படி எவ்வளவு நேரம் points எடுத்தாங்க என்று தெரியவில்லையே?
    நாளை என்ற எண்ணம் வேண்டாம் என்று சொல்வாங்க. ஆனால் இன்று வாழ்வின் கடைசி நாளாக கருதி நாம் செய்ய வேண்டிய செயல்களையும் நினைக்க வேண்டிய கருத்துக்களையும் அழகாக எடுத்து சொல்லயுள்ளர்கள்
    படித்தவுடன் இன்றே செய்யும் உத்வேகம் வந்தது.

  5. “” காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது ”

    நொடிப்பொழுதில் வாய்ப்பை இழ்ந்தவர்களும், உயிர் பிழைத்தவர்களும், வெற்றி பெற்றவர்களும் உலகில் உண்டு. ஒட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களைக் கேளுங்கள், ஒரு வினாடி முந்தி வந்ததால் வெற்றி பெற்றேன் என்பார்கள்.

    “நேரத்தை நீங்கள் நிர்வகியுங்கள்.
    நேரம் உங்களை நிர்வகிக்க விடாதீர்கள்.”

    மாணவர்களுக்கும்,இன்றைய இளைய தலைமுரைக்கும் மிகமிக அவசியமான அத்தியாவசிய பதிவு .

    பாராட்டுக்களுடன்
    -மனோகர்

  6. ஆரம்பத்தில் புதிர் போட்டு இறுதியில் புதையலை கொடுத்துள்ளீர்கள் – அருமை

    காலத்தின் அருமை என்பதை விட மகிமை என்பதே பொருந்தும் – வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடியையும் நல்ல முறையில் பயன்படுத்துவது என்பது ஒரு மிக சிறந்த கலை – அந்த கலையை கைவரப்பெற்றவர்கள் சாதனையாளர்களாக ஜொலிக்கின்றனர்

    காலத்தை போற்றுவோம்
    கடமையை நிறைவேற்றுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *