Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, July 27, 2024
Please specify the group
Home > Featured > புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும்!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும்!

print

வியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. இந்தப்பாடலைக் கவியரசர் அமைத்திருக்கும் முறையை சற்று ஆராய்ந்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள், கதைகள் நமக்கு கிடைக்கும். நாம் சர்வசாதாரணமாக கேட்டுக்கொண்டே கடக்கும் ஒரு பாடலுக்குள் இத்தனை இத்தனை விஷயங்களா என்று பிரமித்து போவீர்கள். ‘கண்ண’தாசன் அல்லவா?

எங்கும் அவநம்பிக்கைகளும், அச்சங்களும், எதிர்மறை எண்ணங்களும் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் இறைவனின் அருள்தன்மையை விவரிக்கும் இது போன்ற பதிவுகள் படிப்பதற்கே அத்தனை இனிமை தருபவை. சர்வ மங்கலம் தருபவை. இந்த ஒரு பதிவுக்குள் தான் எத்தனை எத்தனை வரலாறு. பீமனை ஆபத்திலிருந்து காத்தது முதல் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் வரை பல கிளைக்கதைகள் இப்பதிவில் உள்ளன.

ஆழ்ந்து படியுங்கள். ஊன்றிப் படியுங்கள். மங்கலம் பெருகி வாழ்வு சிறக்கட்டும்!

கவியரசு மின்னஞ்சல் தொகுப்பிலிருந்து….

* நம் தளத்தில் நாம் அளிக்கும் பதிவுகளை நீங்கள் தாராளமாக உங்கள் நட்பு வட்டங்களில் பகிரலாம். CONTENT ஐ காப்பி & பேஸ்ட் செய்வதை தான் நாம் கூடாது என்கிறோம். மேலே அட்ரஸ் பாரில் வரும் பதிவின் லிங்க்கை காப்பி செய்து உங்கள் முகநூலில் பேஸ்ட் செய்தால் போதும். இல்லையெனில் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ள  ஷேரிங் பட்டன்களை கொண்டு ஷேர் செய்யலாம். நன்றி!! *

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களும் ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும்! 

ண்ணனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடிய கவியரசர், மேலும் கண்ணனைப் பற்றிப் பாட ஆசைப்படுகிறார். அதனால் கண்ணனைப் பற்றி, கண்ணனிடம் நன்கு பழக்கப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கண்ணனைப்பற்றிக் கேட்க நினைக்கிறார். ‘கண்ணனுடன் நன்கு பழக்கப்பட்டவர்கள் யார், யார்?’ என்று சிந்தனை செய்யும் கவியரசருக்கு, முதலில் புல்லாங்குழல்தான் நினைவுக்கு வருகிறது.

‘புல்லாங்குழல் கண்ணனின்் கைகளில் தவழ்ந்ததோடு, அவன் உதடுகளிலும் பொருந்தி எல்லோரையும் மகிழ்விப்பதாயிற்றே.. வாசிக்கப்படாத நேரங்களில் கண்ணன் இடுப்பில் இருந்த பெருமையும் கொண்டதாயிற்றே.. அதனால்தான் கவியரசர் முதலில், புல்லாங்குழலைத் தந்த மூங்கில்களை அழைத்துப் பாடச் சொல்கிறார். அதுவும் யாரைப்பற்றி? புருஷர்களிலேயே உத்தமனான கண்ணனைப் பற்றி, தேவகியின் பிள்ளையான கண்ணன்தான் புருஷோத்தமன் என்று அமரசிம்மனின் அமரகோசம் (வடமொழி நிகண்டு) சொல்கிறது. ஆதிசங்கரரால் காப்பாற்றப்பட்ட அருமையான நூல் இது.

தமிழ் அகராதிகளில் மட்டுமல்ல.. வடமொழி அகராதியிலும் பயிற்சி பெற்ற கவியரசர்.. அதனால்தான் புல்லாங்குழலைப் புருஷோத்தமன் புகழ்பாட அழைக்கிறார்..

‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே..’

அடுத்தது, கவியரசருக்குக் கண்ணன் கங்கைக் கரையில் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்து விடுகின்றன. கங்கைக் கரைத் தோட்டங்களை அழைத்தால், அவை இங்கு வந்து நிற்குமா? புல்லாங்குழலைத் தந்த மூங்கில்களைக் கொண்டு வந்துவிடலாம். கங்கைக் கரைத் தோட்டங்களை எப்படி…?

அதனால் என்ன? கங்கைக் கரையிலேயே கண்ணன் செய்த இன்னொரு நிகழ்ச்சியும் கவியரசர் நினைவுக்கு வந்துவிடுகிறது. கங்கையில் பிராமணகோடி என்ற இடத்தில் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கும். பீமன் வழக்கப்படி அங்குதான் குதித்துக் குளிப்பான். அது தெரிந்த துரியோதனன், அதன் மூலமே பீமனை அழித்துவிடத் திட்டம் தீட்டுகிறான்.

பீமன் குதிக்கும் இடத்தில் (வெளியில் தெரியாதபடி) தண்ணீருக்குள் கூர்மையான ஈட்டிகளை நட்டு வைத்தான். அந்த ஈட்டிகளின் நுனிகளில் கடுமையான விஷம் பூசப்பட்டிருந்தன. அந்த விஷம் தண்ணீரில் கரையாதது. ஆனால் ரத்தத்தில் உடனே கரைந்துவிடும்.

‘பீமன் ஓடிவந்து குதிப்பான். ஈட்டிகள் அவன் உடம்பில் குத்தும். கடுமையான விஷம் உடனே அவன் ரத்தத்துடன் கலக்கும். பீமன் அவ்வளவுதான், அழிந்துபோய்விடுவான்.. ஆஹ்..ஆஹ்.. என்று எண்ணிச் சிரித்தான் துரியோதனன்.

பீமன் வழக்கப்படி குளிக்க வந்தான்.. ஓடிக் குதிக்க வேண்டியதுதான் பாக்கி.. அப்போது.. கண்ணன் அங்கே வந்துவிட்டான்.

‘பீமா! குதிக்கப் போகிறாயா? என்று பீமனிடம் பேச்சைத் துவக்கினான்.

பீமனும், ‘ஆமாம் கண்ணா! இதோ ஓ…டிப்போய் குதிக்கப் போகிறேன்’ என்று பதில் சொன்னான்.

அதற்குள் எதையோ உற்றுப் பார்த்தபடி கண்ணன் தண்ணீரை நெருங்கினான். அத்துடன் கையை நீட்டி பீமனை அருகில் அழைத்தபடியே.. ‘பீமா! சற்றுப் பொறு! அதோ பார்.. நீ குதிக்கும் இடத்தில், ஏதோ தெரிகின்றது’.. என்று சுட்டிக்காட்டினான்.

பீமன் கண்ணனை நெருங்கி, கண்ணன் சுட்டிக் காட்டிய இடத்தை உற்றுப் பார்த்தான். அங்கு, தண்ணீரில் பட்டும் படாததுமாகச் சில வண்டுகள் தாவிக் கொண்டிருந்தன. துரியோதனன் நட்டு வைத்திருந்த விஷ ஈட்டிகளின் மேல் பகுதியில்தான் அந்த வண்டுகள் தாவிக் கொண்டிருந்தன.

அதைக் கண்ட பீமன், ‘ஆமாம் கண்ணா! சில வண்டுகள்’ என்று இழுத்தான்.

கண்ணன், இப்போது என்ன செய்யப் போகிறாய்? அவைகளைக் கொல்லக் கூடாது.. போ.. ஓடி வந்து அவைகளைத் தாண்டி குதித்து விடு! என்று யோசனை சொன்னான்.

இரக்க குணம் மிகுந்த பீமன் கண்ணன் யோசனையை அப்படியே ஒப்புக் கொண்டு வண்டுகளைத் தாண்டிக் குதித்தான். குளித்துவிட்டுக் கரை ஏறினான்.

துரியோதனன் எண்ணம் பலிக்காதபடி கண்ணன் வண்டுகள் மூலம் பீமனைக் காப்பாற்றி விட்டான்.

கவியரசர் நினைவில் இந்த நிகழ்ச்சி நிழலாடுகிறது. மலர்கள் மலர்ந்திருக்கும் தோட்டம் மெளனமாகத்தான் கண்ணன் புகழைப் பாடும். ஆனால், அந்த மலர்களுடன் ரீங்காரமிட்டுப் பழகிய வண்டு, கண்ணன் புகழை ரீங்காரமிட்டுப் பாடுமே.. அதனால்,

வண்டாடும் கங்கை மலர்த்தோட்டங்களே.. எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களே..

என்று வாகான வார்த்தைகள் வந்து விழுகின்றன!

அடுத்து, இன்னும் யாரைக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறார், கவியரசர். அவர் நினைவில் அப்போது வந்தது மேகங்கள்தான். மழைபொழியும் மேகங்கள்தான் மெல்ல கர்ஜனை செய்தபடி முதலில் கண்ணனை தரிசித்தன.

இதைக் கவியரசர் சொல்லும்போது, வேறொரு அற்புதமான தகவலும் கிடைக்கிறது.

வி.ஐ.பிக்கள் வரும்போது.. பன்னீரைத் தெளித்தோ.. பூக்களைத் தூவியோ வரவேற்போம். சாதாரண வி.ஐ.பிக்களுக்கே இப்படி என்றால் ஜகத்குரு. க்ருஷண்ம் வந்தே ஜகத்குரும் என்று புகழ்பெற்ற கண்ணன் முதன் முதலில் திருவீதியுலா வருவது போல அதுவும் பிறந்தவுடன் வெளிக்கிளம்பி வரும்போது எப்படிப்பட்ட வரவேற்பை அளிக்க வேண்டும்? அதனால்தான் மழை மேகங்கள் பூத்தூவலாக மழைத்துளிகளைத் தூவி கண்ணனுக்கு ஒரு பெருத்த வரவேற்பை அளிக்கின்றன.

இதை உணர்ந்ததால்தான், கவியரசர் அந்த மேகங்களை அழைத்துக் கண்ணனைப் பற்றிப் பாடச் சொல்கிறார்.

பன்னீர் மலர்சொரியும் மேகங்களே.. எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே..

இதுவரை ‘புகழ் பாடுங்களே’ என்று சொல்லி வந்த கவியரசர், மேகங்களிடம் சொல்லும்போது மட்டும் ‘மெய்யழகைப் பாடுங்களே’ என்று சொல்லும் அழகைக் கவனிக்க வேண்டும்.

கண்ணனின் மெய்யழகை, திருமேனி அழகை முதலில் பார்த்தது மேகங்கள்தானே! அதனால்தான், கவியரசர் மேகங்களை அழைத்துப் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே.. என்று வேண்டுகிறார்.

கவியரசர் அடுத்து, ராகங்களை அழைத்துக் கண்ணன் பற்றிப் பாடச் சொல்கிறார். அதுவும் தென்கோடியில் இருந்து ராகங்களை அழைத்துப் பாடச் சொல்கிறார்.

கண்ணன் பிறந்தது வடக்கில்.. அதுவும் மதுராவில் அல்லவா பிறந்தான்? வடக்கே இருந்த ராகங்கள அழைத்து பாடச் சொல்லி இருக்கக் கூடாதா? தெற்கே இருந்து ராகங்களை ஏன் அழைக்க வேண்டும்?

கண்ணன் பிறந்தது வடக்கே என்று இருந்தாலும் கண்ணனைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களையும் கண்ணனையே கணவனாக அடைந்த ஆண்டாள் பாடல்களையும் தந்தது தென்திசைதான். ஆதிசங்கரர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆசார்யப் புருஷர்களில் இருந்து கண்ணனைப் பலவகையாகவும் பாடிய பாரதியார் வரை எல்லோரும் தோன்றியது தென்பகுதியில்தான். வடக்கில் இல்லை.

அது மட்டுமல்ல.. சங்கீதம், நாட்டியம் முதலான எல்லாக் கலைகளுக்கும் பிறப்பிடமே நம் பகுதியான தென்பக்கம்தான். அதனால்தான், நீண்ட கால அனுபவம் உள்ள தென்கோடியில் இருந்து ராகங்களை அழைத்துக் கண்ணனைப் பற்றிப் பாடச் சொல்கிறார் கவியரசர். வடகோடியில் இருந்து அழைக்கவில்லை.

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே.. எங்கள்
ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ்பாடுங்களே

‘பாடுங்களே’ என்று சொல்லிக் கவியரசர் அழைத்தவைகளில் இன்னொரு விசேஷமும் உண்டு. கவியரசரின் அழைப்புக்கு இணங்கி, புல்லாங்குழல், வண்டு, மழைபொழியும் மேகங்கள், ராகங்கள் முதலானவை எல்லாம் வந்து விட்டன. இவைகளை வரிசைப் படுத்திப் பாருங்கள்..

பாடல் பாடிக் கச்சேரி செய்ய வேண்டும் என்றால் பாடகர், பக்க வாத்தியங்கள், சுருதி முதலியவை வேண்டும்.

பாடல் பாட – தென்கோடி ராகங்கள்..
பக்க வாத்தியம் – புல்லாங்குழல் (வயலினுக்கு பதிலாக)
பக்க வாத்தியம் – மிருதங்கம் (கர்ஜனை செய்யும் மேகங்கள்)
கண்ணன் திரு அவதாரம் செய்தபோது மேகங்கள் மெள்ள மெள்ள கர்ஜித்தன என்கிறார் சுகாசார்யா பாகவதத்தில்.
சுருதி – ரீங்காரமிடும் வண்டு

கவியரசர், இவைகளை அழைத்துப் பாடச் சொன்னதன் விசேஷம் இப்போதுதான் புரிகிறது. மேலும் இதுவரை பாடுங்களே.. பாடுங்களே என்று சொல்லி வந்த கவியரசர், இந்தப் பாடலில் இதற்குப் பிறகு பாடுங்களே என்று சொல்லவே இல்லை.. கவியரசர் வேண்டுகோளுக்கு இணங்கி வந்தவைகள், இதோ கச்சேரியை ஆரம்பிக்கப் போகின்றன.

வண்டு சுருதி மீட்ட, புல்லாங்குழலும் கர்ஜிக்கும் மேகங்களும் பக்க வாத்தியம் வாத்தியங்களாக ஒலிக்க, ராகங்கள் பாட ஆரம்பித்துவிட்டன. ஆரம்பத்திலேயே கச்சேரி களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் பாடியது போல, யாருமே ராமனின் குழந்தைப் பருவத்தைப் பாடவில்லை. நமக்கே தெரிந்திருக்கும் இது ராகங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? அதனால் அவைகளும் கண்ணன் தவழ்ந்ததைப் பாடிக் கச்சேரியை ஆரம்பிக்கின்றன.

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்

தாங்கள் அனுபவித்த கண்ணன், ‘இதோ இன்றும் குருவாயூரில் அருள் புரிந்து கொண்டிருக்கிறான்’ என்பதைக் குறிக்கும் முகமாகத்தான் ‘தவழ்ந்தான்’ என்று பாடாமல், தவழ்கின்றவன் என்று நிகழ்காலத்திலேயே பாடுகின்றனர்.

‘அவன்’ என்று தாங்கள் கண்ட கண்ணனைச் சுட்டி, அவன் தான் இதோ குருவாயூரில் என்கின்றன.

கண்ணனைப் பற்றிப் பாட ஆரம்பித்த அவைகளுக்கு, உடனே கண்ணனின் மதுரா நகரம் நினைவுக்கு வந்து விடுகிறது.

ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்.. என்று பாடுகின்றன.

மதுராவில் ஒரே ஒரு கொடிதான் என்கின்றன. அதாவது, இரண்டாவது கட்சி என்பது கிடையாது.

அதற்குக் காரணம், கண்ணனின் மதுரத் தன்மைதான். அதாவது இனிமையான தன்மை என்பது பொருள். மதுராவில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணிடம் தங்களை இழந்தவர்கள். அங்கே எந்த விதமான பேதமும் கிடையாது. உண்மைதானே! மதுரம் இருக்கின்ற இடத்தில் எப்படி பேதம் வரும்? தானே வந்து விடாதா ஒற்றுமை? இப்படி உண்மையிலேயே தங்களைக் கண்ணனிடம் ஒப்படைத்து அவன் ஆளுமைக்கே உட்பட்டிருப்பவர்களுக்கு ஒரு கவலையும் கிடையாது. ஆள்பவன் கண்ணன் என்னும்போது கஷ்டங்கள் வர வழியே கிடையாது.

அதெல்லாம் சரிதான்.. அந்தக் கண்ணன் துவாபர யுகம். அதுவில்லாமல், கண்ணன் ஆண்ட வட மதுரா இங்கிருந்து தூரம் ஆயிற்றே? நாங்கள் எப்படி அவனை தரிசித்து எங்கள் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்வது? என்ற சந்தேகம் வந்து விடுகிறதல்லவா? அதற்கு விளக்கம் பாடலின் அடுத்த வரியில் வருகிறது.

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்..

திருப்பதி தல புராணம், ஸ்ரீ வேங்கடேச்வரலீலா மகாத்மியம் முதலான நூல்கள் எல்லாம், கண்ணன்தான் திருப்பதியில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக வந்தான் என்று தெளிவாகக் கூறுகின்றன.

கண்ணன் செய்த திருவிளையாடல்கள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றையும் யசோதை நேருக்கு நேராகவே பார்த்திருக்கிறாள். ஆனால், கண்ணனின் திருமணம் ஒன்றைக் கூட யசோதை பார்க்கவில்லை. ஒரு நாள் அவள் கண்ணனிடம் ‘கண்ணா ! எல்லோர் குறைகளையும் தீர்க்கும் நீ, என் குறையைத் தீர்க்கக் கூடாதா? என்று வேண்டுகிறாள்.

‘என்ன குறை தாயே’ என்று கேட்டான் கண்ணன்.

‘ஒவ்வொரு தாயும் தன் மகனுக்குத் திருமணம் நடப்பதைக் கண் குளிரப் பார்க்க வேண்டும் என்று நினைப்பாள். அந்த பாக்கியம் எனக்கு இல்லையே! உன் திருமணத்தை என்னால் பார்க்க முடியவில்லை! அந்தக் குறையை எப்படிப் போக்கப் போகிறாய்?’ என்று கேட்டாள் யசோதை..

‘அம்மா! கவலைப்படாதே! கலியுகத்தில் நான் ஸ்ரீநிவாசனாக அவதரிப்பேன்.. அப்போது மறுபடியும் நீயே எனக்குத் தாயாக வருவாய். உன் முன்னிலையிலேயே நான் திருமணம் செய்து கொண்டு, உன் குறையைத் தீர்த்து வைப்பேன்’ என்று கண்ணன் பதில் சொன்னான்.

கண்ணன் ஸ்ரீநிவாசப் பெருமாளாக வர, யசோதை வகுளமாலிகையாக வந்து ஸ்ரீநிவாசக் கல்யாணத்தில் தன் குறையைத் தீர்த்துக் கொண்டாள். இது திருப்பதி ஏழுமலையான் வரலாறு.

ஆகவே கண்ணனைக் காண முடியுமா? அவன் அருளை அடைய முடியுமா? என்றெல்லாம் வருத்தமோ சந்தேகப் படாதீர்கள். அதே கண்ணன், இதோ ஸ்ரீநிவாசப் பெருமாளாகத் திருப்பதி மலையில் எழுந்தருளியிருக்கிறான்.. வாருங்கள் என்று பாடுகின்றன ராகங்கள்!!

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்..

(இதை ‘அருள்கின்றவன்’ என்று நிகழ் காலத்திலேயே கவியரசர் கண்ணதாசன் சொல்லி இருப்பதை உணரும்போது அவரது பக்தி நம்மை வியக்க வைக்கிறது).

இப்படி சுவராசியமாகக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது, பாடிக் கொண்டிருந்த ராகங்களுக்கு ஓர் எண்ணம் வந்து விடுகிறது.

அடடா.. குருவாயூர் சொன்னோம். வட மதுரா சொன்னோம். திருப்பதியும் சொன்னோம். ஆனால், முக்கியமான அதுவும் மிகவும் முக்கியமான ஒன்றை விட்டு விட்டோமே.. சொல்லவில்லையே.. என்று நினைக்கின்றன.. என்ன அது?

திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம்தான் அது.

வைஷ்ணவத்தில் ‘கோயில்’ என்று எந்தவிதமான அடைமொழியும் இல்லாமல் சொன்னால், அது ஸ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும். மற்ற கோயில்களைச் சொல்லும்போது ஊர் பெயரையோ அல்லது சுவாமி பெயரையோ சொல்லிச் சொல்வோம். ஆனால் ஸ்ரீரங்கத்தை மட்டுமே கோயில் என்ற தனிச் சொல்லால் குறிப்போம். வைஷ்ணவத்தில் ராஜதானியாகவே மதிக்கப்படுவது ஸ்ரீரங்கம்.

அப்படிப்பட்ட ஸ்ரீரங்கத்தை விட்டுவிட்டோமே.. என்று ராகங்கள் நினைக்கின்றன.

அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்..

என்று பாடுகின்றன.

மகான்கள், ராகங்களைப் பெண் தேவதைகளாகச் சொல்வார்கள். பாடிக் கொண்டிருக்கின்ற பெண் பாலான ராகங்களுக்குத் தங்களைப் போன்ற ஒரு பெண், ராஜ சபையில் கதறி அழுதது நினைவுக்கு வருகிறது. ஆம்.. அந்தப் பெண் திரெளபதிதான். மாபெரும் வீரர்களான கணவர்கள் ஐவர் இருந்தும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது, பாஞ்சாலி கண்ணனை நினைத்துக் கதறி அழுகிறாள்.

பாஞ்சாலியின் கதறல் குரல் பரந்தாமன் கண்ணன் காதில் விழுகின்றது. உடனே அருள் புரிகின்றான். பாஞ்சாலியின் துயரம் நொடிப் பொழுதில் விலகி விடுகின்றது.

ராக தேவதைகளின் மனதில் இந்த நிகழ்ச்சி நிழலாடுகின்றது. உடனே அவை,

‘பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான்’

என்று பாடுகின்றன.

கூடவே, ‘அன்று பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்..’ என்றும் பாடுகின்றன..

பாஞ்சாலிக்கு அருள்புரிந்த கண்ணன் அப்போதே பாரதப் போரைத் தீர்மானம் செய்துவிட்டான். ‘சங்கை’ என்ற சொல்லுக்குப் (பகாப்பதமாகக் கொண்டால்) பயம், சந்தேகம் என்று பொருள்.

‘சங்கை எடுத்தான்’ பாஞ்சாலியின் மனதில் இருந்த பயத்தையும், சந்தேகத்தையும் நீக்கினான் கண்ணன்.

‘சங்கை எடுத்தான்’ என்ற சொல்லுக்குச் சங்கை முழக்கினான் என்ற பொருள் வரும் (பகுபதமாகக் கொண்டால் சங்கு+ஐ – சங்கை எடுத்தான்)

பாரதப்போர் ஆரம்பத்தில் உள்ள பகவத்கீதையில் கண்ணன் சங்கை முழக்கியதும் அதனால் உண்டான செயல்களும் அழகாக விளக்கப்படுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பாஞ்சஜன்யம் என்ற பெயர் கொண்ட சங்கை முழக்கினான். (மற்ற பாண்டவர்களும் தங்கள் சங்குகளை முழக்கினார்கள்) அந்தச் சங்கு முழக்க ஒலி திருதராஷ்டிர அணியினரின் இதயங்களைப் பிளந்திடச் செய்தது. இவ்வளவு நிகழ்ச்சிகளையும் மனக் கண்ணில் கண்டதால்தான் ராகங்கள், பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்.. என்று பாடுகின்றன..

சரி.. இதையெல்லாம் கண்ணன் செஞ்சு என்ன ஐயா பிரயோஜனம்? அடுத்தவன் சொத்தைப் பிடுங்கி பாண்டவர்களுக்குக் குடுத்துட்டாரே’ என்ற எண்ணம் வருகிறது அல்லவா? அதற்கு அடுத்த வரியில் ராகங்கள் விளக்கம் சொல்கின்றன.

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான்..

கண்ணன், யார் சொத்தையே பிடுங்கி பாண்டவர்களுக்குத் தந்துவிடவில்லை. பாண்டவர்களுக்கு உரிமையான பங்கைத்தான் கொடுத்தான். என்று கவியரசர் கண்ணதாசனின் ராகங்கள் பாடுகின்றன.

சரி! இதனால் நமக்கு என்ன லாபம்? என்று தோன்றுகிறது. எங்கு போனாலும், எதைச் செய்தாலும் நமக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்கும் சாதாரண மனிதனின் சுபவாம் அது. பாடலின் முடிவில் அதற்கு விளக்கம் வருகின்றது.

நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்..

என்று பாடி ராகங்கள் கச்சேரியை நிறைவு செய்கின்றன.

கீதையை நாம் படிப்பதற்காகக் கொடுத்திருக்கிறான் கண்ணன். இங்குக் கீதையைப் பாடம் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

பாடத்தை ஒருமுறை படித்தால் மனதில் பதியமாட்டேன் என்கிறது. பலமுறை படித்தால்தான் மனதில் பதிகிறது. இப்படிப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டு மட்டும் பிரயோஜனம் இல்லை. பரீட்சை எழுதும்போது அதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் வேண்டும்.

அதேபோலத்தான் பகவத் கீதையையும் பலமுறை படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் பிரயோஜனமில்லை. வாழ்வில் அது செயலாகவும் பரிணமிக்க வேண்டும். அப்போதுதான் துயரங்கள் நீங்கும்! உயர்வு வரும்!!

இதை நினைக்கும்போது, கவியரசர் கண்ணதாசன் ‘பாடம்’ என்ற சொல்லை இங்குப் பிரயோகித்து இருப்பதில் உள்ள அதிசயத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

கவியரசர் பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பகவத் கீதையையும் சேர்த்துச் சொல்வது அவரது வழக்கம்.. உதாரணம்..

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் – அந்தப்
பார்த்தன் அவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்

ஆட்டுவித்தால் என்கிற பாடலில் மேற்கண்ட பிரயோகம் உள்ளது.

ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இதை உணர்ந்து கொண்டால் கவியரசர் கண்ணதாசனின் ஆன்மீக ஞானம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

பாஞ்சாலிக்கு அருள் புரியும்போது, கண்ணன் நேருக்கு நேராக அங்கு வரவில்லை. தான் இருந்த இடத்தில் இருந்தபடியே மறைவாக அருள் புரிந்தான். ஆனால், அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்தபோதே நேருக்கு நேராக அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தான்.

கண்ணா! மாயவனே! நீ நேரில் தோன்றாமல் பாஞ்சாலிக்கு அருள் புரிந்தபடி செய்தாலும் சரி, அல்லது நேரில் (தேரில்) இருந்தபடியே பார்த்தனுக்குப் பகவத் கீதையை உபதேசித்து அருள் புரிந்தபடி செய்தாலும் சரி.. எப்படியோ எனக்கு உன் அருள் கிடைக்க வேண்டும் என்கிறார் கவியரசர்.

இப்படித் தன்னை மறந்த நிலையில் கவியரசர் கண்ணதாசன் இருந்தபோது,

கண்ணதாசா! கவி மன்னா! என்று அழைக்கும் குரல்கள் கேட்கின்றன! நீர் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த அவர் கண்களில் புல்லாங்குழல், வண்டு, மேகம், ராகங்கள் முதலியவை தெரிகின்றன. கச்சேரியை முடித்துவிட்டுக் கவி அரசரிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்காகத்தான் அவை அழைத்தன!

‘எங்கள் கண்ணனுக்கு உள்ள ஒரே ஒரு தாசனே! நாங்கள் சென்று வருகிறோம்.. விடை கொடுங்கள்! மறுமுறை நீங்கள் எப்போது அழைத்தாலும் நாங்கள் வருவோம்! என்று சொல்லி விடைபெற்று அவை போய்விட்டன.

அவைகளுக்கு விடை கொடுத்த கவியரசர், அந்த நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்தார்.. அதுதான் ‘புல்லாங்குழல்’ என்ற பாடல்!

ஒற்றைப் பாடலில் ஓராயிரம் பொருள் வைத்து என்று நாம் குறிப்பிடுவதற்கு இந்த ஒரு பாடல் அர்த்தம் சொல்கிறதே!! கற்பக விருட்சம் போல் கற்பனைகளும் கருத்துக்களும் கைகூடிய நந்தவனம் என் மன்னன் மனம்! ஆம் கவிதையின் மன்னவன் – கண்ணதாசன் பாடல் என்பது ஏதோ எழுத்தல்ல! அவன் எழுதியதுதான் எழுத்து!! அத்தனையிலும் உள்ளது ஆயிரமாயிரம் கருத்து!!

– ‘காவிரி மைந்தன்’ முத்தையா ரவிச்சந்திரன்

==========================================================

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Similar articles…

திரிதிராஷ்டிரன் ஏன் நூறு பிள்ளைகளையும் இழந்தான்?

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

அவமதிப்பும் வெகுமதியாக மாறும் – இறைவன் நினைத்தால்!

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? – குட்டிக்கதை

ராமநாமத்தின் விலை!

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

எது நிஜமான பக்தி?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *