ஒவ்வொரு மாதம் மற்றும் விஷேட நாள் மற்றும் கிழமைகளில் நம் தளம் சார்பாக நாம் கோ-சம்ரோக்ஷனம் செய்து வரும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில், பாஞ்சாலி என்கிற பசு சமீபத்தில் பெண் கன்று ஒன்றை ஈன்றது. இது தொடர்பான ஆலயத்தின் கோ-சாலையில் இருந்து நமக்கு அலைபேசி மூலம் செய்தி கிடைத்ததும் நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம் இந்த கோவிலில் கோ-சம்ரோக்ஷனம் ஆரம்பித்ததில் இருந்து பிறக்கும் மூன்றாவது கன்று இது. (இதற்கு முன்பு துர்கா என்கிற பசு வேலனையும், துர்காவின் அம்மா, நந்தினி என்கிற கன்றையும் ஈன்றது குறிப்பிடத்தக்கது).
இந்த மகிழ்ச்சியை கொண்டாட எளிய அளவில் கோ-சம்ரோக்ஷனமும் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கவும், கோ-சாலை ஊழியர்களுக்கு வஸ்திர தானமும் ஏற்பாடு செய்தோம். (கடந்த வெள்ளி அன்று அளித்த பிரார்த்தனை பதிவில்கூட இது பற்றி சொல்லியிருந்தோம்.)
வெள்ளி மாலை அலுவலகம் முடிந்து ஆலயத்திற்கு சென்ற போது வாசகர்கள் ராஜன் கணேஷ் தம்பதியினரும், கவிதா நாகராஜன் தன் குழந்தைகள் ஸ்ரீவர்ஷினி மற்றும் அபினவ் குமார் ஆகியரோடும் வந்திருந்தார்கள்.
(மேற்படி ஆலய கோ-சாலைக்கு இண்டஸ்ட்ரியல் ஃபேன் தேவைப்பட்டபோது, முழு செலவையும் ஏற்றுக்கொண்டு வாசகர் திரு.ராஜன் கணேஷ் என்பவர் ஆவார். அவரை இந்த வைபவத்துக்கு அழைத்திருந்தோம். மேலும் அவரின் இன்றியமையாத கோரிக்கை ஒன்றையும் நாம் அறிவோம். எனவே கன்று பிறந்ததால் கொடுக்கப்படும் பிரசாதத்தை அவர் தம்பதி சமேதராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவரை வருமாறு கேட்டுக்கொண்டோம். அவரும் வந்திருந்தார்.)
நாம் சென்றபோதே நிவேதனத்துக்கும் பக்தர்களுக்கு விநியோகிக்கவும் சர்க்கரை பொங்கல் உட்பட அனைத்தும் தயாராக இருந்தது. முதலில் காசி விஸ்வநாதருக்கு தான் நைவேத்தியம் செய்வதாக இருந்தது. ஆனால் வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகருக்கு நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பசுவுக்கு தனியாக விஷேட சர்க்கரைப் பொங்கல் அளிக்கப்பட்டது. (பால் நெய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்டது அது). பசுவிடமிருந்து தான் பாலும் நெய்யும் கிடைக்கிறது. எனவே, இந்த இரண்டையும் பசுவுக்கு அளிக்கும் உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது என்று மகா பெரியவா ஒரு முறை கூறியிருக்கிறார்.
அனைத்து பசுக்களுக்கும் நாம் சர்க்கரை பொங்கல் வழங்க தீர்மானித்திருந்தோம். ஆனால், கோ-சாலையை பரமாரிக்கும் பாலாஜி, ‘கன்று ஈன்ற பசுவுக்கே அனைத்தையும் கொடுத்துவிடுவோம். அதற்கு தற்போது இரும்புச் சத்து தேவைப்படுகிறது’ என்றார். எனவே விஷேடமாக பசுக்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட அந்த பொங்கல், பாஞ்சாலிக்கே கொடுக்கப்பட்டது.
(இளம் கன்றையும் தாயையும் மற்ற மாடுகளுடன் ஒன்றாக வைப்பது ஆபத்து என்பதால் ஆலயத்திலேயே தனியாக ஒரு கொட்டகையில் பாஞ்சாலியும் அதன் கன்றும் வைக்கப்பட்டுள்ளனர்.)
ரேவதி நட்சத்திரத்தன்று பிறந்தமையால் கன்றுக்கு ‘தேவகி’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். தேவகி பார்ப்பதற்கு கொள்ளை அழகு.
பாஞ்சாலி சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் பக்தர்களுக்கு தனியாக நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
கோ-சாலை பசு கன்று ஈன்றதையடுத்து இந்த பிரசாத விநியோகம் செய்யப்படுகிறது என்று அவ்வப்போது சொல்லி சொல்லி பிரசாதம் தந்தோம். இல்லையென்றால் எதற்கு கொடுக்குறோம் என்றே தெரியாமல் அவர்கள் வாங்கிச் சாப்பிடுவதில் அர்த்தம் இல்லையே. நாம் கன்று பிறந்துள்ள விஷயத்தை சொன்னதும், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்… மாடும் கன்றும் எங்கே இருக்கு இப்போ?” என்று பலர் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்துகொண்டு பாஞ்சாலியையும் தேவகியையும் தரிசித்தனர்.
சிலர் பிரசாதத்தை சாப்பிட்டவுடன், வீட்டில் உள்ள தங்கள் குழந்தைகள் & பெற்றோர்களின் ஞாபகம் வர, இரண்டாம் முறை வந்து கேட்டார்கள். “யார் எத்தனை முறை கேட்டாலும் கொடுங்கள்” என்று சொல்லியிருந்தோம். சிலர் அதன் சுவையில் மயங்கி இரண்டு தொன்னைகளில் வாங்கிச் சென்று சாப்பிட்டனர்.
ஒரு சில குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டது கொள்ளை அழகு. இதை நாம் செய்வதே அவர்களுக்காகத் தானே. ஒரு சிறு குழந்தை க்யூ வரிசையையெல்லாம் பொருட்படுத்தாமல் நேரே பிரசாதம் விநியோகிக்கும் டேபிள் அருகே வந்து அதை பிடித்து எம்பி “எனக்கு…!” என்று மழலைக் குரலில் கேட்டது…. தெய்வீகம்!
பத்து நிமிடத்தில் மொத்த பிரசாத விநியோகமும் முடிந்துவிட்டது. எப்படியும் சுமார் 200 பேர் சாப்பிட்டிருப்பார்கள்.
அடுத்து கோ-சாலைப் பணியாளர்களுக்கு பாஞ்சாலி முன்பாக வைத்து வஸ்திர தானம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் மொத்தம் மூன்று பேர் கோ-சாலையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களில் பாலாஜி உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான். நமது பிரார்த்தனை கிளப்புக்கு கூட ஒரு முறை தலைமை தாங்கியிருக்கிறார். (* பசு கன்றை பிரசிவித்த சமயத்தில், இரவு முழுதும் பசுவுடனேயே துணைக்கு இருந்துள்ளார் பாலாஜி.) அவருக்கு உதவியாளராக திருவேங்கடம் என்பவர் இருக்கிறார். இதைத் தவிர பத்ரி என்கிற கல்லூரி மாணவர் ஒருவரும் அவ்வப்போது வந்து கோ-சாலையை பார்த்துக்கொள்கிறார்.
பாலாஜியை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். திருவேங்கடத்தை பற்றி வேறொரு பதிவில் சொல்கிறோம். பத்ரி…? ஒரு கல்லூரி மாணவர்!! இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்காக முகநூலில் சண்டையிட்டுகொள்வது முதல் மதுபான பாரில் இன்பத்தை தேடுவது வரை இன்றைய மாணவர்களை ஆட்டிப்படைக்கும் சீர்கேடுகள் எத்தனையோ உண்டு. ஆனால், பத்ரி தனது ஒய்வு நேரத்தில் கோவிலில் தான் இருப்பார். கோ-சாலை விளக்குகளுக்கு, ஃபேன்களுக்கு சுவிட்ச் போடுவது, உரிய நேரத்தில் அணைப்பது, மாடுகளுக்கு தீவனம் வைப்பது, அதற்கு நினைவுபடுத்துவது என்று ஏதோ தன்னால் இயன்ற சேவையை அவர் மனமுவந்து செய்து வருகிறார். அவர் கோ-சாலை பணியாளர் அல்ல என்றாலும் பாராட்டப்படவேண்டியவர் அல்லவா?
மூவருக்கும் ஒரு வேட்டி, ரெடிமேட் சட்டை மற்றும் துண்டு, சிறிய டப்பாவில் ஆறு ரவா லட்டு தரப்பட்டது. முன்னதாக வாசகர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்துவைத்து அவர்கள் ஒவ்வொருவரும் ஆலய கோ-சாலையில் ஆற்றிவரும் சேவைகளை எடுத்துக் கூறி பின்னர் கௌரவிக்கப்பட்டனர்.
நமது நோக்கம் அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் சேவையின் தரத்தை நம்மால் இயன்ற அளவுக்கு உயர்த்துவதே ஆகும். நாம் தொடர்ந்து செய்து வரும் இந்த கைங்கரியத்தால் கோ-சாலை பராமரிப்பு மற்றும் துப்புரவு பணியை மிகவும் சுவாரஸ்யமாக, கௌரவமான ஒன்றாக அவர்கள் கருத ஆரம்பித்துள்ளனர் என்றால் மிகையாகாது.
வாசகி கவிதா நாகராஜன் அவர்களின் குழந்தைகளை கொண்டும், ராஜன் கணேஷ் அவர்களை கொண்டும் அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நமது எளிய பரிசு வழங்கப்பட்டது. கவிதா நாகராஜன் அவர்கள் இது போன்ற விஷயங்களில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்துவருவது கண்டு மிகவும் உவகையடைந்தோம். வாழ்த்துக்கள் !!
(எதிர்காலத்தில் நமது கோ-சம்ரோக்ஷனத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும்.).
=================================================================
முக்கிய அறிவிப்பு :
இது போன்ற பதிவுகளை நாம் அளிப்பதன் நோக்கம் இப்படிப்பட்ட எளிய சேவைகளை அனைவரும் அவரவர் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளவேண்டும் என்பதே தவிர, நீங்கள் செய்யும் அறப்பணிகள் அனைத்தையும் நம் தளம் சார்பாக செய்யவேண்டும் என்பதற்காக அல்ல. எங்கோ அயல்நாட்டில் இருந்து இது போன்ற சேவைகளை செய்ய விருப்பம் இருந்தும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளமுடியாதவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள், இங்கிருந்தும் சூழ்நிலை மற்றும் நேரமின்மை காரணமாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் நம்முடன் இணைந்து தாராளமாக தாங்கள் விரும்பும் சேவைகளை செய்துகொள்ளலாம். அவர்கள் சிறிதும் தயங்கவேண்டியதில்லை.
நமது சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள பணம் அனுப்புபவர்கள் தயை கூர்ந்து நமது தளத்தின் நிர்வாக செலவு மற்றும் இதர செலவுகளுக்கு அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களே மனமுவந்து ஒதுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்போது தான் இந்த தளத்தை நாம் தொடர்ந்து தொய்வின்றி நடத்த முடியும். இது கட்டாயமல்ல. ஒரு வேண்டுகோள். நம் தளத்திற்கு என்று விளம்பர வருவாயோ அல்லது வேறு வித வருவாயோ கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.
மேலும் நீங்கள் விரும்பினால் நம் தளத்தின் செலவுகளுக்கு பிரதி மாதமோ அல்லது உங்களால் முடியும்போதெல்லாம் பணம் அனுப்பலாம். வீட்டை விட்டு வெளியே இறங்கினால், சுவாசிக்கும் காற்றை தவிர, இங்கு அனைத்துக்கும் பணம் தேவைப்படுகிறது என்கிற ஒரு சூழ்நிலையில் இந்த தளம் நடத்தப்படுகிறது என்பதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையிலும் நமது தளம் தனித்தன்மையுடன் கிட்டத்தட்ட ஒரு முன்னணி பத்திரிக்கை போல நடத்தப்படுவது நீங்கள் அறிந்ததே. நம்மால் இந்த தளத்தை நடத்த நேரத்தை தான் ஒதுக்கமுடியுமே தவிர பணத்தை அல்ல. அப்படியிருந்தும் எவ்வளவோ முறை கைகளில் இருந்து செலவு செய்துள்ளோம். மயிலிறகே ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் வண்டி பாரம் தாங்கும் என்பது யதார்த்தம்.
அதே போன்று நமது உழவாரப்பணியின் போது வேன் ஏற்பாடு செய்தால், கலந்துகொள்பவர்கள் உணவு மற்றும் போக்குவரத்து செலவுக்கு அவரவர் வசதிக்கேற்ப அவர்களால் இயன்ற தொகையை நன்கொடையாக அளித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். (இது கட்டாயமல்ல. அவரவர் விருப்பம்.)
நமது தளத்தின் சேவைகளில் தங்களை இணைத்துக்கொள்ள பணம் அனுப்பும் வாசகர்கள் மறக்காமல், மின்னஞ்சலில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிட்டு அனுப்பவும். ஏனெனில் நாம் ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆலயத்திற்கு செல்லும்போதெல்லாம், நம் வாசகர்கள் ஒவ்வொருவரின் குடும்பமாக தேர்வு செய்து அர்ச்சனை செய்துவருகிறோம். ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு பிரதி உபகாரம்.
நமது பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் தொகை மிகுதியானால் அது ரைட்மந்த்ரா வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வழக்கமான அறப்பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும்.
புரிதலுக்கு நன்றி!!!
– சுந்தர்,
ஆசிரியர்,
www.rightmantra.com
E: simplesundar@gmail.com | M : 9840169215
=================================================================
Also Check :
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!
நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!
எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
=================================================================
[END]
நம் தளம் சார்பாக நடந்த கோ சம்ரோக்ஷனை பதிவு அருமை. புதிய கன்றுக்கு தேவகி என்ற பெயர் அழகாக் உள்ளது. நம் தளம் சார்பாக நடைபெறும் ஆன்மிகம் மற்றும் கோ சம்ரோக்சனையில் நேரம் ஒத்துழைத்தால் கண்டிப்பாக கலந்து கொண்டு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
கோ சம்ரோக்ஷனமும் அன்ன தானமும் நடைபெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
மேலும் மேலும் பல நல்ல நிகழ்சிகளை இறை அருளால் ரைட் மந்த்ரா செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்
நன்றி
உமா
வணக்கம்………..
நமது குடும்பத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ள தேவகிக்கு நல்வரவு……….
தேவகி பிறந்ததை நம் தளம் மகிழ்வுடன் கொண்டாடி இருப்பதைக்கண்டு உவகை கொண்டோம்…..
அறிவிப்பில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் யாவும் சரியே…..ரைட் மந்த்ரா வாசகர்கள் எப்பொழுதும் நற்செயல்களுக்கும், நல்லவர்களுக்கும் துணையிருப்போம்……..
கோ-சம்ரோக்ஷனம் என்னனு யாராவது விளக்கமா சொல்ல முடியுமா? ப்ளீஸ்.
கோ என்றால் பசு என்று பொருள். கோ சம்ரோக்ஷனம் என்றால் பசுக்களை போஷிப்பது என்று அர்த்தம். பசுக்களுக்கு தீனி அளித்தல், பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லுதல், பசுக்களை குளிப்பாட்டுதல், பசு கொட்டகையை சுத்தம் செய்தல் இவை அனைத்தும் கோ சம்ரோக்ஷனம் எனப்படும்.
மேலும் இது பற்றி விரிவாக தெரிந்துகொள்ள, கீழ்கண்ட பதிவை பாருங்கள்.
http://rightmantra.com/?p=11122
நன்றி.
அப்ப அதாக்கும் சங்கதி. நல்ல விஷயம்.
சூது வாது தெரியாத ஜென்மம். அதுக கண்ண கண்டாலே மனசு பாகா கரையுமே.புள்ளைக்க கணக்கா பாத்துகிடனும்.வதைக்க கூடாதுல்ல.
அம்மைய அழ வெட்ச பாவம் கூட பல தடவ நாயா பொறந்து கழிச்சறலாம். ஆனா மாட்ட அழ விட்டா பல தடவ மனுசனா பொறந்து துன்பபடனும்.
தங்களுக்கு உள்ள இத்தனை செயல்பாடுகளுடன் , மஹா பெரியவர் அருளியுள்ள விஷயமான “பசுவுக்கு நாம் பாலும், பாலைச் சார்ந்த ஆகாரங்கள் கொடுக்க கூடாது” என்பதை மிக சரியான நேரத்தில் தெரிவித்தமைக்கு மிக மிக நன்றி.
தேவகி, அழகோ அழகு. மடியில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. கோ சம்ரோஷனம் குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள உதவியது இப்பதிவு. நன்றிகள்.
தேவகியை பார்க்க கண் வேண்டும், என் புத்திரன் எந்த தேவகியை பார்த்தல் வைத்துக்கொள்வான். நங்கள் என்று பொய் பார்க்க போகிறோம். தங்கள் சேவை பாராட்டுக்குரியது. தங்கள் மேற்கு மாம்பலம் வந்தால், அவசியம் வீட்டிற்கு வர வேண்டும்.