மற்ற இடங்களைப் போலல்லாமல் பசுக்களை இங்கு சிறந்த முறையில் பராமரித்து வருவதால் அந்த கோ-சாலை ஊழியர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கவேண்டி அவ்வப்போது நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகள் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது இந்த கோ-சாலை பணியாளர்களுக்கு நம் தளம் சார்பாக வஸ்திர தானம் அளித்தது நினைவிருக்கலாம். சென்ற ஆண்டு வஸ்திர தானத்திற்கு அந்த பகுதியில் கோவிலுக்கு அருகில் இருக்கும் நம் வாசகர்கள், முதிய தம்பதியினர் திரு.ராஜகோபாலன் மற்றும் சக்திபாய் ஆகிய இருவரைக் கொண்டு நிறைவேற்றினோம்.
இந்த ஆண்டு அவர்கள் ஊரில் இல்லாததால் நம் வாசகர்கள் எவரையேனும் கொண்டு வசித்திர தான நிகழ்ச்சியை எளிமையாக நடத்திடவேண்டும் என்று முடிவுசெய்தோம்.
அப்போது நம் நினைவுக்கு வந்தவர் நண்பர் கண்ணன் வைரமணி. நமது உழவாரப்பணி, ஆலய தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கடி வருபவர் திரு.கண்ணன்.
ஒருமுறை நம்மிடம் பேசும்போது மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தாம் குடும்பத்துடன் வர ஆவலாக இருப்பதாக கூறியிருந்தார். அவரிடம் கோ-சாலை வஸ்திர தானம் பற்றி கூறி, குடும்பத்துடன் வந்திருந்து விஸ்வநாதரையும் அன்னை விசாலாக்ஷியையும் தரிசித்துவிட்டு, அப்படியே வஸ்திர தானத்தையும் நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாக மாலை நேரத்தில் நிகழ்ச்சியை வைத்துக்கொள்வது என்று முடிவானது.
முன்னதாக பொருட்களை வாங்க, தனது பங்காக ஒரு சிறிய தொகையை கண்ணன் அனுப்பிவைத்தார்.
அன்று மாலை சொன்ன நேரத்துக்கு கோவிலுக்கு வந்தும்விட்டார். அவரது காரை பார்க் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைவீதிக்கு புறப்பட்டோம். பொருட்களை வாங்கி நம்முடன் பைக்கில் எடுத்துக்கொண்டு வர துணை தேவைப்பட்டது. கண்ணன், குடும்பத்தோடு வந்திருந்தமையால் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. பாலாஜி அவர்களிடம் பேசி கோ-சாலை வாலண்டியர்களில் ஒருவரான மாணவர் பத்ரியை அழைத்துக்கொண்டு ஆர்யா கௌடா சாலைக்கு சென்றோம். அங்கு நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி துணிமணிகள், இனிப்பு மற்றும் பலகாரங்கள், வெற்றிலை பாக்கு, பழம், பூ உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அனைத்தும் வாங்கப்பட்டது.
ஒரு முக்கால் மணிநேரத்தில் திரும்ப வந்தோம். அதற்குள் கண்ணன் தரிசனம் முடித்துவிட்டு காத்திருந்தார்.
அவருக்கு கோ-சாலை ஊழியர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தோம். எந்தளவு சிரத்தையாக, இவர்கள் பணிபுரிகிறார்கள், எந்தளவு சுத்தமாக கோ-சாலை உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விளக்கி கூறினோம்.
ஏற்கனவே நமது தளத்தில் பாலாஜி, திருவேங்கடம் உள்ளிட்ட அனைவரது சேவைகள் குறித்தும் தாம் பார்த்து வருவதாக குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் ஒரு வித்தியாசம் என்னவெனில், சென்ற ஆண்டு குரு மற்றும் பாலாஜி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். குரு அவர்கள் சொந்தமாக புத்தக ஸ்டாலை வைத்து அதை பார்த்துக்கொள்கிறபடியால் இந்த ஆண்டு பாலாஜி, மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் திருவேங்கடம், மற்றும் கீர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
ஒரு முன்னேற்றம் … இந்த ஆண்டு பாலாஜி மற்றும் திருவேங்கடம் ஆகியோரின் திருமதிகளுக்கும் சேர்த்து புத்தாடை வழங்கப்பட்டது. அதில் திரு.பாலாஜி அவர்களின் திருமதி வந்திருந்து நமது எளிய பரிசை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
வருவாய்க்கு எத்தனையோ வழிகள் இருக்க, கோ-சாலை பரமாரிப்பு போன்றதொரு பணியை இல்லத்தரசியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் நிச்சயம் ஒருவர் செய்யவே முடியாது. எனவே முதல் மரியாதைக்குரியவர்கள் அவர்கள் தான். ஆகவே பாலாஜி மற்றும் திருவேங்கடம் ஆகியோருக்கு தாம்பூலப் பொருட்கள், வேட்டி, சட்டை, துண்டு, புடவை, ரவிக்கை பிட், இனிப்பு மற்றும் காரம் அடங்கிய பலகார செட் வழங்கப்பட்டது.
கீர்த்தி மற்றும் பத்ரி இருவருக்கும் புடவை ரவிக்கை பிட் தவிர்த்து எஞ்சிய அனைத்தும் வழங்கப்பட்டது.
நண்பர் கண்ணன் மற்றும் அவரது குழந்தைகளைக்கொண்டே அனைத்தும் வழங்கப்பட்டது.
இறுதியில் கண்ணன் அவர்களுக்கு அவரே எதிர்பாராமல் ஒரு சர்ப்ரைஸ் தந்தோம்.
அவரது குடும்பத்தினருக்கு தாம்பூலப் பொருட்கள், ரவிக்கை பிட், இனிப்பு பலகாரங்கள் அடங்கிய ஒரு செட் கோ-சாலை ஊழியர்களை கொண்டு தரப்பட்டது. எதிர்பாராமல் அந்த ஊழியர்களின் கரங்கள் மூலம் கிடைத்த இந்த பரிசால் திரு.கண்ணன் அவர்களும் அவர் திருமதியும் திக்குமுக்காடிப் போனார்கள்.
கண்ணன் மற்றும் அவர் திருமதி இருவரும் நெகிழ்ந்து போய் நன்றி கூறிக்கொண்டே இருந்தார்கள்.
ஃபோட்டோ, கௌரவம் அது இது என்று சிறியதொரு விஷயத்திற்கு ஏதோ பெரிய அலம்பல் செய்கிறோமோ என்கிற ஒரு உறுத்தல் நமக்கு. பாலாஜியிடம் கேட்டேவிட்டோம்.
“ஸாரி… பாலாஜி… ஏதோ எங்களால முடிஞ்சதை செஞ்சிருக்கோம். நாலஞ்சு பேர் சேர்ந்து செய்றது இது. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் நிறைய செய்யனும்னு ஆசைப்படுறோம். நாங்கள் வளர வளர இந்த தொண்டின் அளவும் நிச்சயம் உயரும்!”
“நீங்க வேற சார்… இதைக் கூட எங்களுக்கு செய்ய யார் சார் இருக்காங்க…?? மத்தவங்கல்லாம் கோ-சாலையையும் பசுக்களையும் பார்க்கும்போது நீங்க எங்களை பார்த்தீங்க. நாங்க செய்ற வேலையை பார்த்தீங்க. கோ-சாலைக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்தீங்க. எங்களையும் மதிச்சி அப்பப்போ ஏதாவது செய்றீங்க. நீங்க கொடுத்த உற்சாகத்துல தான் இதை இவ்ளோ சந்தோஷமா இந்த சேவையை செய்றோம்….” என்றார் நெகிழ்ந்து போய்.
(இரண்டாண்டுகளுக்கு முன்னர் நம் தளம் சார்பாக நாம் பிரதி மாதம் கோ-சம்ரோக்ஷனம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தபோது சரியானதோர் இடத்தை தேர்ந்தெடுக்க நாம் எத்தனை அலைந்திருப்போம், எத்தனை கோவில்களில் முயற்சி செய்திருப்போம் என்று நமக்கு தான் தெரியும்.)
வாசகர்களுக்கும் நாம் கூறவிரும்புவது என்னவென்றால், இது தனிப்பட்ட ஒரு நபர் செய்வதல்ல. ஒரு நான்கைந்து பேர் பங்கெடுத்துக்கொண்டு இணைந்து செய்வது. எனவே இப்படி ஒரு எளிய நிகழ்ச்சி மூலம் அதை செய்வது, உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துவது அவசியமாகிறது.
மேலும் நம் நோக்கம், இதே போன்று பலர் தத்தங்கள் பகுதிகளில் செய்ய முன்வரவேண்டும் என்பதே. கோவிலுக்கு சென்றால் கருவறையை தவிர மற்ற இடங்களிலும் உங்கள் பார்வையை திருப்பவேண்டும். ஒரு உதவி நீங்கள் செய்ய முன்வந்தால் பலனடைவோரின் தகுதி, நேர்மை ஆகியவை பற்றி கவலைப்படவேண்டாம். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் பாராட்டும் அவர்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையும் அவர்களை மாற்றி பணியை நிச்சயம் சிறக்கச் செய்யும். (இது பற்றி ஒரு கதை இருக்கிறது. அதை வரும் MONDAY MORNING SPECIAL பகுதியில் பார்க்கலாம்.)
நெல்லுக்கு இறைக்கும் நீர் சில சமயம் புல்லுக்கும் போகும். அது இயற்கை. அதை நம்மால் தவிர்க்க இயலாது. அதற்காக நீர் இறைப்பதை நிறுத்த முடியுமா? நீங்கள் சற்று விழிப்புடன் இருந்தால் போதும். காலப்போக்கில் நெல்லுக்கு மட்டுமே நீர் இறைக்கும் பக்குவம் உங்களுக்கு வந்துவிடும்.
நமது ஊக்குவிப்பு இவர்களை எந்தளவு மாற்றியிருக்கிறது, பணியை சிறக்கச் செய்திருக்கிறது, உற்சாகத்துடன் அதை செய்யுமாறு இவர்களை தூண்டியிருக்கிறது என்பதை நாமறிவோம். அந்த இறைவனும் அறிவான்.
பாக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான். தேக்கு விற்பவனை ஊக்குவித்தால் தங்கம் விற்பான்.
ஆக, இன்று உலகிற்கு தேவை ஊக்குவிப்பவர்களும் நம்பிக்கையளிப்பவர்களும் தான். குற்றம் குறை கண்டுபிடிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். நாம் அந்தப் பட்டியலில் இணையவேண்டாமே.
===============================================================
Also check from our archives…
இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா ?
ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!
வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
===============================================================
[END]
கோ சம்ரோக்சனத்திற்கு வந்து நிகழ்ச்சியை சிறப்பித்த திரு கண்ணன் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
கோ சேவை செய்பவர்களை தங்கள் தளம் மூலம் ஊக்குவிப்பதால் கோ சேவை செய்யும் ஊழியர்கள் பசுக்களை எவ்வளவு ஆனந்தத்துடன் பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது மகிச்சியாக உள்ளது.
//பாக்கு விற்பவனைக் கூட ஊக்குவித்தால் தேக்கு விற்பான். தேக்கு விற்பவனை ஊக்குவித்தால் தங்கம் விற்பான்.
ஆக, இன்று உலகிற்கு தேவை ஊக்குவிப்பவர்களும் நம்பிக்கையளிப்பவர்களும் தான். குற்றம் குறை கண்டுபிடிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே நிறைய இருக்கிறார்கள். நாம் அந்தப் பட்டியலில் இணையவேண்டாமே.// – நிதர்சனமான உண்மை
தீபாவளி கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது அறிய மிக்க மகிழ்ச்சி.
நம் தளம் மூலம் மேலும் பல சிறந்த சேவைகள் நடைபெற வாழ்த்துக்கள் .
நன்றி
உமா
மெய்சிலிர்க்க வைக்கும் தொண்டு. உண்மையில் அர்த்தமுள்ள தீபாவளியை நீங்கள் கொண்டாடியதோடு வாசகர்கள் சிலரையும் கொண்டாட வைத்திருக்கிறீர்கள்.
முன்பெல்லாம் பசுவை நான் பார்க்கும் பார்வை வேறு. இப்போது பார்க்கும் விதமே வேறு.
இதைக் கூட எங்களுக்கு செய்ய யார் சார் இருக்காங்க…?? என்று பாலாஜி அவர்கள் கூறுவது நெகிழ வைக்கிறது.
நேரில் வந்து பங்குபெற்ற நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்த கண்ணன் வைரமணி அவர்களுக்கும அவர் மனைவிக்கும் என் வணக்கங்கள்.
தொடரட்டும் உங்கள் தொண்டு. சிறக்கட்டும் வையகம்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Wonderfullllllllll. It’s a wonderful gesture on your part. Kudos to you and your team. May God be with all you guys and give health and wealth to continue this noble mission.
krishna,
nanganallur
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே……………..
சுந்தர் ,
இதை படிக்கும் போது இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற வேகம் என்னுள் வருகிறது .
உங்கள் பனியில் எங்கக்கு சிறு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள் கோடி
பொங்கல் பண்டிகையை இன்னும் சிறப்பாக பண்ண வேண்டும் என்று ஆசை படுகிறான்.
கண்ணன்