Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 25, 2024
Please specify the group
Home > Featured > சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு!

சுந்தரரருக்கும் சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் – ஒரு நேரடி படத்தொகுப்பு!

print
சுந்தரருக்கு சிவபெருமானுக்கும் வழக்கு நடைபெற்ற வரலாறு மிகவும் சுவையானது. சுந்தரர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு. திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) கோவில் முன்பாக உள்ள ஒரு பெரிய மண்டபத்தில் தான் வழக்கு நடைபெற்றது. அது முதல் அந்த மண்டபம் ‘வழக்காடு மண்டபம்’ என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அங்கு செல்லவேண்டும் அந்த இடத்தை தரிசித்து உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டும் என்கிற ஆசை. சமீபத்திய திருவெண்ணெய்நல்லூர் பயணத்தின்போது ஈசன் அதை நிறைவேற்றி வைத்தான்.

சுந்தரரை ஈசன் வலிய வழக்கிட்டு ஆட்கொண்ட வரலாறு பலருக்கு தெரிந்திருக்கும். எனவே இந்தப் பதிவில் பலர் அறிந்திராத புதிய தகவல்களை தர நினைத்தோம். இயன்றவரை இணைத்துள்ளோம். முக்கியமாக திருமணம் தடைபட்டு இறைவன் ஆட்கொண்ட பிறகு சுந்தரர் திருமுறை பாட கோவில் கோவிலாக புறப்பட்டுவிட்டார். ஆனால், அந்த மணமகள் ‘ஞானப்பூங்கோதை’ என்னவானார்? அதே போல, திருமண சடங்கு நடைபெற்ற பண்ருட்டியை அடுத்த புத்தூரிலிருந்து வழக்கு நடைபெற்ற திருவெண்ணெய்நல்லூர் (அருள்துறை) வரை இறைவன் நடந்துவர சுந்தரரும் ஊர் பொதுமக்கள் சிலரும் அவர்கள் பின்னே வந்தனர். அப்போது நடந்தது என்ன உள்ளிட்ட தகவல்கள் இப்பதிவில் உள்ளன. (Please check : சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!)

வாருங்கள்… சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட சம்பவத்தை உடனிருந்து பார்ப்போம்….!

thiruvennainallur
‘அருள்துறை’ என்னும் திருவெண்ணைநல்லூர்!

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் – இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.

நம்பி ஆரூரர் திருமண வயதை எட்டியதை அடுத்து அவருக்கு விவாகம் செய்ய சடையனார் முடிவு செய்தார். அதற்காக சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வி ஞானப் பூங்கோதை என்பவரை பேசி முடித்தார். திருமணநாள் வந்தது. சுபமுகூர்த்த சுபதினத்தில், நம்பி ஆரூரர் குதிரை மீது ஏறி திருக்கல்யாண பந்தலை அடைந்தார். பின் அவருக்கான ஆசனத்தில் அமர்ந்து திருமண பந்தத்தில் இணைவதற்கான சடங்குகளை செய்து கொண்டிருந்தார்.

சுந்தரரிடம் மங்கல நாணைக் கொடுக்கும் சமயம், உரத்தக்குரலில் “சுந்தரா திருமணத்தை நிறுத்து” என்று கூறிக்கொண்டு மணமேடையில் முன்னே ஓர் தெய்வீகத்தோற்றம். தாடி மீசையுடன் தோளிலே உத்தரீயம், கழுத்தினிலே ருத்ரபட்ச மாலை, செந்தணல் உடம்பினிலே முப்பிரி நூல், இடுப்பிலே பஞ்சகச்சம், கையிலே ஊன்றுகோல். இக்கோலத்திலே நின்ற முதியவரைப் பார்த்தார் சுந்தரர். “பெரியவரே! திருமணத்தை தடுக்கிறீரே! நீ யார்? உமது ஊர் எது? ஏன் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறீர்?” என்று கேட்க, முதியவர் “மணம் முடிக்க இருக்கும் நீ எனது அடிமை! உன் தகப்பன் உன் பாட்டன் எல்லோரும் எனக்கு அடிமை நீர் மணம் முடிக்க முயன்றது குற்றம். எந்த விதத்திலும் நியாயமாகாது!” என்று கூறினார்.

கிழவேதியராக வந்த சிவபெருமானின் தோற்றம்...
கிழவேதியராக வந்த சிவபெருமானின் தோற்றம்…

உடனே சுந்தரர் “நீர் என்ன பித்தனோ ? நான் உமக்கு அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்?” என்று கோபமாக கேட்க உடனே பெரியவர் “இதோ உன் பாட்டன் எனக்கு எழுதிக்கொடுத்த ஓலை” என்று கூறி ஒரு ஓலைச்சுவடியை சுந்தரிடம் கொடுக்க அதை சுந்தரர் படித்துக்கூட பார்க்காமல் கிழித்து அக்கினியிலே போட்டார்.

இதைக் பார்த்த கிழவேதியர் “ஓ….” வென்று குரலிட்டு “இது என்ன அநியாயம். இதைக் கேட்க யாருமே இல்லையா?” என்று கூச்சல் எழுப்பினார்.

அது வரையில் அமைதியாக இருந்த அரசனும், சடையனாரும் மற்றுமுள்ள மறையோர்களும் வேதியரை அணுகி “முதியவரே மணமுடிக்கும் தருவாயில் தடைசெய்கிறீரே… சுந்தரன் உனக்கு அடிமை என்பதை நாங்கள் எப்படி நம்புவது?” என்று கேட்க உடனே முதியவர் “ஐயா நான் கொடுத்த அடிமை ஓலையை இந்த சுந்தரன் படித்துக்கூடப் பார்க்காமல் தீக்கிறையாக்கிவிட்டானே…” என்று பகர்ந்தார்.

thiruvennai-nallur

மறையோர்கள் “ஐயா சுந்தரன் மணக்கோலத்தில் மணமேடையில் இருந்தார். இளமைவேகத்தில் நீர் கொடுத்த ஓலையை படிக்காமல் தீயிலிட்டுவிட்டார். தவறுதான். நீங்கள் முன்னின்று இந்த மணத்தை முடியுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே முதியவர் “இவனோ அடிமை, இவனுக்குத் திருமணமா? இவன் எப்போதும் எனக்குத் தொண்டு செய்ய வேண்டியவன்!” என்று கூறினார்.

உடனே சுந்தரர் மணமேடையை விட்டு எழுந்து “நான் உமக்கு அடிமை என்பது உண்மையானால் வேறு ஆதாரம் இருந்தால் காட்டும்” என்றார்.

“இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தே நான் படி ஓலையை உன்னிடம் கொடுத்தேன். அசல் ஓலை நான் வாழும் திருவெண்ணெய்நல்லூரிலே என் வீட்டில் உள்ளது. அங்கு வா அங்குள்ள வழக்காடு மன்றத்தில் (பங்சாயத்தார்) மறையோர்கள் முன்னிலையில் காட்டுகிறேன்” என்று வேதியர் கூறினார்.

உடனே சுந்தரர் “அப்படி ஒரு வழக்கு இருக்குமானால் அதை முடித்த பின்னரே மணம் முடிப்பேன்” என்றார். மணமகளாக வீற்றிருந்த மணமகள் ஞானப்பூங்கோதை எழுந்து சுந்தரனின் கையைப்பற்றி “ஐயனே! இது என்ன சோதனை?” என்று கண்ணீர் மல்க கேட்டார். உடனே சுந்தரர் “பெண்ணே கவலைப்படாதே. இக்கிழவன் கூறுவது பொய் என திருவெண்ணெய்நல்லூர் சென்று அங்குள்ள வழக்காடு மன்றத்தில் நான் வாதிட்டு இக்கிழவனின் செய்கையை அம்பலமாக்கிவிட்டு வந்து உன்னை மணமுடிக்கிறேன்” என்றார். (இவள் பெயர் கமல ஞானப்பூங்கோதை என்று உத்திரமேரூர் கல்வெட்டில் கூறப்படுகிறது.)

========================================================

Related posts…

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

முதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்!

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்

========================================================

தடுத்தாட்கொண்ட சிறப்பு

கிழவேதியர் முன் நடக்க சுந்தரரும் ஊர் பொதுமக்கள் சிலரும் பின் நடக்க திருவெண்ணெய்நல்லூர் புறப்பட்டனர். இவர்கள் நடந்து வரும் வழியில் ஆலயத்தில் உள்ள ஆனைமுகனை வணங்கித் தொடர்ந்தார்கள். சுந்தரர் வழிபட்ட அச்சிவாலயம் உள்ள ஊர் ஆனைமுகத்தூர் எனப்படுகிறது. (தற்போது அவ்வூர் ஆனத்தூர் என்று அழைக்கப்படுகிறது) .

தொடர் பயணத்தில் வழியில் சுந்தரர் ஆனைமுகனை வேண்ட விநாயகப் பெருமாள் யானை வடிவிலே வந்து ஆசி வழங்கினார். அந்த இடம் இன்று ஆனை வாரீர் எனப்படும் ஊர் ஆனைவாரி என்று அழைக்கப்படுகிறது. பயணம் தொடர்கிறது.

சுந்தரருக்கும் இறைவனுக்கும் வழக்கு நடைபெற்ற மண்டபம் இது தான்!
சுந்தரருக்கும் இறைவனுக்கும் வழக்கு நடைபெற்ற மண்டபம் இது தான்!

சுந்தரர் அரசலோகத்தில் அருந்தவராதலால் முதியவரிடம் “உமது ஊர் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? என் கால்கள் வலிக்கின்றன…” என உடல் சோர்வுற்ற நிலையில் கேட்க வேதியார் “அதோ தெரிகிறதே கோபுரம் அதுவே நான் வாழும் ஊர்” என்றார்.

அவர்கள் நின்ற இடமே இன்று தடுத்தாட்கொண்டூர் என்று வழங்கப்படுகிறது. அவர்கள் நின்ற இடத்தில் சன்னியாசியப்பன் கோயிலும் இன்று வழக்கில் கூறப்படுகிறது. ”காலம் போகும் வார்த்தை நிற்கும்” என்ற பழமொழி எவ்வளவு உண்மை! இவ்வூர்களும் செய்திகளும் கர்ண பரம்பரைச் செய்தியாக இருப்பினும் காலங்கள் உருண்டோடினாலும் இவ்வாறு வாய் வழிச் சொற்கள் இன்றும் மறையவில்லை என்பதால் இவற்றை நம்பியேற்க வேண்டும்.

திருவெண்ணெய்நல்லூரை அடைந்ததும் அங்கே உள்ள வழக்காடு மன்றத்தை கூட்டினார்கள். மன்ற நீதிபதிகள் முதியவரைப் பார்த்து “உமது வழக்கு என்ன கூறுங்கள்?” என்றனர்.

முதியவர் “இதோ நிற்கின்றானே சுந்தரன் இவன் என் அடிமை” என்றார். சுந்தரரோ “இக்கிழவன் கூறுவது பொய்” என்று மறுத்தார்.

மறையோர்கள் முதியவரைப் பார்த்து “பெரியவரே ஓர் அந்தணர் மற்றொரு அந்தணருக்கு அடிமை என்பது நடைமுறை வழக்கில் இல்லை. எனவே தக்க ஆதாரமும் சாட்சியும் இருந்தால் கூறுங்கள்” என்றனர். உடனே முதியவர் ஓர் ஓலையை எடுத்து “இதில் இவன் பாட்டன் வழி வழியாக எனக்கு அடிமை செய்கிறோம் என்று கையொப்பமும் இட்டுள்ளான்” என்று கூறி ஓலையைக் கொடுத்து “இதையும் இவன் கிழித்து விடப்போகிறான் ஜாக்கிரதை” என்று கூறினார்.

dsc00351-22-copy

அந்த ஓலையில் ”அறிதற்கரிய மறைகளை உணர்ந்த திருநாவ லூரிலிருக்கும் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதிக் கொடுத்த உடன் பாடு; பெருமுனிவராய திருவெண்ணெய் நல்லூரில் வாழும் பித்தன் என்னும் மறையவருக்கு `யானும் என் வழிவழி வரும் மரபினரும் வழிவழியாக அடிமை செய்தற்கு இந்த ஆவணத்தை உள்ளும் புறம்பும் ஒத்து எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு இவை என் கையெழுத்தாம்!” என்ற வாசகம் அடங்கிய சொற்கள் எழுதப்பெற்று சுந்தரனின் பாட்டன் ஆரூரன் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

அதைச் சுந்தரரிடம் கொடுத்து “இது உமது பாட்டன் கையெழுத்து தானா பாருங்கள்?” என்று கூறினார்.

உடனே முதியவர் “இவனுக்குத் தன்னையாரென்று தெரியாது. என்னையாரென்று தெரியாது. அப்படி இருக்க இவன் பாட்டன் கையெழுத்து எப்படி இவனுக்குத் தெரியும்? இவன் பாட்டனின் கைச்சாத்துக்களுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்” என்றார்.

vadhadeeswarar-thiruvennainalloor

உடனே திருநாவலூரிலிருந்து சுந்தரனின் பாட்டன் காலத்திய ஓலையை ஒப்பிட்டுப்பார்க்க கையெழுத்து ஒன்றாக இருப்பதைக் கண்டு சபையோர்கள் வியந்தவண்ணம் சுந்தரரைப் பார்த்து “சுந்தரா நீர் இப்பெரியவருக்கு அடிமைதான். உன் பாட்டன் கையொப்பம் சரியாக உள்ளது. எனவே நீ இவர் சொல்படி நடப்பாயாக” என்று தீர்ப்பளித்தனர்.

சபையோரில் சிலர் முதியவரைப்பார்த்து “நீர் இவ்வூர் என்கிறீர் உமது வீடு எங்குள்ளது??” என்று வினவ, “என்னைத் தெரியவில்லையா? உங்களுக்கு என்னுடன் வாருங்கள். என் வீட்டைக் காட்டுகிறேன்” என்று கூறி முதியவர் புறப்பட பின்தொடர்ந்து சுந்தரனும் மற்ற ஏனையரும் சென்றனர்.

சுந்தரர் கோவில்
சுந்தரர் கோவில்

பரமன் நின்று சாய்ந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் பரமன் அடிவைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு. மன்றத்தை விட்டு எல்லோரும் புறப்படும் முன்தான் யார் என்பதைக் கூறுவதாக சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.

”பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை ஒருவரும் அறியீராகில் போதும்!” என்றுரைத்துச் சூழ்ந்த பெருமறையவர், குழாமும் நம்பியும் பின்புசெல்ல திருவருட்டுறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்” என்று கூறுகிறார்.

thiruvennainallur-sundarar-2

எல்லோரையும் அழைத்துச் சென்ற வேதியார் திருவருட்டுறை கோயிலினுள் புகுந்து மறைந்தார். தன்முன்னே சென்ற வேதியர் திடீரென மறைந்ததால் சுந்தரர் திகைத்து நின்றார். அவர் நின்ற இடம் இத்தலத்தில் சுந்தரரின் மூலத்தானமாக விளங்குகிறது. (பார்க்க படம்!)

அருள்துறை உள்ளிருந்து சுந்தரர் கோவிலின் எழில் தோற்றம்!
அருள்துறை உள்ளிருந்து சுந்தரர் கோவிலின் எழில் தோற்றம்!

பெரியவர் மறைந்ததும் “சுந்தரர் இது என்ன மாயம் நம்மை அழைத்து வந்த கிழவரைக் காணவில்லையே?” என்ற போது ஓர் ஒளி தோன்றியது. “சுந்தரரா என்னைத் தெரியவில்லையா?” என்று கூறி பரமன் உமையவளோடு இடப வாஹனராய்த் தோன்றி காட்சி தந்தார்.

பரமனைக் கண்ட சுந்தரர் கண்ணீர் மல்க நாத்தழுக்க “ஐயனே என்னை தடுத்தாட்கொள்ளவா இந்த நாடகமாடினீர்கள்? ஐயனே! நான் பெரிதும் பிழைசெய்து விட்டேன். என்னை மன்னியுங்கள்.” என்றார்.

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.
– பெரியபுராணம்

“நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது ‘போற்றியுரைக்கும் புகழுரைகளே’ யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக!” என்றருளிச் செய்தார்.

“ஐயனே… இதைப் பாடுவது? எப்படி துவக்குவது ஒன்றும் புரியவில்லையே…”

“சுந்தரா! மணப்பந்தலிலே என்னைப் ‘பித்தா’ என்று பரிகசித்தாயே அதையே முன் வைத்துப்பாடுக” என்றார்.

பரமன் பித்தா என்று அடி எடுத்துக் கொடுக்க, சுந்தரர்

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!

என்று தொடங்கி ஏழாம் திருமுறையில் முதல் பத்து பதிகங்களையும் பாடிப் பணிந்தார். குழுமி இருந்த மக்கள் எல்லோரும் சுந்தரரைப் போற்றி வணங்கி சுந்தரரின் அவதார மகிமையைப் சிலாகித்துவிட்டுச் சென்றனர்.

அங்கே புத்தூரில் மணப்பெண்ணான கமலஞானப்பூங்கோதை இதைக் கேள்வியுற்று, மணமுறிவு நிகழ்ந்தாலும் சுந்தரரையே நினைத்து வாழ்ந்து பெறுவதற்கரிய சிவலோகப் பிராப்தத்தை சுலபமாக பெற்றார். (அக்காலங்களில் நிச்சயிக்கப்பட்டவரை மணமுடிக்க முடியாவிட்டால் கூட, பெண்கள் வேறு திருமணம் செய்யமாட்டார்கள். திருநாவுக்கரசரின் சகோதரி திலகவாதியாரின் வரலாற்றை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும்.) ஞானப்பூங்கோதையோ பெண்ணினும் நல்லாள். தனக்கு கணவனாகவிருந்தவரை ஈசன் தடுத்தாட்கொண்டதை கேள்விப்பட்டு, சுந்தரரையே கணவனாக வரித்து தவவாழ்க்கை வாழ்ந்து அந்த செயலின் மகத்துவத்தாலேயே எளிதாக சிவபதத்தில் கலந்திட்டாள்.

அயலோர்தவ முயல்வார்பிற ரன்றேமணம் அழியும்
செயலால்நிகழ் புத்தூர்வரு சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்!

திருமணக்கோலத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் நம்பியாரூரர். எனவே இறைவனின் கட்டளைக்கிணங்க எப்போதுமே திருமணக்கோலத்தில் இருப்பார். (இது தான் அவர் எப்போதும் அலங்காரத்துடன் இருக்கும் சூட்சுமம்!)

திருவெண்ணெய்நல்லூர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த இடத்தை தான் நீங்கள் பதிவில் பார்க்கிறீர்கள்.

vadhadeeswarar-1
அருள்மிகு வாதாடீஸ்வரர், திருவெண்ணெய்நல்லூர்

இறைவனை நட்புரிமையில் புகழ்ந்தும் வலிந்து வேண்டியும் பல தேவாரங்கள் பாடினார். சிவத்தலங்கள் தோறும் சென்று இறைவன் பெருமைகளைப் பாடினார். மக்களுக்குத் தேவாரப் பாடல்களால் நல்வழி காட்டினார்.

இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

வழக்கு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுபவர்கள், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரரை தரிசித்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும். காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் போல இத்தலமும் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகும். நமது ஆலய தரிசனம் பகுதியில் விரைவில் இத்தலம் தொடர்பான விரிவான பதிவு இடம்பெறவிருக்கிறது.¶¶

  • காஞ்சி வழக்கறுத்தீஸ்வரரை அடுத்து வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இங்குள்ள அர்ச்சகரை கொண்டு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறவிருக்கிறது. அது பற்றிய தகவல் விரைவில் அளிக்கப்படும்!

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

==========================================================

Also Check :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *