தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் 212)
என்பது வள்ளுவர் வாக்கு.
ஒவ்வொரு தானத்திற்கும் ஒரு பலன் உண்டு. அனைத்தும் இல்லாவிட்டாலும் பெரும்பாலானவை நம்மால் சுலபமாக செய்யக்கூடியவையே.
சற்று கண்களை திறந்து பார்த்தால் நம்மை சுற்றியுள்ள எத்தனையோ பேர் பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு சொர்ணத்தை தானம் தரவிரும்பினால் உங்களுக்கு தெரிந்து ஏதேனும் ஏழைப் பெண்ணுக்கு விவாகம் நடந்தால் தங்கத்தை வாங்கி தரலாம். ஏழைப் பெண்ணை தேடி நான் எங்கே போவேன் என்று கேட்கவேண்டாம். மனதார அந்த எண்ணத்தை விதையுங்கள். கண்களை காதுகளை திறந்து வையுங்கள். இறைவன் தானே அடையாளம் காட்டுவான்.
பால் தானம் தருவதாக இருந்தால் உங்கள் பகுதியில் ஏதேனும் கட்டிடப் பணிகள் நடைபெற்றால், உரிய துணையுடன் சென்று அங்கு வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்களுக்கு குடிக்க பால் கொடுங்கள்.
மனமிருந்தால் நிச்சயம் இப்படி ஒவ்வொன்றுக்கும் மார்க்கமுண்டு. நீங்கள் கொடுக்கும் பால், அங்கு வேலை செய்யும் ஒரு ஏழை பெண்ணின் வயிற்றுக்குள் சென்றால் கூட போதும்… தலைமுறைகள் தழைக்கும்.
(பால், சொர்ணம், தேன், தயிர் etc.etc., ஆகிய பொருட்களின் தானப் பலன்கள் தனிப்பதிவாக வரும்.)
சமீபத்தில் எமக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.
அலுவலகத்தில் நம் டெஸ்க்குக்கே இருவேளையும் டீ வந்துவிடும் என்றாலும் நண்பர்களுடன் மொபைலில் பேசவேண்டி சில நேரங்களில் வெளியே வருவது வழக்கம். அப்படி வந்தால், பக்கத்து தெருவில் உள்ள ஒரு டீ கடைக்கு காலாற நடந்து சென்று டீ சாப்பிடுவது வழக்கம். பட்டதாரி இளைஞர்கள் சிலர் இந்த கடையை நடத்திவருகிறார்கள். கஸ்டமர்களிடம் நன்கு மரியாதையுடன் நடந்துகொள்வார்கள். டீயும் நன்றாக இருக்கும். சமீபத்தில் டீ விலையை ஒரு ரூபாய் ஏற்றிவிட்டார்கள். ஆறு ரூபாய் இருந்த சிங்கிள் டீ ஏழு ரூபாயாகிவிட்டது. எல்லா இடத்திலும் டீ ஏழு ரூபாயாகிவிட்ட நிலையில், விக்கிற விலைவாசிக்கு இவங்க என்ன பண்ணுவாங்க பாவம் என்று தோன்றியது. ஏழு ரூபாய் கொடுத்து தினசரி சாப்பிட்டு வந்தோம். ஒரு நாள் அப்படி சாப்பிடும்போது நம்மிடம் ஒரு டீக்கு ஏழு ரூபாய் வாங்கியவர் வேறு ஒருவரிடம் ஆறு ரூபாய் வாங்கியதை கவனித்தோம்.
அந்த நபர் போனதும், “என்னப்பா… டீ ஏழு ரூபாய் தானே? இல்லே ஆறு ரூபாயா?”
“ஏழு ரூபாய் தான் சார். விக்கிற விலைக்கு ஒன்னும் கட்டுபடியாகலை சார். எல்.பி.ஜி. கேஸ் ரேட் 150 ஏறிடிச்சு சார்…”
“அப்போ எல்லார்கிட்டேயும் ஒரே ரேட் தானே வாங்கணும்?” என்றோம் சிரித்துக்கொண்டே.
“இல்லே சார்… அவங்கல்லாம் கூலி வேலை செய்றவங்க. பக்கத்துல ஒரு கட்டிடத்துல வேலை செய்றவங்க. அவங்களுக்கு மட்டும் பழைய ரேட்ல தான் கொடுத்துட்டு வர்றோம். பாவம்…வாங்குற நூறு இருநூறு ரூபாய்ல டீக்கே பத்து இருபது போனா அவங்க என்ன பண்ணுவாங்க. ஏதோ எங்களால முடிஞ்சுது இந்த மாதிரி லேபரர்ஸ் கிட்டே மட்டும் ஒரு ரூபாய் கம்மியாத் தான் வாங்குவோம்!” என்றார் அந்த இளைஞர்.
சர்வ சாதாரணமாக அவர் இதை கூற, எமக்கு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. எத்தனை பெரிய மனது…. எவ்வளவு பெரிய தொண்டு… எவ்வளவு பெரிய தானம்….!
“ரொம்ப நல்ல விஷயம் பாஸ்… KEEP IT UP….” என்று கூறி மனமாற வாழ்த்தினோம்.
சேவை செய்ய கோடிகளோ லட்சங்களோ தேவையில்லை – மனதின் ஒரு ஓரத்தில் ஈரம் இருந்தால் போதும்!
தினசரி கோவிலுக்கு சென்று வந்தாலும் ஏழைகளின் துயரை பற்றி ஒரு நொடி கூட நினைக்காமல் பொழுதை கழிப்பவர்களை விட, இவர்கள் இறைவனுக்கு வெகு அருகில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?
தன்னை தேடி வரும் ஆயிரக்கணக்கான பச்சை கிளிகளுக்கு தினசரி இரு வேளையும் உணவளித்து வரும் திரு.கேமிரா சேகர் அவர்கள்.
(Check please : தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! )
தினசரி இதில் அவருக்கு காலை 2 மணிநேரம் மாலை 2 மணிநேரம் என நான்கு மணிநேரம் செலவாகிறது. கிளிகளுக்கு வைக்க வேண்டிய அரிசியை பதப்படுத்துவது, பின்னர் அவற்றை குவியல் குவியலாக வைப்பது, அவை சாப்பிட்டுவிட்டு போனபின்பு அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்வது… அவற்றின் மீது சாலையில் போகும் எவரும் கல்லெறியாமல் பார்த்துக்கொள்வது என இவர் செய்து வரும் சேவை இருக்கிறதே… அப்பப்பா…!
கிளிகளுக்கு உணவு வைப்பதையும் அவற்றை பார்த்துகொள்வதையும் ஒரு வழிபாடு போல, அத்தனை நேர்த்தியாக செய்து வருகிறார். ஒன்றை மட்டும் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். இவர் கிளிகளை வளர்ப்பவர் அல்ல. தம்மை தேடி வரும் அவற்றுக்கு உணவிட்டு அனுப்புபவர்.
இந்த கைங்கரியத்தை சில மார்வாடிகள் கேள்விப்பட்டு அவர்கள் இதை செய்ய விரும்பி, பக்கத்தில் உள்ள ஒரு காலியிடத்தில் இதே போல அரிசியை வைத்தபோதும் கிளிகள் அங்கு போகவில்லை. அதை சட்டை செய்யவுமில்லை. இங்கு மட்டும் தான் அவை வரும்.
கிளிகள் வந்து உணவருந்தும் அந்த நேரம், அவற்றுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று இவரின் குடும்பத்தினர் வெளியே வருவதில்லை. கதவை தாழிட்டுக் கொள்கின்றனர். சேகர் அவர்களும் மாடியில் ஏறாது கீழே சாலையில் நின்றபடி அவற்றை பார்த்துக்கொள்வார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேவருலகுடன் தொடர்புடைய கிளிகள்!
ஒரு விஷயம் தெரியுமா? திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன் நோய்வாய்ப்பட்டு கிடந்தபோது பாரிஜாத மலரை சுவர்க்கத்திலிருந்து கொண்டு வரவேண்டி, எத்தனையோ பறவைகள் இருக்க, அருணகிரிநாதர் கிளியின் வடிவம் ஏன் எடுத்தார் தெரியுமா? கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. தேவர்களுடன் நேரடி தொடர்பு மிக்கவை. சுருங்கச் சொன்னால் அவை தேவதூதர்கள். அதனால் தான் பத்ராசல ராமதாஸர் சிறு வயதில் ஏழரை நாழிகைகள் கிளியை கூண்டில் அடைத்தமைக்காக பின்னாளில் ஏழரை ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
அடுத்தமுறை மீனாக்ஷியையொ காமாக்ஷியையோ ஆண்டாளையோ தரிசிக்க சென்றால் அவர்களின் கைகளில் அமர்ந்திருக்கும் கிளியிடம் உங்கள் பிரார்த்தனையை சொல்லுங்கள். சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அன்னையிடம் உங்கள் பிரார்த்தனையை தெரிவிக்கும். அப்புறம் என்ன… அற்புதம் தான்!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிளிகளை பார்த்துக்கொள்ளும் இந்த தொண்டால் சேகர் அவர்களுக்கு விடுமுறையோ ஓய்வோ கிடையாது. வெளியூர் பயணம் கிடையாது. இன்னும் எத்தனையோ தியாகங்களை செய்து தான் சேகர் அவர் இந்த தொண்டை தொடர்ந்துவருகிறார்.
எத்தனையோ நெகிழ வைக்கும் சம்பவங்கள் சேகர் அவர்களின் தினசரி வாழ்க்கையில் நடைபெற்றிருக்கின்றன.
சமீபத்தில், காரில் சென்ற ஒருவர் இறங்கி வந்து, “சார்… நீங்க செய்றது நல்ல விஷயம் தான். இருந்தாலும் எத்தனை நாள் உங்களால இப்படி செய்ய முடியும்? இல்லே செய்வீங்க? உங்களுக்கு பிறகு அந்த கிளிகளுக்கு யார் அரிசி வைப்பாங்க? அதனால அரிசி வைக்கிறதை இப்போவே கட் பண்ணிடுங்க. ரெண்டு மூணு நாள் வந்து பார்த்துட்டு போய்டுங்க. அப்புறம் அதுங்க உணவை அதுங்களே தேடிக்கும்” என்று சொல்ல, இவரோ சிறிதும் அலட்டிக்கொள்ளாது “என் சொத்தையெல்லாம் வித்தாவது இதுங்களுக்கு நான் அரிசி வைப்பேன் சார்… நீங்க கவலைப்படாதீங்க சார்…” என்று கூறி அனுப்பினாராம்.
இன்னொரு முறை வேறு ஒருவர், வந்து, “சார்… என் பையன் கேட்டானேன்னு PET SHOPல கூண்டுல அடைச்ச கிளி ஒன்னை வாங்கி வந்து கொடுத்தேன். அதுக்கு பழம், தானியமெல்லாம் கொடுக்குறோம். அது எதையும் சப்பிடமாட்டேங்குது. பறக்காம இருக்கணும்னு அதோட ரெக்கையெல்லாம் கட் பண்ணியிருக்காங்க. ஆனா… இந்த கிளிகளையெல்லாம் பார்க்கும்போது இப்படி சந்தோஷமா சுதந்திரமா பறக்க வேண்டிய கிளியை கூண்டுக்குள்ளே வெச்சிருக்கோமேன்னு மனசு உறுத்துது. நான் வேணும்னா அந்த கிளையை இங்கே கொண்டு வந்து விட்டுடுறேன். அதுக்கு ரெக்கை முளைக்கிற வரைக்கும் இங்கே உங்க பாதுகாப்பிலேயே இருக்கட்டும். அப்புறம் இதுங்க கூடவே அதுவும் சேர்ந்து அதுவும் பறக்கட்டும். எனக்கு அது போதும்…!” என்றாராம்.
“இந்த மாதிரி ஆளுங்க மனசு மாறுவதே நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் சார்… அவர் அந்த கிளியை கொண்டு வந்து கொடுத்தா தயவு செஞ்சி வாங்கிக்கோங்க… நீங்க மறுத்தா அது ஆயுசுக்கும் கூண்டுக்குள்ளேயே செத்துடும்!” என்றோம்.
==================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகள்:
தொண்டு தடையின்றி தொடரவேண்டும் & சேகர் அவர்களின் வாழ்வு சிறக்கவேண்டும்!
திரு.சேகர் அவர்களை பொருத்தவரை அவர் இருப்பது வாடகை வீடு. வீடு தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒருவேளை திரு.சேகர் அவர்கள் இந்த இல்லத்தை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், கிளிகளுக்கு அவர் செய்துவரும் இந்த அருந்தொண்டு நிச்சயம் பாதிக்கப்படும்.
மேலும் சேகர் அவர்கள் திறமை இருந்தும் அதை காசாக்க முடியாமல் தவிக்கிறார். அவரிடம் இருக்கும் அரிய பழங்கால கேமிராக்களின் மதிப்பை உணர்ந்து மத்திய/மாநில அரசுகள் அல்லது ஏதேனும் பல்கலைக்கழகம் முன்வந்து அவரிடம் இருக்கும் கேமிராக்களை கொண்டு விஸ்காம் மற்றும் புகைப்படக் கலை மாணவர்கள் பயன்பெறும் விதம் ஒரு கேமிரா மியூசியம் வைக்கவேண்டும். இதன் மூலம் இவருடைய பொருளாதார பிரச்னையும் தீரும். நம் மாணவர்களும் பயன்பெறுவார்கள்.
சேகர் அவர்கள் கிளிகளுக்கு செய்து வரும் இந்த தொண்டு தடையின்றி தொடரவேண்டும். அவர் தம் பொருளாதார பிரச்னை தீர்ந்து அவரிடம் உள்ள கலைப்பொக்கிஷங்கள் பாதுக்காக்கப்படவேண்டும். திருவருள் கண் திறக்கவேண்டும்.
இந்த வார பிரார்த்தனையை பொருத்தவரை சேகர் அவர்கள் கிளிகள் தினசரி பசியாறும் அந்த குறிப்பிட்ட இடத்தில் சில வினாடிகள் நமக்காக பிரார்த்தனை செய்வார். அவருடைய தொண்டு சிறக்கவும் அவர் வாழ்வு வளம் பெறவும் நாம் அவருக்காக அன்னை மீனாக்ஷியையும், ஆண்டாளையும் வேண்டிக் கொள்ளவோம்!
நமக்காக அவர் வேண்ட… அவருக்காக நாம் வேண்டுவோம்!
==================================================================
புற்று நோய்க்கான சிகிச்சை வெற்றி பெறவேண்டும்…
ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கோவையை சேர்ந்த திருமதி.ராணி அம்மா அவர்கள் சிவசக்திக்கு வாயில் புற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருவதாகவும், மருத்துவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்டதாகவும் மேற்கொண்டு என்ன செய்வது என்றே தெரியவில்லை… என் மகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அனுப்பியிருந்தார். நாமும் வெளியிட்டது நினைவிருக்கலாம்.
அந்த சமயம் அவரிடம் பேசும்போது, “டாக்டர்களுக்கெல்லாம் பெரிய டாக்டர் மஹா பெரியவா இருக்கிறார். நீங்கள் அவரை மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அவர் கைவிடமாட்டார்!” என்று நம்பிக்கை கூறினோம்.
சமீபத்தில் நம்மை தொடர்புகொண்ட ராணி அவர்கள், “நம்ம பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை பண்ண நேரம், “சான்ஸே இல்லை…. வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க…” ன்னு சொன்ன டாக்டர்ஸ், சரி அழைத்து வாருங்கள். முயற்சித்து பார்க்கிறோம்” என்று இப்போது சொல்கிறார்கள். இதையடுத்து வரும் திங்கட்கிழமை என் மகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, என் மகள் பரிப்பூரண நலம் பெறவேண்டும். இதற்காக மற்றுமொரு முறை நம் பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கையை வைக்கமுடியுமா?” என்று கேட்டார்கள்.
“என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க…. நிச்சயம் உங்க கோரிக்கை இடம்பெறும். நாங்க எல்லாரும் உங்க மகள் சிவசக்திக்காக பிரார்த்தனை பண்றோம். அவங்களுக்காக எப்பவுமே எங்கள் பிரார்த்தனை உண்டு!” என்றோம்.
நெகிழ்ச்சியில் கண்கலங்கியபடி தான் நமக்கு நன்றி கூறினார்கள்.
நம்மிடம் சுந்தரகாண்டம் நூல் தொகுப்பும், குரு சரித்திரமும் கேட்டிருக்கிறார்கள். விரைவில் அவை அனுப்பப்படும்.
==================================================================
கணையீரல் அழற்சி நோய்
நமது நண்பர் வீரராகவன் சம்பத் அவர்களின் முகநூலில் படித்த நிகழ்வு இது. படித்தவுடன் இங்கு பகிர்ந்துகொண்டு பிரார்த்திக்கவேண்டும் என்று தோன்றியது.
அவருடைய யூ.எஸ். நண்பர் திரு.கிருஷ்ணமூர்த்தி கோபால்சாமி என்பவரின் மகன் திரு.சாரநாதனுக்கு புதிய பணியில் சேர்ந்த அடுத்த நாள் திடீரென்று கணையீரல் அழற்சி நோய் காரணமாக உடல் சுகவீனம் அடைந்துவிட்டது. திரு.சாரநாதன் அவர்கள் விரைவில் நலம்பெறவேண்டி பிரார்த்திப்போம்.
==================================================================
இந்த வார பொது பிரார்த்தனை….
அந்தமான் படகு விபத்தில் உயிரழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்!
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 32 பேர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் ஒன்றின் மூலம் அந்தமானுக்கு கடந்த 23–ந்தேதி சுற்றுலா சென்றனர். 26 ஆம் தேதி ராஸ்தீவு, நார்த்பே தீவு, வைப்பர் தீவு போர்ட் பிளேர் இடங்களை சுற்றிப் பார்க்க கடலுக்கு படகில் புறப்பட்டனர். அப்போது பாரம் தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் சுற்றுலா ஏற்பாட்டாளரை சேர்ந்த மகன் மருமகள் உட்பட 17 பேர் பலியானார்கள்.
சுற்றுலா சென்ற உறவுகள் திரும்ப வருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்த சொந்த பந்தங்கள், சொகுசுப் பயணத்திற்கு சென்றவர்கள் இப்படி இறுதி பயணத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
இறந்தவர்களின் சடலங்களை பார்த்து உறவினர்கள் அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது. இதே போன்று தேக்கடியிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு படகு விபத்து ஏற்பட்டு பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய விபத்துக்கள் அடிக்கடி நடப்பதும் அந்த நேரம் கண்துடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் வழக்கமாகிவிட்டது. அந்த நேரத்தில் கடுமையான உத்தரவுகள் போடப்பட்டு கொஞ்ச காலத்தில் அவை காற்றில் பறக்கவிடப்படுகின்றன. ஏனெனில்…. இங்கே மனித உயிரின் விலை மிகவும் அற்பம்.
பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆறுதல் பெறவும் இறைவனை வேண்டுவோம்.
இதுவே நமது இந்த வாரத்தின் பொது பிரார்த்தனை.
==================================================================
திரு.கேமிரா சேகர் அவர்கள் கிளிகளுக்கு உணவு வழங்கி வரும் சேவை தடையின்றி தொடரவும், அவர்தம் தொழில் நன்கு விரிவடைந்து அவர்தம் குடும்பம் செழிக்கவும், அவரிடம் உள்ள விலை மதிப்பில்லா பழங்கால பொக்கிஷங்கள் நம் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயன்படவும், திருமதி.ராணி அம்மா அவர்களின் மகள் சிவசக்திக்கு திங்கள் நடைபெறவுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர்கள் குணமடையவும், திரு.சாரநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கணையீரல் அழற்சி நோய் நீங்கி அவர் பரிபூரண நலம் பெற்று விரைவில் பணியில் சேரவும், அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவுகள் ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி
அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று
தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று
ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே
ஆண்டாள் அருளிய பாடல்
தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்பாவையில் உள்ள முப்பது பாசுரங்களையும் பக்தியுடன் சொன்னால் மழை பொழியும்; மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது வைணவப் பெருமக்களின் நம்பிக்கை.
திருப்பாவையை முழுதும் படிக்க இயலாதவர்கள்
“சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்ந்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்’
என்ற பாடலையாவது தினமும் சொல்லி வந்தால் திருமால் அருளைப் பெறலாம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 2, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : நேதாஜி இருமுறை தங்கிய GANDHI PEAK வீட்டைச் சேர்ந்த திரு.தனஞ்ஜெயா அவர்கள்.
[END]
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்கள் பதிவு மிகவும் அருமை,
நம் தளத்திற்கு வந்திருக்கும் Mr. சேகர் அவர்களை மனதார வாழ்த்துகிறோம்… அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறையா இருக்கு சார்
நன்றி.
dear sundarji
தானத்தை பற்றி நீங்கள் கூறியிருப்பது மிக அருமை. நாமமும் தானம் செய்வதற்கு தூண்டுகோலாக இந்த பதிவு அமைந்துள்ளது .
இந்த வார கூட்டு பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு சேகர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்.
திரு.கேமிரா சேகர் அவர்கள் கிளிகளுக்கு உணவு வழங்கி வரும் சேவை தடையின்றி தொடரவும், அவர்தம் தொழில் நன்கு விரிவடைந்து அவர்தம் குடும்பம் செழிக்கவும், அவரிடம் உள்ள விலை மதிப்பில்லா பழங்கால பொக்கிஷங்கள் நம் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயன்படவும், திருமதி.ராணி அம்மா அவர்களின் மகள் சிவசக்திக்கு திங்கள் நடைபெறவுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர்கள் குணமடையவும், திரு.சாரநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கணையீரல் அழற்சி நோய் நீங்கி அவர் பரிபூரண நலம் பெற்று விரைவில் பணியில் சேரவும், அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவுகள் ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட
ஸர்வரோக ப்ரஸ்மநீ ஸர்வபாப விமோசநீ
ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸர்வகோப்த்ரீ ஸஹாயிநீ
(108 times)
நன்றி
உமா
சுந்தர் சார் வணக்கம் ……… mr .சேகர் சார் அவர்களின் தொண்டு தொடர அவரின் தொழில் நன்கு செழிக்க அவர் குடும்பம் வலமாக வாழவும் …….ராணி அம்மா மகள் சிவசக்தி அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர் நலமாக வாழவும் ……சாரநாதன் அவரின் கணையீரல் அழற்சி நீங்கி அவர் நலம் பெறவும்……அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவர்களின் குடும்பம் நலமாக வாழவும் இறைவனை பிராத்திப்போம் ……….நன்றி ….. தனலட்சுமி …..
சேகர் அவர்கள் வீடு சம்பந்தமான கோர்ட் வழக்கில் வெற்றி பெற புதுக்கோட்டை, பொன் னமராவதி நெடுஞ்சாலையில் செவலூர் ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் இருந்து 3கி.மீ தூரத்தில் உள்ள ஆரணவல்லி உடனுறை பூமிநாதர் கோயிலில் செவ்வாய்கிழமைகளில் வழிபடலாம் … 04322221084……………
பொருளாதாரம் மேம்பட :
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக முந்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே.
கட்ட மும்பிணி யுங்களை வானைக்
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெந் நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாரா மேதவி ரப்பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலு மாமே.
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொருளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
உணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூரானை மறக்கலு மாமே.
செத்த போதினில் முன்னின்று நம்மைச்
சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரான்என்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூரானை மறக்கலு மாமே.
செறிவுண் டேல்மனத் தாற்தெளி வுண்டேல்
தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண்டாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றைப்
பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
ஆரூரானை மறக்கலு மாமே.
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
வாரா மேதவிர்க் கும்விதி யானை
வள்ளல் எந்தமக் கேதுணை என்று
நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூரானை மறக்கலு மாமே.
கரியா னைஉரி கொண்டகை யானைக்
கண்ணின் மேல்ஒரு கண்ணுடையானை
வரியா னைவருத் தங்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம்
ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க்(கு)
அரியா னைஅடி யேற்கெளி யானை
ஆரூரானை மறக்கலு மாமே.
வாளா நின்று தொழும்அடி யார்கள்
வான்ஆ ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாம்எனக் கருதி
ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன்
ஆரூரானை மறக்கலு மாமே.
விடக்கை யேபெருக் கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக்
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும்
இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச்
சடையா னைஉமை யாளையோர் பாகத்
தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை
ஆரூரானை மறக்கலு மாமே.
ஒட்டி ஆட்கொண்டு போய்ஒளித் திட்ட
உச்சிப் போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னைப்
பாவிப் பார்மனத் தூறுமத் தேனைக்
கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக்
காத லாற்கடல் சூர்தடிந் திட்ட
செட்டி யப்பனைப் பட்டனைச் செல்வ
ஆரூரானை மறக்கலு மாமே.
ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக்
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மறத் தற்கரி யானை
அம்மான் தன்திருப் பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாய்உரை வல்லார்
அமர லோகத் திருப்பவர் தாமே
திருச்சிற்றம்பலம்
திருச்சி அருகில் உள்ள திருப்பராய்த்துறை[ 99408 43571]பசும்பொன்மயிலாம்பாள் உடனுறை தாருகவனேஸ்வரர் திருகோவில் வழிபாடும் ,ஸ்ரீவாஞ்சியம் [9442403926]ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை வாஞ்சி நாதசுவாமி வழிபாடும் புற்றுநோய் நீங்க ஆவந செய்யும் ..
தினமும் இப் பதிகத்தை படித்து வரலாம்
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.
மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.
பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே.
முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை அறிவரே.
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.
நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.
நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே.
எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே.
நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே.
தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே.
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.
கணையம் நீரிழிவு வியாதியுடன் ( Diabetes ) நெருங்கிய தொடர்பு உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள இனிப்பை செல்களுக்குள் செல்ல உதவுவது இன்சுலின். இதையே கணையம் உற்பத்தி செய்கிறது. இது குறைவு படுவதால்தான் நீரிழிவு நோய் உண்டாகிறது.கணைய வீக்கத்தை கணைய அழற்சி ( Pancreatitis ) என்கிறோம்.ஓகே . திருவாரூர் மாவட்டம்.,’கோயில் வெண்ணி’ சவுந்தர நாயகி உடனுறை வெண்ணிகரும்பேஸ்வரர் திரு கோயில் சென்று வழிபட்டு வர வேண்டும் …… முடிந்தால் திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் திருகோயில் சென்று “பப்ளி துப்பட்டி ” வாங்கி பெருமாளுக்கு சாற்றி வழிபட வேண்டும் …..
தினமும் இத் திருமுறையை படிங்க போதும் …..
திருச்சிற்றம்பலம்
மருந்துவேண் டில்லிவை மந்திரங் கள்ளிவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்ளிவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் ககப்படாப் பொருளையோ விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதியந் தம்மிலா அடிகள்வே டங்களே.
மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.
செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள்வே டங்களே.
பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.
கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.
உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி யடிகள்வே டங்களே.
துளக்கமில் லாதன தூயதோற் றத்தன
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கவொண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.
செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.
சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடமோங் கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.
Mr சேகர் அவர்களுக்கு நன்றி.
கிளிகளுக்கு உணவு வழங்கி வரும் சேவை தடையின்றி தொடரவும், அவர்தம் தொழில் நன்கு விரிவடைந்து அவர்தம் குடும்பம் செழிக்கவும், அவரிடம் உள்ள விலை மதிப்பில்லா பழங்கால பொக்கிஷங்கள் நம் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயன்படவும், திருமதி.ராணி அம்மா அவர்களின் மகள் சிவசக்திக்கு திங்கள் நடைபெறவுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர்கள் குணமடையவும், திரு.சாரநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கணையீரல் அழற்சி நோய் நீங்கி அவர் பரிபூரண நலம் பெற்று விரைவில் பணியில் சேரவும், அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவுகள் ஆறுதல் பெறவும்,
இனிமேல் இந்த மாதிரி விபத்துகள் நேராமல் இருக்கவும், விவசாயிகளுக்கு மழை கருணை செய்யவும், விவசாய நிலங்கள் செழிக்கவும் எல்லாம் வல்ல ஆண்டவரை பிரார்த்திகிறேன்.
திரு.கேமிரா சேகர் அவர்கள் கிளிகளுக்கு உணவு வழங்கி வரும் சேவை தடையின்றி தொடரவும், அவர்தம் தொழில் நன்கு விரிவடைந்து அவர்தம் குடும்பம் செழிக்கவும், திருமதி.ராணி அம்மா அவர்களின் மகள் சிவசக்திக்கு திங்கள் நடைபெறவுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர்கள் பூரண குணமடையவும், திரு.சாரநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கணையீரல் அழற்சி நோய் நீங்கி அவர் பரிபூரண நலம் பெற்று விரைவில் வேளையில் சேரவும், அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவுகள் ஆறுதல் பெறவும் மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.
திரு.கேமிரா சேகர் அவர்கள் கிளிகளுக்கு உணவு வழங்கி வரும் சேவை தடையின்றி தொடரவும், அவர்தம் தொழில் நன்கு விரிவடைந்து அவர்தம் குடும்பம் செழிக்கவும், அவரிடம் உள்ள விலை மதிப்பில்லா பழங்கால பொக்கிஷங்கள் நம் மாணவர்களுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் பயன்படவும், திருமதி.ராணி அம்மா அவர்களின் மகள் சிவசக்திக்கு திங்கள் நடைபெறவுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று அவர்கள் குணமடையவும், திரு.சாரநாதன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கணையீரல் அழற்சி நோய் நீங்கி அவர் பரிபூரண நலம் பெற்று விரைவில் பணியில் சேரவும், அந்தமான் படகு விபத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் அவர்தம் உறவுகள் ஆறுதல் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். –