Saturday, June 23, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

print
புண்ணியமிக்க விஷேட நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு அன்னதானம் செய்வது மட்டுமின்றி கோவில் பசுக்களுக்கு தீவனம் வாங்கி தரும் கைங்கரியத்தையும் நம் தளம் தவறாமல் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. நம் தளத்தின் முக்கிய பணிகளில் ஒன்று இந்த கோ-சம்ரோக்ஷனம்.

தீவனம் கலக்கப்படுகிறது

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுவுக்கு அகத்திக் கீரையும் வாழைப் பழங்களும் வாங்கி தர நாம் தவறவே கூடாது. கோவிலுக்கு சென்றால் கோவிலில் கோ-சாலை இருக்கிறதா என்று விசாரித்து அறிந்து, அங்குள்ள பசுக்களுக்கு பழம், கீரை முதலியன தந்து அவற்றின் முன்பாக (பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு) தவறாமல் நமது பிரார்த்தனையை சொல்லி வேண்டிக் கொள்ளவேண்டும். கோ-சாலையில் பிரார்த்தனைகளை / மந்திரங்களை சொல்வது பன் மடங்கு பலன் தரும்.

சென்ற ஆண்டு மஹாளய அமாவாசையின் போது திருவேற்காட்டில் உள்ள பசுமடத்திற்கு சென்று நம் தளம் சார்பாக அகத்திக்கீரைகள் அளித்தது நினைவிருக்கலாம். இந்த ஆண்டு மஹாளயத்தை முன்னிட்டு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் பசுக்களுக்கு மூன்று மூட்டைகள் தீவனங்கள் நேற்று (அக்டோபர் 2) வாங்கி தரப்பட்டுள்ளது.

இது வரை நம் தளம் சார்பாகவும் வாசகர்கள் உதவியுடன் பல முறை இந்த ஆலயத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வாங்கி தந்துள்ளோம். எப்போதெல்லாம் தீவனம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் கோ-சாலை சார்பாக நம்மை தயங்காது தொடர்பு கொள்ள சொல்லியிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

(நீங்கள் செய்ய நினைக்கும் இது போன்ற நல்ல காரியங்களை உங்கள் சார்பாக என் சக்தி உள்ளவரை என்றென்றும் செய்வேன்!)

நாளை மறுநாள் புண்ணியம் மிக்க மஹாளய அமாவாசை என்பதால் காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலைக்கு தீவனம் வாங்கி தர விரும்பினோம். அவர்களுக்கும் தீவனம் தேவைப்படவே, தாமதிக்காது நேற்று (அக்டோபர் 2) மதியம் கோவிலுக்கு இரண்டு தெரு தள்ளி உள்ள தீவனக் கடை ஒன்றில் தீவனம் ஆர்டர் செய்துவிட்டு, அது கலக்கப்பட்டு மூட்டை கட்டி கோவிலில் இறக்கி வைக்கப்படும் வரை அருகில் இருந்தோம்.

(ரைட்மந்த்ராவின் புதிய அக்கவுண்ட்டில் இருந்து தான் இதற்கான தொகை எடுத்து தரப்பட்டுள்ளது. பசு உட்கொள்ளும் ஒவ்வொரு உமிக்கும் கூட பலன் உண்டு. எனவே நமது பணிகளில் உதவும் அனைவருக்கும் இந்த பலன் போய் சேரும் என்பதில் ஐயமில்லை.)

இவன் நாம் வளர்த்த வேலன் – வினை தீர்க்க வந்த வேலன் – நம்ம வீட்டு வேலன்!

தீவனத்தை கலக்கும்போது (உளுந்து தவிடு, கொண்டைக்கடலை தோல், அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, துவரம் பருப்பு தோல் ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து தீவனம் செய்வர். மிகுந்த சத்தான தீவனம் இது!) கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். காசி விஸ்வநாதர் கோவில் கோ-சாலையில் உள்ள பசுக்களை போல, வேறு எங்கும் காண முடியாது என்றும், நல்ல முறையில் அங்கு பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் நம்மிடம் தீவனக் கடைக்காரர்  சொன்னார். அவர் சொல்வது உண்மை தான் என்பது பசுக்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.

அம்மா துர்காவுடன் வேலன்

அப்போது தான் அந்த இன்னொரு விஷயத்தையும் கேள்விப்பட்டோம். கோவிலின் கோ-சாலையில் உள்ள பசு ஒன்று, அழகான ஆண் கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது என்பது. அவர் விஷயத்தை சொன்னதும் நமக்கு இருப்பு கொள்ளவில்லை.

“நான் கோவில்ல இருக்கிறேன். நீங்கள் வண்டியில் தீவனத்தை ஏற்றி அனுப்பி விடுங்கள்” என்று கூறி கோவிலுக்கு சென்றுவிட்டேன்.

அங்கு கோ-சாலை பொறுப்பாளர் குருவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது துர்கா என்கிற பசு கன்று ஈன்ற விஷயத்தை கூறினார்.

“போன செவ்வாய்க்கிழமை பிறந்தது சார்… பேர் வேலன்னு வெச்சிருக்கோம். உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன்” என்றார்.

“பரவாயில்லே… வேலன் எங்கே இருக்கான் இப்போ?” என்று கேட்டு, பசுக்கள் கட்டி வைக்கப்பட்ட இடத்துக்கு சென்றேன். அங்கு வேலனை  கண்டதும் வாரி அனைத்து கொஞ்சி மகிழ்ந்தேன்.

என்னுடன் பாலாஜி என்பவர் பாதுகாப்புக்கு வந்தார். அவர் தான் தற்போது கோ-சாலையை பராமரிப்பவர். வேலன் புதிதாக பிறந்த கன்றாதலால் துர்காவுக்கு எங்கே நாம் அதன் அருகில் இருப்பது கண்டு கோபம் வந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனால் துர்க்கா பரம சாது. அவள் குட்டியை நாம் கொஞ்சிக்கொண்டிருந்ததை அவள் பார்த்தும் ஒன்றும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் வேலன் படு சுட்டி. அங்கு ஓடுவதும் இங்கு ஓடுவதும் என்று ஒரே சேட்டை.

ஆடி அமாவாசை அன்றும், அதற்கு பிறகும் இரண்டு மூன்று முறை நாம் தீவனம் வாங்கி தந்திருக்கிறோம். அப்போதெல்லாம் துர்கா  சினையுடன் தான் இருந்திருக்கிறாள். அவள் சினையுடன் இருந்தபோது நாம் தீவனம் வாங்கித் தந்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. அந்த பெரும் பேற்றை நமக்கு விஸ்வநாதர் தான் தந்தார் என்றால் மிகையாகாது.

நாளை (அக்டோபர் 4) மஹாளய அமாவாசை. நீங்களும் உங்கள் பகுதிகளில், உங்கள் வீட்டு அருகில் ஏதேனும் இது போல கோவிலில் கோ-சாலை இருந்தால் உங்களால் முடிந்த உதவிகளை கோ-சாலைக்கு உங்கள் கைப்பட செய்யுங்கள். அல்லது தெருவில் ஏதேனும் பசுவைக் கண்டாலும் உங்களால் இயன்றதை அதற்கு கொடுங்கள்.

கோ-சம்ரோக்ஷனம் சர்வ ரோக நிவாரணம்!

(நீங்களே முன்னின்று இவற்றை செய்த திருப்தி இந்த புகைப்படங்களை பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படுகிறது அல்லவா? அதற்காகத் தான் இந்த புகைப்படங்களை அளிக்கிறேன்! மேலும் இவற்றை பார்க்கும் வசதியும் சந்தர்ப்பமும் படைத்தவர்களும் – அவரவர் இருக்கும் இடத்தில், அவரவர் வசிக்கும் பகுதிகளில் –  இது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் – என்ற நோக்கமும் ஒரு காரணம்.)

===================================================
ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கைகள் அனுப்பியவர்கள் கவனத்திற்கு :

முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பல வாசகர்கள் அனுப்பியுள்ளனர். பிரச்சனைகளின்  தீவிரத்தை பொறுத்து, அவை வரிசைப்படி இடம் பெறும். அதுவரை இங்கு இடம் பெறும் மற்றவர்களின் கோரிக்கைகளுக்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். அது இன்னும் பவித்திரமானது.

எப்போது கோரிக்கையை படித்தேனோ அப்போது முதலே சம்பந்தப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். ஆகையால் தாமதம் குறித்து கவலைப்படவேண்டாம்.

நிறைய கோரிக்கைகள் வந்துள்ளபடியால், அவற்றை தேடி எடுத்து  வரிசைப்படுத்த முடியவில்லை. எனவே, பிரார்த்தனை கோரிக்கை அனுப்பியவர்கள் அனைவரும் மீண்டும் எமது மின்னஞ்சலுக்கு முன்னர் அனுப்பிய மின்னஞ்சலையே திருப்பி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!
– சுந்தர், www.rightmantra.com

===================================================

4 thoughts on “நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

 1. சுந்தர் சார்

  உண்மை தா சார் அம்மாக்கும் பிள்ளைகும் கொடுக்கும் போது அந்த தாய் பசு படும் சந்தோசத்திற்கு அளவை இருக்காது சார் நிஜமா சார் கோ சாலை விட்டு நகரும் போது வாய் இல்ல ஜீவன் கத்தும் பாருங்க அத வார்த்தையால் சொல்ல முடியாது ..

  மிகவும் அருமையான பதிவு சார்

  வாழ்த்துக்கள் சார்

 2. சார் நான் சுந்தர காண்டம் படிக்க விரும்புகிறேன்.தமிழ் pdf வடிவில் உதவுங்கள்,

 3. துர்காவுக்கு வேலன் பிறந்தாச்சு. நல்ல தலைப்பு.
  நிஜமாகவே நம் வீட்டில் நடந்த ஒரு சந்தோசம் வருகிறது.
  கோ-சம்ரோசனம் மாதிரி இன்னும் பல புண்ணிய காரியங்கள் நம் தளம் சார்பாக நடக்க வேண்டுகிறேன்.

 4. \\\பசு உட்கொள்ளும் ஒவ்வொரு உமிக்கும் கூட பலன் உண்டு. எனவே நமது பணிகளில் உதவும் அனைவருக்கும் இந்த பலன் போய் சேரும் என்பதில் ஐயமில்லை.\\\\

  ஆனால் துர்க்கா பரம சாது. அவள் குட்டியை நாம் கொஞ்சிக்கொண்டிருந்ததை அவள் பார்த்தும் ஒன்றும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
  ஆனால் வேலன் படு சுட்டி. அங்கு ஓடுவதும் இங்கு ஓடுவதும் என்று ஒரே சேட்டை.

  பசுக்களிடமும் .கன்றுகளிடம் பேசுவது குறித்து தாங்கள் phd ….என்று எனக்குதெரியும் .வேலனோடு தாங்கள் விளையாடியது பற்றிய அனுபவம் எப்படி இருந்தது .

  வாசகர்கள் அனுப்பும் சிறிய தொகை பணமும் பலமடங்கு புண்ணியம் சேர்க்கும் பணிகளில் …

  கோமாதாவை வணங்கி பணிகிறேன் .

  -நட்புடன்
  மனோகர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *