தியானத்தின் பலனை சாமானியர்களுக்கு இதைவிட அற்புதமாக எவரும் விளக்க முடியாது. கவியரசர் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ள பிரார்த்தனை கீதத்தை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.
ஒரு சரசாரி மனிதன் செய்கின்ற செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் பட்டியலிட்டு இறைவனிடம் மன்னிப்பு கோருகிறார்.
உங்கள் பிரார்த்தனையில் இந்த பாடலும் இனி இடம்பெறட்டும்!
=====================================================================
பழுதறியாப் பிள்ளை இவன் பாவமே செய்தாலும் அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே !
(அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 4 – அத்தியாயம் 12)
பகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், `கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று. தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான். ‘தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி.
பரபரப்பான நகர, நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது?
கிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு.
ஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும் போதும், `நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா?’ என்றே நான் ஏங்குகிறேன்.
ஆயிரம் விலங்குகளுக்கு காலையும், கையையும் கொடுத்து விட்ட நிலையில், இந்த ஏக்கம் எப்போது தீரப் போகிறது?
குளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங்கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தலையில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில் களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது!
எனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.
`மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கி விடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒரு முறை.
கிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன?
அங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள் தானே?
துன்பத்தை மனத்திலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான்.
இறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.
ஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்து விட்டால், அது தானாகவே உன் மனதிலிருந்து இறங்கிவிடும்.
தனிமையில் உட்கார்ந்து கொண்டு, `அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ?’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால்
என்ன?ஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும். தனிமை – அதிலும் பலவந்தமான தனிமை – மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டுபோய்ச் சிறையிட்ட தனிமை – அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும் கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதி விட்டேன்.
ஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.
பரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது.
ஆல்வாய் நதிக் கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சிந்தாந்தத்திற்கு ஆணி வேர்.
தனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது.
எங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பார்.
கற்பனை புறாவைப் பறக்க விடு.
அழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.
அப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும்.
சுமைகளையும், தொல்லைகளையும் பற்றிப் பயந்துக் கொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்ட கனவுகள் வரும்; அப்போது யாராவது மெதுவாகக் கூப்பிட்டால் கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும்.
பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.
தைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப் போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை.
அதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும்.
அதனால் தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள்.
கட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள்; மரமேறித் தாவும் குரங்குகள்; துள்ளித் திரியும் மான் குட்டிகள்- இவற்றைக் காணும் போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது!
பரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி ஏது?
காடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம் கூடக் கருணையும், அன்பும் இருக்கும்.
காரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.
தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன் கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டு விடுகிறான்.
ஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே.
அண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.
அதற்கு `யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன் பகுதியையும் பின் பகுதியையும் நானே பேசி இருக்கிறேன்.
அது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.
கேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் கொண்டே, அவை தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணி வகுத்துக் கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக சதுர வடிவமாக அவை அணி வகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகை வகையாக ஆட்டுவது போலிருந்தது.
இடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று.
ஓடிக் கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக் கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். `போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதிவரும்.
துன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது.
ஒன்று செய்யுங்கள்.
கிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்தில் இருக்கும் காட்டில் நல்ல நிழல் தரக்கூடிய மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள்.
நகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள்.
இதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது.
எதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் கவலை இல்லை.
எங்கே, பிரார்த்தியுங்கள்:
“பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே! உன்னை நான் வணங்குகிறேன்.”
“மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக் கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலை கழிக்கப்படுகின்றேன்.”
“எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.”
“நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு.”
“நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.”
“என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது!”
“அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்.
இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்.”
– இப்படிப் பிரார்த்தித்துவிட்டு, கீழ்கண்ட பாடல்களைப் பாடுங்கள்:
தாய்தந்தை இச்சையினால் தாரணியிலே நான்பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!
தண்ணீரைக் கூடத் தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!
அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!
மாட்டின்மேல் உண்ணியைப்போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம்நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!
தோழன்என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!
கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டுநான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!
ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான்செய்த தவறெதுவோ பரம்பொருளே!
தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்கார னாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!
ஒருவேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனக்கு மயங்குவதேன் பரம்பொருளே!
செய்யாத குற்றமெல்லாம் செய்தேன் எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!
எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்துத் துணையிருப்பாய் பரம்பொருளே!
பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய்நீ நானறிந்தேன் பரம்பொருளே!
உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகின்றேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!
கண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!
எங்கும் நிறைந்தாயே எவரையும்நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!
கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!
ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணெயில்லை என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!
ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக் குருடனுக்கு நலமேது பரம்பொருளே!
பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!
ஆற்றில் ஒருகாலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!
எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லைஎனத் துணிந்தேன் பரம்பொருளே!
உன்காலை வாங்கி உலாவ மறந்தபின்னர்
என்காலைக் கொண்டுநான் எதுசெய்வேன் பரம்பொருளே!
தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்ததுபோல்
நான்போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!
சூதாடித் தோற்றவர்க்குத் துணைஇருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ!
அரக்கர் குலமெல்லாம் அன்றோ டழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதையோ!
பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய்நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!
எத்தனையோ கேள்விகளை எழுப்பிவிட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான்ஒருவன் எப்படித்தான் பதில்சொல்வேன்!
துன்பத்தைத் தானே தொடர்ந்தெனக்கு வைத்தாய்!
இன்பத்தை எப்போது எனக்குவைப்பாய் பரம்பொருளே!
ஐயாநின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினைதீர்ப்பாய் பரம்பொருளே!
காவல்ஒரு வில்லாகக் கருணைஒரு வேலாக
கோவில்உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ!
தூங்குகிற வேளைநீ தோன்றுவாய் கனவில்என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!
மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பதுபோல்
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!
பழுதறியாப் பிள்ளைஇது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!
நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என்சாட்சி!
மாற்றார் உரிமையைநான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுஎன் அகக்கடமை என்றிருப்பேன்!
இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!
நற்கோவில் சிலையதனை நான்உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!
அடுத்தார் மனைவியைநான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய்விரித்துக் கிடந்திருப்பேன்!
நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பதுஉன் கருணைஎன நினைத்திருப்பேன்!
தாயை மகனைத் தனித்தனியே பிரித்திருந்தால்
நாயையே என்னைவிட நற்பிறவி என்றிருப்பேன்!
கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!
பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒருகவளம் தேடித் திரிந்திருப்பேன்!
நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய்திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!
சக்தியுள மட்டில் தவறாமல் நாள்தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!
மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என்நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!
தாயும்நீ தந்தைநீ சார்ந்திருக்கும் சுற்றமும்நீ
வாயும்நீ வயிறும்நீ வரமளிக்கும் தேவனும் நீ!
நோயும்நீ மருந்தும்நீ நோவுடனே சுகமும்நீ!
ஆயும் குணளிக்கும் ஆறாவ தறிவும்நீ!
இறப்பும் பிறப்பும்நீ இருட்டும் வெளிச்சமும்நீ
மறப்பும் நினைப்பும்நீ மனக்கோவில் தேவதைநீ!
எல்லாமும் நீயே எனைப்பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!
இன்பவரம் தாராமல் இதுதான்உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!
பாமர மனிதனுக்கு நான் சொல்லும் தியான யோகமே மேலே கண்டது.
ஆனால், பக்குவம் பெற்ற மனிதர்களுக்குச் சற்று கடுமையான தியான முறையைப் பகவான் கீதையிலே விளக்குகிறான்.
எப்படி உட்காருவது, உடம்பை எப்படி வைத்துக் கொள்வது, அந்தத் தியானத்தில் என்ன பயன், எந்த வகையில் மனதுக்கு நிம்மதி என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறான்.
`சஞ்சலம் மிக்க மனத்தை என்ன செய்ய முடியும்?’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் அதிலே பதில் சொல்கிறான்.
மனம் அங்கும் இங்கும் அலையும்போது, மூளையும் உடலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.
பேயாய் உலாவும் சிறுமனத்தை, மனக் குரங்கை அடக்கியாள்வதன் மூலமே மனிதனின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.
ஆழ்ந்த தியானத்தில், அலைபாயும் நினைவுகள் அடைபட்டுப் போகின்றன.
பகவான் சொல்லும் முறைப்படி நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால், அந்த நேரத்தில் பக்கத்திலே வெடிகுண்டு வெடித்தாலும் உங்கள் காதுக்குக் கேட்காது.
ரம்பையே எதிரிலே வந்து நின்றாலும் உங்களுக்குத் தெரியாது. விஷத்தையே உங்கள் வாயில் வைத்தாலும் அதன் கொடுமையை உணர மாட்டீர்கள். கொடிய காற்று உங்கள் நாசியில் புகுந்தாலும் உங்கள் நாசிக்கு அந்த உணர்வு இருக்காது. நெருப்பையே உங்கள் உடம்பில் அள்ளிக்கொட்டினாலும் அது உங்களைச் சுடாது.
மொத்தத்தில் ஐந்து புலன்களும் செயலற்று நிற்கும்; மனம் ஒரே சம நோக்கில் இருக்கும்.
அந்தத் தியான யோகம் உங்களின் நீங்காத கவனத்துக்கு உரியது.
(நன்றி : ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எழுத்துரு உதவி : http://senthilvayal.com)
============================================================
Also check :
“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!
கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!
துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !
கடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1
============================================================
[END]
கண்ணதாசனின் தியான யோகமும் பிரார்தனை கீதமும் மிகவும் அருமை/ உருகி உருகி எழுதியிருக்கிறார். இந்த பாடலை படிக்கும் பொழுது நமக்கு ” நடராஜ பத்து”” பாடல் நினைவுக்கு வருகிறது.
அவர் எழுதிய ” கருவிலே திருவுடைய நல்லறிவாளர் தம் கனிவான நட்பு வேண்டும்., காசு பண ஆசைகளில் வேசயறை போல் ஆடி கரவாத புத்தி வேண்டும் ………………….”” இந்த பாடலும் superb ஆக இருக்கும்
இந்த உலகம் உள்ளவரை அவர் பாடல்கள் இந்த உலகில் ஒலித்துக்கொண்டிருக்கும் .
வாழ்க அவர் புகழ் //
நன்றி
உமா
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு அருமையான பொக்கிஷம். புத்தக கண்காட்சியில் அதை வாங்கி வந்து ஆனால் படிக்க நேரமில்லாமல் அலமாரியில் வைத்திருந்தேன். தற்போது உங்கள் பதிவை பார்த்தபிறகு புத்தகத்தை எடுத்து புரட்ட துவங்கியிருக்கிறேன். படிக்க படிக்க பரவசம். தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி!
ராதாகிருஷ்ணன்,
சிட்லப்பாக்கம், சென்னை-66
கண்ணதாசனின் பிரார்த்தனை கீதம் அருமை. ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியுள்ளார்.
கண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். நீங்கள் சொல்வது போல, இதை மனப்பாடம் செய்து நித்தம் கூறிவந்தாலே போதும்.
பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர், சேலம் மாவட்டம்