இந்த பதிவைப் பொறுத்தவரை புகைப்படங்கள் தான் வார்த்தைகள். ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு. (காரணம் புகைப்படத்தில் உள்ள விஷயங்களின் மகத்துவம். நம் திறமை அல்ல.) பொறுமையாக பார்த்து ரசிக்கவும்! அதிகாலை துவங்கி, பொழுது புலர்ந்து கதிரவன் உதிப்பது வரை ஒவ்வொரு நிலைக்கும் படங்கள் இடம்பெற்றுள்ளன!!
தெற்கே உள்ள திருநாகேஸ்வரம் போன்றே தான் பிறந்த ஊரில் சிவாலயம் ஒன்றை கட்டவிரும்பிய சேக்கிழார் பெருமான் 12 ஆம் நூற்றாண்டில் கட்டிய கோவில் இது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்று. அந்த அதிகாலையில் சுமார் 5.30 AM இருக்கும், நாம் சென்ற நேரம், கோவிலில் சுமார் 50 மாணவ மாணவிகள், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை படித்துக்கொண்டிருந்தார்கள். சென்னை போன்ற நவநாகரீக (?!) நகரில் இந்த காட்சி நமக்கு வியப்பை ஏற்படுத்தியது. சேக்கிழார் பிறந்த புனித பூமியாயிற்றே… இருக்காதே பின்னே என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு நாகேஸ்வரரை தரிசிக்க சென்றோம். சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு வெளியே வந்தோம்.
வியப்பு தாங்காமல் மாணவர்களிடம் பேச்சு கொடுத்தோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 6.00 pm – 8.00 pm இங்கு நடைபெறும் இலவச திருமுறை வகுப்புக்கு வந்து திருமுறைகள் கற்பதாகவும், சங்கர் என்கிற ஒருவர் இதை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதாகவும் கூறினர். மேலும் தற்போது மார்கழி மாதம் என்பதால் ஞாயிறு மாலை தவிர தினசரி காலை 5.00 – 7.00 வரையும் கூட திருமுறை படிக்க வருவதாகவும் கூறினர்.
உங்கள் ஆசிரியர் எப்போது வருவார் என்று கேட்டபோது, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்று பதில் கிடைத்தது. அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழித்து மாணவர்கள் எழுந்து திருமுறை பாடிக்கொண்டே பிரகாரத்தை சுற்றி வர துவங்கினர். (அனைத்தும் ஒருவித ஒழுங்கோடு நடைபெற்றது ஆச்சரியம்!). அவர்களுடன் நாமும் சென்றோம். பிரகாரத்தை வலம் வந்தவுடன் அடுத்து நேரே அருகில் உள்ள சேக்கிழார் மணிமண்டபம் சென்றனர். அங்கும் திருமுறைப் பாடிக்கொண்டே மணிமண்டபத்தை சுற்றி வந்து பின்னர் மணிமண்டபத்தில் உள்ள தெய்வச் சேக்கிழார் திருவுருவச் சிலை முன்பு சிறிது நேரம் அமர்ந்து பாடல்கள் பாடிவிட்டு அதன் பிறகு ஒரு பத்து நிமிடம் தியானம்.
இத்தனையும் நடைபெறுவது காலை 5.30 மணிக்கு. மார்கழி மாதக் குளிரில், திருப்பாவையாவது திருவெம்பாவையாவது என்று அவரவர் போர்வையை இழுத்துப் போர்த்தித்துக்கொண்டு தூங்கும் நேரத்தில், இவர்கள் திருமுறைகளையும், திருவெம்பாவையும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த சில வினாடிகளில், திரு.சங்கர் வந்துவிட, அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, நடந்தவற்றை கூறி நமது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் வெளிப்படுத்தினோம்.
நம் தளத்தை பற்றி அவரிடம் கூறி, இதே சேக்கிழார் மணிமண்டபத்தில் சென்ற ஜூன் மாதம் நாம் உழவாரப்பணி செய்தது பற்றியும் குறிப்பிட்டோம். நமது தளத்தை பற்றியும் நமது பணிகள் பற்றியும் அறிந்தவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கிளம்பலாம் என்றால் நமக்கு மனம் வரவில்லை.இன்னும் சற்று நேரம் இவர்களுடன் இருக்கலாமே என்று அவா மேலிட்டது. எனவே வீட்டுக்கு திரும்புவதை ஒத்தி வைத்தோம். எவ்ளோ பெரிய ட்ரீட் கிடைச்சிருக்கு… விட்டுடுவோமா?
சிறிது நேரம் கழித்து மீண்டும் மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருநாகேஸ்வரம் கோவில் வந்தனர். இங்கு அனைவரும் சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வந்து அமர்ந்தனர். அடுத்து ஒரு அரைமணிநேரம் திருமுறை வகுப்பு நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் சூடான சுண்டல் பிரசாதமாக தரப்பட்டது. (இதை திரு.சங்கர் தனது வீட்டிலிருந்து பல நேரங்களில் தானே கைக்காசிட்டு தயாரித்து எடுத்து வருகிறார் என்பதை அறிந்துகொண்டோம்.)
இப்போதே பேட்டியை முடித்துவிடலாம் என்றால் சந்திப்புக்காக தயாராக தகுந்த முன்னேற்பாடுடன் நாம் வராததால் அடுத்து வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு ஞாயிறு மாலை நாம் மீண்டும் வருவதாகவும், அப்போது இந்த திருமுறை வகுப்பை ஒரு விரிவான பேட்டி ஒன்றை அவர் தரவேண்டும் என்றும் கூறினோம். மாணவர்களுக்கு ஏதேனும் செய்யவிரும்புவதாகவும், அது பற்றி அடுத்த முறை வரும்போது பேசுவதாகவும் கூறிவிட்டு வந்துவிட்டோம்.
இது நடந்து நான்கைந்து மாதங்கள் இருக்கும். அவரை மீண்டும் குன்றத்தூர் போய் சந்திக்கவேண்டும் என்று நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை அமையவில்லை. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ரோல் மாடல் சந்திப்புகளே இன்னும் பல இருக்கின்றன எழுதுவதற்கு. எனவே இதில் நாம் தீவிரம் காட்டவில்லை. இருப்பினும் ஒரு வித உறுத்தல் இருந்து வந்தது.
சென்ற மாதம் 16 & 17 ஆம் தேதி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாங்காட்டில் மாங்காடு ஆன்மீக வழிபாட்டு சபை சார்பாக கல்யாணி திருமண மண்டபத்தில் நம்பியாண்டார் நம்பி குரு பூஜை நடைபெற்றது. அது குறித்து தெரிந்தவுடன் அங்கு சென்றிருந்தோம்.
இரண்டு நாள் எண்ணற்ற நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. (இது பற்றி தனிப் பதிவு வரும்!). நாம் சென்ற நேரம் திருமுறை & நால்வர் திருமேனிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மாங்காடு கோவிலை சுற்றி வந்துகொண்டிருந்தது. ஊர்வலத்தில் சிலர் தனியாக திருமுறைகளை பாடிக்கொண்டு வர, சில பெண்கள் திருமுறைகளை சுமந்து வந்து கொண்டிருந்தனர். பார்க்கவே கண்கொள்ளா காட்சி.
அப்படியே சாலையில் சாஷ்டாங்கமாக அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றோம். வயதில் சிறிய பெண் ஒருவர் அவர்களுள் இருந்தபடியால் நம் செயலால் அப்படியே அதிர்ச்சியடைந்தார். ஆனால், நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை, எழுந்து நின்று அவர்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கினோம். அவர்கள் பாத தூளி நம் மீது பட்டால் கூட போதும் அடியேன் செய்த பாவங்கள் பஸ்பமாகிவிடும். சிவனருள் கிட்டிவிடும்.
புறப்பட எத்தனிக்க, நம்முடன் உதவிக்கு வந்திருந்த ஸ்மார்ட் நந்தா என்பவர் “ஜி… எங்கே பாருங்க…. ஸ்கூல் பிள்ளைகள் எல்லாம் ஊர்வலத்துல வர்றாங்க” என்று கூற, நாம் பின்னால் பார்க்க, சற்று தூரம் தள்ளி, பள்ளி மாணவர்கள் சுமார் 50 பேர், திருமுறை பாடிக்கொண்டு ஊர்வலாமாக வந்துகொண்டிருந்தார்கள்.
வறுத்தெடுக்கும் வெயிலில் ஞாயிறு நண்பகல் நேரத்தில், திருமுறை பாடிக்கொண்டு பள்ளிமாணவர்கள் வருவதை பார்த்தால் எப்படி இருக்கும்? நெகிழ்ச்சியில் கண்கள் குளமாகின. உண்மையில் சொல்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலி தான். அதுவும் சென்னை போன்ற நகரத்தில் இப்படியெல்லாம் கூட நடக்கிறது. அதில் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்கிறார்கள், அதுவும் அவர்கள் திருமுறை பாடல்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள் என்பதை அறிந்தபோது, சென்னையில் இருப்பதற்கு பெருமை பட்டோம்.
மாணவர்களுள் ஒருவரை “உங்களை யார் அழைத்து வந்தது? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்க, அவர்கள் தங்களுடன் ஊர்வலத்தில் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை, காண்பித்தனர். அவரிடம் சென்றபோது, அவர் “நாங்கள் குன்றத்தூரில் இருந்து வருகிறோம். எங்க திருமுறை ஆசிரியர் தான் எங்களை அழைத்து வந்தார். அவர் இப்போது மண்டபத்தில் இருப்பார்” என்று என்றார்.
அவர்களுடனே நாமும் மண்டபம் நோக்கி நடந்துவந்தோம். மாணவர்களுடன் நடந்து சென்றதே ஒரு உன்னதமான அனுபவமாக இருந்தது.
மண்டபம் அடைந்தபோது, தங்கள் ஆசிரியர் என்று ஒருவரை அறிமுகப்படுத்த, அவரைப் பார்த்தால் அவர் தான் திரு.சங்கர். நாம் ஏற்கனவே குன்றத்தூரில் மார்கழி மாதம் சந்தித்தோமே…. அவர் தான்.
“சார்… நீங்களா? எப்படி .இருக்கீங்க..?”
பரஸ்பர நலம் விசாரித்தோம்.
“சாரி சார்… உங்களை அதுக்கப்புறம் வந்து சந்திக்க முடியலே…அடுத்த வாரம் கண்டிப்பா உங்களை நேர்ல சந்திக்கிறேன்” என்றோம்.
“பரவாயில்லே சார்… எப்போ வேண்ணா வாங்க…” என்றார்.
“குன்றத்தூரிலிருந்து வருகிறோம் என்று சொன்னவுடனேயே ஒருவேளை நீங்களா இருப்பீங்களோ என்ற சந்தேகம் வந்தது. கடைசியில் அது உறுதியாகிவிட்டது. உண்மையில் நீங்கள் செய்வது மிகப் பெரிய சேவை சார். மாணவர்களை திருமுறை நோக்கி, திருப்பி அவர்களை இது போன்ற திருமுறை விழாக்களுக்கு அழைத்து வேறு வருவது என்பது சாதரணமான விஷயமல்ல!”
விழாவில் மாங்காடு ஆன்மீக மன்றம் சார்பாக மாணவர்கள் அனைவருக்கும் தலா ஒரு டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்பட்டது. திரு.சங்கர் கௌரவிக்கப்பட்டார்.
அதற்கு சுமார் அரை மணிநேரம் கழித்து சங்கர் அவர்கள் விடைபெறும்போது, நாம் மீண்டும் சந்திப்பு குறித்து நினைவூட்டி, “விரைவில் குன்றத்தூரில் சந்திக்கிறேன்” என்றோம்.
“அவசியம் வாங்க சார்… பார்ப்போம்!” என்றார்.
அதற்கு அடுத்த ஞாயிறு மாலை, குன்றத்தூரில் திரு.சங்கர் அவர்களுடன் நமது சந்திப்பு திருநாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. மறக்கமுடியாத சந்திப்பு அது.
சங்கர் அவர்களைப் பற்றி நீங்கள் அடுத்த பதிவில் தெரிந்துகொள்வதற்கு முன்….
சங்கர் அவர்கள் இதை சேவை நோக்கோடு இலவசமாகத் தான் கற்பித்து வருகிறார். மேலும் அவர் தொழில்முறையில் ஒரு இண்டஸ்ட்ரியல் டெக்னீசியனாக பணியாற்றியவர். திருமுறை ஆசிரியர் என்பது அனுபவத்தின் வாயிலாக அவருக்கு கிடைத்த தகுதி. கல்வி ரீதியாக அல்ல.
* சங்கர் அவர்கள் யார்?
* அவர் எப்படி இந்த திருப்பணிக்கு வந்தார்?
* எத்தனை ஆண்டுகளாக இந்த வகுப்பு நடைபெற்று வருகிறது?
* யார் இதற்கு சுழி போட்டது?
* எத்தனை மாணவர்கள் இதுவரை திருமுறை இங்கு கற்றுள்ளனர்?
* நம் தளம் சார்பாக இந்த ஞாயிறு மாலை இம்மாணவர்களுக்கு செய்யப்போவது என்ன?
அடுத்த பாகத்தில் தொடரும் ….
=====================================================================
தவிர்க்க இயலாத காரணங்களினால் இன்று பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
எது அமிர்தம் தெரியுமா? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்
=====================================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
=====================================================================
Also check :
பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?
‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’
ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
இறைவனை குறைத்து மதிப்பிடுபவர்கள் கவனத்திற்கு..!
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….
கல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா?
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
=====================================================================
நான் இந்த தளத்தை ஓபன் செய்வதற்கு முன் திருவெம்பாவை மற்றும் நமச்சிவாய பதிகங்கள் படித்து முடித்து, இன்றைய பிரார்த்தனை பதிவை பதிவை பார்க்கலாம் என்று நினைத்தால் திருமுறை பற்றிய பதிவு., மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மார்கழி மாத குளிரில் குழந்தைகள் திருமுறைகள் பாடுவதை பார்க்க பரவசமாக உள்ளது. ஒவ்வொரு படங்களும் தங்கள் உழைப்பில் விளைந்தவை. அருமையோ அருமை.
திரு சங்கர் அவர்களின் பேட்டியை முடிந்த பொழுது பதிவாக எழுதவும். தங்கள் தளத்தின் மூலம் திரு சங்கரை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.
நம் சென்னையிலும் இந்த மாதிரி மாணவர்கள் ஆன்மிகத்தில் அசத்துவதை பார்பதற்கு வியப்பாக உள்ளது
நான் ப்ரீ டைம் கிடைக்கும் பொழுது திருமுறைகளை மனப்பாடம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளேன். 10 வருடங்களுக்கு முன் மனப்பாடம் செய்த பாடல்கள் மறந்து விட்டன. மீண்டும் தங்கள் தளத்தின் மூலம் திருமுறைகளின் அருமை பெருமைகளை படித்து மீண்டும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்து உள்ளேன். அதற்காக தங்கள் தளத்திற்கு நன்றிகள் பல.
இந்த ஞாயிறு அன்று மாணவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ள ஆசை
நன்றி
உமா வெங்கட்
எனாக்கு இந்த குழந்தைகள் திருப்பாவை பாடல்கள் பாடிக்கொண்டு செல்வதை பார்க்கும் பொழுது நான் சிறு வயதில் மதுரையில் மார்கழி மாதம் திருப்பாவை கிளாசிற்கு சென்றதும், தினமும் காலையில் பஜனையில் பாடியதும் ஞாபகத்திற்கு வருகிறது
Dear Sundar Sir
I really appreciate this article. I am searching suitable word in dictionary to appreciate you. Please continue and keep it up.
Really Super. Especially Shri Shankar is doing very good job in nurturing Thirumari Padalgal. Lord Shiva definitely will bless him. Moreover Pujiya Shri Mahaperiyava always liked this kind of activity very much. So it is needless to say that the Mahperiyava already blessed him and will bless him in future.
I will pray Mahaperiyava for the growth of his activity.
MARAVALLOUS
எழில் மிகும் சென்னை, சீர் மிகும் சென்னையாகிக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் மனதில் திருமுறைகளை நிறைத்துவிட்டால், நிச்சயம் வேறு தீமைகளுக்கு இடமில்லை, இதனை செவ்வனே நடத்திக் கொண்டிருக்கும் திருவாளர். சங்கர் அவர்களின் பாதம் போற்றுகிறேன். இம்மாபெரும் சேவையை எங்களுக்கு அறிமுகப் படுத்திய தங்களுக்கு நன்றிகள்.
வணக்கம் சுந்தர்.உங்கள் கண்ணில் எல்லா நல்ல விஷயங்களும் எங்கு சென்றாலும் உடனே பட்டுவிடுகின்றன. அவர்களுக்கு தேவையான உதவியும் செய்கிறிர்கள்.வாழ்த்துக்கள்.மிகவும் அழகான படங்கள்.பார்க்க பார்க்க தெவிடத்தாவை.திரு சங்கர் பற்றிய பதிவுக்கு ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம்.உங்கள் நற்பணி என்றும் தொடர வாழ்த்துக்கள் .நன்றி.
தலைப்பே போதும் – பதிவின் உட்பொருள் விளக்குவதற்கு.
பெரியவர்களே வாழ்வில் பாடம் சொல்லி தர தவறும் போது, இந்த மழலை செல்வங்கள் உணர்த்தும் பாடம் மட்டுமே நம்மை மண்ணில் நல்ல வண்ணம் வாழ உதவும்.
தாங்கள் கூறியது போல், ஒவ்வோர் வன்னபடமும் ஒரு கல்வெட்டு..ஒவ்வொன்றும் ஓராயிரம் வார்த்தைகளை சொல்லுகிறது..மழலை பட்டாளம் …
நாங்கள் நேரிடையாக நிகழ்வை கண்டது போல், செய்திகளை தொகுத்து வழங்கியமைக்கு நன்றிகள் அண்ணா..
திரு. சங்கர் அய்யாவினை வணங்கி மகிழ்கிறேன்.
சங்கர் அய்யாவுடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்று..விரைவில் நம் தளத்தில் எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
– திருஞானசம்பந்தர்