தற்போது நமது வாசகி ஒருவர் செய்த ஒரு அற்புதமான கோ-சேவையை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்!
போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் திருமதி.ராஜேஸ்வரி சுவாமிநாதன். ராமாபுரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நமது தளத்தை கடந்த ஆறு மாதங்களாக பார்த்துவருகிறார். நம்மை அடிக்கடி அலைபேசியில் தொடர்புகொண்டு பதிவு குறித்த பாராட்டுக்களை விமர்சனங்களை நம்மிடம் தெரிவிப்பது வழக்கம். பேசிமுடிக்கும்போது “வாழ்க வளமுடன்” என்று கூறித் தான் போனை வைப்பார்.
நம் தளம் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தனது சிந்தனையின் போக்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பாக ஆலய தரிசனம், தான தருமம், திருவருள், பாவ புண்ணியம் இவை பற்றிய சரியான புரிதல் ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு முறை நம்மிடம் தெரிவித்தார்.
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு குறித்த பாராட்டுக்களும் விமர்சனங்களும் எந்தளவு முக்கியம் என்பது அந்த படைப்பாளிக்குத் தான் தெரியும்.
ஒரு நாள் இப்படி பேசும்போது, நமது ரைட்மந்த்ரா அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் நம்மை நேரில் சந்திக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார். “அவசியம் வாருங்கள் அம்மா… காத்திருக்கிறேன்” என்றோம்.
இதற்கிடையே இரண்டு வாரத்துக்கு முன்னர் நம்மை தொடர்புகொண்டு பேசியபோது, இரண்டொரு நாளில் நமது அலுவலகம் வருவதாக சொன்னார். சொன்னபடியே சென்ற வாரம் ஒரு நாள் மாலை நம் அலுவலகம் வந்தார். அவரை வரவேற்று உபசரித்து பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நமது ஆலய தரிசன, மகாமக அனுபங்களை கேட்டறிந்தார்.
தளத்தின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை என்றும் தாம் எதையும் தவறவிடுவதில்லை என்றும் ஆலய தரிசனம், மற்றும் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் தம்மை அந்தந்த இடத்துக்கே கூட்டிச் செல்வதாகவும், என்ன சோதனை வந்தபோதும் துவண்டுவிடாமல் தளத்தை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் தம்மைப் போன்றவர்கள் பக்கபலமாக இருப்போம் என்றும் சொன்னார்கள்.
அவருக்கு நன்றி தெரிவித்து, “உங்களை போன்றவர்க வாசகர்களாக கிடைத்தது இறைவன் அருள்” என்றோம்.
“Work life, personal life, social life (rightmantra) அனைத்தும் எப்படி பாலன்ஸ் செய்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார்.
“நேரத்தின் அருமை ஒருவருக்கு புரிந்து, நேரத்தை சரியாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் எல்லாம் சாத்தியமே” என்று சொன்னோம்.
ஆண்டவன் இந்த உலகில் ஏற்றத் தாழ்வில்லாமல் அனைவருக்கும் சரிசமமாய் கொடுத்திருக்கும் ஒரே விஷயம் நேரம் ஒன்று தான். நமக்கும் 24 மணிநேரம் தான். பில்கேட்ஸ்ஸுக்கும் 24 மணிநேரம் தான். அந்த 24 மணிநேரத்தை எப்படி ஒருவர் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்து தான் ஒருவரின் வாழ்க்கையின் போக்கு இருக்கும். நேரத்தின் அருமை புரிந்துவிட்டால் அதை வீணடிக்கக்கூடிய வாய்ப்பே வராது.
தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, நமது பதிவுகள் தமது வாழ்க்கையையும் சிந்தனைப் போக்கையும் பெருமளவு மாற்றியிருப்பதாக கூறியவர் அதற்காகவே நமக்கு பலமுறை நன்றி சொல்லவேண்டும் என்றார்.
மழையின் போது பாதிப்பு அவர்கள் பகுதியில் பாதிப்பு எப்படி இருந்தது என்று கேட்டோம்.
“நாங்க பிளாட்ஸ். பெரிசா பாதிப்பு இல்லை. ஆனா, எங்க தெருவுல சில வீடுகளை சுத்தி தண்ணி வந்திருச்சு. வெளியிலேயும் போகமுடியாம, உள்ளேயும் இருக்கமுடியாம தவிச்சவங்க ஜாஸ்தி. எங்க தெருவில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்திருந்த ஒருவர் வீட்டிலும் கொட்டகையிலும் தண்ணீர் சூழ்ந்துவிட, பசுக்களை வைத்துத் திண்டாடிக்கொண்டிருந்த அவருக்கு உதவும் விதம் பசுக்களை எங்கள் பிளாட்டில் கார்பார்கிங் பகுதியில் கட்டி வைக்க இடம் கொடுத்தோம்.”
சர்வசாதரணமாக அவர் இதைக் கூறிக்கொண்டே போக நாம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். “என்னது பசுக்களுக்கு மழை டயத்துல இடம் கொடுத்தீங்களா? அதுவும் உங்கள் பிளாட்ல…. எவ்ளோ பெரிய விஷயம்? கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்கம்மா… இது தான் விஷயமே” என்றோம்.
“டிசம்பர் மாச மழையப்போ… எங்கள் தெருவுல நிறைய வீடுகளுக்குள்ள தண்ணி புகுந்துருச்சு… நிறைய பேர் வீட்டை பூட்டிகிட்டு அவங்கங்க சொந்தக் காரங்க வீட்டுக்கு போய்ட்டாங்க… எங்க பிளாட்ல பெரிய பாதிப்பு எதுவும் இல்லே. எங்க தெருவுல எங்கள் அபார்ட்மெண்ட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி, ஒருத்தர் மாடெல்லாம் வெச்சிருக்கார். அவர் வீடு, கொட்டகை இங்கெல்லாம் தண்ணி புகுந்து, மாடுங்க எல்லாம் தண்ணியிலேயே நின்னுகிட்டுருந்தது பார்க்கவே பாவமா இருந்தது.
நம்ம வீடு சொந்த வீடா இருந்து, மாடுங்களை கட்டிப்போட இடம் இருந்தா, என் வீட்டுலேயே அத்தனை மாடுங்களையும் விடச்சொல்லிடுவேன். நான் இருக்குறதோ அப்பார்ட்மெண்ட்.
என் கணவரும் நானும் மாடுகளை அடிக்கடி பார்த்து அடிக்கடி இது பத்தி பேசுவோம்.
ரெண்டாவது நாள், அந்த மாட்டுக்கொட்டகையின் சொந்தக்காரர் எங்ககிட்டே வந்து, “அம்மா… உங்க அப்பார்மெண்ட்ல கார் பார்க்கிங் இடத்தை மாடுங்களை கட்ட கொஞ்சம் கொடுத்தீங்கண்ணா ரொம்ப நல்லாயிருக்கும். மாடுங்களால தண்ணி இருக்குறதாலே படுத்துக்க முடியலே…. எனக்கும் வேற எங்கே போறதுன்னு தெரியலே… எனக்கு உங்களைத் தான் தெரியும். நீங்க கொஞ்சம் அசோசியேஷன்ல பேசி ஏதாவது செய்யமுடியுமா பாருங்க”ன்னு வந்து கேட்டார்.
அவரா வந்து கேட்டவுடனே எனக்கு அப்போ தான் இந்த சாத்தியமே தோணிச்சு. நம் தளத்தின் பதிவுகளை அடிக்கடி பார்க்குறதாலே எனக்கு பசுக்கள் மேல் மிகவும் பக்தி உண்டு. மிகப் பெரிய கோ-சேவை செய்ய கிடைச்சிருக்குற இந்த வாய்ப்பை விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி என் ஹஸ்பெண்ட் கிட்டே பேசினேன். அவர் தான் FLAT OWNERS’ ASSOCIATION SECRETARY.
“எனக்கு ஓ.கே. தான் ராஜேஸ்வரி. மத்தவங்க இதுக்கு ஒத்துக்கணுமே”
“நல்ல விஷயம் பண்ணப்போறோம். ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு கேட்டுப்பார்ப்போம். ஒத்துகிட்டா அந்த புண்ணியம் எல்லாருக்கும் தானே…”
“சரி கேட்டுப்பார்ப்போம்” என்று அவர் சொன்னவுடன், நானும் என் கணவரும் எங்கள் அப்பார்ட்மெண்டில் உள்ள எல்லா பிளாட்ஸ்க்கும் போய் அங்கே குடித்தனம் இருக்குறவங்களை சந்திச்சு, இது மாதிரி மாடுகள் எல்லாம் தண்ணியில் தவிக்கும் விஷயத்தை சொல்லி, ஒரு நாலஞ்சு நாள் மழை தண்ணி வடியுற வரைக்கும் நம்ம கார்பார்க்கிங்ல கட்டிப்போட அனுமதி கேட்டோம். எல்லாரும் பெரிய மனசோட ஒத்துக்கிட்டாங்க. அதுல ஒரு ஃபேமிலி கிறிஸ்டியன்ஸ். அவங்க கூட இதுக்கு எந்த அப்ஜெகஷனும் சொல்லாம பெருந்தன்மையா ஒத்துக்கிட்டாங்க.
எங்களுக்கு ஒரே சந்தோஷம். பால்காரர்கிட்டே விஷயத்தை சொன்னவுடனே அவர் ரொம்ப நன்றிம்மான்னு சொல்லி, மாடுகளை கொண்டு வந்து கட்டிப்போட்டார். “கடைசியா தண்ணி வடிஞ்சி மாட்டை ஷிப்ட் செய்தவுடனே நானே இந்த இடத்தை நல்லா சுத்தப்படுத்திக் கொடுத்திடுறேன்மா” என்றார்.
மாடுகளுக்கு தாங்கள் இளைப்பாற, ஓய்வெடுக்க நல்லதொரு இடம் கிடைத்ததில் அத்தனை சந்தோஷம். அந்த மாடுகளுக்கு இணையாக கன்றுக்குட்டிகளும் இருந்தன. அவற்றுக்கு தான் ஒரே குதூகலம்.
பசுக்களுக்கு அங்கே தீவனம் வைப்பது, வைக்கோல் போடுவது, கழுநீர் வைப்பது என எல்லாம் அங்கே தான் நடந்தது. மாடுகள் சாணத்தை போட்டபோது, பால்காரரின் வீட்டினர் உடனுக்குடன் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தி அந்த இடத்தை நன்கு பராமரித்து வந்தனர். எங்களுக்கு எந்த விதத்திலும் அசௌகரியம் நேராதவாறு பார்த்துக்கொண்டனர்.
நாங்களும் கறிகாய் கழிவுகள், தோலிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை மாடுகளுக்கு கொடுத்து வந்தோம். நிலைமை சரியாகும் வரை மாட்டுக்காரருக்கும் அவரது வீட்டினருக்கும் அவர்கள் கீழே வேலை செய்தபோது டீ, காபி முதலானவற்றை எங்கள் வீட்டிலிருந்து போட்டுக்கொடுத்தோம்.
அந்த பார்க்கிங் இடமே சொல்லவியலாத ஒரு சந்தோஷ அலைகளில் மிதந்ததை உணர முடிந்தது.
சுமார் இரண்டு வாரங்கள் மாடுகள் அனைத்தும் அங்கே தான் இருந்தன. அதன் பின்னர் தான் மீண்டும் தங்கள் பழைய இடத்துக்கு சென்றன.”
இதை ராஜேஸ்வரி அவர்கள் நம்மிடம் சொல்லி முடித்தவுடன் எழுந்து நின்று கைதட்டினோம்.
“இது தான் மிகப் பெரிய கோ-சம்ரட்சணம். ரொம்ப சந்தோஷம்மா.. உங்களைப் போன்றவர்கள் ரைட்மந்த்ராவின் வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதில்தான் எனக்கு மிகவும் பெருமை… சக வாசகர்களுக்கு அதை விட பெருமை….”
“எல்லாம் ரைட்மந்த்ரா பார்க்க ஆரம்பிச்சதுலே ஏற்பட்ட மாற்றம்” என்றவர் கர்நாடக மாநிலம் கார்வார் நகரில் கைகா அணுமின் நிலைய குடியிருப்பில் நம் வாசகர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் மழையின்போது சாக்கடைக்குள் விழுந்துவிட்ட பூனைக்குட்டிகளை காப்பாற்றிய அந்த கதையை நினைவுகூர்ந்தார். (Please check : மரணத்தின் விளிம்பில் காப்பாற்றப்பட்ட சில ஜீவன்கள்! – நெகிழ வைக்கும் நிகழ்வு!!)
ஆக, ஒரு நல்ல செயல் பல நல்ல செயல்களுக்கு தூண்டுகோலாக இருப்பது புலனாகிறது அல்லவா?
இந்த அருள் வெள்ளத்தை அனைவரிடமும் பரவச் செய்யவேண்டும் என்பதற்காகே இதை இங்கே பதிவாகவே நமது தளத்தின் ஓவியர் ரமீஸ் அவர்களின் பிரத்யேக ஓவியத்துடன் பகிர்கிறோம்.
இத்தனை மகத்தானதொரு சேவையை செய்திருக்கும் திருமதி.ராஜேஸ்வரி சுவாமிநாதன் அவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் பரிசு வழங்கவேண்டும் அல்லவா?
என்ன தருவது என்று யோசித்தோம். சமீபத்தில் தான் மகாமகம் சென்று வந்தபடியால் மகாமக புனித தீர்த்தமும் குங்குமப் பிரசாதமும் கொடுத்தோம். கூடுதல் போனஸாக மகாமக சிறப்பு காலண்டர் ஒன்றை பரிசளித்தோம். மகாமகம் தொடர்புடைய சிவாலயங்களின் உற்சவ மூர்த்தங்கள் அடங்கிய காலண்டர் அது. கோடி கொடுத்தாலும் ஈடாகாது என்னுமளவுக்கு ஒரு காலப் பெட்டகம் பொக்கிஷம்.
“பசுக்களுக்கு உரிய நேரத்தில் தங்கள் அப்பார்ட்மெண்ட்டில் இடமளித்து மிகப் பெரியதொரு கோ-சம்ரட்சணத்தை செய்தமைக்கு நம் வாசகர்கள் சார்பாக இதை உங்களுக்கு பரிசளிக்கிறேன்… மேன்மேலும் பல அறப்பணிகளை செய்து நாடும் தங்கள் வீடும் நலம் பெறவேண்டும்!” என்று கூறி அதை பரிசளித்தோம்.
மிகவும் நெகிழ்ந்துவிட்டார்.
புறப்படும் முன் மறக்காமல் நமது தளத்திற்கு விருப்ப சந்தா அளித்தார். “உங்கள் பணிகளுக்கு ஏதோ என்னால் இயன்ற ஒரு தொகை. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் தருகிறேன்” என்றார். “மிக்க நன்றி அம்மா…” என்று அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டோம்.
இந்த பதிவில் அவரது புகைப்படத்தை அவரிடம் அனுமதி பெற்று வெளியிடுகிறோம். இந்த செயலும் இந்த பதிவும் இது போன்ற சூழ்நிலையை எதிர்காலத்தில் எதிர்கொள்வோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று எடுத்துக்கூறி அவரை ஒப்புக்கொள்ளவைத்தோம். அவரும் அதில் உள்ள பொது நன்மையை கருதி பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கும் அவரது பணிகளில் உறுதுணையாக இருக்கும் கணவர் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.
கோமாதா எங்கள் குலமாதா குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா வண்ணக் கோமாதா
கோமாதா கோமாதா எங்கள் குலமாதா குலமாதா
நலம் நீயே பலம் நீயே நதி நீயே கடல் நீயே
அருள் நீயே அருள் நீயே பொருள் நீயே பொருள் நீயே
ஒளி நீயே ஒளி நீயே உயிர் நீயே உயிர் நீயே
உலகம் யாவும் கருணையோடு பெருகிவாழ அருள்வாயே!
பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும்!!
“கோ ஸம்ரக்ஷணம் நம்முடைய அத்யாவசியக் கடமையாதலால், இதை நடைமுறை ஸாத்யமில்லாத கார்யம் என்று தள்ளி விடாமல், சில சிரமங்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளித்துக் கொண்டு, கஷ்ட நஷ்டப் பட்டாவது அவச்யம் இதைச் செய்ய வேண்டும். அப்படியொன்றும் கஷ்டமும் நஷ்டமும் பெரிசாக வந்து விடாது.
பசுவுக்காக எவ்வளவு த்யாகம் பண்ணினாலும் தகும், சிரமப்பட்டாலும் தகும் என்பதும் வாஸ்தவம். அப்படிச் சில பேரோ, பல பேரோ புறப்பட்டால் பாராட்ட வேண்டியது தான். பசுக்களை வயிறு வாடாமல் ரக்ஷிப்பதற்கு நம்மில் அத்தனை பேரும் ஏதோ ப்ரமாத த்யாகம் பண்ண வேண்டும், சிரமப்பட வேண்டும் என்று கூட இல்லை.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானேதிருமூலர் ‘திருமந்திர’த்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை; அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார். முடிவாக ஜீவர்களிடம் இனிமையாகப் பேசுவதையும் சொல்லியிருக்கிறார்.”
– தெய்வத்தின் குரலில் மஹா பெரியவா
=========================================================
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
=========================================================
Also check :
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
=========================================================
[END]
சூப்பர் சார் இந்த மாதுரி நினைக்கிற செய்யிற நல்ல உள்ளங்கள் இருபதனல்தான் நமக்கும் மற்றவருக்கும் இந்த உலகத்தில் இருக்க பிடிக்குது
படிக்கும்போதே கண்ணில் நீர் வருது சார். இப்போ இந்த பதிவை நான் என்னுடைய நெருங்கிய நண்பரும் உயர் அதிகாரியும் ஆன திரு . பாஸ்கரன் சார் ரூமில்ருந்து தான் படித்தோம் . அவரும் தங்களின் இந்த ரைட் மன்ற பதிவுகளை படிக்க ஆரம்பித்து உள்ளார்கள்..
மிக மிக நன்றி திருமதி ராஜேஸ்வரிக்கும் அவர்கள் கணவருக்கும் அந்த சொசிஎட்டி நண்பர்களுக்கும் .
வாழ்க வளமுடன்.
தங்களின்
சோ ரவிச்சந்திரன்
கார்வார்.
சேவையில் இன்னும் எவள்ளவு தூரம் பயணம் பண்ண வேண்டி உள்ளது என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. நன்றி பார் ஷேரிங் திஸ் தகவல் ..ஆப் பசு .சேவை.
பாஸ்கரன்
கார்வார், கைகா
போற்றுதலுக்கு உரிய காரியம் செய்துள்ளார் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி.
மனதை நெகிழ வைத்தது !!
முப்பது முக்கோடி தேவர்களும் , மும்முர்த்திகளும், முப்பெரும் தேவியர்களும்
உறையும் கோ மாதா-வை இரண்டு வாரங்களுக்கு சம்ரக்ஷனை செய்த புண்ணியம் அவர்கள் ஆயுள் முழுமையும் மட்டுமல்ல ஈர் ஏழு தலைமுறையும் காக்கும்-
சகோதரி திருமதி.ராஜேஸ்வரி மற்றும் பிற நண்பர்களயும்.
வாழ்க !!! வளர்க !!!
வாசுதேவன் நெ வீ
திருமதி ராஜேஸ்வரி அவர்கள் நிச்சயம் நம் தளத்தின் உண்மையான வாசகர். அவர்களது மனிதாபிமானமிக்க செயல் புண்ணியத்திலும் புண்ணியம் இவரது சேவை ஒரு நல்ல முன்னோடி. நம் சுந்தரின் எழுத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்த நற்பலன் வாழ்க மனித நேயம் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கும் மற்றும் பசுக்களுக்கு உதவி செய்த அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
முதற்க்கண் நம் வாசகி ராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தளத்தை பார்த்து அவர் இன்ஸ்பிரேஷனாகி இன்று எங்கள் எல்லாருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷனாக உயர்ந்திருக்கிறார்.
அவருக்கும் அவரது கணவருக்கும் இதர பிளாட் வாசிகளுக்கும் என் நன்றி.
ஓவியர் ரமீஸ் அவர்கள் பிரமாதமான ஓவியத்தை வரைந்திருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.
இந்த பதிவுக்கு ஓவியம் கண்டிப்பாக போடவேண்டும் என்று முடிவு செய்து செயல்படுத்திய உங்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
மகுடத்தின் மணிவைரமாக இறுதியாக மகா பெரியவாவின் வார்த்தைகளையும் போட்டு இதை கல்வெட்டாக்கிவிட்டீர்கள்.
வாழ்க வளமுடன்
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
அருமை!! திருமதி.ராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள் பல!! அனைவரும் தங்களால் இயன்ற விதத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு நல்லதொரு சான்று!!
குரு சரணம் சரணம்!!