இது இணையத்தில் ஏற்கனவே ஒரு சில தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் தான் வெளியாகியுள்ளது. முதன் முறையாக தமிழில் வெளியாவது நம் தளத்தில் தான்.
இது போன்ற ஆத்மானுபவங்களை நம் தமிழ் மொழியில் படிப்பதைவிட இன்பம் வேறு இருக்கமுடியுமா என்ன? முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்த கட்டுரையை அப்படியே தமிழாக்கம் செய்து, இறுதியில் நமது கருத்துக்களை தனியே சேர்த்து சற்று விரிவாகவே தந்திருக்கிறோம். காப்பி பேஸ்ட் கண்மணிகள் தயை கூர்ந்து நம் தளத்தின் முகவரியை அளிக்காமல் எடுத்தாளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.
அமெரிக்காவிலிருந்து குறுகிய கால விடுமுறையில் சென்னைக்கு வந்த ஒரு என்.ஆர்.ஐ. பத்திரிக்கையாளர் ஒருவரின் அனுபவம் இது.
வரிவிடாமல் படியுங்கள்…!
====================================================================
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!
யூ.எஸ்.ஸிலிருந்து நானும் என் மனைவியும் என் பத்திரிகை தொடர்பான சில பணிகளுக்காக சென்னை வந்தோம். இடையே ஒரு சில கோவில்களில் ஸ்வாமி தரிசனம் வேறு.
அன்று மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்துவிட்டு எதிரே உள்ள ‘கிரி ட்ரேடிங் ஏஜென்சி’ சென்றோம். கடைக்குள்ளே உள்ள புத்தகக் கடலில், ‘தத்வ போதம்’ புத்தகத்தை தேட ஆரம்பித்தேன்.
கடைக்குள் ஒரு முறை பார்வையை சுழலவிட்டேன். அபங்கங்கள் முதல் அருணா சாய்ராம் வரை, பஜன்ஸ் முதல் பாம்பே ஜெயஸ்ரீ பாடல்கள் வரை பலர் அவரவர் விரும்பும் புத்தகங்களையும் சி.டி.க்களையும் வாங்கிக்கொண்டிருந்தனர். ‘சரியான இடத்துக்கு தான் நாம வந்திருக்கோம்’ என்று மனம் சொன்னது.
நான் தத்வ போதத்தை தேடிக்கொண்டிருக்க, என் மனைவி பாரதியார் பாடல்கள் மற்றும் எம்.எஸ்.ஸின் பாடல் சி.டி.க்களை வாங்கிக்கொண்டிருந்தாள்.
கேஷ் கவுண்டர் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் எங்களை எங்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தபடி இருந்தாள். பார்த்தால் ஏதோ கிராமத்திலிருந்து வந்தவள் போல தெரிந்தது. நல்ல கருப்பு. 19 அல்லது 20 வயது இருக்கும். அவளை பார்த்தால் எட்டாம் வகுப்பு கூட தாண்டியிருக்கமாட்டாள் என்று தோன்றியது. வறுமையின் காரணமாக இங்கு வந்து வேலை செய்கிறாள் போல. ஒரு பத்திரிக்கையாளுனுக்கே உரிய கோக்கு மாக்கு சிந்தனை இது. அவள் என்னையே கவனித்தபடி இருந்தாள். நான் அவளை லட்சியம் செய்யாமல், என் புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் செலவாகிவிட்டது. ‘சந்தியா வந்தனம் செய்வது எப்படி’ என்கிற புத்தகம் முதல் ‘சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்’ வரை பல நூல்கள் கண்ணில் பட்டன. ஆனால் நான் தேடி வந்த ‘தத்வ போதம்’ கண்ணில் படவில்லை. நான் அந்த பெண்ணை பார்க்க, அவள் என் தேடலை உணர்ந்து என்னை பார்த்தாள்.
நான் அந்த பெண்ணிடம் எதுவும் கேட்கவில்லை. ‘இவளுக்கெங்கே தத்வ போதத்தை பற்றி தெரியப்போகிறது. அடுத்த முறை சென்னை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று கிளம்ப முடிவு செய்தேன்.
“சார்… நான் உங்களுக்கு உதவலாமா?” (இனிய தமிழில் என்னை கேட்டாள் அந்த பெண்)
“ஆமா… ‘தத்வ போதம்’ என்கிற புக்கை தேடிக்கிட்டுருக்கேன்”
“சமஸ்கிருதமா அல்லது இங்கிலீஷ்/சமஸ்கிருதம் ரெண்டும் கலந்ததா?”
நிம்மதி பெருமூச்சுவிட்டபடி, அப்பா…. இவளுக்கு அந்த புக்கை பத்தி தெரிஞ்சிருக்கு… “இங்கிலீஷ்/சமஸ்கிருதம் ரெண்டும் சேர்ந்தது!”
“சின்மயா மிஷன், இந்து பப்ளிகேஷன்ஸ், ராமகிருஷ்ண மடம் இதுல யார் வெளியிட்டது வேணும்?”
திருதிருவென விழித்தபடி “எனக்கு ஜஸ்ட் பேசிக்கா தெரிஞ்சிகிட்டா போதும். நான் கத்துக்க ஆசைப்படுறேன். எது வாங்குறதுன்னு எனக்கு தெரியலே” என்றேன்.
“உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா சார்?”
“ம்… தெரியும்!” (பல இடங்களில் தமிழன் என்பதை காட்டிக்கொள்ள முடியாத அல்லது காட்டிக்கொள்ள விரும்பாத சூழ்நிலை என் நினைவுக்கு வந்து சம்மட்டியாய் அடித்தது!)
“அப்போ நீங்க இதை எடுத்துக்கோங்க…” சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள். 30 நிமிடங்களாக நான் மாங்கு மாங்கென்று தேடிக்கொண்டிருந்த அதே ரேக்கில் இருந்து ஒரு சில வரிசைகளுக்கு பின்னால் அவள் ஒரு வினாடியில் ஒரு தமிழ் நூலை எடுத்துக்கொண்டு வந்தாள்.
“சார்… இந்து பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்குற புக் இது. என்.சிவராமன், எழுதியிருக்கிறார். ரொம்ப சிம்பிளா அருமையா இருக்கும். சொல்லப்போனா சமஸ்கிருதமும் உள்ளே இருக்கு. இந்த புக் தான் உங்களுக்கு ஏத்த புக்!”
‘ஆண்டவா… எங்கோ ஒரு குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு தத்வ போதத்தை பத்தி எங்கே தெரியப்போகிறது என்று நான் நினைத்தது எவ்ளோ பெரிய முட்டாள்தனம். நான் ஒரு என்.ஆர்.ஐ. என்கிற அகம்பாவத்தில், எவ்வளவு பெரிய புத்திசாலியை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன்…. சே…’ என்னை நான் நொந்துகொண்டேன்.
அந்த நொடியிலிருந்து என்னுடைய மனப்பான்மையை நான் மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன். அந்த பெண்ணின் கடல் போன்ற பரந்த அறிவுக்கு முன்னர் நான் தான் ஒரு முட்டாள் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.
“மேடம்… தத்வ போதத்தை யார் எழுதினாங்க என்பதை பற்றி எனக்கு நேத்தைக்கு வரை தெரியாது. தத்வ போதம் பத்தி நேத்து ஒரு லெக்சர் அட்டெண்ட் பண்ணினேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே நான் அந்த புக்கை தேடி இங்கே வந்துட்டேன்”
“ஓ.. பாரதிய வித்யா பவனில் நடந்த கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரியோட லெக்சரை அட்டெண்ட் பண்ணீங்களா?”
“அட… ஆமாம்…. உங்களுக்கு எப்படி இது தெரியும்?”
“அவர் இந்த சப்ஜெக்ட்ல ரெகுலரா இங்கே சென்னையில கிளாசஸ் எடுக்குறார். சொல்லப்போனா இந்த சப்ஜெக்ட்ல அவர் பெஸ்ட்!”
“உங்களுக்கு இதுல ஆர்வம் இருக்கா?”
“சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் நூல்களை நான் விரும்பி படிப்பேன். தத்வ போதம் எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட்ல ஒன்னு!”
“அப்போ நீங்க தத்வ போதம் படிச்சிருக்கீங்களா?”
“இதோ இந்த சிவராமன் சாரோட புக் படிச்சிருக்கேன். புக்கை எடுத்தீங்கன்னா படிச்சி முடிக்காம கீழே வைக்கமாட்டீங்க சார்!”
“இந்த புக்ல என்ன அவ்வளவு சிறப்பு?”
“சார்… நிஜமாத்தான் கேக்குறீங்களா? இல்லை விளையாட்டுக்கு கேக்குறீங்களா?”
சரண்டராவதை தவிர வேறு வழியில்லை எனக்கு. “அட நீங்க வேற… எனக்கு நிஜமாவே ஒன்னும் தெரியாது!”
என் மனைவி தான் வாங்கி குவித்துள்ள (?!) சி.டி.க்களை கையில் வைத்துக்கொண்டு சற்று தொலைவில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சார்… இந்த புக்கை நீங்க படிச்சீங்கன்னா… ஒட்டுமொத்த வேதாந்தத்தின் சாராம்சத்தையும் தெரிஞ்சிக்கலாம். ஒரே வரியில சொல்லனும்னா…. நீங்கள் உங்கள் அகங்காரம் முழுவதையும் தொலைச்சி அடக்கமே உருவமா ஆயிடுவீங்க”
“இந்த படிக்கிறதாலேயே ஒருத்தர் அடக்கமா மாறிட முடியுமா என்ன?”
“நிச்சயம். முழு மனசோட மனசை ஒருமுகப்படுத்தி அர்பணிப்பு உணர்வோட படிச்சா இந்த புக் நம்மளை தலை கீழா மாத்திடும்!”
என் மனைவியும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டாள். இந்த பெண் ரொம்ப அறிவுமிக்கவள். புத்திசாலி என்று அவளும் உணர்ந்துகொண்டாள்.
“வாஷிங்டன் போஸ்ட்டுக்காக நீங்க ஏன் இவளை பேட்டி எடுக்கக்கூடாது? ஏன்… பாரீஸ் ஹில்டனை பத்தியே யோசிக்கணும்?”
என் மனைவி சொல்வதே சரியெனப்பட்டது. (ம்….!). எனக்கும் அந்த பெண்ணுக்கு ஏதாவது செய்யனும் போல தோன்றியது.
“உன்னோட பேட்டி ஒன்னு வேணும்… எனக்கு கொஞ்ச நேரம் செலவு பண்ண முடியுமாம்மா?”
அவள் அடக்கத்துடன் மறுத்தாள்.
“என்னோட பாஸ் பர்மிஷன் தரனும். தவிர, நிறைய கஸ்டமர்ஸ் என்னோட GUIDANCE காக காத்திருப்பாங்க… அவங்களுக்கெல்லாம் போய் அவங்க கேட்குற புக்ஸ் எடுத்து தரனும்… கூட்டம் வேற அதிகமா இருக்கு…”
“உன்னோட பேர் என்னம்மா?”
“கலைவாணி!”
அந்த பெண்ணின் கடமை உணர்ச்சியும் அர்பணிப்பு உணர்வும் என் மனைவியை அவள் முதலாளி நோக்கி போக வைத்தன.
நேரே அவரிடம் போய், “சார்… அந்த பொண்ணு….”
“ஆமா… கலைவாணி… ரொம்ப நல்ல பொண்ணு… நல்ல வொர்க்கர்… என்ன விஷயம்?”
“இவர் என்னோட கணவர் விஸ்வநாத்”
“நைஸ் மீட்டிங் யூ சார்…”
பரஸ்பர கைகுலுக்கல்கள் நடந்தன.
“வாஷிங்டன் போஸ்ட்ல சீனியர் ஜர்னலிஸ்ட்டா இருக்கார்!”
“வாஷிங்டன் போஸ்ட்?” உட்கார்ந்திருந்தவர் எழுந்து நின்றுவிட்டார்.
“ஆமா…சார்… இந்த பொண்ணை நான் இண்டர்வ்யூ பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். அவங்களோட ETHICS எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு”
அடுத்த நொடி முதலாளி அவளை கூப்பிட்டார். நேரம் அப்போது 5.45 PM.
“கலைவாணி, இவங்க யூ.எஸ்.லே இருந்து வந்திருக்காங்க. உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணி இண்டர்வ்யூ பண்ணனும்னு ஆசைப்படுறாங்க. முடியுமா?”
“கஸ்டமர்ஸ் நிறைய பேர் வந்திருக்காங்க சார். அவங்களுக்கெல்லாம் நான் புக்ஸ் எடுத்துக் கொடுக்கறதுல ஹெல்ப் பண்ணனும். தவிர இப்போ ரஷ் டைம். நாளைக்கு இவர் மத்தியானம் வந்தாருன்னா பேசலாம்”
“ஓ.கே. நாளைக்கு மதியம் நான் வர்றேன்!”
அடுத்த நாள் TIMES OF INDIA, MADRAS PRESS CLUB ஆகிய இடங்களில் இருந்த என்னுடைய அனைத்து அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் ரத்து செய்துவிட்டு கலைவாணியை சந்திக்க சென்றேன்.
கலைவாணி ஆற்காடு பக்கத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவள். அவளுக்கு ஐந்து தங்கைகள். இவள் தான் மூத்தவள். குடியால் அழிந்த குடும்பம் அது. பிள்ளைகளை பற்றி கவலைப்படாமல் குடித்தே அனைத்தையும் அழித்தார் அவள் அப்பா. சில ஆண்டுகள் முன்பு தான் இறந்தும் போனார். கலைவாணியின் அம்மா சித்தாள் வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். இவர்கள் அனைவரையும் அனாதையாக விட்டுவிட்டு அவரும் பிறகு போய் சேர்ந்துவிட்டார். குடும்பமே நடுத்தெருவில் நின்றது. உதவ எவரும் இல்லை.
ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கும் கலைவாணி, தன் குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடிய போது, கிரி ட்ரேடிங் ஏஜென்சி, அவளுக்கு உதவ முன் வந்தது. தன்னுடனே அனைத்து சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு இங்கு வந்துவிட்ட இவள், தன்னுடைய சொற்ப சம்பளத்தில் அனைத்தையும் சமாளித்து வருகிறாள்.
அவர்கள் அனைவரும் அருகே உள்ள கார்ப்பரேஷன் பள்ளிக்கு படிக்க சென்று வருகிறார்கள்.
“சரி… கலைவாணி உனக்கு எப்படி தத்வ போதத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிச்சு?”
“சார்… இங்கு நான் வேலைக்கு சேர்ந்த போது புரிந்துகொண்ட முதல் விஷயம், கஸ்டமர்களுக்கு உதவ வேண்டும் என்றால் முதலில் நாம் அந்த சப்ஜெக்டை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே. எனவே, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரை பற்றிய சிறு சிறு நூல்களை முதலில் படிக்க ஆரம்பித்தேன். படிக்க மிகவும் ஆழமாகவும் இண்டரெஸ்ட்டிங்காகவும் அவை இருந்தன. பிறகு, தமிழில் பகவத் கீதை, விவேக சூடாமணி போன்ற நூல்களை படிக்க ஆரம்பித்தேன். அப்படியே நூல்களை படித்து படித்து என்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டேன்…”
“உன்னுடைய சம்பளம் என்ன?”
“மாதம் ரூ.2,500/- சார்”
“எப்படியம்மா நீ இந்த சொற்ப சம்பளத்தில் அனைத்தையும் சமாளிக்கிறாய்? அதுவும் ஐந்து தங்கைகளை வேறு வைத்துக்கொண்டு?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சார். என்னோட பாஸ் எனக்கு நிறைய ஹெல்ப் பண்றார்!”
“உன்னுடைய எதிர்கால லட்சியம் என்ன?”
“என் தங்கைகள் அனைவரையும் நல்லா படிக்க வைக்கணும். அது தான் சார் என்னோட லட்சியம். அப்புறம் அவங்க சொந்தக் கால்ல நிப்பாங்க இல்லையா?”
“ஒவ்வொரு மாசமும் நான் உனக்கு ரூ.10,000/- கொடுத்தா உன்னோட செலவையெல்லாம் சமாளிக்கலாம் இல்லையா?”
“அது ரொம்ப அதிகம் சார். அப்படி எதுவா இருந்தாலும் என்னோட முதலாளி மூலமாத் தான் நான் அதை வாங்குவேன் சார்…!”
கலைவாணியின் நேர்மையும் பணத்திற்கு ஆசைப்படாத அந்த பண்பும் என்னை பிரமிக்க வைத்தன.
நேரே அவள் முதலாளியிடம் சென்றேன். அனைத்தையும் கூறி, “ஒவ்வொரு மாதமும் நான் ரூ.10,000/- அனுப்பினால் அவள் தங்கைகள் அனைவரையும் அவளால் நன்கு படிக்க வைக்க முடியும் அல்லவா? என்ன சொல்கிறீர்கள்?”
“நிச்சயமா இந்த உதவியை நீங்கள் கலைவாணிக்கு தாராளமா செய்யலாம் சார். அதுக்கு தகுதியான பொண்ணு தான் அவ. நீங்க என்னை நம்பலாம். ஒவ்வொரு மாசமும் நீங்க அவளுக்கு கொடுக்குற தொகையை அவள் கிட்டே சேர்த்துடுவேன். இல்லே… அவ பேர்ல நீங்களே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பணத்தை ஒவ்வொரு மாசமும் போடுங்க. உங்க சௌகரியம் எப்படியோ அப்படி செய்யுங்க…!”
சென்னை, டைம்ஸ் ஆப் இந்தியாவில் ரீஜனல் மேனஜராக இருக்கும் என்னுடைய நண்பர் திரு.ஜான் பால் என்னுடன் வந்திருந்தார். “நல்ல விஷயம் ஒன்னு பண்ணினேப்பா” என்று என்னை தட்டிக்கொடுத்தார்.
என் மனைவி, “வேதாந்தத்தில் கலைவாணி கரைகண்டு எதிர்காலத்தல் அது தொடர்பான லெக்சர்களை யூ.எஸ்.ஸில் அளிக்கவேண்டும் என்று கற்பகாம்பாளை நான் வேண்டிக்கொள்கிறேன். நம்மால் அதற்குரிய ஏற்பாடுகளை நிச்சயம் செய்ய முடியும்!” என்றாள்.
என் மனைவி சொல்வது உண்மை தான். இன்னும் சில ஆண்டுகளில் கலைவாணி பெயருக்கேற்றாற்போல அனைத்திலும் கரைகண்டுவிடுவாள்.
நம் நாட்டின் மூலை முடுக்குகளில் சற்று தேடினால் கலைவாணி போன்று இன்னும் எத்தனையோ வைரங்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம். இதில் நம்மை பற்றி கர்வப்பட்டுக்கொள்ள நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
இந்தியா முழுவதும், இந்த உலகம் முழுவதும் எத்தனையோ UNSUNG HEROES இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வெளியே கொண்டு வந்து அவர்களின் திறமையை உலகறியச் செய்வது நம் கடமை.
எங்கும் நிறைந்த பரம்பொருள், எல்லாமுமாகி நிறைந்திருப்பதால் தேடலில் கிடைக்கூடியது நிச்சயம் எல்லையற்ற ஒன்று தான்!
[ARTICLE END]
==============================================================
நண்பர்களே, உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று வள்ளுவர் கூறியது எத்தனை உண்மை. எவரையும் அவரது தோற்றத்தை வைத்து நாம் மதிப்பிடக்கூடாது.
யாரை பாராட்டுவது?
கலைவாணியின் கதையை படித்தவுடன் கவியரசு கண்ணதாசன் அவர்களின் கீழ்கண்ட வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
ஒரு பதிவு அதிகபட்ச நீதிகளை நமக்கு போதிக்கிறது என்றால் அது இந்த பதிவாகத் தான் இருக்கமுடியும்.
யாரை இங்கே பாராட்டுவது என்றே நமக்கு புரியவில்லை.
தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்து குடும்ப பாரத்தை தன் தோளில் சுமந்துகொண்டு, அத்துணை கஷ்டத்திலும் பேராசையின்றி, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு விசுவாசமாய் நடந்துகொண்டு, தன்னுடைய அறிவையும் வளர்த்துக்கொண்டு, தங்கைகளின் எதிர்காலமே தன் எதிர்காலம் என்று கருதி வாழும் கலைவாணியையா?
அல்லது
இப்படி கஷ்டப்படும் ஒரு பெண்ணுக்கு வேலை கொடுத்து, அவள் மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து நிம்மதியாக வேலை பார்க்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கி, அவளுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் குறுக்கே நிற்காமல் அரவணைத்து செல்லும் கிரி ட்ரேடிங் நிறுவனத்தின் உரிமையாளரையா?
அல்லது
‘சென்ற இடத்தில் தனக்கு ஒரு நல்ல புத்தகமும், அதன் மூலம் ஒரு நல்ல பாடமும் பத்திரிக்கைக்கு ஒரு நல்ல கட்டுரையும் கிடைத்தது… அது போதும்’ என்று கருதாமல் கலைவாணியின் கஷ்டத்தை உணர்ந்து ஒவ்வொரு மாதமும் அவளுக்கு ரூ.10,000/- அளிக்க முன்வந்த விஸ்வநாத் அவர்களையா?
பாரீஸ் ஹில்டன், மடோனா போன்ற அழகிகளுக்கு பதில், கலைவாணி போன்ற நம் நாட்டின் பொக்கிஷங்களை வாஷிங்டன் போஸ்ட்டுக்காக கணவரை பேட்டி எடுக்க தூண்டி, அவர் செய்யும் உதவிக்கும் குறுக்கே நிற்காமல், கலைவாணியின் எதிர்காலத்துக்காக அன்னை கற்பகாம்பாளிடம் வேண்டிக்கொண்ட விஸ்வநாத் அவர்களின் மனைவியையா?
அல்லது
இதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது என்று சிரித்தபடி மயிலையில் வீற்றிருக்கும் நம் கபாலீஸ்வரரையா?
யாரை பாராட்டுவது?
இவர்களை போன்றவர்கள் இந்த பூமியில் இருக்கும் வரை இந்த பூமி சுற்றிக்கொண்டே இருக்கும்!
கலைவாணியை போன்ற கர்மயோகிகள் இருக்கும் வரை நம் நாட்டின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும்!!
==============================================================
படிச்சி முடிச்சிட்டீங்களா? நீங்க என்ன நினைச்சீங்கன்னு நாம் சொல்லலாமா?
நம்ம தளம் சார்பாக கலைவாணி அவர்களை ஒரு பேட்டி எடுக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவரை சந்தித்து கௌரவிக்கவேண்டும். சரி தானே?
இதே தானுங்க நாமளும் முடிவு பண்ணினோம்.
கிரி ட்ரேடிங் ஏஜென்சியில் விசாரித்தபோது கிடைத்த தகவல் என்னவென்றால்…. கலைவாணி என்கிற ஒரு பெண் அங்கு வேலை பார்த்ததும் அவருக்கு இது போன்ற நூல்களை தேடி அடுத்து தருவதில் அசாத்திய திறமை இருந்ததும் அவருக்கு ஐந்து தங்கைகள் இருந்ததும் உண்மை தான் என்றும் ஆனால் மற்ற விபரங்கள் எதுவும் தங்களுக்கு தெரியாது என்றும் நம்மிடம் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் நடந்து ஏழெட்டு ஆண்டுகள் இருக்குமாம். கலைவாணி அதற்கு பின்னர் கல்யாணமெல்லாம் ஆகி வேலையைவிட்டு சென்றுவிட்டார்களாம். இதற்கு மேல் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
நண்பர் கண்ணனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினேன். “எனக்கு ஃபார்வேர்ட் மெயில்ல வந்தது சார் அது. இப்போ சமீபத்துல நடந்த விஷயம்னு நினைச்சேன். பரவாயில்லே சார்… நம்ம தளத்துல இதை நீங்கள் பப்ளிஷ் பண்ணினாலே அது கலைவாணியை கௌரவித்தார் போலத் தான். நம் தளத்தில் இதை படிக்க ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம் வெளியிடுங்க சார்…” என்று கேட்டுக்கொண்டார்.
இதோ வெளியிட்டாகிவிட்டது.
நாமும் இப்படி ஒரு கலைவாணியை தான் தேடிக்கொண்டிருக்கிறோம். அந்த கபாலீஸ்வரர் தான் அடையாளம் காட்டவேண்டும்!
==============================================================
[END]
கலைவாணி என்னும் கருப்பு வைரம்.
படிக்க படிக்க கண்ணில் நீர் வழிந்தது. கலைவாணி மாதிரி நல்ல மனிதர்களை குறிப்பிட்டு தேடி பார்த்தால் கூட கிடைக்க மாட்டார்கள்.குறைவாக படித்து இருந்தாலும் நிறைய தகவல்களை இவர் மனதில் வைரமாக கற்று வைத்துள்ளர்கள்.
உண்மையாகவே நீங்கள் சொல்வது போல இதில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. பஞ்ச மூர்த்திகள் போல இந்த 5 பெரும் பாராட்ட வேண்டியவர்கள் தான்.
இவர்களை போன்றவர்கள் இந்த பூமியில் இருக்கும் வரை இந்த பூமி சுற்றிக்கொண்டே இருக்கும்!
கலைவாணியை போன்ற கர்மயோகிகள் இருக்கும் வரை நம் நாட்டின் புகழ் உலகெங்கிலும் எதிரொலிக்கும்!!
கண்ணதாசன் வரிகளும் வைரம் போல குறுப்பிட்டு இருகிறிர்கள்.
எப்போதோ வெளியிட்ட தகவலாக இருந்தாலும் உங்கள் கைவண்ணத்தில் நல்ல ஒரு வைர பதிவாகவே ஜொலிக்கிறது.
மிகவும் நன்றி.
காலை வணக்கம் சுந்தர் சார்
அருமையான பதிவு ,
/// இது போன்ற ஆத்மானுபவங்களை நம் தமிழ் மொழியில் படிப்பதைவிட இன்பம் வேறு இருக்கமுடியுமா ?? ///
//// தனக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்து குடும்ப பாரத்தை தன் தோளில் சுமந்துகொண்டு, அத்துணை கஷ்டத்திலும் பேராசையின்றி, எந்தவித எதிர்பார்ப்புமின்றி, வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு விசுவாசமாய் நடந்துகொண்டு, தன்னுடைய அறிவையும் வளர்த்துக்கொண்டு, தங்கைகளின் எதிர்காலமே தன் எதிர்காலம் என்று கருதி வாழும் கலைவாணியையா? *////
ஆம். கலைவாணியை தான் பாராட்ட வேண்டும். அத்தனை தகுதியும் கலைவாணி கு தான் உண்டு.
///நம்ம தளம் சார்பாக கலைவாணி அவர்களை ஒரு பேட்டி எடுக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவரை சந்தித்து கௌரவிக்கவேண்டும். ///
விரைவில் நடக்கும். எல்லாம் அவன் சித்தம்.
– ராஜா –
அற்புதம் சுந்தர். மிக அருமையாக உள்ளது. மொழி பெயர்த்த விதமும், படங்களும் அதனோடு உங்களின் சொந்த கருத்துகளையும் சேர்த்து வெளியிட்ட பாங்கும் பாராட்டுக்கு உரியது. இதை போல பல மனித ரத்தினங்களை பற்றிய தகவல்கள் நம் தளத்தில் தொடர்ந்து வந்திட அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.
வணக்கம் சுந்தர் சார்
ஏப்ரல் மாதத்தின் முதல் பதிவு. மிகவும் அருமை . படிக்கும் போது மனது பாரமாக இருந்தது , முடிக்கும் போது மனசு லேசாகிவிட்டது. கடவுள் தான் இப்படி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி இவர்களை சந்திக்க வைத்துள்ளார்.
உண்மையாகவே கடவுளின் படைப்புகள் ஒவ்வொன்றும் அருமை.
இப்படி ஒரு நிகழ்வின் பதிவை எங்களுக்கு அளித்த சுந்தர் சாருக்கு எனது நன்றிகள். தொடரட்டும் உங்களின் சேவைகள்.
S . P . ராமச்சந்திரன்
Ultimate
Kudos to Kalaivani. Great there is no words to appreciate her.
Thanks
Venkatesh
இப்படியும் சில மனிதர்கள் இவுலகில் இருகிறாக்கள் . வாழ்க கலைவாணி.
நாராயணன்.
ஒரு பதிவு அதிகபட்ச நீதிகளை நமக்கு போதிக்கிறது என்றால் அது இந்த பதிவாகத் தான் இருக்கமுடியும்.
யாரை இங்கே பாராட்டுவது என்றே நமக்கு புரியவில்லை.
தமிழில் மொழிபெயர்த்து எங்களை திக்குமுக்கு ஆட செய்துவிட்ட தங்களை இங்கே முதலில் பாராட்ட கடமை பட்டுள்ளோம் .
“தத்வ போதம்’ என்கிற புக்கை நம் தல வாசகர்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்யவும் .
அந்த கபாலீஸ்வரர் அருளால் “தத்வ போதம்’ படிக்க பெறாவ கொண்டுள்ளேன் .
நன்றி .நன்றி .நன்றி …
-மனோகர்
அற்புதம் மிக அற்புதம்.
நல்லவர்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணை இருப்பான்.
கலைவாணி எல்லா நலமும், வளமும் பெற ஆண்டவனை பிரார்த்திப்போம்.
நன்றி
ப.சங்கரநாராயணன்
ரெம்ப நல்ல இருந்துச்சு சுந்தர் சார்.சவுக்கடி கொடுத்தது போல இருந்தது.
ரெம்ப நன்றி சார்
கலை
Excellent article. 6 months back, I have read this article in some other magazine and shared this true story with my mom. On that day, I thought that I have to meet Ms. Kalaivani in Giri Trading Agency, But I have no chance to go there. From this, we learnt that we should not underestimate others from their appearance.
Thanks for sharing in RM.
Regards
Uma
Dear sundarji,
Heart touching story.Already i have heard this story through my mother.
Hope you Will find kalaivani residence soon.
Thanks & Regards
HARISH V
தமிழில் என். சிவராமன் எழுதி இந்து பப்ளிகேஷன்ஸ் பிரசுரித்த
தத்துவ போதா என்ற புத்தகம் பற்றி கலைவாணி சொல்ல உங்கள் பதிவின் வழியாக தெரிந்து கொண்டேன். வாங்கி படிக்கிறேன். நன்றி!
Right now, we bought Tattuvabodam book in Giri Trading Agency.
நன்றி
uma
நிச்சயம் தாங்கள் சொன்னது போல் கண்கள் கலங்கி விட்டது, எனக்கு நம்பிக்கை இருகிறது கலைவாணி அவர்களை இருக்க வேண்டிய இடத்தில் அந்த கபாலீஸ்வரன் இருக்க வைத்திருப்பார் வெகு விரைவில் அவர்களைபற்றிய தகவல் கிடைக்கும் நிச்சயம் அவரக ளிடம் இருந்து ஒரு பேட்டி கிடைக்கும் விபரம் தெரிந்தால் எனக்கு தெரி யப ப்படுதவும் , நன்றி .
எல்லாம் சிவ மயம் அவன் செய்யும் மாயம்.