Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

print

அடுத்து ஒரு முக்கியமான பதிவை அளிக்கவிருக்கிறோம். அதைப் படிக்கும் முன்னர் இந்தப் பதிவை அனைவரும் படிப்பது அவசியம். (இது மீள் பதிவு!)

ஹா பெரியவா அவர்கள் தன் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்கள் அநேகம் அநேகம். அவற்றுள் ஒன்றான இந்த அற்புதம், சாட்சியோடு உங்கள் முன்னே!

Part I

தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.

சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக் கொண்டிருந்தது.

முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.

அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.

ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.

திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.

“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!

பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !

“பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.

“ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!”

“உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.

பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.

பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்… அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.

இப்போதும் நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

(திரு.பி.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய ‘மகா பெரியவா’ | எழுத்துரு உதவி : balhanuman.wordpress.com)

==========================================================

படித்து முடித்ததும் இந்த சம்பவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சீதாவைப் போல உங்களில் எத்தனை பேருக்கு கண்ணீர் பெருகி ஓடியது என்று நமக்கு தெரியாது. ஆனால் நாம் முதன்முதலில் இதை படித்தபோது நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.

எத்தனை முறை இந்த பதிவை படித்திருப்போம் என்று தெரியாது. குறைந்தது ஒரு நூறு முறையாவது இருக்கும்.

மேற்கூறிய இந்த நிகழ்வு தான் நமக்கு உணர்த்தும் பாடங்கள் எத்தனை.  மீண்டும் மீண்டும் படியுங்கள். புரியும்.  தெளிந்த நீரோடை போல வாழ்க்கையிருந்தால், எந்த சூழ்நிலையிலும் மாறாத கடவுள் பக்தியும், குருபக்தியும் இருந்தால் அற்புதத்துக்கு அங்கே குறைவேது?

மஹா பெரியவா அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒவ்வொன்றும் நமது உள்ளத்தை உருக்கி அழவைத்துவிடும் என்பது அவரது அடியவர்கள் அனைவருக்கும் தெரியும். “நாமெல்லாம் என்ன பக்தி செய்கிறோம்? இப்படி ஒரு அருளுக்கு என்றைக்கு பாத்திரமாகப் போகிறோம்?” என்கிற ஏக்கம் வந்துவிடும்.

அடுத்து இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருக்கும் நடுக்காவேரிக்கு சென்று பெரியவாவின் ஞானதிருஷ்டியில் உதயமாகி அருள்பாளித்துவரும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது அல்லவா?

kavirikkarai-prasanna-ganapathy

நமக்கும் அதே ஆவல் தோன்றியது. “இவர் தான் அந்த காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி!” என்று உங்களிடம் அந்த கோவிலின் புகைப்படத்தை காட்டினால் உங்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும்? அந்த மகிழ்ச்சியை நாமும் அனுபவித்து உங்களுக்கு அதை தரவிரும்பினோம். நடுக்காவேரி கணபதியை உடனே தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் பொங்கி வழிய உடனடியாக அதை செயல்படுத்தியும் விட்டோம்.

இதோ பெரியாவாவின் கருணா கடாக்ஷத்துக்கு சாட்சியாக நிற்கும் இது தான் அந்த கோவில். இந்த காவிரிக்கரை காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் தோன்றிய இந்த நிகழ்வு இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த கோவிலின் புகைப்படம் இதுவரை எங்கும் வெளியானதில்லை.

இதோ நம் வாசகர்களுக்காக நாமே நேரில் சென்று எடுத்தது.

kavirikkarai-prasanna-ganapathy_2

ஆம்… 2014 ஆம் வருட மத்தியில் ஒரு நாள் பெற்றோருடன் கிளம்பி, மறுநாள் நடுக்காவேரிக்கு சென்று அங்கு காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசித்துவிட்டு அப்படியே திருவையாறு சென்று ஐயாறப்பரையும், அறம் வளர்த்த நாயகியையும் தரிசித்தோம்.

மகாபெரியவா தொடர்புடைய ஆலய தரிசனம் என்றால் அற்புதத்துக்கு குறைவிருக்குமா என்ன?

காவிரிக்கரை கணபதியை நாம் சந்திக்க சென்ற போது நடந்தது உண்மையில் சிலிர்க்க வைப்பது. நம்மையெல்லாம் நெகிழ்ச்சியில் கதறி அழவைப்பது. மிகையில்லை. உண்மையிலும் உண்மை என்பதை இந்த பதிவின் தொடர்ச்சியில் பார்க்கப்போகிறீர்கள்.

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Part II :

நடுக்காவேரியில் அன்னையும் பிள்ளையும் குருவும் நமக்காக நடத்திய ஒரு திருவிளையாடல்!

டுக்காவேரியை சேர்ந்த ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவாவின் அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி கிடைத்தது பற்றியும், அதற்கு சாட்சியாக குடமுருட்டி நதிக்கரையில் எழுந்தருளியிருக்கும் ப்ரஸன்ன மஹாகணபதியை பற்றியும் படித்ததில் இருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை எப்படியாவது நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாக நம்மை ஆட்கொண்டிருந்தது.

ஏற்கனவே திரு.சுவாமிநாதன் அவர்களின் ‘மகா பெரியவா’ நூலில் இது பற்றி படித்தபோது இதே போன்று ஆவல் எழுந்தது. ஆனால் இந்த முறை ஆவல் பேராவலாக மாறிவிட்டது.

நடுக்காவேரிக்கு சென்று மஹாகணபதியை தரிசிப்பது என்று முடிவானவுடன், அப்படியே நாம் நீண்ட நாட்களாக செல்ல விரும்பிய கோவில்களுக்கும் செல்லலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்றபடி பயண திட்டத்தை வகுத்துக்கொண்டோம்.

நாம் பிறந்த ஊரான பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவானைக்கா ஜம்புகேஸ்வரரையும் ஸ்ரீரங்கத்திற்கு சென்று அரங்கனையும் தரிசிக்க விரும்பினோம். ஆனால், அடுத்த மாத மத்தியில் திருச்சிக்கு ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது. அப்போது ஒரு நாள் முன்னதாக சென்று, இரண்டு கோவில்களையும் பார்த்துக்கொள்ளலாம், இப்போதைக்கு திருச்சியில் உள்ள வேறு சில தலங்கள், நடுக்காவேரி மஹாகணபதி, திருவையாறு ஐயாறப்பர் கோவிலையும் தரிசித்துவிட்டு வருவது என்று முடிவானது.

dsc01367

மேலும் நாம் சில கோவில்களில் பரிகார பூஜைகளும் செய்ய வேண்டியிருந்ததால் பெற்றோரையும் உடன் அழைத்து செல்ல தீர்மானித்தோம்.

நடுக்காவேரிக்கு செல்லும் விஷயத்தை நம் பெற்றோரிடம் சொன்னாலும், அங்கு எந்த கோவிலுக்கு போகிறோம் அதன் விசேஷம் என்ன என்று அவர்களிடம் சொல்லவில்லை. சர்ப்ரைஸாக சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

dsc01372

இதையடுத்து, சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பி மறுநாள் அதிகாலை 3.45 அளவில் திருச்சி ஜங்க்ஷன் வந்து சேர்ந்தோம். முந்தைய தினமே பிரார்த்தனை கிளப் மூலம் அறிமுகமான நண்பர் சிவக்குமார் அவர்களின் உதவியுடன் டாக்சி ஏற்பாடு செய்திருந்தபடியால் சற்று சௌகரியமாக இருந்தது.

நாம் செய்ய நினைத்த பரிகாரத்தை முடித்துவிட்டு வேறு சில ஷேத்ரங்களையும் தரிசித்துவிட்டு அங்கிருந்து நேரே கல்லணை மற்றும் திருக்காட்டுப்பள்ளி வழியாக நடுக்காவேரி பயணம்.

திருச்சி மாவட்டத்தை டிரைவர் நன்கு அறிந்திருந்தாலும் நடுக்காவேரி மற்றும் திருவையாறு பகுதி அவருக்கு புதிது. எனவே ஆங்காங்கே விசாரித்துகொண்டு சென்றுகொண்டிருந்தோம்.

dsc01379

அப்போது தான் பெற்றோரிடம் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவிலின் வரலாற்றை பற்றி கூறினோம். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். நம்மை விட தற்போது அவர்களுக்கு அந்த கோவிலை பார்க்க ஆவல் அதிகமாகிவிட்டது.

நடுக்காவேரிக்கு சென்றபிறகு குறிப்பிட்ட அந்த கோவிலை கண்டுபிடிக்கமுடியவில்லை. விசாரித்ததில் அந்த பகுதியில் எவருக்கும் தெரியவுமில்லை.

ஒரு பஸ் நிறுத்தத்தில், நான்கைந்து பேர் நின்றுகொண்டிருக்க, அவர்களிடம் விசாரிப்போம் என்று விசாரித்தால்… அவர்கள் ‘குடி’மகன்கள் போல. நம் கார் அருகே ஒருவர் வந்தார், “என்னா கேட்டே… காவிரிக்கரை பிள்ளையார் கோவிலா? தலைவா நீ ஒன்னு பண்ணு. அப்படியே வண்டியை திருப்பி நேரே போ. திருச்சி வரும். அங்கே காவிரிக் கரை ஓரமா மலையில ஒரு கோவில் இருக்கும். அது தான் காவிரிக்கரை பிள்ளையார் கோவில்!” என்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு வழி சொன்னார்.

இவர்களிடம் வழி கேட்பது வீண் வேலை என்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு வந்தோம். அந்த பகுதியில் அக்ரஹாரம் இருக்கிறது. (ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதிகள் வசித்தார்களே அதே அக்ரஹாரம்). அக்ரஹாரத்தில் விசாரித்தால் சொல்லிவிடுவார்கள் என்று கருதி அக்ரஹாரத்தை தேடி புறப்பட்டோம். அப்போது அந்த ஒரு இடத்தில் சாலையோரம் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார்.

dsc01381
சாலையோரம் இருந்த சிவன் கோவில்

அவரை பார்த்தவுடன் “அம்மா… இங்கே காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் எங்கே இருக்கு?”

அருகில் தெரிந்த ஒரு சிறிய சந்தை காண்பித்து, “இதோ… இதுக்குள்ளே போனீங்கன்னா.. ஆத்தோரம் ஒரு கோவில் தெரியும். அது தான் ப்ரஸன்ன மஹாகணபதி கோவில்” என்றார்.

நமக்கு ஒரே குதூகலமாகிவிட்டது. அப்பாடா ஒரு வழியா கோவில் இருந்த இடத்தை கண்டுபிடிச்சாச்சு.

“அம்மா… மஹா பெரியவர் சொல்லி கட்டின கோவில் அது தானே?”

“ஆமா.. அதே தான். ஜீ.டி.வி.ல கூட ரீசண்ட்டா சாமிநாதன் சார் அந்த கோவிலை பத்தி சொன்னார். ஆனா இப்போ அந்த கோவில்ல யாரும் இருக்கமட்டாங்களே… கோவிலும் பூட்டியிருக்குமே…”

“எத்தனை மணிக்கு திறப்பாங்கம்மா? நாங்க இதை முடிச்சிட்டு திருவையாறு போகணும்”

வழிகாட்டிய லலிதாம்பாள்!
வழிகாட்டிய லலிதாம்பாள்!

“குருக்கள் வீடு உள்ள பெருமாள் கோவில் பக்கத்துல இருக்குற ரெண்டாவது வீடு. அவர் வீட்டுக்கு போனீங்கன்னா…அவரே உங்க கூட வந்து கோவிலை திறந்து தரிசனம் செய்துவைப்பார்… ராமச்சந்திர ஐயரோட வீடு உள்ளே அக்ரஹாரத்துல அதே தெருவுல தான் இருக்கு. அவர் பையன் கணேசன் இருப்பார். அவரை நீங்க பார்க்கலாம். குருக்கள் கிட்டே சொன்னீங்கன்னா அவரே உங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போவார்” என்றார்.

“ரொம்ப நன்றிம்மா…”

“நீங்கள்லாம் எங்க ஊருக்கு வர்றது எங்களுக்கு பெருமையா இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே. ரொம்ப சந்தோஷமா இருக்கு!” அவர் ஊர் கோவிலை தேடி நாம் வந்ததில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

“அம்மா அந்த கோவில் பேக்ட்ராப்ல தெரியுற மாதிரி கொஞ்சம் நில்லுங்களேன் உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்…” என்றோம் ஆவலுடன்.

“என்னை எடுத்து என்ன ஆகப்போகுது… அந்த கோவிலையாவது எடுங்க… ” என்று சாலையோரத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலை காண்பித்தவாறே சொன்னார்.

“நாங்க அட்ரெஸ் தெரியாம தவிச்சுகிட்டு இருந்தோம்… நல்லவேளை ஆண்டவனா பார்த்து உங்களை அனுப்பி வெச்சான்மா…”

சற்று தயக்கம் கலந்த உற்சாகத்துடன் அவர் நின்றுக்கொண்டிருக்கும்போதே நாம் ஃபோட்டோ எடுத்துவிட்டோம்.

காரில் ஏறி கிளம்பும்போது கேட்டோம். “நன்றிம்மா. உங்க பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“நான் அக்ரஹாரத்துல தான் இருக்கேன். பேரு லலிதாம்பாள்!” என்றார்.

dscn2105

dscn2112அட… அம்மாவே வந்து வழிகாட்டியிருக்காங்க என்று நினைத்துக்கொண்டு கையெடுத்து அவர்களை கும்பிட்டுக்கொண்டே அக்ரஹாரம் சென்றோம்.

செல்லும் வழியில் ஒரு தாமரை தடாகம் நம்மை ஈர்க்க, வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி சென்று அதன் அழகை படம் பிடித்தோம். இப்போதெல்லாம்… தாமரை தடாகம் விடுங்கள்… தாமரை பூவையே பார்க்க முடிவதில்லை…

அடுத்த சில வினாடிகளில் அக்ரஹாரம் வந்துவிட்டது. சிறிய பெருமாள் கோவில் ஒன்று அருகே உள்ளது. கோவிலுக்கு பின்புறம் பக்கவாட்டில் இருந்தது ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் தண்டபாணி குருக்கள்வீடு.

நல்லவேளை. திண்ணையிலே அமர்ந்திருந்தார் தண்டபாணி குருக்கள்.

ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினருக்கு மஹா பெரியவரின் அருளால் குழந்தை பிறந்தது பற்றியும் தொடர்ந்து ப்ரஸன்ன மஹாகணபதி கோவில் எழும்பியது பற்றியும் சாமிநாதன் அவர்கள் தனது நூலிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அது குறித்து சொன்னதையும் குறிப்பிட்டு சென்னையிலிருந்து ப்ரஸன்ன மஹாகணபதியை தரிசிக்க வந்திருக்கும் விஷயத்தை சொன்னோம்.

“கோவிலை திறந்து தரிசனம் செய்துவைக்கவேண்டும்… உங்களை காரிலேயே அழைத்து சென்று மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடுகிறோம்!” என்றோம்.

“ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி வீடு இங்கே பக்கத்துல தான் இருக்கு. அவங்க பிள்ளை கணேசன் கூட வீட்டுல தான் இருப்பார்னு நினைக்கிறேன். அவங்க கிட்டே போய் பேசிட்டு வாங்க… அதுக்குள்ளே நான் இங்கே தயாராக இருக்கேன்….” என்றார்.

“அடடா…. பெரியாவாவின் அருளால் பிறந்திருக்கும் அவரை சந்தித்து சில வார்த்தைகள் பேசமுடிந்தால்  அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனா நான் ஷேத்ரங்களுக்கெல்லாம் போய் பரிகாரமெல்லாம் பண்ணிட்டு  வந்திருக்கேன். யார் கிரகத்துக்கும் போகவேண்டாம்னு நினைக்கிறேன். வேற ஒன்னும் இல்லே சுவாமி” என்றோம் சற்று தயக்கத்துடன்.

நமது தயக்கத்தின் காரணத்தை புரிந்துகொண்டவர் “சரி… விடுங்க அடுத்த முறை வரும்போது அவரை பார்த்துக்கலாம். நாம கோவிலுக்கு போகலாம்!”

“பிள்ளையாருக்கு அர்ச்சனை பண்ண தேங்காய் பூ பழம் ஊதுபத்தி இங்கே கிடைக்குமா?”

“இந்த ஊர்ல அதெல்லாம் கிடைக்காது. நீங்க ஒன்னு பண்ணுங்க… ஒரு ரெண்டு கி.மீ. தூரத்துல பக்கத்து ஊருக்கு போய் தேங்காய், பூ, பழம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க… நானும் அதுக்குள்ளே தயாரா இருக்கேன்” என்றார்.

சரியென்று சொல்லி, பக்கத்தில் சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு சென்று, தேங்கிய, பூ, பழம், கல்கண்டு உள்ளிட்ட பொருட்களை  வாங்கிக்கொண்டோம்.

மறுபடியும் அக்ரஹாரத்திற்குள் செல்லலாம் என்று வண்டியை திருப்ப நினைத்தால், சாலையிலேயே குருக்கள் எங்களுக்காக காத்திருந்தார்.

அவரை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்தினோம்.

“நீங்க போங்க… நான் இதோ இவர் பேசிக்கிட்டே நடந்து வர்றேன்” என்று அவர் அருகில் இருந்த ஒருவரை காண்பித்தபடி சொன்னார். அவரது தெருவில் வசிக்கும் அதே அக்ரஹாரத்துக்காரர் போல.

“இதோ அந்த தெருவுல போய் திரும்பின உடனே கோவில் வந்துடும். பக்கத்துல தான்… நீங்க போங்க” என்றார் மீண்டும்.

தெருமுனையில் இருந்து பார்த்தபோது, நதிக்கரையில் மஹாகணபதி கோவில் தெரிந்தது.

 கோவிலுக்கு நடந்து செல்லும் குருக்கள் மற்றும் அவர் நண்பர்!
கோவிலுக்கு நடந்து செல்லும் குருக்கள் மற்றும் அவர் நண்பர்!

பூட்டப்பட்டிருந்த கேட்டை திறந்தார். உள்ளே கணபதியை சேவித்தபடி ஒவ்வொருவராக சென்றோம்.

வெளியே பின்னமடைந்திருந்த பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது. அது தான் கரையை தோண்டும்போது கிடைத்த ஒரிஜினல் விக்ரகமாம். பின்னமடைந்திருந்தபடியால் அதை வெளியே வைத்துவிட்டு உள்ளே புதிய விக்ரகத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

dscn2116

மூர்த்தி சிறிதானால் என்ன? கீர்த்தி பெரிது இவருக்கு. மஹா பெரியவர் அருள்வாக்கால் வெளிப்பட்டவராயிற்றே.

பிரகாரம் எங்கும் புதர் மண்டிக்கிடந்தது. உள்ளே பிரகாரத்தை வலம் வரமுடியாத புதர்கள் மண்டிக்கிடந்தன. பார்க்கவே மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நம்மை ஏன் மஹா பெரியவர் இங்கே வரவழைத்தார் என்று புரிந்தது.

dscn2118

கோவில் கட்டி கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த 70 ஆண்டுகளில் எத்தனை வெள்ளத்தை சந்தித்திருக்கும் குடமுருட்டி ஆறு? எனவே கோவிலின் மதில் சுவர் சேதமடைந்திருந்தது. கோவில் அவசியம் புனருத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பது புரிந்தது.

dscn2118 dscn2119

நம்மை பற்றியும் நமது பணியை பற்றியும் நம் தளத்தை பற்றியும் சுவாமிநாதன் அவர்களுடனான நட்பை பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினோம்.

நாம் இந்த கோவிலின் புகைப்படத்தை தான் எடுக்க நினைத்தோம். ஆனால், தன்னையும் தரிசிக்க வைத்துவிட்டான் ஆனைமுகன். அந்த வகையில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், ராமச்சந்திரன், ஸீதாலக்ஷ்மி தம்பதியினரின் வீட்டுக்கு சென்று அவர்கள் மகன் கணேசன் அவர்களை சந்திக்க வாய்ப்பிருந்தும் முடியாமல் போனது நம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை வந்து நிச்சயம் அவர்களை சந்தித்து ஆசிபெற்றுவிடவேண்டும் என்று உறுதி பூண்டோம்.

dscn2122

குருக்கள் விளக்கை ஏற்றினார். தொடர்ந்து நாம் வாங்கி சென்ற மலர்ச்சரம் கணபதிக்கு சூட்டப்பட்டு அர்ச்சனை நடந்தது. இறுதியில் குருக்கள் கற்பூர தீபாராதனை காண்பித்தார். அனைவரும் ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

dscn2136
குடமுருட்டி ஆற்றிலிருந்து கோவிலின் பக்கவாட்டு தோற்றம்

நாம் நம் வாசகர்களுக்காகவும் அந்த வார பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பித்திருந்தவர்களுக்காகவும் ஏனைய கோவில்கள் போல இங்கும் வேண்டிக்கொண்டோம்.

நம் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த பெரியவர் நம்மிடம், நாம் யார், எங்கிருந்து வருகிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம், இந்த கோவிலை பற்றி எப்படி தெரியும் போன்ற பிற விபரங்களை கேட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் சொன்னோம்.

குருக்கள் என்ன நினைத்தாரோ சின்னசாமி ஐயரின் கிரகத்துக்கு மஹா பெரியவா விஜயம் செய்தது பற்றியும் ராமச்சந்திரன் அவர்களுக்கு இந்த இடத்தில் பிள்ளையார் கோவில் கட்ட ஆணையிட்டது பற்றியும் கோவில் எழும்பியதை தொடர்ந்து ஸீதாலக்ஷ்மி அவர்கள் கருத்தரித்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது பற்றியும் நமக்கு எடுத்து கூறினார்.

“இதை ஏன் இங்கே மறுஒலிபரப்பு பண்றார்? நாம் தான் இதையெல்லாம் பற்றி பேசிவிட்டோமே… வேறு ஏதேனும் புதிய தகவலை கூறக்கூடாதா?” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டோம்.

அடுத்த வினாடி குருக்கள், “மஹா பெரியாவின் அருள்வாக்கால் பிறந்த அந்த கணேசன் வேற யாரும் இல்லே… உங்க பக்கத்துல நிற்கிறாரே அவர் தான்!” என்று கூறி நமது பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரை காண்பிக்க, நமக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சந்தோஷம் கலந்த ஒரு அதிர்ச்சியில் உறைந்தோம். அந்த கணம் எங்களுக்குள் எழும்பிய அதிர்ச்சி கலந்த பரவசத்தை விவரிக்க இலக்கியத்தில் கூட வார்த்தைகள் இருக்காது.

“சார்… சார்… நீங்க தானா அந்த அதிர்ஷ்ட குழந்தை… இது தெரியாமலே உங்க பக்கத்துல நின்னுகிட்டு .. இருந்தோமே…. உங்களை சந்திக்க வீட்டு வரவேண்டியது சார். பரிகாரத்துக்கு போய்ட்டு வந்து வேறு ஒருத்தர் கிரஹத்துக்கு போக வேண்டாம் அடுத்த முறை பார்த்துக்கலாம்னு விட்டுட்டோம். ஆனா உங்க கூடவே நாங்க இந்த பிள்ளையாரை தரிசனம் பண்ணினோம் என்றால் அது மஹா பெரியவரின் கருணைதான். இந்த ஆனைமுகனின் அருள் தான் சார். உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்!”

dsc01388
மஹா பெரியவாவின் அருளால் பிறந்த கணேசன் இவர் தான்! இவர் வயது 74!!

“நான் தான் அந்த கணேசன். மஹா பெரியவாவின் அருளால் பிறந்தவன்!” என்றார் பணிவுடன் அவர்.

குருக்கள் சொன்னார் : “நீங்க பூ, பழம் வாங்க போனவுடனே இவருக்கு ஃபோன் போட்டேன். இந்த மாதிரி மெட்ராஸ்ல இருந்து சாமிநாதனோட நண்பர் சுந்தர்னு ஒருத்தர் வந்திருக்கார். உங்க வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்த்தேன். ஆனா அவங்க பரிகாரத்துக்கு போய்ட்டு வந்திருக்குறதாலே யார் வீட்டுக்கும் போகவேண்டாம்னு ஃபீல் பண்றாங்க… நீங்க வேனும்னா வரமுடியுமா?ன்னு கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா இவர் வீட்டுல  இல்லை. மொபைலையும் வீட்டுலேயே வெச்சிட்டு எங்கயே வெளியில போய்ட்டார். சரி நாம கிளம்பி போய் மெயின் ரோட்டுல நிற்போம்… நீங்களும் பூ பழம் அதுக்குள்ளே வாங்கிட்டு வந்துடுவீங்கன்னு மெயின் ரோட்டுல உங்க காருக்காக நின்னுக்கிட்டுருந்தேன். அந்த நேரம் பார்த்து இவர் பஸ்ல இருந்து இறங்கினார். விஷயத்தை சொன்னேன். ‘ஓ…தாராளமா பார்க்கலாமே… நானும் உங்களோட கோவிலுக்கு வர்றேன். கோவில்லை வெச்சே அவங்களை பார்த்துடலாம்’னார். அப்படியே கூட்டிகிட்டு வந்துட்டேன்” என்றார்.

அடியேனின் பெற்றோர்களுடன்...
அடியேனின் பெற்றோர்களுடன்…

“எல்லாம் அந்த லலிதாம்பிகையோட அருள் தான் சார். கோவிலை அடையாளம் காட்டியது முதல் இவரை அங்கு வரவழைத்தது முதல் எல்லாம் தனது மகனின் உதவியுடன் அன்னை நடத்திய  திருவிளையாடல் தான் இது!” என்றோம்.

நெகிழ்ச்சியில் நமக்கு உள்ளம் உருகி கண்கள் கசிந்தது.

கணபதியின் அருளால் பிறந்த கணேசன் அவர்களுடன் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இது கனவா நனவா… நம்மை கிள்ளி பார்த்துக்கொண்டோம்.

தொடர்ந்து திரு.கணேசனிடம் பேசிக்கொண்டிருந்தோம். நம்மை பற்றி கேட்டார். நமது உத்தியோகம் பற்றியும் நமது தளத்தை பற்றியும் அதன் நோக்கத்தை பற்றியும் தளம் மூலம் ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகள் பற்றியும் கூறினோம்.

dscn2126

“ரொம்ப நல்ல விஷயம்.. கேட்கவே சந்தோஷமா இருக்கு!” என்றார் கணு.

“உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள் சார்…”

“எங்க தாத்தா பேர் சின்னசாமி ஐயர். அப்பா பேரு ராமச்சந்திரன். அம்மா பேரு சீதாலக்ஷ்மி. மஹா பெரியவரின் அருளானையின் படி புதைந்துகிடந்த அஸ்திவாரத்தின் மேல் 1942 இல் இந்த கோவிலை கட்டினாங்க. நான் 1943 இல் பிறந்தேன். இயற்பெயர் வைத்தீஸ்வரன். பிள்ளையார் கோவில் கட்டி பிறந்ததனால் கணேசன் என்று பெயர் வைத்தார்கள். அது நாளடைவில் கணு என்றாகிவிட்டது. இப்போதும் இந்த ஊரில் கணு என்றால் தான் என்னை தெரியும். நான் தஞ்சாவூர் ஜில்லாவுல ASSISTANT TREASURY ஆபிசரா இருந்து ரிட்டையர் ஆயிட்டேன். ஒரு பையன் ஒரு பொண்ணு.  பொண்ணு ஜெயஸ்ரீ, மருமகன் ரவிசங்கர். பேத்திகள் ஷிவானி, தேஜஸ்வினி. பையன் பேரு பிரசன்ன வெங்கடேசன் மருமகள் கிருத்திகா. பேரன் சர்வேஷ், பேத்தி அமிர்த லக்ஷ்மி.”

“இவனுக்கும் நாங்க கணேஷ்னு தான் பேரு வெச்சிருக்கோம். வீட்டுல இவனை கூப்பிடுறது கணேஷ்னு தான்!” என்றார் அப்பா. (வெளியில தான் நம்ம பேர் சுந்தர். வீட்டுல நம்ம பேர் : கணேஷ்!)

“இதுவரைக்கும் இந்த கோவில் பல வெள்ளங்களை சந்தித்துவிட்டது. அத்தனையும் தாங்கி நின்னுக்கிட்டுருக்கு. காம்பவுண்ட் சுவர் மட்டும் கொஞ்சம் சிதிலமடைந்துவிட்டது!” என்றார் கணு சற்று கவலையுடன்.

“கோவிலை புனருத்தாரணம் செய்வதை பிறகு பார்த்துக்கொள்கிறோம். இப்போதைக்கு கோவிலில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி, சில சில சிமெண்ட் பூச்சு வேலைகளை செய்து, எலக்ட்ரிகல் பணிகள் செய்து, வெள்ளையடித்து தருகிறோம். அடுத்த மாதம் நண்பர்களுடன் வருகிறோம். உள்ளூரில்  இருந்து நீங்கள் இரண்டு பேரை கூலிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கணு அவர்களிடம் கூறியிருக்கிறோம்.

தானும் இந்த பணியை விரைந்து மேற்கொள்ள விரும்புவதாகவும் நம்முடன் இணைந்து இந்த பணியை செய்வதாகவும் திரு.கணு அவர்கள் கூறினார்.

தண்டபாணி குருக்களுக்கும் கணு அவர்களுக்கும் நமது ‘தினசரி பிரார்த்தனை’ லேமினேஷன் படத்தை பரிசளித்தோம்.

பிரார்த்தனையை படித்து பார்த்தவர், “ரொம்ப பிரமாதமாக இருக்கு. தேங்க் யூ தேங்க் யூ” என்றார்.

தண்டபாணி குருக்கள் அவருக்கு கொடுத்த படத்தை கோவிலின் உள்ளே வைத்தார்.

dsc01408

வெளியே வந்து சற்று பேசிக்கொண்டிருந்தோம். நாம் யாரை தேடிச் சென்றோமோ அவரே நம்முடன் வந்திருந்து ஆனைமுகன் தரிசனத்திலும் பங்கேற்றது நம்மை மகிழ்ச்சியில் கரைபுரளச் செய்தது.

அந்த நேரம் பார்த்து நமக்கு நம் வாசகி ஒருவரிடம் இருந்து அலைபேசி வந்தது. சந்தான ப்ராப்தி வேண்டி நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை சமர்பித்திருந்ததாகவும் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது என்கிற நல்ல விஷயத்தையும் கூறினார். மேலும் தன் தாயாருக்காக ஒரு பிரார்த்தனையை நாம் அன்றைய பிரார்த்தனையில் தனிப்பட்ட முறையில் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். (நாம் அந்த கோவிலில் இருந்தது ஞாயிற்றுக் கிழமை பிற்பகல். அதாவது ஒரு 3.00-4.00 மணியிருக்கும்.)

அடுத்து திருவையாறு ஐயாரப்பறை நாம் தரிசிக்க செல்வதாகவும் பிரார்த்தனை நேரத்தில் (Sunday 5.30 – 5.45 pm) அங்கு தான் இருப்போம் என்றும் மறக்காமல் பிரார்த்தனை செய்வதாகவும் கூறினோம். அங்கு கணபதி முன்பாகவும் அவருக்காக வேண்டிக்கொண்டோம்.

நாம் இங்கு புறப்படும் முன்னதாகவே இது பற்றி சுவாமிநாதன் அவர்களிடம் கூறியிருந்தோம். சுவாமிநாதன் அவர்களுடன் அவரை பேசவைக்க விரும்பி, திரு.சுவாமிநாதன் அவர்களை நமது அலைபேசியில் தொடர்புகொண்டு விஷயத்தை கூறி, கணு அவர்கள் தற்போது நமக்கருகில் நின்றுகொண்டிருக்கும் விஷயத்தையும் அவர் பேச விரும்பும் விஷயத்தையும், கூறி நமது அலைபேசியை கணு அவர்களிடம் கொடுத்தோம்.

கணபதி இருக்க கவலை எதற்கு...
கணபதி இருக்க கவலை எதற்கு…

கணு சுவாமிநாதன் அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நன்றி கூறினார். சற்று நேரம் பேசிவிட்டு மீண்டும் அலைபேசி நம் கைக்கு வர, எதிர்முனையில் திரு.சுவாமிநாதன் பெரு மகிழ்ச்சியுடன் இருப்பது புரிந்தது.

“ரொம்ப தேங்க்ஸ் சுந்தர். சென்னை வந்தவுடனே நான் உங்களை கூப்பிடுறேன்!” என்றார். (அது சமயம் அவர் வெளியூரில் இருந்தார்.)

திரு.கணு மற்றும் திரு.தண்டபாணி குருக்கள் இருவரிடமும் ஆசி பெற விரும்பி கோவிலுக்கு வெளியே, அவர்களை நிற்கச் சொல்லி அவர்கள் காலில் வீழ்ந்து ஆசிபெற்றோம்.

எல்லா வளங்களும் குறைவின்றி பெற்று இருவரும் வாழ்த்தினார்கள்.

“நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். நம்மை பொருத்தவரை நம்பிக்கை தான் மூச்சே!! அதாவது அவன் அருள் நமக்கு என்றும் உண்டு என்கிற நம்பிக்கை!” என்றோம்.

“எங்கிருந்தோ இவரை தேடி இங்கே வந்திருக்கீங்க… அவர் உங்களை எப்படி மறப்பார்? இந்த ப்ரஸன்ன மஹாகணபதியின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு! சீக்கிரமே அதை புரிந்துகொள்வீர்கள்!!” என்றார் கணு, அமைதியாக அனைத்தையும் கவனித்துக்கொண்டு அமர்ந்து கொண்டிருந்த ப்ரஸன்ன மஹாகணபதியை காட்டியபடி.

==========================================================

இந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா?

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

Also check ….

விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!

பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!

வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!

குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!

அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!

==========================================================

Also check :

மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)

ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)

நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)

தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)

==========================================================

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

==========================================================

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==========================================================

[END]

10 thoughts on “தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!

  1. இக்கோவிலில் பணிகள் செய்தீர்களா? இப்பதிவின் லிங்க் தர வேண்டுகிறேன். நன்றி

    1. இல்லை. இங்கு புனரமைப்பு வேலைகள் விரைவில் துவங்கவிருக்கின்றன. அடுத்த வரும் பதிவுகளில் முழு விபரம் தருகிறேன்.

  2. Sundarji,
    Please Arrange an Uzhavarapani in this Temple if Possible. I already consult you regarding this over Phone. If You Will, You can do this. We know.

    Narayanan.

  3. Many Time i have this article when it was published in our site.But each and every time i have tears in my eyes. What to say Gods Grace is like this.

    Maha Periyva Maha Periyva Than.

    He is an Lived God, sorry Living god in this world.

    Happy Pongal to all Right Mantra Viewers.

    Narayanan.

  4. பொங்கல் பரிசாக மிக நல்ல பதிவு அளித்து உள்ளீர்கள். நன்றி சுந்தர் ஐயா!

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  5. எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை தேடி செல்ல வேண்டும் என்று நினைத்தாலே போதும் அந்த அனாத ரக்ஷகன் நம் கன்முனே வந்து காட்சி அளிப்பார் என்பதற்கு நீங்கள் காவிரிக்கரையில் அருள்பாலிக்கும் அந்த கணேசனையும் மகா பெரியவா அருள் வாக்கில் உதித்த திரு கணேசனையும் ஒரு சேர தரிசித்ததே சான்று

    விரைவில் ஆலயம் புத்துயிர் பெற எல்லாம் வல்ல பரம்பொருள் துணை நின்று வழி காட்டிட வேண்டுவோம்

    வாழ்க வளமுடன்

Leave a Reply to Ravikumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *