Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 23, 2024
Please specify the group
Home > Featured > சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

print
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பதிகம் பாடி நிகழ்த்திய அற்புதங்கள் யாவும் உண்மையினும் உண்மை, காலம் கடந்தும் நிற்பவை என்பதை இந்த உலகிற்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறவேண்டும் என்பது நமது லட்சியங்களுள் ஒன்று. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நமது தளத்தின் ‘ஆலய தரிசனம்’ பகுதிக்காக சுந்தரர் அவதரித்த திருநாவலூர், ஈசன் அவரை வழக்கிட்டு ஆட்கொண்ட திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட திருத்தலங்கள் சென்று வந்தது நினைவிருக்கலாம். நீண்டநாட்களாக மேற்கூறிய தலங்களுக்கு செல்லவேண்டும் என்பது நம் பேரவா. எனவே சந்தர்ப்பம் கிடைத்தபோது பயன்படுத்திக்கொண்டோம்.

காய்ச்சிய பாலை தயிராக்கி பின் தயிரைக் கடைந்து வெண்ணை எடுப்பது போல பல்வேறு மூலங்களில் அணுவணுவாக ரசித்து படித்த சுந்தரரின் வரலாற்றை சிலாகித்து கொஞ்சம் கொஞ்சம் இங்கு தந்திருக்கிறோம். இந்தப் பதிவை தயாரிக்கும் பொருட்டு சுந்தரர் வாழ்க்கையை பலமுறை புரட்ட நேர்ந்தது. அவர் பாடிய பல்வேறு பதிகங்களை படிக்க நேர்ந்தது. அதனால் நம் வினையும் ஒழிந்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்த பதிவே THERAPEUTIC MYTH தான். அதாவது இதைப் படிப்பதே உங்கள் துன்பங்களில் இருந்து உங்களை விடுவிக்கும் மருந்து தான். காரணம் சுந்தரின் திருப்பாட்டுக்கு அப்படி ஒரு சக்தி உண்டு!

sundarar-1

சுந்தரமூர்த்தி சுவாமிகளே நமக்கு கலங்கரை விளக்கம்!

மூவர் பெருமக்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை பெற்று விளங்கினாலும், சுந்தரமூர்த்தி சுவாமிகளே நமக்கு கலங்கரை விளக்கம் என நாம் கூறுவோம். காரணம் இறையியல் சார்ந்த விஷயங்கள் என்றாலே குடும்பம், இல்லறம், தாம்பத்தியம், நட்பு, செல்வம், போன்றவற்றை ஒதுக்கி வைக்க வேண்டும், சம்பந்தப் பெருமான் போல திருமண வாழ்க்கையை துறக்கவேண்டும், அப்பரடிகள் போல வாதவூரர் போல துறவற நிலையில் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை நிலவுகிறது. அதையெல்லாம் தகர்த்தெறிந்து நம்முடைய அன்றாட வாழ்வியலிலேயே இறைவனை எப்படி உருகி உருகி வணங்கலாம், அவன் அருளை கேட்டுப் பெறலாம் என்று சொல்லி தந்தவர் நம் சுந்தரமுர்த்தி சுவாமிகள்.

நம்பியாரூரர் என்பது அவரது பெயர் என்றாலும் ‘தம்பிரான் தோழன்’ என்று சிறப்பிக்கப்படுவார். (இங்கு தம்பிரான் என்றால் அது சிவபெருமானை குறிக்கும்.)

அரியும் அயனும் அடிமுடிகாண வியலாத இறைவனிடம் அவரால் அழுது முறையிடமுடியும், வெறுப்பில் கோபிக்க முடியும், வறுமைக்கு பொருள் கேட்க முடியும், பசிக்கு உணவு கேட்க முடியும், தண்டனைக்கு ஆளாக முடியும், காதலியிடம் இறைவனையே தூது அனுப்பமுடியும், காதலியின் பசிக்கு பொருள் கேட்க முடியும், மற்றவருக்கு உதவிட பரிந்துரை செய்ய முடியும், இறந்தவர்களையே உயிர்பிக்க முடியும்…. இப்படி பலப் பல முடியும்!

sundarar-urchavar
மயிலை காரணீஸ்வரர் கோவிலில் சுந்தரர் – உற்சவ மூர்த்தி!

சைவத்தின் ஹீரோ!

ஒரு சகலகலா வல்லவராக கிட்டதட்ட ஒரு ‘ஹீரோ’ என்று குறிப்பிட முழுத்தகுதியுடன் இருப்பவர் நம் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

“நமக்கு அர்ச்சனை பாட்டே ஆகும்” என்று இறைவனையே வியக்க வைத்தது நம் சுந்தரரின் சந்தத் தமிழ் பதிகங்கள். இவர் இயற்றிய பதிகங்கள் ‘திருப்பாட்டு’ என்று சிறப்பிக்கப்படுகின்றன. எண்ணற்ற அற்புதங்களை புரிந்துள்ள சுவாமிகளின் தீந்தமிழ் வரிகளில் இயற்கை நயமும் சொல்நயமும் வியக்க வைப்பன.

சுவாமிகளின் வரலாற்றுக்கு துணை நிற்பது அவர்தம் பதிகங்களே தாம். எண்ணற்ற அகச்சான்றுகள் நிறைந்தவை சுவாமிகளின் பதிகங்கள். அவரது பதிகங்களை முழுக்க முழுக்க படித்து உணர்ந்த பின்னரே சேக்கிழார் “பெரிய புராணம்” என்னும் சைவக்கருவூலம் கொடுத்துள்ளார்.

உண்மையில் பெரியபுராணத்தின் நாயகர் சுந்தர மூர்த்தி சுவாமிகள்தான். அவரது சரித்திரத்தினை சொல்ல எழுந்த பெரியபுராணத்தில் இடையில்தான் திருத்தொண்டர் புராணங்கள் விவரிக்கப்படுகின்றன.

என்றும் இளமை எப்போதும் மணக்கோலம் என்று இருந்த சுவாமிகளுக்கு வந்த சோதனை, அவர்தம் சிவத்தொண்டை காதலிக்கும் நம் போன்றவர்களுக்கு சுவையான விஷயம்.

காதலிகளுக்காக கயிலாயம் விட்டு வந்தவர் காதலியால் கண்ணிழந்து கூட்டோடு கயிலாயம் சென்றவர் நம் சுவாமிகள்.

கோலை ஊன்றிய படியே கச்சியேகம்பம் வந்து கலங்கி நின்ற சுவாமிகள் கம்பவாணர் திருமுன் நின்றதை, சேக்கிழார் பெருமான் மிக அழகாக பெரிய புராணத்தில் பின்வருமாறு விரித்துரைகின்றார்.

விண்ணாள்வார் அமுது உண்ண மிக்கபெரு விடம் உண்ட
கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன்
எண்ணாத பிழை பொறுத்திங்கு யான்காண எழில் பவள
வண்ணா கண்ணளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார்

கச்சியேகம்பத்தில் இடக்கண் பெற்ற சுவாமிகள் நேரே திருவாரூர் வீதி விடங்கனிடம் வந்து பதிகம் பாடி வலக்கண் பெற்றார்.

இறைவனை இப்படி அழகுத் தமிழில் பாடி மகிழ்ந்திட்ட சுந்தரர் திருப்புக்கொளியூரில் முதலையுண்ட பாலகனை மீட்டுத் தருமாறு “கரைக்கால் முதலையை பிள்ளைத் தரச்சொல்லு காலனையே” என்று இறைவனுக்கே ஆணையிட்ட சம்பவமும் உண்டு.

avinasi
அவிநாசி அவிநாசியப்பர் கோவில் ராஜகோபுரம் முன் காணப்படும் மண்டபத்தில்….

சுவாமிகள் இறைவனின் விளையாட்டில் கடுப்பாகி இறைவனை கடுப்படித்த பாடல் ஒன்றும் உள்ளது. பொருட்கள் களவு போன வேதனையில் திருமுருகன்பூண்டியில் ‘கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்’ என்ற துவக்கத்தினை உடைய பதிகத்தில், “நகரத்தை காவல் காக்காமல் நீர் எதற்கு இங்கு உள்ளீர்?? உம்முடைய எருதின் கால் உடைந்து விட்டதா?? அது நன்றாக இருந்தால் இங்கிருந்து போய்விடும்…!’ என்று இறைவனை இப்படி கடுமையாகவே பாடுகிறார் சுவாமிகள்

மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே!

சுவாமிகள் தனது திருத்தொண்டத் தொகையில், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்பார். அதாவது காசுக்காக மன்னர்களை புகழாமல் வறுமையிலும் இறைவனை மட்டுமே பாடும் புலவர்களை மறக்காமல் தனது திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகிறார்.

இந்த அழகிய வரிகளுக்கு உரை செய்த விதமாகவே திருப்புகலூரில்,

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே!

(பொருள் : தம்மையே விரும்பிப் பாடி, சார்ந்திருந்தாலும் அடியவர்களுக்கு ஒன்றுமே கொடுக்காத அரசர்கள் உள்ளனர். அத்தகையர்களை பாடாமல் திருப்புகலூரில் குடிகொண்டருளும் எந்தை ஈசனை பாடுங்கள். அவர் உங்களுக்கு இம்மையில் உண்ண உணவும், உடுக்க உடையும், மறுமையில் சிவலோக வீடு பேறும் வழங்குவது திண்ணம். இதில் சந்தேகமில்லை. எனவே நமது துன்பம் தீர, திருப்புகலூர் இறைவனை பணிவோம்!)

என்ற பதிகம் பாடுகிறார் சுவாமிகள்.

கூண்டோடு கைலாசம் என்பதன் பொருள் என்ன?

ரு கட்டத்தில் உலக வாழ்க்கை சலித்து உடலோடு கையிலாயம் சென்றவர். இன்று “கூண்டோடு கைலாசம்” என்று நக்கலாக சொல்கிறோமே அது “கூட்டோடு கயிலாயம்” சென்ற நம் சுவாமிகளின் வரலாறுதான்.

வேறு எந்த அருளாளர்களும் சொல்லாத திருக்கயிலாயக் காட்சியையும் அங்கு தேவர்களும் தேவிகளும் ரிஷிகளும் சூழ இறைவன் அமர்ந்திருக்கும் காட்சியை

========================================================

Related posts…

முதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்!

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

பாக்கியங்களுள் முதன்மையான பாக்கியம், செல்வங்களுள் தலையாய செல்வம்!

பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்

==========================================================

கண்ணீர் மல்க நமக்கு சுவாமிகள் தரிசனம் செய்விக்கும் பதிகம் ‘தானெனை முன் படைத்தான்’ என்ற திருநொடித்தான் மலைப்பதிகம்.

இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன்என்றான் நொடித்தான்மலை யுத்தமனே!

இத்திருப்பதிகம் பல பெருமைகளையுடையது. அவை தேவாரத் திருமுறைகளை நிறைவு செய்தமை, (தேவாரத்தின் கடைசி பதிகம் இது!) ஜீவனுள்ள உடலோடு நம்பியாரூரர் வெள்ளானையின்மீது வான் வழியாகத் திருக்கயிலை செல்லும்போது, இறைவனது எல்லையற்ற பேரருளை   நினைத்து பாடியது, நம்பியாரூரது வரலாற்றுக்குரிய அகச்சான்றுகள் பலவற்றைத் தருவது, வருணனால் நிலவுலகிற் கொண்டுவந்து அளிக்கப்பட்டமை முதலியன!

பொருள் : திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வனாகிய எம்பெருமான், இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி பொருந்திய மிக்க தேவர் ஆகிய எல்லாரும் வந்து என்னை எதிர் கொள்ளுமாறு, எனக்கு யானை ஊர்தியை அளித்தருளி, அங்கு, மந்திரங்களை ஓதுகின்ற முனிவர்கள், ‘இவன் யார்’ என்று வினவ, “இவன் நம் தோழன்; ‘ஆரூரன்’ என்னும் பெயருடையவன்” என்று திருவாய் மலர்ந்தருளினான் ஈசன். அவனது திருவருள் இருந்தவாறு என்னே!!

(இது பற்றி ஓவியத்துடன் அளிக்கப்பட்ட விரிவான பதிவுக்கு : சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!)

சுந்தரர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள் சில…

1) சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குண்டையூர் கிழார் தந்த நெற்குவியல்களை பதிகம் பாடி சிவபெருமான் அருளால், திருவாரூரில் எடுத்துக்கொண்டார். (இது பற்றிய பதிவு நம் தளத்தில் ஏற்கனவே வந்துள்ளது. வண்ண ஓவியத்துடன்!)

2) திருப்புகலூர் திருக்கோவிலில் தனக்கு பொருள் வேண்டுமென, சிவனை நோக்கி பதிகம் பாடி முற்றத்தில் தலைக்கு உயரமாக வைத்து படுத்திருந்த சுட்ட செங்கற்கள் அனைத்தும் பொன்னாக மாற்றிப் பெற்றார்.

sundarar-thevaram3) திருப்பாச்சிலாச்சிரமத்திலும், திருஓணகாந்தன்தளியிலும் சிவபெருமானை வேண்டி பதிகம் பாடி பொன் பெற்றார்.

4) திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்தில் சிவபெருமான் திருவருளால் பெற்ற பொன் முழுவதையும் அங்குள்ள மணிமுத்தாறில் போட்டுவிட்டு திருவாரூரில் உள்ள கமலாலயத் திருக்குளத்தில் மூழ்கி குறைவின்றி பெற்றார்.

5) திருக்குருகாவூருக்கு அருகில் சிவபெருமானை வேண்டி பதிகம் பாடி, அந்தண கோலத்துடன் வந்து கொடுத்த பொதிச் சோற்றை பெற்று உண்டார்.

6) திருவையாற்றுக்கு ஐயாறப்பரை தரிசிக்க சென்றபோது காவிரியில் நீர் பெருகி, இவரது பயணத்தை தடை செய்ய, பதிகம் பாடி நீரை தடை செய்து நிறுத்தி ஆற்றை கடந்தார்.

7) திருப்புக்கொளியூர் என்னும் அவிநாசியில் ஐந்தாம் அகவையில் முதலை உண்ட பாலகனை, பதிகம் பாடி இரண்டாண்டுகள் கழித்து ஏழு வயது சிறுவனாக மீட்டர்.

8) இவர் திருமணம் செய்தபோது செய்த சத்தியத்தை மீறி சங்கிலியாரை பிரிந்து திருவாரூர் செல்ல உத்தேசித்து திருவொற்றியூர் எல்லையை தாண்டியவுடன் இரண்டு கண்களும் குருடாயின. திருவெண்பாக்கத்தில் இவருக்கு ஊன்றுகோல் கொடுத்தார் ஈசன். திருக்கச்சி ஏகம்பம் என்னும் காஞ்சியில் கச்சி ஏகம்பனையும் காமாட்சியையும் பாடி இடது கண்ணும், திருவாரூர் தியாகேசரை பாடி வலக்கண்ணும் பெற்றார்.

9) இவர் சிவபெருமானை பறவையாரிடம் தூது அனுப்பியது தகாதென ஏயர் கோன் கலிக்காம நாயனார் இவர் மீது பகைகொண்டார். கலிக்காமராது கோபத்தை தனிக்குமாறு சிவபெருமானிடம் சுந்தரர் வேண்டிக்கொண்டார். கலிக்காமருக்கு சூலை நோயை தந்த இறைவன் சுந்தரர் வந்தால் மட்டுமே அது தீரும் என்று கலிக்காமர் கனவில் தோன்றி கூறிவிட்டு மறைந்தார். சுந்தரரால் தான் அது தீருமென்றால் அதற்கு பதில் என் உயிரை துறப்பேன் என்று கூறியபடி வாளால் தன் வயிற்றை குத்தி தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். சுந்தரர் இதையறிந்து மனம்வருந்தி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முனைய, கலிக்காமரை உயிர்ப்பித்தார் இறைவன். இருவரும் ஒருவரையொருவர் காட்டித் தழுவி நட்புகொண்டனர்.

sundaramurthy-swamigal-nayanar

10) திருநாகைக்கோகரணத்தில் பதிகம் பாடி பொன்னும், மணியும் ஆபரணங்களும் பெற்றார்.

11) சேரமான் பெருமான் இவருக்கு வழங்கிய செல்வத்தை ஈசன் பூதகணங்களை வேடர் வேடத்தில் அனுப்பி கொள்ளையடிக்கச் செய்தனர். சுந்தரர் திருமுருகணப்பூண்டி வந்து திருமுருகநாதரை பதிகம் பாடி முறையிட, கொள்ளைபோன பொருட்கள் திரும்ப கிடைத்தன. ஈஸ்வர ப்ரசாதமாய்.

12) திருவஞ்சைக்களத்தில் சிவபெருமானை வேண்டி கயிலையில் இருந்து வந்த வெள்ளை யானை மீது மீதேறி தேவரும் மூவரும் எதிர்கொண்டழைக்க ஆடி சுவாதி நன்னாளில் ஈசனுடன் இரண்டறக்கலந்தார்.

நிச்சயம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றி பேச இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. அவரது மனப்பாங்கையும் அவருக்கும் இறைவர்க்கும் இடைப்பட்ட உறவை அறியவும் சிறந்த சான்று அவர்தம் பதிகங்கள்தான்.

ஏழாம் திருமுறையை ஓதி உணருங்கள் இறைவன் உங்களுக்கு இன்னும் நெருக்கமாக தெரிவான்.

மேற்கூறிய அட்டவணையில் இடம்பெற்றுள்ள பல தலங்களுக்கு நாம் சென்றிருந்தாலும் தற்போது மீண்டும் செல்ல மனம் துடிக்கிறது.

அடுத்தப் பதிவில் அவரது வரலாறு தொடர்புடைய ஒரு அற்புதமான சம்பவத்தை பார்ப்போம். அந்த இடத்தின் பிரத்யேக புகைப்படங்களோடு…

ஆக்கத்தில் உதவி : தீபன்ராஜ் வாழ்க்கை, சுந்தரர் வாழ்க்கை வரலாறு, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

========================================================

Also Check :

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

========================================================

[END]

3 thoughts on “சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ற கலங்கரை விளக்கம்!

  1. நல்ல பதிவு
    .
    . இந்த புத்தகம் எங்கே கிடைக்கிறது ?

    1. உமா பதிப்பகம், 18, பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை – 600001. தோலைபேசி : 044-25215363. தவிர முக்கிய புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *