Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > எது நிஜமான பக்தி?

எது நிஜமான பக்தி?

print
மீபத்திய ‘சக்தி விகடன்’ இதழில் படித்த கதை இது. சிறிய கதை தான். ஆனால் வலுவான மெசேஜ். அதுவும் குருவாரத்தில் பகிர்வதற்கு ஏற்றாற்போல் குருவின் உபதேசத்துடன் சேர்ந்து இருந்ததால் இங்கே பகிர்கிறோம்.

பிளஸ்டூ தேர்வுக் காலம் துவங்கி முடிவுகள் வரும் வரையிலும் பக்திப் பழமாகத் திகழ்ந்தான் பக்கத்து வீட்டு பார்த்தசாரதி. விடியற்காலையில் தெருமுக்கு பிள்ளையாருக்கு 108 தோப்புக்கரணம், வீட்டில் பூஜையறையில் உட்கார்ந்து அனுமனிடம் பிரார்த்தனை, மாலையில் சிவாலயத்தில் நவகிரக தரிசனம்… மற்றபடி ஃபேஸ்புக், வாட்ஸ் அப் விஷயங்களுக்கெல்லாம் விட்டாச்சு லீவு! பின்னே… பிளஸ்டூ தேர்வில் நல்லபடியாகத் தேர்ச்சியாக வேண்டுமே! அதனால்தான் இந்த திடீர் பக்தி!

Ganapathy prayerஎதிர்வீட்டு ஏகாம்பரத்தின் இல்லாள் இன்பரசியும் இரண்டு வாரங்களாக பக்தியில் மூழ்கித் திளைக்கிறாள். வெள்ளிக்கிழமை மாங்காடு அம்மனுக்குப் புடவை சாத்துகிறாள். சனிக்கிழமை தோறும் தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் சென்று, வரிசையில் நின்று பெருமாளை சேவிக்கிறாள். மற்ற நாட்களில் மாலை வேளைகளில் லோக்கல் அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கு ஏற்றுகிறாள். வீட்டில் இருக்கும் நேரங்களில், பிளேயரில் ஸ்லோகங்களை அலறவிடுகிறாள்; அல்லது, பிரேயரில் உட்கார்ந்துவிடுகிறாள். மற்றபடி, டி.வி. சீரியல்களுக்கு பை.. பை! கல்யாணத்துக்குப் பெண்ணின் ஜாதகத்தை வெளியே எடுத்தாகிவிட்டது. பகவானே, சுபஸ்ய சீக்கிரம் அது முடிஞ்சுடணும்!

மற்றொரு நண்பரான புண்ணியகோடியின் மகன், வாரம் ஒரு திருத்தலம் என்ற முறையில் திருச்செந்தூர், மதுரை, சுவாமிமலை, சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோயில்… இதோ இந்த வாரம் ஏரிகாத்த ராமர் கோயிலுக்குக் கிளம்பிவிட்டார். அவர் உயிருக்கு உயிராகக் கருதும் ஐ.பி.எல் போட்டிகளைக்கூட தியாகம் செய்யத் துணிந்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காரணம், இப்போது பிரமோஷன் சீஸன். அப்ரைஸல் அது இது என்று அலுவலகமே பரபரப்பாக இருக்கிறது. பிரமோஷன் கிடைத்தால், சிங்கப்பூர் டாலரில் நீச்சலடிக்கலாம். ஒரு நடை அமெரிக்கா போய், நியூயார்க் பிள்ளையாரையும் கும்பிட்டுவிட்டு வரலாம்.

Maha-periyava-about-kamarajarசிவானந்த லஹரி’யில் பக்தியின் லட்சணத்தை ஆதிசங்கரர் வர்ணித்திருப் பது பற்றி, காஞ்சி பெரியவர் கூறுகிறார்…

”அழிஞ்சில் விதை எப்படித் தாய் மரத்துடனேயே ஒட்டிக்கொள்கிறதோ, ஊசி எப்படி காந்தத்தால் கவரப்படுகிறதோ, பதிவிரதை எப்படி தன் பதியின் நினைவிலேயே ஆழ்ந்திருக்கிறாளோ, கொடி எப்படி மரத்தைத் தழுவி வளர்கிறதோ, நதி எப்படி சமுத்திரத்தில் கலக்கிறதோ, அப்படியே பசுபதியின் பாதாரவிந்தங்களில் சதா சர்வ காலமும் நம் மனதை அமிழ்த்தியிருப்பதுதான் நிஜமான பக்தி என்கிறார் பகவத் பாதர். முதலில், பொருள் வேண்டும், அந்தஸ்து வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குண விசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்தும் பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவோம்” என்கிறார் காஞ்சி முனிவர்.

உண்மைதான்! நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். பிளஸ் டூவில் பாஸ், மகளுக்குத் திருமணம், டாலரில் நீச்சல்… எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்!

(நன்றி : சக்தி விகடன்)

[END]

 

7 thoughts on “எது நிஜமான பக்தி?

  1. சூப்பர் மெசேஜ்.

    //அவனருளாலே அவன் தாள் வணங்கி //

    நாம் பகவானிடம் அன்பு செலுத்தி அவன் பாதாரவிந்தங்களை பற்றுவோம்

    குருவே சரணம் … குரு கடாக்ஷம்

    நன்றி
    உமா வெங்கட்

  2. பகவானின் அன்பை தவிர வேருஒனறும் வேண்டுவது இல்லை என்கிற நிலை அடைய மாபெரும் மனப்பக்குவம் வேண்டும்.
    அதை நோக்கி பயணிப்போம்..

    குருவே சரணம்

  3. நேற்று எனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை நம் தளத்தில் பதிய ஆசைப்படுகிறேன்.

    எப்பொழுதும் போல், நேற்று காலை மாணிக்கவாசகரின் ‘திருவெம்பாவை ‘பாடல் படித்துக் கொண்டு இருந்தேன். எங்கள் வீட்டில் உள்ள வில்வ மரத்தின் இலைகளை தினமும் மகா பெரியவருக்கு சமர்ப்பிவது வழக்கம். திருவெம்பாவை 4 வது பாரவில் உள்ள ”விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கு இனியானை ” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது மகா பெரியவா wooden statueவில் (திரு சானு புத்திரன் நம் ரைட் மந்த்ரா ஆண்டு விழாவில் என் மகனுக்கு கொடுத்தது) வைத்த வில்வம் , அவருக்கு முன்னால் ஏற்றிய காமாக்ஷி அம்மன் விளக்கில் வந்து (விளக்கும் அணையாமல்) வந்து அமர்ந்து விட்டது. ( இத்தனைக்கும் காற்று கூட இல்லை பூஜை ரூமில் ) மிகவும் ஆச்சர்ய மான நிகழ்வு இது. மகா பெரியவா என்னை ஆசிர்வதிப்பது போல் இருந்தது எனக்கு. உணர்ச்சி பெருக்கால் என் கண்கள் கலங்கியது.

    நன்றி
    உமா வெங்கட்

    1. வணக்கம் திரு உமா வெங்கட் . உண்மையிலே மஹா பெரியவ உங்களை ஆசிர்வதிருகிறார்.எல்லாம் நலமோடு நடக்க பெரியவா துணை இருப்பார் .நன்றி.

  4. ரொம்ப நல்ல விஷயம் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.ஆழ்ந்த பக்திக்கு மகாபெரியவ அனுக்ரஹம் கிடைப்பதை நமக்கு நிச்சயம் காட்டி விடுவார்.மகாபெறியா
    வஎதிருவடிகளே சரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *