Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

print
டந்த வாரம், இமாலய சாதனையாளர் அருணிமா சின்ஹா அவர்களை பற்றி நாம் அளித்த பதிவில் – அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக நாம் கூறியிருந்தது – நினைவிருக்கலாம். அப்போதே அவரிடம் சென்னை வந்தால் அவசியம் தகவல் தெரிவிக்கும்படியும் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியிருந்தேன். சென்னை வரும் திட்டம் இருக்கிறது என்றும் விரைவில் தேதியை சொல்வதாகவும் கூறினார். எனவே அவரிடம் அடிக்கடி அதை பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தேன்.

அருணிமாவிடம் பேசுவது எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. எனக்கு ஹிந்தி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லை. “ஆங்கிலத்தில் என்னால் எழுதவும் படிக்கவும் முடியும். பேசுவதற்கு தான் சற்று சிரமமாக இருக்கிறது…”  என்று கூறினார். அவர் செய்திருக்கும் சாதனைக்கு முன்னர் அவரின் இந்த ‘ஆங்கில சிரமம்’ ஒரு பொருட்டு இல்லை என்றாலும் அவர் மொழியில் அவரிடம் பேச முடியாது இருந்த சூழ்நிலையை நினைத்து வருந்தினேன்.

ஒரு வழியாக சற்று அவருக்கு புரியும் படி ஆங்கிலத்தில் பேசி நமது தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும் கூறினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்.

சென்ற வாரம் ஒரு நாள் பேசியபோது,  ஜூன் 23 ஞாயிறு மாலை 7.30 க்கு சென்னை வருவதாகவும்  24 மற்றும் 25 ஆம் தேதி தேதிகளில் சென்னையிலும் மதுரை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார்.

திங்கள் மற்றும் செவ்வாய் இரண்டு நாளும் வேலை நாள் என்பதால் என்னால் நகரக் கூட முடியாது. மேலும் அவர் எங்கிருப்பார் என்றும் தெரியாது. எனவே ஞாயிறு மாலை அவர் வந்தவுடனேயே சந்தித்துவிடலாம் என்று முடிவு செய்து, அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் பெற்றேன். சென்னை வந்து இறங்கியவுடன் அவர் இங்கு தங்கும் இடத்தை சொன்னால் போதும் அங்கு வந்து சந்திப்பதாக கூறினேன்.

இதற்கிடையே ஞாயிறு மாலையே கடைகளுக்கு சென்று அருணிமாவை கௌரவிக்க பொன்னாடை, பரிசளிக்க பரிசுப் பொருள், பூங்கொத்து (பொக்கே) இவற்றை வாங்கி தயார் நிலையில் வைத்துக்கொண்டேன்.

இது போன்ற சந்திப்புக்களில் ஆர்வம் செலுத்தக்கூடிய நம் நண்பர்கள் சிலரிடம் பேசியபோது, கண்ணன் வைரமணி மற்றும் ராஜா ஆகியோர் வருவதாக சொன்னார்கள். இருப்பினும் இது ஒரு வி.ஐ.பி. சம்பந்தப்பட்டதால் கடைசி நேர மாறுதல் இருக்கலாம். அது என் கைகளில் இல்லை என்று கூறினேன். பரவாயில்லை நாங்கள் எதற்கும் தயார் என்றனர்.

இதற்கிடையே அருணிமா தனது சகோதரர் மற்றும் உதவியாளருடன் சென்னை விமான நிலையம் வந்திறங்கி பின்னர் போக்குவரத்து நெரிசலில் நீந்தி அவர்கள் நூறடி சாலையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ராதா ரிஜென்ட்’ ஹோட்டல் அறைக்கு வர இரவு 9.30 ஆகிவிட்டது.

அதற்கு மேல் அவரை எப்படி சந்திப்பது? பயண களைப்பில் வேறு இருப்பார். எனவே காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அருணிமாவின் சகோதரரிடம் விஷயத்தை கூறியதும் – அவர் : “காலையிலே வர்றதா இருந்தா 7.00 மணிக்குள்ளே வந்துடுங்க 7.30 மணிக்கு வெளியே கிளம்பிடுவோம். ஒரு ஸ்கூல் பங்க்ஷன்ல மேடம் பேசப்போறாங்க” என்றார்.

7.00 மணிக்கா… நல்லதா போச்சு. நம்மோட ROUTINE WORK பாதிக்காது. அருணிமாவை சந்தித்துவிட்டு அப்படியே அலுவலகம் சென்றுவிடலாம் என்பதால் எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது.

வாங்கியிருந்த பொக்கே மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை திரும்பவும் வீட்டிற்கே கொண்டு வந்துவிட்டேன்.

சந்திப்பு நேரம் மாறிவிட்டபடியால் முதலில் ஒப்புக்கொண்ட இருவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காலை 7.00 மணிக்கு வருவதாக சொன்னது நண்பர் மாரீஸும் மனோகரனும் தான்.

“காலையில 7.00 மணிக்கு ஷார்ப்பா ராதா ரிஜென்ட்டில் இருக்கணும். கொஞ்சம் லேட்டாச்சுன்னா கூட எல்லாம் வேஸ்டாயிடும். அவங்க 7.30 க்கு வெளியே கிளம்பிடுவாங்களாம்” என்று அவர்களிடம் கூறினேன்.

நண்பர் மாரீஸ் அவரது பணி தொடர்பான ஒரு எக்ஸிபிஷனில் மூன்று நாட்கள் இருந்தபடியால் “ரொம்ப டயர்டா இருப்பீங்களே…. காலையில சீக்கிரம் எழுந்திருச்சி சந்திப்புக்கு தயாராக முடியுமா?” என்றேன்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நாளைக்கு சனிக்கிழமை விஸ்வரூப தரிசனம்னு நினைச்சிக்கிறேன்” என்றார்.

நான் புரியாமல் விழித்தேன்…

“ஒன்னும் இல்லை… இப்போவும் வாராவாரம் சனிக்கிழமை நந்தம்பாக்கம் ராமர் கோவிலுக்கு போய் விஸ்வரூப தரிசனம் பார்த்துகிட்டு வர்றேன். அதனால முந்தின நாள் எவ்ளோ லேட்டா படுத்தாலும் சனிக்கிழமை மட்டும் கொஞ்சம் சீக்கிரமே எழுந்திருச்சுடுவேன் ” என்றார்.

“வாவ்… கிரேட் கிரேட்” என்றேன்.

இடையே அவர் இது பற்றி சொல்லியிருந்தாலும் நான் மறந்துவிட்டேன். ஜனவரி மார்கழி மாதம் முழுவதும் நானும் நண்பர் மாரீஸும் நந்தம்பாக்கம் கோவில் சென்றுவந்தது நினைவிருக்கலாம்.

அடுத்து மனோகரன். இவருக்கு தான் எத்தனை ஆர்வம். அதிகாலை எழுந்து தயாராகி சரியாக 6.15 க்கெல்லாம் திருவள்ளூரில் இருந்து கிளம்பி நம் வீடு அமைந்திருக்கும் ஐயப்பன்தாங்கல் வந்துவிட்டார் மனோகரன். அப்படி என்றால் அவர் எத்தனை மணிக்கு ஏழுந்திருந்திருப்பார் என்று யோசித்து பாருங்கள்.

நம்மை பொருத்தவரை காலை சீக்கிரம் எழுந்திருப்பது ஒரு விஷயமே அல்ல. சிலரை ‘WEATHER BEATEN’ என்று கூறுவார்கள். அதாவது எந்த தட்பவெட்ப சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள். அதே போல சிலர் ‘TIME BEATEN’ என்று சொல்லலாம். எப்போ வேண்டுமானாலும் தூங்கி எப்போ வேண்டுமானாலும் இவர்களால் எழுந்திருக்க முடியும்.

நம்மை பொறுத்தவரை முதல் கேட்டகரியின் அனுபவம் இது வரை பெரிதாக இல்லை. ஆனால் இரண்டாவது கேட்டகிரியில் தாரளமாக அடங்கிவிடுவேன். வாழ்க்கையில் ஜெயிக்கும் வரை தூக்கமாவது கீக்கமாவது. LITERALLY நான் தூங்கி ஒரு வருஷத்துக்கு மேல் ஆவுதுங்க.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன்.

காலை நாங்கள் அனைவரும் தயாராகி ராதா ரெஜென்ட் செல்லும்போது மணி 7.15 AM.

ரிசப்ஷனில் கூறி அனுமதி பெற்று மூன்றாவது ப்ளோரில் அருணிமா தங்கியிருந்த சென்றோம். 7.30 க்கு வெளியே செல்லவேண்டியிருந்ததால் அருணிமா தயாராக இருந்தார்.

நம்மை அன்போடு வரவேற்றார். அவருக்கு வணக்கம் கூறி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நண்பர்கள் மனோகரன் மற்றும் மாரீஸ் கண்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தினேன்.

“அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. ஜஸ்ட் ஒரு 5 நிமிடங்கள் போதும்” என்றேன்.

முதலில் நமது தளம் சார்பாக அவருக்கு பூங்கொத்து அளித்து அவரை தமிழகத்துக்கு வரவேற்றோம். அடுத்து நம் வாசகர்கள் சார்பாக அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

“உங்கள் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. உங்களை கௌரவிக்கவேண்டியது எங்கள் கடமை. எங்கள் தள வாசகர்கள் சார்பாக இதை அணிவிக்கிறோம்” என்று கூறி நண்பர் மாரீஸ் மூலம் அவருக்கு பொன்னாடை போர்த்தினோம்.

நெஞ்சம் நிறைந்த நெகிழ்ச்சியுடன் “தேங்க்யூ…தேங்க்யூ” என்று அதை அன்போடு ஏற்றுக்கொண்டார்.

அடுத்து நமது முறை.

கவரில் இருந்த அந்த பரிசை எடுத்து பிரித்தேன். நாம் பிரிக்க பிரிக்க சற்று ஆவலுடன் கவனித்து வந்தார் அருணிமா.

கடைசீயில் பிரித்து அதை அவரிடம் காண்பித்தபோது தான் நண்பர்களுக்கே தெரியும் அது என்ன என்று. நண்பர்களிடம் கூட அது பற்றி சொல்லாமல் சஸ்பென்ஸோடு வைத்திருந்தேன்.

பரிசை முழுவதும் UNWRAP செய்து, கையில் எடுத்து, “அருணிமா இவர் தான் எங்கள் அண்ணாமலையார். அகிலத்தையே ஆளும் எங்கள் அருணாச்சலேஸ்வரர். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நெருப்பு வடிவத்தில் குடிகொண்டிருப்பவர். தீயவர்களுக்கெல்லாம் ‘தீ’ போன்றவர். இவரை நினைத்தாலே போதும். முக்தி தரக்கூடிய சக்திமிக்கவர். நீங்கள் மிகப் பெரிய சிவபக்தை என்பதை நானறிவேன். ஒரு பரம சிவ பக்தைக்கு  இதைவிட பெரிய பரிசு எதையும் நான் தந்துவிடமுடியாது என்று கருதுகிறேன். இந்தாருங்கள் என்றும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எங்களின் நினைவாக!” என்றேன்.

அருணாச்சலேஸ்வரர் தன்னை நாடி வந்ததை எண்ணி ஒரு கணம் அவருக்கு கண்களில் நீரே பெருகிவிட்டது. தாயை பிரிந்த ஆட்டுக்குட்டி தாயை பார்த்தவுடன் பாய்ந்து வந்து சுற்றி சுற்றி வருமே அது போல திரும்ப திரும்ப அந்த படத்தையே பார்த்தார்.

(அருணிமா பலவேறு இன்னல்களுக்கிடையே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவுடன் அவர் அங்கு முதலில் செய்தது என்ன தெரியுமா? இரண்டு சிறிய சூலாயுதங்களை அங்கு பதித்து சிவபெருமானுக்குரிய ஸ்தோத்திரங்களான  ‘சிவ சாலீஸா’வை சொன்னது தான்.)

நன்றி சொல்ல அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. நெகிழ்ச்சியில் காணப்பட்டதால் வாய் சொல்லவேண்டிய நன்றியை கண்கள் சொன்னது.

“எப்படி உணர்கிறீர்கள் ?” என்று கேட்டோம்.

“அந்த சிவபெருமானே என்னை தேடி வந்ததை எண்ணி நெகிழ்ந்துவிட்டேன். உண்மையில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை!!!” என்றார்.

அடுத்து வேலம்மாள் பள்ளியின் சார்பாக அப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதாக கூறினார். நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரை அழைத்துச் செல்ல வேலம்மாள் பள்ளியில் இருந்து துணை முதல்வர் வந்துவிட்டார்.

அதற்கு மேல் எங்களால் அங்கு இருக்க முடியவில்லை.

“எங்கள் தள வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“ஒரு குறிக்கோளை தேர்வு செய்து அதை எட்டுவதற்காக நமது அதற்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அற்பணித்து உழைக்கவேண்டும். எது வரினும் கவலைப்படக்கூடாது. எந்த இடையூறு வந்தாலும் பொருட்படுத்தக் கூடாது. கொள்கை வெல்வது மட்டுமே நமது நோக்கமாக இருக்கவேண்டும்!” என்றார்.

விடைபெற்று கிளம்பி வந்தோம்.

=====================================================

அனுபவம் பேசுகிறது….!

ஒரு பரிசு :

முந்தைய தினம் அருணிமாவுக்கு அவர் என்றும் நம்மை நமது தளத்தை மறக்க முடியாத படி ஒரு பரிசை வழங்கவேண்டும் என்ன கொடுக்கலாம் என்று யோசித்தபோது என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மிகப் பெரிய சாதனையாளரான அவருக்கு இந்த எளியோன் என்ன கொடுத்துவிட முடியும்?

கடைசியில் திருக்குறளின் ஆங்கில பதிப்பு கிடைத்தால் வாங்கித் தரலாம் என்றெண்ணினேன். ஆனால் ஞாயிறு மாலை என்பதால் எந்த கடையும் இல்லை. இருந்த ஒன்றிரண்டு கடைகளில் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பு கிடைக்கவில்லை. கடைசியில் ஆழ்வார்திருநகரில் உள்ள கிரி ட்ரேடிங் ஏஜென்சி சென்றேன். அங்கும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று கையை பிசைந்த தருணம் சட்டென்று அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லேமினேட் செய்யப்பட்ட சுவாமி படங்களை பார்த்தேன். உடனே மனதில் மின்னலடிக்க, அருமையான அருணாச்சலேஸ்வரர் படம் ஒன்றை வாங்கிவிட்டேன். இது தான் அருணிமாவை அருணாச்சலேஸ்வரர் சென்றடைந்த கதை.

தன்னை நோக்கி இமயத்திற்கே வந்த தனது பக்தையை தேடி இங்கு அவரே சென்றுவிட்டார். (ஒரு அடி எடுத்து வைக்கிறவங்க கிட்டேயே அவன் நூறடி நடந்து போவான். தன்னை நோக்கி பல்லாயிரம் அடி எடுத்து வைத்த அதுவும் காலை இழந்த அருணிமாவை நோக்கி அவன் செல்வதில் வியப்பென்ன?)

ஒரு மொழி :

ஹிந்தி தெரியாமல் போனதற்கு நான் வருத்தப்பட்ட தருணங்கள் பல உண்டு. ஆனால் இப்போது தான் மிக அதிகமாக வருந்தினேன். ஒருவேளை எனக்கு ஹிந்தி தெரிந்திருக்குமானால் அவரின் மொழியிலேயே பேசி அருணிமாவிடமிருந்து  பல கருத்துக்களை உங்களுக்காக அள்ளி வந்திருப்பேன். ஏனெனில் ஒருவருக்கு தாய்மொழி உணர்வுபூர்வமானது.

இன்னும் மூன்றே மாதங்களில் எப்படியாவது ஹிந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து அந்த முயற்சியில் உடனடியாக இறங்கியேவிட்டேன். “இரு மொழி அறிந்தவன் இரு மனிதர்க்கு சமம்.”

ஹிந்தி மட்டுமல்ல… இனி ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் ஒவ்வொரு புது மொழியை கற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.

நான் விரும்பாதது என் வாழ்வில் எது நடந்தாலும் அதன் மூலம் என்னை பட்டை தீட்டிக்கொள்ளத்தான் முயற்சிப்பேனே ஒழிய நடந்ததை எண்ணி சோர்ந்துபோகும் குணம் நமக்கு இருந்ததேயில்லை. அப்படியே ஒருவேளை மிகப் பெரிய ஏமாற்றங்களினால் சோர்ந்துபோனாலும் அது ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் என்னை பாதிக்காதவாறு பார்த்துகொள்வேன்.

ஒரு பாராட்டு :

சென்ற ஆண்டு நாம் நடத்திய பாரதி விழா சிறப்பு விருந்தினர் – பார்வையிழந்த சிறப்பு திறனாளி – என் நண்பர் திரு.இளங்கோ அவர்கள் – என்னிடம் ஒரு முறை கூறியது இது. என்ஜீனியரிங் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சென்று MOTIVATIONAL SPEECH கொடுப்பது அவரது வழக்கம். இதற்காக அவர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் கட்டணம் பெறுகிறார். அவரது PROFESSION முக்கியமாக இது தான். அவரது உரை மாணவர்களை உற்சாகமூட்டி வீறு கொண்டு எழச் செய்துவிடும். இதனால் இவர் சென்று பேசிவிட்டு வரும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களின் OVER ALL PERFORMANCE அதற்கு பிறகு அதிகம் இருக்கும்.

சில கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடல் என்ற பெயரில் முன்னணி (?) திரைப்பட நடிகைகள் சிலரை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரவழைத்து மாணவர்களிடையே பேசவைப்பதுண்டு.

“ஹாய் செல்லம்… ஹவ் ஆர் யூ? ஸோ ஸ்வீட். ஐ ரியல்லி லைக் சென்னை யார்” என்று ஜஸ்ட் நான்கு வரிகள் அவர்கள் உளறுவதற்கு லட்சக்கணக்கில் அவர்களுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் பணம் கொடுக்கப்படும். அதே நேரம் மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய இளங்கோ போன்றோரிடம் சில கல்வி நிறுவனங்கள் அவரது உரைக்கு கொடுக்கும் ஊதியம் தொடர்பாக சில ஆயிரங்கள் குறைத்துக்கொள்ளும்படி பேரம் பேசுகிறார்களாம்.

அடப்பாவிகளா…. என்ன கொடுமை இது?? என்னைக்கு நாம திருந்தப்போறோம்???

இதை எதுக்கு இங்கே சொல்றேன்? காரணமிருக்கு!

இப்படி மாணவர்களுக்கு நல்வழி காட்டவேண்டியவர்களே அவர்களை சினிமா மோகத்தில் தள்ளிவிடும் சூழ்நிலையில், அருணிமாவை தமிழகம் வரவழைத்து அவர் வந்து போகும், தங்கும் முழு செலவையும் ஏற்று தங்கள் குழும பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இந்த இரு நாட்களிலும் பேச வைத்துள்ளனர் ‘வேலம்மாள் பள்ளிகள்’ குழுமத்தினர்.

அருணிமா சின்ஹா போன்ற சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை, நாட்டின் வருங்காலத் தூண்களாம் மாணவர்களிடம் அறிமுகப்படுகிறமைக்கு வேலம்மாள் பள்ளி குழுமத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அருணிமாவை சந்திக்க சென்றபோது அப்பள்ளியின் துணை முதல்வரை சந்திக்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. நமது தளம் பற்றி கேள்விப்பட்ட அவர், அருணிமா அவர்கள் பள்ளியில் பேசும் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை நமக்கு மின்னஞ்சல் அனுப்பிவைப்பதாக நம்மிடம் கூறியிருக்கிறார்.

ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

=====================================================
பிற்சேர்க்கை :

இந்த பதிவை பப்ளிஷ் செய்துவிட்டு, நம் ரைட்மந்த்ரா ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்யவேண்டியவற்றை ஆராய்ந்துகொண்டிருந்தபோது நண்பர் ஹரி ஆனந்த் அவர்கள் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று கண்ணில் பட்டது. தமிழகம் வந்துள்ள அருணிமா சின்ஹா கரூரில் ஒரு பள்ளியில் நேற்று பேசியது பற்றிய செய்தி அது .

தலைப்பு என்ன தெரியுமா?

தூங்கும் போதும் இலக்கை நினைக்கணும் : எவரெஸ்ட் சிகரம் ஏறிய மாற்றுத்திறனாளி “பளீச்’

How eezzz itttt?
=====================================================

=====================================================
Also check :
சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

12 thoughts on “அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

  1. யாருக்கு எது கொடுத்தால் அதன் பலனை முழுவதுமாக உணர்வார்களோ அவர்களுக்கு அதை தக்க தருணத்தில் தரும் போது கண்கள் பேசும்
    ஹிந்தி எப்படி கத்துக்க போறீங்க…எனக்கும் அதான் மீது ஆர்வம் உண்டு
    நானும் வரலாமா

  2. சுந்தர்ஜி,

    You are really very great sundarji ,

    தேனீக்களை போன்ற சுறு சுறுப்புடன் ,போராடும் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

    வாழ்க்கையில் ஜெயிக்கும் வரை தூக்கமாவது கீக்கமாவது. LITERALLY நான் தூங்கி ஒரு வருஷத்துக்கு மேல் ஆவுதுங்க. ////////////

    தாங்கள் தொலைத்தது தூக்கத்தை ////////////// ஆனால் கிடைத்தது மாபெரும் சாதனையாளர்களின் நட்பை .

    உங்கள் தொண்டு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  3. நம் தளம் இன்னொரு பரிமாணத்தில் சென்று கொண்டு இருக்கிறது அதற்க்கு இந்த சந்திப்பு மிக சிறந்த உதாரணம் ,என்னால் வர இயலவில்லை வருத்தமாக இருக்கிறது

    சில அரசியல் பிரச்சனையால் ஒரு தலைமுறையே நமது தேசிய மொழியை கற்றுக்கொள்ள முடியாமல் போய் விட்டது.அனைவருமே தங்கள் பிள்ளைகளுக்கு முடிந்தவரை அனைத்துமே கற்று கொடுங்கள் ஆனால் அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்

  4. நமது தளத்திற்கு கிடைத்த பெருமை அருணிமா சின்ஹா சந்திப்பு. இவர்களை போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். அப்படிப்பட்டவர்களை நாம்தான் தேடிப்போக வேண்டும். அதைதான் சுந்தர் நமக்காக செய்திருக்கிறார். மனதிற்கு புதிய இரத்தத்தை பாய்ச்சகூடிய அற்புதமான பதிவுக்கு நன்றி சுந்தர்.

    ஹிந்தி என்பது நம் நாட்டின் தேசிய மொழி. அதை கற்பதில் எந்த தவறும் இல்லை, இன்னும் சொல்லபோனால் நன்மைதான். தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டினால் எந்த மொழியும் கற்க முடியாது, ஆங்கிலம் உட்பட. நம்மில் பலருக்கு சோறு போடுவது ஆங்கிலம்தான், ஏனென்றால் அலுவலகங்களில் ஆங்கிலம்தான் இணைப்பு மொழி. இந்த இரண்டு மொழிகளையும் பழிக்காமல் தமிழின் பெருமையை நாம் பேசலாம். என்னுடைய இந்த கருத்து ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால், தளத்தில் முதல் பத்தியைமட்டும் வெளியிடலாம்.

    1. நான் ஹிந்தி கற்றுகொள்ளாமல் போனதற்கு காரணம் நானே தானே தவிர வேறு எவரும் அல்ல.

      ஆனால் மக்களை ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று சொன்ன அனைத்து அரசியல் தலைவர்களின் வீட்டு பேரக்குழந்தைகளுக்கும் ஹிந்தி தெரியும். ஹிந்தி தான் பள்ளியில் அவர்களுக்கு மொழி பாடம்.

      -சுந்தர்

  5. சாதனையாளர்களை தேடி நீங்கள் போவதும் அவர்களின் கருத்துகளை தெள்ள தெளிவாக பதிவதும் எங்களை போன்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் மிக்க மகிழ்ச்சி. உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  6. ஒரு மிகபெரிய சாதனையாளரை சந்திக்க போகிறோம் என்று அவரைபார்கும்வரை தெரியவில்லை…..தெரிந்ததும் நம்முடியவில்லை….எளிமை…வலிமை….மனதில் உறுதி…இவரா இவளவுபெரிய சதனைபடைதுவிட்டார் என்று நினைக்க தோன்றுகிறது….
    .
    எளிதில் கிடைபதற்கு அறிய ஒரு வாய்ப்பை எற்படுதிகொடுத்த நம் தளத்திற்கு மீண்டும் நன்றிகள்…
    .
    தாய்மொழி கண் போன்றது……பிறமொழி கண்ணாடிபோன்றது என்று சொல்லுவார்கள்….சில சமயம் கண்ணாடி எவ்வளவு அவசியம் என்பது சகோதிரியை பார்க்கும் மிகதெளிவாக தெரிந்துகொண்டேன்…..
    .
    கோதண்டரமரை ஆலவட்டம் செய்து தூங்கவைத்த நாம்…..பதிலுக்கு மார்கழிமாதம் முழுவதும் எழுப்பி பிராத்தனை செய்தோம்…..அதன் பலனாக அந்த ஆண்டவன் சமிபத்தில் எனக்கு ஒரு வெளிநாட்டுபயணம் வாய்ப்பை எற்படுதி கொடுத்துள்ளார்…..அதற்கும் நன்றிகள் சுந்தர்…

    மாரீஸ் கண்ணன்

  7. என் வாழ்வில் மறக்க முடியாத {24-ஜூன்-2013} நாளாக வாய்ப்பினை அளித்தமைக்கு சுந்தர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் .

    ஒரு சாதனையாளரை சந்திப்பதையே சாதனையாக படைத்த சுந்தர்ஜியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

    “பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போல” சுந்தர்ஜி உடன் இணைந்து இருப்பதில் பெருமை கொள்கிறேன் . நன்றி .

  8. அருமையான பதிவு !!!

    நமது வாசர்கள் சார்பாக சகோதரி அருணிமா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை மற்றும் பரிசை நாமே கொடுத்தது போல் உணர்கிறோம் !!!

    இதில் முழு மூச்சாக தம்மை ஈடுபடுத்திக்கொண்ட அத்துணை நல உள்ளங்களுக்கும் நமது தல வாசகர்கள் சார்பாக பாராட்டுதல்களும் நன்றிகளும் !!!

    அருனிமாவிர்க்கு
    அருணாச்சலேஸ்வரர் – பொருத்தமான பரிசு !!!

    மலை ஏறி சாதனை படைத்ததற்கு
    மலையே உருவாக உள்ள அந்த பரம்பொருள் உருவப்படம் பரிசு – அருமை !!!

    இளந்தலைமுறையினர் உள்ளத்தில் தன்னம்பிக்கை தீயை வளர்க்க வந்தவருக்கு
    தீயாய் விளங்கி பாவத்தை பொசுக்கும் அந்த ஜோதிச்சுடர் பரிசு !!!

    வாழ்க வளமுடன் !!!

  9. தேடல் உள்ள தேனிக்களுக்காக புது புதிதாக எத்தனை செய்திகள்.
    மாரிஸ் கண்ணன் சார், மனோகரன் சார் இருவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் முகத்தை பார்க்கும் போது அதில் எவ்வளவு சந்தோசம்.
    அருணாச்சலேஸ்வரர் தன்னை நாடி வந்ததை எண்ணி ஒரு கணம் அவருக்கு கண்களில் நீரே பெருகிவிட்டது. தாயை பிரிந்த ஆட்டுக்குட்டி தாயை பார்த்தவுடன் பாய்ந்து வந்து சுற்றி சுற்றி வருமே அது போல திரும்ப திரும்ப அந்த படத்தையே பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *