Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

print
மீபத்தில் நம்மிடம் பேசிய வெளியூர் நண்பர் ஒருவர், குடும்பத்தில், உத்தியோகத்தில், உறவுகளில், நட்பில் இப்படி எங்கு சென்றாலும் தாம் அவமதிக்கப்படுவதாகவும், இத்தனைக்கும் நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்தவனில்லை. சொல்லப்போனால் நான் வாழத் தெரியாதவன். நடிக்கத் தெரியாதவன். தில்லுமுல்லு செய்யத் தெரியாதவன். புறம் பேசத் தெரியாதவன். அவ்வப்போது உங்கள் பதிவுகளை படித்து ஆறுதல் அடைகிறேன். என் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து, இறைவன் தான் என்பதால் ஆன்மீகத்தின் மீது அளவற்ற ஈடுபாடு எனக்கு ஏற்பட்டுள்ளது. பல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எங்கு துவங்குவது எங்கு முடிப்பது என்று தெரியவில்லை. தினசரி ஏதாவது ஒரு நல்ல நூலை படிக்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் நீங்கள் அனுப்பிய சுந்தரகாண்டம் ஓரளவு நல்ல பலனை தந்துள்ளது. நல்லதை தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு பன்மடங்கு ஏற்பட்டுவிட்டது.  சுந்தரகாண்டம் ஏற்படுத்திய மாற்றம் தான் இது என எண்ணுகிறேன். நான் அடுத்து படிக்க ஏதாவது ஒரு நல்ல நூலை பரிந்துரைக்கமுடியுமா? என்று கேட்டார்.

அடுத்த சில நாட்களில் நாம் அவருக்கு ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ முழு தொகுப்பை வாங்கி அனுப்பி வைத்தோம். இவர் மட்டுமல்ல வாழ்க்கையில் விரக்தியுற்றோர், நம்பிக்கை இழந்தவர்கள், கடந்த காலத்தில் தவறுகள் பல செய்து தற்போது வருந்திக்கொண்டிருப்போர் என அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல் கண்ணதாசன் அவர்களின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூல் தான். சிலர் நினைப்பது போல இது மதப் பிரச்சார நூல் அல்ல. இது ஒரு வாழ்வியல் வழிகாட்டி. இந்த உலகத்தில் எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நூல். உங்களை அச்சுறுத்தும், தடுமாற வைக்கும் பல பிரச்னைகளுக்கு இதில் தீர்வு உண்டு.

Arthamulla Hindhumadham

நூலை படித்து அதன் கருத்துக்களை உள்வாங்கிய பின்னர், நிச்சயம் உங்களிடம் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உறுதி. நாம்  மாறினாலே பாதிக்கும் மேற்பட்ட பிரச்னைகள் தீர்ந்துவிடும். மீதமுள்ள பிரச்சினைகளை கையாள உங்களுக்கு பக்குவம் கிடைத்துவிடும்.

பலர் இன்று அனுபவிக்கும் துன்பத்திற்கு காரணம், கூடா நட்பு தான்.

மாணவப் பருவத்தில் நம்முடன் உட்காரும் நண்பனை பொறுத்து தான் நமக்கு மதிப்பெண்கள் கிடைக்கிறது.

வாலிபப் பருவத்தில் நம்முடன் பழகும் நண்பர்களை பொறுத்தே நமக்கு நல்ல வேலையும் சம்பளமும் கிடைக்கிறது.

அதற்கு பிறகு நம்முடன் பழகும் நண்பர்களை பொறுத்தே நமது எதிர்காலமே அமைகிறது.

கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலும், செழுமையிலும், மது அருந்தும்போது கம்பெனி கொடுப்பவர்களும் – நண்பர்கள் அல்ல. நாம் துன்பத்தில் இருக்கும்போது, கஷ்டத்தில் இருக்கும்போது உடனிருப்பவர்களே உண்மையான நண்பர்கள். நாம் தீய வழியில் செல்லும்போது நமக்கு நல்லது எடுத்துச் சொல்லி, தீயவற்றிலிருந்து தடுப்பவர்களே உண்மையான நண்பர்கள்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல் (குறள் 795)

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். உங்களுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா? இருந்தால்… நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தான்.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து நல்லவர்களின் சேர்க்கையின் அவசியத்தை கண்ணதாசன் வலியுறுத்தும் அத்தியாயத்தை பார்ப்போம்.

============================================================
‘துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்’ – கவியரசு கண்ணதாசன்

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

Kannadasan Solo N

ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

Kannadasan with Variyar

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

DSC02371

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.

சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.

நல்லது.

இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

`ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

`தீயவர்’ என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

அதற்கு எதிர்மறை என்ன?

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.

நன்றி : கவியரசு கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்! உதவிக்கரம் நீட்டுங்கள்!! 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!

கடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி!

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1

சரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன? திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

==========================================================

[END]

10 thoughts on “துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

 1. முன்பாதி மனிதன்….. பின்பாதி புனிதன் …..
  சரிபாதி.= கவிஞர் கண்ணதாசன்.

 2. எனக்கென்றே எழுதியது போல உள்ளது மிக்க நன்றி.

  கண்ணதாசன் அவர்கள் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவரது எழுத்தாற்றலையும் பாடல் வரிகளில் உள்ள ஆழத்தையும் கண்டு பல முறை பிரமித்திருக்கிறேன்.

  தியாகராஜன்

 3. கவியரசு மட்டுமல்ல புவிக்கும் அவரே அரசு …

  உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொன்ன மனிதன் …
  இல்லை… இல்லை புனிதன்

 4. அர்த்தமுள்ள இந்து மதம் நம்மை செம்மை படுத்தும் ….உண்மை …சிவாய சிவா

 5. What a great lines of Kaviyarasu Kannadasan. My father bought this book immly after release. But, i missed to read the book. I am very much interested to read it now. Thanks for sharing Sundar Sir.

 6. தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

  உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு

  அனுபவித்து கண்ணதாசன் எழுதியுள்ளார் …

 7. எவ்வளவு பெரிய வாழ்வியல் உண்மைகளை அனாயாசமாக சொல்லியிருக்கிறார் கவியரசர். மேலாடையை திருடி வைத்துகொள்ளும் பணக்காரர்களும் உண்டு என்பது சத்தியம். இதை அடிக்கடி என் அலுவலக நண்பர்களிடம் சொல்வதுண்டு.

  இந்த நூலைப்பற்றி நினைவூட்டியதற்கு நன்றி சுந்தர்.

 8. வணக்கம் சார்
  கவிஞர் அவர்களை புகழ வார்த்தைகளே இல்லை.அவர் புனிதன். அவர் எழுதிள்ள அர்த்தமுள்ள இந்து மதம் நம்மை செம்மை படுத்த மதத்தை தாண்டியுள்ள வாழ்வியல் ஆதாரங்களை நமக்கு தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறார்.
  நான் இன்னும் அந்த புத்தகம் வாங்கி விரைவில் படிக்க வேண்டும்.
  ஒரு பதிவுக்கு முன்னுரை அவசியம். ஒவ்வொரு பதிவிலும் மிக அழகாக அருமையாக முன்னுரை எழுதும் சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி.
  மேலும் அவர் இதில் கூறியுள்ள நான்கு வரிகள் (அதாவது ஒருவருடைய மாணவ பருவம் வாலிப பருவம் வாழ்க்கை பருவம் ) நண்பர்களை பற்றி அவர் அனுபவித்து கூறியுள்ள வரிகள் அருமை.
  துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்’என்று கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு அத்தியாயமே பல தடவை நாம் படித்து நம்மை புரிந்துகொள்ள, நம்மை மாற்றிக்கொள்ள உதவுகிறது என்றால் முழு புத்தகமும் படித்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்
  நன்றி சார்.

 9. கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் ஒவ்வொன்றும் energetic ஆக இருக்கும்

  பொன் மழை மிகவும் அருமையான transalation of கனகதாரா .

  நான் 1992 முதல் படிக்கிறேன். எவ்வளவு பண கஷ்டம் வந்தாலும் சமாளிப்பது பொன் மழை படிபதால் தான்.

  அர்த்தமுள்ள இந்துமதம் கொஞ்சம் படித்து இருக்கிறேன். full புக் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த பதிவை படித்த பிறகு ஏற்பட்டுள்ளது

  மிகவும் அருமையான பதிவு
  நன்றி
  உமா

 10. அர்த்தமுள்ள இந்து மதம் இந்த நூலை அனைவரும் படித்திருப்போம் .ஆனால் ஒரு ஒரு முறை படிக்கும் போதும் ஒரு புதிய சிந்தனையும் ,தெளிவும் , பிறப்பதை உணர முடியும் …

  சுய முன்னேற்றம் தொடரின் சுவையான பங்களிப்பு …

  வாழ்த்துக்கள் ஜி .
  -மனோகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *