Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

print
சென்னையில் 36 வது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் துவங்கும் இந்த புத்தகக் கண்காட்சி சுமார் 15 நாட்கள் நடைபெறும். புத்தக ஆர்வலர்களை பொருத்தவரை இது மிகப் பெரிய விருந்து. ஒரே இடத்தில் அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைப்போடு மட்டுமல்லாமல் 10% டிஸ்கவுன்ட் வேறு. சொல்லவேண்டுமா கூட்டத்தை பற்றி?

ஐயா திரு.பாலம் கலியாணசுந்தரம் சென்ற வாரம் ஒரு நாள் அலைபேசியில் நம்மை அழைத்தார். சென்னையில் அடுத்த வாரம் 36 வது புத்தகக் கண்காட்சி துவங்கவிருப்பதாகவும் அதில் தாம் நடத்தி வரும் ‘பாலம்’ இதழின் ஸ்டால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம் பெறவிருப்பதாகவும், அதையொட்டி எளிமையான திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் நீங்கள் தான் கலந்துகொண்டு வரவேற்புரை நிகழ்த்தவேண்டுமென்றும் அழைப்பிதழில் ஏற்கனவே நம் பெயரை போட்டாயிற்று என்றும் கூறினார்.

இப்படி ஒரு நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்த தகுதியானவன் என்று எண்ணி நம்மை தேர்ந்தெடுத்து உரியுமையுடன் நமது பெயரை அழைப்பிதழிலும் போட்டமைக்கு ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சி என்றாலும் மறுபக்கம் ஒரு சின்ன பதட்டம். (கற்றவர்கள் சபையில் அதுவும் பாலம் ஐயாவின் நண்பர்கள் வந்திருக்கும் சபையில் அவர்களுக்கு மத்தியில் பேசுவது என்ன சாதரணமா?)

36 வது புத்தகக் கண்காட்சி என்பதால் பாலம் சார்பாக இந்த நிகழ்ச்சியில் ரூ.36,000/- க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், அதில் ஒரு பயனாளியாக ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விநோதினியை சேர்த்திருப்பதாகவும், அவர் சார்பாக யாரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்படியும் கூறி, அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டார் ஐயா கலியாணசுந்தரம்.

வினோதினியின் தந்தை திரு.ஜெயபாலனை தொடர்பு கொண்டு, இப்படி ஒரு நிகழ்ச்சிக்குக் ஐயா ஏற்பாடு செய்திருக்கிறார். நீங்கள் அவசியம் வந்திருந்து அவரது உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

திறப்பு விழா நடைபெற்ற ஜனவரி 11 அன்று நாம் மதியம் புத்தக கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் சென்றுவிட்டோம். சற்று நேரத்தில் பாலம் ஐயா மற்றும் இதர விருந்தினர்கள் எல்லாரும் வந்துவிட்டனர். அனைவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தார். வினோதினியின் தந்தை ஜெயபாலனும் வந்திருந்தார்.

நமது பெயர் வரவேற்புரையில் அச்சிடப்பட்டிருந்தது. வந்திருக்கும் விருந்தினர்கள் பலர் எனக்கு புதியவர்கள் எனக்கு இதற்கு முன்பு அறிமுகம் கிடையாது என்பதால் வரவேற்புரைக்கு பதில் நம்மை நன்றியுரை சொல்லும்படி கேட்டுக்கொண்டார் ஐயா. எனக்கும் அது தான் சரியெனப் பட்டது.

முதலில் கடவுள் வாழ்த்து மற்றும் திருக்குறள் பாடப்பட்டது.

வரவேற்புரைக்கு பிறகு, பயனாளிகள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து பின்னர் நிதி உதவி வழங்கப்பட்டது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அடுத்து வினோதினியின் தந்தை திரு.ஜெயபாலனை அழைக்கும்படியும் அதற்கு முன் அவரைப் பற்றியும் வினோதினி பற்றியும் சிறு வார்த்தைகள் பேசும்படி என்ன கேட்டுக்கொண்டார்கள்.

நாம், வினோதினி யார்? அவர் குடும்ப சூழ்நிலை என்ன? அவருக்கு நடந்த கொடுமை என்ன? தற்போது அவர் எப்படியிருக்கிறார் ? மற்றும் இது தொடர்பாக நமது தளம் செய்துவரும் பணிகள் என்ன? நம் முன் இருக்கும் கடமைகள் என்ன? என்பது உள்ளிட்டவைகளை சுருக்கமாக விளக்கி கூறினேன்.

வந்திருந்த பலர் நமது கைகளை பற்றி நமக்கு பாராட்டு தெரிவித்தார்கள். வினோதினியின் தந்தைக்கு நம்பிக்கையும் தைரியமும் தெரிவித்தார்கள்.

திரு.ஜெயபாலன் அவர்களுக்கு சால்வை அணிவித்து, ‘பாலம்’ மூலம் வழங்கப்பட்ட சிறு நிதியை அளித்தேன்.

தியாகி ஜே.வி.சுவாமி கௌரவிக்கப்படுகிறார் (தியாகி செண்பகராமன் குடும்பத்தை சேர்ந்த் ஐவரும் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. பல முறை சிறை சென்றுள்ளார்)

“இந்த உதவி எதற்கு என்றால் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்ற நம்பிக்கையை உங்களுக்கும் விநோதிநிக்கும் அளிப்பதற்கு தான்” என்று திரு.ஜெயபாலனிடம் சொன்னேன்.

வினோதினியின் தந்தை திரு.ஜெயபாலனுகுக் ‘பாலம்’ சார்பாக மரியாதை செய்து நிதியுதவி வழங்கப்படுகிறது

ஒரு தந்தையின் நன்றிப் பெருக்குடன் அனைவர் முன்பும் கைகளை உயர்த்தி கும்பிட்டு நன்றி சொன்னார். அவர் விழியோரம் இருந்த நெகிழ்ச்சியால் எழுந்த கண்ணீர் துளிகளை நாம் கவனிக்க தவறவில்லை.

அடுத்து சுதந்திர போராட்ட தியாகில் திரு.வேலு காந்தி மற்றும் தியாகி செண்பகராமன் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு சுதந்திர போராட்ட தியாகி திரு.ஜே.வி.சுவாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் ஐயாவுடன் இருக்கும் சந்திரசேகரன் என்பவர், தாம் ஒரு பாடலை பாடவிரும்புவதாக கூறி, “ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்” என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றை பாடினார்.

“ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்” – மெய்யுருகி பாடும் திரு.சந்திரசேகரன்

என்ன அர்த்தம்… அப்பப்பா….!

“கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?” அர்ஜூனனின் சந்தேகத்தை போக்கிய கிருஷ்ணர்!

னைவரும் இப்படி கௌரவிக்கப்பட்ட பிறகு நன்றியுரை கூறும்படி நம்மை அழைத்தார்கள்.

நாம் பேசியதிலிருந்து….

“பாலம் ஐயாவுடன் உங்கள் அனைவருக்கும் நீண்ட காலம் தொடர்பு இருந்திருக்கும். எனக்கு ஐயாவை பற்றி வெகு காலமாகவே தெரியும் என்றாலும் அவர் அறிமுகம் ஏற்பட்டு அவருடன் பழக ஆரம்பித்தது கடந்த சில மாதங்களாகத் தான். திருக்குறள் வாழ்வு வாழ்ந்து வரும் அவரின் செயல்கள் பல என்னுள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.

பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் இந்த எளிய நிகழ்ச்சிக்கு ஐயா மீதுள்ள அன்பினாலும் அக்கறையினால் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ‘பாலம்’ சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

ஐயா அவர்களின் பணிகளில் நீங்கள் இன்று போல் என்றும் துணை நின்று அவருக்கு உதவிட வேண்டும்.

மகாபாரதத்தில் ஒரு கதை இருக்கிறது. கொடைக்கு பெயர் பெற்றவன் கர்ணன். அதாவது கொடை என்றாலே கர்ணன் தான் நினைவுக்கு வருவான். அவனுடைய பரம வைரியான அர்ஜூனனும் கொடையாளி தான். அவனும் தம்மை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக்கொடுப்பவன் தான். ஆனால் ‘கொடை’ என்றாலே கர்ணன் பெயர் மட்டும் முன்னிலையில் நிற்பது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று தனது குமுறலை வெளிப்படுத்தினான். “அச்சுதா… நானும் தானே என்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று உரைக்காது அள்ளி அள்ளி வழங்கி வருகிறேன். பல தான தருமங்களை செய்துவருகிறேன். அப்படி இருக்க ‘கொடை’  என்றாலே கர்ணன் பெயர் மட்டும் முன்னிலை பெறுவது ஏன்? என் பெயரை மறந்தும்கூட எவரும் உச்சரிப்பது இல்லையே… ஏன் இந்த ஓரவஞ்சனை?” என்று தனது மனக்கிலேசத்தை பலவாறாக வெளிபடுத்தினான்.

“சரி… என்னுடன் வா உனக்கு புரிய வைக்கிறேன்” என்று கூறி நகருக்கு வெளியே அர்ஜூனனை அழைத்து செல்கிறார் பகவான் கிருஷ்ணர்.

தமது மாய சக்தியால் இரண்டு மலைகளை உருவாக்குகிறார். அதில் ஒன்று தங்கம். மற்றொன்று வெள்ளி.

“இன்று மாலை அந்தி சாயும் முன் நீ இந்த இரண்டு மலைகளையும் அதாவது இதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் தானம் செய்துவிடவேண்டும். இது தான் உனக்கு பரீட்சை” என்று கட்டளையிடுகிறார்.

“பூ…. இதென்ன பிரமாதம்… இதற்கு போய் மாலை வரை அவகாசாம் எதற்கு? இதோ ஓரிரு நாழிகையில் அனைத்தையும் தானம் செய்துவிடுகிறேன்” என்று மார்தட்டுகிறான்.

தங்கம் மற்றும் வெள்ளியை தான் தானம் செய்யவிருக்கும் விபரத்தை தண்டோரா மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறான். இதையடுத்து அவன் நாட்டு மக்கள் பலர் போட்டி போட்டு வந்து வரிசையில் நிற்க, தனது பணியாட்களை விட்டு மலைகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி வெட்டி கொடுக்க சொல்கிறான்.

பணியாட்களும் தங்கம் மற்றும் வெள்ளியை வெட்டி கொடுக்க ஆரம்பிக்கின்றனர். நேரம் செல்கிறது. மலையை யாராவது வெட்டி தீர்க்க முடியுமா? பல நாழிகைகள் இரண்டு மலைகளையும் வெட்டி ஆயிரக்கணக்கானோருக்கு தங்கம் மற்றும் வெள்ளியை கொடுத்த பின்பும் கூட மலையின் அளவு கால் பாகம் கூட  குறைந்ததாக தெரியவில்லை.

அர்ஜூனனின் முகத்தில் கலவரம் படர ஆரம்பிக்கிறது. சற்று நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும்…. இனியும் இந்த பரீட்சையில் தாம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை அர்ஜூனனுக்கு இல்லை.

கிருஷ்ணரிடம் சென்று தோல்வியை ஒப்புக்கொள்கிறான். “கிருஷ்ணா என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன். இதே பரீட்சையை கர்ணனுக்கு வையும். அவன் மட்டும் எப்படி ஜெயிக்கிறான் என்று பார்க்கிறேன்” என்கிறான்.

கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே… சேவகர்களிடம் கர்ணனை அழைத்து வரும்படி பணிக்கிறார்.

அடுத்த சில நிமிடங்களில் கர்ணன் வந்து சேருகிறான்.

“சொல்லுங்கள் பரமாத்மா… அடியேனை தாங்கள் அழைத்ததன் நோக்கம் என்னவோ… நீங்கள் இட்ட பனி செய்ய காத்திருக்கிறேன்” என்கிறான் பணிவுடன்.

கிருஷ்ணர் அந்த இரண்டு மலைகளையும் காண்பிக்கிறார். “ஒன்றுமில்லை கர்ணா…. நாளை மாலைக்குள் நீ அந்த இரண்டு மலைகளையும் அதில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அனைத்தையும் சேர்த்து தானம் செய்துவிடவேண்டும். இது தான் விஷயம்” என்கிறார்.

“எப்பேற்ப்பட்ட  புண்ணியத்துக்கு என்னை ஆளாக்கியிருக்கிறீர் பரமாத்மா…. நன்றி…. நன்றி…!” என்று நெகிழும் கர்ணன்…. “சரி….இதற்க்கு போய் எதற்கு நாளை மாலை வரை அவகாசம்….? இதோ ஒரு நொடியில் செய்துவிடுகிறேன்…. ” என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறான்.

தூரத்தில் இரண்டு விவசாயிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைக்கிறான்… “நீ இந்த தங்க மலையை எடுத்துக்கொள். நீ இந்த வெள்ளி மலையை எடுத்துக்கொள். இன்று முதல் உங்களுக்கு இந்த மலைகள் சொந்தம். யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்கள். அது உங்கள் உரிமை” என்று கூறுகிறான்.

இதை பார்த்துகொண்டிருந்த அர்ஜூனன் வெட்கித் தலை குனிந்தான். “கர்ணா… உண்மையில் நீ தான் கொடையாளி…. என்னை மன்னித்துவிடு” என்று அவனை அணைத்துக்கொள்கிறான்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு பகவான் புன்முறவல் செய்துகொண்டிருக்கிறார்.

சிறிதோ பெரிதோ தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அப்பொழுதே செய்துவிடுவார்கள். மேலும் கொடைத் தன்மை என்பது நமது நாடி, நரம்பு, சிந்தனை மற்றும் இரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு விஷயம். பெயருக்காகவும்
புகழுக்காகவும் மற்றவர்கள் செய்கிறார்களே என்று செய்பவர்களுக்கும் அது கைவராது. ஐயா திரு.பாலம் கலியாணசுந்தரம் அவர்களும் இந்தக் கதையில் வரும் கர்ணன் போன்றவர் தான். கொடைக்கு என்றே தம்மை அர்பணித்துக் கொண்டவர்.

இந்த இனிய நாளில் ஒன்றே செய்…. அதையும் நன்றே செய்…. அதையும் இன்றே செய்… என்று ஐயா வழி நின்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். நம் கடன் பணி செய்து கிடப்பதே…. அனைவருக்கும் நன்றி!”

– இவ்வாறு நாம் உரையை முடித்தவுடன், அனைவரும் கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். வந்திருந்த விருந்தினர்களும் நமது உரைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

“எல்லாம் இறைவன் செயல்” என்பதை தவிர நான் வேறு எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் வந்திருந்த விருந்தினர்களுக்கு இனிப்பும் பலகாரமும் கொடுக்கப்பட்டது.

அடுத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் இரண்டு பெரியவர்களின் கால்களிலும் நானும் நண்பர் ராஜாவும் விழுந்து ஆசிபெற்றோம். சகல சௌகரியங்களையும் தியாகம் செய்து இளமை காலத்தில் நம் நாட்டை காக்க போராடி இன்று நாடி தளர்ந்து போயிருக்கும் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அவர்களை ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டோம். (உண்மை தானே. ரியல் ஹீரோக்கள் அல்லவா இவர்கள்?)

நாட்டை காக்க சிறை சென்ற தியாகிகளுடன் நானும் நண்பர் ராஜாவும் – பெருமிதம் பொங்கும் ஓர் தருணம்!

மொத்தத்தில் ‘அன்புப் பாலம்’ ஸ்டால் துவக்கவிழா பல புதிய உறவுகளுக்கு இனிய பாலம் அமைத்தது என்றால் மிகையாகாது.

[END]

Complete Gallery

[nggallery id=4]

12 thoughts on “கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

  1. Great Sundar sir….Eagerly waiting to go to book fair and visit anbu palam stall….Dat too Karnan Story chanceless..Superb

  2. மிக்க மகிழ்ச்சி சுந்தர் ஜி !!!
    தங்களின் இந்த இனிய பயணம் தொடர வாழ்த்துகிறோம் !!!
    உண்மையில் இந்த அன்பு பாலம் திக்கு தெரியாமல் இருக்கும் பலரை இணைக்கும் பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை !!!
    வாழ்க வளமுடன் !!!

  3. Karnan story is really amazing. It’s has to be imbibed in every fibre of our being.
    ***
    But to confess truly, I haven’t even did a help to the count of double digits. I will improve myself. Some people are born with good qualities.
    Some people are made out of the people we be with and get inspired by their activities and we made ourselves to their level.
    ***
    I belong to second category. Though, I haven’t started doing anything. But for sure, before the end of this year, I will improve myself and my family situation and will do all this. there’s no doubt in that.
    ***
    And coming to the function, its really great to know that you (sundarji) are meeting so great people and getting ashirvad from them.
    Good.
    ***
    Thanks for letting us know.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  4. கற்ற கல்வி , பெற்ற செல்வம் பிறர்க்கு பயன்படவேண்டும் என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களின் எண்ணம் நிறைவேறும். அதுபோல
    உங்கள் வாழ்க்கையில் நல்ல குடும்பம் நல்ல பிள்ளைகள் அமைந்து முடிந்தவரை இல்லார்க்கு உதவி வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

  5. சுந்தர் சார் நாங்களும் 16ம் தேதி பாலம் அய்யா அவர்களை கான்டீன் ல் சந்தித்தோம்.. aarthysree tharihasree மட்டுமல்ல என் அக்கா பெண்களும் ஸ்டால் 417க்கு சென்றோம் மிக நல்ல நிகழ்வு நன்றி

  6. முதலில் பாலம் ஐயா, ஆங்கிலக்கல்விக்கு சொன்ன விளக்கம் என்ன ……….அதை எழுதுங்கள்

    ———————————————————-
    இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். நன்றி.
    – சுந்தர்

    1. நல்ல விசயங்கள தள்ளி போட கூடாது, நான் மற்றும் என் நண்பர் ஐயா அவர்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளோம்………
      ஏன்னா இன்றைக்கு எல்லோரும் ஆங்கிலக்கல்வி தான் நல்லதுன்னு தப்பா நினைக்கிறோம்………….

  7. இவரைப் போன்ற தியாகிகளை பார்த்து அவைகளுடன் ஃபோட்டோ எடுப்பதை அனைவரும் கௌரவமாக பெருமையாக கருதவேண்டும். இது மிகவும் மேன்மையானது. இவர்களை போன்ற தியாகிகளை சந்தித்து ஆசி பெற்றால் அதுவே நூறு கோவில்களுக்கு சென்றதற்கு பலனாக இருக்கும். சுயநலம் இல்லாமால் அன்று இளமையை தொலைத்து நாட்டுக்காக போராடினார்கள். ஆனால் பாவம் இன்று அவர்கள் இருக்கும் நிலையை பார்த்தால் கண்ணீர் தான் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *