கீழ்கண்ட கதையை படியுங்கள்…
பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!
அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.
அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.
வாசலில் சத்தம். “ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்க… சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி….” உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.
இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே… எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.
பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை…. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ “இல்லை போய்வா” என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.
“யோவ்… அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே… போ முதல்ல இங்கேயிருந்து…தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை”
“ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி… ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை … முதல்ல இடத்தை காலி பண்ணு”
அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.
அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா…?
பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது… தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.
பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டுபோயவிட்டான். அவன் சற்று பின்வாங்க… இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.
பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல… இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.
ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.
எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.
இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம்… “பிரபோ… வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்” என்று கூற….
“என்ன சொல்கிறாய்… சித்திரகுப்தா…. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?”
“ஆம் பிரபோ!” என்கிறான் சித்திர குப்தன்.
“இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்…”
மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் “இல்லை பிரபோ…. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை” என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.
இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.
“இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது… எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்” என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க… அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.
(நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)
“தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?” என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.
“இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்… இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?”
அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.
ஆனால் வாயுதேவன் மட்டும்… “நீதிதேவா…. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான் தான்!” என்றான்.
அதை கேட்ட எமன், “நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்” என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.
அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.
இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)
பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது. (அடியேன் உட்பட!).
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.
ஆகஸ்ட் 6 – ஆடி அமாவாசை
வருகிற ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை. அன்றைய நன்னாளில் பித்ருக்களுக்குரிய கர்மாக்களை தவறாது செய்தும் தான தர்மங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டும் தங்களது கணக்கில் ஏராளமான புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும் என வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
========================================
Also check :
பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
========================================
எமது தந்தை வழி பித்ருக்களுக்குரிய ஈமக்கிரியைகளை எமது தந்தை மூலம் செய்வதற்கு ஆடி அமாவாசையன்று மேற்படி ஆலயத்திற்கு வரும் ஆகஸ்ட் 6 அன்று எம் தந்தையுடன் செல்லவுள்ளோம். (நான் துணைக்கு தான் செல்கிறேன். அப்பா தான் எல்லாவற்றையும் செய்வார்.)
இந்த ஆலயம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மேற்படி ஆலயத்தில் ஆடி அமாவாசை அன்று காலை 7.30 க்குள் இருக்க வேண்டும். ஆகையால் அதிகாலையில் சுமார் 5.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவோம். நம்முடன் இணைந்து தங்கள் பித்ருக்கடனை செலுத்த விரும்புபவர்கள் தவறாமல் நம்மை தொடர்புகொள்ளவும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
M : 9840169215 | E : simplesundar@gmail.com
========================================
[END]
ஒரு பிச்சைக்காரனை புத்தரின் சீடர் சந்தித்தார் . அவனுக்கு தர்ம உபதேசம் செய்ய ஆரம்பித்தார் . “” ஆசையை விடு, ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்’ என்று நீண்ட சொற்பொழிவை அவனிடம் நிகழ்த்தினார். பிச்சைக்காரனுக்கோ கடும் பசி. இவர் சொல்வதெல்லாம் அவன் காதில் ஏறுமா என்ன… அவன் பாதி மயக்கத்தில், ஏதோ கவனத்தில் இருந்தான்.
சீடருக்கு கோபம் வந்து விட்டது. அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
புத்தரிடம் சென்று , “”ஐயனே! நான் ஒரு பிச்சைக்காரனுக்கு நல்ல பல உபதேசங்களைச் செய்தேன். அவற்றை அவன் காதிலேயே வாங்கவில்லை. நான் கோபித்துக் கொண்டு வந்து விட்டேன்,” என்றார்.
புத்தர் சீடரிடம்,”” அவனை என்னிடம் அழைத்துக்கொண்டு வா,” என்றார்.
சீடனும் பிச்சைக்காரனை தேடி அழைத்து வந்தார். புத்தர் அவனது நிலையைப் பார்த்தார். பல நாட்களாய் சாப்பிடாததால் பஞ்சடைத்த கண்களையும் , ஒட்டிய வயிறையும் பார்த்த அவர், அவனுக்கு வயிறார உணவளித்து அனுப்பி விட்டார்.
சிடர் அவரிடம்,” அவனுக்கு உணவளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லை! ஏனோ!” என்று கேட்டார்.
“” சீடனே! அவனுக்கு முதல் தேவை உணவு. அதைக் கொடுத்து விட்டேன். இனி அவன் உபதேசம் கேட்க வருவான் பார்..” என்றார்.
பசியுள்ளவனிடம் ஆன்மிகம் மட்டுமல்ல… எதைப் ப ற்றி பேசினாலும் புரியாது. இதனால் தான் அன்னதானத்திற்கு நம் முன்னோர்கள் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.. …புரிகிறதா!
மனோகரன், சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான கதையை பகிர்ந்திருக்கிறீர்கள்!
பாராட்டுக்கள்!!
– சுந்தர்
சுந்தர் சார்,
நல்ல ஒரு வலிமை உடைய கருத்துக்களை உடைய பதிவு.
ஆடி அமாவாசை பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் நீங்கள் நம் வாசகர்களை முன்னிட்டு எந்த ஒரு நல்ல நாளையும் அதன் நல்ல பலன்களையும் எங்களை சேரும் வண்ணம் கொடுப்பது தான் உங்கள் ஸ்பெஷல்.
எச்சை கையால் காக்கை ஒட்டாத கருமிக்கே ஆடி அமாவாசை தந்த புண்ணியம் அளவில்லாதது.
ஆரம்பத்தில் கணக்கு பார்த்து செய்யும் செயல் நாளடைவில் ஒரு கடமையாக மாறிவிடும் என்பது உண்மைதான்.
உங்கள் மூச்சே இந்த தளம் தான் என்று உங்கள் வாசகர்களாகிய எங்களுக்கு தெரியும். நீங்கள் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
சுந்தர்ஜி
மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. முடிந்த அளவு புண்ணியம் தேட எங்களுக்கு நீங்கள் உதவும் பல பதிவுகளில் இதுவும் ஒன்று. தானங்களில் “போதும்” என்று பெறுபவன் சொல்லும் ஒரே தானம் அன்னதானம் மட்டும் தான். அமாவாசை நாளில் பித்ருக்கள் வேறு ரூபத்தில் பூமிக்கு வருவதால் முடிந்தளவு மனிதர்க்கு மட்டுமல்ல காகம், நாய், பசு போன்ற அனைவர்க்கும் அன்னதானம் அளிக்கலாம்.
சுந்தர்ஜி,
அருமையான பதிவு மற்றும் உபயோகமுள்ள பதிவு.
இப்போது யாரை கேட்டாலும் கல்யாணம் ஆக வில்லையா
பித்ரு தோஷம் உள்ளது என்று சொல்லி விடிகின்றார்கள். நம் சந்ததிகளின் நலன் வேண்டி தாய் தந்தை இல்லாதவர்கள் இந்த நாளை பயன்படுத்தி நல் வாழ்வு பெறுவோம்.
தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும். ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
இந்த கதையை படிப்பதற்கு முன்னே .எனக்குள்ளே அடிக்கடி ஒரு கேள்வி எழுவதுன்ன்டு அதாவது இந்த பிறவியில் நல்லது மட்டுமே செய்கின்றவனுக்கு ஏகப்பட்ட சோதனைகளும் வேதனைகளும் அடிக்கடி வருகிறது அநியாயங்கள் செய்கின்றவனுக்கு நல்ல சுகமான வாழ்க்கை வீடு வாசல் வாகனம் அன்பான மனைவி இப்படி எல்லாம் கொடுத்துள்ளாய் ஆனால் என் போன்று எறும்புக்குகூட தீங்கு நினைக்காத மனிதர்களுக்கு ஏன் தாங்கமுடியாத சோதனைகள் வேதனைகள் கொடுக்கின்றாய் இறைவா! என அடிக்கடி புலம்பி இருக்கின்றேன்.ஆனால் அவற்றிற்கு எல்லாம் பாவ புண்ணிய கணக்கு உள்ளது என மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் இது மனதிற்கு ரொம்பவே ஆறுதலான விஷயம் தான்…
மனோகள் சார் எடுத்துக்காட்டியதைபோல ஆசையை விடு, ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம்”என ! ஆசையை விடுவது அத்துணை சுலபமா என்ன? மனித பிறவி எடுத்ததன் நோக்கமே ஆசைதானே …
பயனுள்ள பதிவுகள் இட்டதிற்கு..
நன்றிகள் …
munnorgal athmakkal சாந்தி பெறட்டும்,
முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்கட்டும்
பெஸ்ட் ஒப் லக் சுந்தர் சார்
அருமையான தகவல்
தர்மம் செய்யும் அதே வேலையில் பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பொன்மொழியை மறக்கலாகாது – நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தர்மம் அதன் தன்மையிலிருந்து விலகாது அதை வேண்டுவோரிடம் சரியான நேரத்தில் சென்று சேருமேயானால் அதன் பலன் என்றென்றும் நிலைத்திருக்கும் !!!
கடன்கள் எல்லாவற்றுக்கும் முதன்மையான கடன் பித்தரு கடன் அதனை அடைக்க வில்லையெனில் நமது ஜென்மம் கடைதேராது !!!
நல்ல பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி.