வாக்களிப்பது நம் கடமையா என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ ஒரு அந்நியனுக்கு அடிமையாயிருப்பதை விட நான் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பெற்றது தானே சுதந்திரம். அந்த உரிமையைப் பயன்படுத்தாது போனால் அது நம் மடத்தனம் தானே…
இந்தியா ஜனநாயக அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்பும் நிறைவான ஓட்டு சதவிகிதத்தை அடையாதது வருத்தற்திற்குரிய விஷயம். வரும் 5 ஆண்டுகளுக்கு நம் மாநிலத்தை ஆளப்போவது யார் என்ற விஷயத்தை தீர்மானிக்கப்போவது நாம் ஒவ்வொருவரும் தான் என்பதை உணராத மக்கள் மனநிலை ஒரு முக்கிய காரணம்.
ஏழையோ, படிக்காதவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ, பெண்களோ யாராய் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு 18 வயது நிரம்பி இருக்கிறதா? உங்கள் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கையில். நமக்கு அடிப்படை உரிமைகளை வழங்கும் ஜனநாயகத்திற்கு வலு சேக்க கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுகளின் விழுக்காடு ஜனநாயகத்தின் லிமையை எடுத்துக்காட்டும் கண்ணாடி.
ஓட்டெனும் சீட்டு நம்மை ஆளவேண்டியவருக்கு நாம் கொடுக்கும் உத்தரவு. சினிமா தியேட்டர், சீரியல், மதுக்கடை என பல இடங்களில் பொன்னான நேரத்தை வீணாக்கும் நாம் ஓட்டளிக்க கொஞ்சம் நேரத்தை செலவிட யோசிப்போமானால் விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுத தவறியவர்கள் ஆகிவிடுவோம். இந்த உரிமையைப் பல சமயங்களில் பணம், அதிகாரம், சாதிச்செல்வாக்கு, பயமுறுத்தல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால் அது யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல தனக்குத் தானே செய்து கொள்ளும் சதி. ஓட்டுக்கு பணம் வாங்குவது மனசாட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டப்படி குற்றமும் கூட. ஓட்டுப்போட பணம் வாங்குபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை என்பது பலரும் அறியாத விஷயம்.
ஜனநாயகத்தில் மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனால் அதை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
எஸ்எம்எஸ் மூலம் நமக்கான வாக்குச்சாவடியைத் தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எபிக் என்று டைப் செய்து அத்துடன் தங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள எண்ணையும் டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு அனுப்பினால் எந்த வாக்குச்சாவடி என்ற தகவலை பெறலாம்.
இந்தியத் தேர்தல் அரசியலில் இன்னமும் எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. அதனால் நான் எதற்கு வாக்களிக்கவேண்டும் என்று சிலர் ஒதுங்கிப்போவதில் அர்த்தமில்லை. நம்பிக்கை இல்லை என்று ஒதுங்கியிருப்பது எந்த விதத்திலும் பயனளிக்காது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு யாருக்கும் ஓட்டளிக்கக் பிடிக்கவில்லையென்றாலும் ‘நோட்டா’ என்பதற்கு வாக்களிக்கலாம் என்ற புதியதொரு வழிமுறையும் உண்டு. ஓட்டுப்போட மறந்துபோனால் வாக்கின் வலிமையை உணராதவர்களாகிவிடுவோம்.
வாக்காளர் என்பது பெருமைக்குரிய விஷயமல்லவா. நான் இந்த நாட்டின் பிரஜை என்று சொல்லிக்கொள்வதில் சந்தோஷம் இல்லையா? எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குறிப்பதும் இந்த தார்மீக உரிமையைத்தானே. நியாமான முறையில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டளியுங்கள். பெண்களே நீங்கள் போராடிப்பெற்ற சுதந்திரத்தை வீட்டிலிருப்பவர்களுக்காக விட்டுக்கொடுக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள். காரணம் ஓட்டுரிமை நம் எதிர்காலத்தின் குரல்.
வாக்களிப்பது நமது கடமை, உரிமை. அதை விற்கக்கூடாது. அப்படி ஓட்டுக்கு பணம் வாங்குகிறவர்களை நாம் பார்த்தால் அவர்களிடம் வாக்களிப்பது நமது இன்றியமையாத கடமை. அதை நாம் விலைக்கு விற்கக்கூடாது என்று எடுத்துக்கூற வேண்டும். வெறும் ஆயிரம் ரூபாய்க்காக 5 வருடம் எதிர்காலத்தை விற்று விடாதீர்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், பின்னர் யார் தான் ஓட்டு போடுவார்கள்?
வாக்கை செலுத்தும் முன் கீழ்கண்ட உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.
* என் வாக்கு உயிருக்கு சமமானது. விலை மதிப்பீடு செய்ய முடியாதது.
* என் வாக்கு என்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கிறது
* என் வாக்கு ஐந்தாண்டு ஆட்சிக்கான அதிகாரம்
* வாக்களிக்க பணம் வாங்குவது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்கு தெரியும்.
* என் வாக்கு என் உரிமை, கடமை, பெருமை!
* என் மனசாட்சிப்படியே நான் வாக்களிப்பேன்.
* ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ உந்தப்பட்டு நான் வாக்களிக்கமாட்டேன்.
* நான் வாக்களிப்பது மட்டுமின்றி என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்கள் வாக்குரிமையை செல்த்திவிட்டனரா என்று உறுதி செய்து கொள்வேன்.
நம் தளவாசகர்கள் அனைவரும் நாளை எந்த வித சாக்கும் போக்கும் சொல்லாமல் வாக்குச் சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்கவேண்டும். சூழ்நிலைகள் மீது பழியை போட்டு வாக்குச் சாவடிக்கு செல்ல மறுக்கும் சோம்பேறிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான்.
நீங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி, சென்ற முறை தாங்கள் அளித்த வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றியது என்பதை கணிக்க தவறாதீர்கள். வாய்ச்சொல் வீரார்களையும் மணலால் கயிறு திரிப்பவர்களையும் புறக்கணியுங்கள்.
நமக்கு தேவை செயல்வீரர்கள். அதற்க்கு ஏற்ப உங்கள் வாக்கு அமையட்டும்.
நோட்டா வேண்டாமே…
“யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்னும் ஆப்ஷனை கொண்ட நோட்டாவில் அதிக வாக்கு பதிவானால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்தாகி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும், மாவட்ட ஆட்சி தலைவர் பொறுப்பேற்றுக்கொள்வார் என்ற ரீதியில் எல்லாம் வதந்திகள் உலா வருகின்றன. அது தவறு.
ஒரு தொகுதியில் 1,00,000 வாக்காளர்கள் என்று வைத்துகொள்வோம், தொகுதி முழுக்க வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து ஒரே ஒருவர் மட்டும் தான் விரும்பிய வேட்பாளுக்கு வாக்களித்தால் கூட அவர் தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவருக்கு டெப்பாசிட் தொகை கிடைக்காது அவ்வளவுதான். மற்றபடி நோட்டாவுக்கு வாக்களிப்பது ஒரு போதும் தீர்வாகாது.
ஏனெனில், நோட்டாவில் அதிக வாக்கு பதிவானால், அரசியல் கட்சிகள் திருந்தி அடுத்த முறை நல்ல வேட்பாளர்களை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ஒருவர் வெற்றிபெறும் வரை, நோட்டாவுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தன விழவில்லை என்று யாரும் கவலைப்படப்போவதில்லை.
வாக்களிக்க வாக்களிக்கத் தான் ஜனநாயகம் முதிர்ச்சியடையும். தவறாமல் வாக்களியுங்கள். அது நம் உரிமை, பெருமை, கடமை!!
[END]
சுந்தரரே….!
நீங்கள் பிரசுரித்திருக்கும் தினமலர் முருகராஜின் எழுத்துக்கள் ஒரு நடுநிலை கட்டுரை அல்ல, தற்சார்புடையது அவ்வளவே. தினமலருக்கு பொதுவாக வேறொரு பெயர் உண்டு அதை குறிப்பிட்டு என்னை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.
எனக்கும் அது தெரியும். நான் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதால் தான் இங்கே பகிர்ந்தேன். நான் நடுநிலையானவன் என்று காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கருதினேன். மற்றபடி, நீங்கள் ஆதரிக்கும் கூட்டணியை ஒருவர் ஆதரித்தால் தான் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியும் அது தான் சரியான முடிவு என்று எப்படி கருதலாம்?
நீங்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பது அல்லது பரப்புரை செய்வது உங்கள் உரிமை. ஆனால், அது சுயமுன்னேற்றம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு தளத்தில் (உங்கள் தளமாகவே இருந்தாலும்) மற்ற கட்சிகளை பழித்தும், உங்கள் கட்சியை உயர்த்தியும் பதிவு செய்வது எந்த விதத்தில் சரி? தளம் நடுநிலையாக இருக்கவேண்டும் – நீங்கள் இல்லாவிட்டாலும்…
தவறு என்றால் சுட்டி காட்ட வேண்டியதும் எங்கள் கடமை தானே!!!
நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். உரிமை உள்ளது. யாருக்கு? என் பயணத்தின் துணை நிற்பவர்களுக்கும் நான் நல்லது செய்யும்போது தவறாமல் தட்டிகொடுப்பவர்களுக்கும் நிச்சயம் தவறு செய்யும்போது குட்டவும் உரிமை இருக்கிறது. நண்பர் எம்.ஜி.ஆர்.ராஜா அத்தைகைய உரிமை உள்ளவர். எனவே தான் அவரது கருத்தை பிரசுரித்து, என் கருத்தை தெரிவித்தேன்.
அப்படியே நண்பரின் வாயியாக நான் ஒரு சார்பு கருத்து தெரிவித்திருந்தாலும் மிகவும் நாசூக்காக நாகரீகமாக இலைமறைவு காய் மறைவாகத் தான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் தவறு எதுவும் இல்லையே? நண்பர் முருகராஜை விட நூறு மடங்கு என்னால் பாயிண்ட்டுகளை அளிக்க முடியும். இருப்பினும், நீங்கள் சொன்ன அந்த ஒரு காரணத்துக்காக (அது சுயமுன்னேற்றம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு தளத்தில்) என் கருத்தை முடக்கி, ஒரு பத்திரிக்கை ஆசிரியரின் கருத்தை வெளியிட்டேன்.
மேலும், இந்தப் பதிவுகளைத் தான் இங்கு அளிக்க வேண்டும், இவற்றை அளிக்கக் கூடாது என்பதெல்லாம் எனக்கு நானே விதித்துக்கொண்ட வரைமுறைகள். அவ்வளவே.
நிச்சயம் எதிர்காலத்தில் இதை கவனத்தில் கொள்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி.
நண்பர்கள் சிலரிடம் ஆலோசித்தேன். சரி பாதி கிட்டத்தட்ட உங்கள் கருத்தை பிரதிபலித்தார்கள். (நடுநிலைமை!) எனவே கட்டுரையின் அந்தப் பகுதியை நீக்கிவிட்டேன். தற்போது தங்களுக்கு ஒ.கே. தானே?
புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி, சுந்தர்.
உங்களை போலவே மக்களின் கருத்து அறிந்து திருத்தி கொள்ளும் ஒரு கட்சி இருந்து இருந்தால், நேற்று முடிவெடுக்க வசதியாய் இருந்திருக்கும். 🙂 சரி, அரசியல் இதற்கு மேல் பேசி என்ன பயன்?
🙂
சுந்தரரே…!
நான் சுட்டிக்காட்ட விரும்பியது… தங்களின் கட்டுரையின் தலைப்பிற்கும் உள்ளீடாக இருந்த தினமலர் பத்திரிக்கையாளர் திரு முருகராஜ் அவர்களின் செய்திக்கும் உள்ள முரண்பாட்டையே தவிர வேறெதுவும் இல்லை.
நன்றிகள் பல…..
மத்த பதிவுகளையும் கொஞ்சம் படிக்கிறது? 🙁