(Please check : ‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!)
அந்த பதிவை பார்த்துவிட்டு புதுவையை சேர்ந்த சம்பத்குமார் என்கிற வாசக அன்பர் ஒருவர், நமக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்தது என்னவென்றால்: “சிவலோகம் திவாகர் அவர்களை சந்தித்து அவரையும் அவரது துணைவியாரையும் கௌரவித்தது மிக்க மகிழ்ச்சி. என்னுடைய சிறு ஆலோசனை என்னவென்றால் திவாகர் அவர்களின் மகள் சிறுமி தாய் உமாவுக்கும் நீங்கள் ஏதேனும் பரிசளித்திருக்கலாம். குடும்பத்தில் அனைவரும் கௌரவிக்கப்ப்படும்போது அந்த சிறுமி மட்டும் சிரித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தது என்னமோ போலிருந்தது. நீங்கள் பொதுவாக இது போன்ற விஷயங்களை கூர்ந்து கவனித்து செயல்படுபவர். எப்படி விட்டீர்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் குறிப்பாக திருமுறை படிக்கும் கற்கும் குழந்தைகள் மீது நீங்கள் எந்தளவு அன்பு வைத்திருப்பவர் என்று எனக்கு தெரியும். இருப்பினும் சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியதால் சொல்கிறேன்!” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
அவர் கூறியதற்கு, “நன்றி. நீங்கள் சொல்வது உண்மை தான். தாய் உமாவையும் கௌரவித்திருக்கவேண்டும். இருப்பினும் அங்கு அவரது சூழலோ குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ எங்களுக்கு தெரியாது. அங்கே போனபிறகு தான் அவளை கவனித்தோம். அது உறுத்திக்கொண்டே இருந்தது. உங்கள் மின்னஞ்சல் மூலம் அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. விரைவில், நீங்கள் கூறியவாறு தாய் உமாவையும் கௌரவிக்கிறோம். அதற்குரிய வாய்ப்பு கனியும் என்று எதிர்பார்க்கிறோம்!” என்று கூறி அவரது ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பினோம்.
“என் ஆலோசனையை கருத்துக்களை ஏற்றுகொண்டமைக்கு நன்றி. உங்கள் வெற்றிக்கு காரணமே அது தான்!” என்று பதில் அனுப்பினார்.
நண்பர்களின் / வாசகர்களின் ஆலோசனைகளை அறிவுரைகளை கேட்டு நமது குறைகளை திருத்தி நிறைகளை பெருக்கி, உரியவற்றை செயல்படுத்துவதில் என்றுமே நாம் அலட்சியம் காட்டியது கிடையாது.
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். (குறள் 447)
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்னர் நம்மிடம் பேசிய சம்பத்குமார் அவர்கள் தாம் சென்னை வந்திருப்பதாகவும், நம்மை அலுவலகத்தில் சந்திக்க முடியுமா என்று கேட்டு செய்தி அனுப்பினார்.
நாம் அப்போது பன்னிரு திருமுறை இசை விழாவிற்கு சென்றிருந்தபடியால், மாலை 6 மணிக்கு மேல் அலுவலகம் வந்தால் சந்திக்கலாம் என்று பதில் அனுப்பினோம்.
பன்னிரு திருமுறை விழாவை முடித்துவிட்டு அலுவலகம் வந்தவுடன் சம்பத் அவர்களுக்கு நாம் அலுவலகம் வந்துவிட்ட தகவலை அனுப்பினோம். சற்று நேரத்திற்க்கெல்லாம் அலுவலகம் வந்துவிட்டார்.
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு காசி விஸ்வநாதரையும், அன்னை விசாலக்ஷியையும் தரிசித்துவிட்டு அப்படியே கோ-சாலையை பார்த்துவிட்டு வருவதாக கூறினார்.
நமக்காக பஞ்சவடியில் இருந்து அனுமனி பிரசாதம் கொண்டுவந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, உங்களுக்காக ஒன்று காண்பிக்கிறேன் என்று கூறி, சில புகைப்படங்களை காண்பித்தோம்.
மனிதர் நெகிழ்ந்துபோய்விட்டார்.
தாய் உமாவை சிவலோகத்தில் வைத்து நமது வாசகர்களை கொண்டு கௌரவித்து பரிசளித்த புகைப்படங்கள் தான் அவை.
“ரொம்ப நன்றி சார். நான் கூறிய வார்த்தைகளை சிரமேற்க்கொண்டு நிறைவேற்றிவிட்டீர்கள். எப்போ சார்.. எங்கே…?” என்றார் ஆவலுடன்.
=====================================================================
ஓவர் டு சிவலோகம்….
திவாகர் அவர்களை பேட்டி எடுத்த அன்றே சிவலோகத்தில் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் நடைப்பெறக்கூடிய திருவடி வழிபாட்டில் கலந்துகொண்டது பற்றி நாம் கூறியது நினைவிருக்கலாம். (ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்)
இருப்பினும் இன்னொரு முறை கலந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் இருந்தது. காரணம் அங்கு பூஜை நடைபெறும் நேர்த்தி மற்றும் அழகும்.
சென்ற வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு திரு.திவாகர் அவர்கள் தலைமை ஏற்றிருந்தபடியால், பிரார்த்தனை நேரம் நாம் அங்கு இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
தவிர பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்தவர்களில் ஒருவரான ராகேஷ் மற்றும் சில வாசகர்கள் சிவலோகம் திருவடி வழிப்பாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார்கள்.
எனவே அனைவரையும் சிவலோகம் வழிபாட்டு கூடம் அமைந்துள்ள போரூர் வசந்த் & கோ அருகே வரச் சொல்லிவிட்டோம்.
இதற்கிடையே நமது சிந்தனை ஓட ஆரம்பித்தது. மேற்படி சிவலோகம் திருவடி வழிப்பாட்டில் சிறுமி தாய் உமா உட்பட திரு.திவாகர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்வது வழக்கம் என்பதால் அங்கேயே வைத்து நமது வாசகர்களை கொண்டு கௌரவித்து விடலாம் என்று முடிவு செய்தோம்.
புத்தகங்கள் ஏதேனும் கொடுக்கலாம் என்றால் என்ன புத்தகம் கொடுப்பது? கொல்லன் தெருவில் ஊசி விற்க முடியுமா? எனவே புத்தகங்கள் வாங்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம். மேலும் தாய் உமாவின் வயதை மனதில்கொண்டு அவளுக்கேற்ற அவள் மனதுக்கு பிடித்த மாதிரி ஏதேனும் வாங்கித் தர விருப்பம். நிறைய விஷயங்கள் பரிசீலித்து கடைசியில் ஒன்றை தேர்வு செய்து அதை கிப்ட் பாக் செய்து மாலை சென்ற சிவலோகம் சென்றோம்.
ராகேஷ், பரிமளம், உமா வெங்கட், தாமரை வெங்கட் ஆகியோர் நமக்காக வசந்த் & கோ அருகே காத்திருந்தனர். நாம் சென்றவுடன் சிவலோகம் அழைத்துச் சென்றோம்.
நாம் செல்லும்போதே அங்கே தாய் உமா ஏற்கனவே வந்திருந்து பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தாள். வாசகர்களை அவளிடம் அறிமுகப்படுத்தி வைத்தோம். அனைவரையும் உபசரித்து அமரச் செய்தாள். திரு.திவகார் மற்றும் திருமதி.திவாகர் ஆகியோர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்துவிட அவரிடம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தோம்.
மாணிக்கவாசகராக தோன்றி நடித்த திரு.திருவடிச் சிலம்பன், மற்றும் வான்கலந்த மாணிக்கவாசகர் நாடகத்தின் முக்கிய பங்காற்றும் நாடக்குழு நண்பர்கள் மற்றும் ஏனையோர் வந்து சேர்ந்தவுடன் திருவடி வழிபாடு துவங்கியது.
திருவாசகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. திவாகர் அவர்கள் பாட அனைவரும் கூட சேர்ந்து பாடினோம். திருவாசகத்தில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொருமுறையும் கேட்க்கும்போதும் புதிதாக கேட்பது போலிருக்கும். சலிக்கவே சலிக்காது.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சும்மாவா சொன்னார்கள்.
பிரார்த்தனை கிளப் பற்றியும் பிரார்த்தனை பற்றியும் திவாகர் அவர்களிடம் ஏற்கனவே விளக்கியிருந்தபடியால் சரியாக 5.30 மணிக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. முன்னதாக திவாகர் அவர்கள் நமது பிரார்த்தனை கிளப் பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறி நமது தளத்தின் பணிகளை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து சில நிமிடங்கள் மெளனமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.
அனைவருக்கும் அபிஷேக நீர் தரப்பட்டது. பின்னர் இறைவனின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
சுமார் 6.00 மணியளவில் மங்களப் பதிகம் பாடி, தீபாராதனை காண்பித்த பிறகு திருவடி வழிபாடு நிறைவுபெற்றது.
வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்
அனைவருக்கும் இறுதியில் புளியோதரை பிரசாதம் அளிக்கப்பட்டது.
பூஜை குறித்து புதிதாக வந்த அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டது. நம் வாசகர்கள் உட்பட புதிதாக பங்கேற்ற அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறி, சிவலோகத்தில் நேரத்தை செலவிட நேர்ந்தது தங்கள் பாக்கியம் என்றனர்.
பிரார்த்தனை சமர்பித்திருந்த திரு.ராகேஷ் அவர்கள் இப்போதே தனது துன்பம் பாதியாக குறைந்துவிட்டதாக உணர்வதாகவும், சிவலோகதில் நேரத்தை செலவிடுவது தனது பாக்கியம் என்றும் அதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்த நம் தளத்திற்கு நன்றி என்றும் குறிப்பிட்டார்.
வாசகி உமா அவர்கள் பள்ளியெழுச்சி பாடி துவக்கி வைத்து இறுதியில் பொன்னூஞ்சல் பாடி நிறைவு செய்தார்கள்.
தொடர்ந்து திரு.திவாகர் அவர்கள் தனது நண்பர்கள் சிலரை கௌரவிக்க விரும்பி சபையில் அழைத்தார்.
அதில் முதன்மையானவர் திரு.சோலார் சாய்குமார் அவர்கள். சிவலோகம் சார்பாக அண்மையில் வெளியிடப்பட்ட ‘நால்வர் அருளிய நமச்சிவாய பாடல்கள் சி.டி.யில் பாடியிருப்பவர் இவர். ‘சொற்றமிழ் செல்வர்’ என்கிற பட்டத்தை தேவார முரசு திரு.கி.சிவக்குமார் அவர்கள் கரங்களால் பெற்றவர். அவருக்கு சிலோகம் சார்பாக ஒரு சிறு மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
அடுத்து பாராட்டப் பெற்றவர் திரு.மோகன்.
திரு.மோகன் அண்மையில் நடைபெற்ற ‘வான்கலந்த மாணிக்கவாசகர்’ நாடகத்திற்கு எல்.ஈ.டி. பணிகளை திறம்பட செய்திருந்தார். ‘வான்கலந்த மாணிக்கவாசகர்’நாடகத்தில் எல்.ஈ.டி.ஸ்க்ரீன் பயன்படுத்தியது இதுவே முதன்முறை. அந்த கன்னி முயற்சியை மிகப் பெரிய வெற்றிக்குரியதாக்கியிருப்பவர் அவர். அவருக்கு சிவலோகம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
தாய் உமா அவர்களை நமது வாசகர்கள் சார்பாக கௌரவிக்க விரும்புகிறோம் என்று திரு.திவாகர் அவர்களிடம் முன்னரே தெரிவித்திருந்தபடியால் நமது வாசகர்களை கொண்டு தாய் உமாவுக்கு பொன்னாடை அணிவித்தோம்.
தாய் உமா பற்றி நாம் குறிப்பிடும்போது, “இக்காலத்தில் குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து திருமுறைகளை பாடுவது மிக மிக அரிய காட்சி. நாங்கள் இங்கே வரும்போதே, பெற்றோருக்கு முன்னரே வந்திருந்து தாய் உமா திருவடி வழிபாட்டுக்குரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தாள். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சென்ற வாரம் திவாகர் அவர்களை அவரது இல்லத்தில் எங்கள் தளத்தின் பேட்டிக்காக சந்தித்தபோதே கௌரவித்திருக்க வேண்டியது. எனக்கு அப்போது தாய் உமா பற்றி தெரியாது. நேரே சென்றபோது தான் அறிந்துகொண்டேன்.தொடர்ந்து எங்கள் வாசகர் ஒருவரும் இது பற்றி குறிப்பிட்டு தாய் உமாவுக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதை வாசகர்கள் சார்பாக வைக்கப்பட்ட வேண்டுகோளாகவே ஏற்று நிறைவேற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம். தாய் உமா அவர்கள் தொடர்ந்து இது போன்று பெற்றோருக்கு சிவத் தொண்டில் உறுதுணையாக இருந்து எதிர்காலத்தில் சைவத்தில் ஒரு மிகப் பெரிய சொற்பொழிவாளராக வரவேண்டும். உலகெங்கும் மூளை முடுக்குகள் எல்லாம் சென்று எந்தை ஈசனின் பெருமையைபேசவேண்டும்” என்று அனைவரின் கரகோஷத்திற்கு நடுவே வாழ்த்து கூறினோம்.
தொடர்ந்து, நண்பர் சீதாராமன் அவர்களின் குழந்தைகள் வாரியாரின் வாரிசுகள் வள்ளி, லோச்சனா ஆகியோர் மூலம் தாய் உமாவுக்கு நம் தளம் சார்பாக எளிய அன்பளிப்பு தரப்பட்டது.
(இந்த வழிபாட்டில், திருவடிச் சிலம்பன் அவர்களிடம் பரத நாட்டியம் கற்று வரும் தமிழ் செல்வி என்கிற மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை பார்க்க நேர்ந்தது. அந்த குட்டி நெற்றியில் திருநீரை அவள் பூசிக்கொண்டிருந்த அழகு… நமக்கு ஏற்பட்ட பரவசத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நாகரீக கூளமாக மாறிவிட்ட சென்னையில் இப்படியும் கூட சில குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது ஆறுதல்.)
அனைவர் முன்னிலையிலும் அதை பிரித்து பார்க்குமாறு சொன்னோம்.
ஆவலுடன் பிரித்த தாய் உமா நாம் வாங்கித் தந்த பரிசை பார்த்து அகமகிழ்ந்தார். பெற்றோர் திவாகர் மற்றும் அவரதுத திருமதி.புவனேஸ்வரி திவாகர் இருவருக்கும் மிகவும் சந்தோஷம்.
“இது உனக்கே உனக்காக உன் சிவத் தொண்டுக்காக நாங்கள் தரும் எளிய பரிசு. பிடித்திருக்கிறதா?” என்று கேட்டோம்.
“ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள். ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள்.
தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம்
நிறைந்த துண்டோ அங்கே
நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பழமை நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே
பாசம் நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே!
சிவலோகம் வாராந்திர திருவடி வழிப்பாட்டில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வசாகர்கள் கீழ்கண்ட முகவரிக்கு ஞாயிறு மாலை 4.00 மணிக்கு செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி : சிவலோகம், எண் 5, முதல் பிரதான சாலை, ஜி.கே.எஸ்டேட், போரூர், சென்னை – 600116. (வசந்த் & கோ பின்புறம்). தொடர்புக்கு: திரு.சுரேஷ் 97910 77623.
=====================================================================
அலுவலகத்திற்கு வந்திருந்த வாசகர் சம்பத் குமார் அவர்களுக்கு அனைத்தையும் விளக்கி புகைப்படங்களை காண்பித்தோம். மிகவும் சந்தோஷப்பட்டார்.
பஞ்சவடி அனுமன் கோவிலில் இருந்து கொண்டு வந்த அனுமனுக்கு சாத்தப்பட்ட வடைமாலை வடைகள் கொஞ்சம் மற்றும் குங்குமப் பிரசாதம் ஆகியவை கொண்டு வந்திருந்தார். அனுமனின் பிரசாதம் தேடி வந்ததில் மிக்க மகிழ்ச்சி நமக்கு. அவருக்கு நம் தளம் சார்பாக சுந்தரகாண்டம் & நம் தளத்தின் சார்பாக 2015 ஆம் ஆண்டின் ‘மகா பெரியவா காலண்டர்’ அவருக்கு பரிசளித்தோம்.
நமது ‘VOLUNTARY SUBSCRIPTION’ – ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் இந்த மாதம் முதல் இணையவிருப்பதாக கூறியவர் அதை உடனே செயல்படுத்தியும் விட்டார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
எதிர்காலத்தில் நமது பணிகளில் உறுதுணையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
=====================================================================
முக்கிய அறிவிப்பு!
மகளிர் தின சிறப்பு பதிவு, மாசிமக தீர்த்தவாரி ஆகிய முக்கிய பதிவுகளை அளிக்கவேண்டியிருப்பதால் இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. எனவே சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருவதால் நம் தள வாசகர்களின் +2 தேர்வெழுதும் பிள்ளைகள் எந்த வித இடையூறும் இன்றி ஒருமுகமாக பாடங்களை படித்து தேர்வுகளை நல்ல முறையில் எழுதி அவர்கள் விரும்பிய உயர் கல்வியை படிக்க வேண்டும். அவர்கள் பெற்றோர் மனம் குளிரவேண்டும். இதை பொதுப் பிரார்த்தனையாக கொண்டு இந்த வாரம் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்த வாரம் அசத்தலான ஒரு பிரமுகருடன் பிரார்த்தனை கிளப்பை பார்க்கலாம்!
==============================================================
Also check :
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
பக்திக்கும் பாசத்திற்கும் உதாரணமாக இதோ பரமேஸ்வரன் புகழ் பாடும் ஒரு அன்னை !
அன்னையுடன் சில மணித்துளிகள் – குடியாத்தம் திருவாசகம் முற்றோதல் விழா அனுபவம்!
‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
‘என்னை தாலாட்ட வருவாரோ?’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்!
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
கலியின் தீமை, ஊழின் கடுமை நீக்கும் அருட்கொடை = பன்னிரு திருமுறை!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
திருமுறைகளை கண்டெடுத்த ராஜ ராஜ சோழன் !
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!
==============================================================
[END]
மிகவும் அருமையான பதிவு. நம் வாசகரின் கோரிக்கையை ஏற்று குழ்ந்தை தாய் உமாவை தாங்கள் கௌரவித்ததில் மற்றற்ற மகிழ்ச்சி. நாங்கள் போன வாரம் சிவலோகத்தில் திருவடி வழிபாட்டில் கலந்து கொண்டதில் மிகவும் பெருமையாக நினைக்கிறோம். திரு திவாகர் அவர்கள் பாட பாட நாமும் கூட பாடும் பொழுது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
தாய் உமா பாடுவதை கேட்க மிகவும் பிரமிப்பாக இருந்தது. இந்த சிறுவயதில் எவ்வளவு அபாரமான பக்தி இறைவனிடத்தில். அருமையான குழ்ந்தை. அவள் பெற்றோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எவ்வளவு அழகாக ஆன்மிக பாதையில் வளர்க்கிறார்கள்.
ஒரு அருமையான இடத்தை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி
அன்று மிக்க மகிழ்ச்சியுடன் ஊஞ்சல் பாடல் பாடினேன்., நான் சிவலோகதிற்குள் நுழைந்தவுடன் கைலாயத்திற்கு சென்ற உணர்வு ஏற்பட்டது. 2 மணி நேரம் இறை சிந்தனையில் இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. தங்களுக்கு மிக்க நன்றிகள் பல
நன்றி
உமா வெங்கட்
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்!
தெய்வீக மணம் கமழும் திரு திவாகர் அவர்கள் குடும்பத்தை பார்த்தாலே மனதிற்குள் புதிய நம்பிக்கை பிறக்கிறது.
சுந்தர்ஜி
தாய் உமா வாழ்வாங்கு வையகம் சிறக்க வாழ்கவென்று வாழ்த்துகிறோம். அவர்கள் தாய் தந்தை சிவலோகம் வாரவழிபாட்டு
மன்றம் நடத்தி எல்லோரும் இறை அருள் பெற என்றும் துணைபுரிய
வாழ்த்துகள் .
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
வாழ்க வளமுடன்
எல்லாம் அவன் செயல்
எல்லாம் சிவன் செயல்
சிவலோகத்தில் வைத்து தாய் உமாவிற்கு பாராட்டும் , பரிசும் ரைட் மந்த்ரா வாசகர்கள் முன்னிலையில் பெற வேண்டும் என்பதுவே இறைவன் சித்தம்
நன்றி
சிவலோகம் பதிவை படிக்கும் போதே அங்கு இருந்த சில மணித்துளிகள் நினைவுக்கு வந்து மெய் சிலிர்கிறது.
சிறுமி தாய் உமா மிகவும் பாராட்டப்படவேண்டிய குழந்தை.
கடவுள் அனுகிரகம் பெற்றவள். அவள் நாவில் தேவாரமும் திருவாசகமும் இனிமையாக நடனமாடுகிறது.
நல்லதொரு சிவ குடும்பத்தில் இருக்கும் அவள் மெம்மேலும் வளர்ந்து ஒரு சிறந்த ஆன்மிக பேச்சாளராக வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
அங்கு நாங்கள் இருந்த அந்த மாலைபொழுது கடவுள் எங்களுக்கு கொடுத்த ஒரு வரமாக கருதுகிறோம்.
நம் தளத்தை நாம் நம் குடும்பமாக கருதுவது போல அங்கும் ஒரு சிறந்த குடும்பத்தை பார்க்க முடிந்தது.
எந்த ராகமும் தெரியாமல் திவாகர் சார் அடியெடுத்து கொடுத்தவுடன் அதை பின்பற்றி அதே மாதிரி நம்மை அறியாமலே நாம் பாடுகிறோம்.
கடவுளின் கருவறையில் இருந்த உணர்வுக்கு ஆட்படுவோம்.
முடிந்தால் ஒரு முறை நீங்கள் அனுபவபட்டு வாருங்களேன்.
நன்றி சுந்தர் சார்.
வணக்கம் சுந்தர் .படங்கள் அருமை. சிறுவயதில் திருவடி பூஜையில் கலந்துகொள்ளும் சிறுமி தாய் உமாவிற்கு வாழ்த்துகள்.
சிவலோகம் திருவடி வழிபாட்டில் நேரடியாக கலந்து கொண்டது போன்ற ஒரு இறை உணர்வினை ஏற்படுத்திய ஒரு நெகிழ்சியான பதிவு.
விரைவில் சிவலோக திருவடி வார வழிபாட்டில் கலந்து கொள்ள இறைவன் அருள் புரிய வேண்டும்.
நான் கடந்த திங்கள் அன்று, தங்கள் அலுவலகத்தில்,
தாய் உமாவின் புகைபடங்களை பார்த்தபோது, அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. சந்தோஷத்தில்
வார்த்தைகள் வெளி வரவில்லை.
மிக சிறப்பான பரிசு தேர்வு. அழகிய மினி முருகன் திருவுருவச் சிலையை, பரிசாக பெற்ற தாய் உமாவின் முகத்தில் உள்ள பரவசம் மனதிற்கு நிறைவினை தந்தது.
மற்றும்மொரு முறை, எனது உளமார்ந்த நன்றியினை நமது தளத்தின் வாயிலாக தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
மிக்க நன்றி.
சுந்தர் அண்ணா ..
சிவலோகம் ..ஒரு இனிய அனுபவம்.
மிக்க நன்றி அண்ணா.
வணக்கம்……….
சிவலோகம் ஆனந்த மயம்……அங்கு இருந்த ஒவ்வொரு அடியார்களின் முகத்திலும் அவ்வளவு ஆனந்தம்………அந்த ஆனந்தம் எங்களையும் தொற்றிக் கொண்டது……….திருவாசக பாடல்களை முதன் முதலில் ராகத்துடன் பாட கற்றுக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது……….அன்று முதல் “பஞ்சேர் அடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே” என்ற வரிகள் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன…….
தாய் உமாவிற்கு வாழ்த்துக்கள்………அவளது புன்னகையைப் பார்க்கும் போது நம் தாய் உமாவையே பார்ப்பது போன்றுள்ளது……. சிவலோகத்தை அறிமுகப் படுத்திய தங்களுக்கு எமது நன்றிகள்……
(இவ்விடத்தில் உமா அக்கா மற்றும் பரிமளம் அக்காவின் பின்னூட்டங்களை சேர்த்து படித்துக் கொள்ளவும் )