Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் வாழ்வில் மலையப்பனும் மகாபெரியவாவும் புரிந்த அற்புதம்!

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் வாழ்வில் மலையப்பனும் மகாபெரியவாவும் புரிந்த அற்புதம்!

print
ரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 16 அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் பிறந்தநாளையொட்டி நாம் அளித்த பதிவு இது. இந்தப் பதிவை தயாரிக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. இப்போதாவது நம் தளத்திற்கு என்று தனி அலுவலகம். அப்போதெல்லாம் நாம் ஒரு நிறுவனத்தில் பணி செய்துகொண்டே மீதி நேரத்தில் தளத்திற்காக உழைத்தோம். இன்று இப்பதிவு நமது பெயரோ நமது தளத்தின் பெயரோ இன்றி முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் சுற்றிகொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் புதிதாக நம் தளத்திற்கு புதிதாக வந்துள்ள வாசகர்கள் எத்தனை பேர் இந்தப் பதிவை படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே மீள் பதிவு செய்கிறோம். ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கவும். அப்படி ஒரு கருத்துக்குவியல் இந்த பதிவு.

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!

ன்னையே அனுதினமும் துதித்து வந்த ஆனால் தன்னிடம் எதையுமே எதிர்பாராமல் வாழ்ந்து வந்த தன் உன்னத பக்தை இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்வில் அந்த ஏழுமலையானும் காஞ்சி மகாபெரியவாவும் நிகழ்த்திய நெஞ்சை உருகவைக்கும் நாடகம் இது.

“அன்புள்ள பிரசாத், ஆசிகள். உதாரணத் தம்பதிகளாக திகழ்ந்து வரும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் சதாசிவமும் தற்போது தீவிரமான பொருளாதார  நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஏதேனும் உதவி செய்யவேண்டும். ஏதாவது  திட்டம் வகுத்து அவர்கள் தங்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

MS S1979 ஆம் ஆண்டு வாக்கில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அப்போதைய செயல் அதிகாரியாக இருந்த பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களுக்கு காஞ்சி பரமாச்சாரியாரிடமிருந்தும் புட்டபர்த்தி சத்யா சாய்பாபாவிடமிருந்தும் மேற்படி தகவல் அடங்கிய தந்தி வந்தது.

ஹிந்து சமயத்தின் இருபெரும் சிகரங்களாக திகழ்ந்த இவர்களின் மேற்கூறிய வரிகள் எவரையுமே ஒருகணம் அசைத்துப் பார்த்துவிடும் எனும்போது பிரசாத் எம்மாத்திரம்? அதிர்ச்சியில் உறைந்தார். ஆனால், பிரசாத்துக்கு தந்தியை யார் அனுப்பியிருக்கிறார்கள் என்பதில் அதிர்ச்சியில்லை. அதில் கூறப்பட்டிருந்த விஷயம் தான் அதிர்ச்சியளித்தது.

“என்ன ஆச்சு எம்.எஸ். அம்மாவுக்கு… அதுவும் காஞ்சி பெரியவர் சாய்பாபா இரண்டுபேருமே தலையிடுற அளவுக்கு நிலைமை மோசமா?” மனம் பதைபதைத்தது.

அது மட்டும் இல்லை எம்.எஸ்.க்கு உதவி செய்ய ஏன் பிரசாத் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? பல கேள்விகள்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களது அபிமான பாடகிக்கு இப்படியொரு பிரச்னை என்றால் அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்.  ஆனால், எம்.எஸ். அவர்கள், தான் கேட்காமல் தானாக வரும் எந்த உதவியையும் பெறவிரும்பமட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே அல்லவா? யாரிடமும் எந்த உதவியும் பெற எம்.எஸ். அவர்கள் விரும்பாத  இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக ஏதேனும் செய்து, எம்.எஸ். அவர்களின்  நெருக்கடியை போக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதற்கு முன்பு திருமலை தேவஸ்தானம் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் பலவற்றை சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையை கையாள பிரசாத்தை தவிர பொருத்தமான ஆள் வேறு யாரும்  கிடையாது. எனவே தான் பிரசாத்திடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் காஞ்சி பெரிவர்.

M.S.Subbulakshmi-and-T.Sadasivam.சரி… எம்.எஸ். அம்மாவுக்கும் சதாசிவத்துக்கும் என்ன ஆச்சு?

உடனடியாக சென்னையில் உள்ள தனது நம்பிக்கைக்குரியவர்களை வைத்து பிரசாத் ஒரு ரகசிய விசாரணையில் இறங்கினார்.

அதில் அவருக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் : எம்.எஸ்.சுப்புலட்சுமி, சதாசிவம் தம்பதிகள் தங்களது கல்கி எஸ்டேட்டை விற்றுவிட்டு வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருக்கின்றனர் என்பதே. கல்கி பத்திரிக்கையை திரு.சதாசிவம் நடத்திவந்த காலகட்டம் அது. எதிர்பாராதவிதமாக பத்திரிக்கை நஷ்டத்தில் மூழ்க, தங்களது கடன்களை அடைக்க, இப்படியொரு முடிவை (கல்கி எஸ்டேட்டை விற்பது) அத்தம்பதிகள் எடுக்க நேர்ந்தது.

எம்.எஸ்.அம்மாவின் மிகப் பெரிய ரசிகரான திரு.பிரசாத்தை இத்தகவல் துயரத்தில் ஆழ்த்தியது.

கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே தனது அலுவலகத்தில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு நின்று, “ஹே…ஸ்ரீனிவாசா…. உன் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பக்தியுடன் உலகின் மூளை முடுக்குகளிலெல்லாம் சென்று பாடி வந்தவர் எம்.எஸ். அவர்கள். அவருக்கு தனது இறைபணியில் மிகவும் உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவந்தவர் சதாசிவம் அவர்கள்.”

“உலகம் முழுதும் எம்.எஸ்.அம்மா பல நிகழ்சிகள் நடத்தியிருக்கிறார். அவர் என்ன தொகை கேட்டாலும் கொட்டிக்கொடுக்க பலர் தயாராக இருந்தபோது, எனக்கு இவ்வளவு வேண்டும் என்று கேட்க்காமல், அவருக்கு என்ன தரப்படுகிறதோ அதைக்கொண்டு அமைதியாக மனநிறைவாக வாழ்ந்துவந்தவர் எம்.எஸ். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைத்த வருவாயை பெரும்பாலும் அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் பல்வேறு தர்ம காரியங்களுக்கே திருப்பி கொடுத்தவர். யாருக்கு வரும் இப்படி ஒரு மனது? அவருக்கு இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நீ என்ன செய்யப்போகிறாய் பாலாஜி?ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் ? இது உனக்கே சரியாகப் படுகிறதா?”

விஷ்ணு சஹஸ்ர நாம பதிவின் போது
விஷ்ணு சஹஸ்ர நாம பதிவின் போது

(1963 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் எம்.எஸ்.அவர்களின் குரலில் வெங்கடேச சுப்ரபாதத்தை வெளியிட்டனர். மணவாள மாமுனிகளின் சிஷ்யராக விளங்கிய காஞ்சிபுரத்தை சேர்த்த பிரதிவாதி பயங்கரம் அனந்தாச்சாரியார் என்பவரால் 14 ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது இந்த வெங்கடேச சுப்ரபாதம். இந்த பாடலின் விற்பனை மூலம் தனக்கு வரும் ராயல்டி அனைத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் வேத பாட சாலைக்கே கிடைக்கும்படி செய்துவிட்டார் எம்.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது.)

“சுவாமி… மானமே பெரிதென்று வாழும் உத்தம தம்பதிகள் அவர்கள். யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள். உன்னிடம் கூட. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீ எப்படி எம்.எஸ். அவர்கள் இனி சராசரி வாழ்க்கையை வாழ்வார் என்று எதிர்பார்க்கலாம்? எனக்கு உண்மையில் அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏழுமலையானே… நீ தான் தலையிட்டு உடனடியாக அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஏதேனும் உதவிடவேண்டும்!”

இப்படி ஸ்ரீனிவாசனிடம் மனமுருக வேண்டிக்கொண்டார் பிரசாத்.

அடுத்து ஒரு நொடியை கூட வீணாக்காது, உடனடியாக திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டினார் பிரசாத். கூட்டத்தில் எம்.எஸ். அவர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்று ஆலோசிக்கப்பட்டது.

ஒரு மித்த குரலில் அனைவரும் சொன்னது இதைத்தான். “சார்… எம் எஸ்.- சதாசிவம் தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை கண்டு நாங்கள் வருந்துகிறோம். உங்களுக்கே தெரியும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்கள் தான் நம் தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான். அவர் ஏற்கனவே நமது தேவஸ்தானத்தின் பல சிறப்புக்களை கௌரவங்களை பெற்றுவருகிறார். எங்கள் எல்லாருக்கும் அவரது இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ய விரும்பினாலும், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்றே நினைக்கிறோம். நாமாக எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது. மேலும் அறநிலையத்துறைக்கு நாம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்!” என்றனர்.

Playing-her-mother's-veena-in-1945

கோடிக்கணக்கான மக்களை தனது இசையால் மகிழ்விக்கும் இசையரசிக்கு உடனடியாக ஏதேனும் செய்தே தீரவேண்டிய ஒரு சிக்கலான சூழ்நிலையில் இப்படி பிரச்னை மேலும் சிக்கலாகிறதே… என்று பிரசாத் தவித்த சூழ்நிலையில்… ஏழுமலையான் தலையிட்டான்.

எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையில் ஏழுமலையான் எந்தளவு சம்பந்தப்பட்டுள்ளான் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

வணக்கத்திற்குரிய அந்த தம்பதிகளுக்கு உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்று மிகவும் மனமுடைந்த நிலையில் அன்று மாலை ஏழுமலையானை தரிசிக்க பிரசாத் செல்கிறார். வழக்கமாக பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்பு ஏழுமலையானை தரிசித்துவிட்டு செல்வது அவர் வழக்கம்.

ஏழுமலையானை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது நடந்த அந்த நிகழ்ச்சி இந்திய இசைத்துறையில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்ட ஒன்று.

அப்படி என்ன நடந்தது எப்படி நடந்து?

அவர் வெளியே வரும்போது பிரகாரத்தின் ஓரத்தில் எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை மனமுருக பாடிக்கொண்டிருந்தனர். எம்.எஸ். அவர்களை பற்றிய சிந்தனையிலேயே நடந்து வந்துகொண்டிருந்த திரு.பிரசாத், அவர்களை கடந்து செல்லும்போது, யாரோ தன்னை தடுப்பது போல ஒரு கணம் உணர்ந்து அங்கு நின்றார். அந்த பஜனைக் கோஷ்டி ஊனையும் உள்ளத்தையும் உருக்கும்படி பாடிக்கொண்டிருந்ததனர். இவருக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது.

ஒரு சில நிமிடங்கள் அவர்கள் பாடுவதை கேட்ட திரு.பிரசாத் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டார். மெலிதாக ஒரு புன்னகை புரிந்தார். அதை கண்டு ஏழுமலையான் புன்னகை புரிந்தான். ஏழுமலையான் புன்னகை புரிந்ததால் ஒட்டுமொத்த திருமலையும் புன்னகைத்தது. அது மட்டுமா நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் புன்னகை புரிந்தன.

அந்த புன்னகை தான் எம்.எஸ். அவர்களின் பிரச்னையை தீர்க்க உதவியதோடல்லாமல், இந்திய கிளாசிக்கல் இசை வரலாற்றில் ஒரு அற்புதமான வரலாற்றை செதுக்கியது. எம்.எஸ். அவர்களுக்கு ‘பாரத் ரத்னா’ கிடைக்கவும் காரணமாக அமைந்தது.

Maha Swami

அடுத்த நாள் காலை, பிரசாத் காஞ்சி புறப்பட்டார். அங்கு நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகா பெரியவரை சென்று தரிசித்தார்.

அவர் முன்பு பவ்யமாக பணிந்து “சுவாமி… எம்.எஸ். அம்மாவை பற்றிய தங்கள் தந்தி கிடைத்தவுடன், எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனடியாக தேவஸ்தானத்தின் அவசர கூட்டத்தை கூட்டி உறுப்பினர்களிடம் ஆலோசனை கேட்டேன். எந்தவொரு உருப்படியான யோசனையும் தோன்றவில்லை. மிகுந்த மன சஞ்சலத்துடன் மாலை எழுமலையானை தரிசிக்க சென்றேன். நான் வெளியே வரும்போது எங்கிருந்தோ வந்த ஏழை பக்தர்கள் சிலர் பிரகாரத்தில் அமர்ந்தபடி அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது அபாரமான குரல் வளமை மற்றும் நேர்த்தியான இசையால் வயப்பட்ட நான் ஏனோ தெரியவில்லை அதுவரையில் இருந்த குழப்பம் நீங்கப் பெற்றேன். அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்களுக்கு உதவிட ஒரு அபாரமான திட்டம் தோன்றியது. உடனே உங்களை சந்தித்து ஆலோசித்து செயல்படுத்த வந்திருக்கிறேன்!” என்றார்.

பரம்பொருளுக்கு தெரியாதா என்ன நடந்தது என்ன நடக்காப்போகிறது பிரசாத் என்ன தன்னிடம் சொல்லப் போகிறார் என்று.

இருப்பினும் எதுவுமே தெரியாதவர் போல, நீ மேலே சொல்லு என்பது போல சைகை செய்தார் காஞ்சி முனிவர்.

பிரசாத் தொடர்ந்தார் “ஏழுமலையான் மீது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அற்புதமான கீர்த்தனைகளை அன்னமாச்சாரியா இயற்றியிருக்கிறார். அவற்றில் ஒரு சில தான் ஒலி வடிவில் வெளிவந்துள்ளன. இன்னும் வெளியே வரவேண்டிய பல மாணிக்கங்கள் அதில் உள்ளன. தேவஸ்தானம் இதற்கு முன்பு அவற்றை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அது முழுமை பெறவில்லை.”

“என்னுடைய திட்டம் என்னவென்றால், திருமலை தேவஸ்தானம் சில அரிய கீர்த்தனைகளை அடையாளம் கண்டு, எம்.எஸ். அவர்களை தேவஸ்தானம் சார்பாக நான் சென்று சந்தித்து தேவஸ்தானதிற்காக அந்த கீர்த்தனைகளை பாடித்தரும்படி கேட்டுக்கொள்ளப்போகிறேன். இதுவரை தியாகராஜரின் கீர்த்தனைகளை தான் எம்.எஸ். அவர்கள்  பாடியிருக்கிறார்கள். அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளை அல்ல.”

MSB

“என்னுடைய திட்டத்திற்கு நிச்சயம் எம்.எஸ். அம்மா ஒத்துழைப்பார்கள். திருமலைக்கு விஜயம் தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அந்த இசைத்தட்டுக்களை விற்பதன் மூலம் தேவஸ்தானத்திற்கு எக்கச்சக்க வருவாய் கிடைப்பதோடல்லாமல், எம்.எஸ். அவர்களுக்கும் ராயல்டி மூலம் போதிய பணம் கிடைக்கும். இப்படி ஒரு வாய்ப்பு அந்த குடும்பத்திற்கு மறுபடியும் கிடைப்பது மிகவும் கடினம். எனவே எம்.எஸ். அம்மாவும் அதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.” என்றார் பிரசாத்.

பிரசாத் சொன்னதை கேட்டு மெலிதாக புன்னகைத்த மகா பெரியவா “பிரசாத், இறைவன் தன்னை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் எந்த விதத்தில் வேண்டுமானாலும் வெளிப்படுத்திக்கொள்வான். அவன் அந்தர்யாமி. உனக்கு முன் அந்த ஏழைப்பாடகர்களைப் போன்று தோன்றியது அந்த எழுமளையானாகக் கூட இருக்கலாம். அவர்கள் உன்னைத் தவிர வேறு யார் கண்களுக்கும் புலப்படாத அவன் உருவாக்கிய கண்கட்டு வித்தையாக கூட அது இருக்கலாம். ஏன் மனித வடிவம் எடுத்து வந்த கந்தர்வர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம். மொத்தத்தில் உன் மனக்குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து தெளிவான ஒரு வழியை காட்ட ஏழுமலையான் நடத்திய நாடகமாக கூட அது இருக்கலாம். நீ அந்த பகுதியை தாண்டிச் சென்றவுடன் அவர்கள் மறைந்து இருக்கலாம். யாருக்கு தெரியும்?” என்றார் மர்ம புன்னகை புரிந்தபடி.

(அப்போ நம்ம உம்மாச்சி  தாத்தாவும், ஸ்ரீனிவாசனும் நடத்திய நாடகமா அது ? பல பலே!)

பரமாச்சாரியார் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிரசாத்துக்கு பேச்சு மூச்சே வரவில்லை.

“இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்திற்கும் காரண காரியம் உண்டு. தனக்காக  எதையும் எதிர்பார்க்காமல் பல வருடங்களாக தொண்டாற்றி எம்.எஸ்.ஸுக்கு நடக்கும் அனைத்தையும் ஆண்டவன் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பானா என்ன? அவன் நடத்தும் நாடகத்திற்கு நம்மை கருவியாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே உண்மை. அறியாமையால் அவனை ஒன்றும் சொல்லாதே!”

சாட்சாத் அந்த ஆதிசங்கரரின் மறு அவதாரம் என்றே போற்றப்பட்ட மகா பெரியவரின் பாதங்களில் மீண்டும் விழுந்தார் பிரசாத்.

பிரசாத்தை ஆசீர்வதித்த பரமாச்சாரியார் “உன் யோசனை அற்புதமானது. எம்.எஸ்.ஸுக்கு உலகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்கள் அபிமான பாடகிக்கு ஒரு சிறு பிரச்னை என்றால் கோடி உதவிக்கு  ஓடிவருவார்கள். ஆனால், எம்.எஸ்.- சதாசிவம் தமபதிகள் மற்றவர்களை போல அல்ல. யாரிடமிருந்து எதையும் அவர்கள் பெறவிரும்பமாட்டார்கள். இதுவரையிலும் தங்களுக்கு தேவையானதை தாங்களே தான் சம்பாதித்துக்கொண்டார்களே தவிர, ஆண்டவனிடம் கூட அவர்கள் எதுவும் கேட்டதில்லை. எனவே அவர்களுக்கு உதவி செய்ய நீ விரும்புவது போல காட்டிக்கொள்ளாமல் இந்த திட்டத்தை அவர்களிடம் கொண்டு செல். நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை”

பரமாச்சாரியார் ஆசீர்வதிக்க காஞ்சி மடத்திலிருந்து வெளியே வருகிறார் பிரசாத்.

அதற்கு பிறகு காரியங்கள் மள மளவென நடக்க ஆரம்பித்தது. திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு அனைத்து மேற்படி திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஒரு பக்கம் கோவிலுக்கு வருவாய்… மறுபக்கம் ஆஸ்தான வித்வான் எம்.எஸ். அவர்களுக்கும் வருவாயை குவிக்க கூடிய திட்டம், மறுப்பக்கம் அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை வெளியே கொண்டு வரும் ஒரு உன்னத முயற்சி என்பதால் அப்போது திருமலை தேவஸ்தானத்தின் சேர்மனாக இருந்த, ராமேசன் என்பவர் இதற்கு உடனடி ஒப்புதலும் கொடுத்தார்.

ஒரு நாள் காலை, பிரசாத், ராமேசன் மற்றும் திருமலை தேவஸ்தானத்தின் இன்ன பிற உயரதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ். – சதாசிவம் தம்பதிகளின் வாடகை வீட்டுக்கு சென்றனர்.

முதலில் சதாசிவம் அவர்கள் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்றார். அவரிடம் தாங்கள் கொண்டுவந்திருந்த ஏழுமலையான் படத்தையும் பிரசாதத்தையும் கொடுத்து, வந்த நோக்கத்தை கூறுகின்றனர்.

“ஐயா.. நம் பாரம்பரியத்தின் பெருமையையும்  கட்டிக்காக்க திருமலை தேவஸ்தானம் எடுத்து வரும் அனைத்து முடிவுகளையும் நீங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பங்காக தற்போது அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை இசைவடிவத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். முதல் கட்டமாக 5 இசைத்தட்டுக்களை (ஒரு தட்டுக்கு 10 பாடல்கள்) வெளியிட முடிவு செய்திருக்கிறோம். எம்.எஸ். அவர்கள் தான் பாடித் தரவேண்டும்.”

சற்று யோசித்த சதாசிவம் அவர்கள், “முதற்கண், இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு கொடுக்க முன்வததற்கு நன்றி. ஆனால் பிரசாத் அவர்களே, எம்.எஸ். அவர்கள் தனக்கு பாண்டித்யம் உள்ள மொழியில் மட்டுமே பாடவிரும்புவார். தெலுங்கில் இதுவரை அவர் பாடியதில்லை. தியாகராஜரின் சில கீர்த்தனைகளை தெலுங்கில் அவர் பாடியிருந்தாலும் சிறு வயது முதலே அவர் அதை பயிற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அன்ன்மாச்சாரியாவின் கீர்த்தனைகள் அப்படி இல்லையே… இந்த வயதில் அவருக்கு அதை பயிற்சி செய்து பாடுவது கடினம். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஒரு வாரமாவது அவகாசம் வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் கூறும் 50 பாடல்களை பாடி முடிக்க ஒரு வருடமாவது அவகாசம் தேவைப்படும். இந்த வயதில் அவரை நாம் தொந்தரவு செய்வது சரியாக  இருக்காது. எனவே திருமலை தேவஸ்தானத்தின் இந்த அரிய வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்” என்றார்.

மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே பிரச்னை வந்து சேர, பிரசாத் மனமுடைந்தார்.

15அங்கே டேபிளில் இருந்த இவர் கொடுத்த ஏழுமலையான் படத்தை விரக்தியுடன் பார்ப்பதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.

அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தார்.

அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

“அடடா… உட்காருங்க… உட்காருங்க…” என்று பதறியபடி கூறிய எம்.எஸ். அங்கே இருந்த ஏழுமலையான் பாடத்தை பார்த்து புன்னகைத்தார்.

அதற்கு பிறகு நடந்தது உணர்சிக் காவியம்.

ஏழுமலையான் படத்தை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொண்டு பார்த்த இசைக்குயில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கண்கள் மூடி பிரார்த்தனை செய்தார். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி ஓடியது.

தனது தலையை அவனது திருப்பாதத்தில் வைத்து, “ஸ்ரீனிவாசா என்னை ஆசீர்வதிக்க இத்தனை தூரம் வந்தாயோ?”

அவர் அப்படி உணர்ச்சி போங்க கூறியதே மீராவின் பாடலை போல இருந்தது. என்ன ஒரு குரல், என்ன ஒரு பக்தி? மெய்சிலிர்த்தது அங்கிருந்த அனைவருக்கும்.

எம்.எஸ்.ஸின் அந்த செயல் சரணாகதி தத்துவத்தை பரிபூரணமாக அனைவருக்கும்  உணர்த்தியது. அந்த குரலுக்குள் தான் எத்தனை சோகம்…? இவருக்கு இப்படி ஒரு நிலையா? ஸ்ரீனிவாசா… என்று அனைவரும் சிந்தித்தபடி இருந்தார்கள்.

எம்.எஸ்.ஸின் பாடலை கேட்டப்படியே வளர்ந்த பிரசாத்துக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. இருப்பினும் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று அடக்கிக்கொண்டு நின்றார்.

சதாசிவம் தேவஸ்தான நிர்வாகிகள் வந்த நோக்கம் உட்பட நடந்த அனைத்தையும் தனது மனைவியிடம் எடுத்துக் கூறினார்.

“இது ஆண்டவனாக என்னை தேடி வந்து கொடுக்கும் வாய்ப்பு. இதற்காக எந்த ஒரு சிரமத்தையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஏழுமலையானுக்கு சேவை செய்ய கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நான் விடமாட்டேன்” என்றார் உறுதியுடன்.

அவரது மனவுறுதி கண்டு அனைவருக்கும் சிலிர்த்தது. நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், எம்.எஸ். அவர்களுக்கு ஏகப்பட்ட பாடல்களை கொடுத்து அவரை இந்த வயதில் ஒரேயடியாக சிரமப்படுத்தவேண்டாம்… அதற்கு பதில் அன்னாமச்சாரியாவின் கீர்த்தனைகளை கொண்டு முதலில் ஓரிரு தட்டுக்களை வெளியிடலாம்… பாக்கியை வேறு சில மகான்களின் கீர்த்தனைகளை எம்.எஸ். அவர்களுக்கு பரிச்சயமான சமஸ்கிருதத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளுடன் கணேச பஞ்சரத்னம், மதுராஷ்டகம், கீத கோவிந்தம், நாம் ராமாயணம், ஹனுமான் சாலீசா, லக்ஷ்மி அஸ்டோத்திரம், வெங்கடேச கரவலம்ப ஸ்தோத்திரம், கோவிந்தாஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம், துர்கா பஞ்சரத்னம், ரங்கநாத கத்யம், துவாதச ஸ்தோத்திரம், சிவாஷ்டகம் ஆகியவற்றை பாடி பதிவு செய்வது என்று முடிவானது.

Selections from Balaji ancharatnamala album cover page copyஇதற்கு பிறகு தான் முக்கியமான கட்டமே வந்தது. மேற்படி பாடல்களை பாட இசைக்குயிலுக்கு எவ்வளவு தருவது? இது பற்றிய சிந்தனை வந்ததுமே பிரசாத்துக்கு படபடப்பு தொற்றிக்கொண்டுவிட்டது.

அங்கு அவர்கள் வந்ததன் காரணமே அது தான் என்பதால் அனைவருக்கே சற்று படபடப்பாக இருந்தது.

“அம்மா… நீங்கள் ஏழுமலையானுக்கு பாட ஒப்புக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. மேற்கொண்டு நாம் தொடர்வதற்கு முன்பு, உங்களுக்கு தரவேண்டிய பணத்தை பற்றி பேச….” இவர் சொல்லி முடிப்பதற்குள் இசைக்குயில் குறுக்கிட்டார்.

“என்னது பணமா? ஏழுமலையானுக்கு நான் செய்யும் சேவைக்கு பணம் பெறுவதா? ஐயோ…கனவிலும் நான் அதை நினைத்துப் பார்த்ததில்லையே? எனக்கும் ஏழுமலையானுக்கு இடையே பணம் என்பதே கூடாது. ஒரு நையா பைசா கூட நான் இதற்கு பெறமாட்டேன்” என்றார் நா தழுதழுத்தபடி.

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வந்தது. “இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை. நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள்.”

இதற்கே இப்படி என்றால, உதவி செய்யத்தான் இந்த திட்டமே என்றால், நிச்சயம் ஒப்புக்கொள்ளவேமாட்டார்கள். பிரசாத்துக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. வியர்வை பெருக்கெடுத்தது.

Annamachariya keerthanasஏழுமலையான் மீது பாரத்தை போட்டுவிட்டு பிரசாத் ஆரம்பித்தார். “அம்மா.. நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சேவைக்கும் ஏழுமலையானுக்கும் இடையே நிச்சயம் நாங்கள் வரமாட்டோம். ஆனால் ஒன்றை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். திருமலை தேவஸ்தானம் இதை யாருக்கும் இலவசமாக தரப்போவதில்லை. திருமலையிலும் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இந்த இசைத்தட்டுக்களை விற்பதற்கு விரும்புகிறோம். இதன் மூலம் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும். அதில் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தரவிரும்புகிறோம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.”

“உங்களை போன்ற ஒரு உன்னதமான ஆத்மாவிடம் இருந்து இப்படி ஒரு சேவையை இலவசமாக பெற்றுகொண்டு நாங்கள் பொருளீட்டி பிற்காலத்தில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நாங்கள் விரும்பவில்லை. மேலும் தேவஸ்தானத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் ஏழுமலையானுக்கு சேவை செய்யும் சேவகனாகவும் நான் அவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவன் ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொன்றுக்கும் நான் அவனுக்கு பதில் சொல்லவேண்டும். மேலும் இப்படி தொகுப்பு வெளியிடப்படவேண்டும் என்பது அவன் விருப்பமே அன்றி எங்களுடையது அல்ல. ஆகையால் தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.”

“உங்களுக்கு மகன் போன்ற ஸ்தானத்தில் இருந்து நான்  சொல்கிறேன். ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவேண்டும்” என்றார்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருந்தது அவரது தீர்க்கமான வார்த்தைகள். அதை நிராகரிக்க எவராலும் முடியவில்லை. சில நிமிடங்கள் அனைவரும் மெளனமாக உணர்ச்சி பெருக்கோடு இருந்தனர்.

கடைசியில் எம்.எஸ். அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உடைத்தார். “ஏழுமலையான் விருப்பம் அதுதான் எனும்போது நான் என்ன செய்ய… உங்கள் வாய்ப்பை ஏற்றுகொள்கிறேன்” என்றார்.

பிரசாத் ஏழுமலையான் படத்தை நன்றிப் பெருக்குடன் பார்த்தார்.

மேலும் சில விவாதத்திற்கு பிறகு அனைத்தும் இறுதி வடிவம் பெற்றது.

இப்போது மற்றொரு முக்கிய கட்டம்.

ஆல்பத்திற்கு என்ன பெயர் வைப்பது?

உடனடியாக இசையரசியிடமிருந்து பதில் வந்தது “பாலாஜி பஞ்சரத்ன மாலா”

அடுத்து, எச்.எம்.வி. நிறுவனத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி உடனடியாக ரூ.4 லட்சம் எம்.எஸ்.அவர்களின்  பெயர்லும் ரூ.2 லட்சம் திரு.சதாசிவம் அவர்களின் பெயரிலும், ரூ.1 லட்சம் எம்.எஸ்.-சதாசிவம் தம்பதிகளின் மகள் ராதா விஸ்வநாதன் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. (அவரும் இந்த தொகுப்பை உருவாக்கும் முயற்சியில் பங்கெடுத்துக்கொண்டமையால்.)

மேற்படி தொகை வைப்புத் தொகையாக (FD) வைக்கப்பட்டு அவர்கள் விரும்பும்வரை அதிலிருந்து கிடைக்கும் வட்டி அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டது.

1998 ஆம் ஆண்டு பாரத் ரத்னா பெறும்போது
1998 ஆம் ஆண்டு பாரத் ரத்னா பெறும்போது

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுனுரி கிருஷ்ணமூர்த்தி கீர்த்தனைகளை வடிவமைத்து .இசையமைத்து தர, 1980 ஆம் ஆண்டு ‘பாலாஜி பஞ்சரத்னா மாலா’ வெளியிடப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் அதை வெளியிட்டார். இரண்டாம் தொகுப்பை திருமதி.இந்திரா காந்தி வெளியிட்டார்.

அதுவரை இந்திய இசை வரலாற்றில் இருந்த அனைத்து சாதனைகளையும் பாலாஜி பஞ்ச ரத்னா மாலா முறியடித்தது.

1998 ஆம் ஆண்டு எம்.எஸ். அவர்களுக்கு நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா தந்து கௌரவிக்கப்பட்டார். ஆனால் அதை பார்க்க சதாசிவம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு அவர் அமரரானார்.

எம்.எஸ். அவர்கள் மட்டும் இல்லையெனில், நமது மகான்களின் பல அற்புதமான கீர்த்தனைகளும் பாடல்களும் பரவாமலேயே போயிருக்கும்.

கோடிக்கணக்கனோர் இல்லங்களில் நித்தமும் சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்பிக்கொண்டிருந்த, தனது குரலாலும் இசையாலும் எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் 2004 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்து ஏழுமலையான் மலர்ப்பாதத்தை அடைந்தார்.

இன்று செப்டம்பர் 16  எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பிறந்த நாள்.

தனக்கு துன்பம் வந்த நிலையிலும் இறைவனிடம் எதையுமே எதிர்பாராமல்,சங்கீதமே தன் மூச்சு என்று வாழ்ந்து வந்த அந்த இசையரசியின் புகழ் காற்றுள்ள வரையில் இந்த பூமியில் நிலைத்திருக்கும்.

ஆக்கம் : ரைட்மந்த்ரா  சுந்தர், Rightmantra.com

==========================================================

சாமான்யர்கள் நமக்கெல்லாம் இந்த பதிவில் அடங்கியிருக்கும் நீதியையும் பாடத்தையும் பட்டியலிடவேண்டுமென்றால், அதற்கு  தனியாக ஒரு பதிவை அளிக்கவேண்டும்.

இருப்பினும், சற்று ஆழமாக சிந்தித்து உங்களுக்கு தோன்றும் நீதிகளை பட்டியலிடுங்களேன் பார்க்கலாம்!!!

==========================================================

நம் வீட்டில் ஏர்டெல் பிராட்பேண்ட் கடந்த பத்து நாட்களாக வேலை செய்யவில்லை. டேட்டா கார்ட் ஒன்றை வாங்கி தான் அனைத்தையும்  சமாளித்துவருகிறோம். புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. அதை மாற்றுங்கள் இதை மாற்றுங்கள் என்று ஏர்டெல் தரப்பில் நாள் கடத்தியது தான் மிச்சம். பேசாமல் இணைப்பை சரண்டர் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டோம். இந்த நிலையில் நேற்றிரவு இந்த பதிவை தயாரிக்க தட்டச்சு செய்ய உட்கார்ந்தபோது தலைசுற்றியது. டேட்டா கார்டின் வேகத்தில் நிச்சயம் இவ்வளவு பெரிய பதிவை தயாரிக்க முடியாது. இசைக்குயிலின் பிறந்த நாளான இன்று எப்படியும் பதிவளித்து விடவேண்டும் என்று நாம் விரும்பியதால் வேறு அவகாசமும் கிடையாது. ஏழுமலையான் மீது பாரத்தை போட்டு, மோடமை கனெக்ட் செய்தால், என்ன ஆச்சரியம் கடும் மழை நேற்று பெய்திருந்தபோதும் அற்புதமாக இணையம் வேலை செய்தது. அனைத்தும் முழு ஒத்துழைப்பு கொடுக்க சுமார் ஒன்றரை மணிநேரத்தில் பதிவை தட்டச்சு செய்துமுடித்தோம். காலை எழுந்தவுடன், புகைப்படங்களை திரட்டி பதிவை முழுமை செய்தோம். எல்லாம் மகாபெரியவாவின் கருணை; ஏழுமலையானின் அற்புதம் & எம்.எஸ்.அம்மா அவர்களின் ஆசி என்றே நாம் நம்புகிறோம்!!! ஏனெனில், இது போன்ற பதிவுகள் தயாரிக்க தங்கு தடையற்ற இணைய தொடர்பு எந்தளவு முக்கியம் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். (* சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் வந்த ஒரு ஃபார்வேர்ட் மின்னஞ்சலில் இருந்து நமது பிரத்யேக பாணியை சேர்த்து இந்த பதிவை தயார் செய்தோம்.)

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

==========================================================

உங்கள் உதவி இந்த தளத்திற்கு அவசியம் தேவை…! 

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Kindly inform us via mobile or email once you transfer your fund. Thanks.

Rightmantra Sundar| E : editor@rightmantra.com | M : 9840169215

==========================================================

Also check:

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *