இன்று அட்சய திரிதியை. ‘அக்ஷய’ என்றால் வளர்வது, குறைவில்லாதது என பொருள். உன்னதமான வாழ்வின் வளர்ச்சிக்கு தக்க வழிகாட்டுவது இந்த அட்சய திரிதியை திருநாள். அட்சய திரிதியைக்கு என்ன சிறப்பு அந்நாளில் என்னென்ன நடைபெற்றது என்பது இறுதியில் தரப்பட்டுள்ளது. அதே சமயம் நம் வாசகர்கள் இந்த நாளை பற்றி சரியான புரிதலை கொள்ளவேண்டும் என்று கருதியே சற்று தாமதமானாலும் இந்த பதிவை தருகிறேன்.
இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்று நேற்று நள்ளிரவு தான் சென்னை திரும்பினேன். பிரார்த்தனை பதிவு மிகவும் முக்கியம் தவிர ஒரு வாரம் கூட அது விடுபட்டுவிடக்கூடாது என்றே வெளியூர் கிளம்புவதற்கு முன்னர் அவசரத்திலும் அந்த பதிவை அளித்துவிட்டு கிளம்பினேன். ஆகையால் நான் பெரிதும் போற்றும் ‘அன்னையர் தினம்’ குறித்த பதிவை கூட அளிக்க முடியவில்லை. என்னை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் அன்னையர் தினமே.
அட்சய திரிதியை என்றால் பெரும்பாலானோர் அன்று கடனோ உடனோ வாங்கி நகைகளை வாங்கி குவிப்பதற்கு தான் என்று நினைக்கிறார்கள். அல்ல… பணத்திற்கும் மேலான புண்ணியத்தையும் குவிப்பதற்கான நாள் இன்று.
இன்று எதை செய்தாலும் அது பன்மடங்கு விருத்தியடையும் என்பதால் நல்ல செயல்களை புண்ணியங்களை இன்று அதிகம் செய்யவேண்டும். செல்வத்தை தேடிக்கொள்வது போல புண்ணியத்தையும் இந்த நாளில் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
பசுக்களுக்கு கீரைகள் பழங்கள் முதலியவற்றை வாங்கி தருவது மிகவும் நன்று.
அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. (கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்.
மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமியின் அம்சமான பொன்பொருள், ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் வாங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. நீங்கள் உங்கள் வசதிக்கும் தேவைக்கும் பொருட்களை வாங்கு அதே நேரம் வறியோர்க்கும் ஏதாவது வாங்கி கொடுங்கள்.
அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.
பணம் கொடுப்பதை தவிர்த்து அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.
அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.
அட்சய திரிதியை – பசியாறிய பிரேமவாசம் குழந்தைகள் !
இன்று காலை ‘பிரேமவாசம்’ குழந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில், அன்னதானம் செய்திருக்கிறோம். இன்றைக்கு அவர்களுடைய காலை உணவிற்கான முழு செலவும் நம்முடையது. “இது போன்று ஏதாவது செய்தால் அப்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி திருமழிசை உழாவரப்பணியின் போது நம் வாசகி உஷா அவர்கள் ரூ.1000/- என்னிடம் தந்து வைத்திருந்தார்கள். அந்த தொகை + நம்முடைய தொகை இரண்டையும் சேர்த்து இன்று பிரேமவாசம் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்தாகிவிட்டது.
இந்த குழந்தைகளின் ஒரு வேளை பசியையாவது தீர்க்க முடிந்தமைக்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
* கீழே குழந்தைகள் உணவருந்துவது போல உள்ள புகைப்படங்கள்… இன்று எடுத்தவை அல்ல. அவை பாலம் ஐயாவின் பிறந்த நாளான கடந்த 10 ஆம் தேதி எடுத்தவை. அவருக்காக அவர் நலமுடன் வாழ வேண்டி பிரேமவாசம் குழந்தைகளுக்கு 10 ஆம் தேதி காலை உணவை நாம் ஸ்பான்சர் செய்திருந்தோம். (அப்போது நடைபெற்ற நெகிழ்ச்சியான விஷயங்கள் குறித்து தனி பதிவு வருகிறது.) அட்சய திரிதியையான இன்று காலை நமக்கு அலுவலகத்திற்கு கிளம்பவே நேரம் சரியாக இருந்தபடியால் நாம் பிரேமவாசம் செல்ல முடியவில்லை. ஆகையால் குழந்தைகள் சாப்பிடுவதை அருகிலிருந்து பார்த்து ஆனந்தப்பட முடியவில்லை. இருப்பினும் நம் மனக்குறையை போக்கும் விதம் பிரேமவாசத்திலேயே புகைப்படங்கள் எடுத்து அனுப்பிவிட்டார்கள். நோட்டீஸ் போர்டில் எழுதப்பட்ட நமது பெயருடன் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் சிலரை நிற்கவைத்து அவர்கள் எடுத்தனுப்பிய புகைப்படம் தான் மேலே நீங்கள் காண்பது.
மாலை ஏதாவது ஒரு பெரிய கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு கோவில் பசுக்களுக்கு பழங்களும் கீரைகளும் வாங்கித் தர உத்தேசித்திருக்கிறேன்.
தவிர நம் தளத்தின் வாசகர் திரு.சங்கர நாராயாணன் என்பவரும் இன்று மதியம் அவர்களுக்கான உணவு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். பிரேமாவாசத்திற்கு இரண்டு நாட்கள் முன்னரே நேரில் சென்று அவர்கள் அலுவலகத்திலேயே அதற்கான தொகையை செலுத்தி விட்டு வந்துவிட்டார். அது தவிர தன்னால் இயன்ற தொகை ஒன்றையும் நன்கொடை அளித்துவிட்டு வந்திருக்கிறார்.
இதை இதை தான் நான் உங்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்பது. நன்றி சங்கர் அவர்களே.
அட்சய திரிதியை நாளின் சிறப்புக்கள் குறித்து கடந்த வாரம் ‘அட்சய திரிதியை ட்வெண்ட்டி 20’ என்ற தலைப்பில் தினகரன் ஆன்மீக மலரில் வெளியானவற்றை கீழே தொகுத்து தந்திருக்கிறேன். படித்து பயனடைவீர்கள்.
=====================================================
அட்சய திரிதியை நாளின் சிறப்புக்கள்
வனவாசத்தின் போது பாண்டவர்களாகிய தங்களுக்கும் தம் குடில் நாடி வருவோருக்கும் உணவளிக்க, அட்சய த்ரிதியை நாளில் தான் சூரியனிடமிருந்து பெற்ற அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு அளித்தார் தருமர்.
பராசக்தி எடுத்த பல வடிவங்களுள் காய், கறி, பழங்கள், மூலிகைகளோடு சாகம்பரீ தேவியாக ஆவிர்ப்பவித்த பொன்நாள் அட்சய த்ரிதியை.
நான்முகன் கிருதயுகத்தில் படைப்புத் தொழிலைத் தொடங்கிய நாளாக அட்சய த்ரிதியை கருதப்படுகிறது.
நவநிதிகளுக்கும் அதிபதியான குபேரன் ஈசனை வேண்டி வரம் பெற்று அந்நிதிகளுக்கெல்லாம் அதிபதியானது அட்சய த்ரிதியை நாளிலேதான்.
கௌரவர் சபையிலே திரௌபதியின் மானம் காக்க சேலையை ‘அட்சய…’ என கிருஷ்ணன் வளர்த்து லீலை புரிந்ததும் இந்நாளிலேயே.
அஷ்டலட்சுமிகளுள் தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் தோன்றிய திருநாள் இது.
சனீஸ்வர பகவான் திருமணம் செய்துகொள்ள ஈசன் அருள்புரிந்த நாள் அட்சய த்ரிதியை.
அட்சய த்ரிதியை அன்று கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருடசேவை தரிசனம் புகழ் பெற்றது.
திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் அருளும் குபேரலிங்கம், அட்சய த்ரிதியை அன்று விசேஷமாக வழிபடப்படுகிறது.
சென்னை-ரத்னமங்கலம் லக்ஷ்மி குபேரருக்கு அட்சய த்ரிதியை அன்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நாகை மாவட்டம், சீர்காழி பேருந்து நிலையத்திற்கருகே உள்ள கோதண்டராமர் ஆலயத்தில் அட்சய த்ரிதியை அன்று உதய கருடசேவையின் போது ஸ்ரீநிவாசரையும் ராமரையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
தஞ்சாவூரில் உள்ள விளாங்குளத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் அட்சய த்ரிதியை அன்று வணங்க சகல வளங்களும் கிட்டும்.
அட்சய த்ரிதியை அன்று கும்பகோணம்-பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அட்சய த்ரிதியை அன்று அன்னதானம் அளித்தால் ஆயுள் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.
மஹாளய அமாவாசை போன்றே பித்ரு தர்ப்பணங்கள் செய்ய உகந்த நாளாக அட்சய த்ரிதியை கருதப்படுகிறது.
ஏழைக் குசேலனை குபேரனாக கிருஷ்ண பரமாத்மா மாற்றியருளியது ஒரு அட்சய த்ரிதியை நாளன்றே.
அட்சயம் எனும் பொருளுக்கு அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். அதனால் இன்று செய்யும் நற்காரியங்கள் பொங்கிப் பெருகும் என்பது பொதுவான நம்பிக்கை.
வட இந்தியாவில் இந்நாள் அகதீஜ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
அட்சய த்ரிதியை தினத்தில் விரதமிருந்து தானம் செய்த மகிமையாலேயே தேவேந்திரன் மகாபலிச் சக்ரவர்த்தியை திருமாலின் துணை கொண்டு வென்றான்.
இந்திராணி ஜெயந்தனைப் பெற்றதும், அருந்ததி வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம்பெற்றதும், ரோகிணி சந்திரனை மணந்ததும் அட்சய த்ரிதியை அன்று தானம் செய்து விரதம் இருந்த மகிமையாலேயேதான்.
ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப திருமகள் அவருக்கு அன்னம் பாலித்த நாள் அட்சய த்ரிதியை. அன்னபூரணி தேவி ஈசனுக்கு படியளந்த பொன்நாளும் இதுவே.
நன்றி : Dinakaran.com (தினகரன்-ஆன்மீக மலர்)
=====================================================
மிக்க நன்றி சுந்தர்ஜி…
நேற்று என் மனைவியுடன் பிரேமவாசம் சென்றபோது அங்குள்ள குழந்தைகள் அனைவரின் கண்ணிலும் சந்தோசத்தினை காணும்போது அந்த இறை அருளைத்தான் பார்த்தோம். பிறர்க்கு நம்மால் முடிந்த உதவி செய்வதுதான் உண்மையான அட்சய த்ரிதியை நாள் சிறப்பு. எங்களுக்கு அந்த பாக்யம் தந்த இறைக்கும், ஊக்குவித்த நம் தளத்திற்கும் வாய்ப்பு கொடுத்த பிரேமவாசம் அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி….
ப.சங்கரநாராயணன்
சுந்தர்ஜி,
மிக்க நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை. உரிய நேரத்தில் கொடுத்து எனக்கும் புண்ணியத்தை தேடி கொடுத்தமைக்கு
நன்றி. எனக்கு மிகவும் மகிஷ்ச்சியாக உள்ளது.
இந்த குழந்தைகள் பசியாறியது நாம் நூறு பவுண் நகை எடுத்ததற்கு சமம்
அட்சய திருதியை பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது !!!
மிக்க நன்றி !!!
விஷேஷமான ஒரு நன்னாளில் பிரேமவாசதில் உள்ள குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களின் முகத்தில் மீண்டும் புன்னகையை பூக்க செய்த அனைத்து கருணை உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !!!
வளரட்டும் நற்தொண்டு
தொடரட்டும் துயர் துடைக்கும் பணி
வாழ்க வளமுடன் !!!
சுந்தர் அவர்களுக்கு,
இந்த மகத்தான நன் நாளில் குழந்தைகளுக்கு உணவளித்து அவர்களின் முகத்தில் புன்னகையை பூக்க செய்த அனைத்து கருணை உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !!!
நாம் இறைவனை தேடி போகவேண்டியது இல்லை .
இறைவன் நம்மை தேடிவரும் வழியை கட்டியமைக்கு நன்றி ..
==============================================================
ஒரு சிறுகதை படித்ததை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்.
“நாளை வருகிறேன்…’ என்றார் கடவுள்.
மறுநாள் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டுக் கடவுளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பக்தன்.
அப்போது குடுகுடு கிழவர் ஒருவர் வந்து, “ஐயா, பசி… ஏதாவது போடுங்களேன்…’ என்று கெஞ்சினார்.
கடவுள் வரும் நேரத்தில் இந்தப் பிச்சைக்காரர் வந்து நிற்பதைக் கண்டு எரிச்சலடைந்த பக்தன் அந்தக் கிழவரை விரட்டியடித்தான்.
மதியம் ஆனது.. கடவுள் வரவில்லை… பிரசாதங்களும் மற்ற உணவுகளும் அப்படியே இருந்தன.
அப்போது கைக்குழந்தையுடன் ஓர் ஏழைப் பெண் வந்து பிச்சை கேட்டாள். கடவுள் இன்னும் வராததால் பொறுமையிழந்த நிலையிலிருந்த அவன் அந்த ஏழையையும் விரட்டி விட்டான்.
மாலையும் வந்தது. கடவுள் இன்னும் வந்தபாடில்லை! பக்தனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது.
கடவுள் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று பக்தன் எண்ணியபோது, ஒரு நாய் வீட்டிற்குள் நுழைந்து கடவுளுக்காக வைத்திருந்த உணவு வகைகளைச் சுவைக்க ஆரம்பித்தது.
ஆத்திரமடைந்த பக்தன், ஒரு தடியை எடுத்து நாயை அடித்து விரட்டினான். அது வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே ஓடி மறைந்தது.
மிகுந்த விரக்தியுடன் பக்தன் படுக்கையில் படுத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படியே தூங்கிப் போய்விட்டான்.
மீண்டும் கடவுள் பக்தனின் கனவில் காட்சியளித்தார்.
“கடவுளே, தாங்கள் இப்படி என்னை ஏமாற்றலாமா? உங்களுக்காக நாள் பூராவும் காத்திருந்தேன். நீங்கள் வரவேயில்லையே…’ என்று கேட்டான்.
அதற்கு கடவுள், “நான் ஏமாற்றவில்லை! நான் மூன்று முறை உன்னைத் தேடி வந்தேன். நீதான் ஒவ்வொரு முறையும் என்னை விரட்டிவிட்டாயே? இப்போது என்னைக் குற்றம் சொல்லி என்ன பிரயோசனம்?
என்று பதிலளித்தார்.
தனது வீட்டைத் தேடிவந்த ஏழைகளின் வடிவில் கடவுளைக் காணத் தெரியாமல், நல்ல மனமில்லாமல் அவர்களை விரட்டியதுக்காக வருந்தினான் அந்த பக்தன்.
நாமும் இந்த பக்தன் போல் இல்லாமல் எல்லோரிடத்திலும் சமமாக அன்பு செலுத்துவோம் .
அட…. தூள் கிளப்பிட்டீங்க மனோகரன் சார்..
மிக மிக மிக அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த பதிவிற்கு தேவையான ஒன்றும் கூட….!!
Serving hands are holier than praying lips.
– சுந்தர்
நாம் இறைவனை தேடி போகவேண்டியது இல்லை .
இறைவன் நம்மை தேடிவரும் வழியை கட்டியமைக்கு நன்றி..
மேற்கண்ட வாசகத்திர்க்கு ஏட்ற அருமையான கதயை சொல்லிட்டீங்க மணோகர் சார்…சூப்பர்..