எனக்கு சுவாரஸ்யமாக மிக பெரிய அனுகூலமாக தோன்றுவது உங்களுக்கும் அவ்வாறே தோன்றுமா என்று தெரியாது. இருப்பினும், சம்பந்தப்பட்ட புகைப்படங்களையாவது நீங்கள் பார்த்து ரசிக்கக்கூடும் என்பதாலேயே இந்த நிகழ்வுகளை தருகிறோம்.
திருச்சி சென்றது முதலே நமக்கு மனம் சற்று சரியில்லை. மனுஷனுக்கு தான் எத்தனை பிரச்னை இந்த வாழ்க்கையில்…. முதல் நாள் வயலூர் சென்று முருகனை தரிசித்துவிட்டு வந்த பிறகு அன்று மதியம் ஸ்ரீரங்கம் புறப்பட எத்தனிக்கையில், எந்த கோவிலுக்கும் செல்ல மனம் இல்லை. அங்கு சென்றால் இறைவனை மனம் ஒன்றி தரிசிக்க வேண்டும். அதற்கான மனநிலையில் நாம் அப்போது இல்லை.
நேரத்தை வீணடிக்க முடியாதே… ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய ஷேத்திரத்தில் இருக்கும்போது ஒரு நொடியை கூட வீணாக்க கூடாது. எனவே நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டியிருந்த வீரராகவன் என்கிற நண்பர் ஒருவரை பார்க்க சென்றோம். அவர் திருமணம் ஏழு மாதங்களுக்கு முன்பு தான் திருவரங்கத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நமக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் கடைசி நேர சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் நம்மால் செல்ல முடியவில்லை.
“தப்பா நினைக்காதீங்க ராகவன்… நண்பர்களோட திருமணம், மற்றும் அவர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அழைப்பு வந்தால் எந்த சூழ்நிலையிலும் அதில் சென்று பங்கேற்று அவர்களை வாழ்த்திவிட்டு வருவேன். ஆனால் இந்த முறை என்னால் முடியவில்லை. உங்களை ஸ்ரீரங்கத்தில் உங்கள் வீட்டிலேயே வந்து சந்திக்கிறேன்” என்று கூறினோம். அவருக்கு நாம் வராதது ஏமாற்றம் என்றாலும் பெருந்தன்மையுடன் நமது சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.
திருமணத்தில் அவருக்கு பரிசளிக்க, நமது தளத்தின் பிரார்த்தனை படத்தை லேமினேட் செய்து அந்த சமயம் வைத்திருந்தோம். அவரை வீட்டிற்கு சென்று பார்க்கும்போது இதை அளிக்கவேண்டும் என்று நினைத்திருந்தோம். எனவே அதையும் திருச்சி பயணத்தில் கொண்டு சென்றிருந்தோம்.
அவரை சென்று வீட்டில் சந்தித்து, தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி அந்த படத்தை பரிசளித்துவிட்டு வந்தோம். அவருக்கு தான் எத்தனை சந்தோஷம்.
அவர் வீட்டு மாடியில் இருந்து எடுத்த ஸ்ரீரங்க கோபுரங்களின் படங்கள் தான் இங்கே பதிவில் நீங்கள் பார்ப்பது.
மறுநாள், காலை கரூர் சாலையில் உள்ள ஒரு ஊரில் உறவினரின் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு அப்படியே நாம் நமது பெற்றோர், மற்றும் தங்கை, தங்கை கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் ஒரு கால் டாக்சி அமர்த்திக்கொண்டு புலிவலம் சென்றோம்.
புலிவலத்தில் தொன்மை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் ஒன்று உள்ளது. வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி எங்களுக்கு குல தெய்வம் என்றாலும் இதுவும் ஒரு வகையில் குல தெய்வம் தான். அம்மா வழி சொந்தங்களுக்கு இது குலதெய்வம். வயலூரை விட தொன்மை வாய்ந்தது இந்த புலிவலம் கோவில். வியாக்ர பாதர் என்னும் முனிவருக்காக முருகப் பெருமான் காட்சி கொடுத்த தலம் இது.
முந்தைய தினம், நமது மனதை மிகவும் பாதித்த அந்த நிகழ்வின் தாக்கம் இன்னும் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
“இதற்கு மேல் என்ன இருக்கிறது. நீ சோதிக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அதை தடுக்கும் சக்தி யாருக்கு உள்ளது முருகா? ஆனால் சோதிப்பதற்காகவாவது உன் திருமுகம் என்னை நோக்கி திரும்பியதே… அதற்கே நான் நன்றி சொல்லவேண்டும்” என்று தான் நினைத்துக்கொண்டோம்.
குருக்களிடம் கொஞ்ச நேரம் நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோம். பெற்றோர் வழக்கம் போல நமது எதிர்காலத்தை பற்றி குருக்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர் சொன்னது, “சாஸ்தா கிட்டே… ஐயப்பன் கிட்டே உங்களில் யாருக்கேனும் ஏதேனும் வேண்டுதல் இருக்கா?” – முருகனின் கர்ப்ப கிரகத்தில் நின்று கொண்டு இதை சொன்னதை நாங்கள் சாதாரணமாக கருதவில்லை. தெய்வ வாக்கு போல இருந்தது.
நம் குடும்பத்தில் யாருக்கும் எந்த வேண்டுதலும் இல்லை. ஆனால் நமக்கு ஒன்று இருந்தது. ஆனால் அது நடக்காத காரணத்தால் அதை நிறைவேற்றவில்லை நாம்.
அதை சொன்னோம்.
“இல்லை இல்லை… நீங்க நினைக்கிறது தப்பு. தன்னை ஏனோ நீங்கள் புறக்கணிப்பதாக ஐயப்பன் நினைக்கிறார். ஏதேனும் ஒரு ஐயப்பன் கோவிலுக்கு போய் உடனே அவரை தரிசனம் பண்ணுங்க. அர்ச்சனை கூட செய்யவேண்டாம். விளக்கு கூடஏற்றவேண்டாம். ஐயப்பன் முன்னாடி நீங்க நின்னு ஒரு அஞ்சு நிமிஷம் பிரார்த்தனை பண்ணீங்கன்னா போதும். இதோ கண்டோன்மென்ட்ல கூட ஐயப்பன் கோவில் இருக்கு. கோவிலுக்கு போகலேன்னா கூட பரவாயில்லை. ஐயப்பன் படம் ஒன்னை வாங்கி வந்து மாட்டி ஒரு அஞ்சு நிமிஷம் பிரார்த்தனை பண்ணுங்க” என்றார்.
“நிச்சயம் சுவாமி…!”
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, ஐயப்பனை தேடி செல்ல வேண்டிய இல்லாமல் அன்று மாலையே ஐயப்பனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
இது வரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஐயப்பனை எங்கே எப்படி பார்த்தோம் என்பதை வேறு ஒரு பதிவில் சொல்கிறோம்.
இங்கு கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, வெளியே வருகிறோம்.
நம் மனம் இன்னமும் வாட்டத்தில் தான் இருந்தது. சோதனையும் வேதனையும் நமக்கு பழகிப் போன ஒன்று. இந்த பேனாவின் மையே அது தானே.
டாக்ஸி கிளம்பும்போது சரியாக மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் பசுமடத்திலிருந்து பாலாஜி ஃபோன் செய்தார்.
(மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு பசுமடம் உள்ளது. இங்கு கறவை பசுக்கள், கன்று, காளை என எட்டு மாடுகளுக்கும் மேல் உள்ளது. (இந்த கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக மாதந்தோறும் தீவனம் வாங்கித் தருவதும் (2 அல்லது 3 மூட்டை தீவனம்), நாள் கிழமை விசேஷங்களின் போது கோ-சாலை பணியாளர்களுக்கு நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகள் செய்து வருவதும் நீங்கள் அறிந்ததே. ஒருவ வகையில், இந்த கோ-சாலைக்கும் நமது தளத்திற்கும் நெருங்கிய பந்தம் உண்டு. நமது வினைகள் யாவையும் தீர்ப்பதில் இங்குள்ள பசுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.)
“சார்… வணக்கம்…. காசி விஸ்வநாதர் கோவில்ல இருந்து பாலாஜி பேசுறேன்” ஏதோ சொல்ல வந்தார். ஆனால் வாய்ஸ் பிரேக் ஆகி பிரேக் ஆகி கேட்டது. கிராமப்புறம் என்பதால் சிக்னல் கிடைக்கவில்லை.
கோவில்ல மாடு என்று தான் கேட்டது. வேறு ஒன்றும் காதில் விழவில்லை.
“பாலாஜி சார்.. என்ன சொல்றீங்க சரியா காதுல விழலை…”
“மாடு கன்னு போட்டிருக்கு சார்… அதை சொல்லலாம்னு தான் போன் பண்ணினேன்” என்றார்.
வாவ்…. எவ்வளவு ஒரு நல்ல செய்தி. சுப சகுனம். நேற்று முதல் மனதை அரித்துக்கொண்டிருந்த காயத்திற்கு மருந்து போட்டது போலிருந்தது. இது மனிதன் சொல்லும் சேதியல்ல. அந்த முருகன் சொல்லும் சேதி.
“பையனா பொண்ணா?”
“பொண்ணு சார்!”
“சரி நான் இப்போ திருச்சியில இருக்கேன். நாளைக்கு காலைல வந்துடுவேன். சாயந்திரம் ஆபீஸ் முடிஞ்சதும் நேர்ல வர்றேன்” என்றோம்.
“சரி!” என்றார்.
அலுவலகம் முடிந்ததும், நேரே தி.நகர் சென்று கிராண்ட் ஸ்வீட்சில் (ரவா லட்டு) இனிப்பு வாங்கிக்கொண்டு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஓடினோம்.
அங்கு நமக்கு தெரிந்த அனைவருக்கும் இனிப்புக்கள் கொடுத்தோம்.
பாலாஜி நம்மை அழைத்துக்கொண்டு போய் அந்த பசுவையும் கன்றையும் காண்பித்தார்.
இந்த பசு, ஏற்கனவே வேலனை இன்றுள்ள துர்காவுக்கே அம்மாவாம். அதாவது இந்த கோ-சாலையின் மூத்த பசு. நாம் சென்ற நேரம் கன்றுக்குட்டி அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டிருந்தாள்.
நாம் ஆற அமர பரவசத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தோம்.
ஆசை தீர பால் குடித்த பின்னர் நம்மை நோக்கி வந்தது அந்த கன்று குட்டி. பிறந்த குழந்தைங்க அவள்… இப்போது தான் வெளியுல பரிச்சயமே அவளுக்கு… எல்லாமே புதிதாக தெரிகிறது அவளுக்கு.
சனிக்கிழமை இரவு 1.30க்கு பிறந்துள்ளது.
“பேர் ஏதாவது வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டோம்.
“இல்லை சார் இன்னும் வைக்கலை. நீங்களே ஒரு பேர் வையுங்களேன்” என்றார்.
ஆஹா… எப்பேற்ப்பட்ட பாக்கியம்.
“நந்தினி என்று வைக்கலாம்”
“நந்தினி …. நல்ல பேர் சார்”
“தேவலோகத்தில் உள்ள பசுவான காமதேனுவின் கன்றிற்கு நந்தினி என்று பெயர். அன்னையை போலவே கேட்கும் வரமனைத்தும் தர வல்லமை கொண்டவள் நந்தினி. எனவே இந்த பெயர் வைக்கிறேன்” என்றோம்.
நந்தினி அம்மாவிடம் விளையாடிக்கொண்டிருந்தவள், நம்மை நோக்கி ஓடிவந்தாள். ஒரே துள்ளலும் விளையாட்டும் தான் நந்தினிக்கு. அவள் அங்கும் இங்கும் துள்ளிக் குடிஹ்த்து ஓடிய அழகு காண கோடி கண் வேண்டும்.
துள்ளி குதித்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நந்தினி, நம் அருகே வந்தாள். தொட முற்பட்ட போது ஒரே பாய்ச்சலில் அம்மாவிடம் ஓடிவிட்டாள். அங்கிருந்து நம்மை பார்த்தாள். திரும்ப வந்தாள். அவளோடு விளையாடிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
சற்று தள்ளி துர்காவையும், வேலனையும், மற்றும் அவளது உறவினர்களையும் கட்டிப் போட்டிருந்தனர். (வேலன் நன்கு வளர்ந்துவிட்டான்!). அங்கு செல்ல நந்தினி முற்பட்ட போது, இங்கே அவள் அம்மா தனது குட்டி தனது பார்வையில் இருந்து அகன்றுவிட்டபடியால், “ம்….மா” “ம்….மா” என்று கத்தி திரும்ப தன்னிடம் கூப்பிட்டாள்.
அம்மாவின் குரல் கேட்டதும் மீண்டும் மீண்டும் அம்மாவிடம் ஓடிவந்தாள் நந்தினி.
பாலாஜியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே, ‘கொஞ்சம் இருங்க சார்… தலைவரையும் தலைவியையும் பார்த்துவிட்டு வந்துடுறேன். கோவிச்சுக்க போறாங்க” என்று கூறிவிட்டு விஸ்வநாதரை தரிசிக்க சென்றோம். அர்ச்சகர் நம்மை வரவேற்று தீபாராதனை காண்பித்து விபூதி தந்தார்.
பசு கன்று போட்டிருக்கும் விபரத்தை சொன்னார்.
“அதை பார்க்கத் தான் சார் வேந்தேன்!” என்றோம்.
“நல்லது நல்லது…”
அடுத்து அன்னை விசாலாட்சியையும் தரிசித்து பிரசாதம் பெற்றுக்கொண்டு நெற்றியில் குங்குமமும் அணிந்து மீண்டும் பாலாஜியிடம் வந்தோம்.
“சார் கோ-சாலைக்கு ஏதாவது செய்யனும்னு நினைக்கிறோம். என்ன செய்யலாம் சொல்லுங்க”
அவர் யோசித்தார். ஏதோ தோன்றி ஆனால் சொல்ல சற்று தயங்கியது தெரிந்தது.
“பரவாயில்லே சொல்லுங்க… மாதந்தோறும் நாங்கள் வாங்கித் தரும் தீவனம் அது தனி. அது ரெகுலராக வந்துவிடும். ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கீங்க. தேவலோகத்துல இருக்குற நந்தினி மாதிரியே நமக்கும் ஒரு நந்தினி கிடைச்சிருக்கா… எதுவா இருந்தாலும் சொல்லுங்க… எங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கிறோம்” என்றோம்.
“மாடுகளை ஒரே ஈக்கள் மொய்க்குது… நானும் என்னென்னவோ மருந்து தெளிச்சு பார்த்துட்டேன். போ மாட்டேங்குது. தவிர வெயில் காலம் வேற… கோ-சாலைக்கு ஒரு பெரிய ஃபேன் வாங்கி கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றார்.
“எது மாதிரி… கல்யாண மண்டபங்கள்ல இருக்குமே அது மாதிரியா?”
சுற்று முற்றும் பார்த்தவர்… அங்கே கோவில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஃபேனை காண்பித்தார்.
“இதை விட கொஞ்சம் பெரிசாவே இருக்கும். வாங்கி மாட்டிவிட்டோம்னா.. ஈ தொல்லை இருக்காது. தவிர வெயிலுக்கும் மாடுகளுக்கு கொஞ்சம் இதமா இருக்கும்.”
“எங்க நந்தினிக்காக இதை செய்யமாட்டோமா… நிச்சயம் செய்றோம்…. இந்த வாரத்துக்குள்ளே ஒரு பெரிய INDUSTRIAL & WALL MOUNTING FAN வாங்கித் தர்றோம். DON’T WORRY!”
“ரொம்ப நன்றி சார்!”
தி.நகர் ரத்னா பேன் ஹவுசிலேயே வாங்குவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. பேன் விலை, ஃபிட்டிங் காஸ்ட், ஒயரிங் என்று எப்படியும் அனைத்தையும் சேர்த்து ரூ.6000/- முதல் ரூ.6500/- வரும் என்று நினைக்கிறோம்.
நேரில் சென்று… முடிந்தால் பாலாஜியையும் அழைத்துக்கொண்டு சென்று தான் வாங்குவோம்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
வாசகர்கள் இந்த முயற்சிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வரும் ஞாயிறு மதியம் ஃபேன் வாங்கி ஃபிட் செய்ய முடிவு செய்திருக்கிறோம். எனவே இந்த வார இறுதி வரை நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை தொகை குறைவாக சேர்ந்தால் பற்றாக்குறை தொகையை நாம் கையிலிருந்து போட்டுவாங்கிவிடுவோம். கூடுதலாக சேர்ந்தால், ஃபேன் விலை மற்றும் செலவு போக எஞ்சியுள்ள தொகை, ரைட் மந்த்ரா அக்கவுன்ட்டிலேயே வைக்கப்பட்டு, நாம் ரெகுலராக செய்யும் நமது பிற அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும். எப்போது எந்த செலவு வரும் என்று தெரியாது. எனவே தளத்தின் இருப்பில் எப்போதும் MINIMUM BALANCE க்கும் கூடுதலாகவே தொகையை MAINTAIN செய்ய வேண்டியுள்ளது. ரைட்மந்த்ரா அக்கவுண்டில் உள்ள பணம் சரியான செலவுகளுக்கு சரியான நேரத்தில் போய் சேரும்.
* மேற்படி கைங்கரியங்களுக்கு உதவும் அன்பர்கள் பணத்தை செலுத்தும்போது நம் தளத்தின் பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு அதில் குறைந்தது 25% ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
(மீண்டும் ஒரு நினைவூட்டல் : கோவில்களுக்கு நல்லெண்ணை டின், நாள் கிழமைகளின் பண்டிகைகளின் போது புஷ்பங்கள் மற்றும் மாலைகள், ஏழை எளியோருக்கு அன்னதானம், கோ-சாலை தீவனம், காமிரா சேகர் அவர்கள் போஷிக்கும் 1000 கிளிகளுக்கு அரிசி இன்னும் பலப் பல அறப்பணிகள் நம் தளம் சார்பாக நடைபெற்று வருகிறது. மேற்படி சேவைகள் ஒவ்வொரு மாதமும் நம் தளம் சார்பாக தவறாமல் நடைபெற்று வருகிறது. உங்களுக்கு தெரியவேண்டும் என்று தான் ஒரு சில தடவை மேற்படி உதவிகளை புகைப்படம் எடுத்து அளித்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவ்வாறு செய்வது இயலாது. அது நன்றாகவும் இருக்காது என்பது நீங்கள் அறிந்ததே!!)
=================================================================
நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்களுக்கு :
http://rightmantra.com/?page_id=7762
=================================================================
=================================================================
Also Check :
கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!
நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!
எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
=================================================================
=================================================================
திருச்சியில் நாம் சந்தித்த சாதனையாளர், மற்றும் நமது திருவரங்கம் & திருவானைக்கா தரிசன அனுபவங்கள் விரைவில்…
=================================================================
[END]
சார்
Kindly give Rightmantra Bank account details.
thanking you,
R.VEERALAKSHMI
தங்கள் ஆதரவுக்கு நன்றி!
Bank A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
சுந்தர் சார் வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
நந்தினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றி
பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
முருகனே அந்த பேரிடியை கருணை மழையாக மாற்றுவான். குல தெய்வம் கோவிலுக்கு சென்றால் கண்டிப்பாக நல்லது நடக்கும்
all the photos are good. ஐயப்பனின் அருள் கடாக்ஷம் உங்கள் மேல் பரிபூர்ணமாக விழ போகிறது.
காசி விஸ்வநாதர் கோவிலில் பிறந்த பசுவிற்கு நந்தினி என்ற பெயர் மிகவும் நன்றாக உள்ளது, கோசாலவிற்கு எங்களால் முடிந்த உதவியை செய்வோம்
நன்றி
உமா
(அழகான பெயர்) மன குறையை தீர்க்க இறைவன் அருளட்டும். வாழ்க வளமுடன்