Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள் – MONDAY MORNING SPL 39

கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள் – MONDAY MORNING SPL 39

print
பாரதப்போர் நடைபெற்று வந்த நேரம். ஒற்றுமையா இருக்க வேண்டிய சகோதரர்களே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த விசித்தரமான போர் அது. கௌரவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்திருந்த போதும் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்கள் பக்கம் நின்றான் மாவீரன் கர்ணன்.

கர்ணனின் முன் முதலில் வந்தவன் பாண்டவரில் மூத்தவன் தருமன். சேனையின் தலைவன் என்பதால் அவனை வீழ்த்துவதில் கவனம் செலுத்தினான் கர்ணன். கர்ணனின் வில்லுக்கு முன் தர்மனின் போர்த்திறம் பலம் குன்றியது. கர்ணன் அம்புமழையில் தர்மன் நினைவிழந்தான்.

Lord krishna and Arjuna

பதறியது பரந்தாமன் உள்ளம். “பாண்டவர்களின் உயிரைக் காப்பதே என் விரதம்’ என்று சொல்லியிருந்தான் கண்ணன். இப்போது தர்மனின் உயிரைக் காக்க வேண்டுமே என்ன செய்வது? கர்ணனோ கண்கள் சிவக்க வெறித் தாக்குதல் தொடுக்கிறான். சிந்தித்தான் கண்ணன். கர்ணனைத் தாக்குமாறு அர்ஜுனனுக்கு ஆணையிட்டான்.

போர்க் களத்தில் மயங்கிச் சரிந்த தர்மனை அங்கிருந்து வெளியேற்றினான். முதலுதவிக்கு ஏற்பாடாயிற்று.

கர்ணனின் மீது அம்புமழை பொழிந்தான் என்றாலும், அண்ணன் குறித்த கவலையில் கொதித்தது அர்ஜுனன் மனம். அவனது இயல்பை அறிந்தவன் கண்ணன். ஆதலால், பீமனை கர்ணனோடு மோதவிட்டு, அர்ஜுனனை அங்கிருந்து அழைத்து வந்தான்.

பாசறையின் ஓர் ஓரம். தர்மனுக்கு சிகிச்சை நடந்தது. நினைவு மீண்டு, அங்கே பார்த்தன் அடி எடுத்து வைப்பதை ஆவலோடு பார்த்தான் தர்மன். தன்னை விலக்கிவிட்டு கர்ணனோடு போர் புரிந்தவன் என்பது வரை தருமனுக்கு நினைவு இருந்தது. எனவே, அவன் கர்ணனைக் கொன்றுவிட்டு இங்கே வந்திருப்பான் என்று எண்ணினான் தர்மன்.

மகிழ்ச்சியில் “கர்ணனைக் கொன்று வந்த உன்னை வரவேற்கிறேன்’ என்று தர்மன் சொன்னபோது, பார்த்தனால் பதில் பேச முடியவில்லை. இடையில் புகுந்த கண்ணன், “தர்மத்தை நாடும் உன் வாக்கு ஒருபோதும் பொய்க்காது. நிச்சயம் அவன் கர்ணனை வீழ்த்தி வருவான்’ என்றவுடன், தர்மனுக்கு இருந்த மகிழ்ச்சி நொடியில் காணாமல் போனது. கர்ணனை கொல்லாமல் அர்ஜூனன் வந்திருப்பதை புரிந்துகொண்டான்.

ஏற்கனவே காயத்தினால் சோர்வுற்றிருந்த தர்மன், துயரால் புலம்பத் தொடங்கினான்.

“வில்லுக்கு ஓர் விஜயன் என்று இந்த உலகத்தார் உன்னை புகழ்கிறார்களே. எல்லாம் பொய்தானோ! உன் கையிலுள்ள காண்டீபமும் அலங்காரப் பொருளோ! கர்ணனை முடிக்காத உன் காண்டீபத்தைத் தூர எறிந்துவிடு…’ என்று இகழ்ந்தான் தர்மன்.

தந்தைக்குச் சமமானவன் அண்ணன் என்ற தர்மத்தைக் கடைப்பிடிக்கும் அர்ஜுனனுக்கு, அவன் தன்னை இகழ்ந்து பேசியதில் வருத்தம் இல்லை. ஆனால், காண்டீபத்தை இகழ்ந்ததில் அவன் கோபம் மிகக் கொண்டான். காரணம் காண்டீபத்தை இகழ்பவரைக் கொல்வேன் என்பது அர்ஜுனன் செய்த சத்தியம். எனவே கோபம் தலைக்கேற, கத்தியை உருவியபடி தர்மனைக் கொல்லப் பாய்ந்தான்.

விருட்டெனப் பாய்ந்து, அவன் கத்தியைப் பிடுங்கி எறிந்தான் கண்ணன். “அர்ஜுனா, என்ன செய்யத் துணிந்தாய்? அண்ணனைக் கொல்வது அதர்மம். அதிலும் ஒரு தர்மாத்மாவாகத் திகழ்பவனைக் கொல்வது தகாது’ என்றான். அர்ஜுனனோ, தன் சபதத்தைக் கூறி, “காண்டீபத்தை இகழ்ந்த தர்மனைக் கொல்லாமல் விட்டால், எனது தர்மத்திலிருந்து மீறுவதாகுமே?’ என்றான்.

தர்ம வழி நடப்பவரைத் தடுத்தல் அதர்மம் என்பதை அறிந்திருந்த கண்ணன், அர்ஜுனனுக்கு ஒரு யோசனை சொன்னான். “அர்ஜுனா, வயதில் மூத்தோரை, பெரியோரை, சான்றோரை இகழ்ந்து பேசுவதும் ஒருமையில் திட்டுவதும் அவர்களை கொலை செய்வதற்குச் சமம் என்பர். அதனால் நீ உன் தமையனை திட்டித் தீர்த்து, உன் தர்மத்தைக் காத்துக் கொள்” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், தர்மனைத் திட்டித் தீர்த்தான். “கர்ணன் ஒருவன் அடித்த அம்புக்குத் தாங்காமல் இப்படி சுருண்டு கிடக்கிறாயே, உன்னைப் போய் போர்க்களத்தில் முன்னிறுத்தி யுத்தம் செய்கிறோமே. நீயெல்லாம் ஒரு வீரனா?” என்று தருமனை இகழ்ந்தான். தர்மனுக்கு கண்களில் தாரையாக நீர் பெருக்கெடுத்தது.

அடுத்த நொடி, கீழே கிடந்த கத்தியை மீண்டும் எடுத்து, தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ள முயன்றான் அர்ஜுனன். இப்போதும் கண்ணன் பாய்ந்து, கத்தியைப் பிடுங்கி தூர எறிந்தான்.

“அர்ஜுனா, என்ன செய்கிறாய் தற்கொலை செய்துகொள்வது மகாபாபம் என்பது தெரியாதா?” என்று கேட்டான் கண்ணன்.

“கண்ணா, உனக்குத் தெரியாததல்ல. என் முன்னால், என் அண்ணன் தர்மனை எவனாவது இகழ்ந்தால் அவனைக் கொல்வேன் என்று நான் சபதம் செய்திருந்தேன். இப்போது நானே அவனை இகழ்ந்துவிட்டேன் அதனால் என்னை நானே மாய்த்துக் கொள்வதே என் தர்மத்துக்கு உகந்தது” என்றான் அர்ஜுனன்.

பாண்டவர் ஐவரையும் காப்பேன் என்று சபதம் செய்த கண்ணனுக்கு, அர்ஜுனனைத் தடுத்தாக வேண்டிய நிலை. இப்போது இன்னொரு உபாயம் சொன்னான் கண்ணன்.

“தற்கொலைக்குச் சமமான ஒரு செயலும் உண்டு. அது தற்பெருமை பேசுவது. எனவே நீ உன்னைப் பற்றியே புகழ்ந்து பேசி, உனது சபதத்தை நிறைவேற்று!” என்றான்.

அதை ஏற்ற அர்ஜுனன், “காண்டவ வனத்தை தீக்கிரையாக்கி, போருக்கு வந்த தேவேந்திரனை ஒருவனாகவே எதிர்த்து வெற்றி கண்டேன். வேடன் உருவில் வந்த கயிலைநாதனை வென்றேன். இந்திரலோகம் சென்று வில்வித்தை கற்று, இந்திரனின் பகைவர்களை வென்றேன். என்னைப் போன்ற வில்லாளி உண்டோ” என்று பலவாறாக தன்னையே புகழ்ந்து பேசி, தான் தற்கொலை செய்வதற்கு ஈடான ஒன்றை நிறைவேற்றிக் கொண்டான்.

கடவுளின் டிக்ஷனரி படி பெரியோரை இகழ்வது அவர்களை கொல்வதற்கு சமம். தற்பெருமை பேசுவது தற்கொலைக்குச் சமம்.

இது பார்த்தசாரதி, பார்த்தனுக்கு மட்டும் உணர்த்தும் நீதியல்ல… நம் அனைவருக்கும் தான்.

சற்று யோசித்துப் பாருங்கள்…. இதுவரை நாம் எத்தனை கொலைகளை செய்திருக்கிறோம்… எத்தனை முறை தற்கொலை செய்திருக்கிறோம் என்று….!

தலைசுற்றுமே?

==============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
==============================================================

[END]

7 thoughts on “கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள் – MONDAY MORNING SPL 39

  1. சுந்தர் சார் காலை வணக்கம்

    தங்கள் பதிவு மிகவும் அருமை

    நன்றி

  2. வணக்கம் சார்,
    நல்லதொரு அருமையான பதிவு.
    சிறு வயதில் இருந்தே மகாபாரதம் படித்து, கேட்டு, தெரிந்து இருந்தாலும் போர் நடுக்கும் போது நடந்த இந்த ஒரு நிகழ்வு நாங்கள் அறியாதது.
    மகாபாரதத்தில் கர்ணன் பாத்திரத்தை நினைக்கும் போதே நடிகர் திலகம் அவர்கள் தான் நம் கண்முன்னே நிறைவார்.
    தருமர், அர்ச்சுனன், கண்ணன் இவர்கள் உரையாடலில் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள பாசமும், மதிப்பும் தெரிகிறது.
    இன்றைய பதிவில் தற்பெருமையும் பெரியோரை இகழ்வதும் தவறு என்று தலைசுற்றும் விஷயத்தை போதித்ததற்கு நன்றி
    வழக்கம் போல திங்கள் காலை நல்லதொரு விஷயம் சூப்பர்.

  3. தலைவா எங்க இருந்து இப்படிப்பட்ட கதைகள் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது , இதெல்லாம் தேடிப்பிடிக்கிறதே பெரிய வேலையாச்சே
    Good job keep it up
    என்னால இத மட்டும்தான் சொல்ல முடியும் கடவுள் தங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும்.

    நன்றி

  4. வாழ்க வளமுடன். படிக்க படிக்க மிக அருமை.

  5. எனக்கு தெரியாமலே, நான் செய்த பலகொலைகள்!!!. [வெட்கப்படு கிறேன் பெரியோரை இகழ்ந்ததிர்க்கு].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *