கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?
சீடன் ஒருவன், “குருவே! இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?” என்று சந்தேகம் கேட்டான்.
“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்றார் குரு.
சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர், “சீடனே… பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?” எனக்கேட்டார்.
குழம்பிய சீடன், “சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?” எனக்கேட்டான்.
“இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?”
“கயிறை விட்டால் அது ஓடிவிடும்!”
“அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?”
“குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும், அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்…”
“உன்னைப் போலத்தான் இறைவனும், மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து, சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக, இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான்!” குரு சொல்ல, இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.
சிவனே சிவனே சிவனேயென் பார்பின்
சிவனுமையா ளோடும் திரிவன்; – சிவனருளால்
பெற்றஇளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச்
சுற்று பசுப்போல் தொடர்ந்து
– நீதிவெண்பா
விளக்கம் : பிறப்பது சிவனருளால். அவ்வாறு பிறந்த கன்றொன்று தன்னைப் பெற்ற தாயிடம் மிகுபாசம் கொண்டதேனும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்தில் ஓடுகிறது; அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது. அப்பசுவின் நிலையே சிவபிரான் நிலை. சிவனே, சிவனே, சிவனே என்று மனம் உருகிச் சொல்லுவார் பின்னே அச்சிவன் தன்னருமை உரிமையான உமையாளோடும் திரிவான். (பக்தர்களுக்கு எங்குச் சென்றாலும் அவர்பின்னே செல்வான் பரமன்!)
==========================================================
உங்களுக்காக இயங்கும் இந்த தளத்திற்கு இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Similar articles…
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
==========================================================
[END]
மிகவும் அருமை