ஆம்…. வையம் தழைக்க வந்த அந்த புனிதன் வழி தவறி எங்கெங்கோ அலைந்தான்.
கோவில் நந்தவனத்தில் துள்ளி குதித்து விளையாட வேண்டிய அந்த மான் குப்பை மேடுகளிலும் இடுகாடுகளிலும் அலைந்தது. ஆண்டவன் அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பானா?
இதோ கண்ணதாசன் தன்னிலை உணர்ந்து ஞானத்தின் பக்கம் திரும்பிய கதை.
திருப்பியது யார் தெரியுமா?
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்கி தனது அருட்பார்வையினாலேயே பாவங்களை பொசுக்கிய மகா பெரியவா தான்.
‘இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’
சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.
தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திக மேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.
நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாய்ந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.
(ஸ்கேனிங் பக்கங்களாக இந்த அற்புத சம்பவத்தை முதலில் கண்ட நான் எழுத்துருவை மிகவும் பிரயத்தனப்பட்டு தேடி கண்டுபிடித்தேன். எனவே காப்பி & பேஸ்ட் புண்ணியவான்கள் அப்படி செய்யும்போது நமது Rightmantra.com தளத்தின் லின்க்கை தயவு செய்து அளிக்கவும். மகா பெரியவா உங்களுக்கு துணையிருப்பார்!)
[நன்றி : mahaperiyavaa.wordpress.com | எழுத்துரு உதவி : manakkalayyampet.blogspot.in]
சுந்தர், இந்த வெப் போஸ்ட்டுக்கு காத்துகொண்டு இருந்தேன் . நன்றி
ராம்ஜி, உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தான் இந்த பதிவிற்கு காரணமே..!
– சுந்தர்
மஹா பெரியவர் ஆசீர்வாதம் நம் தலவாசகர்கள் அனைவருக்கும் இந்த பதவின் மூலம் கிடைத்துள்ளது .
\\\‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.\\\
படிக்கும் போது உடல் மெய் சிலிர்க்கிறது .கண்கள் குளமாகிறது .
சரியான பதிவு .வாழ்த்துக்கள் .
நன்றி .
சுந்தர்ஜி,
மனோகர் சொல்கின்றார் போல் மஹா பெரியவர் ஆசீர்வாதம் நம் தள வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதவின் மூலம் கிடைத்துள்ளது.
எப்பொதும் போல் கண்கள் குளமாகியது.
Sundar,
Nice post. I want a copy of Maha periyavaa’s high resolution picture. I cant get it here as I live outside of India.
I would need this for my swami room. Can you please send it to me?
Thanks
Ananth
Yes will send. Just wait for few days. thanks.
Thanks!
சந்தோசம். மஹா பெரியவா அவர்களின் மூலம் மனம் மாறியவர்கள், நல வழி வந்து பேரு வழி அடைந்தவர்கள் இன்னும் எதனை பேரோ. நாமும் அவர்களில் ஒன்றானோம்.
நன்றி சுந்தர்ஜி.
அற்புதம் !!!
ஆனந்தம் !!!
பதிவை படித்தவுடன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை !!!
வாழ்க்கையில் சிக்கலான குழப்பமான அதே சமையம் ஆபத்தான தருணங்களில் எல்லாம் வல்ல பரம்பொருளாகிய அந்த இறைவன் மகான்கள் மூலமாகவும் குருவின் மூலமாகவும் நமக்கு வழிகாட்டி அருள்கிறார் !!!
காலை கதிர் பட்டு
பூஉலகில் படர்ந்துள்ள பனித்துகள்கள் விலகி
பச்சைமாமலைபோல் மேனி என்ற சொல்லுக்கேற்ப பசுமையான
புல்வெளிகளும் மரங்களும் செடிகொடிகளும் நம் கண்களுக்கு குளிர்ச்சியாய் காட்சி அளிப்பது போல்
நாத்திகம் என்ற மேகம் விலகி ஆத்திகம் என்ற சந்திரனை சுடர் விட்டு பிராகாசிக்க செய்த மஹா பெரியாவாளின் அருளை என்னவென்று கூறுவது?
இந்த நெகிழ்வான சம்பவத்தை படிக்கையில் நம்மில் பலருக்கும் கண்ணதாசன் அவர்களின் மனம் அடையத எல்லை இல்லா ஆனந்தத்தை உணர முடியும் என்று நம்புகிறேன் !!!
இந்த அற்புத தகவலை பகிர்ந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் !!!
தொடரட்டும் திருத்தொண்டு
மனம்வீசட்டும் ஆன்மிகம் – எங்கெங்கும்
மறையட்டும் அறியாமை என்னும் இருள் !!!
காஞ்சி பெரியவர் அன்று கண்ணதாசன் அவர்களுக்கு கொடுத்த அவர்களின் மூலம் மனம் மாறியவர்கள், நல்ல வழி வந்து பேரு வழி அடைந்தவர்கள் இன்னும் எதனை பேரோ. நாமும் அவர்களில் ஒன்றானோம்.
நன்றி
அதித்யா கோவிந்தன்
பெங்களூர்
நல்ல மனம் வேண்டும் நல்ல உள்ளம் வேண்டும் இந்த பூமியில் நன்றாக வாழ
நன்றி
அதித்யா கோவிந்தன்
பெங்களூர்
மனம் லேசா ஆயிடுத்து சார் . கண்ணதாசனை மாற்றிய மகான் அருள் நம் எல்லாருக்குமே கிட்டும் சார் உங்க புண்ணியத்துலே .
நன்றி.
சோ. ரவிச்சந்திரன்
கைஹா , டவுன் ஷிப் ,
கர்நாடகா
9480553409