Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > “மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

“மீனை வாயில் வைத்து பாடு, வாதம் தீரும்” – இது குருவாயூரப்பன் லீலை!

print

ங்கில வைத்தியம் எனப்படும் அலோபதி கடந்த எழுபது எழுபத்தைந்து ஆண்டுகளாகத் தான் நடைமுறையில் உள்ளது. அதற்கு முன்பு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை நாட்டு வைத்தியம் தான். மந்திரத்தால் வியாதி குணமானவர்கள் கூட பலர் உண்டு. அதைத்தான் ‘மணி மந்திர ஔஷதம்’ என்றார்கள்.

கோவில்களில் பஜனம் என்று சொல்லக்கூடிய விரத முறையை அனுஷ்டித்து சுவாமி பிரசாதத்தையே மருந்தாக உட்கொண்டு வியாதிகள் நீங்கப் பெற்றவர்கள் பலர் உண்டு.

கி.பி.1560 வது ஆண்டு. பரசுராமன் படைத்த பூமி என்று அழைக்கப்படும் கேரளா மாநிலம்.

அங்கு திருநாவா என்ற திருத்தலத்திற்கு அருகில் மேல்புத்தூர் இல்லம் உள்ளது. அங்கு ஒரு ஆச்சாரமான நம்பூதிரி குடும்பத்தை சேர்ந்த நாராயண பட்டத்திரி என்பவர். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகாபண்டிதர். பட்டதிரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார். ரிக் வேதத்தை மாதவாசாரியார் என்பவரிடம் அத்யயனம் செய்தார். தர்க்க சாஸ்திரத்தை தாமோதராசாரியார் என்பவரிடம் கற்றார். வியாகரணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் கற்றுப் பதினாறுவயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கினார்.

ஒரு முறை இவருக்கு வாத நோய் ஒன்று ஏற்பட்டது. தமது ஊழ்வினையாலே தான் தனக்கு இப்படி ஒரு நோய் வந்தது என்று தன்னை தேற்றிக்கொண்டவர் அதை நீக்கிக்கொள்ள என்னென்னெவோ முயற்சித்தும் அதனால் கிஞ்சித்தும் பயனில்லை.

அந்த ஊருக்கு ஒரு ஜோதிடர் வந்திருப்பதாக கேள்விப்பட்டவர் தனது வேலைக்காரனை அழைத்து அவனிடம் தனது ஜாதகம் அடங்கிய சுவடியை கொடுத்து “உடனே சென்று அவரிடம் இதைக் காட்டி என் நிலைமையை விளக்கி அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா. என்னால் நடக்கக் கூட முடியவில்லை என்று சொல்…” என்று கூறி வேலைக்காரனை அனுப்பினார்.

எஜமானரின் உத்தரவை ஏற்று ஜோதிடரை பார்க்கச் சென்றான் வேலைக்காரன்.

இங்கே நம்பூதிரி ஆவலுடன் காத்திருந்தார். சென்ற வேலைக்காரன் சிறிது நேரத்தில் அலறியடித்துக்கொண்டு திரும்பினான்.

“என்ன நடந்தது? ஏன் இப்படி பதட்டத்துடன் வருகிறாய்? எனக்கு ஏதாவது மருந்து சொன்னாரா ஜோதிடர்?”

“ஐயா தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயிலிருந்து தப்ப நிச்சயம் பரிகாரம் இருக்கிறதாம்…”

“பின்னர் ஏன் இவ்வளவு பதட்டத்துடன் வருகிறாய்?? அவர் என்ன பரிகாரம் சொன்னார்?”

“ஐயா அது வந்து… வந்து… நம் குருவாயூர் ஷேத்திரத்திற்கு நீங்கள் சென்று மீனை நாக்கில் வைத்து பாடவேண்டுமாம். அப்படி பாடினால் நோய் குணமாகுமாம்…”

“ஓ… அவ்வளவு தானா? இதற்கு தான் இத்தனை களேபரம் செய்தாயா?” என்கிறார் நம்பூதிரி சர்வ சாதாரணமாக.

“என்ன சுவாமி இப்படி சொல்லிவிட்டீர்கள்… குருவாயூர் கோவிலை எத்தனை ஆச்சாரத்துடன் சுத்தபத்தமாக பராமரித்து வருகிறார்கள்… ஒரு கைக்குழந்தை அசுத்தம் செய்தாலே பல மணிநேரம் கோவில் நடை சாற்றிவிட்டு பரிகாரம் செய்வார்கள். அப்படிப்பட்ட கோவிலில் மீனை வாயில் வைத்துக்கொண்டு எப்படி பாடுவீர்கள்? அதுவும் ஆச்சார சீலரான தாங்கள் அதை செய்வதை காட்டிலும் இந்த நோயுடனேயே இந்த மேல்புத்தூரில் உங்கள் காலத்தை கழிப்பது சிறந்தது” என்றான் கோபால குட்டன் என்கிற அந்த பணியாள்.

நம்பூதிரி சிரித்தார். ஏனெனில் ஜோதிடர் கூறிய பரிகாரத்தை உட்பொருள் அவருக்கு தெரிந்திருந்தது.

தனது பணியாள் சொன்ன எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், “கோபாலா இன்றே நாம் குருவாயூர் புறப்படுகிறோம். வேண்டிய ஏற்பாடுகளை செய்” என்று உத்தரவிட்டார்.

கோபால குட்டனோ பயந்து நடுங்கினான்.

“இதென்ன சுவாமி அநியாயம். ஒரு அநாச்சாரத்துக்கு நீங்கள் போவதா? நானும் துணைவருவதா? நான் வரமாட்டேன். நீங்கள் போவதற்கும் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றான் பிடிவாதத்துடன்.

நம்பூதிரி, இதென்ன வம்பாய் போய்விட்டதே என்று கவலைகொண்டு அவனை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் அவன் சமாதானமடையவில்லை.

“ஜோதிடர் சொன்னதற்கு அர்த்தம் நீ நினைப்பது போல இல்லை. அது வேறு” என்று பலவாறாக எடுத்துச் சொல்ல, ஒரு வழியாக அரை மனதுடன் சம்மதித்தான்.

“ஜோதிடர் உன்ணாண்ட என்ன சொன்னார் அதை சொல்லு”

“குருவாயூருக்கு போய் குருவாயூரப்பன் சந்நதியில் மத்ஸ்யம் தொட்டு பாடச் சொல்லு” அப்படின்னார்.

”மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்” என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவானின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். மீன். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். ‘மத்ஸ்யம் தொட்டு பாடு’ன்னா மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி பகவானின் தசாவதாரத்தையும் பாடச் சொல்லுன்னு அர்த்தம். அதனால நான் குருவாயூரப்பன் சன்னதியில் பகவானோட தசாவதாரத்தையும் பாடப்போறேன்” என்று விளக்கி கூறிய பின்னரே கோபால குட்டன் சமாதானமடைந்தான்.

“ஷமிச்சுக்கோங்க எஜமான். ஒரு பிராமணனனை மீனைத் தொட்டு பாடச் சொல்லுன்னு சொன்னவுடனே எனக்கு கோபம் வந்துடுத்து. வேற மாதிரி புரிஞ்சுண்டேன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுங்குறது உண்மை தான்” என்றான்.

தனது நோய் தீர தீர்வு கிடைத்தது என்பதைவிட தனது குருநாதர் தனக்கு கற்றுக்கொடுத்த சமஸ்கிருதத்தில் பகவானைப் பாட ஒரு அற்புதமான சந்தர்ப்பம் கிடைத்து என்பதை நினைத்தே நம்பூதிரி சந்தோஷப்பட்டார். பகவானின் கருணையை எண்ணி எண்ணி கண்ணீர் உகுத்தார்.

நாராயண பட்டதிரிக்கு எந்த மருந்தில் தீராத அவரது வாத நோய், வெறும் பாடல்களை குருவாயூரப்பன் சன்னதியில் பாடுவதால் மட்டும் குணமாகிவிடுமா என்ன என்று அவநம்பிக்கை கொண்டிருந்தனர் அவர் குடும்பத்தினர். இருப்பினும் அவரது ஆர்வத்தை பார்த்து அவர் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார் என்று அவர்கள் அவரது குருவாயூர் பிரயாணத்திற்கு இசைத்தனர்.

பட்டத்திரியை ஒரு பல்லக்கில் தூக்கி சுமந்துகொண்டு குருவாயூர் சென்றனர்.

பட்டத்திரியின் மனம் முழுக்க குருவாயூரிலேயே லயித்திருந்தது. எப்போது குருவாயூர் வரும் என்று அவர் மனம் காத்திருந்தது. குருவாயூரப்பனை தரிசிக்க மனம் ஏங்கியது.

குருவாயூர் நோக்கி செல்லச் செல்ல அவர் வியாதி குறித்த அச்சம் அவரை விட்டு மெல்ல மெல்ல அகன்றது. இந்த பிணியால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. இனி எல்லாவற்றையும் குருவாயூரப்பன் பார்த்துக்கொள்வான். காலை விஸ்வரூப தரிசனத்தின் போது குருவாயூரில் இருப்போம் என்று பலவாறாக சிந்தித்தபடி இருந்தார் நாராயண பட்டத்திரி.

அடுத்த நாள் விடியற்காலை குருவாயூர் சென்றடைந்தனர்.

குருவாயூர் – ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோவில்

அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.

“என்னே என் பாக்கியம்… என் குருவாயூரப்பன் ஸ்நானம் செய்த தீர்த்தமாயிற்றே இது… இதில் ஸ்நானம் செய்ய இந்த பாவி என்ன புண்ணியம் செயதிருக்கவேண்டும்” என்று உருகினார்.

நீராடிவிட்டு புதிய ஆடைகளை உடுத்திக்கொண்ட அவரை குருவாயூரப்பன் சன்னதி நோக்கி தூக்கிச் சென்றனர்.

தினமும் காலையில் மூன்று மணிக்கு நடைபெறும் நிர்மாலய தரிசனத்திற்கு அந்தர்யாமியாக (அருருவமாக) வந்து செல்லும் முப்பத்துமுக்கோடி தேவர்கள் மற்றும் ரிஷிகள், சப்த சிரஞ்சீவிகள், அஷ்டதிக் பாலகர்கள் இவர்களோடு ஒருவராக நாராயண பட்டதிரியும் உள்ளே நுழைந்தார். (நிர்மாலய தரிசனத்தின் மகத்துவம் புரிகிறதா? தேவர்களோடு நாம் செய்யும் தரிசனம் அது!)

பட்டத்திரியை கண்ட அவர்கள் பெரிதும் உவகையடைந்தனர். களிப்பெய்தினர். இருக்காதா பின்னே “நாராயணீயம்” என்னும் மாபெரும் கிரந்தம் இவரால் அல்லவோ பிறக்கப்போகிறது…!

குருவாயூரப்பனின் தரிசனம் நொடிப்பொழுதாவது கிட்டாதா என்று ஏங்கித் தவிக்கும் எண்ணற்ற பக்தர்களுள் ஒருவராக பட்டத்திரியும் வர, அவரை தூக்கிக்கொண்டு வரும்போது அவருக்கு ஒரு சில வினாடிகள் குருவாயூரப்பனை காணும் பேறு கிடைத்தது. இதுவரை குருவாயூரப்பனை கண்டிராத பட்டத்திரி குருவாயூரப்பனின் அழகைக் கண்டு கண்ணீர் பெருக்கினார். கண்கள் காதலாகி கசிந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்அச்சுவை
பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே

என்று தொண்டரடிப் பொடி யாழ்வார் பாடியது போல, “இது ஒன்றே இந்த பிறவி உய்ய போதுமே” என்று கண்ணீர் உகுத்தார் நாராயண பட்டத்திரி.

தரிசிக்க வரும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்று கருதி அவரை அங்கு பகவானுக்கு வலப்பக்கம் முன்பாக உள்ள திண்ணையில் அமரவைத்தனர்.

அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு, குருவாயூரப்பனுடைய தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, ”என் கண்ணா” என பக்தியுடன் கதறினார். நாபியிலிருந்து அந்த சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.

குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா? பட்டத்திரி அந்த மண்டபத்தில் உட்கார வைக்கப்பட்டவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்திரிக்கோ வாதம். தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.

அப்போது பட்டத்திரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ”ஏ கிருஷ்ணா! பரந்தாமா!” என்று கதறுகிறார். ”இதோ பார் கிருஷ்ணா உன் தெய்வ ஸ்வரூபத்தை காணாமல் என்னால் எப்படி நாராயணீ யம் எழுத முடியும்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா” என்று அழுது கண்ணீர் விட்டார்.

குருவாயூரப்பனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலப்பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணீயத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு” என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார்.

குருவாயூரப்பன் இதற்கு மேல் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை லீலைகள் செய்து, பட்டதிரிக்கு வாதத்தை வேறு கொடுத்து இங்கே குருவாயூருக்கு இழுத்து வந்திருக்கிறான்.

முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான். அசரீரி ஒலித்தது.

”வத்ஸ, நீ நினைப்பது போல என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் ரோகம் நீங்கும் சரியா ?”

”என் ரோகம் குணமாவதைவிடு…. எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும் கிருஷ்ணா?”

”தாஸ, நீ உன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய் ? என் கழுத்து நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும் அல்லவா ? நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன்…” என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, “நீ நாராயணீயம் பாட ஆரம்பி” என்று கூறி கிருஷ்ணன் அனுக்ரஹம் செய்கிறார்.

இன்றும் கூட குருவாயூருக்கு சென்றால் ஆலயத்தில் ‘நாராயண பட்டத்ரி மண்டபத்தில்’ உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு குருவாயூரப்பன் தெரியமாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து அந்த இடத்தை நன்கு பார்க்க முடியும்.

அங்கு ஒரு செப்புப்பட்டயம் வைத்து, ‘ஸ்ரீ நாராயண பட்டத்திரி நாராயணீயம் பாடிய இடம்” என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

பட்டத்திரி நாராயணீயம் பாடி முடித்தவுடன், சாட்சாத் அந்த குருவாயூரப்பனே ”மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ”பட்டத்திரி மண்டபம்” என்று பேர்’ குருவாயூரப்பனே கூறியருளினார்.

=============================================================================

நாராயணீயத்தின் பெருமை!

எந்த கிரந்தத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணீயத்திற்கு உண்டு.

அது என்னவென்றால், இந்த நாராயணீயம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. அதாவது முழுக்க முழுக்க பகவானுக்கும் பக்தனுக்கு இடையே நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

”நான் நாராயணீயம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பக்தன் கேட்க, ”உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.

“நான் நாராயணீயத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணீயம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்’…’

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் பகவான் பக்தனோடு பேசிய சம்பவங்கள் சரித்திரத்தில் பக்தி இலக்கிய வரலாற்றில் பல உண்டு. இருந்தாலும் குருவாயூரில் பட்டத்திரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மஹா பாக்யத்தைப் பெற்றார் நாரயண பட்டத்திரி பெற்றார். அதிலும் விஷேஷம் என்னவென்றால் ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.

ஸ்ரீமந்நாராயணீயம் எங்கும் பரந்து எல்லாமாய் பரம்பொருள் இறைவன் என்று ஆரம்பித்து கண்முன் கிருஷ்ணனாக காட்சியளித்தார் என்று முற்றுப் பெறுகிறது. இது ஸ்ரீமத்பாகவதத்தை 1036 சுலோகங்களில் பற்பல விருத்தங்களில் சுருக்கி வர்ணிக்கிறது. ஸ்ரீமந் நாராயணீயத்தின் மந்திரபூர்வமான அனைத்து ஸ்லோகங்களையும் குருவாயூரப்பனின் சந்நிதியில் அமர்ந்து படித்து, குழந்தை குருவாயூரப்பன் தலையாட்டி ஆமோதித்த பின்னரே பரம பக்தரான ஸ்ரீ நாராயணபட்டதிரி அருளியுள்ளாரென குருவாயூர் தல மகாத்மியம் கூறுகிறது. ஸ்ரீமத் பாகவத்திலிருந்தும் பிற நூல்களில் இருந்தும் உவமைகளும் மேற்கோள்களும் இந்நூலின் தமிழ் உரையில் தரப்பட்டுள்ளன.

குருவாயூரப்பன் பிரத்யட்ச தெய்வம் என்பதால் தானே அனுதினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூருக்கு வருகிறார்கள்.

உடல் நோயைப் போக்கி, மனமாற்றமும் வருவித்து நாத்திகனையும் பக்தனாக்கும் அருள் சக்தி குருவாயூருக்குண்டு என்னும் கருத்து மேல்புத்தூர் நாராயணீயத்துடன் பிறந்து வளரத் தொடங்கியது. நாராயணத்தைப் படித்தால், பாராயணம் செய்தால் படிப்பவர்களும் கேட்பவர்களும் உடலாலும் உள்ளத்தாலும் சிறந்த ஒரு நிலையினை அடைவர் என்ற ஒரு கருத்து உண்டு. பக்திச் சுவை நிரம்பிக் காணப்படும் நாராயணீயத்தை தினந்தோறும் படித்தால் நல்ல ஆயுள் ஆரோக்கிய நிலையினை அடைவர் என்று நம்பப்படுகின்றது.

அஸ்மின் எனத் துவங்கும் ஸ்லோக பலன்[தொகு]
குறிப்பாக அஸ்மின் எனத்தொடங்கும் 13 வது சுலோகம் (எட்டாவது தசகம் – பிரளயமும் சிருஷ்டியும் 13வது சுலோகம் நோய்கள் தீர்வதற்கு பரிகார சுலோகமாகக் கருதப்படுகிறது.

சுலோகம்:

அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த-முத்தாபித-பத்மயோனி:|
அனந்த பூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ ||

பொருள்: “பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்”

பூர்வஜென்ம கர்மத்தினாலும், விதியினாலும் நோய்வாய்ப்படும் பக்தர்கள் இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லி வந்தால் எத்தகைய கொடிய நோயாக இருப்பினும் அதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெறமுடியும். ஏராளமான பக்தர்களின் அனுபவம் இதனை உறுதி செய்துள்ளது.[1]

முன்னோர்களின் மறைவிற்குப் பின்னர் கடைபிடிக்கப்படும் அடைப்புக் கால ஆறு மாத காலத்திற்கு பாராயணம் செய்யக் கூடாத நூல்களில் ஸ்ரீமந்நாராயணீயமும் ஒன்று. காரணம் காயத்ரி மகா மந்திரத்தின் சக்தி இதில் அடங்கியுள்ளதே ஆகும்.

==========================================================

மகா பெரியவா படிக்கச் சொன்ன நாரயணீயம்!

ரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார். ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். நன்னாயிட்டியே” என்றார், அந்த கலியுகத் தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.

அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீ மஹா பெரியவா.

அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த-முத்தாபித-பத்மயோனி:|
அனந்த பூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலயவாஸ விஷ்ணோ ||

பொருள்: “பரமாத்மாவாக எங்கும் வியாபித்திருக்கும் குருவாயூரப்பா! இந்த பாத்ம கல்பத்தில் பிரம்ம தேவனை இங்ஙனம் தோற்றுவித்தவரும் அளவற்ற மகிமையுடையவருமான நீர் என்னுடைய வியாதிக் கூட்டத்தை யடக்கியருள வேண்டும்”

==========================================================

Like our website? Kindly extend your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Please check :

உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு!

மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ

கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்?

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ?

கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள்

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்? 

குன்றத்தூர் கோவிந்தனின் கதை!

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)

==========================================================

Also check :

ராமநாமத்தின் விலை!

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

எது நிஜமான பக்தி?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *