முகலிவாக்கத்தை சேர்ந்த நண்பர் / நம் தள வாசகர் வெங்கட் பாடசாலை குழந்தைகளுக்கென்றே தன் முயற்சியில் தன் சுற்றத்திடமும் நட்பிடம் பேசி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வஸ்திரங்கள் மற்றும் துண்டுகளை, பொருட்களாகவே திரட்டியிருந்தார். அவற்றை தீபாவளிக்கு முன்பு ஒப்படைக்க வேண்டும் என்று கருதி நாமும் வெங்கட் அவர்களும் அக்டோபர் 19 ஞாயிறு அன்று மதியம் மாங்காடு சக்தி நகரில் உள்ள தபஸ் டிரஸ்ட் வேத பாடசலைக்கு சென்றிருந்தோம்.
(அதற்கும் முன்பே ஒரு சனிக்கிழமை நண்பர் ஹாலஸ்ய சுந்தரம் ஐயர் மற்றும் ‘தெய்வத்தின் குரல்’ சுவாமிநாதன் உள்ளிட்ட நண்பர்கள் இங்கு தாங்கள் திரட்டிய காசோலைகளை ஒப்படைக்க சென்றிருந்தனர். ஆனால் அன்று நமக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கததால் அவர்களுடன் செல்ல முடியவில்லை.)
பாடசாலை நிர்வாகிகளில் ஒருவரான ராமச்சந்திர ஐயர் தற்போது மயிலாடுதுறையில் உள்ள கோழிகுத்தி பாடசாலைக்கு பணி நிமித்தம் சென்றிருக்கிறார். காலையில் அவரிடம் பேசும்போது, மதியம் வஸ்திரங்களை கொண்டு வருவதாகவும் வேறு ஏதாவது வேண்டுமா என்றும் கேட்டோம். பாடசாலை மாணவர்கள் விளையாட கேரம்போர்ட் ஒன்று மற்றும் பேட்மிண்ட்டன் செட்டுகள் இரண்டு முடிந்தால் வாங்கி வரும்படி கேட்டுகொண்டார். எவ்வளவு பெரிய சேவைக்கு வாய்ப்பு….!! அதை நம் தளம் சார்பாக வாங்கிச் சென்று குழந்தைகளிடம் மிகுந்த குதூகலத்திற்கு மத்தியில் ஒப்படைத்தோம்.
ப்ரொஜெக்டரில் மேற்கு மாம்பலம் ‘ஸ்ரீ வேத வித்யாஸ்ரமம்’ மாணவர்களுக்கு ஆதிசங்கரர் படத்தை சென்ற ஞாயிறு திரையிட்டு காண்பித்ததைப் போல இவர்களுக்கும் காட்ட விரும்புவதாக சொன்னோம். மாணவர்கள் டாம் & ஜெர்ரி மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை காண விரும்புவது புரிந்தது.
தீபாவளி மாலையை அவர்களுடன் கொண்டாட விருப்பம் தெரிவித்தோம். இருப்பினும், ராமச்சந்திர ஐயர் அவர்களை வெளியே எங்கோ அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். அடுத்த வரும் ஒரு ஞாயிறு மேற்கூறிய படங்கள் அவர்களுக்கு திரையிட்டு காட்ட உத்தேசித்திருக்கிறோம். (இனி வரும் காலங்களில் இறைவன் அருளால் சென்னையை சுற்றியுள்ள இது போன்ற வேத பாடசாலைகள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று, பக்த பிரகலாதா, கந்தன் கருணை, திருவருட்ச்செல்வர், திருமால் பெருமை உள்ளிட்ட படங்களை திரையிட்டு காட்டவிருக்கிறோம்.)
மாணவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்களுடன் இருந்த கணம் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களில் ஒன்று. நமக்கோ நண்பர் வெங்கட்டுக்கோ ஹிந்தி தெரியாது என்பதால் மாணவர்களுடன் உணர்வுப்பூரவமாக உரையாட முடியவில்லை. அங்கிருந்த ஒரே தமிழ் பேசும் மாணவன் தீபக் தான் எங்களுக்கு TRANSLATOR.(ஹிந்தி தெரியாததற்கு மிகவும் வருத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று!) இருப்பினும் அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்? அவர்களின் பார்வையில் பொங்கும் அன்பை, அன்னியோன்யத்தை அனுபவித்தோம். புகைப்படத்தில் அதை காணலாம்.
நாங்கள் பேட்மிண்டன் செட்டை கொடுத்தது தான் தாமதம்… மாணவர்கள் வீதிக்கு வந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர். கண்கொள்ளா காட்சி அது.
பாடசாலையில் உள்ள பசு, முன்பு (தினசரி கோ-பூஜை நடக்கும்) சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு புறப்பட்டோம். இங்கு மொத்தம் நான்கைந்து பசுக்கள் உள்ளன. பக்கவாட்டில் உள்ள தொழுவத்தில் பக்கி பசுக்கள் உள்ளன.
கேரம் போர்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும், வஸ்திர பண்டல்கள் எடுத்துச் செல்லவும் ஆட்டோ அல்லது கால் டாக்ஸி பிடிக்கவேண்டியிருந்தது. “கால் டாக்ஸியெல்லாம் வேண்டாம். நான் என் காரை கொண்டு வருகிறேன்!” என்று பிடிவாதமாக கூறி மோசமான சாலைகளை பற்றி துளியும் கவலைப்படாமல் நண்பர் வெங்கட் தனது காரை கொண்டு வந்திருந்தார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
நாங்கள் புறப்படும்போது எங்கள் காருக்கு முன்னே அந்த பகுதியில் வேறு யாரோ வளர்க்கும் ஒரு பசு நின்றுகொண்டு வழியை மறிக்க , எத்தனை ஹாரன் அடித்தும் நகர மறுத்துவிட்டது. நாம் இறங்கி “பா..பா…” என்று அதை கூப்பிட்டு வேறொரு பக்கம் அழைத்துச் சென்றோம். நாம் ஏதோ சாப்பிட தருகிறோம் என்று கருதி நம் பின்னே சமர்த்தாக வந்தது பசு. அதை ஏமாற்ற விரும்பவில்லை. பழம் ஏதாவது வாங்கித் தரலாம் என்று அந்த பகுதிகளில் தேடியபோது, இருந்த ஒன்றிரண்டு கடைகளில் பழம் கிடைக்கவில்லை. சரி பரவாயில்லை என்று ஒரு மாரி பிஸ்கட் பக்கெட் வாங்கி வந்து பசுவுக்கு கொடுத்தோம். அது ஆவலுடன் சாப்பிட தொடங்கியது. அதன் பின்னர் தான் நகர்ந்தோம். (அந்த பசு, மேலே மாணவர்கள் விளையாடும் படத்தில் வலது ஓரம் நிற்பதை கவனியுங்கள்.)
மொத்தத்தில், வேத சம்ரோக்ஷனம், கோ சம்ரோக்ஷனம் இரண்டுக்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் அருளே.
இன்பம் எங்கே, மகிழ்ச்சி எங்கே என்று தேடுகிறீர்களா நண்பர்களே…?
இதோ வள்ளுவர் சொல்கிறார் விடை :
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (குறள் 39)
விரைவில்…. தீபாவளி கொண்டாட்டம் – 3
===============================================================
Padasala Venues:
Mangadu: Plot No.34, Gurukulam, Sakthi Nagar, Mangadu – Chennai – 600122
Kozhikuththi: 101, Kozhikuththi Agraharam, Mayiladuthurai – Nagappattinam District.
The registered office of the trust is at 86/131, I Floor, Lloyds Road, Royapettah, Chennai 600014. Ph : 044-28116393
TAPAS TRUST Bank Ac details
HDFC Bank, Gopalapuram, Chennai – 86.
Current Ac. No.: 06751450000127
IFSC Code : HDFC0000675
Contact Person : V.Ramachandran 9841754198
===============================================================
Also check from our archives….
ஜகத்குரு தரிசனத்துடன் தொடங்கிய நம் தீபாவளி கொண்டாட்டங்கள் – Part 1
வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!
அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!
வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
===============================================================
[END]
தீபாவளி கொண்டாட்டங்கள் மிக அருமை. தங்கள் ஆன்மிக தொண்டு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்/
திரு வெங்கட் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்
நன்றி
உமா
உண்மை தான். அறம் செய்வதால் வரும் இன்பமே உண்மையான இன்பம். நிலைக்கூடிய இன்பம். எனவே தான் ‘அறன்வலியுறுத்தல்’ என்றே அதிகாரம் வைத்துள்ளார் வள்ளுவர்.
பசுவும் கன்றும் அழகு. மாணவர்கள் விளையாடுவது கொள்ளை அழகு.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சிறப்பான பதிவு. குழந்தைகளுக்கு செய்வதே கடவுளுக்கு செய்தது போலத்தானே. நன்றி.
தங்களின் தொண்டில் சிறு கருவியாக இருந்துள்ளமைக்கு மிக்க மகிழ்ச்சி சுந்தர். வேதத்திற்கும், கல்விப் பணிகளுக்கும், முதியவர்களுக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் , கோ சேவைக்கும் நம்மால் முடிந்ததை அடிக்கடி செய்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் கரையும் என்பது முற்றிலும் உண்மை. இதையே சற்றேப் பெரிதாக நம் தளம் மூலமாக நம் நண்பர்களுடன் ஒரு நாள் நிகழ்ச்சியாக செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
வெங்கட் சுப்ரமணியம்.