பொதுவாக ஒரு பயணத்தை திட்டமிட்டுவிட்டால், அந்த பயணம் நல்லபடியாக நடந்து முடியும் வரை நமது கவனம் முழுக்க அந்த பயணத்தில் தான் இருக்கும். வேறு சிந்தனை எதுவும் மனதில் தோன்றாது. இந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று ஆதிசங்கரரின் ஜன்ம பூமியான காலடி மற்றும் தங்க நெல்லி மழை பொழிந்த ‘சொர்ணத்து மனை’ ஆகிய திவ்ய தேசங்களுக்கு பயணத்தை திட்டமிட்டுவிட்டதால், அட்சய திரிதியை அன்று இருந்து செய்ய வேண்டிய பணிகளை ஓரிரு நாட்கள் முன்னதாக நாமே முன்னின்று செய்து முடித்தோம். எஞ்சிய பணிகளை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தோம்.
அம்பத்தூரில் புதூர் செல்லும் சாலையில் உள்ள கள்ளிக்குப்பம் என்னும் ஊரில் ‘ஜகத்குரு வேத வித்யா பவனம்’ என்று ஒரு வேத பாடசாலை இருப்பதாகவும் அங்கு நேரில் சென்று பாடசாலையை பார்த்துவிட்டு அப்படியே அவர்களது தேவைகள் குறித்து விசாரித்துவிட்டு வரவேண்டும் என்றும் முகநூல் நண்பர் திரு.ஹாலஸ்ய சுந்தரம் என்பவர் கேட்டுகொண்டார். அவர் நம்மிடம் சொல்லி ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், நமக்கு தான் நேரம் கிடைக்கவில்லை.
இதற்கிடையே அட்சய திரிதியை வேறு நெருங்கியதால் மேற்படி பாடசாலைக்கு சென்று பார்த்துவிட்டு அப்படியே அவர்களுக்கு ஏதேனும் நம்மால் முடிந்த சிறு உதவியை செய்துவிட்டு வரலாமே என்று அட்சய திரிதியைக்கு சில நாட்களுக்கு முன்பு கள்ளிக்குப்பம் செல்ல முடிவு செய்தோம். பாடசாலையை நிர்வகிக்கும் திரு.சந்திரமௌலி ஸ்ரௌதிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாடசாலைக்கு நேரில் வரவிரும்புவதாக கூறினோம். “தாரளமாக வாருங்கள். சுற்றிப் பாருங்கள்” என்றார்.
முன்னதாக வீட்டிலிருந்து புறப்படும் முன், அவரிடம் எப்படி வருவது என செல்லும் வழியை விசாரித்து அறிந்து கொண்டோம்.
ஏப்ரல் 19, ஞாயிறு காலை கள்ளிக்குப்பம் புறப்பட்டோம். நீண்ட நெடிய பைக் பயணம். ஒரு கட்டத்தில் அவர் சொன்ன இடத்தை தாண்டி வந்துவிட்டோமோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஒரு வழியாக கள்ளிக்குப்பம் ரீச் ஆனோம். வெயில் வேறு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பாடசாலைக்கு வெறுங்கையை வீசிக்கொண்டு செல்ல மனமில்லை. மாணவர்களுக்கு ஏதேனும் வாங்கிச் செல்ல ஆசை. என்ன வாங்குவது என்று புரியவில்லை. அப்போது தான் அந்த யோசனை பளிச்சிட்டது. அங்கே ஒரு காய்கறிக் கடையில் வெளியே தர்பூசணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நல்ல பெரிய காயாக நான்கைந்து வாங்கிக்கொண்டோம். அவற்றை ஒரு பெரிய கோணியில் போட்டு வண்டியின் பின்னால் கட்டித் தந்தார்கள்.
பிறகு பாடசலை இருந்த தெருவுக்கு சென்றோம். ஒரே பெயரில் அங்கு இரண்டு தெருக்கள் இருந்தன என்பதால் பாடசாலையை கண்டுபிடிக்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. பாடசாலையில் திரு.சந்திரமௌலி ஸ்ரௌதிகள் நம்மை வரவேற்றார்.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த விஷயத்தை சொன்னோம். முதலில் வெந்தயம் போட்ட மோர் வந்தது. நல்ல தாகம் என்பதால் ஒன்றுக்கு இரண்டு டம்பளர் வாங்கி குடித்தோம். தர்பூசணியை சாஸ்திரிகளிடம் கொடுத்து “மாணவர்கள் எல்லாருக்கும் அப்புறம் பத்தை போட்டுக் கொடுத்துடுங்க மாமா….” என்றோம்.
“தர்பூசணியா? நல்லதா போச்சு. இன்னைக்கு மதியம் 2.00 மணிக்கு எல்லாரும் சிருங்கேரி கிளம்புறோம். ட்ரெயின்ல போகும்போது சாப்பிட சுலபமாயிருக்கும் என்றார். பாடசாலையை சுற்றிக் காண்பித்தார். மாணவர்கள் ஆங்காங்கே அமர்ந்து படித்துகொண்டிருந்ததுன் கண்கொள்ளா காட்சி.
பிறகு மீண்டும் மெயின் ஹாலுக்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பாடசாலை பற்றி விசாரித்துச சொல்லுமாறு நம்மை கேட்டுக்கொண்ட நண்பரை அலைபேசியில் அழைத்து அவரை திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளுடன் பேசவைத்தோம்.
பின்னர் கோ-சாலையை சுற்றிக் காண்பித்தார். நல்ல முறையில் கோ-சாலை பரமாரிக்கப்பட்டு வருகிறது.
விடைபெறுவதற்கு முன்பு மாணவர்கள் முன்பு திரு.சாஸ்திரிகளை கௌரவித்தோம். மாணவர்களிடம் சந்திரமௌலி சாஸ்திரிகள் இப்படி ஒரு பாடசாலையை மூலம் புரிந்துவரும் ஒப்பற்ற பணியை பற்றி எடுத்துக்கூறி, அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேதத்தை திறம்பட கற்று, பதிலுக்கு நாளை அவர்கள் நான்கு பேருக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஒரு சிறய நீதிக் கதையை அவர்களுக்கு சொன்னோம். ஆர்வமுடன் கேட்டனர்.
தளத்தில் பதிவு வெளியிட்ட பின்னர், பாடசாலைக்கு தேவைப்படும் உதவிகள் நண்பர்கள் & வாசகர்களின் துணையுடன் செய்யப்படும் என்று சாஸ்திரிகளிடம் உறுதி கூறியிருக்கிறோம்.
இரண்டு நாளில் அக்ஷய திரிதியை வருவதால் நல்லதொரு அறப்பணியாக, இந்த கோ-சாலைக்கு தீவனம் வாங்கித் தர விரும்புவதாக சொன்னோம். இவர்களுக்கு ரெகுலராக தீவனம் சப்ளை செய்யும் தீவனக் கடை பட்டரவாக்கதில் இருப்பதாகவும், அங்கு சென்று பணம் கட்டிவிட்டால் அவர்கள் தீவனம் இறக்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.
அவரின் கால்களில் வீழ்ந்து ஆசைபெற்றுக்கொண்டு, மாணவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நேரே பட்டரவக்கம் பயணம்.
(இந்த பாடசாலை பற்றிய விரிவான பதிவு தளத்தில் விரைவில் வரவிருக்கிறது!)
பட்டரவாக்கதில் அந்த கடையை கண்டேபிடிக்கமுடியவில்லை. கடையின் அலைபேசி எண் இருந்தாலும் அவர் குரல் புரிந்து கொள்ளமுடியாதபடி இருந்தது. எப்படியோ பட்டரவாக்கம் ஸ்ரீ ராகேவந்திர ஸ்வாமிகள் மிருத்திகா பிருந்தாவனம் தாண்டி சென்றவுடன் ஒருவழியாக கண்டுபிடித்தோம். குரு தான் வழிக்காட்டினார் என்று நினைக்கிறோம். (நாம் +2 படிக்கும்போது சென்னையை அடுத்த பட்டாபிராமில் இருந்த காலத்தில் அடிக்கடி பட்டரவாக்கம் பிருந்தாவனம் வரும் வழக்கமுண்டு! பழைய நினைவுகள் வந்தன!)
தீவனக்கடைக்கு சென்று தீவனமூட்டைக்கு பணம் கட்டிவிட்டு ரசீது பெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
அட்சய திரிதியையின் முதல் பணி ஓவர். தகுதியான ஒரு இடத்திற்கு நல்லதொரு உதவி செய்தாயிற்று.
அடுத்து வேலப்பன்சாவடி அருகே உள்ள நூம்பலில் உள்ள சிவாலயம் ஒன்றுக்கு தீவனமும் வைக்கோலும் பிரதி மாதம் ஏற்பாடு செய்துவருகிறோம். (இங்கே மகா பெரியவா 3 மாதங்கள் தங்கி பூஜை செய்திருக்கிறார். இந்த கோவிலைப் பற்றி தனியே ஒரு பதிவளிக்கிறோம்!) அங்கிருந்து ஃபோன் வந்தது. “வைக்கோல் காலி. வைக்கோல் வாங்கணும் சார்…” என்றார்கள். உடனே அங்கு சென்று வைக்கோலுக்கு பணம் கட்டிவிட்டு வந்தோம்.
மறுநாள் சென்று வைக்கோல் வந்ததை உறுதிப்படுத்திக்கொண்டோம். (ரைட்மந்த்ராவுக்கு தனியாக அலுவலகம் துவக்கியதிலிருந்து இந்த கோவிலுக்கும் பிரதி மாதம் 3 மூட்டைகள் தீவனம் + வைக்கோல் சப்ளை செய்துவருகிறோம்.)
இத்தனை பணிகளுக்கு இடையே காலடி பயணத்திற்கான ஏற்பாடுகளில் வேறு கவனம் செலுத்தவேண்டி வந்தது. நாம் புறப்படுவதற்குள் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்தோம்.
நங்கநல்லூரில் உள்ள ‘நிலாச்சாரல்’ என்னும் பார்வையற்ற மாணவியரின் இல்லத்தில் சென்ற ஆண்டு அந்த மாணவிகளுடன் அட்சய திரிதியை கொண்டாடியது நினைவுக்கு வந்தது. இந்த ஆண்டும் அங்கேயே கொண்டாடலாமே என்று கருதி நிலாச்சாரல் நிறுவனர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டு, நலம் விசாரித்துவிட்டு அட்சய திரிதியை முன்னிட்டு இந்த ஆண்டும் மாணவிகளுக்கு டின்னர் ஸ்பான்சர் செய்ய விரும்புவதாக கூறினோம்.
“ரொம்ப நல்லது சுந்தர்… ஆனா அட்சய திரிதியைக்கு ஏற்கனவே சிலர் மூணு வேளை சாப்பாடையும் ஸ்பான்சர் பண்ணிட்டாங்களே…” என்றார்.
நாம் நமது காலடி பயணத்தை பற்றி குறிப்பிட்டு “அட்சய திரிதியை அன்று நான் சென்னையில் இல்லை எனவே அதுக்கு முன்னாடியே டின்னர் கொடுத்துடலாம்னு இருக்கேன்” என்றோம்.
“அப்போ அன்னைக்கு முந்தின நாள் (20 ஏப்ரல்) வெச்சிக்கலாம்”
“இல்லே சார்… முந்தைய நாள் மாலை எனக்கு 6.00 மணிக்கு பஸ்.”
இருவரும் கலந்து பேசியதில் ஏப்ரல் 19 ஞாயிறு மாலை டின்னர் தருவது என்று முடிவானது. எப்போதும் போல டின்னருக்கு ஸ்பான்சர் செய்து, நாமும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்பினோம்.
ஆனால், இந்த முறை அவர்களை அருகிலேயே ஏதேனும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று டின்னர் வாங்கித் தர விரும்புவதாக கூறினார். நாமும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டோம். (பட்ஜெட் குறித்து கொஞ்சம் பயம் இருந்தது வேறு விஷயம்!)
நம்முடன் நண்பர் ராகேஷ் மற்றும் நாராயணன் ஆகியோர் வருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து நங்கநல்லூரில் உள்ள ஓட்டல் சாய் சூர்யாவில் டின்னர் தருவது என்று முடிவானது.
ஞாயிறு மாலை நாம் வீட்டிலிருந்து நங்கநல்லூர் புறப்பட, நண்பர் ராகேஷ் ஏற்கனவே வந்து காத்துக்கொண்டிருந்தார். அவரை அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்கும்படியும் அதற்குள் நாம் வந்துவிடுவதாகவும் சொன்னோம்.
சரியாக 7.30 மணிக்கெல்லாம் நங்கநல்லூர் சென்றுவிட்டோம். சிறிது நேரத்தில் நண்பர் நாராயணனும் வந்துவிட்டார். திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்து நாம் வந்துவிட்ட விஷயத்தை தெரிவித்தோம்.
சரியாக ஐந்து நிமிடத்திற்கெல்லாம் மாணவிகள் அனைவரும் வந்துவிட்டனர். அனைவரிடமும் நலம் விசாரித்தோம்.
மேலே ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் தான் டின்னர். ஏ.சி. ஹாலில் அனைவரும் ஒரு நீளமான டேபிளில் அமர்ந்தோம்.
மாணவிகள் அவரவர்க்கு பிடித்தமான ஐட்டங்களை ஆர்டர் செய்யத் துவங்கினர்.
அனைவருக்கும் டின்னர் சொல்வார்கள். ஒரு டின்னர் அதிகபட்சம் ரூ.150 அல்லது ரூ.200/- இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ராதாகிருஷ்ணன் அவர்கள் “எல்லாரும் அவங்கவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செய்து சாப்பிடட்டும்” என்றார்.
அவர்கள் ஆர்வமுடன் ஆர்டர் செய்ய துவங்கிவிட்ட நிலையில், “எவ்ளோ பில் வந்தாலும் சமாளிப்போம்…” என்று உள்ளுக்குள் சமாதானப்படுத்திக்கொண்டோம்.
பார்மல் டின்னர் துவங்கும் முன், எழுந்து நின்று அனைவரிடமும், “இந்த ட்ரீட் எதற்கு தெரியுமா?” என்றோம் மாணவியரிடம்.
“நீங்களே சொல்லுங்க சார்!” என்றார்கள் அனைவரும்.
“ஒன்னு அக்ஷய திரிதியைக்காக. அப்புறம் உங்க ஹோம்ல இருக்குற விஜயசாந்தி கொரியாவுல நடந்த INCHEON 2014 – ASIAN PARA GAMES கலந்துகிட்டு வெண்கலப் பதக்கம் வாங்கினாங்க இல்ல… அதுக்கும் சேர்த்து!!”
(இந்த இல்லத்தில் உள்ள விஜயசாந்தி என்னும் பார்வையற்ற மாணவி கொரியாவில் நடந்த சர்வதேச ஜூடோ போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் பெற்று திரும்பியிருக்கிறார்!).
“தேங்க்ஸ் அண்ணா…” என்றனர் அனைவரும்.
“அப்புறம் கலக்டரம்மா எப்படி படிக்கிறீங்க?” “ரேவதி எப்படி இருக்காங்க….??” “விஜயசாந்தி கடைசீயா உங்கள்ள யாருக்கு குத்துவிட்டாங்க?” இப்படியே ஜாலியாக மாணவிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம்.
சென்ற ஆண்டு அட்சய திரிதியை முன்னிட்டு நாம் அவர்களுடன் செலவிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தோம்.
மாணவியருடன் சேர்த்து நாமும் சாப்பிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை.
அனைவரும் இறுதியில் ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு பில்லை செட்டில் செய்துவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். நண்பர்கள் ராகேஷ் மற்றும் நாராயணன் இருவரும் நம் நிலைமையை உணர்ந்து பில் தொகையில் கொஞ்சம் பகிர்ந்துகொண்டனர்.
ராதாகிருஷ்ணன் நமக்கு நன்றி தெரிவித்தார். இன்னொரு நாள் இல்லத்துக்கு வருவதாக கூறி விடைபெற்றோம்.
நண்பர்கள் இருவரும், இது தங்களுக்கு ஒரு புதிய மறக்க முடியாத அனுபவம் என்றனர்.
இரண்டாவது பணியும் நல்லபடியாக முடித்தாயிற்று.
அடுத்த நாள் திங்கள் காலை மேற்கு மாம்பலம் கோசாலையில் தீவனம் இறக்க வேண்டி, லேக்வ்யூ ரோட்டில் நாம் வழக்கமாக தீவனம் வாங்கும் சுயம்புதுரை தீவனக்கடைக்கு சென்று இரண்டு மூட்டை தீவனத்திற்கான பணத்தை கட்டிவிட்டு சரியாக அடுத்த நாள் தீவனத்தை இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டோம்.
எப்போது தீவனத்தை ஆர்டர் செய்தாலும் கடையில் இருப்பவர் தீவனத்தை கலந்து எடைபோட்டு கோணிப்பைகளில் நிரப்பி, ட்ரை சைக்கிளில் கொண்டு போய் கோவிலில் வைக்கும் வரை உடனிருப்போம். ஆனால் இந்த முறை அதற்கு நேரமிருக்கவில்லை. எனவே பசுமடத்தை பார்த்துக்கொள்ளும் பாலாஜிக்கும் ஃபோன் செய்து விபரத்தை கூறி, “நாளைக்கு அக்ஷய திரிதியை. மறக்காம நாளைக்கு வர்ற மூட்டையில இருந்து தீவனத்தை போடுங்க…!” என்று கேட்டுக்கொண்டோம். நிச்சயம் செய்வதாக சொன்னார்.
(* கோ-சம்ரட்சணம் உள்ளிட்ட தளத்தின் கைங்கரியங்களுக்கு தொடர்ந்து கைகொடுத்து வரும் வாசகர்கள் இருந்தாலும், தளம் தொடர்ந்து தொய்வின்றி தொடர உதவிடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இது போன்ற அறப்பணிகளின் பலன் கிடைக்கவேண்டும் என்பதால் நம் தளத்திற்கு கிடைக்கும் விருப்ப சந்தாவிலிருந்தும் இது போன்ற கைங்கரியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் செலவிடப்படுகிறது. ஆகையால் தான் தற்போது இரண்டு ஆலயங்களில் கோ-சம்ரட்சணம் செய்து வருகிறோம். நன்றி!)
அடுத்த பணியும் ஓவர். இன்னும் ஒரே ஒரு வேலை பாக்கி. கிளிகளின் தந்தை சேகர் அவர்களை சந்திப்பது. ஏனெனில் சென்ற அட்சய திரிதியை அன்று அவரை சந்தித்து அவருக்கும் கிளிகளுக்கும் ஏதோ நம்மால் இயன்ற உதவிகளை செய்தது நினைவிருக்கலாம்.
சேகர் அவர்களை சந்திக்க மாலை சென்றால் தான் சாத்தியம். ஏனெனில் கிளிகளுக்கு அரிசி வைத்துவிட்டு, கீழே காவல் இருப்பார். மற்ற நேரத்தில் அவர் தனது காமிரா சர்வீஸ் பணியில் இருக்கக்கூடும். கிளிகளுக்கு போக அவர் அதற்கு ஒதுக்குவதே கொஞ்ச நேரம் தான். அந்த நேரத்தில் நாம் அவரை தொந்தரவு செய்வதில் நியாயமில்லை.
அலுவலகத்துக்கு வந்த மிச்ச சொச்ச வேலைகளை முடித்துவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் கண்டிப்பாக புறப்பட்டுவிடவேண்டும். வீட்டிலிருந்து சுமார் 4.00 மணிக்கு கிளம்பிவிடவேண்டும். நேரே சேகர் அவர்களை போய் ராயப்பேட்டையில் பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து கோயம்பேடு. கோயம்பேட்டில் ஆம்னி பஸ் நிறுத்தத்தில் மாலை சரியாக 6.00 மணிக்கு பேருந்து.
இதற்கிடையே புதுவையிலிருந்து நண்பர் சிட்டி நம்முடன் காலடி பயணத்தில் இணைந்துகொள்வதற்காக அலுவலகம் வந்திருந்தார். அட்சய திரிதியை பற்றிய சிறப்பு பதிவை அளித்துவிட்டு நாம் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது மணி 2.30 pm!
இரண்டு நாள் பயணத்திற்கு ஏற்கனவே ஓரளவு அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டாலும் வீட்டுக்கு போய் அனைத்தையும் செக் செய்து பேக் செய்து கிளம்புவதற்கு எப்படியும் 4.30 ஆகிவிடும். வேறு வழியில்லை. ஆட்டோ ஆட்டோ ராஜா எனப்படும் கால் ஆட்டோவை புக் செய்தோம்.
வீட்டில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டு ஆட்டோவில் ராயப்பேட்டை புறப்பட்டோம். முதலில் கோபாலபுரம் அமுதம் சூப்பர் மார்கெட் பயணம். அங்கே இட்லி அரிசி சுமார் 10 கிலோ வாங்கிக்கொண்டோம். பின்னர் சேகர் அவர்களின் வீட்டுக்கு உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்புகள் ஒரு ஒரு கிலோ வாங்கிக்கொண்டோம்.
சேகர் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது மணி 5.00 இருக்கும். கிளிகள் வரத் துவங்கும் நேரம். அந்த நேரத்தில் அவர் யாரையும் மேலே அனுமதிக்கமாட்டார். அவரும் கீழே இறங்கி வந்துவிடுவார்.
“என்ன சுந்தர் லேட்டா வர்றீங்க?? சரி சரி வாங்க.. சீக்கிரம் மேலே போகலாம். கிளிங்கல்லாம் வர்ற நேரம்” என்றபடி மேலே அழைத்துச் சென்றார்.
நமது காலடி + மதுரை பயணத்தை பற்றி எடுத்துக்கூறி, “போன வருஷம் அக்ஷய திரிதியை அன்னைக்கு உங்களை சந்திச்சேன். இந்த வருஷம் மிஸ் பண்ண விரும்பலை. உங்களுக்கும் கிளிகளுக்கும் ஏதாவது வாங்கிகொடுத்துட்டு அப்புறம் காலடி போகணும்னு முடிவு பண்ணினேன் சார்…”
பரபரப்பிலும் உதவ விரும்பும் எண்ணத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த இடம் தொடர்பாக கடும் பிரச்னையில் இருப்பதாகவும், வாடகை வீடு என்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் நாளையே காலி செய்யவேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது, அத்தனை கிளிகளும் உணவின்றி ஏமாந்துபோகுமே என்றும் தனது கவலையை பகிர்ந்துகொண்டார். மதுரையில் மீனாட்சியம்மனிடம் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
உடனே, பையிலிருந்த பலன் தரும் பதிகங்கள் புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, இடரினும் தளரினும் பதிகத்தை பற்றி கூறி, “நீங்க தொடர்ந்து இந்த பதிகத்தை படிச்சிட்டு வாங்க… உங்க பொருளாதார பிரச்சனைகள், இட பிரச்சனைகள் உட்பட எல்லாம் தீர்ந்துபோகும் சார்” என்றோம்.
‘வேண்டாம் சார்… ‘ என்று எங்கே மறுத்துவிடுவாரோ என்று பயந்தோம். ஆனால், அவர் பெரியமனதுடன் நமது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த நூலை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.
நூலை பிரித்து, இடரினும் தளரினும் பதிகம் இருக்கும் பக்கத்தை காண்பித்து, “இதோ இந்த பக்கம் தான் சார். இந்த மூன்று பக்கமும் தினமும் படிச்சிட்டு வாங்க… நிச்சயம் அற்புதம் நடக்கும்!” என்றோம்.
தற்போது இந்த பதிவை டைப் செய்துகொண்டிருக்கும் நேரம் தொடர்புகொண்டு “என்ன சார் அந்த பதிகத்தை படிக்கிறீங்களா? எத்தனை முறை படிச்சீங்க?” என்று கேட்டோம். தினமும் படித்து வருவதாக கூறினார். ஆனால் முன்னேற்றம் எதுவுமில்லை. நாளுக்கு நாள் பிரச்சனைகள் முற்றிவருகிறது. என்னுடிய காமிரா சர்வீஸ் பணி வேறு டல்லாகிவிட்டது. அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“சார்… நம்பிக்கை இழந்துடாதீங்க…. ப்ளீஸ்…. எனக்காக, நான் சொன்ன வார்த்தைக்காக நீங்க அந்த பதிகத்தை விடாம படிச்சிட்டு வாங்க.. நிச்சயம் அற்புதம் நடக்கும்” என்றோம்.
“மகாதேவா… உன்னை நம்பி அவரிடம் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்று உறுதி கூறியிருக்கிறேன். உன் அருளுக்கு பாத்திரமாக எங்களுக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் சேகர் அவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. அது உனக்கும் தெரியும். அவருக்கு இருக்கும் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவரது தொண்டு சிறக்க நீ தானப்பா உதவிடவேண்டும்”
சேகர் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆட்டோவில் மீண்டும் ஏறி, கோயம்பேடுக்கு விரைந்தோம். இடையே பஸ் டிரைவரிடமிருந்து போன். “எங்கேயிருக்கீங்க… எப்போ வர்றீங்க… இன்னும் பத்து நிமிஷத்துல பஸ்ஸை எடுத்துடுவோம்…” என்றார்.
“சார்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பக்கத்துல தான் இருக்கோம். இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவோம்” என்றோம். சொன்னபோது நாம் இருந்தது நெல்சன் மாணிக்கம் சாலையில்.
ரீச் ஆகும்போது, பேருந்து நமக்காக காத்திருந்தது. அனைவரும் வந்துவிட்டார்கள். நாம் தான் பாக்கி.
“என்ன சார் டயத்துக்கு வரக்கூடாதா?” என்று அர்ச்சனை கிடைத்தது. தவறு நம் மீது என்பதால் அவரிடம் “ஸாரி” சொல்லிவிட்டு பேருந்தில் நாமும் நண்பர் சிட்டியும் அமர்ந்தோம். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
எப்படியோ திருவருள் துணைக்கொண்டு அட்சய திரிதியையை முன்னிட்டு அன்னதானம், கோ-சம்ரட்சணம், பட்சி சம்ரட்சணம் உள்ளிட்ட அறப்பணிகளை நம் சக்திக்குட்பட்டு செய்தாகிவிட்டது.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக,
ஆழ்க தீயது எல்லாம், அரன் நாமமே
சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!
ஞானக்குழந்தை திருஞானசம்பந்தர் பாடிய இந்த ஒரு பாடலில் தான் எத்தனை எத்தனை பொருள்!
(* இந்த பதிவை தயார் செய்ய நாம் எடுத்துக்கொண்ட நேரமும் முயற்சிகளும் உங்களுக்கு புரிந்திருக்கும். நேரமின்மை காரணமாக இப்படி நாம் செய்த அறப்பணிகள் குறித்த எத்தனையோ பதிவுகளை அளிக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே தளத்தில் நாம் பதிவு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் விஷேட நாட்களில் நடைபெறும் இது போன்ற அறப்பணிகள் அது தானாக நடைபெற்றுகொண்டிருக்கும் என்பதை வாசகர்கள் உணர்ந்தால் போதும்!)
=============================================================
Also check :
அட்சய திரிதியை – புனித நன்னாளில் என்ன செய்ய வேண்டும்? A COMPLETE GUIDE!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
அட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்!
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
=============================================================
[END]
இப்பதிவைப் படிக்கும் பொழுது கடிகாரத்தைப் பார்த்து நீங்கள் ஓடுகிறீர்களா?……………….அல்லது உங்களைப் பார்த்து கடிகாரம் சுற்றுகிறதா என வியப்பாக இருகிறது. தங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
காலடி பயணத்திற்கு முன் நீங்கள் செய்த செயல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
வேலையில் இருக்கும் போது இருந்ததை விட பல மடங்கு உழைப்பு தளத்திற்கு செலவு செய்கிறிர்கள்.
எல்லா புண்ணியமும் தங்களுக்கு கிடைக்கட்டும்.
வேத பாடசாலை மாணவர்கள் சிரித்த முகத்தை பார்க்கும் போது நமக்கும் அந்த சந்தோசம் தொற்றி கொள்கிறது.
தொடரட்டும் உங்கள் பணி.
நண்பர் சுந்தர் அவர்களுக்கு,
மிகவும் நீண்ட பதிவு. ஆனால் படிக்க படிக்க முகவும் சுவாரஸ்யம்.
நிலாச்சாரல் அமைப்பு மக்களுடன் டின்னர் மறக்க முடியாதது. நண்பர் ராகேஷ்க்கு என் வணக்கம் இந்த நேரத்தில்.
நண்பர் சுந்தரின் சேவை தொடர என் வாழ்த்தக்கள்.
நன்றி
நாராயணன்.
மிக …. நீண்ட பதிவு. படிக்க படிக்க பரவசம்.
அட்சய திரிதியை முன்னிட்டு தாங்கள் செய்த அனைத்து அறச் செயல்களும் வியக்க வைக்கிறது.
வேதம் படிக்கும் மாணவர்களைப் பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது
நிலாச்சாரல் மனைவிகளைப் பார்க்கும் பொழுது எனக்கு 2013 தீபாவளி கொண்டாட்டத்தில் அவர்களுடன் ஸ்பென்ட் செய்த நாள் நினைவுக்கு வருகிறது. மாணவி விஜய சாந்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கிளிகளின் தந்தை சேகர் அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் முடிவுக்கு வரும். நான் மதுரை சென்ற பொழுது மீனாக்ஷி அம்மன் சன்னதியில் கிளி சேகருக்காக இறைவியிடம் பிரார்த்தனை செய்தேன்.
தங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு
நேர்மையோடு பிறருக்கு நன்மை செய்து பயன் உடையவராக வாழ்பவர்களின் பண்பை உலகத்தார் பாராட்டுவர்.
நன்றி
உமா வெங்கட்
நம் தளத்திற்கு தங்கள் ஆற்றும் பணி மிகவும் கடினமானது . தங்களின் எந்த பணிக்கு நாங்கள் என்றும் தலை வணங்குவோம்.
வணக்கம்…….. நம் தளம் மூலம் அக்ஷய திரிதியையை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணிகளை அறிந்து மகிழ்ந்தோம்…….. தங்களின் தொண்டு மென்மேலும் சிறக்க எங்களின் உளம் கனிந்த வாழ்த்துக்கள்…..
படிக்க படிக்க பரவசம். இது தான் “அட்சய திருதியை” சிறப்பு பதிவு. தாங்கள் ஒரே ஆளாக இவளோ பணிகளை செய்ததை பார்க்கும் போது, தங்களின் மேல் இன்னும் ஒரு வியப்பு தோன்றுகிறது.
தங்களோடும், திரு நாராயணன் அவர்களோடும் சேர்ந்து நிலாச்சாரல் அமைப்போடு இருந்த நேரம் – மிக மிக நெகிழ்வான தருணம்.
நம் த(ல)ள அறப்பணிகள் தானாக நடைபெறும் என்பதை புரிந்து கொண்டோம். பாட சாலை பற்றிய விரிவான பதிவை நோக்கி காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி அண்ணா..
வணக்கம் சுந்தர்.படிக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது எப்படி சமாளிதீர்களோ. வாழ்த்துக்கள்.திரு சேகரின் இடப்ரச்சனையில் நல்ல முடிவு வரும் என்ன நம்புவோம். சொக்கநாதனும்,மீனாக்ஷி மனது வைப்பார்கள். மாணவி விஜயசாந்திக்கு வாழ்த்துக்கள். நல்ல மனது திட்டமிட்டு வேலைகளை செய்து இருகிறீர்கள்.நன்றி.
காலை நேர சூரியன் வெளிச்சத்தில் கள்ளம் கபடமில்லாத சிரிப்புடன் வேதம் படிக்கும் குழந்தைகளின் புகைப்படம் அருமை, அற்புதம்.
நெற்றி நிறைய திருநீறு, உச்சிக்குடுமி, முப்புரி நூல் அணிந்த மாணவர்கள் அழகோ அழகு.
வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து கன்றுக்குட்டியுடன் உறவாடும் சுந்தரின் நேசம் ஒரு கவிதை.
மனதுக்கு சற்றே கவலையை உண்டாக்கும் கிளிகளின் தந்தை சேகர் அவர்களின் வாடகை வீட்டு பிரச்சனை தீர தேவை – இறைவனிடம் மனதார ஒரு பிரார்த்தனை.
நிலாச்சாரல் மாணவிகளுடன் அன்பு கலந்த உணவு – விருந்து.
ஆக மொத்தம் அசத்தி விட்டார் நமது சுந்தர்.
சுந்தர் ஜி, உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்!!
Sundar, I have been seeing only jersey cows in pictures. Jersey cows produce BCM7 toxin in its milk called A1 milk and it is the base for all diseases. Good milk is produced by humped cows which are Indian breed which has thimil in its backbone.I hope you had read thimil book about humped cows destroyed by British.
இதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் சொல்வதை நானும் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஆய்வு அது இது என்று ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி மக்களை குழப்பி வருகின்றனர்.
தோஷமற்ற ஒரே உயிரினம் பசு தான்.
பசுவை சென்னை போன்ற நகரங்களில் வளர்க்கவே ஆயிரத்தெட்டு சட்ட சிக்கல்கள் கார்ப்பரேஷன் விதிகள் உள்ளன. நாம் தீவனம் வாங்கித் தரவில்லையெனில் அது குப்பைகளை தான் உண்ணும். இதையெல்லாம் பார்த்தால் நாம் எங்குமே கோ-சம்ரட்சணம் செய்ய முடியாது.
– சுந்தர்