Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

print
பிறவிகளிலேயே சிறப்பானது, அரியது மனிதப்பிறவி தான். ஏனெனில், மனிதப்பிறவிக்கு மட்டும் இறையுணர்வு உண்டு. இறைவனை தொழுது மேற்கொண்டு பிறவிகள் இல்லாமல் செய்துகொள்ளும் வாய்ப்பு மனிதப் பிறவியில் தான் ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும். பலர் தங்களுக்கு அடுத்த பிறவியும் மானிடப் பிறவியாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த பிறவி மானிடப் பிறவியாகத் தான் இருக்கும் என்பதில் எந்த நிச்சயமுமில்லை.

Sirgazhi 5
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஸ்வாமி அம்பாளுடன் திருவீதி உலா வரும் காட்சி

“அரிது அரிது மானிடராதல் அரிது” என்று அதனால் தான் ஒளவையும் பாடினார்.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கிரங்கி இருந்தருள்செய்
பாதிரிப் புலியூர் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்
வைத்த தீவண்ணனே.

“அடுத்த பிறவி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு வேளை நான் புழுவாய் பிறந்தால் கூட உன்னை நான் மறவாதிருக்க வரம் வேண்டும்” என்று இறைவனிடம் அப்பர் பெருமானே வேண்டுகிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

எனவே பிறவிகளில் அரிதான இந்த மானிடப் பிறவியில், நேரத்தை பயனற்ற விஷயங்களில் வீணாக்காது நமது கடமைகளை குறைவற செய்வதிலும் இறைவனிடம் பக்தி செலுத்துவதிலுமே செலவழிக்கவேண்டும்.

கேளிக்கை, கொண்டாட்டங்கள் உணவுக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்று இருந்தால் போதுமானது. இறைவனை மறந்து கேளிக்கையும் கொண்டாட்டமுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் ‘அறிவிலிகள்’ என்றே கொள்ளவேண்டும்.

நாம் ஏற்கனவே பலமுறை கூறியது தான். நேரத்தை வீணடிப்பவர்களை ஒருபோதும் இறைவன் மன்னிப்பதில்லை.

எந்த சூழ்நிலையில் ஒருவர் வாழ்ந்தாலும் கடமையை குறைவற செய்துகொண்டு, அதே நேரம் இறைவனிடமும் தூய்மையான பக்தியை செலுத்தி வாழமுடியும்.

அப்படி வாழும் ஒரு மெய்யடியாரை பற்றியதே இந்த பதிவு!

படித்த பிறகு நீங்கள் கூறுங்கள்… சிவனை சிந்திக்க உங்களுக்கு நேரமிருக்கிறதா இல்லையா என்று?

Mangadu Mutrodhal
மாங்காட்டில் சென்ற ஞாயிறு கல்யாணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நம்பியாண்டார் நம்பி குருபூஜை

சென்ற ஞாயிறு காலை, சென்னை மாங்காட்டில் உள்ள கல்யாணி திருமண மண்டபத்தில் ஆன்மீக வழிபாட்டு சபையினர் சார்பாக நம்பியாண்டார் நம்பிகளின் குரு பூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. (இன்று மே 22 தான் அவரது குரு பூஜை. இருப்பினும் அந்த சபையினர் அனைவரின் சௌகரியத்தையும் மனதில் கொண்டு வருடந்தோறும் நம்பியாண்டாரின் குருபூஜைக்கு அருகே வரக்கூடிய ஞாயிறு கொண்டாடுவார்கள்).

அப்போது நமக்கு பின்னால் இருவரிசை தள்ளி ஒரு பெரியவர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்.

இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்ற, அடுத்த நொடி அது எங்கே எப்படி என்று நினைவுக்கு வந்துவிட்டது.

Sirgazhi Janarthanam 1
கூட்டத்தில் திருமுறைகளை திரு.சிவ.ஜனார்த்தானம் சுமந்து நிற்பது தெரிகிறதா?

2013 ஆம் ஆண்டு மத்தியில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசக முற்றோதல் நடைபெற்றபோது அதில் பங்கேற்க நாம் சீர்காழி சென்றிருந்தோம். அப்போது முடிவில் நடைபெற்ற திருமுறை திருவீதி உலாவில் பன்னிரு திருமுறைகளை சுமந்து வந்த பாக்கியசாலி இவர். அந்நேரம் அதை நாம் புகைப்படம் கூட எடுத்திருந்தோம். திருமுறை தொடர்பான பதிவொன்றில் அதை பகிரவும் செய்திருந்தோம்.

தற்போது நமது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள, நமது அலைபேசியை எடுத்து அந்த குறிப்பிட்ட பதிவை ஓப்பன் செய்து அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் சந்தேகமின்றி புரிந்தது அந்த நபர் தான் இவர் என்பது.

உடனே நேரே அவரிடம் சென்று நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நமது அலைபேசியை காண்பித்து, “இது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டோம்.

Sirgazhi Janarthanam 2

நமது தளத்தின் பதிவில் தனது புகைப்படத்தை பார்த்தவர், “ஆமாம்… சார்… இது நான் தான். இந்த ஃபோட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது?” என்றார் அகமகிழ்ந்து.

நாம் சீர்காழி வந்திருந்ததையும் முற்றோதலின் இறுதியில் இந்த படத்தை எடுத்ததையும் குறிப்பிட்டோம்.

அந்த படத்தை எனக்கு தபால்ல அனுப்ப முடியுமா என்று கேட்டார். “நிச்சயமா அனுப்புறேன். உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்… மதியம் உணவு இடைவேளைல பேசுறேன்” என்று கூறி தற்காலிகமாக விடைபெற்றுக்கொண்டு இருக்கைக்கு திரும்பினோம்.

மண்டபத்தில் விழாவில் பங்கேற்ற அனைத்து அடியார்களுக்கும் அருமையான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை அருந்திவிட்டு, அவரை தேடிச் சென்று, தனியே அழைத்து வந்தோம்.

மண்டபத்தின் ஓரமாக அமர்ந்து அவரிடம் பேச ஆரம்பித்தோம்.

Sirgazhi Janarthanam 4
எத்தனை பெரிய பாக்கியசாலி ஐயா நீர்….!

இவர் பெயர் சிவ.ஜனார்த்தனம். வயது 57. அரக்கோணம் தாலுக்கா காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். மேல் களத்தூர் கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.

2007 ஆம் ஆண்டு முதல் அதாவது கடந்த எட்டு ஆண்டுகளாக உழவாரப்பணிக் குழுக்களில் பங்கேற்று உழவாரப்பணி செய்து வருகிறார். இதுவரை சுமார் 150 கோவில்களில் உழவாரப்பணி செய்திருக்கிறார். புல் செதுக்குவது, ஒட்டடை அடிப்பது, வெள்ளையடிப்பது என பல பணிகளை இவர் செய்திருக்கிறார்.

அதே போல, 2012 ஆம் ஆண்டு முதல் திருவாசம் மற்றும் பெரிய புராண முற்றோதல்களில் பங்கேற்று வருகிறார். தமிழகம் முழுதும் நடைபெறும் இந்த முற்றோதல்களில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், இதுவரை 20 க்கும் மேற்பட்ட முற்றோதல்கள் மற்றும் 50 க்கும் மேற்ப்பட்ட இது சைவ சமய விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே உழவாரப்பணி மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் தமக்கு அது சிரமமாக இருந்ததில்லை என்றும், ஒருவேளை சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விழ நடைபெற்றால் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன்  என்றும் கூறுகிறார்.

Sirgazhi Janarthanam 3

இவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும் ஒரு மகன் கத்தாரில் பணிபுரிவதாகவும், மகளுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருமுறை விழாக்கள் மற்றும் முற்றோதல்களில் இவரது முக்கிய தொண்டு என்னவென்றால், பன்னிரு திருமுறைகளை தலைக்கு மேல் ஏந்தி வீதியுலா வருவது தான்.

திருமுறைகளை ஏந்தும் இந்த தொண்டு எப்படி ஆரம்பித்தது? அந்த திருமுறைகளும் மண்டபமும் இவருடையதா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்ளுடையதா என்று கேட்டோம்.

அவை தம்முடையது தான் என்றும், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு தாம் அவற்றை கொண்டு சென்றுவிடுவது வழக்கம் என்றும் தெரிவித்தார். “எப்போது எப்படி அதை துவக்கினேன் என்றெல்லாம் எனக்கு தெரியாது சார். அதை சொல்லத் தெரியவில்லை. ஈசன் தான் என்னை ஒவ்வொரு அடியும் வழிநடத்துகிறான். அது மட்டும் எனக்கு தெரியும்” என்று கூறும் ஜனார்த்தனம், தனது ஊரான காட்டுப்பாக்கதில் ஊர்மக்கள் சார்பாக ஒரு சிவாலயம் எழுப்பி வருகிறார்.

Sirgazhi Janarthanam 6
சென்ற வாரம், மாங்காடு விழாவில் கண்டபோது….

“எத்தனையோ பழமையான ஆலயங்கள் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறதே. அதில் ஒன்றை தத்தெடுத்து பணிகளை செய்யலாமே.. ஏன் புதிய கோவில் கட்டவேண்டும்?” என்றோம்.

தான் தமது ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு தொன்மையான சிதிலமடைந்த சிவாலயத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய விரும்பி அணுகியதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட ஊர் பெரியவர்கள் அதில் எந்த அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை தமக்கும் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் தம்மால் எதுவும் செய்ய இயலவில்லை என்றும் தமது வருத்தத்தை பகிர்ந்துகொண்டார்.

தமது ஊரிலேயே கோவில் எழுப்பினால் அது சௌகரியமாக இருக்கும் என்றும் தம்மால் சற்று கூடுதல் நேரம் செலவிட்டு திருப்பணிகளை  கவனிக்கமுடியும் என்று கூறுகிறார் இந்த சிவத் தொண்டர்.

மேலும் அவரது ஊரான காட்டுப்பாக்கதில் தற்போது கோவில் எதுவும் இல்லை எனவும், ஊருக்கு மத்தியில் நல்ல பிரதானமான இடத்தில் இருக்கும் ஒன்றரை கிரவுண்ட் பொது நிலத்தை சிலர் அபகரிக்க தொடர்ந்து முயற்சித்து வந்ததாகவும், அதை தடுத்து நிலத்தை காப்பாற்ற ஒரே வழி அங்கு கோவில் எழுப்புவது தான் என்றும் கருதிய ஊர் மக்கள் இவரை கொண்டு திருப்பணிக்கு பிள்ளையார் சுழி போட்டு அங்கு கோவிலை கட்டிவருவதாகவும், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சிறுக சிறுக இந்த கோவிலை கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருவததாகவும் அடுத்த ஆண்டு நிச்சயம் கோவில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுவிடும் என்றும் கூறினார். நம்மையும் அதற்கு நிச்சயம் அழைப்பதாகவும் சொன்னார்.

ஒரு பக்கம் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு, மறுபக்கம் ஒய்வு நேரத்தில் உழவாரப்பணி, முற்றோதல் முதலிய சைவப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, இடையே ஊருக்காக கோவிலும் கட்டி வரும் ஜனார்த்தனம் நம் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கம் என்றால் மிகையாகாது.

எங்கள் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது, “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். என்னை நான் சிவபெருமானிடம் முழுமையாக அற்பணித்து விட்டேன். அவன் என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறான் ஐயா!” – என்ன ஒரு தெளிவான தீர்க்கமான பதில்!

வாழ்க அவர் சிவத்தொண்டு!! வளர்க சைவநெறி!!!

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

====================================================================

Also check :

கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!

‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

====================================================================

[END]

10 thoughts on “கடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்!!

  1. வணக்கம்…….

    திரு.ஜனார்தனம் அவர்களுக்கு நம் வணக்கங்கள்…… அவர் நமக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம் என்பது உண்மைதான்….
    இவர் போன்ற அடியார்களின் அறிமுகமும் தரிசனமும் நம் தளம் மூலம் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது……. தன்னை சிவபெருமானிடம் ஒப்புவித்துவிட்ட அவரை பெருமான் என்றென்றும் காப்பார்……

  2. திருமுறையை தனது தலையில் சுமந்து வரும் திரு ஜனார்த்தன் அவர்களின் சிவத் தொண்டு பற்றி படித்து மெய் சிலிர்த்தேன். இந்த அரிய பாக்கியம் கிடைத்த அவர் எவ்வளவு புண்ணியம் செய்து இருப்பார்.

    காட்டுப்பாக்கத்தில் சிவாலயம் எழுப்பும் அவருக்கு எமது வாழ்த்துக்கள். கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். தான் இருக்கும் இடத்தில் கோவில் கட்டும் அந்த சிவனடியாரின் நற்செயலை பாராட்டுவோம். வாழ்க அவரது சிவத் தொண்டு.

    சிவனின் அடியைப் பற்றும் சிவனடியாரின் பாதம் பணிவோம்.
    இந்த வாரம் இவர் தான் பிரார்த்தனை கிளப் தலைமை தாங்குபவர் ஆகா இருக்கும் என்பது என் யூகம்.

    Rightmantra மூலம் இவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    நன்றி
    உமா வெங்கட்

  3. தலைப்புக்கு ஏற்றவாறு சிவ தொண்டர் சிவ.ஜனார்த்தனம் அய்யா பற்றியும், அவரது சிவ நெறிகள் பற்றியும் அறிந்து கொண்டேன். சிவ.ஜனார்த்தனம் அய்யா அவர்களின் தொண்டின் மேன்மையையும் புரிந்தது. குடும்பம், உழவாரபணி, சைவ பணிகளுடன் காட்டுப்பாக்கத்தில் சிவாலயம் கட்டுதல் என தன் வாழ்வில் சைவ நெறி பரப்பும் சிவ. ஜனார்த்தனம் அய்யா அவர்களுக்கு ஒரு சல்யூட்.அவர் தம் நோக்கமான சிவாலய பணி மிக விரைவில் முடிந்து, குடமுழுக்கு விழாவிற்கு, rightmantra அன்பர்கள் சென்று, பேரின்பம் பெற்றிட,எல்லாம் வல்ல சிவனார் அருள் புரிவாராக..

    நன்றி அண்ணா

  4. பொன்னான நேரத்தின் அருமை உணர்ந்த சிவனடியார்..

    வாசகர்களுக்கு அவர் கூறிய மெசேஜ் சூப்பர்.

  5. வணக்கம் சுந்தர். திரு ஜனார்த்தனம் அவர்களக்கு வாழ்த்துக்கள் என்று சொல்ல நினைத்தேன் ஆனால் உமையொருபாகன் ஆசி பெற்றவருக்கு நாம் என்ன சொல்வது என விட்டுவிட்டேன்.உங்களை போன்றவர்களை பார்ப்பதே புண்ணியம் ஐயா . ஆலய திருப்பணிகள் நன்கு முடியவும்,பழைய கோவிலை புதுப்பிக்கும் பனி இனிதே தொடங்கி நல்லபடியாக முடியவும் ஈசன் அருளட்டும் .நன்றி இருவருக்கும்.

  6. “அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை விணைமுழுதும் மோய உரைப்பனியான்”

    என்று வாழும் திரு. ஜனார்த்தன் அவர்களுக்கு நம் வணக்கங்கங்கள்!

    நன்றி சுந்தர்.

  7. திரு ஜனார்த்தனம் அவர்கள் தரிசனம் கண்டதில் மிக மகிழ்ச்சி.

    நல்லோர் ஒருவர் உளர் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
    நன்றி தங்களுக்கும்.

    கே. சிவசுப்ரமணியன்

  8. வணக்கம். நன்றி அனைவருக்கும் நான் தான் சிவ ஜனார்தனம் அவர்களின் மகன் சிவ ஜீவானந்தம். நான் கத்தார் நாட்டில இருக்கின்றேன். இந்த பதிவுக்கு சிவன் அடியருக்கு மிகவும் நன்றி, நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என் தந்தையின் தொண்டை கண்டு. எல்லாம் வல்ல ஆண்டவன் துணையால் அவரின் திருப்பணி தொடரட்டும்.

    ஒம் நமசிவாய..ஒம் நமசிவாய …….

    1. தங்களின் பின்னூட்டம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறோம்.

  9. நன்றி சுந்தர் அவர்களே , சிவ ஜனார்த்தனம் அவர்கள் எங்கள் மாமா ஆகும். அவர் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் சிவ தொண்டு செய்வது அவருக்கு தலையாய பணியாக உள்ளது, அவருக்கும்- தங்களுக்கும் மிக்க நன்றி …வணக்கம்

Leave a Reply to SIVASUBRAMANIAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *