Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

print
கா பெரியவரே ‘தாத்தா ஸ்வாமிகள்’ என அன்போடு அழைத்த பெருமைக்குரியவர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்.  ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் கர்நாடகாவில் மங்களாபுரி எனும் இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட சுப்பிரமணியன், பண்டரிபுரம் சென்றிருந்த போது ஜோதிர்மடத்தின் பீடாதிபதியான சிவரத்னகிரி சுப்பிரமணியனைத் தனது சீடராக ஏற்றுக் கொண்டார். ஜோதிர்மடம் என்பது ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்று. சுப்பிரமணியனுக்கு 39 வயதான போது சிவரத்னகிரி அவருக்கு ‘ஞானானந்தகிரி’ எனும் பெயரைச் சூட்டித் தனக்குப்பின் பீடாதிபதியாகும் பொறுப்பை அளித்தார்.

Sathguru-Gnanananda 1பீடாதிபதி பொறுப்பேற்ற சில காலத்திலேயே ஞானானந்தகிரி வேறொருவரிடம் பீடாதிபதி பொறுப்பை ஒப்படைத்து விட்டு இமயமலைக்குத் தவமியற்றச் சென்று விட்டார். கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடன்றி திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்றார்.

திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்திய இவர் அங்கிருந்தபடி தன்னைப் பின்பற்றியோருக்கு வழிகாட்டினார். தனது தபோவனத்தில் 1974 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.

தபோவனத்தில் ஞானவிநாயகர், ஞானஸ்கந்தர், ஞானவேணுகோபாலர், நவக்கிரகங்கள் ஆகியோருக்குச் சிலைகள் நிறுவினார். நாமசங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் அவரது சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவமளிக்கின்றனர்.

இவர் மற்றவர்களை அழைக்கும்போது ‘நாம்’ என்று தான் குறிப்பிடுவார்.

நீ எப்போ வந்தே? என்று கேட்கவேண்டும் என்றால், “நாம எப்போ வந்தோம்?” “நாம இருந்து சாப்பிட்டு போகலாமே” என்று தான் குறிப்பிடுவார். படிப்பதற்கே ஆனந்த யாழை மீட்டுவது போல இருக்கும். (கீழ்கண்ட அனுபவத்தை படியுங்களேன்… புரியும்!)

மகா பெரியவர் இவரை ‘தாத்தா ஸ்வாமிகள்’ என்று தான் குறிப்பிடுவார். பெயர் சொல்லியே குறிப்பிடமாட்டார். மகா பெரியவரும் இவரும்  பக்தர்கள் வாழ்வில் பல லீலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர்.

தாத்தா சுவாமிகளின் பிறப்பே ஒரு பிரம்ம ரகசியம் தான். அதை அத்தனை சுலபத்தில் எவரும் இன்னும் அறிய முடியவில்லை. தை கிருத்திகை தான் இவரது அவதார ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

இந்த தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் துவக்கத்தில் சுவாமிகளை பற்றி சில தகவல்களை பார்த்துவிட்டு அதற்கு பிறகு இவரது மகிமைகளை படிப்போம்.

ஆனால் ஆனந்தத்தை அள்ளித் தரும் இந்த ஆத்ம ஞானியைதேடி நாம் ஏற்கனவே புறப்பட்டாயிற்று…! பிரம்மிக்கத்தக்க விஷயங்கள், ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரிய புகைப்படங்கள், குருவின் பாடல்கள் என இந்த தொடர் குருவருளால் களைகட்டும் என் நம்பலாம். கூடுமானவரை இது குருவாரமான வியாழனன்று அளிக்கப்படும்.

(இதற்கு முன்பு நாம் துவக்கி அளித்துக்கொண்டிருக்கும் மகா பெரியவா தொடர்பான குரு தரிசனம் தொடர், மற்றும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மகாத்மியத்தை விளக்கும் ‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’  தொடர் ஆகியவையும் தொடர்ந்து ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அளிக்கப்படும். எப்படி இருந்தாலும் வியாழன்தோறும் குருவருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு!)

இன்று குருவாரம். எனவே குருவின் மகிமை இல்லாமலா?

நண்பர் வெங்கட் நமக்கு சமீபத்தில் மின்னஞ்சல் அனுப்பிய அருமையான அனுபவம் இது. படியுங்கள். ஆனந்தத்தை அள்ளி பருகுங்கள். குருவின் அருளில் திளையுங்கள்.

==================================================================

தேங்காயை வைத்து ஒரு திருவிளையாடல் !

(Courtesy: Sri. PV.Sundaram)

ல வருஷங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை தரிசித்த பின், பூண்டி வந்தேன். அங்கு பூண்டி மகானின் அனுக்கிரகம் பெற்றுக் கொண்டு, திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த தபோவனம் வந்தேன். மாலை ஐந்து மணி இருக்கும்.

gnananda-3 copyஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவராக நமஸ்கரித்து எழுந்து, பிரசாதம் பெற்றுச் சென்றனர். அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை மாதிரி சிரித்துப் பேசும் குரு நாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்!

அப்போது, ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர் நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை ஸத்குருநாதனை உட்பட அனைவரும் சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார். உடம்பு முழுவதும் திருநீறு பூசி, முழங்கால்களுக்குக் கீழ் வரை உடுத்திய நான்கு முழ வேட்டியுடன் ஸத்குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார்.

அவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. ”என்ன சோனி… என்ன விசேஷம்? ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற ஹனுமன் மாதிரி அப்படியே நிக்கறமே… ஏதாவது சமாசாரம் உண்டோ?” என்று கேட் டார் ஸத்குருநாதன்.

சோனி உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை. சிரித்தவாறே, ”நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறதுலேர்ந்தே, ஏதோ முக்கிய மான விஷயத்துக்காக ‘அடி’ போட வந்துருக்கோம்னு புரியறது. சரி… அது என்னனுதான் சொல்வோமே” என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த சித்த புருஷர் கேட்டார்!

அதற்கு சோனி தயங்கியபடி, ”அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். எங்கள மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி” என்று முடிப்பதற்குள், ”சரி… சரி… நாம வந்த விஷயத்தச் சொல்வோம்” என்றார் ஸ்வாமிகள்.

சோனி மென்று விழுங்கியபடி, ”அது… அது… வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா! எம் மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு செஞ்சுருக்கேன். இன்னும் நாலு… அஞ்சு நாளுக்குள்ளாற முகூர்த்த ஓல எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத்தோணும். குருநாதன்தான் அருளு செஞ்சு கூட்டி வைக்கோணும்!” என்று பவ்வியமாகப் பேசிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.

உடனே ஸ்வாமிகள், ”ஓஹோ… ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறயாக்கும். பேஷ்… பேஷ்! பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷப் படறோம். பாண்டுரங்கன் கிருபைல எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்” என பூரணமாக ஆசீர்வதித்தார்.

gnananda-4மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் சோனி.

அதை உணர்ந்த குருநாதன், ”அதிருக்கட்டும்… நமக்கு எத்தனை பசங்கள்?” என்று வினவினார். உடனே சோனி, ”நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும் பொட்டப் புள்ளைங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவ தான் மூத்தது. மீதி, ரெண்டும் சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்…” என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் முகத்தில் ‘எல்லாம் புரிந்தது’ போன்ற ஒரு புன்முறுவல். இருந்தும், புரியாத மாதிரி, ”நம்ம பேத்தி கல்யாணத்துக்கு சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்?” என்று கேட்டார்.

சோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், ”மூர்த்த ஓல எழுதறதுலேருந்து, திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு செனத்தியல்லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா புடிக்குது குருநாதா. இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான் அனுக்கிரகம் பண்ணணும்!” என்று பிரார்த்தித்தார்.

குருநாதன் அதைக் காதில் வாங்காதது போல், ”அது சரி… ஒம் பையன் என்ன பண்றான்?” என்று கேட்டார்.

சோனி, ”அவுனுக்கு, திருக்கோவிலூர்ல அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் புடிக்க முடியலே. எப்டியாச்சும் நீங்க தான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்” என்று உருகினார்.

உடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, ”நா ஒரு சந்நியாஸி. எங்கிட்ட வந்து பணங்காசெல்லாம் கேக்கறயே… இது என்ன ஞாயம்? நம்மால அதெல்லாம் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, ”உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும் கொண்டு வா!” என்று பணித்தார். கொண்டு வந்தார் அவர்.

இரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த தேங்காயையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில் அனுக்கிரகித்துவிட்டு, ”சோனி! இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா வாங்கிக்கோ… ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!” என்றபடி எழுந்து போய்விட்டார்.

அவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து நின்றார் சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி. தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், ஸத்குருநாதன் தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது. அங்கேயே நின்றிருந்த சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள். பரம பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு சிரிப்பு வந்து விட்டது. வந்தவர்கள் அனைவரும் ஸத்குருநாதனை நமஸ்கரித்தனர்.

அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்: ”நாமெல்லாம் குஜராத்திகளா?”

”ஆமாம் ஸ்வாமிஜி” என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சம்பாஷணை தொடர்ந்தது.

ஸத்குருநாதன், ”நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர்களில் ஒருவர், ”ராமேஸ்வரம் ஸ்வாமிஜி! வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை தரிசிக்க உத்தேசம்!” என்றார்.

ஸ்வாமிகள், ”ரொம்ப சந்தோஷம்… யாத்திரை ஷேமமா பூர்த்தியடைய ஆசீர்வதிக்கிறோம்!” என்றார். மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு அமர்ந்தனர். அப்போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பெரிய ரஸ்தாளி வாழைப்பழத் தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார். வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். அவர்களை பஜனைப் பாடல்கள் சிலவற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். இப்போது மணி 8.30.

பிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை நோக்கி, ”இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது ஒருத்தர் அதை உடைக்கணும்… முடியுமா?” என்று சிரித்தபடி கேட்டார். அனைவரும் எழுந்து நின்றனர்.

அவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். ”இதை உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக்கணும்… சம்மதமா?” எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.

தேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க முற்பட்டார். ம்… ஹூம்! அது உடையவே இல்லை! ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப் பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார் குருநாதன். சோனிக்கு ஜாடை காட்டி, அவரது மேல் வஸ்திரத்தைத் தரையில் விரிக்கச் சொன்னார். அவரும் விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், ‘ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்’ என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார் ஸத்குருநாதன்.

தொடர்ந்து ஆண் & பெண் என ஒவ்வொருவராக தேங்காயை உடைக்க முயன்றனர். ‘ஸ்ரீக்ருஷ்ணார்ப்பண’ சத்தமே கேட்டது! சோனியின் வஸ்திரம் ரூபாய் நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது! இப்போது இரவு மணி 10.

ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, ”இத்தனை பேராலயும் உடைக்க முடியலே! நாம உடைச்சுப் பாப்பமே… என்ன!” என்றார்.

உடனே சோனி, ”இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா! பலமே இல்லாம சோனியா இருக்கற நான் மட்டும் எப்டி ஒடைக்கப் போறேன்!” என நெளிந்தார்.

ஸ்வாமிகள், விடவில்லை. ”நாம அப்டி சொல்லப்டாது! முயற்சி பண்ணுவோமே!” என்று உற்சாகப்படுத்தினார்.

சோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, ”குரு நாதன் அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்!” என்று கூறிவிட்டு, ‘குருநாதனே துணை… குரு நாதனே துணை… குருநாதனே துணை!’ என மூன்று தடவை உச்சரித்து விட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார்.

thengai

ஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை நெருங்கிய சோனி, பலம் கொண்ட மட்டும் தேங்காயை பாறையில் அடித்தார். என்ன ஆச்சரியம்! அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது!

அனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து வணங்கினார் சோனி.

அவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், ”இவ்வளவு பேராலயும் ஒடைக்க முடியாத தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்!” என்று கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார். அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501.

ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், ”பேத்தி கல்யாணத்துக்கு நாம எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா அனுக்கிரகம் பண்ணினது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா நடத்துவோம். ‘ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்’னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய எடுத்துப்போம்!” என்றார்.

உடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி குலுங்கிக் குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின!

”எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.

==================================================================

உழவாரப்பணி அறிவிப்பு !

சிவராத்திரி நெருங்குவதையடுத்து நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி வரும் ஞாயிறு பிப்ரவரி 15 அன்று சென்னை பட்டாபிராமை அடுத்து அமைந்துள்ள ‘சித்துக்காடு’ என்னும் ஊரில் அமைந்துள்ள  தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெறும்.

Thathireeswarar
தாத்திரீஸ்வரர் கோவில்

எந்த உழவாரப்பணிக்கும் இல்லாத ஒரு சிறப்பாய் இந்த முறை அருகே அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள் என்னும் வைணவ திருத்தலத்திலும் உழவாரப்பணி நடைபெறும். மதிய உணவு ஏற்பாடு செய்யப்படும். வேன் பயணம். வாசகர்கள் விரும்பினால் தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கலாம்.

சுந்தரராஜ பெருமாள் கோவில்
சுந்தரராஜ பெருமாள் கோவில்

பிப்ரவரி 15 ஞாயிறு காலை 6.30 அளவில் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தின் அருகே இருந்து வேன் புறப்படும். திரும்பும் நேரம் மதியம் 1.00 மணி.

தொடர்புக்கு : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

==================================================================

Also check from our archives…

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

[END]

9 thoughts on “ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

  1. இன்றைய குரு வாரத்தில் சுவாமிஜியை பற்றிய பதிவை படிக்க மெய் சிலிர்க்கிறது. அவரின் அற்புதங்கள் நம் தளத்தில் வாரா வாரம் வரப் போவதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நான் சுவாமிஜி அவர்களின் அன்புக் கரங்களால் ஆசீர்வதிக்க பட்ட செல்ல மகள். நான் போன வருடம் தபோவனம் சென்று இருக்கிறேன். மிகவும் ஆனந்த மயமானதாக இருக்கும்.

    சுவாமிஜிக்கும் மகா பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை படிப்பதற்கு ஆவலாக உள்ளேன். சுவாமிஜி பலவித அற்புதங்களை செய்து இருப்பதை என் அம்மா சொல்லி நான் கேள்விபட்டு மெய் சிலிர்த்திருக்கிறேன். சுவாமிஜியின் கை எழுத்து மிகவும் அழகாக இருக்கும் . என் அம்மாவிடம் உள்ளது அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் போடோக்கள். இன்று இரவு என் அம்மாவிடம் இந்த கதையை ஷேர் பண்ணி விடுவேன் .

    மேற்கூறிய உண்மை நிகழ்ச்சி மிகவும் அருமை. அவர் கேட்காமலே நம் முகத்தை பார்த்து கொடுக்கும் மகான். திரு வெங்கட் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த கதையை நம் தளத்தில் வரச் செய்ததற்கு.

    உழவார பணி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    ஞானா நந்தா ! ஞானானந்தா ! ஞானானந்தா !

    நன்றி
    உமா வெங்கட்

  2. ஞானானந்தகிரி சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கங்கள்……..நம் தளத்தின் மூலம் பல குருமார்களின் தரிசனமும் அருளும் கிடைக்கிறது…………நன்றிகள் பல………உழவாரப் பணியில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம்………..

  3. Dear sir,

    I am really moved to read the article regarding thapovan swamji i am a great disciple and attracted to his panduranga bhajans article is really interesting and helped to know more about swamji it is also worth to mention that this swamji has left great disciple like haridoss giri and others to continue the spritiual journey towards panduranga.

    Yours faithfully,

    S.CHANDRA MOULI.

  4. Sunder Sir
    I came to know about many temples by reading your articles and temple service (Ulavarappani). Thank you from the bottom of my heart for the wealth of information you give in your articles.
    I am proud of you and your team for doing temple service. (ulavarapani).
    I wish I could participate in temple service, but cannot, I live far away from Madras.
    These days we hear that under the pretext of renovation, ancient paintings and idols in our temples (Madurai Meenakshi temple and so many other temples in Tamil Nadu) are damaged. Many temples are so poor that there is no money to light deepam. Devoted people like you and your team members are doing good service to protect our temples.

    I pray to God Almighty to give you and your team members long, healthy and prosperous life. Please continue your good work for our temples.
    Cheers
    Sakuntala

    1. நன்றி சகுந்தலா நாகேசன் அவர்களே.

      கும்பாபிஷேகம் செய்கிறோம், குடமுழுக்கு நடத்துகிறோம் என்று பல கோவில்களில் அவரவர் தத்தங்கள் இஷ்டப்படி தான்தோன்றித் தனமாக கருவறை கருங்கல் சுவர் மேல் கெமிக்கல் பெயிண்ட் அடிப்பது, சலவைக்கல் பதிப்பது என்று சீரழித்திருக்கிறார்கள்.

      ஒரிஜினல் கருங்கல் கட்டுமானத்துடன் கோவில்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

      கருங்கல்லில் நுண்ணிய துளைகள் உண்டு. அவை சுவாசிக்கும். அதன் மேல் பெயிண்ட் அடிப்பது மிகப் பெரிய தவறு. (எனவே தான் மூலஸ்தானத்தின் விக்ரங்களை அந்தக் காலத்தில் கருங்கல்லில் செதுக்கி வைத்தனர்.)

      அதே போல, கருவறையை சுற்றிலும் மார்பிளை பதிப்பதும் தவறு.

      பல பாரம்பரியம் மிக்க கோவில்கள் நாசம் செய்யப்பட்டுவிட்டன. எப்படி இவற்றின் பெருமையை எல்லாம் மீட்கப்போகிறோம் என்று தெரியவில்லை.

      மாலிக் கஃபூராவது கோவில்களின் செல்வத்தை தான் கொள்ளையடித்தான். நம்மவர்கள் அதன் பெருமையையும் பழமையையும் ஒருங்கே அழித்துவிட்டார்கள்.

      தடுத்து நிறுத்தி கோவில்களை செம்மைப்படுத்தவேண்டிய அறநிலையத் துறையோ ஊழலில் ஊறித் திளைக்கிறது.

      ஆனால் நான் என் நண்பர்கள் துணையுடன் இருட்டை சபிக்காமல் ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்ற முயற்சிக்கிறேன். என்னால் அது முடியும். மற்றது ஆண்டவன் விட்ட வழி.

      – சுந்தர்

  5. இந்த சிறப்பான பதிவிற்கு நன்றி சுந்தர்.

    நேற்று அந்த மின்னஞ்சலை படித்தவுடன் கிடைத்தப் பரவசத்தை தங்களுக்கும், நம் வாசக நண்பர்களுக்கும் அளிக்க விரும்பியே உடனே உங்களுக்கு அதை அனுப்பி வைத்தேன். அனுப்பும் போதே அதை வியாழன் அன்றே வெளியிடுவீர்கள் என்றே நினைத்தோம். மேலும் சுவாமிகளைப் பற்றியத் தொடரை வெளியிடப் போகிறீர்கள் என்பதை அறியும் போது குருவருள் நம் அனைவருக்கும் வந்து விட்டதைப் போன்றே உள்ளது.

    நன்றி,
    கே.எஸ். வெங்கட்.

  6. ஞானாந்தகிரி சுவாமிகளைப் பற்றி தற்பொழுதுதான் முதன்முதலாகப் படிக்கிறேன். கண்கள் பணிக்க சுவாமிகளின் அருளானந்தைப் பருகினோம். இம்மாபெரும் மகானைப் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  7. வாழ்க வளமுடன்

    குருவை நம்பினோர் கைவிடபடார்

    இது சத்தியம் சத்தியம் சத்தியம்

    நன்றி

  8. ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் பற்றி படிக்கும் முதல் பதிவு இது. இதுவரை அவரின் திருவுருவப்படத்தை மட்டுமே கண்டு இருக்கிறேன். அவரை பற்றி அறிந்ததில்லை.

    மிகவும் நன்றி சுந்தர் ஜி! மகான்கள் நடத்திய திருவிளையாடல்கள் அநேகம். அவற்றை எல்லாம் படிக்க படிக்க நெஞ்சம் நெகிழ்கிறது.

    மஹா பெரியவாளும் இது போல அநேகம் பேருக்கு அருள் புரிந்திருக்கிறார். அவரை நம்பி சீரும் சிறப்புமாய் நடந்த திருமணங்கள் ஏராளம். இந்த திருவிளையாடலை படிக்க, கேட்க நாம் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *